அத்தியாயம் 10

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ரோசி கஜன்

Administrator
Staff member
Nov 11, 2018
1,719
1,113
113
"இதுக்குத்தானே பயந்தன், நடந்திட்டுப் பாத்தியா? கைக்குழந்தையையும் வச்சுக்கொண்டு இதெல்லாம் என்ன காயு?"

"பச் பாலன்! இப்ப நானென்ன எனக்குக் கொரோனா வரவேணும் எண்டு ஆசைப்பட்டுக் கூப்பிட்டனா? எவ்வளவோ கவனமாத்தானே இருந்தன்."

"நல்லாக் கவனமா இருந்த போ! தொத்து நோய், அதையும் விட புதுசு புதுசா கண்டுபிடிச்சுச் சொல்லுறாங்கள். கொஞ்சம் என்னை விட்டுத் தள்ளி இரு எண்டா கேட்டியா நீ!" கண்கள் கலங்க அறைவாயில் நிலைப்படியோடு சாய்ந்தது பூபாலன் உடல். உடல் அசதியும் களைப்பும் இருந்தாலும் கொஞ்ச முதல்வரை எவ்வளவு சந்தோச மனநிலையில் இருந்தான்! அது எங்கென்றில்லாது போய், மனம் முழுதும் பதற்றமும் பயமுமாகத் தளர்ந்து நின்றான், அவன்.

"சும்மா பயப்படாதீங்க பாலன். சரி வந்திட்டு, இனி என்ன செய்யிறது? உங்களுக்குச் சுகம் வந்தத விடவும் கெதியா எழும்பிருவன்; இந்த காயு சரியான ஸ்ட்ரோங்!" குளிர் காய்ச்சலில் குறண்டிக் கிடந்தபடி உதட்டில் தவழும் முறுவலோடு கணவனைத் தேற்ற முயன்றாள், காயு.

தள்ளி நிற்க வேண்டும் என்று மனதுள் நினைத்தாலும் முடியவில்லை. 'பச்! எனக்கு இப்பதானே வந்து போனது.' தேற்றிக்கொண்டு மனைவியின் அருகில் வந்து மெல்ல அவளருகில் அமர்ந்து கொண்டவன் கரம் அவள் தலையை வருடியது. குடித்த பரசிட்டமோலுக்கும் அடங்காது காய்ச்சல் வேறு அடித்தது. உடல் கிடுகிடுவென்று நடுங்கியது. அப்படியே கணவன் மடியில் சுருளும் பேராவல் வேறு ஆட்டுவித்தது. அதையெல்லாம் மீறி தொண்டையின் குறுக்கே பயப்பந்து நின்று வதைத்தது.

“அய்யோ பாலன் என்ன செய்யிறீங்கப்பா? ஏனப்பா கிட்ட வாறீங்க? திருப்ப வந்திட்டா!” பயத்தோடுத்தான் சொன்னாள். இன்னுமொருதடவை, அவனை நோயாளியாகப் பார்க்கும் திராணி அவளுக்கு இல்லவே இல்லை. அவன் அப்படி வருத்தமாகக் கிடைக்கையில் எல்லாம் ‘என்ன வருத்தம் துன்பம் எண்டாலும் எனக்குத் தா கடவுளே! அவர் எழும்ப வேணும்.” என்று அவள் வேண்டாத கடவுள் இல்லையே! செய்யாத கைப்பக்குவங்களும் வைத்தியங்களும் இல்லையே!

அவன் அதைக் காதுகளிலும் வாங்கிக் கொள்ளவில்லை. அவள் விழிகளில் தரித்து நின்றது பார்வை.

“பாலன்! எழும்பி அங்கால போங்கோ! இப்ப தான் சுகம் வந்திருக்கு, திரும்பவும் தொத்திரப் போகுது. போங்கோ ப்ளீஸ்!” போர்வைக்குள் குறண்டியபடி கண்ணீர் விட்டவளை, தன்னையும் மீறி வளைத்து அணைத்துத் தன்னுள் அடக்கிக்கொண்டான், பூபாலன்.

“ஐயோ என்னப்பா நீங்க!” பதறியவளாலும் அதற்கு மேல் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. அப்படியே அவனுள் அடங்கியவள் உடல் காய்ச்சல் நடுக்கத்தோடு சேர்த்து அழுகையில் குலுங்கியது.

“ஸ்ஸ்ஸ்ஸ்... ஒண்ணும் இல்ல காயும்மா!” முகத்தை மெல்ல நிமிர்த்தி ஆறுதல் சொன்னபடி கண்ணீரைத் துடைத்துவிட்டான், பூபாலன். தலை கோதினான். அவள் மனதில் உள்ள பயமுணர்ந்து ஆற்றுப்படுத்த முயன்றான். “தேவையில்லாமல் கண்டதையும் யோசியாத என்ன? எல்லாம் கெதியா சுகமாகிரும்.”

“நீங்க இனி இப்பிடி இந்த அறைக்க வராதீங்க; திரும்ப வந்திட்டா!” அவள் அதில் தான் நின்றாள்.

மனைவியின் தலையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் அவன். “நீ அப்படித் தள்ளியே நிண்டு இருக்க இப்ப இந்த நிலை வந்திராதடி!” தொண்டை அடைத்திட்டு, அவனுக்கு. “அப்பாடா எல்லாம் முடிஞ்சிட்டு எண்டு எவ்வளவு சந்தோசமா...” சொல்லிக்கொண்டு வந்தவன் அவள் கண்ணீரில் பேச்சை நிறுத்தி விட்டான்.

அவள் பதில் சொல்லவில்லை. விட்டு விலகேன் என்றது போல அவனை முதுகோடு இறுக அணைத்துக் கொண்டன, தள்ளிப் போ என்று சொன்னவள் கரங்கள். “பயப்படுறியாடி?” கேட்டவன் குரலில் பயமும் நடுக்கமும் மிகையாகவே இருந்தது

“பச்...ஆர் நானோ! அந்தக் கண்டறியாத கொரோனாதான் எனக்குப் பயப்பட வேணும்.” சிரிக்க முயன்றாள். அவன் விழிகளையே பார்த்திருந்தவள் விழிகள் குளமாகிப் போனதுதான் மிச்சம் .

“இவ்வளவு நாளும் அதும் இந்த ரெண்டு கிழமையா ஓய்வு இல்லாம இருந்தனி எல்லா? அதுக்கு வட்டியும் முதலுமா ஓய்வு கிடைச்சிருக்கு எண்டு நினச்சிக் கொள்ளு என்ன? அதைவிட்டுட்டுக் கண்டதையும் யோசிக்கக் கூடாது சரியோ. என்ர குஞ்சுக்கு எல்லாம் சுகமாகிரும்.” குழந்தைக்குச் சொல்வது போல் சொல்லி அவள் கண்ணீரைக் கரை தட்ட வைத்தான், அவன்

“ம்ம் நீங்களும் கவனம் பாலன். கயல்...அவா இல்லையோ நாம சரி. நல்ல காலம் பிள்ளைகள் அவவோட நல்லா ஒட்டிட்டினம்.”

“அதான், காலம் முழுசுக்கும் அவவுக்குக் கடமைப்பட்டு இருக்கிறம்.”

“உண்மைதான். எப்படியும் இன்னும் கொஞ்சம் மினக்கட்டுக் கதைச்சு பிரணவ் அண்ணாக்குக் அவவ கல்யாணம் செய்து வைக்க வேணும் பாலன். பிரணவ் அண்ணாக்கு இன்னும் அந்த விருப்பம் மனசில இருக்கு.”

“ம்ம் எனக்கும் தெரியும், பாப்பம். அவவையும் பிள்ளைகளையும் இன்னும் கொஞ்சம் கவனமா இருக்கச் சொல்ல வேணும்.”

“ஓம், பேசாமல் பேஸ்மன்ட்டில இருக்கச் சொல்லுவமா? என்னதான் நான் அறைக்க இருந்தாலும் நீங்க இப்பிடி வந்திட்டு வெளில போய்த் திரிய...அவைக்குத் தொத்திட்டு எண்டா?”

“ம்ம்...அதைதான் நானும் யோசிக்கிறன். நீ அமைதியாக் கொஞ்சம் தூங்கு, அவேய பார்த்திட்டு வாறன்.” என்று சொல்லிவிட்டு, எழுந்து செல்லாது அமர்ந்திருந்தவனை கண்ணீருடன் பார்த்திருந்தாள், காயு.

அன்றே கயலும் பிள்ளைகளிருவரும் ‘பேஸ்மென்ட்’ வாசிகளாகிப் போயினர். சின்னதாக ஒரு சமையலறை செட், குளியலறை, கழிப்பறையோடு பரந்த கூடமாக இருந்தது, பேஸ்மென்ட். அநேகமாக அவர்கள் வீட்டு விருந்துகளின் போது இளையவர்களின் கொண்டாட்ட இடமாக அது இருந்துள்ளது. ‘ட’ வடிவில் இரு மென்னிருக்கைகள் கிடந்தன. அவற்றைக் கட்டிலாகவும் மாற்ற முடியும்.


மேலும் வாசிக்க ...
அத்தியாயம் 10 - 2
அத்தியாயம் 10 - 3
அத்தியாயம் 10 - 4
 

Author: ரோசி கஜன்
Article Title: அத்தியாயம் 10
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.