வெளிச்சக்கீற்று 20 – 1

அத்தியாயம் 20

 

 

சனிக்கிழமைதான் திருமணம். வெள்ளி இரவு புறப்பட்டனர். என்னதான் மனத்தைச் சமாதானப்படுத்தி வைத்திருந்த போதிலும் பிள்ளைகளை விட்டுவிட்டுப் புறப்படுகையில் தடுக்கவே முடியாமல் அவள் விழிகள் கலங்கிப் போயின. அவர்கள் பிறந்ததில் இருந்து இன்றுவரையில் இப்படிப் பிரிந்து அவள் இருந்ததில்லை. அதுவும் சிந்தூரி, அன்னையின் பூனைக்குட்டியேதான்.

 

அவள் தவிப்பைக் காணமுடியாமல், “ரெண்டுபேரையும் கூட்டிக்கொண்டே போவமா?” என்றான் அகத்தியன்.

 

முகம் மலர அவள் நிமிர, “இல்ல இல்ல! நாங்க நிக்கிறோம். பெரியப்பா நாளைக்கு எங்களை அனுராதபுரம் கூட்டிக்கொண்டு போறன் எண்டு சொன்னவர். நாங்க அங்க போகப்போறம்.” என்று அவசரமாகச் சொன்னாள் தூரிகா.

 

அவ்வளவு நேரமாக அழுத்திய பாரத்தை மறந்து சிரித்துவிட்டாள் யசோ. இந்திராவையும் கஜேந்திரனையும் தவிர்த்து சிந்தாமணி, தாமினியோடு கமலாம்பிகை உட்பட எல்லோரும் நாளைக்குப் புறப்படுவதாகத்தான் ஏற்பாடு. இவர்களோடு போவதைக் காட்டிலும் அது பெரும் கொண்டாட்டமாயிற்றே! அந்த ஆசையில் வேகமாகச் சொன்ன மகளை அள்ளி அணைத்து முத்தமிட்டாள்.

 

அகத்தியன் தூக்கி வைத்திருந்த சிந்தூரியும் தானாகவே அன்னையின் கைகளுக்குள் வந்தாள்.

 

“நீங்க வாறீங்களா அம்மாவோட?”

 

“ம்ஹூம்!” கேள்வி கேட்டு முடிய முதலே பதில் வந்தது. “நானும் பெரியப்பாவோட போகப்போறன்.” அன்னையின் கழுத்தைக் கட்டிக்கொண்டு சொன்னாள் சின்னவள்.

 

“அப்பிடியா? பெரியப்பாவோட போகப்போறாவோ என்ர செல்லம்?” பிள்ளைகள் இருந்துகொள்வார்கள் என்கிற நம்பிக்கை பிறந்தாலும், தப்பித்தவறி எதற்கும் என்னைத் தேடினால் என்ன செய்வது என்கிற தவிப்பு அவளுக்குள் இருந்துகொண்டே இருந்தது. அதைத் தவிர்க்க முடியாமல் இருவரையும் அணைத்து முத்தமிட்டு, “கவனமா இருக்கோணும். குழப்படி செய்யக்கூடாது!” என்று கண்கலங்கியவளை அங்கிருந்த எல்லோராலும் விளங்கிக்கொள்ள முடிந்தது.

 

“சும்மா சின்ன பிள்ளை மாதிரி என்னடி இது? நாளைக்கு இரவு திரும்ப இங்க நிக்கப் போறாய். அதுக்கே இந்தப் பாடா? சும்மா போயிற்று வா. நீங்க அவளைக் கூட்டிக்கொண்டு வெளிக்கிடுங்கோ மச்சான். அவளுக்கு விசர்!” என்று நிசாந்தினிதான் அதட்டி அனுப்பிவைத்தாள்.

 

யார் என்ன சொன்னாலும் அவள் மனத்தின் தவிப்பு மறையவில்லை. அதோடுதான் புறப்பட்டாள். அவர்கள் வந்த ஆட்டோ, புகையிரத நிலையத்தின் முன்னே வந்து நின்றது.

 

பஸ்ஸில் போகாமல் ட்ரெயின் எதற்கு என்று அவள் யோசித்துக்கொண்டிருக்க, முதல் வகுப்புப் பெட்டிக்கு அழைத்து வந்திருந்தான் அவன்.

 

யசோவின் விழிகள் விரிந்துபோயின. அவள் அறிந்து புகையிரதப் பயணம் என்றாலே மூன்றாவது பெட்டிதான். இரண்டாவதில்கூட பயணித்ததில்லை.

 

கிட்டத்தட்ட விமானத்தில் இருக்கும் அத்தனை வசதிகளும் இருந்தன. கால்களை நன்றாக நீட்டி அமரமுடிந்தது. சீட்டை பின்னுக்குச் சரிக்க முடிந்தது. திரைச் சீலைகளுடன் கூடிய பெரிய கண்ணாடி யன்னல்கள். குறைவில்லாத ஏசி. பெட்டியின் ஆரம்பத்தில் இருந்த எல்ஈடி டீவியில் அறிவிப்புகள் வந்துகொண்டிருந்தன. எல்லாவற்றையும் விட, இரண்டு பக்கமும் இவ்விரண்டாக இருந்த இருக்கைகளை யன்னலைப் பார்ப்பதுபோல் திருப்பக் கூடியதாக இருந்ததைக் கண்டு, வாயைப் பிளந்தாள்.

 

“பிடிச்சிருக்கா?” அந்தப் பெட்டிக்குள் ஏறியதில் இருந்து, அவள் முகத்தில் வந்துபோன பாவங்களை ரசித்திருந்தவன் வினவினான்.

 

“பிடிக்காம? பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வந்திருக்கலாம். வசதியா வந்திருப்பீனம்.”

 

அவள் பதிலில் அவன் முறுவலித்தான். “இதோட எங்கட பயணம் முடியப்போறேல்ல யசோ. இன்னொரு நாளைக்குக் கட்டாயம் கூட்டிக்கொண்டு வருவம். எனக்கும் அவேக்கு முழு இலங்கையையும் சுத்திக்காட்ட ஆசை இருக்கு. ஒவ்வொண்டாச் செய்யலாம், சரியா? இப்ப நீங்க அவேய மட்டுமே நினைச்சுக்கொண்டு இருக்காம இந்தப் பயணத்தை அனுபவிங்க.” என்றான்.

 

இதை எதற்குச் சொல்கிறான் என்று பார்த்தாள் யசோ.

 

“நீங்களும் ஒரு தனி மனுசிதான் யசோ. அம்மா மட்டுமே இல்ல. இப்பிடிக் கிடைக்கிற சந்தர்ப்பங்களை அனுபவிக்கிறதில பிழையே இல்ல. இத அனுபவிக்கிறதால நீங்க பிள்ளைகளில பாசமில்லாத அம்மா எண்டோ, அக்கறை இல்லாத தாய் எண்டோ அர்த்தமில்லை.”

 

தன் கலக்கம் அறிந்து சொல்கிறான் என்று விளங்கி, சிறிதாய் முறுவலித்தாள் அவள்.

 

“இந்தச் சிரிப்புக்கு என்ன அர்த்தம்?”

 

“நீங்க சொல்லுறது எனக்கு விளங்குது எண்டு அர்த்தம்.”

 

இதற்குள் புகையிரதம் மெது மெதுவாய் நகர ஆரம்பித்தது.

 

“என்ன இது, வேற ஒருத்தரையும் காணேல்ல?” பெட்டி முழுவதையும் விழிகளால் அலசியபடி வினவினாள்.

 

“முதல் வகுப்புக்குப் பெருசா ஆக்கள் வராயினம் யசோ. இடையில ஏறினாலும் ஏறுவீனம்.”

 

அப்படியானால் இந்தப் பெட்டியில் அவனும் அவளும் மட்டும்தானா? அவள் பார்வை அவன் புறம் திரும்பிற்று. அவன் உதட்டில் அடக்கப்பட்ட நகைப்பு. என்ன என்றான் புருவங்களை உயர்த்தி. வேகமாக யன்னல் புறம் திரும்பிக்கொண்டாள்.

 

அவள் மனத்தைப் போலவே தடக் தடக் என்று சத்தமிட்டபடி வேகமாக நகர ஆரம்பித்தது புகையிரதம்.

 

கொஞ்ச நேரம் அவளையே வேடிக்கை பார்த்தான். அவள் தன்புறம் திரும்புவதாக இல்லை என்றதும், “அங்கே என்ன தெரிகிறது?” என்றான் வடிவேலுவின் பாணியில்.

 

யசோவால் சிரிப்பை அடக்க முடியவில்லை. வெட்கம் வேறு வந்து தொலைத்தது. சிரிப்பில் துடித்த உதட்டைப் பற்றியபடி இன்னுமே அவனுக்கு எதிர்ப்புறத்தில் முகத்தைத் திருப்பினாள்.

 

அவளின் செய்கை எல்லாமே அவனுக்கு விளையாட்டாய் இருந்தது போலும், “ஏன் இவ்வளவு வெக்கம் யசோ?” என்றான் ரசனையோடு.

 

அதுதான் அவளுக்கும் புரியவில்லை. அவன் பார்வைகளும் அவை செய்யும் சில்மிசங்களும்தான் அவளை நிலைகுலைய வைப்பவை. ஆனால், இரண்டு பிள்ளைகளோடு, முப்பதைத் தாண்டிய வயதில் என்ன இது? சிலநேரங்களில், என்ன இது இப்படி இருக்கிறோம் என்று, அவளே அவளைப் பற்றி நினைக்கும் அளவில் இருந்தது அவள் நிலை.

 

“ஓடவும் முடியாம ஒழியவும் முடியாம மாட்டின மாதிரியே இருக்கா யசோ?” நகைக்கும் குரலில் அவள் புறமாய்க் குனிந்து வினவினான்.

 

“அப்பிடியெல்லாம் ஒண்டுமில்ல.” என்றவளுக்கு அப்படித்தான் இருந்தது.

 

“பஸ்ல போனா கதைக்கக் கூட ஏலாது. இங்க தேர்ட் கிளாஸ், செக்கண்ட் கிளாஸ் எல்லாமே அதேதான் நிலைமை.” அவளோடான தனிமையை விரும்பி இருக்கிறான். அவளுக்கும் அது ஒன்றும் கசக்கவில்லையே!

 

வேகமாய் நகரும் ஊரும், வெளிப்புறத்தில் இருந்து அவர்கள் முகத்தில் படிந்து நகரும் வெளிச்சமும், மற்றவரின் அருகண்மையும் என்று இருவரையுமே அந்தச் சூழல் சுகமான மயக்கத்தில் ஆழ்த்திற்று. அவள் தோளைச் சுற்றிக் கையைப் போட்டு, நெருங்கி அமர்ந்தான் அகத்தியன். யசோவுக்குள் பெரும் தடதடப்பு. என்ன சொல்வது, என்ன செய்வது என்று தெரியாது அப்படியே அமர்ந்திருந்தாள்.

 

மெல்லிய சிரிப்புடன் அவளைத் தன்புறம் சாய்த்து, “படுக்கேல்லையா?” என்று அவள் முகம் பார்த்து வினவினான்.

 

“நித்திரை வரேல்ல.” மெல்ல முணுமுணுத்தாள்.

 

“கிட்டத்தட்ட மூண்டு மணித்தியாலம் பிடிக்கும். சும்மா சரிஞ்சு எழும்புங்க.” என்றவன் அவளைத் தன் மார்பில் சாய்த்துக்கொண்டான்.

 

விழியுயர்த்தி அவனைப் பார்த்தாள் யசோ.

 

“என்ன?”

 

ஒன்றுமில்லை என்பதுபோல் தலையசைத்தாள்.

 

“பிள்ளைகளை விட்டுட்டு வந்தது ஒரு மாதிரி இருக்கா?”

 

“இதுதான் முதல் தரம். அதான்.”

 

அவளுக்கு ஆறுதல் சொல்வதுபோன்று அவன் அணைப்புச் சற்று இறுகியது. “அவேய விட்டுட்டு நிறையத்தூரம் நாங்க தள்ளி வரேல்ல யசோ. ஏதும் அவசரம், ஆபத்து எண்டாலும் ஒண்டரை மணித்தியாலத்தில போயிடுவம். ஹோட்டலுக்கு போயிற்று வீடியோ கோல் போட்டுக் கதைப்பம். இப்ப படுங்க.” என்றவன் மற்றக் கையால் அவள் கன்னம் வருடிக்கொடுத்தான்.

 

தேகம் மொத்தத்திலும் சிலிர்ப்போட, விழிகளை மூடினாள் யசோ. அவன் விரல்கள், தெரிந்தோ தெரியாமலோ அவள் இதழ்களைத் தீண்டி விலகின. அவள் முகத்தில் சூடேறிற்று. அதை, அவன் விரல்களும் உணர்ந்தன. மெல்லிய சிரிப்பும் வியப்புமாக அவள் தாடையைப் பற்றித் தன் முகம் பார்க்க வைத்தான். விழிகளை இறுக்கி மூடிக்கொண்டு, தன் உணர்வுகளை அவனிடமிருந்து மறைக்க முயன்றாள் அவள். அதை ரசித்தவனின் பார்வை அவள் இதழ்களில் குவிந்தது. மெலிதாய் நடுங்கி அவனிடம் பிரத்தியேகமாகக் கவனம் பெற்றன. ஒற்றை விரலால் மெதுவாக வருடினான்.

 

வேகமாக அவனிடமிருந்து விலக முயன்றாள் யசோ.

 

சிரித்தபடி, “சரி சரி ஒண்டும் செய்யேல்ல. அப்பிடியே இருங்க.” என்று, அவளை மீண்டும் தன் கைகளுக்குள் கொண்டுவந்தான் அகத்தியன். நெஞ்சம் நிறைந்திருக்க தானும் சீட்டில் தலையைச் சாய்த்துக்கொண்டான்.

 

அதன்பிறகு, இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஒருவர் மற்றவரின் அணைப்பிலிருந்து விலகவும் இல்லை. அவன் கைகளுக்குள் இருந்தபடியே அந்தப் பயணத்தை ரசித்தாள் யசோ.

 

ஒரு இரயில் பயணம், இத்தனை அழகானதாக மாறும் என்று, யசோ கனவிலும் எண்ணியிருக்கவில்லை.

 

*****

 

ஹோட்டல் அறைக்கு வந்து சேர்ந்தார்கள். கூட்டத்துக்குள் நெரிபடாமல், வியர்த்து வழியாமல், ஒருவர் மற்றவரின் அருகண்மையை அனுபவித்தபடி பயணித்த அந்தப் பயணத்தில் களைப்பு என்பதே இருவருக்கும் இல்லை. சித்தி வீட்டினருக்கு வந்து சேர்ந்துவிட்டதை அழைத்துச் சொன்னான் அகத்தியன். காலையில் நேரத்துக்கே வரச்சொல்லி அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டு அழைப்பைத் துண்டித்தான். இதற்குள் குளியலறை சென்று உடைமாற்றி வந்திருந்தாள் யசோ.

 

வீட்டினருக்கு வீடியோ கோலில் அழைத்துப் பேசினார்கள். அவர்கள் அங்கே இல்லை என்று பிள்ளைகளுக்கு நினைவில் இருப்பது போலவே தெரியவில்லை. அவர்கள் இருவரையும் கைப்பேசி வாயிலாகப் பார்ப்பதையும், அப்படி அவர்களோடு கதைப்பதையும் ஒரு விளையாட்டுப் போன்று எடுத்துக்கொண்டிருந்தார்கள். நிசா வீட்டு விறாந்தையில் நான்கு பாய்கள் விரித்து, சின்னவர்கள் நால்வரையும் நடுவில் விட்டு, நிசாவும் கமலாம்பிகையும் இரு கரைகளிலும் படுத்திருந்தனர். அழகாக குட் நைட் சொல்லி அழைப்பைத் துண்டிக்க, “இப்ப சந்தோசமா?” என்றான் அகத்தியன்.

 

இதற்குள், போய்ச் சேர்ந்துவிட்டீர்களா என்று கேட்டுக் குறுந்தகவல் அனுப்பியிருந்தாள் இந்திரா. அவளுக்கும் அழைத்துக் கதைத்தாள் யசோ.

 

அகத்தியன் குளியலறை சென்று வந்தபோது, இழுத்துப் போர்த்திக்கொண்டு அவனுக்கு முதுகு காட்டிப் படுத்திருந்தாள்.

 

அரும்பிய சிரிப்பை உதட்டுக்குள் அடக்கியபடி விளக்கை அணைத்துவிட்டு வந்த அகத்தியன், தானும் அவள் போர்வைக்குள் புகுந்துகொண்டான்.

 

இதை எதிர்பாராமல் இல்லை அவள். மனம் அவன் புறமாகப் படர்ந்தபிறகு மறுப்பதற்கும் எதுவுமில்லை. அமைதியாகவே அவர்களுக்குள் அனைத்தும் நடந்தேறின.

 

அதன் பிறகும் அவளைத் தன் கைகளுக்குள்ளேயே வைத்திருந்தான் அகத்தியன். இப்போதும் இருவரும் உறங்கவில்லை. உறக்கம் வரவுமில்லை. அவனின் ஒரு கை, தன் மார்பில் முகம் புதைத்திருந்தவளின் புருவம், கன்னம், காதோரம் என்று வருடிவிட்டுக்கொண்டே இருந்தது. அவன் கையில் ஏதோ மாயமந்திரம் இருக்க வேண்டும். இல்லாமல் இப்படி அவளை ஒரு மயக்க நிலையிலேயே வைத்திருக்க முடியாது. அப்படி, அவன் வருடலுக்கு மயங்கி, இன்னும் அவனோடே ஒன்றிக்கொண்டாள் யசோ.

error: Alert: Content selection is disabled!!