• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அத்தியாயம் - 1

STN - 92

New member
மனம் - 1:

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் நகரத்தின் ஒரு வீட்டின் மாலை பொழுது!

“நீ சொன்ன எல்லாமே அப்பா வாங்கிட்டு வந்துட்டேன் பாப்பா. சரியா இருக்கானு ஒருமுறை சரி பார்த்துக்கோ.” என ஒரு பெரிய கட்டைபையை தன் முன் நின்ற மகளின் கையில் கொடுத்தார் ஆவுடையப்பன்.

“நீங்க சரியா தான் வாங்கிட்டு வந்திருப்பீங்க பா. எதுக்கு நா வேற அதை மெனக்கெட்டு செக் பண்ணனும்?” என்றபடியே அதனை வாங்கிக் கொண்டாள் அட்சயா, நம் கதையின் நாயகி!

“பெரியவங்க சொன்னா கேட்டு பழகு அச்சு. எல்லாம் சரியா இருக்கானு உன்னோட ரூம்ல போய் பாரு. அப்படியே எதெத எந்தெந்த பேக்ல எடுத்து வைக்கணும்னு பார்த்து எடுத்து வை.” என அதட்டலாக வந்தது பரிமளத்தின் குரல்.

‘அன்னையை எதிர்த்து பேச வேண்டாம்.’ என நினைத்த அட்சயா, “சரி மா..” என அமைதியாக பையை எடுத்துக்கொண்டு அவளின் அறைக்குள் சென்றாள்.

மகளின் முகம் சுருங்கியதால், “எதுக்கு பரிமளம். எப்ப பாரு பிள்ளையை போட்டு அதட்டிக்கிட்டு இருக்க?” என மனைவியை அதட்டினார் ஆவுடையப்பன்.

“நீங்க சும்மா இருங்க ங்க. இப்பவே பாத்து எடுத்து வெச்சா தான் சரியா இருக்கும். இல்லனா நாளைக்கு நைட் ஊருக்கு கிளம்புறப்ப இது இல்லை அது இல்லைனு சொல்லிட்டு கிடக்கவா.” என சொல்லிக் கொண்டே அறுத்து வைத்த காய்கறிகளை எடுத்துக்கொண்டு சமையலறைக்குள் நுழைந்தார் பரிமளம்.

ஆவுடையப்பன், ஆத்தூரில் புகழ்பெற்ற பெரிய ஜவுளி கடைக்கு சொந்தக்காரர். அவரின் மனைவி பரிமளம், இல்லத்தரசி. அவர்களுக்கு கங்கா, சபாபதி, அட்சயா என மூன்று பிள்ளை செல்வங்கள்.

கங்காவை பக்கத்திலேயே கோபிநாத் என்பவருக்கு கட்டிக்கொடுத்திருக்க, அவர்களுக்கு சர்வேஷ் என்ற புதல்வனும் இருக்கிறான்.

“அச்சு..” என அட்சயாவின் பெயரை ஏலம் விட்டு அழைத்தப்படியே உள்ளே வந்தான் அவர்களின் புதல்வன் சபாபதி.

“அவ அவளோட ரூம்ல இருக்கா சபா.” என சமையலறையில் இருந்து குரல் கொடுத்தார் பரிமளம்.

தங்கையின் அறைக்குள் கதவை தட்டிவிட்டு சென்ற சபாபதி, “இந்தா புடி. உனக்காக பாவமேன்னு கொஞ்சமா ஸ்னாக்ஸ் வாங்கிட்டு வந்திருக்கேன்.” என சிப்ஸ், பிஸ்கட் என நிறைந்திருந்த பையை அவளிடம் கொடுத்தான்.

“அண்ணா! அம்மாவுக்கு மட்டும் இது தெரிஞ்சது..” என கண்ணை உருட்டிய அட்சயா முடிப்பதற்குள் அவள் அறையின் வாயிலில் நின்றிருந்தார் பரிமளம்.

“இதெல்லாம் இப்ப தேவையா சபா? புது இடத்துல அவளுக்கு ஏதும் ஒத்துக்காம போய்ட்டா? நம்மளால என்ன டா செய்ய முடியும்?” என சபாபதியை கடிந்துக் கொண்டார் பரிமளம்.

காலையில் இருந்தே கடுகடுவென்று தான் பரிமளம் இருக்கிறார். அவரின் அருகில் வந்த அட்சயா. “நான் சென்னைக்கு வேலைக்கு போறது உங்களுக்கு பிடிக்கலைன்னா விடுங்க ம்மா. நான் எங்கயும் போகல. நம்ம வீட்லயே இருக்கேன்.” என சொல்லிவிட்டு அமைதியாக மெத்தையில் அமர்ந்துவிட்டாள்.

அட்சயா, இன்ஜினியரிங் படிப்பில் இளங்கலை முடித்து ஒருவருடம் கடந்திருந்தன. படிப்பை முடித்ததும் வேலைக்கு செல்கிறேன் என்றவளை மறுத்துவிட்டவர்கள், ஒருவருடமாக அவளுக்கு வரன்களை பார்த்தனர். சொல்லிவைத்தது போல் அனைத்துமே தட்டிச்சென்றன.

பெற்றவர்களுக்கு தெரியாமல் அண்ணனின் உதவியுடன் பண்ணாட்டு மென்பொருள் நிறுவனத்தின் நேர்காணலில் கலந்துகொண்ட அட்சயா, இதோ அடுத்த வாரம் திங்கட்கிழமை சென்னையில் உள்ள அலுவலகத்தில் அவளை வந்து சேருமாறு ஆணையும் வாங்கிவிட்டாள்.

ஆனால், அட்சயாவின் இந்த முடிவிற்கு அவளின் பெற்றவர்கள் அட்சதை தூவி வரவேற்க வில்லை. கல்லூரி முழுவதும் சென்னையில் பயின்றாலும் அவளை மீண்டும் வேலைக்கென சென்னைக்கு அனுப்ப மிகவும் தயங்கினர்.

அவள் அக்காவின் கணவர் கோபிநாத்தின் தயவால் மட்டுமே அவளை சென்னை அனுப்ப சம்மதித்திருந்தனர். அதுவும் திருமணம் வரை தான் என்ற கட்டளையுடன்!

“பெத்தவா ஒரு சொல் சொல்ல கூடாதா. பொன் பிள்ளைங்கள பெத்தவங்களுக்கு தான் அதோட அருமை தெரியும். காலகாலத்துல எல்லாம் நடந்தா நாங்க எதுக்கு புலம்ப போறோம்.”

“அதான் நான் போகலனு சொல்லிட்டேன்ல..” என அட்சயா மீண்டும் முகத்தை திருப்பினாள்.

தங்கையை முறைத்த சபாபதி, “ஏன் மா?” என பரிமளத்தை பார்த்தான்.

“அண்ணனும் தங்கச்சியும் என்னமோ செய்ங்க. இப்ப ரெண்டு பேரும் சாப்பிட வாங்க.” என புலம்பியபடியே வெளியேறினார்.

“குள்ளச்சி! கஷ்டபட்டு நீ வேலைக்கு போக கோபி மாமாகிட்ட சொல்லி உனக்கு பர்மிஷன் வாங்கி கொடுத்தா.. காரியத்தையே கெடுத்துடுவ போலயே.” என அட்சயாவின் தலையில் கொட்டியவன் அவளை அழைத்துக்கொண்டு சாப்பிட சென்றான்.

இரவுணவை முடித்துவிட்டு ஆவுடையப்பனும், பரிமளமும் படுக்கைக்கு சென்றுவிட்டனர். அட்சயாவும் சபாபதியும் தான் அனைத்தையும் ஒதுங்க வைத்துக் கொண்டிருந்தனர்.

சபாபதியின் முகத்தையே திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தாள் அட்சயா. “எதுக்கு என்னோட மூஞ்சியையே பார்த்துட்டு இருக்க அச்சு? என்ன வேணும் சொல்லு.” என உணவு தட்டுகளை கழுவியபடியே கேட்டான் சபாபதி.

“அண்..அண்ணா.” என தயங்கிய அட்சயா, “நாளைக்கு பூர்ணியோட பர்த்டே.” என அவனின் முகத்தை ஏறிட்டாள்.

ஒருநொடி செய்துக் கொண்டிருந்த வேலையை நிறுத்திய சபாபதி மறுநொடியே உடலை விறைத்து கொண்டு, “சோ வாட் அச்சு. வேலை எல்லாம் முடிஞ்சதுனா படுக்க போகலாம்.” என சாதாரணமாக சொல்லிவிட்டு கழுவிய தட்டுகளை அடுக்கினான்.

“அவ்வளவு தானா ண்ணா?”

“என்கிட்ட வேற என்ன எதிர்ப்பார்க்குற அச்சு? நாளைக்கு வெளியூர் கிளம்பணும். எதையாவது நினைச்சிட்டு இருக்காம ஒழுங்கா தூங்கு போ.” என தங்கையை அவளின் அறையில் விட்டான் சபாபதி. அவனின் மனதிற்குள்ளும் பூர்ணிமா என்ற மங்கையின் முகம் பூரணநிலவாய் பிரகாசமாய் ஒளிர்ந்து மிளிர தான் செய்தது!

மறுநாள் காலையில், எழுமணியளவில் அண்ணனை இழுத்துக்கொண்டு அவர்கள் வீட்டின் அருகில் இருந்த அம்மன் கோவிலுக்கு சென்றாள் அட்சயா. அவளின் அழைப்பின் பெயரில் பூர்ணிமாவும் அங்கு வந்திருக்க தங்கையை முறைத்தபடியே கோவிலுக்குள் சென்றான் சபாபதி.

அங்கு கருணை வழியும் முகத்துடன் அருள் புரிந்துக் கொண்டிருந்த அம்மனிடம் வேண்டுதல் எதுவும் கேட்க தோணாமல் அமைதியாக அவரை பார்த்தபடியே கைகளை கூப்பி அட்சயா நின்றிருந்தாள். அவளின் அருகில் சபாபதி நின்றிருக்க, அவர்களின் எதிரே வந்து நின்றாள் பூர்ணிமா.

பூர்ணிமா, அட்சயா இருவரும் ஒரே வயதுடையவர்கள். பன்னிரண்டாம் வகுப்பு வரை இருவரும் ஒன்றாக ஒரே பள்ளியில் தான் பயின்றார்கள். பின்பு பொறியியல் படிப்பிற்காக அட்சயா சென்னை சென்றபின், பூர்ணிமா சேலத்திலே இளங்கலை படிப்பை முடித்து, இப்பொழுது முதுகலை பட்டமும் பெற்றுவிட்டாள்.

சாமியை கும்பிட்டுவிட்டு சன்னதியில் இருந்து வெளியே வந்தனர். “ஹாப்பி பர்த்டே பூரி..” என பூர்ணிமாவின் கையில் பூவை கொடுத்தாள் அட்சயா.

“என்ன பண்ணுற அச்சு? அந்த பூ நான் உனக்கு வாங்கி கொடுத்தது.” என பற்களை கடித்தபடியே தங்கையை எச்சரித்தான் சபாபதி.

“அண்ணா..” என அதட்டியவள் பூர்ணிமாவை பார்த்தாள். அவளின் பார்வை முழுவதும் சபாபதியின் மேல் தான் இருந்தது. அவனிடம் பேசியே நான்கு வருடங்கள் கடந்துவிட்டன.

“நான் இன்னைக்கு நைட் சென்னை கிளம்புறேன் பூரி. மண்டே ஆபீஸ்ல ஜாய்ன் பண்ணனும்.”

“எற்கனவே சொன்ன தான அச்சு. ஆல் தி பெஸ்ட்! கண்டிப்பா இது உன்னோட வாழ்க்கைல ஒரு நல்ல திருப்பு முனையா அமையும்.” என பூர்ணிமா சொல்ல சபாபதி அவளை முறைத்து பார்த்தான். ஆனால், பூர்ணிமா சொன்னதற்கு ததாஸ்து என அசரீரி உரைப்பது போல் அந்நேரம் கோவில் மணி ஒலித்தது.

“போலாம் அச்சு. அக்காவும் மாமாவும் நம்ம வீட்டுக்கு வந்திருப்பாங்க.” என அட்சயாவின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றான் சபாபதி. செல்லும் அவர்களையே பார்த்த பூர்ணிமாவின் கண்களில் மெல்லிய நீர்ப்படலம்.

“நீ பண்ணுறது கொஞ்சம் கூட சரி இல்லண்ணா. இதே கோவில்ல எத்தனை வாட்டி நீ பூர்ணியை பார்க்கணும்; அவக்கூட பேசணும்னு என்னைய கூட்டிட்டு வந்திருக்க? இப்ப அவளை பார்க்க கூட மாட்டேன்ற?” என வரும் வழியெல்லாம் சபாபதியை அட்சயா அர்ச்சித்துக்கொண்டே வந்தாலும் எதையும் கண்டுக்கொள்ளாமல் வண்டியை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டான்.

“சித்தி..” என அழைத்துக்கொண்டே ஓடிவந்த அக்காவின் மகன் சர்வேஷை தூக்கியவள் அங்கு வரவேற்பறையில் விறைப்பாக அமர்ந்திருந்த அக்காவின் கணவர் கோபிநாத்தை வரவேற்றாள்.

“எப்பக்கா வந்த? என்ன சொல்லுறாங்க குட்டி?” என மூன்று மாத கருவை சுமந்திருந்த அக்காவின் வயிற்றில் கைவைத்து கேட்டாள்.

“பத்து நிமிஷம் தான் ஆகுது அச்சு. உள்ள இருக்க குட்டிக்கு சித்தப்பா எப்ப வருவாங்கன்னு கேட்குறா?”

அதில் உடனே அட்சயாவின் முகம் வெளுத்துவிட, “அவளே இன்னைக்கு ஊருக்கு கிளம்புறா. இப்ப எதுக்கு அத பத்தி பேசுற கங்கா?” என கண்டித்தார் கோபிநாத். ஆசிரியரான அவரின் குரல் சற்று அதிகாரமாகவும் அதட்டலாகவும் தான் வந்தது.

“அக்கா சும்மா தான் அப்படி கேட்ருப்பா மாமா. பேக் பண்ணனும் நான் உள்ள போறேன்.” என உள்ளே சென்றுவிட்டாள் அட்சயா.

பின் அனைவரும் சேர்ந்து அவளை பத்திரமாக சென்னைக்கு அனுப்பிவைத்தனர்.
 

STN - 92

New member
“அழாதே குட்டி. இந்தா சாக்லேட்.” என இரண்டரை வயதில் இருந்த யாழனை கொஞ்சிக் கொண்டிருந்தான் அவனின் தாய்மாமனான குருபிரசாத் . சில நிமிடங்களுக்கு முன்பு தான் அவனின் மடியில் அமர்த்தி மொட்டை போட்டு காது குத்தியிருந்தார்கள்.

குருபிரசாத்தின் எந்த ஒரு சமாதானமும் யாழனை சென்றடையவில்லை. “ரொம்ப அழுவுறான் க்கா. நீயே இவனை சமாதானப்படுத்த.” என அக்கா நளினியினிடம் கொடுத்தான்.

“அடிக்கடி ஊர் பக்கம் வந்து தலையை காட்டுனா தான பிள்ளைக்கு தெரியும்.” என சடைத்துக்கொண்டே யாழனை வாங்கிய நளினி நகர்ந்துவிட்டாள்.

“அப்புறம் பாக்கியம். பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி பேரன் பேத்தி எடுத்து காது குத்தும் முடிச்சாச்சு. நம்ம குருவுக்கு எப்ப ஒரு நல்லது செய்ய போற?” என உறவுகள் சூழ்ந்திருந்த இடத்தில கொளுத்தி போட்டார் பாக்யலட்சுமிக்கு பெரியம்மா முறையில் இருக்கும் ஒருவர்.

“சரியான நேரம் வரணும்ல பெரிம்மா. நாம மட்டும் நினைச்சா போதுமா..” என பாக்கியம் தொடங்கும் பொழுதே அங்கிருந்து அகன்றான் நகர்ந்துவிட்டான் குருபிரசாத் .

“ஹக்கும். என்ன நேரம் வரணும் உனக்கு? நாலு வருஷம் முன்னாடி நடந்ததை எல்லாத்தையும் மறந்துட்ட போல. பெருல மட்டும் லட்சுமினு வெச்சிக்கிட்டு வீட்டுக்கு வந்த மகராசியை துரத்திவிட்டது நீ தான?” என மீண்டும் அவர் எடுத்து சொன்னார்.

அதில் வெகுண்ட பாக்கியலட்சுமி, “இங்க இருக்க எல்லாருக்கும் பொதுவாவே சொல்லிக்குறேன். என்னோட பையனுக்கு என்ன பண்ணனும்; எப்படி பண்ணனும்; எப்ப பண்ணனும்னு எனக்கு நல்லாவே தெரியும். மொட்டை போடுற விஷஷத்துக்கு கூப்பிட்டா அதை மட்டும் பாருங்க..” என வெட்டு ஒன்று தூண்டு ரெண்டாக பேசிவிட்டு சென்றார் பாக்கியலட்சுமி. உறவுகளும் நமக்கெதற்கு வம்பு என அத்துடன் அமைதியாகிவிட்டனர்.

பாக்கியலட்சுமி அவரின் அம்மா அப்பாவிற்கு ஒரே புதல்வி. இருக்கும் சொத்து அனைத்திற்கும் அவரே வாரிசு என்பதால் ஒரு சொல் சொல்லாமல், சிறு வயதில் இருந்தே அவருக்கு மிகுந்த செல்லத்தை கொடுத்து வளர்த்துவிட்டனர்.

விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் தாயில்பட்டி ஊராட்சியில் பாக்கியத்தை பெயரிலே ஒரு தீப்பெட்டி தொழிற்சாலையை நடத்தி வந்தவர்கள், அவர்களின் இனத்தை சேர்ந்த குணசீலன் என்பவருக்கு திருமணம் முடித்து அவர்களுடனே வைத்தும் கொண்டனர்.

பாக்கியத்தின் மகள் நளினியை சிவகாசியில் பட்டாசு ஆளை வைத்திருக்கும் அசோகன் என்பவருக்கு கட்டிக் கொடுத்திருக்கின்றனர். அவர்களுக்கு ஸ்ருதி, யாழன் என இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றனர்.

பாக்கியத்தின் மகன் குருபிரசாத் தான் நம் கதையின் நாயகன்! தற்சமயம் சென்னையில் உள்ள பண்ணாட்டு நிறுவனத்தில் பணிபுரிகின்றான்.

‘தான்!’ என நினைப்பு பாக்கியலட்சுமியிடம் இயல்பாகவே இருக்கும். அதுவும் மகனின் விஷயத்தில் அனைத்தும் தன் முடிவாக தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அவரின் அந்த எண்ணமே மகனின் வாழ்வை குலைக்கும் விதமாக அமைந்துவிட்டது.

உள்ளே சொந்தபந்தங்கள் சூழ்ந்திருக்கும் சபையில் தன் வாழ்க்கை அவலாக மெல்ல படுவதை கண்டு கடுப்பாகி வெளிய வந்தான் குருபிரசாத்.

சிறிது நேரத்தில் அவனின் பின்னே வந்து அவனின் கையை பிடித்துக்கொண்டார் அசோகன். “ஏன்னா மாப்ள நீயு? சாப்பிடாம அப்படியே போற பிளானோ? தாய் மாமன் உனக்கு தான முதல் உரிமை. உள்ளாரா வா போவோம்.” என அழைத்தார்.

“என்னை விடுங்க அத்தான். உள்ள இருந்தா எல்லாரையும் கத்திவிடுவேன்னு தான் வெளிய வந்துட்டேன்.” என தலையை கோதிக் கொடுத்தான் குருபிரசாத். அவனின் முகத்தில் கோபத்தையும் தாண்டி எதுவோ ஒரு உணர்வு வந்து சென்றது.

குருபிரசாத், தமிழ் மகனிற்கு உரித்தான நிறத்தில் திடகாத்திரமாக இருக்கும் வாலிபன். இருபத்தி ஒன்பது வயது நிறைந்திருந்தது. “எங்க பேசணுமோ அங்க அமைதியா இருந்துட்டு, இப்போ தைய தக்கனு குதிச்சா ஆச்சா மாப்ள?” என அசோகன் சொல்ல அவரை முறைத்தான் குருபிரசாத்.

“என்னை முறைச்சது போதும். வா உள்ளார போகலாம். உங்க அக்கா தான் உன்னிய சாப்புட கூட்டியாரா சொன்னா.” என அவனை உள்ளே அழைத்து சென்றார் அசோகன். அக்காவின் புகுந்த வீடு என குருப்ரசாத்தும் அதற்கு மேல் எதுவும் பேசாமல் உள்ளே சென்றான்.

இரண்டு நாள் கடந்திருக்க, இரவில் குருபிரசாத்திற்கு அழைத்தான் அவனின் நண்பன் அபிலாஷ். குருபிரசாத் அழைப்பை ஏற்றவுடன், “எப்ப டா குரு சென்னைக்கு வருவ?” என கத்தினான்.

“எதுக்கு டா இப்படி கத்துற? ஃபோன் இல்லாமையே சென்னைல இருந்து நீ கத்துறது எங்கூர்ல கேட்கும் போல..” என சலித்துக்கொண்ட குருபிரசாத், “இங்க தீப்பெட்டி ஆபீஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு டா. அப்பாவையே எல்லா இடத்துக்கும் அனுப்ப முடியாது. அதான் ஒரு வாரம் கழிச்சு வருவேன். உன்கிட்ட ஏற்கனவே சொல்லிட்டு தான அபி வந்தேன். ”

“ஓ..” என்ற அபிலாஷின் குரலில் சுரத்தே இல்லை.

“எதாவது பிரச்சனையா அபி?”

“பிரச்னைலாம் இல்லை குரு. இங்க உன்னோட எக்ஸ் வைஃப் நம்ம கம்பெனில தான் ஜூனியரா ஜாயின் பண்ணிருக்கா.”

“....”

“ஹலோ! குரு லைன்ல இருக்கியா?”

ஆழ்மனதில் புதைந்து போனதாக நினைத்த பெயர் சட்டென்று குருபிரசாத்தின் நினைவிற்கு வந்துவிட்டது. “அட்..அட்சயாவா?” என கேட்டவனின் குரலில் இருந்தது என்ன மாதிரியான உணர்வு என அபிலாஷால் பிரித்தறிய முடியவில்லை.

“ஆமா டா. நம்ம ப்ராஜெக்ட்கு மொத்தம் ரெண்டு ஜூனியர்ஸ் வந்திருக்காங்க. உன்னோட டீமுக்கு ஒன்னு. என்னோட டீமுக்கு ஒன்னு. என்னோட டீம்ல தான் அட்சயாவை அலோகேட் பண்ணிருக்காங்க. உனக்கு ஓகேனா சொல்லு உன்னோட டீமுக்கு மாத்திவிடுறேன்.” என பெரிய மனதாக அபிலாஷ் சொல்ல,

“நோ நீட் அபி. அவளுக்கு இப்ப கல்யாணம் கூட ஆகியிருக்கலாம். தேவையில்லாம பழசை கிளறாத. அதை அப்படியே விடுறது தான் எல்லாருக்கும் நல்லது.” என்ற குருபிரசாத்தின் குரலில் கண்டிப்பு இருந்தது.

“ஃபார்ம்ல அந்த பொண்ணு சிங்கிள்னு தான் டா போட்டிருக்கு. அட்சயா ஆவுடையப்பன்னு தான் அந்த பொண்ணோட நேம் கூட இருக்கு.”

“ப்ச் அபி. முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும். நான் அடுத்த திங்கட்கிழமை காலைல தான் வருவேன். முக்கியமா இருந்தா மட்டும் எனக்கு கால் பண்ணு.” என அழைப்பை துண்டித்தான் குருபிரசாத் .

முடிந்துவிட்டது என நினைத்த நினைவுகள் அனைத்தும் ஆழ்மனதின் ஆழத்தில் இருந்து மீண்டும் எழ போவதை அப்போதைக்கு குருபிரசாத்தும் அட்சயாவும் உணரவில்லை.
 
Top Bottom