தேன் நாட்டு பைங்கிளி - 3

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,450
113
Germany
அத்தியாயம்: 3


அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த குழம்பில் சில துண்டு மீன்களைப் போட்டு, தீயைக் குறைத்து வைத்தாள் வானதி. மற்றொரு அடுப்பில் இடியாப்பம் வெந்து கொண்டிருந்தது.

"முடிஞ்சதா வானும்மா... அப்பவே வாசம் வர ஆரம்பிச்சிடுச்சி." என்று மீன் குழம்பின் நறுமணத்தை உள்ளிழுத்தபடி வந்தார் ஆண்டாள்.

"ஓம் பெரியம்மா.‌ முடிச்சிட்டன். சாதமும் வச்சிட்டன். சொதியும் கொதிச்சிட்டு. அப்படியே இருக்கட்டும். வெளிக்கிடக்குள்ள நான் வந்து ஓஃப் செய்யுறன்." என்றபடி சமையலறையை விட்டு வெளியேறினாள் வானதி.

ஆண்டாளின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு, வீட்டின் அநேக வேலைகளை வானதி முடித்து விட்டுத் தான் அலுவலகம் செல்வாள்.

"ஏன் வானும்மா! எல்லாத்தையும் நீயே செய்ற. நான் பாத்துக்குவேன்ல. எல்லாரும் போய்ட்டா நான் வீட்டுல சும்மாதான இருப்பேன்."

"ஏன் தேமே எண்டு இருக்க வேணும். மாமி இருக்காங்களே. ரெண்டு பேரும் கதை கதையா கதைச்சுக் கொண்டு இருங்க, கோயில் கோயிலாக பக்தி முக்தியா போங்க, யார் வேணாம் எண்டது?" என்றவள்,

"உங்களட சமையல் கலைய இரவைக்குக் காட்டுங்க போதும். இப்ப சுகமா தூங்குங்க. நிறைய சிரிங்க. சந்தோஷமா இருங்க. அது தான் உங்களட மனசுக்கும் உடம்புக்கும் நல்லம். நான் குளிச்சிட்டு வாரதுக்குள்ள உங்கட காலச் சாப்பாடு உள்ளுக்கு இறங்கி இருக்கணும். எங்களுக்காகக் காத்திருக்கன் எண்டு காலம் கடந்து சாப்பிட்டு, உடம்ப ஊத்தையாக்க கூடாது. சாப்பிட முதல் குளுசைப் போட மறக்காதீங்க. இங்க வச்சிருக்கன்." என்று மாத்திரைகளை எடுத்து வைத்து விட்டு, குளியலறைக்குள் சென்றாள்.

மணி ஒன்பதை நோக்கி சென்று கொண்டிருந்த நேரம்‍, கரிகாலன் வெள்ளைச் சட்டையை டங்கின் செய்தபடி இறங்கி வந்து கொண்டிருந்தான்.

அவன் ஒரு கபடி வீரன். தமிழ்நாடு கபடி அணியில் இடம் பெற்று தேசிய அளவில் புகழ் பெற்றவன். அவன் வாங்கிய ஏகப்பட்ட பரிசுகளும், பதக்கங்களும், தான் ரயில்வே துறையில் எளிதாக அவனுக்கு இடத்தை உருவாக்கித் தந்தது.

"சாப்பிட வாப்பா." என அழைத்தார் ஆண்டாள். உணவு மேஜைக்கு வந்தவன், முதல் வேலையாக பார்த்திபனின் ஃபோனைப் பறித்தான்.

"ண்ணா..." என்று அவன் கூவ,

"சாப்பிடும் போது என்னடா ஃபோனு வேண்டி கிடக்கு. தட்டப் பாத்து சாப்டு.” என்று கோபமாகவே சொன்னவன், தந்தையிடம்,‌

"மாத்திரப் போட்டிங்களாப்பா?" என்று வினவியபடி தட்டில் இடியாப்பத்தை எடுத்து வைத்தான். பாலை ஊற்றி சர்க்கரை போடும் போது, தட்டை எடுத்துக் கொண்டாள் வானதி.

"அவசரம் காலாண்ணா... கெதியா நேரம் பொயிட்டு. கிளம்புங்க!" என்று விட்டு உண்ணத் தொடங்கினாள்.

டொய்ங்… டொய்ங்… என்று வானதியின் அலைபேசி குறுந்தகவல் வந்ததாகச் சொல்லியது. என்னவென்று பார்த்தவள், புருவ உயர்வுடன் விழிகளை அலைபேசியில் பதித்துக் கொண்டு உண்டு கொண்டிருந்தாள்.

"சாப்பிடும்‌ போது ஃபோன் பாக்கக் கூடாதுன்னு என்ட்ட மட்டும் பிடுங்கி வச்சீங்க. வானுக்கா கிட்டயும் வாங்கி வைங்க." என்று குற்றம் சுமத்தினான் பார்த்திபன்.

"வானு..." என்று அதட்டலுடன் வந்தார் ஆண்டாள்.

"அவனுக்குப் போட்டியா நீயும் ஆரம்பிச்சிட்டியா வானு?" என்றவரின் கண்டிக்கும் பார்வைக்குப் பதிலாக,

"இல்லை பெரிம்மா…‌ நான் ஒண்டும் இவனப் போல கேம்ஸ் விளையாட இல்ல. ஓபிஸில் என்ர சகாக்கள் க்ரூப்பில் சாட் செய்து கொண்டிருக்கா. அதைத்தான் வாசிச்சன்."

"என்ன விசயம் வானு?" என்றான் கரிகாலன் வானதியின் முகத்தில் தோன்றி மறையும் பாவனைகளைப் பார்த்து.

"ஒண்டும் இல்லை அண்ணா. இண்டைக்கு என்ர பயிற்சிட காலாவதி திகதி. எந்த செக்சனில் என்ர அலுவல் எண்ட செய்தி மட்டும் காணேல்ல. என்ர ஃப்ரெண்ட்ஸ்க்கும் மற்ற ஆக்களுக்கும் நேற்றே வந்திட்டு. மிருதுளா, அக்கௌண்ஸ். சித்ரா, கஸ்டமர் கேர். டிரெயினிங் சமயத்துல அவங்கள் ரெண்டு பேரும் தான் என்ர backbone. இனி நான் மட்டும் எண்டால், மற்றாட்கள பிடிச்சு, கதைச்சி, ஆரம்பத்தில் இருந்து பழகி வர வேணும்." என்றவள் முகம் வாடிப் போனாள்.

வானதிக்கு நெருங்கிய தோழிகள் தோழமைகள் என்று பள்ளி, கல்லூரி படிக்கும் சமயத்தில் இருந்தே கிடையாது. சித்ரா, மிருதுளா மட்டும் தான். அவர்களும் பயிற்சி காலத்தில் தான் நட்பானார்கள். மற்றவர்கள் எல்லாம் அவளின் கொஞ்சு தமிழைக் கேலி செய்வதால் நட்பு பாராட்டாது விலகி விட்டாள்.

'பத்து வர்ஷமாகப் போது நீ சென்னை வந்து‌. இன்னுமா உன்னை மாத்திக்கல?.' என நாகரிகமாக சிலர் தேன் தடவி கொட்டினாலும்,

பலர் அவளிடம் நேருக்கு நேராகவே, 'நீ பேசுற தமிழ் எங்களுக்குப் புரியல. புரியுற மாதிரி பேசு.' என்று முகத்தில் அறைந்தார் போல் சொல்லி விடுவர்.

ஏன் வேலைக்கான நேர்காணலின் போதும் அவளின் பேச்சு, பேசுப் பொருளாக மாறியிருந்தது.

'நீங்கள் கதைக்கிறது எனக்கு விளங்குது. நான் கதைக்கிறது தான் உங்களுக்கு விளங்கல. அப்படியெண்டால் பிரச்சினை உங்களுக்கு தான். என்ர இல்லை. முடிஞ்சா என்ர தமிழை விளங்க முயற்சி எடுங்க.' என்று நேர்காணலில் கூற, பல மணி நேர காத்திருப்புக்குப் பின் தான் வேலை உறுதியானச் செய்தி கிடைத்தது.

அலுவலகத்திலும் தனித்து நின்றவளிடம் சில காலமாகத் தான் சக ஊழியர்கள் சகஜமாக பேச்சை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இப்பொழுது புதிய பிரிவு. மீண்டும் அவர்களிடம் தன்னை விளக்க வேண்டும். அவர்களின் புருவ சுழிப்பைப் பார்க்க வேண்டும்.

இவையெல்லாம் அவளின் எண்ண ஓட்டத்தில் தறிகெட்டு ஓடிக் கொண்டிருந்தது.

"புது ஆள்கள் கூட பழகுறது புது சவால் மாதிரி தான் வானு. கொஞ்சம் பொறுமையா எல்லாத்தையும் கவனிச்சி உள் வாங்கிக்கிட்டா உன்னால சமாளிக்க முடியும். Be strong. எது வந்தாலும் நான் இருக்கேன்." என்று தமையனாய் தங்கைக்குத் தன்னம்பிக்கை அளித்தான்.

"ஓம் அண்ணா…” என்றவளுக்கு மீண்டும் குறுஞ்செய்திகள் வந்த வண்ணமே இருக்க, அதை வாசித்துப் பார்த்து சிரித்தவள், அலைபேசியைக் கரிகாலனுக்குக் காட்டி,

"ஆருக்கும் அவங்களட செக்சனில் பிடித்தம் இல்லை. ஒரே பிணாத்தல். மேனேஜ்மெண்டை உரல்ல போட்டு இடிச்சிக் கொண்டு இருக்கா வாட்ஸ்ஆஃப்ல. நான் சைலண்டாய் ரசிச்சுக் கொண்டிருக்கன்."

"காஸிப் பேசுறத கேக்குறேன்னு தெளிவாச் சொல்லு வானுக்கா." என்றான் பார்த்திபன்.

"காஸிப் இல்லை. என்ர அலுவல்."

"புரணி பேசுறத ரசிக்கிறது அலுவலா?" எனக் கரிகாலனும் கேலியாகச் சொல்ல, சிலிர்த்துக் கொண்டு நின்றாள் வானதி.

மூவரின் கலவரத்தை அடக்கி வீட்டை விட்டு துரத்தி விடுவதற்குள் பெரும்பாடாகிப் போனது ஆண்டாளுக்கு.

வானதியை மெட்ரோ நிலையத்தில் விட்டு விட்டுச் சென்றான் கரிகாலன்.

கைக் கடிக்காரத்தைத் திரும்பி திரும்பி பார்த்தபடி வந்தவள், டோக்கன் எடுத்துக் கொண்டு, நிதானமாக இடம் பிடித்து அமர்ந்ததுமே அலைபேசியைத்தான் முதலில் எடுத்தாள்.

"HR ஜானகி என்னவும் அனுப்பினாங்களா? என்ர செக்சன் எது எண்டு?." எனத் தோழிகளுக்குத் தட்டி விட,

"இல்லை. எனக்கே நேத்து நைட் தான் மெயில் வந்தது. உனக்கும் வரும்." என்றாள் மிருதுளா.

"Documentation, godown இந்த ரெண்டு செக்சனுக்குத் தான் உன்னை மாத்தி விட வாய்ப்பு இருக்கு. வானு, நீ குடோனுக்கு போய்டு." என்றாள் சித்ரா.

வானதி, "ஏன்?"

"குடோன்னா ஜெய் சார் இருப்பாரு வானு. நம்ம ஆஃபிஸ்லயே சிரிச்சு சிரிச்சுப் பேசக் கூடிய அழகான eligible bachelor அவர் தான்.

உனக்கு ஒரு பிரச்சினை வந்ததே... அப்பக் கூட அவரு கூலா ஹண்டில் பண்ணாரு. டாக்குமெண்ட் செக்சனுக்கு மட்டும் போய்டாத. அங்க வர்மா சார் தான் executive. ஆளு எப்ப பாத்தாலும் பச்சை மிளகாய முழுங்குன மாதிரியே இருப்பாரு. சோ, ஜெய் சார் நல்லவரு." என்று பிதற்ற,

"அண்டைக்கு நான் எண்டு இல்லை, என்ர இடத்தில் வேறு ஆர் இருந்தாலும் ஜெய் சார் அப்படித் தான் செய்திருப்பார். நான், நீ எண்ட பேதமெல்லாம் பார்க்க மாட்டார்."

"அப்படியா!”

"ஓம்... அவருட மனசு தங்கம். எல்லாருக்கும் உதவும் குணம்."

"அப்ப சாரப் பத்தி எனக்குத் தான் ஒன்னும் தெரியல. அட்லீஸ்ட் நீ போனா உன்னைக் காரணமா வச்சி நான் அவரப் பக்கத்துல இருந்து சைட் அடிப்பேன்."

"அப்ப ஆகாஷ் சார். மோகன் சார். மனோஜ் சார். அவங்களுக்கும் நீ இதே டயலாக்கத்தான டி சொன்ன. ஒரே நேரத்துல எத்தனை பேரத் தான் டி சைட் அடிப்ப." என மிருதுளா கேட்டாள்.

"அவங்கள்ல ஒருத்தர் என்னைத் திரும்பிப் பார்த்து சைட் அடிக்கிற வரை..." என்க, அதற்கு மிருதுளா ஒன்று சொல்ல, சித்ரா சொல்ல, எனப் புலனத்தில் கலகலத்துக் கொண்டிருந்தனர்‌. ஆனால் வானதி மட்டும் அலைபேசியை அணைத்து விட்டு வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினாள்.

மனம் பரபரத்தது. ‘ஜெய்யுடன் வேலை பாக்கலாம் தான். ஆனால்… சரிவராது. மற்றவன்… ம்ஹூம்… வேண்டவே வேண்டாம். அவனுடன் ஒப்பிடும் போது ஜெய்யே ஓகே தான்.’ என்ற யோசனையுடனே பயணம் முடிவுக்கு வந்தது.

நேரம் ஒன்பதரையை நெருங்குவதால் எடுத்து வைக்கும் எட்டுக்களைத் துரிதப்படுத்தி, சேர் ஆட்டோவிற்காக அவள் கைக் காட்டிய தருணம்,

"குட் மார்னிங் வானு." என்று புன்னகைத்தான் ஜெய் சூர்யா. 29 வயது வடிவான அழகன். அவர்களின் குடோனில் அசிஸ்டன்ட் மேனேஜர்.‌

"குட் மொர்னிங் ஜெய் சார்..."

"சார கட் பண்ணிடு வானு. கால் மீ ஜெய்."

"நோ சார்… எனக்கு அப்படி கூப்பிட மனம் வரல்ல." என்றவள், கடந்து செல்லப் பார்க்க,

"நான் ட்ராப் செய்றேன் வானு." என்று மீண்டும் மறித்தான் பாதையை. அவனுக்கு மறுப்பாக தலையசைத்தவள்,

"அது பிழை சார். பாதையை மறித்து கதைப்பதெல்லாம் நல்லம் கிடையாது. எனக்கும் பிடிக்காது." என்றவள் நின்று பேசாது நடந்து கொண்டே பகிர்வூர்தியில் ஏறி அமர்ந்தாள்.

தானிக்குப் பின்னாலேயே அவன் பைக்கில் வருகிறான் என்று தெரிந்தாலும், திரும்பி பார்க்கவில்லை.

பணியில் சேர்ந்த இரண்டாம் நாளில் இருந்தே ஜெய்க்கும் வானதிக்கும் இடையே நல்ல பழக்கம் வந்து விட்டது. இருவரின் பிறப்பிடமும் இலங்கை தான். யாழ்ப்பாணத்தில் பிறந்தவன். அவனுக்கு வானதியை மிகவும் பிடித்திருந்தது. கண்ட நாள் முதலே.

ஜெய், அவளின் நட்பும், காதலும் வேண்டும் என்ற எண்ணத்தில் அவளை அணுக, வானதிக்குப் புரிந்து போனது.

முதலாவதைத் தரத் தயாராக இருப்பவள் இரண்டாவதைத் தர விரும்பவில்லை.

நட்பைத் தந்து நெருங்கினால் காதலை எதிர்பார்த்து அவன் தன் முன் நிற்க கூடும். அது கூடாது. தன் செயலும் பார்வையும் அவனுக்கு நம்பிக்கைத் தரும் வகையில் இருக்க கூடாது என்று கவனமாகத் தவிர்த்து வருகிறாள்.

மிருதுளா, "மெயில் செக் பண்ணியா வானு?"

"ஓம்... செய்தன். ஒண்டும் உபயோகமா வர இல்ல.." என்றவளை, HR ஜானகியின் முன் இழுத்துச் செல்ல, அவர் வானதியின் பழைய ஐடியை வாங்கிக் கொண்டு, புது ஐடியைக் கொடுத்தார்.

யாரை வேண்டவே வேண்டாம் என்று பெயர் தெரியாத கடவுள்களை எல்லாம் வேண்டினாளோ அத்தனை தெய்வமும் மாட்டேன் என்று விட்டது போலும்.

 
Last edited by a moderator:

Author: நிதனிபிரபு
Article Title: தேன் நாட்டு பைங்கிளி - 3
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

sathiyags

Well-known member
Apr 18, 2026
289
255
63
India
இலங்கை தமிழ் எனக்கு நிரம்ப பிடிக்கும். அது ஒரு அழகு. அது தெரியாமல் பேசுற கூட்டமெல்லாம் நாம் கண்டுக்க கூடாது