5- 1

அந்தக் குர்த்தியிடமிருந்து சற்றும் பார்வையை விலக்க முடியாது கண்களால் அதனைப் பார்த்தபடி “சூப்பர்டி” என்றாள் ஜலப்பிரியா. 

“என்ன கலர், துணி தரம் கூட ஏ 1. கண்டிப்பா கூடுதல் விலையாத்தான் இருக்கும். காப்பி கொட்டினத்துக்காகவா இவ்வளவு விலைல எடுத்துக் கொடுத்தான். பெரிய துட்டுக்காரன்தான் போல” என்று அவள் சொன்னது இன்னமும் மகிழ்ச்சியைத் தான் தந்தது செம்பருத்திக்கு. 

“என்ன இருந்து என்ன உனக்கு பத்தாம எடுத்துத் தந்திருக்கானே… பெருசா இருந்தால் கூட டைலர்ட்ட தந்து  பிடிச்சுக்கலாம். அளவு சின்னதான ட்ரெஸ்ஸை என்ன செய்றது?” என்றது என்னவோ உவப்பாகவே இல்லை. 

“ஒருவேளை அவரே எடுத்துட்டு வந்திருந்தா கரெக்ட்டா இருந்திருக்கும். அந்த காவ்யா எடுத்துட்டு வந்தது வேணுக்குனே பத்தாம எடுத்துட்டு வந்திருப்பா” என்று வெறுப்போடு சொன்னாள். 

“அதென்னடி அவரை, துவரைன்னு மரியாதை பலம்மா இருக்கு”

“நிஜம்தான் ப்ரியா. அந்த காவ்யாவுக்கு இந்த பாக்கெட்டை கைல கொடுக்கக் கூடப் பிடிக்கல. மூஞ்சில தூக்கி எறிஞ்சா பாருடி. எனக்கு வாயே அடைச்சு போயிடுச்சு. அடுத்து என்ன செய்றதுன்னே தெரியல. கண்ணெல்லாம் கலங்கிடுச்சு தெரியுமா? அப்பறம் அந்த அவினாஷ் அவளை கண்டிச்சு, பார்சலை எடுத்து என் கைல கொடுக்க சொன்னார். அதனால அவர் எடுத்துட்டு வந்திருந்தா எனக்கு பொருத்தமா எடுத்துட்டு வந்திருப்பார்”

“வந்திருக்கலாம்… எடுத்துத் தந்திருக்கலாம்… ஆனால் இதெல்லாம்தான் இப்ப நடக்கலையே! சரி அடுத்து என்ன செய்யப்போறதா உத்தேசம்?”

“ம்… ம்… “ கண்ணில் கனவுடன் அந்த டாப்ஸையே பார்த்துக் கொண்டிருந்தாள். 

“உனக்கு நிச்சயம் இந்த டாப்ஸ்  பத்தாது. அதனால வழக்கம் போல எனக்குத் தந்துடுறியா?” என்றாள் ஜலப்பிரியா. சில வருடங்களாக உடல் பெருத்து விட்டதால் தனது உடைகள் அனைத்தையும் அவளுக்குத்தான் தந்திருந்தாள் செம்பருத்தி. 

“மாட்டவே மாட்டேன்” என்றாள் செம்பருத்தி 

“வச்சு பூஜை பண்ணப் போறியா”

“இந்த சுடி எனக்குத்தான். இந்த சுடி அளவுக்கு உடம்பை இளைக்கப் போறேன்”.

வியப்பாக பார்த்தாள் ஜலப்பிரியா. 

அதன்பின் அந்தப் பையில் ஆடையுடன் ஓர் ஓரமாக  இருந்த  செய்தித் தாளைப் பார்த்து. 

“இதென்ன பேப்பர்? இந்த துணி கவரில்  இருந்தது”

யோசித்துக் கொண்டே “தெரியலடி… அந்தக் காவ்யா கையில் ஒரு நியூஸ் பேப்பரை வச்சிருந்தாள். மறந்தாப்ல இதில் போட்டுட்டா போலிருக்கு”

அதை வாங்கிப் புரட்டிப் பார்த்தாள் ஜலப்பிரியா. 

“இதில் எதோ ஒரு அட்வெர்டைஸ்மென்ட்டை  பேனாவால கட்டம் கட்டி இருக்காங்க பாரு”

“எங்க படி கேட்கலாம்”

கண்ணில் பார்த்துவிட்டு “எங்கேயோ ஒரு பணக்கார வீட்டில் இருக்கும் நபருக்கு அசிஸ்டண்ட் வேணுமாம். அவரை கவனிச்சுக்கணும். ஆங்கிலம் தெரியணும்  அக்கவுண்ட்ஸ் அதாவது கணக்கு வழக்கு பாக்குற அளவுக்கு விவரம் தெரியணும். நல்ல சம்பளத்தோடு தங்குமிடம் சாப்பாடு இலவசம்”

“சூப்பர்டி”

“இன்னும் சில விஷயங்கள் இருக்கு. படிக்கவே ஜோக்கா இருக்குடி.  மிக பொறுமைசாலியா இருக்கணுமாம். அப்ப என்ன அர்த்தம்?”

“அந்த நபர் மகா கோபக்கார ஆசாமி. ஹைனஸ் கோபத்தை குறைக்க முடியாது. கூட இருக்குறவங்க அடஜஸ்ட் பண்ணிக்கணும்னு அர்த்தம்”

“ஆசாமின்னா ஆம்பளைன்னு அர்த்தம் வருதே. ஹைனஸ் ஒரு பெண்ணா  கூட இருக்கலாம் இல்ல. ஏன் காவ்யா இதை கட்டம் கட்டி வச்சிருக்கா. ஒரு வேளை அவளா இருக்கலாமோ?”

“இருக்கலாம். கணக்கு வழக்கெல்லாம் பாக்கணும்னு கேக்குறாங்க. அதென்னவா இருக்கும்? வழக்கமா வீட்டை பராமரிக்கணும்னு சொல்லுவாங்க இல்லைன்னா சமையல் ஆள், நோயாளியை கவனிச்சுக்க ஒரு நர்ஸ் இப்படி எல்லாம் தானே கேப்பாங்க. இது வித்யாசமா இருக்கே”

“இது கூட பெர்சனல் அசிஸ்டண்ட்  மாதிரிதான் இருக்கு. விளம்பரத்தில் இருக்கும் இன்னொரு வித்தியாசத்தையும் சொல்றேன். வேலைக்கு வரும் நபருக்கு அலங்காரத்தில் நாட்டம் இருக்கக் கூடாதாம். துளி கூட மேக் அப் செய்துக்கக் கூடாது. இதுதான் செம ஜோக். மேக்கப் போடாத நான் கூட கண் மை போடுவேன், பவுடர் போடுவேன். மேக்கப்பே போடாத ஆள்னா  நீ வேணும்னா ட்ரை பண்ணலாம்”

“நானா. ஒருவேளை அவங்க எதிர்பார்க்கும் நபர் ஆம்பளையா இருக்கக் கூடாதா? ஆம்பளைங்கதான் மேக்கப் போட மாட்டோம் . நாங்க எல்லாம் இயற்கையிலேயே அழகு சுந்தரம்னு சொல்றாங்களே”

“அது 80ஸ் கிட்ஸ் காலம். முரட்டு சிங்கிள் 90ஸ் கிட்ஸ்  இப்பல்லாம்  மாசம் ஒரு தடவை பேஷியல், தாடி ட்ரிம்மிங் இல்லைன்னா வாரம் ஒரு தடவை ஷேவிங், ஹெட் மசாஜ்னு நம்மை விட அதிகமா செலவு செய்றாங்கப்பா. வீட்ல எங்கண்ணன் சம்பாரிக்கிற அஞ்சு பத்தும் அவன் அலங்காரத்துக்கே செலவாயிடுது. என் சம்பளத்தில்தான் மூணு வேளை சாப்பாடு ”

“பொண்ணுதான் வேணும்னு கேட்டிருக்காங்க. வயசானவங்களா இருந்தால் இன்னும் பெட்டர்னு சொல்லிருக்காங்க”

“பயங்கர வேடிக்கை தான். எங்க அட்வெர்டைஸ்மெண்டை காமி”

ஜலப்பிரியா அந்த இடத்தைக் காட்ட, அதில் காணப்பட்ட தொடர்பு எண்ணைக் கண்டதும்  “ஹே இவங்க தந்திருக்கிற நம்பர் நான் போன வக்கீல் நம்பர்தான். ஒரு வேளை அவர்தான் ஆளை தேர்ந்தெடுப்பாரோ ?”

“இருக்கலாம்…”

அத்துடன் வாடிக்கையாளர்கள் வருகையால் பில் போட , இனிப்புகளை டப்பாவில் அடுக்க என்று இருவரும் தத்தம் வேலைகளில் ஆழ்ந்து விட்டனர். 

அது முடிந்துவிட்டது என்றுதான் ஜலப்பிரியா நினைத்திருந்தாள் இரண்டு நாட்கள் கழித்து உணவு இடைவேளையின் போது வக்கிலை தொடர்பு கொண்டு வேலை விஷயமாகப் பேசப் போவதாக  செம்பருத்தி சொல்லும் வரை. 

 

error: Alert: Content selection is disabled!!