செந்தமிழ் - 15

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,543
6,382
113

கண்ணம்மா.

அத்தியாயம் 15.

"இன்னைக்கு நம்மளோடக் கல்யாணநாள். வசந்தன் மீராங்குற தனித்தனியான பாதைகளிரண்டும்ஒருவழிப் பாதையா உறுமாறினநாள். அன்னைக்கு நான் உன் கழுத்துலத் தாலிக் கட்டுனச் சமயம், உனக்குள்ள ஓடின அந்தச் சிலிர்ப்ப என்னால நல்லாவே உணரமுடிஞ்சது செல்லம்மா.தாலியில நான் குங்குமம் வைக்கிறச்ச என்னோட விரல்கள்ல பட்டுத்தெறிச்ச உன்னோடக் கண்ணீர்த் துளிகளின் ஈரம், இந்த விரல்கள்ல
அப்படியே உறைந்துபோயிருக்கு செல்லம்மா. இப்பவும் என்னால அந்தக் கண்ணீர்த் துளிகளோட வெம்மைய உணரமுடியிது. அதோட மிக்க மிக்க நன்றி வசந்தன்; நான் ஆசைப்பட்டதுபோலவே இதோ உங்ககிட்ட உங்களுக்குள்ளப் பத்திரமா வந்துட்டேன்.
இதுபோதும் எனக்கு. னு சொல்லி அத்தனைப் பேர் முன்னாடியும் என்னக் கட்டிக்கிட்டுத் தேம்புனியே அந்தநொடி இந்த உலகத்திலேயே ஆசீர்வதிக்கப்பட்டவனா நான் உணர்ந்தேன்; இல்ல இல்ல நீ என்ன அப்படி உணரவச்ச.அப்போ முடிவு பண்ணேன் என் கைக்குள்ள அடங்கி நிற்கிற இந்த விலைமதிக்கவே முடியாத பொக்கிஷத்த என் உசுருல வச்சுத் தாங்கனும்னு.ஆனா அதுலயும் நீதான் ஜெயிச்சு நிக்கிற. அது என்னவோ தெரியல செல்லம்மா. வாழ்க்கையில எப்பாடுபட்டாவது முன்னுக்கு வந்துரனும். எதுக்காகவும் தோற்றுப் போகவே கூடாதுன்னு தீர்மானிச்சு அதநோக்கியே ஓடுற எனக்கு, உன்கிட்டத் தோத்துப் போகும்போதுமட்டும் அந்தத் தோல்வி கூட அடிக்கரும்பா இனிக்குது.நமக்குக் கல்யாணமாகி இதோ இன்னையோட முழுசா பத்து வருடங்கள் முடியுது. இத்தனை வருஷ இல்லற வாழ்க்கை நமக்கு நிறைய பாடங்களைக் கற்றுக் கொடுத்திருக்கு. நம்மளும் கூட நிறைய விஷயங்கள்ல மாறியிருக்கோம். இந்த மாற்றங்களெல்லாமே அவ்வளவு சுலபத்துல நமக்குள்ள வந்துச்சாயென்ன? இல்லையே; அனுபவம் அப்படிங்கிற உயிர்தானே ஒருத்தன பக்குவப்பட்ட மனுஷனா செதுக்குது? நாம கூட அப்படித்தானே செதுக்கப்பட்டிருக்கோம்? ஆக இந்த மாற்றம் ஒன்றுதான மாறாதது செல்லம்மா?
அந்த மாற்றம் ஆரோக்கியமானதாயிருந்தா, நமக்கு நன்மை பயக்கக் கூடியதா இருந்தா நாம ஏன் அதை ஏத்துக்கக் கூடாது?நிச்சயம் ஏத்துக்கலாம். அது தப்பே இல்ல என்றுதான் நான் சொல்லுவேன். நம்ம பாப்பாவோட இழப்பு. அது நமக்கு விழுந்த மிகப்பெரிய அடிதான். நான் இல்லைன்னு சொல்லல. அதுலயிருந்து அவ்வளவு லேசுல நம்மளால வெளிய வர முடியாது. அதையும் நாம் மறுக்கல.நீ அவள உன் வயித்துலச் சுமந்தமாதிரி, நான் என் குட்டிமாவ அணு அணுவா நெஞ்சிலச் சுமந்தேன். பாப்பாவப் பெத்தெடுக்கும்போது நீ பட்டக் கஷ்டம் அது வார்த்தைகளில் வடிக்கவே முடியாதது.
இருந்தாலும் அதுக்குக் குறையாத வலிய நானும் மனசுல அனுபவிச்சேன்..
ஞாபகமிருக்கா? எங்களோடக் குழந்தைய நான்தான் அவர் கையில கொடுப்பேன்னு அடம்பிடிச்சு, இந்தாங்க வாத்தி பாப்பாவப் பிடிங்கன்னு சொல்லிச், சின்னஞ்சிறு பூக்குவியல் ஒன்ன என் கையிலக் கொடுத்த. குட்டி குட்டியா கை கால் மூக்கு வாய் னு பஞ்சுமாதிரி இருந்த நம்மளோட குழந்த அடுத்த நாலேவருஷத்துல ஒட்டுமொத்தமா நம்மளவிட்டுட்டுப் போயிடுவான்னு கனவுலயும் நாம நினைக்கலையே; அதுவும் படக்கூடாத வேதனையையெல்லாம் அனுபவிச்சு என்னோடத் தங்கம் காஞ்சச் சறுகாகிக் கிடந்ததத் தொட்டுப் பார்த்தக் கணம் உயிர் வாழ்கிற ஆசையே விட்டுப் போயிடுச்சு எனக்கு.அப்படியே நான் உயிரை விட்டிருந்தா என்னையே உலகமா நினைக்கிற நீ? நம்மளோட பையன்? உங்களோட நிலை என்ன? என் கைக்குள்ள இருக்கிறப் பொக்கிஷத்த நானே நழுவவிடலாமா? அத என் கையால நானே நொறுக்கிப் போடலாமா?
அது நியாயமில்லையே செல்லம்மா.

இன்னமும் எனக்குத் தர்மத்தின்மேல அதீத நம்பிக்கையிருக்கு. அந்தத் தர்மம் நிச்சயம் ஒருநாள் அந்தக் கேடுகெட்ட ஈனப்பிறவிகள அடியோட அழிச்சுப் போடும். நான் இத உறுதியா நம்புறேன். அதோட இங்கக் காரணமில்லாம எதுவுமே நடக்கிறதில்ல செல்லம்மா. நடக்கிற எல்லாத்துக்குப் பின்னாடியும் ஏதோவொரு வலுவான காரணமிருக்கும். நம்ம பாப்பாவோடக் கொடுமையான மரணத்துக்குப் பின்னாடி என்ன காரணம் இருந்திடப் போகுதுன்னு நீ கேட்கலாம். அதுக்கு என்கிட்டச் சரியான பதில் இல்ல செல்லம்மா. ஆனா நம்ம பாப்பாவோட விஷயத்துக்குப் பின்னாடியும் ஏதோ ஒரு காரணம் இருக்கு. இத நீ நம்புறியோ இல்லையோ இப்படி ஏதாவது ஒன்னப் பிடிச்சுக்கிட்டுத்தான் நாம நம்மளோட மிச்ச வாழ்க்கைய வாழ்ந்தாகணும். இதுதான் எதார்த்தம்..

யோசிச்சுப் பாரு எத்தனையோ பேர் இதைவிடப் பெரியப் பெரிய இழப்புகளையெல்லாம்
தாங்கிக்கிட்டு வாழத்தான் செய்கிறார்கள். மலரினி இப்ப நம்மளோட இல்லாம இருக்கலாம். அவளோட இடத்த வேற யாரைலையும் நிரப்பமுடியாமல் கூட இருக்கலாம்.
ஆனா கடவுளோ இல்ல இயற்கையோ இந்தத் தீராத துக்கத்தை ஆத்திக்க நம்ம பையனோடச் சேர்த்து முத்துமுத்தா இன்னும் இரண்டு குழந்தைகள நமக்குக் கொடுத்துறுக்கு..நற்றமிழும் நவிலனும் நம்மள அவங்களோடச் சொந்த அம்மா அப்பாவாதான பாக்குறாங்க? செந்தமிழும் கூட உன்னோட நிம்மதிய மனசுல வச்சுத்தானே பிள்ளைகளை நம்ம பொறுப்பிலேயே வளரவிட்டுருக்கா? இதெல்லாம் தெரிஞ்சும் கூட நீ மாறாம உன் போக்கிலேயே இருக்கிறது சரிதானா?
ஒரு அம்மாவா உன்னோடக் கடமைகள்ல இருந்து நீ எப்பவும் பின்வாங்கக் கூடாது செல்லம்மா. இப்பவும் நீ நம்ம பிள்ளைகளுக்கு ஒரு நல்ல தாய் அதுல சந்தேகமே வேண்டாம். ஆனா இத நீ முழுமையா ஆத்மார்த்தமா செய்யலையோன்னு எனக்குத் தோணுது. ஒருவேளை இதுக்கும் நம்ம மலர்க் குட்டியோட இறப்புத்தான் காரணம்னு நீ சொன்னனா, அடிச்சுச் சொல்றேன் நம்ம பாப்பா ஒருகாலமும் உன்னை மன்னிக்கவேமாட்டா அதமட்டும் கவனத்துல வச்சுச் செயல்படு.
இதையெல்லாம் முன்னாடியே உங்கிட்டச் சொல்லி, உன்னோடக் கூட்டுக்குள்ளயிருந்து வெளியே கொண்டுவர நான் முயற்சி செஞ்சிருக்கணும். உனக்கான இடைவெளியத் தர்ரதா நினைச்சு தப்புப் பண்ணிட்டேன்.என்ன மன்னிச்சிடுடா."என்றவனின் வார்த்தைகளை அவனது கைகளுக்குள் நின்றபடி, கண்ணீருடன் கேட்டுக் கொண்டிருந்த அவளின் வெண்டை பிஞ்சு விரல்கள் அவன் கேட்ட மன்னிப்பில் அவனது வாயைச் சுண்டிவிட்டன.

அந்த விரல்களில் அப்படியே தன் இதழ்களைப் பதித்தான் வசந்தன்..

"வாத்தி என்ன செய்றீங்க? "என வினவிய வலி குரலில் மெல்லிய குறைவு.

"என்ன சொன்ன செல்லம்மா? திரும்பத் திரும்ப ஒருமுறை சொல்லு?" என உணர்ச்சிப் பெருக்கில் மீராவைப் போட்டு உலுக்கினான் வசந்தன்.

மீராவுக்குமே அப்போதுதான் தான் எங்கே பிழைவிட்டோம் என்பது புரியவந்தது.
தான் ஒருத்தி இவர்களது வாழ்வில் எத்தனை அத்தியாவசியமானவள் என்பதை நன்கு விளங்கிக் கொண்டமாத்திரத்தில்,

கணவனை நேசம் பொங்கப் பார்த்தவாறு "வாத்தி;"என்றாள் சற்றே அழுத்தமாக.

"எனக்கு என்னோட பழைய மீரா; வசந்தனோட வசந்தகாலமா இருந்த மீரா கிடைச்சிருவாதானே? அவளை என்கிட்ட நீ கொடுத்துருவதானே?"எனக் கேட்டவனின் குரலில் ஏக்கமும் எதிர்பார்ப்பும் சரிவிகிதத்தில் வெளிப்பட்டது.

"நிச்சயம் உங்க மீரா உங்கக்கிட்ட வந்துருவா வாத்தி. ஆனா அது அவ்வளவு இலகு இல்ல.
நானும் எல்லாத்துலயிருந்தும் ஓரளவுக்காவது வெளியவர முயற்சி செய்யிறேன்.
ஆனா என்னால முடியாம இருக்கு. மலர் என் கண்ணுக்குள்ளே நிக்கிறா வாத்தி. சமயத்துல அவளைத் தாண்டி என்னால எதையுமே யோசிக்கமுடியல.
நற்றமிழ மனசு தன்னால மலரினியோட ஒப்பிட்டுப் பாக்குது. இத்தனைநாளும்
நான், என்னோட உணர்வுகள்னு இருந்துட்டேன். ஆனா இப்போ நான் மாற ஆசைப்படுறேன் வாத்தி. கட்டாயம் என்ன என்னால மாத்திக்கமுடியும் என்கிற நம்பிக்கை இருக்கு எனக்கு. இல்லாட்டி நீங்க என்ன மாத்திடுங்க. எப்படியாவது இந்த அழுத்தங்கள்ல இருந்து கொஞ்சமாவது என்ன வெளில கொண்டுவந்துருங்க."என்றவள் கொண்டவனின் மார்பில் விழுந்து கதறினாள்.

வருடக்கணக்கில் தனக்குள் அடக்கிவைத்திருந்தத் துக்கத்தையெல்லாம் கணவனின்
அணைப்பிற்குள் கண்ணீரில் கரைத்திட முயன்றாள். வசந்தனும் அவளை அழவிட்டான். அவளது குமுறல்களுக்குச் செவிகொடுத்தான். எந்தநிலையிலும் அவளுக்காக அவளவனாக அவன் இருக்கிறான் என்பதைச் சொல்லாலும் செயலாலும் அவளுக்கு உணர்த்திக் கொண்டேயிருந்தான்.

எவ்வளவுநேரம் கழிந்ததோ; மெல்லமெல்ல மீராவின் அழுகை மட்டுப்படவும், மீராவுடன் தங்களது அறையின் மேல்மாடத்திற்குச் சென்றவன், அங்கிருந்தச் சாய்வுநாற்காலியில் அமர்ந்துகொண்டு மனைவியைத் தன் மடியில் அமர்த்திக் கொண்டான்.

மீராவும் வாகாக கணவனின் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள். மாலைநேரத் தென்றல் காற்று இருவரையும் இதமாகத் தழுவிச் சென்றது.

"இது என்னன்னு நினைவிருக்கா செல்லம்மா?"என்று தன் கையிலிருந்தக் காகித உறையை அவளிடம் காட்டிக் கேட்டான் வசந்தன்.

மறக்கக் கூடியப் பொருளா அது? அந்தக் காகித உறையைப் பார்த்தவுடன் மீராவின் இதழ்களில் புன்னகைப் பூக்கள் குடியேறின.

"ஏன் இல்லாம.அதெல்லாம் நல்லாவே இருக்கு.'என்றவள், அந்த உறையைத் திறந்து உள்ளிருந்தக் காகிதத்தை வெளியே எடுத்தாள்.

"அதான பார்த்தேன்; இதப் போய் என் செல்லம்மாவால எப்படி மறக்கமுடியும்? காதல் கடிதம் என்கிற பெயரில் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி ஒரு அப்பாவிப் பையனுக்கு ஒரு அடப்பாவிப் பொண்ணால கைப்பட எழுதப்பட்ட மிரட்டல் கடிதம். என்னசெய்ய
அந்த மிரட்டலுக்குப் பயந்து நானும் இங்க வந்து இப்படி வசமா மாட்டிக்கிட்டேன்."என்றான் பயந்தக் குரலில்.

கணவனின் சேட்டையில் கோபமும் சிரிப்புமாக அவனது மூக்கைப் பிடித்து ஆட்டிய மீரா,

"என்ன வாத்திக் குளிர்விட்டுப் போச்சா உங்களுக்கு?"எனக் கேட்டாள் சூடாக.

"எப்பவும் இதோ இப்படியே இரு குளிர்விட்டுப் போச்சா இல்லையான்னு சொல்றேன்."
என மீசையுரச அவளது காதோரத்தில் மொழிந்தான் வசந்தன்.. கணவனின் செய்கையில் நெளிந்த மீரா அவனது கையில் பட்டென ஒன்று வைத்தாள். இருவருமே ஒருவித ஏகாந்தலயத்தில் மீரா வசந்தனுக்கு எழுதியக் காதல் கடிதத்தை வாசிக்கத் துவங்கினர்.

அன்புள்ள வாத்திக்குத், தங்களின் வருங்காலம் எழுதிக் கொள்வது...

முக்கியக் குறிப்பு: தாங்கள் ஒரு கல்லூரிப் பேராசிரியராக இருக்கலாம். ஆனால் அதற்காகவெல்லாம் உங்களை என்னால் பேராசிரியரே என்று அழைக்கமுடியாது.
நீங்க எப்போதுமே எனக்கு வாத்திதான். அப்படித்தான் உங்களை நான் எப்போதும் அழைப்பேன். இதற்குத் தங்கள் தரப்பிலிருந்து மறுப்பேதும் வரக்கூடாது சொல்லிவிட்டேன்....நான் இவ்வாறு தங்களை அழைப்பதற்கென்று குறிப்பிட்டக் காரணங்கள் கிடையாது. இவ்வாறு உங்களை அழைப்பது எனக்குப் பிடித்திருக்கிறது அவ்வளவே..

நான் சுற்றிவளைத்துப் பேச விரும்பவில்லை. நேராகவே விடயத்திற்கு வருகிறேன்.
எனக்கு உங்களை மிகமிகப் பிடித்திருக்கிறது. பல எல்லைகளையும், கட்டுப்பாடுகளையும்,
வரையறைக் கோட்பாடுகளையும் தாண்டிய பிடித்தம் இது. சலனம், தடுமாற்றம், கவர்ச்சி,
ஈர்ப்பு இவற்றிற்கெல்லாம் அப்பார்ப்பட்டப் பிடித்தம் இது. உங்களின்மீதான இந்தப் பிடித்தம் எனக்குள் எப்படி வந்தது, எப்போது வந்தது, எவ்வாறு வந்தது என்பதைப் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. அதை நான் தெரிந்துகொள்ளவும் விரும்பவில்லை.
தாங்கள் எனது காதலை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதே எனது விருப்பம்.
எங்கே எனது விருப்பத்தில் மண்ணை வாரி இறைப்பதில்தானே தாங்கள் தீவிரமாக இருக்கிறீர்கள்?

என்னிடமே இதெல்லாம் சரிவராது என்கிறீர்கள். தங்களால் எனக்கு ஒரு நல்வாழ்வினைத் தரமுடியாது என்றெல்லாம் வாய்க்குவந்தபடிப் பிதற்றுகிரீர்கள். எல்லாவற்றிற்கும் சிகரமாக நான் எனது நேசத்தை வெளிப்படுத்தியநாள் தொடக்கம் முதல் இப்போதுவரை என்னைத் தவிர்த்துவருகிறீர்கள். என்ன செய்யலாம் உங்களை? எனக்கிருக்கும் கோபத்திற்கு உங்களை நேரில் பார்த்தேனென்றால், நன்றாக நான்கு மொத்து மொத்திவிடுவேன். எனக்கும் உங்களைப் பார்த்தால், பார்த்தால் என்ன பார்த்தால்!
உங்களது குரல் ஒன்றே போதுமே என்னை அப்படியே வசியம் செய்ய. பிறகு எங்கிருந்து நான் உங்களை மொத்த?

எனக்குத் தெரியாது வாத்தி. நான் அன்றைக்கு உங்களிடம் என் மனதை வெளிப்படுத்திவிட்டேன். உங்களது கேள்விகளுக்கும் என்னால் முடிந்த அளவில் பதில் தந்தும் இருக்கிறேன். அதையும்விட வீட்டினரின் காதுக்கு இந்த விடயத்தைக்
கொண்டுசென்றிருக்கிறேன். எல்லோரும் நமது திருமணத்திற்குச் சம்மதித்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இனி நீங்கள்தான் சொல்லவேண்டும். திருமணத்திற்குச் சம்மதமென்று...என்னவோ தெரியவில்லை: எனது அத்துணை அணுக்களிலும் நீங்களே நீக்கமற நிரம்பியிருக்கிறீர்கள்.எனது ஒவ்வொருநாளும் உங்களில் பிறந்து உங்களிலேயே நிறைவுற எனது உள்ளம் வாஞ்சிக்கிறது.

ஏன் வாத்தி? உங்களின் சரிபாதியாக நான் இருக்கக் கூடாதா? உங்களின் பயணத்தில்,
உங்களின் மீராவாக, உங்களுடன் இணைந்து கருத்தொருமித்த நல்லறம் மிக்க இல்லறத்தைச் சுகிக்கும் வாய்ப்பினை எனக்குத் தரமாட்டீர்களா? கேள்விகளுக்கும், குழப்பங்களுக்கும், வீண் தயக்கங்களுக்கும் இடமேயின்றி நான்தான் இந்த மீராதான்
தங்களது காதலி, தோழி, மனைவி, துணைவி, சரிபாதி, திருமதி எல்லாம். எனவே ஒழுங்குமரியாதையாக தாமதிக்காமல் தங்களது சம்மதத்தைச் சொல்லிவிடுங்கள்.
இல்லையேல் நடக்கவிருக்கும் எதற்கும் நான் பொறுப்பில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கனவே கௌரி விரதம், மௌன விரதம் போன்ற பல விரதங்களின் துணையோடு வீட்டினரைக் கொஞ்சம் கொஞ்சமாக என் பக்கத்திற்குக் கட்டி இழுத்துக் கொண்டிருக்கிறேன். இத்தனைப் பேரைச் சமாளிக்கத் தெரிந்த எனக்கு தங்களைக் கையாளத் தெரியாதா? உண்மையாகச் சொல்கிறேன் இந்தக் கடிதத்திற்குப் பிறகும்
தாங்கள் எனது நேசத்தை ஏற்றுக் கொள்ளவில்லையென்றால், நிச்சயம் மீராவின் மறுபக்கத்தைத் தாங்கள் பார்க்கவேண்டியிருக்கும்.

வேற என்ன? காலம் தாழ்த்தாமல் என்னைத் திருமணம் செய்துகொள்வதற்குத் தங்களது மனப்பூர்வமான சம்மதத்தை மிகவிரைவில் தாங்கள் தெரிவித்தாகவேண்டும் என்ற கட்டளையுடன் விடைபெறுகிறேன்.....

"மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை.
தண்ணீர்க் கேட்டேன் அமிர்தம் தந்தனை.
எதை நான் கேட்பின் உனையே தருவாய்? ???"

பின்குறிப்பு: ஒரு கடிதம் எழுதினேன்,
என் உயிரை அனுப்பினேன்.
அந்த எழுத்தின் வடிவிலே
நான் என்னை அனுப்பினேன்.


என்றெல்லாம் உருகி உருகி எழுதிட எனக்கும் ஆசைதான்.ஆனால் அதற்கெல்லாம் நீங்கள் சரிப்பட்டு வரமாட்டீர்கள். உங்களையெல்லாம் கையாள வேண்டியவகையில் கையாண்டால்தான் எனது வழிக்கே கொண்டுவரமுடியும். இதில் எங்கிருந்து காதல் வசனங்கள் எழுதுவது?எனவேதான் பாடல் வரிகளோடுமட்டும் நிறுத்திக் கொண்டேன்.

இப்படிக்கு
தங்களின் வருங்காலம்.

கடிதத்தைப் படித்துமுடித்தவர்களின் முகங்கள் பழைய நினைவுகளின் ஆதிக்கத்தில்
மலர்ந்துபோயிற்று.அந்தக் கடிதத்தை யாரும் வாய்விட்டு வாசிக்கவில்லை. மௌனத்தின் பேரிறைச்சலில் வசந்தனின் கரங்களும்,மீராவின் கண்களும் ஒருங்கே கடிதத்தை
வாசித்திருந்தன.

இந்தக் கடிதத்தை மீரா வசந்தனுக்காகவென்றே பார்வை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் எழுத்துவடிவமான "ப்ரெயிலி முறையில்"எழுதியிருந்தாள்..
நேசமென்னும் ஒற்றைச் சொல் நிகழ்த்திடும் மாயங்களுக்குக் கணக்கென்ற ஒன்று இருக்கிறதாயென்ன?

"எதைநான் கேட்பின் உனையே தருவாய்?" குறும்புடன் வினா தொடுத்த
வசந்தனின் கையில் வீணையானாள் திருமதி மீரா வசந்தன்….
 

Author: Vishakini
Article Title: செந்தமிழ் - 15
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Magizh kutty