• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அத்தியாயம் - 2

ரோசி கஜன்

Administrator
Staff member
அத்தியாயம் 2-1

விமானம் சீராகப் பறக்கத் தொடங்கியிருந்தது.

இருக்கைப் பட்டியைத் தளர்த்திவிட்டு வாகாகச் சாய்ந்து கொண்டவள் பார்வை, உள்ளே சுழன்ற வேகத்தில், அருகிலிருந்த குட்டிக்கண்ணாடி வழியால் வான்வெளியில் தவழ்ந்தது.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீல வானம் விரிந்து கிடந்தது. ஆங்காங்கே மிதந்து கொண்டிருந்த மேகத்திட்டுகள் விமானத்தைத் தழுவிச் சென்றுகொண்டிருந்தன. முதல் விமானப் பயணம், பழகியிராத நாடு, வேலை தெரிந்ததேயென்றாலும் முற்றிலும் புது மனிதச்சூழல், தனியாகக் கழிக்கவுள்ள இருவருடங்கள் என எல்லாம் கலந்து கட்டி ஒருவிதமான புதுவுணர்வை அவளுள் நிரப்பியிருந்தது. அதைத் துளித்துளியாக இரசித்தாளவள்!

ஏற்கனவே வெளிநாடு செல்லும் வாய்ப்பு வந்திருந்தும் செல்லவியவில்லை. சுகவீனமுற்றிருந்த அம்மம்மாவை விட்டுச் செல்ல விரும்பவில்லை.

"பக்கத்தில தானே என்ர மகன், உன்ர மாமா இருக்கிறான், பாப்பான் தானேம்மா! நீ போயிட்டு வாவன் பிள்ள. பிறகு ஒருநாள் உனக்கு வார முனேற்றத்த நாங்க கெடுத்தம் எண்ட கதை வந்திரக்கூடாது." அவர் எவ்வளவோ சொல்லியும் இவள் அசையவில்லை.

அதேநேரம், நல்வாய்ப்புகள் அடிக்கடி நாடிவராதென்பதும் தெரியும். செய்யும் தொழிலில் நிறையவே சாதிக்க வேண்டும், வெவ்வேறு சூழல்களில் வாழ்ந்து பார்க்க வேண்டும், பரந்தவுலகைச் சுற்றிவந்து தடைகளின்றி வீசும் காற்றை ஆழ இழுத்து நுகர்ந்திட வேண்டும் என்றெல்லாம் ஆசையுள்ளவள், கயல்விழி. முன்வைக்கும் ஒவ்வொரு அடியிலுமிருக்கும் தடைகளை இலாவகமாகத் தாண்டிடும் துணிச்சல் அனுபவப் பாடமாக அவளுள் ஊறிக் கிடக்கின்றதே! அதனால், இம்முறை வாய்ப்பு வந்ததும் செல்வதென்று முடிவெடுத்துவிட்டாள்.

"ரெண்டு வருசத்துக்கா?" விசயம் அறிந்ததும் அம்மம்மாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவள் மட்டில் அவருக்கு ஒரே ஒரு குறைதான், அதுவோ மிக மிகப் பெரிய குறை!

"கலியாணம் செய்திட்டு..." ஆரம்பித்தாரவர். அந்த நேரம் பார்த்தா அமெரிக்க மாப்பிள்ளையும் வர வேண்டும்?

"பிறகென்ன நல்லதாப் போச்சு! எங்களுக்கு மாப்பிள்ளைய நல்லாவே பிடிச்சிருக்கு, உன்ர விருப்பத்தச் சொன்னா கலியாணம் செய்திட்டே போகலாம்." என்றிருந்தார், தந்தை.

"வேலைக்காக போயிட்டு வர இருக்கிறனே ஒழிய அங்கயே தங்கிற எண்ணம் எனக்குச் சுத்தமா இல்ல!" திட்டமாகவே சொல்லிவிட்டவள், கூம்பிவிட்ட பெரியவர்களின் முகத்தைச் சீராக்கவேனும் சமாதானமாக எதையாவது சொல்ல வேண்டுமே!

"போயிட்டு வந்தபிறகு கலியாணம் பற்றி யோசிக்கிறன்.” முற்றுப்புள்ளியிட்டு விட்டாள்.

“இதோட இதே வார்த்தைகள எத்தின தடவைகள் சொல்லீட்டப் பிள்ள! கண்ண மூட முதல் உன்ன குடும்பமாப் பாத்திட்டா நிம்மதியாப் போவம்.” கண்ணைக் கசக்கினார், அம்மம்மா.

“அம்மம்மோய்! இந்த சென்டிமென்டல் அட்டாக் தானே வேணாம் எண்டு சொல்லியிருக்கிறன். நான் என்ன உங்களைப் போல கிழவியா என்ன? வடிவாப் பாருங்க, இப்பத் தான் இருபத்தி மூண்டா எண்டு கேட்கினம். இருபத்தியெட்டு எண்டு நானே சொன்னாலும் நம்பாயினம். கலியாணத்துக்கு என்ன அவசரம் சொல்லுங்கோ!” அவரைத் தேற்றப் பலவாறு முயன்றாலும், திருமணம், கணவன் மனைவி பிள்ளை, அன்பு காதல் எல்லாமே ஏதோவொரு வகை நடிப்பு என்றளவில் அவள் மனதுள் ஆழமாகவே படிந்துவிட்டதே!

தேவையேயில்லாத சிக்கலும் சுழலும்! ஒரேயொரு வாழ்க்கையை, தன் மன ஆசைக்கேற்ப ஒவ்வொரு கணமும் இரசித்து, தான், தனக்காக வாழ்ந்து பார்த்திடும் ஆவல் அவளுள்! வேறு யார் அவளுக்காக வாழ முடியும்?

தாய் தகப்பனோடு ஒன்றாகக் கழித்த நாட்களின் நினைவுகள் இன்னமும் அவள் மனதில் பசுமையாகவே ஒட்டிக் கிடக்கின்றது! அதேநேரம், அம்பாறை செல்லும் நாட்களில் தந்தையையும் சித்தியையும் பார்ப்பவள் அவ்வீட்டில் வளைய வந்த அன்னையின் நினைவில் மிகையாகவே தாக்கப்பட்டு விடுவாள். அவ்வீட்டில் அப்படியொரு பெண்மணி வாழ்ந்தாரென்று சொல்ல எந்தத் தடயமும் இருக்கவில்லை, அவளைத் தவிர; அவள் மனதில் அழியா ஓவியமெனப் பதிந்துவிட்ட நினைவுகளைத் தவிர.

தகப்பனுக்கு அந்த நினைவே வருவதில்லையோ என்ற கேள்வி பிஞ்சு மனதில் பல்லாயிரம் முறைகள் எழுந்ததுண்டு. இன்றும், அவள் நெஞ்சாழத்தில் விடை கிடையா கேள்வியாகவே அது கிடக்கின்றது. அதுவே, அவ்வீட்டில் தாயின் நினைவுகளை விரட்டிவிட்டவராக வேதாவை எண்ணவும் வைத்து விட்டது.

வளர வளர, இதெல்லாம் இயல்பாக நடப்பவை என்பது புரிந்தாலும் மனதால் முழுமையாக ஏற்க முடியாதுள்ளதே! இந்த எண்ணமே அவளை, அவள் ‘சித்தி’யிலிருந்து தூரமாய் நிறுத்திட்டு.

"அட...தாயில்லாப்பிள்ளையக் கரிசனையாப் பாக்க வேணும் எண்ட நினைப்புத் துளி சரி அந்தப் பொம்பள மனசில இருந்திருக்க 'எங்கட பிள்ளய நாங்களே வளக்கிறம் எண்டு வாதாடி உன்னத் தங்களோட வச்சு வளர்த்திருப்பீனம். உன்ர அப்பா அண்டைக்கு ஒரு கடமைக்குக் கேட்டதோட சரி, அந்தாளுக்கு புது மனிசி, மகள் எண்டு வாழ வேணும், நீ அவைக்கு அந்த நேரம் பெரிய சுமை!"

சிறு வயதில் அடிக்கடி அம்மம்மா சொன்னது முழுமையாகத் தவறில்லையென்றே அவள் மனதும் சொல்லிட்டு. அதுவே, வேதா எவ்வளவு நெருங்க முனைந்தாலும் தள்ளி நின்றுவிட்டாள். யோசித்தால், இன்றளவில் அவரில் கோபமோ வெறுப்போ எதுவுமே இல்லைதான். நிச்சயம் விருப்பும் இல்லவே இல்லை. தங்கை வளர வளர அவள் மனம் கோணிவிடக்குடாது என்ற ஒன்றுக்காக மட்டுமே, வேதா தன்னை ஏற்றுக்கொண்டாரென்று நம்பினாள், இவள்.

அது மட்டுமின்றி, ‘நீ என்ர மூத்தவள், உன்ர அம்மம்மா ஆக்கள் தான் என்னை விட்டு உன்னப் பிரிச்சவே’ என, சொல்லியும் சொல்லாமலும் தந்தையின் செயல்களிருப்பதையும் ஒரு பார்வையாளராக மட்டுமே பார்க்க முடிந்தது. தந்தை என்ற பாசம் அத்தனை வலிமையானதாக அவளுள் இல்லவே இல்லை.

சிற்றன்னை பற்றி, தன் கடந்தகாலம் பற்றிய சிந்தனையை உதறிவிட்டு கைபேசியை எடுத்தாள், கயல்விழி. தகப்பன் அனுப்பியிருந்த தொலைபேசி எண்ணைத் தாங்கி நின்ற செய்திதான் முன்னணியில் நின்றிட்டு! எண்ணுக்குரியவன் முகம் நினைவிலாட தன்னையறியாது முகம் சுழித்துக்கொண்டாள்.

"கொசப்பு" வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டாள்.

'அவரிட்ட போய் நான் உதவி கேட்க வேணுமாம்.' நினைத்தவளுள் அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்துவிடக் கூடாதென்ற எண்ணமே!

ஒரே ஆண்பிள்ளை, கடைக்குட்டி என்றெல்லாம் வீட்டில் நல்ல செல்லம்! அப்படியிருப்பவர் எல்லாரும் அவனைப்போல தறிகெட்டுத் திரியத் தேவையில்லையே!

‘ஆரோ எவனோ நமக்கென்ன வந்தது’ என்றெல்லாம் இருக்க முடியவில்லை. ஒரே அயல் என்பதால் பூபாலனும் நண்பர் கூட்டமும் கூடி நின்று கிண்டல் கேலி என்று பெரிதாகச் சிரித்துக் கதைப்பதை முகச் சுழிப்போடு, 'மூஞ்சியும் ஆளும் லூசன்' என்று, எண்ணிலடங்காத் தடவைகள் கடந்திருக்கிறாள். அது எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடுவது போல், இவளின் நெருங்கிய நண்பியின் தமக்கையை இரண்டு வருடங்கள் மட்டில் பின்னால் கலைத்துத் திரிந்திருக்கிறான். பெரிய காதலாம்!


மேலும் வாசிக்க …

 
Last edited:
Top Bottom