இருவருக்குமே இந்த நரகமான துன்பம் வேண்டாம் என்றுதான் பிரிவைச் சொன்னான்.
ஆனால், அவளிடம் பிரிவைச் சொல்லிவிட்டு வெளியே வந்த அந்தக் கணத்தில், அவனைத் தாக்கியது பெரும் வெறுமை மட்டுமே. நெஞ்சினுள் ஹோ என்று ஒரு இரைச்சல்.
காற்றே இல்லாத ஒரு சிறைக்குள் அடைபட்டிருந்தவன் அதிலிருந்து வெளியே வந்தால் எப்படி உணர வேண்டும்?
சுதந்திரமாக உணர வேண்டும். விடுதலையாக உணர வேண்டும். நெஞ்சு நிறையக் காற்றை இழுத்துச் சுவாசிக்க வேண்டும். எந்தத் தடைகளும் இல்லாமல், இந்தப் பரந்த வானத்தில் சிறகு விரித்துப் பறப்பதற்கான மனநிலையில் இருக்க வேண்டும்.
ஆனால், அவனுக்கு அப்படி எதுவும் தோன்றவில்லை. மாறாக, தன்னிலிருந்து மிக மிக முக்கியமான ஒன்றை இழந்துவிட்டது போன்ற வெறுமை மட்டுமே அவனை ஆட்கொண்டது.
ஒரு வலி இதயத்தில் நமநமத்தது. இனி என்று எதையும் யோசிக்க முடியவில்லை. அவள் ஓடிவந்து காலடியில் மண்டியிட்டுக் கெஞ்சியது நெஞ்சைப் போட்டுப் பிசைந்தது.
அவனால் பைக்கைக்கூட ஓட்ட முடியவில்லை. சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, கருமேகங்கள் வந்து வானத்தை மூடுவதுபோல், கண்ணீர் அவன் பார்வையை மறைத்தது.
ஏனென்றே தெரியாமல் அழுதான். ஏனென்றே புரியாமல் அவன் நெஞ்சு விம்மி விம்மித் துடித்தது. இன்று அவன் நெஞ்சுக்குள் மண்டிப்போயிருக்கும் இந்தக் கசப்பும் வெறுப்பும் மட்டுமே அவர்களுக்குள் இல்லையே. உயிர் நேசமும் உண்டே. ஒன்றாய் வாழ்ந்த, சிரித்த, மகிழ்ந்த நாள்களும் உண்டே.
அந்தக் காதல் அவனும் சேர்ந்து அழகாய் வரைந்த கோலம். அவனுக்கு அதை இன்னும் எப்படி அதன் அழகு கெடாமல் பாதுகாப்பது என்று தெரியவில்லை. இனி என்கிற கேள்வி அவனையும் மருட்டியது. அவள் இல்லாத பொழுதுகள் அவனுக்கும் பழக்கமற்றவை.
பிரிந்துவிட்டோம் என்று மட்டுமே நண்பர்களிடம் சொன்னான். அவர்களுக்கும் அதிர்ச்சிதான். ஏன், எதற்கு என்று கேட்டவர்களிடம் எதையும் பகிர மறுத்தான். பகிர முடியவில்லை.
நாளாக நாளாக எல்லாம் சரியாகிவிடும், இதிலிருந்து வெளியே வந்துவிடலாம் என்றுதான் நினைத்தான்.
ஆனால், அவன் நினைத்ததற்கு மாறாக, அவன் இதயத்தின் இறுக்கம் இன்னுமின்னும் அதிகரித்துப் போயிற்று. தனிமையில் தன்னைப் போட்டுப் பூட்டினான். உள்ளத்தின் ஒரு ஓரத்தில் அழுகை நிரந்தரமாயிற்று.
இந்த உணர்வுகளை எல்லாம் கையாள முடியாமல் ஊருக்குப் புறப்பட்டுப் போனான்.
*****
ஒரு வாரம் கடந்துதான் அஜந்தா வந்து சேர்ந்தாள். யாமினியைக் கண்டு பயந்துபோனாள். இவளைக் கண்டதும் அவளுக்குக் கண்ணீர் பெருகி வழிந்தது.
“லூசாடி நீ? என்ன நடந்தாலும் நடந்துபோட்டுப் போகட்டும். அதுக்காக இப்பிடித்தான் உன்னை நீயே கவனிக்காம இருப்பியா?” என்று கேட்டு அதட்டினாள்.
ஒன்றுமே சொல்லாமல் அவள் மடியில் தலை வைத்துப் படுத்துக் கண்ணீர் உகுக்கிறவளைப் பார்க்கவே முடியவில்லை.
“ஏனடி இப்பிடி இருக்கிறாய்?” என்றாள் மனம் கேளாமல்.
“வாழவே பிடிக்கேல்ல அஜூ. இன்னுமே நடந்த எதையும் நம்பேலாம இருக்கு. நொடி நேரம் தவறாம ஒரு மெசேஜ் பண்ண மாட்டாரா, திரும்ப வந்து கதைக்க மாட்டாரா எண்டு பாத்துக்கொண்டே இருக்கிறன். வாறாரே இல்ல.” என்றவளைக் கொஞ்சம் அதிர்ந்து பார்த்தாள் அஜந்தா.
இன்னுமே நடந்தவற்றை இவள் ஏற்றுக்கொள்ளவில்லையா என்ன?
“முதல் அவர் டைம்தான்டி கேட்டவர். நான்தான் மடச்சி குடுக்கேல்ல. ரெண்டு நாள்ல எடுத்து நீங்க ஓகேயா எண்டு கேட்டா கோவம் வரும்தானே. இனிக் கொஞ்ச நாளைக்குப் பேசாம இருக்கப் போறன். கோபம் குறைஞ்சு கதைக்க வருவார்.” என்றாள் அவள் பாட்டிற்கு.
அஜந்தாவிற்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. அதிர்ச்சி நீங்காமல் அவளையே பார்த்திருந்தாள்.
“வருவாரடி. அவருக்கு என்னை எந்தளவுக்குப் பிடிக்கும் எண்டு அவரை விட எனக்குத் தெரியும். அவரின்ர அம்மான்ர சாப்பாட்டை விட நான் சமைக்கிறது பிடிக்கும். கட்டாயம் வருவார். கோவத்துல நாலு வார்த்தை கூடக் குறையக் கதைக்கிறது நடக்கிறதுதானே. அதுக்காக வராம இருப்பாரா? வருவார். கட்டாயமா வருவார்.” என்று சொல்லிக்கொண்டிருந்தவள் வேகமாக எழுந்து அமர்ந்துகொண்டு, “வருவார் எல்லாடி?” ஆவலாய் அவள் முகம் பார்த்துக் கேட்டபோது அஜந்தாவுக்கு விக்கித்துப்போனது.
உறுதியான நம்பிக்கை இருந்தால் அங்கே சந்தேகத்திற்கு இடமில்லையே. குழம்பிப்போன மனநிலையில் இருக்கிறவளிடம் இதை எப்படிச் சொல்லுவாள்?
“நான் அவரோட ஒருக்கா கதைக்கவாடி?”
“இல்லையில்ல வேண்டாம்!” என்றாள் பதறிக்கொண்டு. “போதுமான அளவுக்கு நானே அவருக்கு அரியண்டம்(தொல்லை) குடுத்திட்டன். நீயும் எடுத்தா இன்னும் கோபப்படுவார். ப்ளீஸ்டி எடுத்துப்போடாத.” என்றாள் அவள் கரம் பற்றிக்கொண்டு.
அஜந்தாவுக்கு விழிகள் கலங்கிவிடுமோ என்று பயமாயிற்று. கூடவே, அவள் சொல்வதுபோல் அவன் என்னதான் செய்கிறான் என்று பார்ப்போமே என்று பொறுத்திருந்து பார்க்க நினைத்தாள். இந்த அசைக்க முடியாத அன்பிற்கு என்ன எதிரொலி என்று தெரிய வேண்டாமா?
நாளாக நாளாக யாமினியின் தவிப்பு அதிகமாகிக்கொண்டே போயிற்று. இன்னுமே அவன் சொன்ன பிரிவை ஏற்றுக்கொள்ள அவள் உள்ளம் தயாராயில்லை. இன்றைக்குப் பேசுவான், நாளைக்குப் பேசுவான் என்று காத்துக்கொண்டேயிருந்தாள்.
இப்போதெல்லாம் வரவே மாட்டானோ என்கிற பயம் பற்றிக்கொள்ள ஆரம்பித்தது. வராமலேயே இருந்துவிட்டான் என்றால் என்ன செய்வாள்? ஒருவிதமான அழுத்தம் அவள் இதயத்தைப் போட்டு அழுத்த ஆரம்பித்தது.
இதைவிட்டு வெளியே வரவேண்டும், எல்லாமே முடிந்துவிட்டதாக எண்ணிக் கடந்துவர வேண்டும் என்கிற யோசனைக்குள் செல்வதற்கே அவள் தயாராய் இல்லை.
இப்படி இருக்கையில்தான் அன்று அஜந்தாவைச் சென்று பார்த்துவிட்டு பஸ்ஸில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாள் யாமினி. அவள் இறங்கவேண்டிய தரிப்பிடம் வந்ததும் ஏதோ யோசனையில் அவள் இறங்கினாளா, இல்லை, கடைசியாக இறங்கிய அவளை ஓட்டுநர் கவனிக்காமல் பஸ்ஸை கொஞ்சம் வேகமாக எடுத்துவிட்டாரா தெரியவில்லை.
கால் தடக்கித் தரையில் விழுந்தவள் முழங்கால் சிரட்டை நேராகச் சென்று வீதியில் கிடந்த கல்லில் மோத, கையும் எங்கோ சென்று தாக்கிற்று.
துடித்துப்போனாள் யாமினி. காலை அவளால் அசைக்கவே முடியாமல் போயிற்று. பார்த்துக்கொண்டிருக்க வீங்கிக்கொண்டு வந்தது.
சுற்றியிருந்தவர்கள் அவசரமாக வைத்தியசாலைக்குக் கொண்டு ஓடினார்கள். விடயம் அறிந்து அஜந்தாவும் ஓடி வந்தாள்.
கன்னத்தில் சிராய்ப்பு, தோள்பட்டையின் மூட்டு விலகியதில் கையைத் தொட்டில் போன்று(Arm Sling) கட்டியிருக்க, காலிலும் பேண்டேஜ்.
விழுங்கிய மாத்திரைகளையும் மீறிக்கொண்டு வலியில் உயிர்போனது அவளுக்கு. உள்ளத்தின் காயத்திற்கு இணையாக உடலின் காயங்களும் வலி கொடுக்க, “நான் என்னவோ பெரிய பாவம் எல்லாம் செய்திருக்கிறன் போல அஜூ. அதான் எனக்கு மட்டும் எல்லாமே பிழையாவே நடக்குது.” என்று கண்ணீருடன் புன்னகைக்க முயன்றவளை அதட்டி அடக்கினாலும், அவளுக்கு மட்டும் ஏன் இப்படி என்று தோன்றுவதை அஜந்தாவாலும் தவிர்க்க முடியவில்லை.
இங்கே கொழும்பிலேயே இருக்கப்போகிறேன் என்று சொன்னவள் பேச்சைக் கேளாமல், பிடிவாதமாக ஆனந்தனுக்கு அழைத்துச் சொல்லி, கிளிநொச்சிக்கு அனுப்பிவைத்தாள் அஜந்தா.
சரியாக ஒரு மாதம். முதல் இரண்டு வாரங்கள் முழுமையான ஓய்விலும் பிறகு, ‘வர்க் பிரம் ஹோம்’மிலும் இருந்துவிட்டு மறுபடியும் கொழும்பு வந்து சேர்ந்தாள் யாமினி.
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு அலுவலகம் செல்ல ஆரம்பித்திருந்தாள். அன்று மழை நன்றாக அடித்து ஊற்றிவிட்டு ஓய்ந்திருந்தது. கேண்டீனில் கிடைக்கும் டீக்கு நாக்கு ஆசைப்படவும் தோழிகள் இருவருமாக கேண்டீனுக்குப் போனார்கள்.
எதிரில் நிரோஜன்.

