வெளிச்சக்கீற்று 4 – 1

அத்தியாயம் 4

 

 

யசோதினியின் மனம் மீண்டும் குழம்பிப் போயிற்று. அந்தக் குழப்பத்தோடே அடுத்த சில நாள்களைக் கடத்தினாள். இன்னுமே ஒரு வித ஒதுக்கத்தைக் காட்டும் அன்னையிடம் இந்த நம்பரை கொடுத்தால் என்ன நினைப்பார்? தனக்குத் தானே மாப்பிள்ளை தேடும் அளவுக்குத் துணிந்துவிட்டாள் என்று யோசிப்பாரோ? என்ன பெண் இவள் என்று கேவலமாகப் பார்ப்பாரோ?

 

ஆனால், அவள் தேவைகளை அவளையன்றி இன்னொருவரால் தீர்த்துவிட முடியாது. அவளுக்குத் தேவையென்றால் அவள்தான் வாயைத் திறக்கவேண்டும். இதைத்தானே சுசீலா சொன்னார். பிள்ளைகள் இருவரும் நிசாந்தினி வீட்டில் நிற்கும் நேரத்தில் அந்த நம்பரை கமலாம்பிகையிடம் நீட்டினாள்.

 

சுசீலாவைப் பற்றிச் சொல்லி, “அந்த அக்காதான் இந்த நம்பர் தந்தவா அம்மா. கேட்டுப் பாப்பமா?” என்றாள்.

 

அவரால் நம்பவே முடியவில்லை. அவ்வளவு சொல்லியுமா இந்த எண்ணத்தை அவள் விடவில்லை?

 

“இந்த முடிவில உறுதியாத்தான் இருக்கிறீங்களாம்மா?” அவள் விழிகளை நேராகப் பார்த்து வினவினார்.

 

அந்தப் பார்வையே அவளைக் குன்றவைப்பது போலிருக்க, தானாக நிமிர்ந்தாள் யசோதினி.

 

“அம்மா, என்னைப்பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க எண்டு எனக்குத் தெரியேல்ல. நல்லவரா ஒருத்தர் கிடைச்சு, அவருக்கு என்னையும் என்ர ரெண்டு பிள்ளைகளையும் பிடிச்சிருந்து, எல்லாம் பொருந்தி வந்தா கட்டுவம் எண்டுதான் யோசிக்கிறன். அப்பிடி ஒண்டு நடந்தா, திரும்பவும் என்ர வாழ்க்கை சந்தோசமா இருக்குமே எண்டு ஆசைப்படுறன். அதில பிழை ஒண்டும் இல்லையே? அதோட, புரோக்கருக்கு எடுத்து என்னைப் பற்றிச் சொன்னதும் ஓடிவந்து ஆயிரம்பேர் லைன்ல நிக்கப் போறேல்ல எண்டும் எனக்குத் தெரியும். ஆனாலும் ஒரு முயற்சி. அமஞ்சிட்டா நல்லாருக்கும் எண்டுற ஒரு எதிர்பார்ப்பு. அவ்வளவுதான்.”

 

அத்தனை நாள்களாக மனத்துக்குள் வைத்திருந்ததை எல்லாம் சொல்லிவிட்டு வந்தவளுக்கு நிம்மதியே இல்லை.

 

கமலாம்பிகை அந்த நம்பரையே பார்த்திருந்தார். பேரப்பிள்ளைகளின் எதிர்காலம் குறித்தான பயம் அப்படியே இருந்தாலும் அவள் இவ்வளவு சொன்ன பிறகும் பேசாமல் இருக்க முடியவில்லை. என்றாலும் மூத்த மகளிடம் கலந்து பேசாமல், மருமகனின் சம்மதம் வாங்காமல் அவராலும் எதுவும் செய்துவிட முடியாது. அதில், நிசாந்தினி மட்டும் வீட்டில் இருக்கும் ஒரு பொழுதில் இந்தப் பேச்சை எடுத்தார்.

 

கேட்ட நிமிடமே, “உங்களுக்கு என்ன விசராம்மா? ரெண்டு பிள்ளைகளோட இருக்கிறவளைக் கட்ட எவன் வருவான்?” என்று, யசோதினியிடம் அவர் கேட்ட அதே கேள்வியைத்தான் அவளும் கேட்டாள்.

 

“வருவான் எண்டு நானும் சொல்லேல்ல. ஒரு முயற்சி செய்து பாக்கிறதுதானே. அவாவும் ரெண்டு பிள்ளைகளோட எவ்வளவு காலத்துக்குத்தான் தனியா இருப்பா? பாவமெல்லோ.” யசோதினியாகவே இந்தப் பேச்சை ஆரம்பித்தாள் என்று சொல்லி, மூத்தவள் மனத்தில் இளையவள் மீது கசப்புணர்வை உண்டாக்க விரும்பாமல் சொன்னார்.

 

“என்ன தனி? நாங்க இல்லையா, இல்ல, நீங்க இல்லையா?”

 

“ஆர் இருந்தாலும் மனுசன் இருக்கிற மாதிரி வராதேம்மா.”

 

“அதுக்கு என்னம்மா செய்றது? எனக்கும் முதலே கட்டினது அவள். ஆனாலும், இப்பிடியாகிப் போச்சு. அதுக்கெண்டு இன்னொரு கலியாணமா? ஊர் சிரிக்கும்.” நிசாந்தினியால் அப்படி ஒன்றை யோசிக்கவே முடியவில்லை.

 

“ஊரா பிள்ளை நாளைக்கு அவாக்கு ஒண்டு எண்டா வந்து நிக்கப் போகுது? நான் இருக்கிற வரைக்கும் அந்தப் பிள்ளைகளைப் பாப்பன். பிறகு? அவா பிள்ளைகளைப் பாப்பாவா, வேலைக்குப் போவாவா? இப்பவே எடுக்கவும் விடவும் ஆக்கள் இல்லை எண்டு சிந்தூரிய நேசரிக்கு இன்னும் சேர்க்கேல்ல.”

 

“அதுக்கெண்டு ஊரைப்பற்றி யோசிக்காம வாழ ஏலுமா அம்மா. முதல், உங்களுக்கு அப்பிடி ஒண்டும் நடக்காது!” என்றாள் வேகமாக.

 

“ஊரைப்பற்றி யோசிச்சதாலதான் இதைப்பற்றி நானும் யோசிச்சனான். அண்டைக்கு ஆனந்தனோட போகமாட்டன் எண்டுதான் சொன்னவா. நானும் ஆனந்தனும் வற்புறுத்தித்தான் அனுப்பி வச்சனாங்க. அவா சும்மா ஊர் சுத்தப் போகவும் இல்ல. ஆனாலும் உங்கட மாமி வீட்டாக்கள் என்ன சொன்னவே? ஏன், நீங்களும் நாலுநாள் கழிச்சு வந்தவாக்கு என்னம்மா சொன்னனீங்க?” அன்று அவள் நடந்துகொண்ட முறை மனத்திலேயே இருந்தது அவருக்கு. இன்று சந்தர்ப்பம் அமையவும் கேட்டார்.

 

நிசாந்தினிக்கு முகம் கன்றிப் போனது. “அது அவே கதைச்ச விசரில… கோவத்துல சொன்னது.” என்றாள் அவரைப் பாராமல்.

 

“எதுக்கா இருந்தாலும் அவாக்கு அது எவ்வளவு கவலையா இருந்திருக்கும் எண்டு யோசிச்சுப் பாருங்கோ. முதல் ஏன் அவாக்கு இப்பிடியான கெட்ட பெயர் வரவேணும்?”

 

“அம்மா, அண்டைக்கு நான் கதைச்சது பிழைதான். இனிக் கவனமா இருக்கிறன். அதுக்காக இப்பிடி ஒரு கலியாணம் பேசேலாது. ஒண்டுக்கு ரெண்டு பிள்ளைகள் இருக்குதுகள். அதுகள் பாவம் எல்லா. முதல், அவளே மாட்டன் எண்டுதான் சொல்லுவாள்.” என்றாள் நிசாந்தினி முடிவாக.

 

கமலாம்பிகைக்கு இதற்குமேல் எப்படி விளக்குவது என்று தெரியவே இல்லை. இப்போதும் கூட அவள்தான் இன்னொரு வாழ்க்கைக்கு ஆசைப்படுகிறாள் என்று சொல்ல விருப்பமில்லை.

 

கடைசி முயற்சியாக என்று எண்ணி, “நீங்க ஒருக்கா ஆனந்தனோட கதைச்சுப் பாருங்கோவன்.” என்றார் கெஞ்சலாக.

 

அவளுக்குச் சினமாயிற்று. “என்னம்மா கதைக்கிறீங்க? இதைப் போய் அவரிட்டச் சொன்னா என்ன நினைப்பார் எங்களைப் பற்றி?”

 

“நாங்களா ஒண்ட நினைக்கிறத விட சும்மா கேட்டுப் பாக்கிறதுதானே.”

 

“சும்மா இருங்கம்மா. அப்பிடியெல்லாம் கேக்கேலாது. மூத்தவளுக்கு ஏழு வயதாகப் போகுது. இப்ப போய் இன்னொரு கலியாணமா? நீங்க அம்மம்மா அம்மா. அந்தப் பிள்ளைகளைப் பற்றி யோசிக்கவே மாட்டீங்களா?”

 

“இல்லப் பிள்ளை…”

 

“போங்கம்மா பேசாம!” அவள் முகத்தில் சினம் அப்பட்டமாகத் தெறித்தது.

 

அதற்குமேல் அவரால் பேச முடியவில்லை. மகளுக்கு அடங்கித்தான் போகவேண்டி இருந்தது.

 

அன்று இரவு, சின்ன மகளிடம் நடந்ததைப் பகிர்ந்துகொண்டார்.

 

அவளிடமிருந்து சத்தமே இல்லை. அது அவர் மனத்தை உறுத்தியது.

 

“என்ன பிள்ளை, ஒண்டுமே சொல்லாம இருக்கிறீங்க?”

 

“என்ன சொல்ல அம்மா?” என்று திருப்பிக் கேட்டாள் அவள். “இப்ப என்ன நடந்தது எண்டு உங்களுக்கு விளங்குதா எண்டு எனக்குத் தெரியேல்ல. உங்கட விருப்பம் வேற. ஆனாலும் அக்கா வேண்டாம் எண்டு சொன்னதும் அதைக் கேட்டுக்கொண்டு திரும்பி வந்திட்டீங்க. இதேதான் எனக்கும் நடக்குது. நானே உழைச்சு, நானே என்ர பிள்ளைகளைப் பாத்தாலும் அக்கா சொல்லுறதைத்தான் கேக்கவேண்டி இருக்கு. ஏன் எண்டால் அவவின்ர துணையில வாழுறவள் நான். அவவ விட்டா எனக்கெண்டு வேற ஆரும் இல்ல. அதால, அவவ உதறிப்போட்டுப் போக என்னாலயும் ஏலாது. அடங்கித்தான் போவன். இது, நாளைக்கு என்ர பிள்ளைகள் படிக்கப்போற படிப்பில ஆரம்பிச்சு அவேன்ர கலியாணம் வரைக்கும் வந்து நிக்கும். அது எனக்கு விருப்பம் இல்லை அம்மா.” என்றாள் யசோ.

error: Alert: Content selection is disabled!!