அத்தியாயம் 35
தேவை இல்லாத வேலை பார்த்து, யாமினியின் நிலையை இன்னும் மோசமாக்கிவிட்டோமோ என்றுதான் நிரோஜனுக்கு முதலில் தோன்றிற்று. ஆனால், இதைவிட இதற்கு வேறு வழியிருப்பதாகவும் தெரியவில்லை.
யோசித்துவிட்டு அஜந்தாவுக்கு அழைத்து நடந்ததைச் சொன்னான்.
“என்ன நிரோ நீங்க. இருக்கிற பிரச்சினை போதாது எண்டு புதுசாவும் இழுத்துவிட்டிருக்கிறீங்க.” என்றுதான் அவளும் சொன்னாள்.
“இதுக்கு இதத் தவிர வேற வழி இல்லை அஜந்தா. தன்னால அக்கா குடும்பத்தில எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது எண்டு நினைச்சே காலத்துக்கும் அவள் அடங்கித்தான் போவாள். அதையே தனக்குச் சாதகமா பயன்படுத்தி அவளின்ர அக்கா இன்னுமின்னும் அவளிட்ட பறிக்கத்தான் நிப்பா. நாளைக்கு எங்களுக்குக் கலியாணம் நடந்த பிறகும் இது தொடரும். அது எங்களுக்க இன்னொரு பிரச்சினையா வந்து நிக்கும். அதுக்கு இப்பவே அவரிட்டச் சொன்னதுதான் சரி.”
அவன் சொல்வது சரிதான். இதற்கு இடம் கொடுக்காதே என்று அவளும் பலமுறை சொல்லிவிட்டாள். யாமினிக்குமே கொடுக்க விருப்பமில்லைதான். ஆனால், என்ன செய்வது என்று தெரியாததாலேயே கொடுத்துக்கொண்டிருந்தாள். ஆனந்தனுக்கு இப்படி ஏதோ ஒரு வழியில் தெரிய வந்தாலேயொழிய அவளாக என்றுமே சொல்லப்போவதில்லை என்பதும் உறுதிதான்.
“இது அவளுக்குப் பிரச்சினையா வராதா?”
“ஆனந்தன் அண்ணாவைப் பற்றி யமி சொன்னத வச்சு யோசிக்கேக்க காசு விசயத்தில அவரே அவளுக்குப் பிரச்சினை வராத மாதிரித்தான் ஏதாவது செய்வார் எண்டு நினைக்கிறன். ஆனா, எங்கட விசயம், நரேன் கலியாணம் வேண்டாம் எண்டு சொன்ன கோபம் இருக்கும். அதையும் மோசமா காட்ட மாட்டார் எண்டுதான் நினைக்கிறன். என்ன, விசயம் தெரிஞ்சதும் யமி கட்டாயம் என்னோட சண்டைக்கு வருவாள். வரட்டும்.” என்று சிறு சிரிப்புடன் சொல்லிவிட்டு வைத்தான் அவன்.
அவன் சொன்னது போன்று அடக்க முடியாத ஆத்திரத்தில் ஆனந்தனின் மனம் கனன்றுகொண்டிருந்தாலும் அவன் அவசரப்படவில்லை. தனியாக இருந்து நிதானமாக யோசிக்கவே முயன்றான்.
நிரோஜன், யாமினி மீது அவனுக்கு மிகுந்த கோபம்தான். அதுவும் யாமினி மீது சினமே பொங்கிற்று. தகப்பன் இல்லாத பெண், அப்பா இருந்திருக்க இப்படி ஒரு நிலை எனக்கு வந்திருக்காதே என்று நினைத்துவிடக் கூடாது என்று, பார்த்து பார்த்து அவன் வரன் தேடி அனுப்ப, அவள் அவனை மடையனாக்கியிருக்கிறாள். இதில் இப்போது பிரேக் அப்பாம்.
அதே நேரத்தில் மனைவியை யோசிக்க யோசிக்கத் தான் எதிலோ முற்றுமுழுதாகத் தோற்றுவிட்ட உணர்வு அவனுக்கு.
ஆசையாசையாகக் காதலித்து மணந்த பெண். இன்று அவர்களுக்கு ஒன்றுக்கு இரண்டு குழந்தைகள். ஆனால், அவளிடம் இப்படி ஒரு முகம் இருப்பதை அறியாமலேயே இருந்திருக்கிறோம் என்றெண்ணி வெட்கினான்.
வேலைக்கு வரும் பெண்ணிற்கு, நாகேஸ்வரியின் செலவுகளுக்கு என்று மாதம் மாதம் அவனும் பணம் கொடுப்பான். என்ன, அதை அவர்களிடம் நேரே கொடுப்பதில்லை. மனைவி வீட்டில் இருக்கையில் ஏன் அப்படிக் கொடுக்க? அதைவிட அவன் கொடுக்கையில் அவர்கள் சங்கடப்படலாம்.
இப்படி அவன் பலவற்றை யோசித்து நடக்க, அதுவே அவன் மனைவிக்கு வாசியாகிப்போயிருக்கிறது. ஆனால், அவளின் வங்கிக் கணக்கின் வரவு செலவு அவனுக்குத் தெரியும். நகைகளை லொக்கரில் வைத்திருந்தாலும் எடுப்பதாக இருந்தாலும் வைப்பதாக இருந்தாலும் அவன்தான் அழைத்துச் செல்வான்.
அப்படியிருக்க அவன் மனைவி இந்தப் பணத்தை எங்கே, எப்படி, என்ன செய்து வைத்திருக்கிறாள்? நிரோஜன் சொன்னதை வைத்து யோசிக்கும்போதே சில பல லட்சங்கள் அவளிடம் அவனுக்குத் தெரியாமல் இருக்கும் போலிருந்தது.
இதை எப்படி அறிவது? என்னதான் ஆத்திரம் கண்ணை மறைத்தாலும் அவசரப்பட்டு நடக்க அவன் விரும்பவில்லை. கோபதாபங்களைத் தாண்டி அவர்கள் மூவரும் அவன் பொறுப்பு. எதிர்காலத்தில் பெரிய பிணக்குகள் இல்லாமல், ஒருவர் மற்றவர் முகம் பார்த்து வாழவும் வேண்டும்.
மூளையைக் கசக்கிப் பிழிந்து யோசித்தவனுக்குக்
கிடைத்த ஒரே பதில் நாகேஸ்வரி. அவர் பெயரில் என்ன இருக்கிறது, ஏன் அவன் மாமனார் அவருக்கென்று என்ன வைத்துவிட்டுப் போயிருக்கிறார் என்றெல்லாம் அவன் கேட்டதும் இல்லை, பார்த்ததும் இல்லை.
நிச்சயம் அவரிடம்தான் இருக்கும் என்று மனம் அடித்துச் சொல்லவும் எழுந்து வீட்டுக்குப் புறப்பட்டான்.
அங்கே அறையில் சின்னவளோடு அமர்ந்திருந்த மனைவி முகம் பார்க்கவே பிடிக்கவில்லை. அந்தளவில் வெறுப்பும் கசப்பும் மனத்தில் மண்டிப்போயிருந்தன. அவளுக்கு என்ன குறை வைத்தோம் என்று இப்படியெல்லாம் நடந்திருக்கிறாள் என்கிற கேள்வி அவனைப் பிய்த்துத் தின்றது. அவனோடு ஊனும் உயிருமாய் வாழ்ந்துகொண்டே அவனை முட்டாளாக்கியிருக்கிறாள். அவனும் கண்ணிருந்தும் குருடனாக இருந்திருக்கிறான்.
அணிந்திருந்த ஷேர்ட்டைக் கழற்றி எறிந்துவிட்டுக் கட்டிலில் முதுகுக்குத் தலையணை கொடுத்து, தலைக்கு மேலே கையைப் போட்டுக்கொண்டு, கண்களை மூடி அமர்ந்துகொண்டான். மனம் மட்டும் முன்னால் அமர்ந்திருக்கும் மனைவி மீதான சினத்தில் கொந்தளித்துக்கொண்டிருந்தது.
“என்னப்பா?” என்றாள் மாதங்கி ஒன்றும் புரியாமல்.
இல்லையானால் வீட்டுக்கு வந்ததுமே கைகால் முகம் அலம்பிக்கொண்டு வந்து, சுவாமி கும்பிட்டு முடித்தான் என்றால், அதன் பிறகு தன் பெண்ணரசியை அள்ளிக்கொண்டுவிடுவான்.
இன்று அது எதையும் செய்யாமல் இப்படி இருக்கிறானே என்கிற கேள்வி தொக்கி நிற்க, “ஆனந்த்!” என்றாள் மீண்டும்.
கண்களைத் திறந்தவனின் பார்வை அவள் நெஞ்சையே துளைத்தது. அவர்கள் சீதனம் தந்திருந்தாலும் அதை அவன் தொட்டதேயில்லை. தன் மனைவியைத் தான் எந்தக் குறையும் இல்லாமல் வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்துச் செய்வான்.
அப்படியிருக்க அவளை விடவும் சின்ன பெண்ணிடம் பணம் பறிக்கும் பேராசை இவளுக்கு ஏன் வந்தது? அது அவன் தன்மானத்துக்கு இழுக்கு என்று இவளுக்குப் புரியவேயில்லையா? அவன் மனம் கொதித்துக் கூப்பாடிட்டது.
அவன் பார்வையில் இருந்த சூட்டில் காரணமறியாப் பயமொன்று நெஞ்சில் பிறக்க, “என்ன ஆனந்த்?” என்றாள் மீண்டும்.
ஒன்றுமில்லை என்று தலையசைத்தவன், “உனக்கு ஏதாவது குறை வச்சிருக்கிறனா?” என்று வினவினான்.
“ஏன் திடீரெண்டு இப்பிடிக் கேக்கிறீங்க?” என்றாள் காரணம் புரியாமல்.
“சும்மாதான், சொல்லு.”
“இல்லையே.”
“உண்மையாவோ? ஏதும் ஆசை, இல்லை குறை இருந்தா மறைக்காம சொல்லு.” என்றான் மீண்டும்.
“என்ன கதைக்கிறீங்க? அப்பிடி என்ன குறை வச்சிருக்கிறீங்க எனக்கு? நானும் என்ர பிள்ளைகளும் ஒரு குறை இல்லாம வாழுறோம்.” மனத்திலிருந்தே சொன்னாள் அவள்.
பிறகு எதற்கடி உனக்கு இந்தப் பேராசை என்று கத்தவேண்டும் போலிருந்தது அவனுக்கு. வார்த்தைகளை விட்டுவிடுவோமோ என்கிற பயத்தில் திரும்பவும் கண்களை மூடிக்கொண்டான்.
மாதங்கிக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் கணவனின் புதிரான நடத்தை ஒருவிதக் கலக்கத்தை உண்டாக்கிற்று. அவனாகவே சொல்லட்டும் என்று அமைதியாகிப்போனாள்.

