• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தொடர்கதைகள் அத்தியாயம் - 2

ரோசி கஜன்

Administrator
Staff member
“சரி விடு ராஜம். நீ எப்பவும் இல்லை எண்ட பாட்டுத்தானே பாடுவ. சீட்டுக்கு வாறியா இல்லையா? அதை மட்டும் சொல்லு.” கேலிபோலச் சொன்னார், ஆன்ட்டி.

அவர் நேருக்கு நேராகக் கதைப்பவர். சித்தி அவரிடம் அவ்வளவாகக் கதை வளர்க்க விரும்பமாட்டார். அவர் அப்பால் போகவிட்டுக் கொஞ்சநேரம் நல்லாவே திட்டு விழும்.

“இந்த மனிசி சரியான வினைப்பிடிச்சது; எதுக்கெடுத்தாலும் செத்துப் போன உன்ர அம்மாவோட என்னை ஒப்பிட்டுக் கொண்டு...” பார்வையால் என்னை நெருப்பாகச் சுடுவார்.

அதோடு நிறுத்தவும் மாட்டார்.

“அற்ப ஆயுசில போனாலும் அந்த மனிசியை யாரும் மறக்கத் தயாரில்லை. விடிஞ்சாப் பொழுதுபட்டால் மாங்கு மாங்கென்று இந்த வீட்டுக்காக உழைக்கிற என்னைச் சீ நாயென்றும் சீந்துவார் இல்ல.” கண்ணைக் கசக்குவார்.

“என்ன சொல்லுற ராஜம்?” மீண்டும் கேட்டார் ஆன்ட்டி.

“பாதிச்சீட்டுக்கு எண்டா வாறன் அக்கா. ஐயாயிரம் தானே? உதயாட சம்பளத்தில எப்பிடியும் கட்டலாம்.” இப்படியே சிலநிமிடங்கள் கதைத்துவிட்டு வெளியேறினார் அவர்.

“காணுற நேரமெல்லாம் அவள்ட உழைப்பில இருக்கிறம் எண்டு சொல்லாட்டி இந்தப் புனிதமக்காக்குத் திண்டது செமிக்காதாம்.” முணுமுணுபோடு உள்ளே வந்த சித்தி, அங்கே தயங்கி நின்ற எங்களை முறைப்போடு தான் எதிர்கொண்டார். 

“உதயாதான் ஆம்பிள போல வீட்டப் பாக்கிறாளே!” இப்போதெல்லாம் அடிக்கடிக் கேட்கும் பேச்சு!

சின்ன வயதில் தாயை இழந்தவள், இன்று தகப்பனும் இல்லை; என்றாலும் படித்து ஒருநிலைக்கு வந்துவிட்டாளே என்ற பாசத்தில் உற்றமும் சுற்றமும் சொல்வதிது.

சித்தியின் முகத்தில் ஜொலித்த கோபத்துக்குக் காரணமும் இந்தப் பேச்சுத்தான் என்று எனக்கு நன்றாகவே தெரியும். கூடவே என் உருவம் அப்படியே அம்மாவை உரித்து வைத்திருப்பதுவும்.

நானென்ன செய்யட்டும்? உருவை மாற்றவா முடியும்? முதல், தாயின் உருவில் மகள் இருப்பதில் பிழை என்ன? தீபி கூடத்தான் சித்தி போலவே இருக்கிறாள்.

அடுத்து, இப்படிக் கதைப்பவர்களிடம் சென்று வேண்டாமென்று சொல்லிக்கொண்டிருக்க முடியுமா?

என்னைப் பார்த்த சித்தியின் பார்வை அப்படியே என்னருகில், அதுவும், என் கரத்தைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டு நிற்கும் தங்கை கவியில்.

“ஊரான் என்ன சொல்லுறான் எண்டு கவலைப்பட்டு என்ன பயன்? நான் பெத்ததுகளுக்கும் இவள்தான் பெரிசு; நான் ரெண்டாம் பட்சம்.” எரிச்சலோடு சொல்ல, “அம்மா!” கவி வாய் திறக்க, என் பிடியிலிருந்த அவள் கரத்தில் அழுத்தி, ‘சும்மாயிரு!’ கட்டுப்படுத்திவிட்டேன்.

விளக்கு வைக்கும் நேரத்தில் ஒரு குட்டிச்சண்டையை அரங்கேற்ற வேண்டுமா?

நான் கவியின் கரத்தை அழுத்தியதைச் சித்தி அவதானித்து விட்டார். போச்சுடா!

“அம்மா எண்ட, மிச்சத்த விழுங்கீட்ட; எல்லாம் முடிஞ்சு, என்னோட கதைக்கிறத்துக்கும் இவள்ட அனுமதி வேணும் போலக் கிடக்கே!” சிடுசிடுப்போடு சொல்லி முடிக்கவில்லை, மீண்டும் குறுக்கிட்டிருந்தாள் கவி.

“ஐயோம்மா! உங்களோட வர வர ஒரே தொல்...” முழுவதையும் சொல்லவிடவில்லை நான் - மீண்டும் அவள் கரத்தை நன்றாகவே அழுத்தியிருந்தேன்.

“அக்கா! நீங்க கொஞ்ச நேரம் சும்மா இருங்கோ!” அவள் கேட்டால் தானே?

“இந்த அம்மாக்கு ஒண்டும் விளங்காதக்கா… ஏதேதோ உளருரா!”

அவள் என்னைப் பார்த்துக் கதைத்துக்கொண்டிருக்கையில் விசுக்கென்று வந்த சித்தி பளாரென்று அறைந்து விட்டார்.

என்னையில்லை, அவளை. இதை, அவளோ நானோ கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. கவி மட்டும் முன்னரே கண்டிருந்தால் ஒரே ஓட்டமாக ஓடியிருப்பாள். இலேசில் பிடிபடவே மாட்டாள்.

தங்கையின் முகத்தைப் பரிவோடு பார்த்தேன். கன்னத்தில் பளிச்சென்று விரல் தடங்கள் தெரிந்தன.

‘பாவம்! எனக்காகக் கதைச்சு... உனக்கு ஏன்டி இந்த வேல? சும்மா இரு என்றனே!’

பார்வையால்தான் கதைத்தேன். வாய் திறந்தால் இன்றைக்குக் கவியின் நிலைதான் பரிதாபமாகிவிடும்.

“என்ன கொழுப்புக் கூடிட்டே?” கவியிடம் உறுமிவிட்டு என்னைப் பார்த்தார் சித்தி.

“என்ர பிள்ளைகளையே எனக்கு எதிராத் திருப்பி விடுறியோ!”

என் முன்னால், இல்லை...கொஞ்சமென்றால் கண்களில் குத்துமளவிற்கு வந்திருந்தது சித்தியின் ஆட்காட்டி விரல்.

ஓரடி பின்வாங்கினேன். கவியும் சேர்ந்து நகர்ந்தாள்.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
“இவளுக்கு விழுந்த இந்த அறை உனக்கானது. அக்கா கொக்கா எண்டு ஒட்டிக்கொண்டு திரியிறது போதாதெண்டு இப்ப இப்ப வாயும் நீளுது என்ன?”

மீண்டும் கையோங்க, சட்டென்று என் பின்னால் அவளைத் தள்ளிவிட்டேன்.

‘அடிக்கிறது எண்டால் என்னையே அடியுங்களன்.’ சொல்லாமல் சொன்னேன்.

“ச்சே! தாயில்லா அநாதையா நிண்டவள இந்தளவுக்கு வளர்த்தது நானெண்டு சொல்ல ஒரு மனிசர் இல்ல. இவள்தான் எங்களத் தாங்குறாளாம்.” முணுமுணுத்துக்கொண்டே அப்பால் நகர்ந்து விட்டார் சித்தி.

அவர் ஒருநாளும் என்னில் கைமட்டும் வைத்ததில்லை. “நான் நல்லதுக்குத் தட்டினாலும் சித்திக் கொடுமை எண்டு பெயர் வரவா?” என்பார். அதைக் கேட்கையில் சத்தியமாய் நான் சிரித்து விடுவேன், மிகவும் கவனமாக மனதுள் தான்.

அடிப்பது மட்டும் தான் கொடுமையா? ‘நீ எங்களில ஒருத்தியில்லை, வேறு!’ என்று பட்டவர்த்தனமாக ஒதுக்குவது எவ்வளவு பெரும் கொடுமை! அனுபவிப்போருக்குப் புரியும் அதன் வேதனை!

என் முதுகின் பின்னால் விசும்பல் ஒலி. கவிதான். இனி இவளைச் சமாதானம் செய்வதற்குள் போதும் போதுமென்றாகி விடும். அநேகம் நடுச்சாமத்தில் தான் இரவுணவை உண்பாள். அதுவரை நான் அவளோடு தான். கெஞ்சிக்கூத்தாடி எப்படியோ அவளைச் சமாதானம் செய்விப்பதுதான் என் முதல் வேலை.

அப்போ, நான் கேட்க வந்த விடயம்?

இப்போ கேட்டும் என்ன பயன்? ஒரேயடியாக மாட்டேன் என்று சொல்லிவிட்டால் பிறகு இலேசில் சம்மதிக்கவும் மாட்டார். பார்ப்போம். நாளைக்கோ, நாளை மறுநாளோ நல்ல மனநிலையில் இருக்கும் பொழுது கேட்போம்.

காத்திருக்க முடிவு செய்துவிட்டேன். வெகுவாகப் பழக்கப்பட்ட ஒன்றாச்சே!

காத்திருந்தேன்; முடிவில், ஒரு சரியான தருணத்தைத் தெரிவு செய்து அந்தக் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளியிட்டுவிட்டு, சித்தியின் முன்னால் சென்று நின்றேன், தனியாகத்தான்.

கவியும் தீபியும் அறைக்குள், கதவோரமாக நின்றிருந்தார்கள். கதவு நீக்கலில் முகத்தைப் பதித்து இங்குதான் பார்த்து நின்றார்கள்.

“சித்தி...”

கையில் இருந்த அன்றைய பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தவர், நிமிர்ந்து என்னவென்பதாய்ப் பார்த்தார்.

“நர்மதா...என்ர ஃப்ரெண்ட் ...” தடுமாறினேன்.

“ம்ம்...அவளுக்கென்ன? கொழும்பில இருக்கிறாளே, அவள் தானே?” என்றவர் பார்வை, சட்டென்று கூர்மை பெற்றது.

“அவளுக்குத்தானே கலியாணம் எண்டு அண்டைக்கு ஒரு மனிசி கொண்டு வந்து கார்ட் தந்திட்டுப் போச்சு?”

“ஓம் சித்தி, அவர் அவளிட பெரியம்மா; கொழும்பில தான் கலியாணம்.”

“சரி, அதுக்கு இப்ப என்ன?”

“இல்ல சித்தி, கலியாணத்துக்குக் கட்டாயம் வரவேணும் எண்டவள், அதுதான்.”

“என்ன அதுதான்?” கையிலிருந்த பத்திரிகையை மடித்து வைத்துவிட்டு எழுந்தார்.

ஓரெட்டில் தங்கைகள் இருவரும் என்னருகில் வந்துவிட்டார்கள். அதைப்பார்த்த சித்தியின் முகம் கடுகடுவென்றானது.

“நான் பெத்துவளர்த்ததுகள் எனக்கு எதிராக நிக்குதுகளே! இப்ப இவள நான் கடிச்சுத் தின்னப் போனனா?”

எரிஞ்சு விழுந்தாலும், ஏதோ முடிவெடுத்த பாவனையில் நின்றார் அவர்.

மூவரையும் மாறி மாறிப் பார்த்தபடி மௌனத்தில் சில நிமிடங்களை ஓட்டியவர், “உன்ன நல்ல பொறுப்பான பிள்ள எண்டு உன்ர அப்பா அடிக்கடிச் சொல்லுவார்.” என்றார், ஓர் மாதிரி.

என் அப்பா அப்படிச் சொல்கையில் எல்லாமே வீட்டில் ஒரு பிரளயம் வந்துதான் முடியும்.

“அவள் பொறுப்பானவள் எண்டா, நான் பெற்ற பிள்ளைகளும் நானும் ஊதாரிகளா? உங்களுக்கு எப்பவும் உங்கட முதல் பெஞ்சாதிதான் பெரிசு; அப்ப, அந்தப் பொம்பள பெற்ற பிள்ளையும் நல்ல திறமாத்தான் இருப்பாள்.”

இப்படி ஆரம்பிக்கும் பேச்சுவார்த்தை, மாறி மாறிக் கடிபட்டு வெகுவாகத் தடித்துவிடும். நான் தான் உள்ளே புகுந்து அப்பாவிடம் கெஞ்சிக்கூத்தாடி அமைதிப்படுத்துவேன். சித்தி மட்டும் அடங்காது நெடுநேரம் புலம்பித் தள்ளுவார்.

“உன்னக் கட்டினதுக்கு ஒரு தோட்டவேலை செய்யிறவனக் கட்டியிருக்க ராசாத்தி போல இருந்திருப்பன்.” என்று கூடச் சொல்லுவார்.

அந்த நேரங்களில் எல்லாம் அப்பா அவமானத்தோடு வெறித்துக் கொண்டிருப்பது எல்லாம் சித்தியைப் பாதிப்பதே இல்லை.

இப்படியிருக்க, இன்றைக்குத் தானாகவே இப்படிச் சொன்னால் என்ன அர்த்தம்?

‘பொறுப்புள்ளவள் தானே நீ? இப்ப இந்த வீண் செலவு எதுக்கு? கொழும்புக்குப் போகாத!’ என்று சொல்லப் போறாரோ!’

மனம் பிசையத் தங்கைகளைப் பார்த்தேன். இப்போது, விழிகள் கூட கலங்கீற்று.

நர்மதாவை எப்படிச் சமாளிக்கப்போகிறேன்? ஒரேயடியாகக் கதைக்காமல் விட்டாலும் விட்டிருவாள்.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
“நான் அப்பிடி என்னத்தப் பிழையாச் சொல்லீட்டன் எண்டு மூணு பேரும் இந்த முழி முழிக்கிறீங்க? உங்கட கொக்கா நல்ல பொறுப்பானவள் எண்டு நல்லமாதிரித்தானே சொன்னன்.” எங்களையே பார்த்திருந்த சித்தி தான் சொன்னார்.

“ஆங்! அதுதான் கொஞ்சம் இடிக்குது எண்டு யோசிக்கிறன்.”

சின்னவள் தீபி துடுக்காகச் சொல்ல, சட்டென்று அவள் காலில் மிதித்தாள் பெரியவள். இரண்டு நாட்களுக்கு முதல் கன்னத்தில் வாங்கியது அவளுக்குத்தானே தெரியும்?

“இன்டைக்கு அம்மாவோட ஏதாவது கதைக்கிறது எண்டால் அவவுக்கு முன்னால நிண்டு கொண்டு கதைக்கக் கூடாது; தள்ளி, வாசலில நிண்டுதான் குடுக்க வேணும்.” ஏற்கனவே கவி சொல்லியிருந்தாள்.

“நீங்க ரெண்டு பேரும் வாயே திறக்க வேணாம், நானே கதைக்கிறன்.” கண்டிப்போடு சொல்லியிருந்தேன் நான்.

மூவரையும் உற்றுப் பார்த்த சித்தியோ, “அதுசரி, நல்லதுக்கு எங்க காலம்?” அலுத்துக் கொண்டார்.

“இங்கபார் உதயா, இந்த நேரத்தில நீ கொழும்புக்குப் போறதெல்லாம் சரிப்படாது; அது அவ்வளவு நல்லா இராது.” எனத் தொடர்ந்தவர், முழுதாக முடிக்க முதல் இடையிட்டேன்.

“சித்தி! எனக்கு அவள் ஒருத்திதான் சிநேகிதி. கலியாணத்துக்கு வரேல்லையோ கதைக்கவே மாட்டன் எண்டு சொல்லியிருக்கிறாள். ப்ளீஸ் சித்தி! கலியாணத்துக்கு முதல் நாளிரவு பஸ்ஸில போய் கல்யாணம் முடிஞ்ச கையோட வந்திருவன். ப்ளீஸ்!”

என்றுமே எதற்குமே கெஞ்சியதில்லை நான். பிடிக்குதோ இல்லையோ “செய்” என்றால் பிரச்சனை ஏனென்று செய்து விடுவேன். அதேபோல், பிடித்த விசயங்கள் எத்தனையோ “வேணாம், அதெல்லாம் இப்பத் தேவையில்ல” என்பவற்றில் நழுவியும் போயிருக்கு. ஆனால், என்னுயிர்த் தோழியின் விசயத்தில் அப்படியிருக்க முடியுமா?

சித்தி கண்டிப்போடு மறுத்துச்சொல்ல முயன்றார் என்று நினைக்கிறேன். அவர் பாவனை அப்படித்தான் இருந்தது. அதற்குள் இடையிட்டாள் கவி.

“அம்மா, நம்மட புனிதம் ஆன்ட்டிட சொந்தக்காரர் தான் நர்மதாக்காட மாப்பிள்ள வீடாம். ‘உன்ர சிநேகிதி தானே? நீ போகாமல் இருக்க மாட்டியே’ எண்டு அப்பவே ஆன்ட்டி கேட்டவா? அவையளும் போகீனம் மா. அக்கா அவையளோட போயிட்டு வரலாம். இல்லை வேணாமென்று மறிச்சா(தடுத்தால்) என்ன கதைப்பீனம் தெரியுமே?

‘அந்தப் பிள்ள மாடா உழைச்சு உழைச்சுக் குடுத்திட்டு வீட்டுக்குள்ள இருக்கிறாள்.’ எண்டு, புனிதம் ஆன்ட்டியே எல்லா இடங்களிலும் சொல்லுவா... எனக்கென்ன!”

படபடவென்று சொல்லிக்கொண்டே வாயிலால் இறங்கி வெளியே சென்று நின்று கொண்டாள்.

தன் மூத்த மகள் சொன்னதைக் கேட்ட சித்தியின் முகம் கன்றிச் சிறுத்துப் போயிற்று!

“புனிதமக்கா சொல்லுறாவோ இல்லயோ, நான் பெத்த கழுதைகள் நீங்க ரெண்டுபேரும் காணுமே எனக்கு!”

கைக்கெட்டிய சின்னமகளைப் பிடிக்க முயன்றார். அவள் எச்சரிக்கையாக நின்றதில் மின்னலாக நகர்ந்து வெளியே ஓடி விட்டாள்.

அசையாது நின்ற என்னை ஒரு பார்வை பார்த்தார் சித்தி. பின், “நான் உங்கட அக்காக்கு எவ்வளவு நல்லது செய்திருக்கிறன், நீங்க இப்பிடிக் கதைக்கிறீங்க!” மகள்களைப் பார்த்துச் சொன்னார்.

கேட்ட தங்கைகளைப் போலவே நானும் குழம்பிப் போனேன். ‘நல்லதா? எனக்கா? அப்பிடி என்ன?’ யோசிக்கவும் ஆரம்பித்து விட்டேன்.

“சிநேகிதிக்குக் கலியாணம் எண்டு போய் வந்தால் சரியா? அந்த நர்மதாட வயசுதானே உனக்கும்?” என்னிடம் கேட்ட சித்தி, “அதுதான் உங்கட அக்காக்கு ஒரு கலியாணம் பார்த்திருக்கு.” என, தங்கைகளிடம் சொல்லிவிட்டு மெதுவாக என்னை ஏறிட்டார்.

அந்தப் பார்வையில் தயக்கம் ஏதும் இருந்ததா? நான் ஆராய நினைக்கையில் வழமையான கடினமும் அதிகாரமும் அங்கிருந்தது.

தங்கைகளோ, தாம் கேட்டதில் மிகுந்த சந்தேகம் கொண்டு ஒருவர் ஒருவருள் குசுகுசுப்பாகக் கதைத்துக் கொண்டார்கள். தாய் சொன்னது ஒன்றும் பகிடி அல்லவென்று ஊர்ஜிதம் பண்ணிய மறுகணம் பாய்ந்து வந்து சித்தியைக் கட்டிப் பிடித்துக் கொண்டார்கள்.

“உண்மையாவே அக்காக்குக் கலியாணமாம்மா?” கவி கேட்க, “பின்ன! பொய் சொல்லி உங்களோட விளையாட எனக்கு ஆசை பார்!” என்றார் சித்தி.

“அய்யோ! அம்மா எண்டா அம்மாதான்.” தாயை இறுகக் கட்டிக் கொண்டவர்கள், “எங்கட அம்மாக்கு அக்கால அன்பு இருக்கு; ஆனாலும், வெளியில வெடுசுடு எண்டு இருப்பார்; செல்ல அம்மாக்குட்டி!” என்று, என்றுமில்லா வண்ணம் மட்டற்ற மகிழ்வை வெளிப்படுத்தினார்கள்.

இந்த எல்லாமே, “மாப்பிள்ளை யாரம்மா?” என்ற கவியின் கேள்விக்குப் பதில் வரும் வரை தான்!  
 
Top Bottom