நீ வந்து தங்கிய நெஞ்சில் 5.1

அத்தியாயம் 5

நிரோஜனுக்கு எரிச்சல் அடங்குவதாக இல்லை. சுழல் நாற்காலியைத் தள்ளிக்கொண்டு எழுந்து வந்து, தன் அலுவலக அறைக்குள்ளேயே அப்படியும் இப்படியுமாக நடந்தான். சுருண்டு கிடந்த குழல்களை இரண்டு கைகளாலும் கோதிவிட்டான்.

ஒரு புகைப்படம். அதை வைத்து அவனை எடை போடுவாளா? அப்படி என்றால் இத்தனை வருடங்களாக அவர்கள் காதலித்ததற்கு என்ன அர்த்தம் இருந்துவிடப்போகிறது? முதல்தான் தவறாக நினைத்துக் கோபப்பட்டாள். அவன் விளக்கம் சொன்ன பிறகும் விடாமல் குற்றம் சாட்டினாள் எப்படி?

மனம் கொதித்துக்கொண்டேயிருந்தது. தண்ணீரை எடுத்து மடக் மடக் என்று அருந்தினான். அதன் பிறகே கொஞ்சம் நிதானம் வரத் தொடங்கியது. தன் மேசையிலேயே கைகள் இரண்டையும் ஊன்றி, கண்களை மூடிக்கொண்டு நின்றான்.

அன்று எதேற்சையாகத்தான் என்னைக் கொண்டுபோய் விடுகிறாயா என்று கேட்டாள் திலினி. அவனும் மறுக்கவில்லை. அவளிடம் சொன்னதுபோல், இவன் பின்னால் அமர்ந்திருந்து, “ஹுர்ரே” என்று கத்தியபடி, செல்ஃபி ஸ்ட்டிக் மூலம் வீடியோ எடுத்தவளைக் கண்டு, அவனையும் உற்சாகம் தொற்றிக்கொண்டிருந்தது. பைக்கை முறுக்கி வேகம் கூட்டியிருந்தான்.

அப்போதுதான் அவள் அவன் தோளைப் பற்றி எம்பி நின்றாள். அவன் பயந்துபோனான். சட்டென்று வேகத்தைக் குறைத்து, “விழுந்திடப்போறாய் திலினி. இதுல எல்லாம் விளையாடுறேல்ல. என்ன எடுக்கிறதா இருந்தாலும் ஒழுங்கா இருந்து எடு!” என்று அதட்டியிருந்தான்.

அவளும் பழையபடி அமர்ந்துகொண்டதில் அதன் பிறகு அவன் அதைப் பற்றிப் பேசவில்லை. அப்படி என்ன எடுத்தாள் என்றுகூடக் கேட்கவில்லை. அவளை இறக்கி விட்டுவிட்டு வந்துவிட்டான்.

யாமினி அனுப்பியபோதுதான் அந்தப் புகைப்படத்தை அவன் பார்த்ததே. இப்போது மேசையில் இருந்த கைப்பேசியை எடுத்துத் திரும்பவும் பார்த்தான். இடைவெளியே இல்லாமல் அவனோடு ஒட்டிக்கொன்று அவள் நிற்பதைக் கண்டு, இப்போது அவனுக்கே ஒரு மாதிரியாகிற்று. அப்படியிருக்க அவளுக்கு?

அவளைக் கேட்க விடாமல் வாயை அடைத்தவன் இதே போன்று அவள் இன்னொருவனோடு நின்றிருந்தால் சாதாரணமாக எடுத்திருப்பானா என்று யோசித்தான். இல்லை என்கிற பதில் கேள்வி முடிய முதலே வந்து நின்றது.

“ஹேய் நிரு! என்னை ஃபாலோ பண்ணுறீங்களா? ஃபோட்டோ சூப்பரா இருக்கெல்லா?” மேசையின் விளிம்பில் இரண்டு கைகளையும் ஊன்றி நின்று, புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவனின் தோளில் வெகு இயல்பாகக் கையை வைத்தபடி உற்சாகமாய்க் கேட்ட திலினியின் குரலில் திடுக்கிட்டுத் திரும்பியவன், திரும்பிய வேகத்திலேயே அவள் கையைத் தட்டிவிட்டான்.

“சும்மா சும்மா தொட்டுக் கதைக்காத திலினி!” இருந்த சினத்துக்குச் சுள்ளென்று விழுந்தான்.

அவள் திடுக்குற்றுப்போனாள். காரணம் புரியாதபோதும் அறை விழுந்தாற்போல் அவள் முகம் கன்றிப்போயிற்று.

“உனக்கு அறிவு கொஞ்சமும் இல்லையா? இப்பிடித்தான் ஃபோட்டோ எடுத்துப் போடுவியா?”

“ஏன் அந்த ஃபோட்டோல என்ன இருக்கு?” மெய்யாகவே அவளுக்குப் புரியவில்லை.

“என்ன இருக்கா? இந்த ஃபோட்டோ பாக்கிறவே என்னையும் உன்னையும் பிழையா நினைக்க மாட்டினமா?”

அவள் இப்போதும் அதிர்ந்தாள். “நான் அப்பிடி எல்லாம் யோசிக்கேல்ல நிரு. அந்த எண்ணத்தில போடவும் இல்ல.” வேகமாகத் தலையையும் ஆட்டி மறுத்துரைத்தாள்.

“உனக்கு அப்பிடியான எண்ணம் இல்லாட்டியும் இதைப் பாக்கிற ஆக்கள் பிழையா நினைக்க சான்ஸ் இருக்கு. இதில நானும் இருக்கிறன். இதால எனக்கு ஏதாவது பிரச்சினை வருமா இல்லையா எண்டு யோசிக்கேல்லையா நீ?”

அவன் கேள்விகளில் அவள் கலங்கிப்போனாள். “சொறி நிரு. இப்பவே டிலீட் பண்ணுறன். ஆனா வேணுமெண்டு நான் செய்யேல்ல. அந்த போஸ், பேக்ரவுண்ட் எல்லாம் நல்லாருந்தது. அதான்…” குரல் அடைக்க சொன்னவள், தன் ஜீன்ஸின் பின் பொக்கெட்டில் இருந்த கைப்பேசியை எடுத்து, அவன் முன்னாலேயே அந்தப் புகைப்படத்தை அழித்தாள்.

“என்ர கேலரில கூட இல்ல நிரு. எல்லாத்தையும் டிலீட் பண்ணிட்டன்.” தன் கைப்பேசியைக் காட்டிச் சொல்லிட்டு,

“அசைமென்ட் முடிச்சு மெயில் அனுப்பி இருக்கிறன். அதை ஒருக்கா செக் பண்ணிப்போட்டு சொல்லுங்க.” என்று அவன் கீழ் பணிபுரியும் ஒருத்தியாக வேலையைப் பற்றி பேசிவிட்டு அங்கிருந்து ஓடினாள் அவள்.

மேசையைச் சுற்றிக்கொண்டு போய் தன் இருக்கையில் விழுந்தான் நிரோஜன். நடந்துக்குக் காரணமானவளைத் தண்டித்துவிட்டோம் என்கிற ஆசுவாசத்திற்குப் பதிலாக அவளிடம் கோபப்பட்டதும் சேர்ந்து சுட்டது அவனுக்கு.

அந்தப் புகைப்படத்தின் பின்னே எந்தத் தவறான எண்ணமும் இல்லை என்று அவனுக்கே தெரியுமே. அப்படியிருக்க அவளிடம் கோபப்பட்டிருக்க வேண்டாமோ, பொறுமையாக சொல்லியிருக்கலாமோ என்று அதுவேறு மூளைக்குள் நின்று குடைந்தது.

ஒரு பிடிவாதத்துடன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தான். யாமினி விடவேண்டுமே. நானும் என் வேதனைகளும் உனக்கு ஒன்றுமே இல்லையா என்று கேட்டுக்கொண்டிருந்தாள். வேலையை அப்படியே நிறுத்திவிட்டு, ஒரு கணம் கண்களை மூடித் தன்னை நிதானித்துக்கொள்ள முயன்றான்.

தொட்டதற்கும் சந்தேகப்படுகிறவளோ, இல்லை இன்னொரு பெண்ணைச் சும்மா பார்த்தாலே கோபம் கொள்கிறவளோ இல்லை.

சாதாரண நேரமாக இருந்திருந்தால் கூட போ என்று விட்டிருப்பாளாக இருக்கும். தந்தை இறந்து, தாய் தமக்கையின் செயல்களால் காயப்பட்டு, பணப்பிரச்சனையோடு இருக்கிற இந்த நேரத்தில் தானும் நியாயமே இல்லாமல் கோபப்பட்டுக் காயப்படுத்திவிட்டோம் என்று அப்போதுதான் உறைத்தது. உடனேயே கைப்பேசியை எடுத்து அவளுக்கு அழைத்தான்.

அங்கே யாமினியும் அலுவலகத்தில்தான் இருந்தாள். பார்வை அவள் முன்னிருந்த கணணித் திரையில் இருந்தாலும் சிந்தனை முழுக்க நிரோஜன் பேசியத்திலேயே இருந்தது.

நடந்தது இதுதான். விளக்கம் சொல்லிவிட்டேன். அதைக் குறித்து நீ என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்று சொல்லிவிட்டு வைத்தது மிகவுமே காயப்படுத்தியிருந்தது. அப்படியானால் அவள் வேதனை அவனை ஒன்றுமே செய்யாதா? அவள் கவலை அவனைப் பாதிக்காதா? அவன் தவறு செய்திருக்கிறான் என்று அவளும் சொல்லவில்லையே. இதற்கு ஏன் அனுமதித்தாய் என்றுதானே கேட்டாள். அதைப் பார்த்த எனக்கு வலிக்கிறது என்றுதானே சொன்னாள்.

அவனுக்கு அவன் எல்லை தெரியுமாம். அவள் உதட்டோரம் வேதனையில் வளைந்த நேரம் நிரோஜன் அழைத்தான். பார்த்தவள் விழிகள் பொங்கிக்கொண்டு வந்தன. ஆனாலும் அழைப்பை ஏற்கவில்லை. கைப்பேசியை அவளின் இழுப்பறைக்குள் போட்டுவிட்டு கணணிக்குயில் கவனத்தை வைத்தாள்.

சில நிமிடங்கள் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை.
கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள். இரண்டு முறை அழைத்துப் பார்த்துவிட்டு, “யமி சொறி. என்னவோ என்னை நீ நம்பாம சந்தேகப்படுற மாதிரி மனதில பட்டுட்டுது. அதான் கோவப்பட்டுட்டன். சொறியடி!” என்று அனுப்பியிருந்தான்.

அந்த மன்னிப்பில் அவ்வளவு நேரமாக அவள் இதயத்தைப் போட்டு ஆட்டிக்கொண்டிருந்த அத்தனை வேதனைகளும் மாயமாவதை உணர்ந்தாள். ஆனாலும் ஒரு வீம்பு. அவன் எல்லை அவனுக்குத் தெரியும் என்று சொன்னவனோடு உடனேயே சமாதானமாகக் கூடாது என்று முடிவுகட்டிக்கொண்டு, இப்போது நிம்மதியாக வேலையைப் பார்த்தாள்.

அங்கே அவன், “யமி, யாமி, அடியேய் யம்மு, பேபிம்மா” என்று ஓராயிரம் முத்தமிடும் ஸ்மைலிகளோடு அவள் பெயரை ஏலம் விட்டுக்கொண்டிருந்தான்.

உதட்டில் பூத்த முறுவலோடு பார்த்து ரசித்தாள் யாமினி.

மதிய உணவு வேளையில் நண்பர்கள் எல்லோரும் ஒன்றாக உணவருந்துவது வழமை. இன்றும் கேண்டீனுக்குச் சென்று தமக்குப் பிடித்தவற்றை எடுத்துக்கொண்டு வந்து அமர்ந்தார்கள்.

எப்போதும் இவர்களுடன் தொற்றிக்கொள்ளும் திலினி இன்று தள்ளி அமர்ந்துகொண்டாள்.

அதைக் கவனித்துவிட்டு, “என்ன தோழர், சிங்களத்து சின்ன குயில் தனியா ஒதுங்கிட்டுது.” என்றான் மித்ரன்.

error: Alert: Content selection is disabled!!