• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அத்தியாயம் - 5

STN - 92

New member
Staff member
மனம் - 5

அந்த குளிரூட்டப்பட்டிருந்த அறையில் பவ்யாவின் அருகில் அமர்ந்திருந்த அட்சயா மடிக்கணினியை வெறித்துக் கொண்டிருந்தாள்.

மதிய உணவு நேரத்திலேயே அவசர விடுப்பெடுத்த அபிலாஷ் வீட்டிற்கு கிளம்பிவிட்டான். அவன் இல்லாததால், அவள் செய்துக்கொண்டிருந்த வேலைக்கு குருவிடம் ஒப்புதல் வாங்குமாறு அட்சயாவிடம் சொல்லிவிட்டு தான் சென்றிருந்தான்.

அட்சயாவும் அவளின் வேலையை முடித்தவுடன் குருவிற்கு மெயில் அனுப்பிவிட்டு அரைமணிநேரமாக காத்திருக்கிறாள் அவனிடமிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.

குருபிரசாத் அமர்ந்திருந்த இடத்திற்கு இரண்டு வரிசைக்கு அடுத்து நேரெதிராக அட்சயாவின் இருக்கை இருந்தது. அவன் பார்ப்பான் என அவனையே பார்த்துக்கொண்டிருக்க அவன் அவளை கண்டுகொள்ளவேயில்லை.

அவளை கவனித்த பவ்யா கூட, “அவசரமா ஆஃப்ரூவல் வேணும்னா நேரா அவர்கிட்ட போய் பேசி வாங்கிக்கோ.” என சொல்லியிருந்தாள்.

குருபிரசாத்தும் ஒருமணி நேரமாக வேறொரு அழைப்பில் இருந்ததால் கவனிக்கவில்லை. அந்த அழைப்பு முடிந்து சற்று நிதானமானவனின் திரையில், “வேணும்னே பண்றீங்களா?” என்ற அட்சயாவின் செய்தி வந்து விழுந்தது.

அதில் புருவம் சுருக்கியவன் நிமிர்ந்து அட்சயாவை பார்த்த்துவிட்டு அவள் அனுப்பிய மெயிலை படித்தான். அவள் அப்படி அனுப்பிய காரணத்தை புரிந்துக்கொண்டவன், “இங்கே வா.” என அவளுக்கு செய்தியனுப்ப மடிக்கணினியுடன் அவனிடம் வந்தாள், அட்சயா.

“இதுல..” என அவள் மடிக்கணினியை காட்டி ஏதோ சொல்லவர, பக்கத்தில் இருந்த இருக்கையை காட்டி அமர சொன்னான்.

அவனின் அருகில் வராமல் சற்று தள்ளி அமர்ந்துக் கொண்டாள் அட்சயா. “இதுக்கு ஆஃப்ரூவல் வேணும். அபிலாஷ் உங்க கிட்ட வாங்கிக்க சொன்னாங்க..” என அவள் செய்த வேலையை காண்பித்தாள்.

தங்களை சுற்றி ஒருமுறை பார்த்தவன் அவள் அமர்ந்திருந்த சேரை அவனை நோக்கி அருகில் இழுத்தான். அவன் செயலில் அவள் திகைத்து விழித்து சேரை கெட்டியாக பிடித்துக் கொண்டவளின் நாசியை நிறைத்தது அவனின் வாசனை திரவியம்.

“ம்ம்ம். இப்ப எக்ஸ்பிளேன் பண்ணு.” என அவன் சொன்னதும் படபடப்பாக அவளின் வேலையை சொல்லி முடித்தாள்.

அதை முழுதாக பார்வையிட்ட குரு, அதில் சின்ன சின்ன திருத்தங்களை அவளுக்கு சொல்ல துவங்கினான். அவனின் அருகாமையில் அட்சயா தான் தவித்தாள். அவனின் கை அவளுடைய மடிக்கணினியின் கீபோர்டில் தட்டச்சு செய்துக் கொண்டிருக்க அதையே தான் அவளின் விழிகள் பார்த்தன. அவன் சொல்வது அவளின் காதில் விழுந்தாலும் அவளை சரியாக சென்றடையவில்லை.

குரு முழுதாக சொல்லி முடித்தவுடன், “அப்டேட் பண்ணிட்டு வரேன்.” என அவள் எழுந்திரிக்க, “ஸ்மால் கரக்க்ஷன் தான? இங்கேயே பண்ணு..” என சொல்லிவிட்டு அவனின் வேலையை பார்த்தான்.

அவன் சொல்லியவற்றை ஓரவளவு திருத்தும் செய்துவிட்டு மீண்டும் அவனை அழைத்தாள். மறுபடியும் அதே நெருக்கத்தில் வந்தவன் மீண்டும் சில திருத்தங்களை சொன்னான்.

‘வேணும்னே பண்றாங்களோ..’ என அவள் யோசித்தாலும் அவன் சொன்ன திருத்தங்கள் உண்மையானதாக தான் இருந்தது. எனவே அதையும் முடித்துவிட்டு அவனிடம் காண்பித்தாள்.

இம்முறை அவன் அதற்கு ஒப்புதல் வழங்கி அதனை ஆஃப்ரூவல் செய்துவிட்டான். ‘வேறு எதாவது சொல்வானோ?’ என பயந்தவள் உடனே எழுந்து சென்றுவிட்டாள்.

அவ்வளவு நேரம் இயல்பாக காட்டிக்கொண்டாலும் அட்சயாவின் நெருக்கம் அவனையும் அசைக்க தான் செய்தது.

“நாளைக்கு கட்ட சாரீ எல்லாமே எடுத்து வெச்சிட்டேன் பூரி. ம்ம்ம் சாப்பிட்டேன். ஏதோ பரவால..”

விடுதியில் தங்கியிருபவளுக்கு உணவு ஒரு பெரும் சோதனையாய் அமைந்தது. பத்து நிமிடத்தில் வேலை செய்யும் இடம், பாதுகாப்பான விடுதி என சபாபதி அவளை சேர்த்து விட்டிருந்தான். ஆனால் இங்கே அட்சயாவிற்கு உணவு சரியாக அமையவில்லை.

“பவ்யா ஹாஸ்டல்ல சாப்பாடு நல்லாருக்கும் பூரி. அங்க எந்த பிளேஸ் காலியானாலும் சொல்ல சொல்லி அவகிட்டயும் சொல்லியிருக்கேன். சீக்கிரமே ஹாஸ்டல் மாறிடுவேன்.” என பூர்ணிமாவிடம் பேசிவிட்டு வைத்தாள் அட்சயா.

அவள் பேசியதை கேட்ட அவளின் அறையில் வசிப்பவள், “ஹாஸ்டல் மாற போறீங்களா?” என கேட்டபடியே படுக்கையை விரித்தாள்.

“இன்னும் முடிவாகல..” என சொல்லிய அட்சயா, “ஃபோன் பேசுறதை கேட்டீங்களா?” என்றாள் சிறு கண்டனதுடன்.

“இல்ல ஹாஸ்டல்னு சொன்னதும் கேட்டேன். எனக்கு தெரிஞ்சவங்க ரூம் இருந்தா சொல்ல சொன்னாங்க அதான்.” என சமாளித்தவள் வேறேதும் சொல்லவில்லை.

‘இனி ஃபோன் பேசுறப்ப கவனமா இருக்கனும்.’ என அட்சயாவும் நினைத்துக் கொண்டாள்.
 

STN - 92

New member
Staff member
மறுநாள் காலையில் ஆட்டோவில் இருந்து வேகமாக இறங்கிய அட்சயா, லேப்டாப்பை பையை தோளில் மாட்டிக்கொண்டு ஆட்டோக்கான பணத்தை செலுத்திவிட்டு அலுவலகத்தை நோக்கி விரைந்தாள்.

உடுத்திருந்த சேலையின் கொசுவத்தை கையில் பிடித்துக்கொண்டு அங்கிருந்த படிகளில் ஏறியவள் அங்கு மெல்ல மூடிக்கொண்டிருந்த லிஃட்டினை நோக்கி வேகமாக சென்றாள்.

அவளின் வருகையை பார்த்தவன் அந்த லிஃட்டின் கதவினை திறக்கும் பட்டனை அழுத்தினான். உள்ளிருந்த குருவை பார்த்தவள், மூடிக்கொண்டிருந்த கதவை அவளுக்காக தான் திறந்திருக்கிறான் என புரிந்துக்கொண்டு, “தேங்க்ஸ்” என மெல்ல சொல்லியபடியே உள்ளே வந்து நின்றுக் கொண்டாள்.

அவளின் பக்கவாட்டு தோற்றம் அவனுக்கு நன்றாகவே தெரிந்தது. வழக்கம் போல் ஃபோன், ஐடி கார்ட், பர்ஸ், ஹெட்செட், வாட்டர் பாட்டில் என அனைத்தையும் கையிலே வைத்தபடியே நின்றிருந்தாள்.

‘எப்பவும் அந்த கையிலே தான் எல்லாத்தையும் வெச்சிட்டு இருப்பா போல..’ என நினைத்தவன் அவளை தான் நிதானமாக அளவெடுத்தான்.

அவளை புடவையில் இன்று தான் முதன்முதலாக பார்க்கிறான். புடவையை நேர்த்தியாக அணிந்திருந்தாள். முகத்தில் எந்த ஒரு ஒப்பனையும் இல்லாமல் வேர்க்க விறுவிறுக்க நின்றிருந்தாள். காதில் குடை ஜிமிக்கி அவளின் தலையசைவிற்கு நடனம் ஆடியது. தலையில் முடிகள் அனைத்தையும் திரட்டி ஒரே கொண்டையாக போட்டிருந்தாள். அதில் சில முடிகள் அடங்காமல் சிலுப்பியபடி இருந்தன. அதற்கு மெஸ்ஸி பன் என்று அழகாக பெயர் இருந்தாலும் தற்சமயம் அவனுக்கு அது குருவி கூடு கொண்டையாக தான் தெரிந்தது.

அவனின் மௌன பார்வையை உணர்ந்தவள் திரும்பி அவனை பார்த்தாள். ஒருநொடி அவளின் கண்களை நேராக பார்த்துவிட்டு லிஃட்டின் கதவருகே சென்று நின்றுக்கொண்டான்.

ஆறாம் தளம் வந்ததும் அட்சயா வேகமாக நடக்க அவளின் புடவை தடுக்கியது. “பார்த்து..” என அவளின் கைபிடித்து நிறுத்தினான் குருபிரசாத்.

‘ஐயோடா!’ என்றாகியது அட்சயாவிற்கு. பின் அவனின் பிடியில் இருந்து விலகியவள் வேகமாக முன்னே சென்றுவிட்டாள்.

இப்படி பட்டும் படாமல் இருப்பவளிடம் எவ்வழியில் நெருங்க என குரு தான் மண்டையை பிச்சிக் கொண்டான்.

ஓணம் கொண்டாட்டம் என மேலும் சில பெண்கள் அன்று சேலை உடுத்தி வந்திருக்க, அன்று ஆபீஸே களைகட்டியது. அட்சயாவிற்கு இதெல்லாம் புதிதாக இருந்தது. கல்லூரி காலங்களில், கல்லூரி விழாக்களுக்கு புடவை அணிந்திருந்தாலும், இது அவளுக்கு புது அனுபவமாக தான் இருந்தது.

மதம், இனம், மொழி என அனைத்தையும் கடந்து கொண்டாடப்படுவதை பார்த்த அவளின் உள்ளம் உவகை கொண்டது.

ரங்கோலி போட்டி என பவ்யாவுடன் சேர்ந்து அவள் பூக்கோலம் போட்டிருந்தாள். அவள் கோலம் போடுவதை புகைப்படம் எடுத்து பவ்யா கோலத்தின் புகைப்படத்துடன் அதையும் அவர்களின் குழுவில் பகிர்ந்துவிட்டாள்.

ஒளிர்ந்து அடங்கிய அலைபேசியை எடுத்த குருபிரசாத்தின் கண்ணை நிறைத்தது, கேரள புடவையில் தலை நிறைய பூ வைத்து சிரிப்புடன் பூக்கோலம் போட்டுக் கொண்டிருந்த அட்சயாவின் புகைப்படம் தான்.

‘காலைல அவ தலைல பூ இல்லை தான..’ என அவனின் மனம் எடுத்துக்கொடுக்க, “கோலம் போடுறதுக்கே பூ வாங்கியிருக்காங்க தலைக்கு வைக்க வாங்க மாட்டாங்களா..” என மூளை சொன்னது. முதல்முறை அவளின் புகைப்படத்தை அவனின் கைபேசியில் சேமித்துக் கொண்டான்.
 

STN - 92

New member
Staff member
அவர்கள் ப்ராஜெக்டில் இருக்கும் அனைவருமே அந்த மீட்டிங் ஹாலில் குலுமியிருந்தனர்.

ஒரு ஒரு குழுதலைவராக முன் வந்து அவர்களின் வேலையை விளக்கி சொல்லிவிட்டு அடுத்த மூன்று மாதங்களுக்கான திட்டத்தையும் விலக்கிவிட்டு சென்றனர்.

மூன்றாவதாக தான் குருபிரசாத் சென்றான். மற்றவர்களை போல் அவனும் சிலதை விளக்க துவங்க, அட்சயாவின் கவனம் முழுக்க அவனின் மேல் தான் இருந்தது.

கருநீல சட்டை, கையை மடித்துவிட்டிருந்தவன் அசரடிக்கும் அழகில் தான் இருந்தான். ப்ரொஜெக்டரில் ஒரு ஒரு ஸ்லைடாக வர வர அதனை சுட்டக்காட்டி விளக்கினான். புதிது என்பதால் அட்சயாவிற்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும் அமைதியாக மற்றவர்களை கவனித்தாள்.

“உனக்கு எதாவது புரியுதா பவ்யா?” என பவ்யாவின் காதை கடிக்க, “புரியலனாலும் குருசாரை சைட் அடிச்சா போதும்.” என்றவளை முறைத்துவிட்டு திரும்பி கொண்டாள்.

அவனின் ஒருஒரு அசைவிற்கு பெல்டின் பட்டியில் அவன் மாட்டியிருந்த ஐடி கார்டு ஆடியது. ‘கொத்து சாவி மாதிரி ஐடி கார்டை இடுப்புல மாட்டிருக்காங்க’ என நினைத்தவளிற்கு சிரிப்பு வந்துவிட்டது. அவளை கவனித்த குரு, “எனி டௌபிட்ஸ்?” என புருவம் உயர்த்தினான்.

“ஆத்தி நம்மள தான்.” என அவள் குனிந்து கொண்டாள்.

அறையில் இருந்த மேலாளர் மனோஜ் கேள்விகனைகளால் குருபிரசாத்தை துளைத்து எடுத்தார். அவரின் கேள்வி அனைத்திற்கும் பதில் சொல்லிக்கொண்டே வந்தான்.

ஒருமுறை வாரயிறுதியில் குருவையும் அவனின் குழுவையும் வேலைபார்க்க சொல்லியிருந்தார் மனோஜ். “இப்படி சடனா சொன்னா எப்படி வேலை பார்க்க முடியும்?” என மறுத்துவிட்டான்.

“சும்மா இல்லை. வேலை பார்க்குறதுக்கு காம்பன்சேஷன் வாங்கிக்கோங்க குரு.” என நக்கலாக சொல்லியிருந்தார்.

முக்கியமான வேலை என்று சொல்லியிருந்தால் கூட குருபிரசாத் யோசித்திருப்பான். ஆனால், ‘வீக்கெண்ட் வேலை பார்த்துட்டு காசு வாங்கிக்கோங்க..’ என அவர் ஒருவித நக்கலாக சொன்னது குருவின் தன்மானத்தை தாக்கியிருந்தது.

அந்த பிரச்னையை பெரியளவில் எடுத்து சென்றிருந்தான் குரு. அதில் மனோஜிற்கு நோட்டிஸ் அனுப்பியிருந்தார்கள். அதிலிருந்து குருவை பார்க்கும் பொழுதெல்லாம் அவனை சீண்டிவிடுவதே மனோஜ் வேலையாக கொண்டிருந்தார்.

மீட்டிங் முடிந்தவுடன் அனைவருக்கும் முன்பாக சென்று நின்ற பத்மஜா, “எங்க வீட்ல நாளைக்கு வரலட்சுமி பூஜை இருக்கு. இங்க இருக்க பொண்ணுங்க எல்லாரும் கண்டிப்பா வாங்க..” என அனைவருக்கும் பொதுவாக அழைப்பை விடுத்தார்.

“அப்ப பசங்க வரக்கூடாதா மேம்.” என ஒருவன் கேட்க, “வரலாமே. பொண்ணுங்கன்னா வரலட்சுமியே வந்த மாதிரி இருக்கும். அதுக்கு தான்.” என்றவர் பவ்யாவிடமும் அட்சயாவிடமும் நிச்சயம் வரும்படி அழைத்துவிட்டே சென்றார்.

“அந்த மனோஜ் வேணும்னே உன்கிட்ட கேள்வி கேட்டு படுத்துறான் டா..” என அபிலாஷ் அறையில் இருந்து வெளியேறியபடியே சொல்ல,

“விடு டா. ப்ராஜெக்ட் மேனேஜரா போய்ட்டான். அதுமில்லாம அன்னைக்கு அவன் சொன்னதுக்கு நான் ஒத்துக்கலனு இன்னமும் கடுப்புல இருக்குறான்.” என அவனுடன் வெளியேறினான்.

அன்றிரவு, “அம்மா, எங்க ஆபிஸ்ல வார்க் பண்ணுற பத்மா மேம். அவங்க வீட்டு வரலட்சுமி நோம்புக்கு வர சொன்னாங்க ம்மா. பக்கத்துல தான் இருக்கு அவங்க வீடு. நான் போய்ட்டு வரவா?” என ஆபீஸில் நடந்ததை சொல்லிவிட்டு அன்னையின் பதிலுக்கு காத்திருந்தாள் அட்சயா.

பரிமளம் யோசனையுடன், “தனியாவா அச்சு போவ?”

“இல்லமா. பவ்யாவும் என்கூட வருவா.”

எப்படியாவது பெண்ணிற்கு திருமணம் தகையாதா என காத்திருக்கிறார் பரிமளம். எனவே, “பூஜைக்கு தான நல்லபடியா போய்ட்டு வாங்க.” என மேலும் சில பத்திரங்களை சொல்லிவிட்டு அழைப்பை வைத்துவிட்டார்.

அவள் அழைப்பை துண்டித்த நேரம் அவளின் அறையில் தங்கியிருந்தவள் அவளின் காதலனுடன் பேசி கொண்டிருந்தாள். பேச்சின் ஸ்வாரஸ்யத்தில் சில பல முத்தங்களை அலைபேசியின் வழியே அவனுக்கு அனுப்பி வைக்க, எரிச்சலுடன் போர்வையை முகம் வரைக்கும் போர்த்தி படுத்துக்கொண்டாள், அட்சயா.

‘இதுக்காகவே சீக்கிரமா இந்த ஹாஸ்டலை காலி பண்ணனும்.’ என மனதோடு நினைத்தும் கொண்டாள்.

மறுநாள் அலுவலகத்தில் வேலையை முடித்துவிட்டு மாலை பவ்யாவுடன் பத்மஜா வீட்டிற்கு கிளம்பினாள் அட்சயா.

“வாங்க வாங்க..” என பவ்யாவையும் அட்சயாவையும் வீட்டிற்குள் அழைத்தார் பத்மஜா.

அங்கே வரலட்சுமி அம்மனை அழகாக அலங்கரித்து பூஜை செய்து கொண்டிருந்தனர். அங்கு சென்றதும் தான் ‘சேலை கட்டிட்டு வந்திருக்கலாம் போல’ என அட்சயா நினைத்துக் கொண்டாள். சிறிது நேரம் அந்த பூஜையில் மெய்மறக்க அமர்ந்திருந்தாள்.

பின், சாமி கும்பிட்டு உணவு முடித்து அவர்கள் கிளம்பும் பொழுது அவர்களுக்கு ஜாக்கெட் பிட்டும், மஞ்சள், குங்குமம் மற்றும் மஞ்சள் கயிறு என அனைத்தையும் ஒரு பையில் போட்டு தாம்பூலமாக கொடுத்தனர்.

ஹாஸ்டல் வந்ததும், அன்னை மற்றும் பூர்ணிமாவிடம் பேசிவிட்டு அவர்கள் கொடுத்த தாம்பூலத்தை அவளின் பெட்டியில் வைக்கும் பொழுது அவளின் கையோடு தாலி கயிறு வந்தது. மஞ்சள் கயிறை கையில் எடுத்த அட்சயாவின் உடல் தானாகவே நடுங்க துவங்கியது.

“என்னால இவர் கூட வாழ முடியாது. எனக்கு இதுல விருப்பம் இல்லை.” என சொல்லிவிட்டு தாலியை கழட்டியது அவளின் நினைவில் நிழலாடியது. அதில் கண்கள் கலங்க அனைத்தையும் வேகமாக உள்ளே வைத்தவள் படுத்துவிட்டாள்.

படுக்க மட்டுமே செய்தாள். அன்று உறக்கமும் அவளை அண்டாமல் தொல்லை செய்தது. தலையணையை கண்ணீரால் நனைத்தவளின் மனதில் தாலியோடு சம்மதத்திற்காக அவளின் கண்களை பார்த்த குருபிரசாத்தின் நினைவு வந்தது.

அட்சயா கழட்டி கொடுத்த தாலியை பத்திரப்படுத்தி வைத்திருந்த குருபிரசாத் இரவின் தனிமையில் அதனை கையில் எடுத்து பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனால் அட்சயாவை கடந்து செல்லவே முடியவில்லை. தாலிக்கட்டி மனைவி என மனதில் வரித்தவளை விலக விருப்பமுமில்லை. சில நேரம், எனக்கு தோன்றியதை போல் அவளுக்கு ஏன் தோன்றவில்லை எனவும் யோசித்திருக்கிறான். ‘கல்யாணம் நடந்தப்ப அவளுக்கு பதினெட்டு வயசு தான் டா.’ என அவனின் மனதே அவனுக்கான பதிலையும் எடுத்துக்கொடுக்க அந்த எண்ணத்தையும் ஆழ்மனதில் புதைத்துவிடுவான்.

கையிலிருந்த தாலியை பார்த்தவனின் நினைவு நான்காண்டிற்கு முன் அட்சயாவின் கழுத்தில் அதனை கட்டிய நாளிற்கு பயணித்தது.
 

Kalai Karthi

Active member
குரு அச்சுவை விடாமல் இருப்பது அழகு. அச்சுவுக்கும் குருவை ரசிப்பது அழகு.
 
எம்மா அச்சு....என்ன தான் ப்ராப்ளம் உனக்கு.....
அவன் கூட வாழவும் போக மாட்டேங்கர....ஆன ரசிக்கவும் செயற....
இப்படி இருந்தா அவனும் தான் என்ன செய்வான்????
இந்த அம்மாக்கும் அவளை குரு கூட வாழ வைப்பதில் எண்ணமே இல்லையா????
 

STN - 92

New member
Staff member
எம்மா அச்சு....என்ன தான் ப்ராப்ளம் உனக்கு.....
அவன் கூட வாழவும் போக மாட்டேங்கர....ஆன ரசிக்கவும் செயற....
இப்படி இருந்தா அவனும் தான் என்ன செய்வான்????
இந்த அம்மாக்கும் அவளை குரு கூட வாழ வைப்பதில் எண்ணமே இல்லையா????
next எபி Flashback தான் சிஸ்டர். அதுல உங்க கேள்விக்கு பதில் இருக்கும்😁 ரொம்ப ரொம்ப நன்றி ❤
 
Top Bottom