நீ வந்து தங்கிய நெஞ்சில் 42.2

மகேஷ் அவன் மனைவி, திலினி அவள் கணவன் என்று ஒவ்வொரு குடும்பமாக மேடைக்கு வந்து, மணமக்களை வாழ்த்தி, பரிசு கொடுத்துப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

திலினி நிரோஜனிடம் காதல் சொன்ன கதையை ஜெர்மனியில் இருக்கையில் நிரோஜன் சொல்லியிருந்தான். யாமினி அதையெல்லாம் ஒரு விடயமாகவே எடுக்கவில்லை.

இன்முகமாகவே அவள் கணவனோடும் இரண்டு வார்த்தைகள் பேசி, மாலையில் நடக்கப்போகும் ரிஷப்ஷன் வரை இருக்கச் சொல்லிச் சொன்னாள்.

அசோகன் தன் மனைவி பிள்ளைகளோடு மேடையேறவும் கண்ணில் குறும்பு மின்ன, “இவர் ஆர் எண்டு தெரியுதா யமி? ரெண்டு பிள்ளைக்கு அப்பா” என்றான் நிரோஜன்.

“அடங்கவே மாட்டியாடா?” என்று கேட்டுவிட்டு, “இவனைச் கொஞ்சம் அடக்கி வைங்கம்மா. ஆக மோசம். என்னை இருக்க நிக்க விடாம அரியண்டம் தந்து ஜெர்மனுக்கு வந்தவன்.” என்று சொல்லிக்கொண்டே நிரோஜன் மீது கையைப் போட்டுச் சந்தோஷமாகப் போட்டோவுக்குப் போஸ் கொடுத்தான் அசோகன்.

அதற்கிடையில் அந்த மேடையிலேயே வாந்தி எடுப்பது போல் பாசாங்கு செய்தான் நவீன். “என்னடா?” என்று அசோகன் பதட்டமானான். கலியாண வீட்டுச் சாப்பாடு ஏதும் ஒத்துக் கொள்ளவில்லையோ என்று அவன் யோசிக்க, “நிரோ ரெண்டாவது பிள்ளைக்கு அப்பா ஆயிட்டான்.” என்றான் அவன் மேடையில் கால் பெரு விரலால் கிணறு கிண்டியபடி.

மொத்தக் கும்பலும் சிரிக்க, கொலைவெறியாகிப்போனான் அசோகன். “கத்தி இருந்தா தாங்கடா. இவனை குத்திப்போட்டு நானே போய் ஜெயில்ல குந்துறன்!” என்று பொங்கிவிட்டான்.

கடைசியில் இவர்களின் கூத்துக்களை எல்லாம் அறிந்திருந்த அவன் மனைவிதான் அவனைச் சமாதானம் செய்து அழைத்துச் சென்றாள்.

மாலையானது. அழகான சிவப்பு நிற சோலியில் அவளுக்கு எப்போதுமே பிடித்த சோக்கர் வகை நெக்லஸ், அதற்குப் பொருத்தமான ஜும்கா, தலையலங்காரம் என்று மிக மிக அழகாய் யாமினி நிற்க, அவளுக்குப் பொருத்தமாய் சிவப்பு நிற ஷேர்ட்க்கு கோர்ட் ஷூட்டில் கம்பீரமாக நின்றிருந்தான் நிரோஜன்.

கேக் வெட்டி, மோதிரம் மாற்றி, எல்லோருக்கும் கொடுத்து மாலை நேரத்து ரிசப்ஷன் முடிந்ததும் டிஜெ தன் கச்சேரியை ஆரம்பித்திருந்தார்.

அணிந்திருந்த கோர்ட்டை கழற்றி யாமினியிடம் கொடுத்துவிட்டு நண்பர்களோடு சேர்ந்து நிரோஜனும் ஆட ஆரம்பித்துவிட மொத்த மண்டபமும் களைகட்ட ஆரம்பித்திருந்தது.

அதுவும் அவளைத் தாண்டிய ஒரு உலகம் தனக்கு இல்லவே இல்லை என்பதுபோல், அவன் அவளையே சுற்றி சுற்றி வந்து ஆடினான்.

இடையில் கட்டியிருந்த பெல்ட்டின் நடுப்பகுதியில் ஒரு கை இருக்க, மற்ற கையை அசைத்து அசைத்து ஆடியவனைக் காண யாமினிக்குக் கண்கள் இரண்டு போதவில்லை. அவனுக்கு வியர்த்து ஊத்துவத்தைக் கண்டு, “போதும் நிரோ!” என்று அவள் துடைத்துவிட்டாலும் அவன் கேட்பதாயில்லை. மாறாக அவளையும் இழுத்துக்கொண்டு ஆடினான்.

இதையெல்லாம் அன்று போலவே இன்றும் தூரத்தே நின்று பார்த்து ரசித்தாள் திலினி. இன்றைய ரசிப்பில் எந்தப் பொறாமையும் ஏக்கமும் இல்லை. அழகான காதல் ஒன்றைக் கண்முன்னே காண்கையில் நம்மை மறந்து பார்த்து ரசிப்போமே அந்த மனநிலையில் இருந்தாள்.

அவள் வாழும் அந்த நிறைவான வாழ்க்கையும் ஒரு காரணமாயிற்று.

அவர்களின் பார்ட்டி முடிய நடுச் சாமமாயிற்று. வீடு வந்தவர்களுக்கு அப்பாடா என்று விழுந்து படுக்கத்தான் முடிந்தது.

முதலிரவுக்கு எந்த ஏற்பாடும் செய்ய வேண்டாம் என்று முதலே சொல்லியிருந்தான் நிரோஜன்.

வீடு முழுக்க ஆட்களை வைத்துக்கொண்டு அவனுக்கே அது ஒரு மாதிரியாக இருக்க யாமினியின் நிலை?

அடுத்த நாள் மாலை, மூன்று நாள்களுக்குத் தங்குவதற்கு ஏற்ப தயாராகி, திருகோணமலை கடற்கரையோரமாக இருக்கும் ரிசோர்ட் ஒன்றுக்கு யாமினியை அழைத்து வந்திருந்தான் நிரோஜன்.

இருள் கவிந்தும் கவியாத பொழுது அது. கடற்கரையோரமாக நிரோஜனும் யாமினியும் கரம் கோர்த்து மெல்ல நடந்தார்கள். இருவரிடத்திலும் பெரிய பேச்சுகள் எதுவும் இல்லை. அன்று இரவு தங்கள் தாம்பத்ய வாழ்க்கையை ஆரம்பிக்கப்போகிறார்கள் என்கிற எண்ணமே அவர்கள் வாயைக் கட்டிப்போட்டிருந்தது. அதே நேரத்தில், அது குறித்த சின்ன வெட்கமும் கூச்சமும் இருவரிடத்திலும் மாறி மாறி அலைமோதியது.

நடந்துவிட்டு ரிசார்ட்டிற்குத் திரும்பி, அங்கேயே தங்களுக்குத் தேவையான உணவையும் முடித்துவிட்டுத் தம் அறைக்குத் திரும்பினார்கள்.

கதவைச் சாற்றிவிட்டு அணிந்திருந்த ஷர்ட்டைக் கழற்றித் தாங்கியில் கொழுவிய நிரோஜனையே பார்த்துக்கொண்டிருந்தாள் யாமினி.

பொல்லாத குறும்புகாரன் அவன்! முப்பது வயதானால் என்ன, அவனுடைய சேட்டைகளும் குறும்புகளும் கொஞ்சம் கூடக் குறையவே இல்லை. அதுவும் அவள் என்று வந்துவிட்டால் அளவு கணக்கே இல்லாமல் அவளோடு விளையாடுவான்.

ஜெர்மனியில் இருந்த நாள்களில் முதல் இரண்டு நாள்களைத் தவிர்த்து, அவனை அவள் தன் வீட்டில் தங்க விட்டதேயில்லை. வந்தாலும் விரட்டிவிட்டுவிடுவாள். இருவருமே தம்மைக் கட்டுப்படுத்தும் நிலையில் இல்லை. அந்த அளவிற்கு மற்றவரின் அன்மையை, அணைப்பை, இருப்பை மிகவும் விரும்பினார்கள்.

அப்படி இருக்க, கடந்துபோகக் கூடாத எல்லைகளைக் கடந்துவிடுவோமோ என்கிற பயம் அவளுக்கு எப்போதுமே இருக்கும். அதனாலேயே அவன் அவள் வீட்டுக்கு வந்தாலும் இரவானால் அவனை விரட்டி விடுவதிலேயே குறியாக இருப்பாள்.

அவளது அந்தப் பயம் அவனுக்கும் தெரியாமல் இல்லை. ஆனாலும், அவளோடு விளையாடுவதற்காகவே வேண்டுமென்றே அவளை நெருங்கி, அணைத்து, முத்தமிட்டு விளையாடுவான். அவளுக்குப் பயம் காட்டுவான்.

சில நேரங்களில் அவனே தன்னை மறந்து அவளில் மூழ்க ஆரம்பித்துவிட்டு, திடீரெனப் பதறிப்போய் விலகி ஓடிய தருணங்களும் உண்டு. அந்த நேரங்களில் யாமினி விழுந்து விழுந்து சிரிப்பாள். அப்பொழுதுதெல்லாம், “கல்யாணம் மட்டும் நடக்கட்டுமடி, உனக்கு இருக்கு!” என்று செல்லமாகச் சொல்லிவிட்டு ஓடிவிடுவான் அவன்.

அப்படியான காதலன் இன்று கணவனாக சகல உரிமைகளோடு நின்றிருந்தான். சிறு புன்னகையும் கண்ணில் நேசமுமாக அவனையே அவள் பார்த்துக்கொண்டிருக்க, பொத்தென்று அவள் மீதே விழுந்தான் நிரோஜன்.

“அம்மா!” என்று அவள் அலறி, கட்டிலில் விழுந்தவள் அவனை முறைக்க, “என்ன பார்வை? இப்ப எனக்கு லைசென்ஸ் இருக்கு!” என்றான், அவள் கழுத்தில் பொன்னென மின்னிக்கொண்டிருந்த தாலிக்கொடியை எடுத்துக் காட்டி.

அவனது பேச்சில் அவள் முகமும் கனிந்தது. இந்தத் தாலிக்கொடியை அவன் கையால் வாங்குவதற்கு அவள் கடந்து வந்த பாதை மிக நீண்ட பெரும் பாதை அல்லவா!

காதலும் நேசமும் உள்ளத்தில் பெருக, அவன் முன்னுச்சி முடியை எப்போதும் போல் கோதிவிட்டவள், அதே முடியைப் பற்றியே அவனைத் தன்னிடம் இழுத்து, அவன் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டாள்.

அப்படியே அவன் விழிகளில், கன்னங்களில், கூரான மூக்கில் முத்தமிட்டவள் சிறு சிரிப்புடன் அவனைப் பார்த்தாள்.
அவனும் அடுத்ததாக நடக்கப்போவதற்குப் பெரும் ஆவலுடன் காத்திருக்க, அந்தக் குறும்பனின் கண்களை பார்த்துக்கொண்டு அவளால் அதைச் செய்ய முடியவில்லை.

அவள் பார்வையை அகற்றப்போக, “இந்த விளையாட்டு இனி சரிவராது மேடம்!” என்றபடி அவள் முகத்தைத் தன்னைப் பார்க்க வைத்து, “தர வேண்டியதைத் தாடி!” என்றான் ஆசையும் ஆர்வமுமாக.

மெல்லிய வெட்கம் வந்து தடுத்தாலும் அவன் கன்னம் தாங்கி, அவன் உதட்டினில் தன் இதழ்களை மென்மையாகப் பதித்தாள்.

நிரோஜனின் விழிகள் தானாக மூடிக்கொண்டன. அந்த முத்தத்தினை ஆழமாக அனுபவித்துவிட்டு விழிகளைத் திறந்தவனின் உள்ளம் பேரானந்தத்தால் நிறைந்து தளும்பிற்று.

யாமினியை இப்போது வெட்கம் சூழ்ந்தது; அவன் முகம் பார்க்கத் தயங்கிப் பார்வையை அகற்றினாள். நிரோஜனின் இதழ்களில் மென்புன்னகை ஒன்று அழகாய் மலர்ந்தது. “எனக்கும் இதான் முதல் அனுபவம். சொதப்பிடுவனோ எண்டு பயமா இருக்கடி யமி!” என்றவனின் பேச்சில் யாமினிக்கு முகம் செவ்வானமாகச் சிவந்து போயிற்று.

“கடவுளே நிரோ!” என்று அவள் அதட்ட, அவளது முகம் முழுக்க முத்து முத்தாக முத்தமிட்டு, மெல்ல அவளது இதழ்களிலும் தன் இதழ்களைப் பதித்தான்.

அவனது ஆழ்ந்த ஆசையும், கட்டுக்கடங்காத ஆவலும் அவளது மேனி எங்கும் பரவ, யாமினி தடுமாறிப்போனாள். அவளது பொய்யான மறுப்பைக் கூட ரசிக்கும் மனநிலையில் இருந்தான் நிரோஜன். அவன் அவள் மேனியில் செய்த சேட்டைகளில் சிரிப்பும் அதட்டலுமாக அவள் காட்டும் அந்த வெட்கத்தைக் கலைப்பதிலும், அவளை இன்னும் தனதாக்கிக் கொள்வதிலும் அவனுக்கு அத்தனை ஆனந்தம்.

நிரோஜனின் ஒவ்வொரு ஸ்பரிசமும் யாமினியை மெய்சிலிர்க்க வைக்க, அவன் அவளில் உருவாக்கிய உணர்வுகளின் பெருவெள்ளத்தில் கரைந்து, அவன் கைகளில் மொத்தமாய் கரைந்துபோனாள் அவனின் யமி.

அந்த இரவின் ஒவ்வொரு நொடியும் அவர்களின் காதலை அணு அணுவாக நுகர்ந்து, முழுமையானதொரு பேரானந்தத்தில் திளைத்தது.

முற்றும்.

error: Alert: Content selection is disabled!!