நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
நம் எல்லோர் வாழ்விலும் ஏதோ ஓர்புள்ளியில் அழகான விடியல் ஒன்று உதித்துவிடுகிறது. அந்த விடியலின் உதயம் இதுவரையான வாழ்க்கைப்பாதையின் திசையையே அடியோடு மாற்றியும் விடுகிறது.
அப்படித்தான் இங்கேயும். இதுதான் இனி என் எதிர்காலம் என்று இருக்கிறவனின் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிவிடுகிறது விதி! அந்தகாரம் சூழ்ந்த அகழிக்குள் அகப்பட்டுக்கொண்டவனின் வாழ்க்கையை மீட்கும் உதயமாய் வருகிறாள் ஒருத்தி!
தன்னைத் தொலைக்காமல் அவனை அவள் மீட்பது பேரழகு என்றால், மீள விரும்பாதவன் மீண்டுவிடுவது பெரும் அழகே!
அழகான குடும்பம் இரண்டு, அதற்குள் நிகழும் சிக்கல்கள், உறவுகளுக்கிடையேயான பிரிவு, துயரம், துன்பம், காதல் என்று, அன்புச் சகோதரி திருமதி ரோசிகஜனின் எழுத்தில் எப்போதுமே கோலோச்சும் உறவுகளின் சங்கமம் இக்கதையிலும் அழகாக மிளிர்கிறது!
தரமான எழுத்தின் மூலமும் யதார்த்தமான கதை நகர்த்தலின் மூலமும் நம்மைத் தன் கதைக்குள் இழுத்துவிடுவதில் வல்லவர் எழுத்தாளர் ரோசிகஜன் அவர்கள். இக்கதையிலும் அதே மந்திரத்தைத்தான் நிகழ்த்தியிருக்கிறார்.
'சூர்யோதயம்', கதையல்ல; நம் வாழ்வின் ஒரு பகுதிதான் இது என்பதை, வாசித்து முடிக்கையில் மிகுந்த நிறைவோடு உணர்வீர்கள் என்பதில் ஐயமில்லை.
எனக்கு உண்மையாகவே கேட்பதற்கு வெகு தயக்கமாகத்தான் இருக்கின்றது. சட்டென்று மறுத்துவிட்டால் என்ற எண்ணம் அத்தயக்கத்தை முண்டு கொடுத்து நேராக நிலைநிறுத்தியது.
ம்ம்...அந்த மறுப்பை நினைத்தும் பார்க்க முடியவில்லை. அதற்கென்று, கேட்கவில்லையென்றால் நர்மதாவின் திருமணத்தைக் காண்பதெப்படி?
அந்தி சாயும் பொழுது - நாள் முழுவதும் அகங்காரத்துடன் ஆட்சி செய்துவிட்டு மறைந்து போகையில் கூட, வெம்மை குறையாத கதிரவனை எதிர்க்கும் வேலையில் முழுமூச்சாக இறங்கியுள்ள இளந்தென்றல், யன்னல் வழியாகக் கசிந்து வந்து என்னில் மோதி இதம் தர முனைந்தது.
வெளிப்புறத்தில், கூடு திரும்பும் பறவைகளின் ஆரவாரத்தோடிணைந்து அசைந்தாடின, இலை குழைகள்.
வீட்டின் பின்புறமிருக்கும் தென்னையில் அணில்கள் இரண்டு அடங்காச் சுறுசுறுப்போடு செல்லச்சண்டையில் ஈடுபட்டிருந்தன. அவர்களின் இந்த ஆட்டத்தை இரசிப்பது போலவே தென்னங்கீற்றுகள் சரசரத்தன.
எப்போதுமே என்னைக் கவரும் இதமான தருணமிது! இன்றும் அது என்னால் உணரப்பட்டாலும் துளியும் இரசிக்கத்தான் முடியவில்லை. அந்தளவுக்கு மனத்தில் பரபரப்பும் படபடப்புமாகப் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தேன்.
“அக்கா, அப்பிடி என்ன யோசின? தேத்தண்ணி ஆறிப்போய்ட்டுது பாருங்க!”
என் தோளில் தட்டிவிட்டு, நான் அமர்ந்திருந்த மர வாங்கிலில் எனக்கருகில் அமர்ந்து கொண்டாள், பெரிய தங்கை கவி.
“யோசின எல்லாம் ஒண்ணும் இல்லையடி.”
மறுபுறமிருந்த தேநீரை எடுத்து ஒரு மிடறு உறிஞ்சினேன். பச்சைத் தண்ணியாகியிருந்தது. என்றாலும் குடிக்கக் கூடியதாக இருந்தது.
நானே கலந்த தேநீர் ஆச்சே! இதுவே, சித்தி கலந்ததாக இருந்தால் சுடச் சுடவென்றால் சுடுதண்ணி, ஆறினால்...சொல்லத் தெரியவில்லை; பச்சைத் தண்ணியே மேல் என்றளவில் இருக்கும்.
இப்படியெல்லாம் கதைக்கலாமோ! பச்! நான் போய் யாரிடம் கதைக்கப் போகிறேன்? மனதுள் என்றாலும் நினைப்பது அழகா என்ன? என்னதான் என்றாலும், நான் ஒன்பது வயதுச் சிறுமியாக அலங்க மலங்க நின்ற நேரத்தில் அரவணைத்தவர் அவர்.
எங்கள் குட்டித்தங்கை பற்றி விசாரித்தேன். குட்டி என்றால் தீபிக்குப் பதினான்கு வயதாகப் போகிறது. கவிக்குப் பதினைந்தாகப் போகிறது. என்னை விடப் பத்துவயது சிறியவர்கள் எனக்கு எப்போதும் குட்டி தானே?
“இன்னும் இல்லக்கா; ஃப்ரெண்டிட்ட ஏதோ பாடக்கொப்பி வாங்க வேணுமாம்; வாங்கீட்டு வர அரைமணித்தியாலம் பிந்தும் எண்டு சொல்லிப்போட்டுத்தான் போனவள்.”
“ஓ! ஃப்ரெண்ட் எண்டா யாரு? பேர் என்ன?”
“கடைக்காரக் கந்தசாமி அண்ணையிண்ட மகள் லக்சி எண்டு நினைக்கிறன், சரியாத் தெரியாது.”
கவி சொல்லி முடிக்க, கூடத்திலிருந்து வார்த்தைகள் பறந்து வந்தன. அங்கமர்ந்திருந்த சித்தியின் காதுகள் இங்குதான் இருந்திருக்கும் போல!
“அதுக்கில்லச் சித்தி, சும்மா தான் கேட்டன்; அவே என்ர தங்கச்சிகள்; அப்பிடி எல்லாம் நினைப்பனா சொல்லுங்க?”
“தெரியும் தெரியும், நீ ஒண்டுமே தெரியாதவள் தான்; என்ர பிள்ளைகளில பெரிய அக்கறையும் அன்பும் உள்ளவள் தான்.”
நக்கலோடு சொன்னவர், இன்னும் சொல்லியிருப்பார், பக்கத்துவீட்டு ஆன்ட்டி வாயிலில் வந்து நின்று கூப்பிட்டுவிட்டார்.
“யாரு புனிதமக்காவோ? இந்தா வாறன்.” சித்தி எழுந்து சென்று விட்டார்.
“இந்த அம்மாக்கு உண்மையாவே விசர் அக்கா! அவா சொல்லுறதை எல்லாம் நீங்க காதிலும் வாங்க வேணாம்.”
என் கரங்களை அன்பாகப் பற்றியபடி சொன்னாள் கவி. மாறி மாறி என் விழிகளை உற்றுப் பார்த்தாள். அவள் இப்படித்தான். தாய் பேசினால்(திட்டினால்) நான் வருந்தி அழுது விடுவேன் என்று பதறிப்போவாள்.
நான் அப்படியெல்லாம் அழுததே இல்லை. உண்மையைத்தான் சொல்கிறேன். மனதுள் அழுவது கூட வெகு அரிதென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அழுவதாலோ, கண்ணீர் விடுவதாலோ என்ன பிரயோசனம்? ஆனாலும், அவளுக்கு ஏனோ அப்படியொரு பதற்றம்.
“ஏனக்கா அம்மாக்கு இப்பிடிப் பயப்படுறீங்க?”
என் விழிகளை நேருக்கு நேராகப் பார்த்து வினவினாள் கவி. நான் மெல்லச் சிரித்து மழுப்பினேன். தங்கைகளிடமிருந்து எத்தனையோ தடவைகள் இதே கேள்வியை எதிர்கொண்டுள்ளேன்; பதிலும் இதே சிரிப்புத்தான்.
“இப்ப உங்களுக்குள்ள என்ன குழப்பம் எண்டு எனக்கு நல்லாவே தெரியும். நர்மதாக்கான்ட பெரியம்மா வந்து கலியாணக் கார்ட் தந்த நேரத்தில இருந்து நீங்க இப்பிடித்தான் குழம்பிப் போயிருக்கிறீங்க!”
சரியாகக் கணித்து விட்டாள். மீண்டும் மெலிதாகச் சிரித்துச் சமாளிக்க முயன்றேன்.
“அப்பிடி எல்லாம் ஒண்டும் இல்லயடி. பள்ளிக்கூடத்து விசயம் ஒண்டு யோசிச்சுக் கொண்டிருந்தன்.” என்றதை, என் தங்கை நம்பவில்லை என்றாள், அப்படியும் இப்படியும் தலையாட்டி.
ஆங்! சொல்ல மறந்து போனேன் பாருங்க. நான் உதயா, ஒரு ஆசிரியை; யாழ்ப்பாணத்திலுள்ள தேசிய பெண்கள் பாடசாலையொன்றில் சமய பாடம் கற்பிக்கிறேன்; அதோடு, கணிசமானர்களுக்குக் கணிதம், தமிழ் என்று வீட்டில் வைத்தும், பிரத்தியேகமாக வீடுகளுக்குச் சென்றும் சொல்லிக்கொடுக்கிறேன்.
உதயா டீச்சர் என்றால் என் மாணவச் செல்வங்களுக்கு அவ்வளவு விருப்பம். என் ஒவ்வொரு நாளுக்குமான சக்தியை அளவின்றித் தருபவர்களும் அவர்களே!
“அக்கோய்! அதையிதை யோசியாம, சும்மா போய்க் கேளுங்கோ! கேக்கிறது என்ன? நான் ஒருக்காக் கொழும்புக்குப் போக வேண்டியிருக்கு எண்டு அம்மாட்டச் சொல்லுங்கோ! அது போதும்.” ஒரு வேகத்தில் சொல்லியிருந்தாள் கவி.
துணிவூட்டுவதாக எண்ணி விட்டாளோ! அப்படிச் சொன்னவளைக் கண்டிப்போடு பார்த்தேன். அவளும் அதை எதிர்பார்த்திருந்தாள் தான்; விழிகள் சுருங்கச் சிரித்தாள்.
“அடி வாங்குவ கவி, இப்பிடியெல்லாம் கதைக்காத எண்டு எத்தின தடவைகள் சொல்லி இருக்கிறன். உன்ர அம்மாதான் இந்த வீட்டுக்குப் பெரியாள். அதென்ன சொல்லுறது? கேட்டு, சித்தி ஓமெண்டாத் தான் போறது; இல்லயோ இல்லை.”
பதினைந்து வயதுத் தங்கையைக் கண்டிக்க வேண்டும் தானே? பிறகு, தன் விருப்பப்படி நினைத்ததைச் செய்ய வெளிக்கிட்டுவிட்டால்?
வீட்டுக்குத் தகவல் சொன்னால் போதுமென்ற எண்ணம் முளையிலேயே அழிக்கப்பட வேண்டுமென்ற எண்ணத்தில் கண்டித்தாலும், ‘கலியாணத்துக்குப் போக ஓமெண்டு சொல்லாட்டி ...’ என்ற எண்ணத்தில் நர்மதாவின் முகம்தான் மனக்கண்ணில்!
‘என்ர கல்யாணத்துக்கு வராமல் நின்றிருவியோ!’ செல்ல மிரட்டல் பறந்து வந்தது, அவளிடமிருந்து.
அதற்கு மேலும் பொறுமையாக இருக்கவும் முடியவில்லை. தயக்கத்தை உதறிவிட்டுச் சித்தியை நாடிச் சென்றேன். பின்தொடர்ந்தாள் கவி.
ஏதோ சீட்டுப் பிடிக்கிறார்கள் போல. மாதா மாதம் பத்தாயிரமாம். காதில் வந்து மோதிய உரையாடலிலிருந்து விளங்கிக் கொண்டோம்.
“மாதம் பத்தாயிரமா? இருபது பேர், கிட்டத்தட்ட ரெண்டு லட்சங்கள்!”
“இப்ப மனச்சாட்சி இல்லாமல் என்னக்கா சொல்லிப் போட்டன்? அவள் உழைக்கிறதிலதான் சீவிக்கிறம்; இல்லையெண்டு சொன்னனா என்ன? ஆனால், அது என்னத்துக்குக் காணும் சொல்லுங்கோ?”
மீண்டும் கண்ணைக் கசக்கினார், சித்தி.
அவர்களின் உரையாடலைக் கேட்டுக்கொண்டு நின்ற எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது.
நான் உழைப்பது எங்களுக்கு நன்றாகவே போதும் என்பேன். சின்ன வீடுதான், ஆனாலும் அழகான கல்வீடு; இரண்டு அறைகள், நல்ல பெரிய அறைகள்; நீள் சதுரவாக்கில் அளவான கூடம்; விசாலமான சமையலறை.
வீட்டின் பின்னால் நாலு எட்டு எடுத்து வைத்தால் பின்பக்க வேலியோரமாகக் கழிப்பறை. வீட்டின் ஒரு பக்கத்தில் ஒழுங்கை போகுது. அந்தப்பக்கம் நிலமென்று பெரிதாக இல்லை, சில அடிகள் தான்; நெருக்கமாக அழகழகான குரோட்டன்கள் வைத்திருக்கிறேன்.
மறுபக்கத்தில் கட்டுக்கிணறும் அதைச்சுற்றி சில வாழைகள், இரண்டு பப்பாளி மரங்கள், ஒரு புளிப்பு நெல்லி மரம், இண்டு செவ்விளனி மரங்கள், குறையாது காய் தரும் இரண்டு தென்னை மரங்களும் என்று சிறு காணித்துண்டு.
வீட்டின் முன்னால் சில அடிகள் நிலம், நிறைந்த பூமரங்களோடு என்று, கச்சிதமாக இருந்த இடம், இன்றைய விலைவாசியில் நிச்சயமாகக் கோடியைத் தொட்டுவிடும். அது எங்களுக்குச் சொந்தமானது. என் அம்மாவின் சீதனவீடென்று அப்பா சொல்லியிருக்கிறார்.
“இந்த வீடு, உன்ர முகம், பழக்க வழக்கங்கள் எல்லாமே உன்ர அம்மா எங்கயும் போகேல்ல எண்டு அடிக்கடி சொல்லும் மா!”
தளர்ந்து போயிருக்கையில் தன்னையும் மறந்து சொல்வார் என் அப்பா.
குறுக்கிட்ட அப்பாவின் நினைவுகளை மெல்ல விலக்கிவிட்டு நிதர்சனத்துக்கு வந்தேன்.
இவ்வளவும் இருக்கையில் பிறகென்ன? அன்றாடச் செலவுகளுக்கு என் ஒருத்தியின் உழைப்பு மிச்சம் தானே?
தங்கைகள் மேலே மேலே படிக்க என்று ஆரம்பித்தால் சமாளிப்பது கடினம் தான். போதாததற்கு விலைவாசியும் கழுத்தை நெரிக்குதே!
அது மட்டுமா? திடீர் திடீரென்று அயலில், தெரிந்தவர் இல்லங்களில் வந்தமரும் ஆடம்பரங்கள் நம் மனத்தையும் கண்ணையும் குத்துகின்றது. ஆசையை அறம்புறமாகத் தூண்டி விடுகின்றது.
வெளிநாட்டு உறவுகள் உள்ளோர் வீடுகளில் தேவையே இல்லாது வந்தமரும் மின்சார உபகரணங்கள், அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் தம்மை நிரூபிக்கவே பரிசளிக்க, இவர்களும் தம்மைச் சுற்றியுள்ள மற்றவர்களிடம் பெருமை பேசுவதற்காக அவற்றை காட்சிப் பொருளாக்கிவிடுவர். பிறகென்ன?
‘உங்களுக்கு வெளிநாட்டில் சொந்தக்காரர் இல்லையெண்டால் என்ன? நாங்க தாறம்.’ என்று, வலிய வந்து தம் வியாபாரத்தைப் பெருக்குவோர் கூட்டத்திற்குக் குறைவே இல்லையே!
“எல்லாமே தவணையில் வாங்கலாம் தான், கட்டி முடிக்க வேணுமே!” அடிக்கடிப் புலம்புவார் சித்தி.
‘எத்தனையோ ஆண்டுகளாகப் பெருந்துன்பங்களையும் கொடும் அழிவுகளையும் எதிர்கொண்டும், அதிலிருந்து பீனிக்ஸ் பறவையாக மீண்டெழுந்த நாம், நமக்கு என்ன தேவை, பொருந்தும் எண்டு துல்லியமாகப் பகுத்தறிய முடியாத சமுதாயமாக மாறிக் கொண்டிருக்கின்றோமோ!
ஆக்கங்களின் அறிமுகத்தில் முன்னேற்றத்தை நோக்கிச் செல்வோர் ஒருபுறமென்றால், அதற்குப் போட்டியாக அழிவை வலிந்து வருவிப்போர் மறுபுறம் ...’
என்பாட்டில் முணுமுணுத்த மனம், சித்தியும் புனிதம் ஆன்ட்டியும் கதைக்கத் தொடங்க அங்கே கவனத்தைப் பதித்தது.