மலருமோ உந்தன் இதயம் 15.1

‘இந்தாள் இத்தனை திமிர் பிடித்தவர் என்று நான் கொஞ்சமும் நினைத்திருக்கவில்லையே! அவருக்கு என்னைப் பார்த்தால் எப்படித் தெரியுது! அவர் விரும்புகிறேன் என்றதும் பல்லைக் காட்டிக்கொண்டு தலையாட்டுவேன் என்று நினைத்துக் கொண்டாரா?’ மனம் குமுற, தன்னறைக்குள் புகுந்த வேகத்தில் கதவைப் படீரென்று சாத்தினாள் மதுரா.
“ ‘என் மனதைச் சொல்லி விட்டேன்; அண்ணா கொண்ணா என்ற நினைவிருந்தால் சுத்தமாக அழித்துவிடு. இங்கு, உன் விருப்பம் என்பதையும் கடந்து, நான் உன்னை விரும்புகிறேன்; நீ பெறப் போகும் குழந்தைகளை என் குழந்தைகளாக நினைக்கிறேன்; நீ இருக்கும் பரிதாபகரமான நிலையில் நான் உனக்குத் தரும் வாழ்வு கிடைக்கத்தரிய விடயம்!’ என்கின்ற மாதிரியல்லவா அவர் நினைத்துள்ளார்!” கோபத்துடன் முணுமுணுத்துக் கொண்டாள்.
“என் மனகஷ்டம் பற்றி அவருக்கு எதுவுமே இல்லை; தன் மனதில் உள்ளதைச் சொல்லிவிட வேண்டும்; அவ்வளவும் தான். வாழ்க்கைப் பிச்சை போடுகிறாரா? தான் பெரும் வள்ளல் என்றா நினைத்துக்கொண்டார்!” தொடர்ந்து இரைந்து, தன் மனதைக் கட்டுப்படுத்தப் போராடினாள்.
அந்நேரம் கதவில் மெல்லத் தட்டிவிட்டு, “மதுரா நான்தான்..” மெதுவாக கதவைத் திறந்தவனையும் அவன் கையிலிருந்த உணவையும் பார்த்தவளுள், கண்மண் தெரியாத ஆத்திரம் தான் எழுந்தது.
“இங்க பாருங்க, பசித்தால் எனக்குச் சாப்பிடத் தெரியும். தயவு செய்து இதுகளைக் கொண்டு போயிடுங்க.” மீண்டும் குரலை உயர்த்தியவளை கண்டிப்போடு பார்த்தவாறே உள்ளே வந்து, அங்கிருந்த சிறுமேசையில் உணவையும் பாலையும் வைத்துவிட்டுத் திரும்பினான் அவன்.
“இடியப்பம் கறிகளோடு சூடு பண்ணி இருக்கு; நல்லா நேரம் போய்ட்டுது என்றாலும் சாப்பிட்டு விட்டுப் படு. லைட் போடாமல் ஸ்டெப்பால் இறங்க வேண்டாம். எதுவென்றாலும் என்னை எழுப்பு.” சொன்ன வேகத்தில் வாயிலை நோக்கித் திரும்பினான்.
“இதுகளைக் கொண்டு வந்தது போல கொண்டு போகச் சொன்னேன்!” சட்டென்று அவன் முன்னால் போய் நின்றவளைப் பார்த்தவனுக்கு, மனதில் கவலையே தோன்றியது.
‘அவசரப்பட்டு விட்டேனா? சும்மாவே ஏகப்பட்ட பிரச்சனைகள். அதோடு, டெலிவரி வேறு நெருங்குது; இந்த நேரம் பார்த்து…ச்சே…கொஞ்சம் பொறுத்திருக்கலாமோ!?’ மனதுள் குழம்பிப் போனான்.
“ராது ப்ளீஸ்..” தன்னை மீறிச் சொல்லிவிட்டு அதற்கும் தடுமாற, அவளோ கூர்மையாகப் பார்த்தாள்.
“ராது..” வாய்விட்டே கூறியவளுக்கு மாலை நடந்த களேபரங்களின் போதும் இவன் ராது என விளித்தது நினைவில் மின்னிச் சென்றது.
முகம் கடினப்பட்டுச் சிறுக்க, பேசத் தொடங்கியவளை அவஸ்தையும் கவலையுமாக ஆராய்ந்தவன், “நான் சொன்னதை அப்படியே மறந்துவிடுங்க மதுரா. நான் எதுவுமே சொல்லவில்லை சரியா? இப்போ சாப்பிட்டுவிட்டுத் தூங்குங்க.” அவசரமாக இடையிட்டு, குழந்தைக்குப் போக்குக் காட்டுவது போல பேசியது அவள் சினத்தை அதிகரிக்கவே செய்தது.
“அப்போ, அவன் சொன்னது அத்தனையும் உண்மை என்று நிரூபித்துவிட்டீங்க இல்லையா?” விழிகள் உடைப்பெடுக்கக் கேட்டவளை புரியாது பார்த்தான் கார்த்திகேயன்.
“யார்? என்ன சொன்னது?” யோசனையோடு வினவியவனுக்கு, கணேஷ் தன்னையும் அவளையும் சேர்த்து வைத்துக் கதைத்தைச் சொல்கிறாள் என்பது புரிய, பார்வையை விலக்கிக் கொண்டான்.
“என்னைப் பார்த்துப் பதில் சொல்லுங்க; இந்தநாட்களில் எப்போதாவது உங்களைக் கவரும் வகையில் நடந்து கொண்டேனா?” தீனக்குரலில் கேட்டவளை, பதறிப் போய்ப் பார்த்தான் கார்த்திகேயன்.
“இதென்ன பேச்சு மதுரா!? நான் தான் உன்னை விரும்புகிறேன் என்று சொன்னேன்; உன்னை…உன்னை ஏதாவது சொன்னேனா? இங்க பார் மதுரா, என் மனதில் இதுவரை எந்தப் பெண்ணையும் இப்படி என் வாழ்க்கைத்துணை என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. ஏனோ எனக்கு உன்னை மிகவும் பிடித்திருக்கு. உன்னோடு என் வாழ்வு சந்தோஷமாக இருக்கும் என்று நிச்சயம் நம்பிக்கை இருக்கு! நாம் நம் குழந்தைகள்..” தொடர்ந்தவன், அவள் விழிகளின் தீட்சன்யத்தில் வார்த்தைகளை விழுங்கிக் கொண்டான்.

“ஒருத்தனைக் கல்யாணம் செய்து ஒன்றுக்கு இரண்டாகக் குழந்தைகளைப் பெறப் போகிறவளைப் பிடித்திருக்கு என்று சொல்ல உங்களுக்கு கொஞ்சமும் வெட்கமாக இல்லையா?” சீறினாள் அவள்.
“இங்கபார், நீ ஒருத்தனுக்கு மனைவியாக இருக்கும் பொழுது உன்னை விரும்பியிருந்தால் தான் வெட்கப்படவும் வேதனைப்படவும் வேண்டும்.” அவனுக்கும் கோபம் வந்துவிட்டது.
“அல்லது…அவன் வேண்டாம் என்று விவாகரத்து வாங்கினாலும் இன்னமும் அவனையே தான் நினைத்துக் கொண்டிருக்கிறாயா?” கூர்மையாக அவன் கேட்டவிதத்தில் தேகம் நடுங்க பின்னால் நகர்ந்து கட்டில் அமர்ந்து கொண்டாள் மதுரா.
“மதுரா என்னம்மா செய்யுது?” ஓரேட்டில் அவளை நெருங்கியிருந்தான் கார்த்திகேயன். “இதுதான், இப்போ இந்தப் பேச்சே வேண்டாம் என்றால் நீ விடுகிறாய் இல்லை!” தொடர்ந்தவனை நெருப்பாகச் சுட்டாள் மதுரா.
“நானா இந்தக் கேவலமான பேச்சை ஆரம்பித்து வைத்தேன்! எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் மனதுக்கு ஆறுதலாக நல்ல மனிதர்களோடு இருக்கிறேன் என்று இறுமாந்து போயிருந்தேன் தெரியுமா? அப்படியெல்லாம் இல்லவே இல்லை என்று வலிக்க வலிக்க புரியவைத்து விட்டீங்க.” குமுறலோடு சொல்லி, வழிந்த விழிநீரைத் துடைத்துக் கொண்டவள்,
“காலத்துக்கும் யாரையும்…குறிப்பாக ஆண்களையே நம்பக் கூடாது என்று உங்களில் இருந்து அறிந்து கொண்டேன்.” நடுங்கும் இதழ்களும் வேதனையில் கசங்கிய வதனமுமாகச் சொன்னவளுக்கு, எப்படித் தன்னைப் புரியவைப்பது எனத் தெரியாது திகைத்து நின்றான் கார்த்திகேயன்.
“இங்க பாருங்க, அவன் என் புருஷன்..” கார்த்திகேயனின் முகம் இருப்பென இறுக, அதைப் பொருட்படுத்தாது தொடர்ந்தாள்.
“ஒருநாள் இரண்டுநாட்கள் இல்லை, கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் அவனோடு குடும்பம் நடத்தி குழந்தைகளையும் பெற்றுக் கொள்ளப் போகிறேன்.” என்றவளின் விழிகள் நினைவுகளின் கனத்தில் மெல்லத் தழைந்தன.
“அவ்வளவு இலகுவில் அவனை மறக்கும் எந்த நிகழ்வையும் அவன் எனக்குச் செய்யவில்லை.” அருவருப்போடு வெளிவந்தன வார்த்தைகள்.
“இன்றைக்கு இல்லை, என்றைக்குமே அவனை என்னால் மறக்க முடியாது.” என்றபோது, தீர்க்கமாக, தயங்காது கார்த்திகேயனின் பார்வையை எதிர்கொண்டாள் அவள்.
கல்லாகிக் கிடந்த அவன் முகத்தில் பதிந்த பார்வையை விலக்காது, “அவன் எனக்குத் தந்த அடியின் ரணம் என்னைவிட்டு எப்போதும் போகாது. போதுமா?” குரலை உயர்த்திச் சீறினாள்.
“அதனால், இப்போது என்னிடம் உளறியதை இனியொருதரம் நினைத்தும் பார்க்க வேண்டாம். முதலில், உங்களுக்குப் பொருத்தமான ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து கொள்ளுங்க.” என்றவளின் குரல் ஆயாசத்தோடு நலிந்தொலித்தது.
“நீங்க எனக்குச் செய்த உதவிகளையும் தாண்டி, உங்களையும் நித்தியையும் எனக்கு மிகவும் பிடிக்கும்; அதைத் தீராத வெறுப்பாக மாற்றி விடாதீங்க!” கை கூப்பியவளை கலங்கிய விழிகளோடு ஏறிட்டவன், சட்டென்று அறையை விட்டு வெளியேறிவிட்டான்.
தன் மன விருப்பத்தைப் பகிர்ந்து கொண்டதில் தவறேதுமில்லை என்று வாதாடிக் கொண்டு வந்தவன், ஒத்தவார்த்தை பேசாது அறையைவிட்டு வெளியேறியதும் அப்படியே தொய்வுடன் படுக்கையில் சாய்ந்தாள் மதுரா.
‘அந்தக் கயவனின் சாயம் வெளுத்துப் போக, விவாகரத்து வரை வந்த நான் ஊருக்குப் போகாமல் தனிமையில் கிடந்து இங்கு தவித்தது ஏன்?’ அவள் மனம் பெருங்குரலில் கேள்வி எழுப்பியது.
‘என் தங்கைகள் வாழ்வும் தாயின் மன நிம்மதியும் அல்லவா என்னை இங்கே பிடித்து வைத்தது. அதைவிட்டு விட்டு, ஒன்று போனால் இன்னொன்று என்று வேறு வாழ்வைத் தேடிக் கொள்ளவா இங்கே தங்கினேன்?!’
“கொஞ்ச நாட்கள் தங்கள் வீட்டில் தங்கிக் கொண்டேன் என்பதற்காக இவர் எதைச் சொன்னாலும் தலையாட்டிவிடுவேன் என்று நினைத்துக் கொண்டாரா?” இதயத்தில் பரவிய கடுமை சொற்களில் தெறித்தது.
‘நித்தியின் கேலிப் பேச்சுக்களை அசட்டையாக எண்ணியதுதான் தவறோ! அதுதான் இவர் மனதிலும் இப்படி ஒரு எண்ணத்தை தோற்றுவித்ததோ!’ என்கின்ற ஐயமும் கூடவே எழுந்தது.
“போய்விட வேண்டும்; இங்கிருந்து நான் போய்விட வேண்டும்.” தனக்குத் தானே சொல்லிக் கொண்டவள், ‘விடிந்ததும் முதல் வேலையே அதுதான். எப்படியும் குழந்தைகள் பிறந்த உடனே இலங்கை போக முடியாது. அம்மாவும் வந்தால் தங்க இடம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
நாளை யோகம் ஆன்ட்டியோடு கதைத்துப் பார்ப்போம். இப்போதைக்கு ஒன்றும் சரிவரவில்லையோ சுபா ஆன்ட்டியிடம் கேட்டு முதல் இருந்த இடத்தில் போய் இருந்துகொண்டு இடம் பார்க்கலாம்.’ என முடிவெடுத்து, மெல்ல எழுந்து தன்னைச் சுத்தப்படுத்தி இரவுடைக்கு மாறி, பசித்த வயிறை அலட்சியப் படுத்திவிட்டு படுக்கையில் சாய்ந்தவள் தன்னையும் அறியாது துயிலில் ஆழ்ந்துவிட்டாள்.
மதுராவின் அறையிலிருந்து வெளியேறிய கார்த்திகேயன், இயந்திரமாக சமையலறையை ஒதுக்கிவிட்டு மேலே வந்தவன், மதுராவின் அறையில் ஒளிர்ந்த விளக்கு வெளிச்சத்தில் தயங்கி நின்றான்.
‘சாப்பிட்டு விட்டாளா என்று ஒருதரம் பார்த்துவிடு; அநேகம் சாப்பிட்டிருக்க மாட்டாள்.’ மனமோ, அவனை ஊந்தித் தள்ளியது. மனம் சொன்னதைச் செய்யும் துணிவுதான் அவனுள் எழவில்லை!
‘எல்லாம் என் பிழை! இந்த நேரத்தில் அவளோடு இந்த விடயத்தைக் கதைத்தே இருக்கக் கூடாது!’ மீண்டும் மீண்டும் தன்னைக் கடிந்து கொண்டான்.
பசியில் அலறிய வயிற்றை சிறிதும் கண்டு கொள்ளாது, அறைகளுக்குப் பொதுவாக இருந்த வராண்டா மூலையில் கிடந்த சோஃபாவை மதுராவின் அறை வாயில் தெரியும் வகையில் முன்னால் இழுத்துப் போட்டவன், அதில் தளர்வாக சாய்ந்து கொண்டான்.
‘ ‘இது நடவாத காரியம்; வேறு பெண்ணைப் பார்த்து மணம் செய்து கொள்.’ என்றால் நான் கேட்டு விடுவேனா? அப்போ, நான் உன்னை விரும்புகிறேன் என்றதை நீ அந்தளவு முக்கியமானதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏதோ ஒரு பரிதாபத்தில், சலனத்தில் சொல்வதாகவே நினைத்துக் கொண்டாய் அல்லவா?’ அவன் மனம் முறுக்க, முகம் பிடிவாதத்தில் இறுகியது.
“இதே வாயால் என் மீது உனக்குள்ள நேசத்தைச் சொல்ல வைக்கிறேனா இல்லையா பார்.” என்றவன், “இப்போது இல்லையென்றாலும் நிச்சயம் உனக்கு என்னில் நேசம் உருவாகும் ராதும்மா.” முணுமுணுத்தவாறே கண்ணயர்ந்தான்.
தன்னை மறந்து அயர்ந்துறங்கிய மதுரா, திடுக்கிட்டு விழித்துக் கொண்டாள். அவள் விழிகள் தன்னிச்சையாக கடிகாரம் நோக்கிப் பாய்ந்து, அதிகாலை இரண்டு என்று அடையாளம் கண்டு, பின் அலுப்போடு மூடிக் கொண்டாலும், குற்றுயிராகக் கிடந்த மனம் மட்டும் விழிப்பை எட்டிப் பிடித்துத் தொங்கத் தொடங்கியது.

error: Alert: Content selection is disabled!!