செம்புலம் 6
மேதினூர்:
அன்று வழக்கம்போலத் தனது அறையிலிருந்த சேயோன், "இன்று தானே அந்த டெண்டருடைய முடிவு" என்ற யோசனையில் இருந்தான். அப்போது டெலிபோன் ரிங் சத்தம் கேட்க, டேபிளின் மேலிருந்த ரிசீவரை எடுத்து, "ஹலோ" என்றவனுக்கு அங்குச் சொல்லப்பட்ட செய்தியில் ஒரு நிமிடம் பேச்சே வரவில்லை.
"ஹேய் சேயோன், இருக்கியா?" என்ற குரலில் உணர்வு பெற்றவன், "இதோ கிளம்பி வரேன் சார்!" என்றவாறு அழைப்பைத் துண்டித்துவிட்டு வேகமாக வெளியே வந்தவன் தனது காரில் ஏறிப் போஸ்ட் ஆபிஸிற்குச் சென்றவனின் மனமோ டெண்டரின் முடிவு என்னவாக இருக்குமென்று யோசிக்காமல் இல்லை.
அரை மணி நேரத்தில் வந்து சேர்ந்தவன், ஓரமாகக் காரை நிறுத்திவிட்டு வேகமாகத் தபால் ஆபிஸின் உள்ளே சென்றவன் "சார் வரச் சொன்னாங்க," என்று அங்கிருந்த ஒருவரிடம் சொல்ல, "ஆமாம், நீங்கள் உள்ளே போங்கள்," என்றார்.
"தேங்க்யூ" என்றவாறு மேலதிகாரியின் ரூம் கதவைத் தட்டிவிட்டு உள்ளே சென்றவன், "குட் மார்னிங் சார்!" என்றான்.
"வாச்சேயா! ஏதோ நல்ல விஷயம்போல என் மனசுக்குத் தோணுது, அதான் உன்னை நேரில் வரச் சொன்னேன். சாமியை வேண்டிட்டுப் பிரித்துப் பாருப்பா," என்றவாறு டிராயரிலிருந்த பழுப்பு நிறக் கவரை எடுத்து நீட்டினார் பாவேந்தர்.
"முருகா..." என்று வேண்டிக்கொண்டு, கைகள் நடுங்க வாங்கியவனின் இதயத் துடிப்பு தாறுமாறாகத் துடித்தது. தன்னை நிதானப்படுத்திக் கொண்டவன், பின்னர் கவரைத் திறந்து அதிலிருந்ததைப் படிக்கத் தொடங்க,கண்களில் திரண்டிருந்த நீரால் எழுத்துக்கள் சரியாகத் தெரியவில்லை.
"சேயா!" என்று பாவேந்தர் கூப்பிடவும், அதில் சுதாரித்தவன் "டெண்டர் நம்ம கம்பெனிக்குத் தான் கிடைச்சிருக்கு அங்கிள்!" என்றான்.
"வாழ்த்துகள் பா! இனி உனக்கு எல்லாம் ஏறுமுகம் தான். நல்லபடியாகச் செய்து முடிப்பா," என்று கைக்குலுக்கி வாழ்த்தினார் பாவேந்தர்.
"கண்டிப்பாக அங்கிள்!" என்றவாறு வெளியே வந்தவனுக்கு 'ஓ'வென்று கத்த வேண்டும் போலிருந்தது. பின்னர் காரில் ஏறி நேராகத் தங்கள் எஸ்டேட் இருக்கும் இடத்திற்குச் சென்றவன் அங்கே காரை நிறுத்திவிட்டு வெளியே வர, தனது அறையிலிருந்து சேயோனைப் பார்த்த மேனேஜர் வேகமாக அங்கு வந்தார்.
"வாங்க சின்னத்தம்பி! இன்றைக்குத் தான் உங்களுக்கு எஸ்டேட்டுக்கு வரத் தோணிச்சா?" என்று கேட்க, "மாமா!" என்று சிரித்தவன், "என்னோட இடத்தைப் பார்க்கணும்னு தோணுச்சு, அதுக்காகத் தான் வந்தேன்," என்றான்.
"அதானே!" என்று சிரித்தார் மேனேஜர்.
பின்னர் அங்கிருந்த ஒற்றையடிப் பாதை வழியாகச் சென்றவனுக்கு, சற்றுத் தூரத்தில் இருக்கும் சிறு மலையும் அதிலிருந்து கீழே விழும் அருவியும் தெரிந்தன. வழக்கமாக உட்காரும் மரக்கிளையின் மேல் உட்கார்ந்தவன், "யாகூ!" என்று கத்த, அந்தச் சத்தம் அவனுக்கே எதிரொலிப்பது போல இருந்தது.
சேயோனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, எந்த நல்லது கெட்டது என்றாலும் இந்த இடத்திற்கு வந்து அமைதியாக உட்கார்ந்து விடுவான். முதலில் இந்த விஷயம் ராஜவேலு - பானுமதி தம்பதிக்குத் தெரியாது. வீட்டில் காணவில்லையென்று மகனைத் தேடிக்கொண்டு அலைவார்கள். பொழுது சாய்வதற்கு முன்பு அவனாக வீட்டிற்கு வந்துவிடுவான்.
அன்றும் அதே போலக் கோபத்தில் சென்ற மகனைத் தேடும்போது, மேனேஜர் தான் "சின்னத்தம்பி இந்த வழியாகத் தான் போனார், கொஞ்ச நேரத்திற்கு முன்பு பார்த்தேன்," என்று சொல்ல, அதைக் கேட்ட இருவருக்கும் தூக்கிவாரிப் போட்டது. "கோபத்துல ஏதாவது விபரீதமான முடிவு எடுத்துட்டானோ?" என்று பதறி அடித்துக்கொண்டு இருவரும் ஓடி வர, அங்கிருந்த சிறிய கிளையின் மேல் உட்கார்ந்திருந்த சேயோனோ, அருவியைப் பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது.
"தம்பி, ஏன்ப்பா இங்க வந்த? உன்னை எங்கெல்லாம் தேடி அலையுறது?" என்று அழுதுகொண்டே பானுமதி கேட்க, அவனோ எதுவும் சொல்லாமல் முறைத்துக்கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தான்.
குதிரை ஏற்றம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவன் பிடிவாதம் பிடிக்க, "இப்பதான் உனக்கு 10 வயதாகிறது, இன்னும் இரண்டு மூன்று வருடம் போகட்டுமே" என்று பெற்றோர்கள் சொன்ன ஆத்திரத்தில் தான் அங்கு வந்து உட்கார்ந்துவிட்டான். அவர்களும் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் அவன் மனம் இறங்கவில்லை. மகனின் பிடிவாதத்தைப் பார்த்த ராஜவேலு, "சரி வா," என்று அவன் போக்கிலேயே விட்டார்.
அன்று தொடங்கிய பழக்கம், இதோ படித்து முடித்துத் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கப் போராடிக் கொண்டிருந்தவனுக்கு, இவ்வளவு பெரிய அதிர்ஷ்டத்தைத் தந்திருக்கிறது. இதைச் சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க, தனக்குப் பிடித்த இடத்திற்கு வந்தவன், அந்தச் சூழலில் நிதானமடைந்த பின்னரே வீட்டிற்கு வந்தான்.
காரின் சத்தம் கேட்டுப் பானுமதி எட்டிப் பார்க்க, மகன் வருவது தெரிந்தது. அவன் முகத்தில் இருந்த மலர்ச்சியே ஏதோ நல்ல விஷயம் என்பதைப் புரியவைத்தது. "வாப்பா, சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா?" என்று கேட்க, "காலையில் சாப்பிட்டுத் தானே போனேன், அதுவே இன்னும் செரிமானம் ஆகியிருக்காது மா. அப்புறம் ஒரு சந்தோஷமான விஷயம்..." என்று டெண்டர் செய்தியைச் சொன்னான்.
"முருகா! உனக்குக் கோடான கோடி நன்றி!" என்றவாறு மகனின் கன்னத்தைத் தடவினார் பானுமதி.
அதன் பின்னர் ஒரு நல்ல நாளில், அந்த கவர்மெண்ட் ப்ராஜெக்ட்டைச் சேயோன் தொடங்கினான். கட்டுமானப் பொருட்களின் தரத்தில் எந்தக் குறையும் இல்லாமல், ஒவ்வொரு இடத்திற்கும் தானே தேடிச் சென்று பொருட்களைத் தேர்வு செய்தான். நம்பிக்கையான நண்பர்களோடு இணைந்து, குறிப்பிட்ட தேதியில் வெற்றிகரமாகத் தனது முதல் ப்ராஜெக்ட்டான அரசாங்க மருத்துவமனையைக் கட்டி முடித்தான்.
திறப்பு விழாவிற்குச் சுகாதாரத் துறை அமைச்சரும் சிறப்பு விருந்தினராக வந்து மருத்துவமனையைத் திறந்து வைத்தவர் சேயோனைப் பாராட்டியதோடு, தனது மகனுக்குப் பாரம்பரியமும் நவீனமும் கலந்த ஒரு வீட்டைக் கட்டித் தர முன் பணமாகப் பெரிய தொகையையும் கொடுத்துச் சென்றார்.
எப்போது கவர்மெண்ட் ப்ராஜெக்ட் சேயோனின் கம்பெனிக்குக் கிடைத்தது என்று தெரிந்ததோ, அப்போதிலிருந்தே அவனது பெயர் பரவலாக வெளியே தெரிய ஆரம்பித்தது. அதன் பின்னர் அவனைத் தேடி வரும் வாடிக்கையாளர்களால் நிற்க நேரமில்லாமல் ஓடினான். இதோ மூன்று வருடங்கள் கடந்துவிட்டன.
இந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தியாவின் பல பெரிய பணக்காரர்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் அவர்கள் எண்ணம் போலக் கட்டிடங்களைக் கட்டிக்கொடுத்துத் தனது திறமையை நிரூபித்தான். மகனின் உழைப்பைப் பார்த்துப் பெற்றோர்கள் சந்தோஷப்பட்டாலும், ஓய்வே இல்லாமல் ஓடுகிறானே என்று ஒரு பக்கம் கவலையாகவும் இருந்தது.
எந்த நல்லது கெட்டதிற்கும் அவனால் வீட்டில் இருக்க முடியவில்லை. இந்தப் பொங்கலுக்காவது மகன் தங்களோடு இருக்க மாட்டானா என்று பெற்றோர்கள் ஏங்கினர். வழக்கம் போல் அந்த வருடப் பொங்கல் பண்டிகையும் வந்தது.
சாமி கும்பிட்டுவிட்டுப் பானுமதி சமையலறைக்குச் செல்லும்போது, "அம்மா!" என்ற குரல் கேட்டது. இது நிஜம் தானாயென வேகமாக திரும்பியவருக்கு வாசலில் நின்ற மகனை மூன்று மாதங்களுக்குப் பிறகு பார்த்த சந்தோஷத்தில் கண்கள் கலங்கின.
ஒரு பெரிய பணக்காரர் வீட்டுத் திருமணத்திற்காக வீடு கட்டும் வேலையில் இருந்ததால், அவனால் கடந்த மூன்று மாதங்களாக வீட்டிற்கு வர முடியவில்லை. இந்தப் பொங்கலில் பெற்றோர்களோடு இருப்பதற்காக, தனது மேனேஜரிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு வந்திருந்தான்.
"என்னம்மா, எதிர்பாராத அதிர்ச்சியா?" என்று சேயோன் கேட்க, "சேயா!" என்றவாறு மகனின் கன்னத்தைத் தடவியவர், "எப்படிப்பா இருக்க?" என்றார். "நல்லா இருக்கேன் மா, நீங்க எப்படி இருக்கீங்க? உங்கள் அத்தான் நலமா?" என்று தாயைத் தோளோடு அணைத்துக்கொண்டு உள்ளே வந்தவன், "பொங்கல் வாழ்த்துகள்!" என்றான்.
"உனக்கும் வாழ்த்துகள் கண்ணா! இரு, டீ எடுத்துட்டு வரேன்," என்றார் பானுமதி. "ஹலோ பானுமதி! நீங்க சர்க்கரைப் பொங்கல் ரெடி பண்ணுங்க, அதற்குள் நான் ஒரு குளியலைப் போட்டுட்டு வரேன்," என்று சிரிக்க, செத்த இரு கண்ணா என்றவாறு கிச்சனிற்கு போனவர் வேகவேகமாக மகனுக்கு காபியை கலந்து எடுத்து வந்து கொடுக்க, நீ இருக்கியேமா என்றபடி காபியைக் குடித்துவிட்டு மாடியிலிருக்கும் தனது அறைக்குச் சென்றான்.
மகன் வந்த சந்தோஷத்தில் அவனுக்குப் பிடித்தமானதையெல்லாம் பானுமதி செய்துகொண்டிருக்க, "பானு!" என்ற ராஜவேலுவின் குரல் கேட்டது. கணவருக்கு டீ கொண்டு வந்த பானுமதி, "ஏங்க, சேயா வந்துட்டான்!" என்றார்.
"ம்ம்... அதான் மகனைப் பார்த்த குஷியில் பத்து வயசு குறைந்த மாதிரி ஓடி ஆடிட்டு இருக்கியே! ஒரு மனுஷன் இந்த வீட்டில் இருக்கிறது கூட ஞாபகம் இல்லாம..." என்று மனைவியைக் கிண்டல் செய்ய, "என்ன சொன்னீங்க?" என்று கணவரைச் செல்லமாக முறைத்தார் பானுமதி.
சேயோனும் குளித்து தயாராகி கீழே வரவும் நல்ல நேரத்தில் மூவரும் பூஜையறையில் சாமி கும்பிட்டுவிட்டு, பேசிக்கொண்டே சாப்பிட்டனர். "என்னப்பா, வேலை எல்லாம் எப்படிப் போகுது?" என்று ராஜவேலு கேட்க, "ஒன்னும் பிரச்சனை இல்லைங்கப்பா," என்றான் சேயோன்.
"சரிப்பா, இந்த வருஷத்தோட உனக்கு 29 வயசு முடியப் போகுது. வைகாசி முடிவதற்குள் உன் கல்யாணத்தை முடித்திடலானு இருக்கோம், பொண்ணு பார்க்கலாமா?" என்று அவர் கேட்க, ஒரு நொடி மேனேஜரின் மகள் காஞ்சனாவின்முகம் சேயோனின் கண் முன்னால் வந்து சென்றது.
செம்புலம் தொடரும்..
Author: Vishakini
Article Title: செம்புலப் பெயல் நீர் - 6
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: செம்புலப் பெயல் நீர் - 6
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.