• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அத்தியாயம் - 2

STN - 92

New member
மனம் - 2:

“நீ ஊருக்கு வர்றதுக்கு எதுக்கு டா விடி காலையிலையே எனக்கு தொந்தரவு கொடுக்குற?” என சலித்துக்கொண்டே குருபிரசாத்திடமிருந்து பேக்கை வாங்கினான் அபிலாஷ்.

“நானா உன்னை இங்க வர சொன்னேன்?” என கேட்டுக்கொண்டே காரில் ஏறி அமர்ந்த குரு கண்களை மூடி அமர்ந்துவிட்டான்.

நண்பன் தன்னை அழைக்க மாட்டான் என்று தெரிந்த அபிலாஷே அவன் வரும் நேரம் கேட்டு வண்டியுடன் கிளாம்பாக்கத்திற்கு வந்து நின்றான். அங்கிருந்து வேளச்சேரியில் இருக்கும் அவர்களின் அப்பார்ட்மெண்ட் செல்ல வேண்டும்.

குருபிரசாத்தை பற்றி அனைத்தையும் அறிந்து வைத்திருப்பவன் அபிலாஷ். இருவரும் ஒன்றாக ஒரே கல்லூரியில் படித்தவர்கள், பின் வேலைக்கென பிரிந்தாலும் அவர்களுக்குள் நட்பு தொடர்ந்துக்கொண்டே தான் இருந்தது. இரண்டு வருடம் முன்பு தான் அபிலாஷ், குருபிரசாத் வேலை பார்க்கும் அலுவலகத்திலே அவனுடன் இணைந்துக்கொண்டான்.

‘கோவில்பட்டியில் இருந்து சென்னைக்கு பன்னிரண்டு மணி நேர பயணத்தில் தூங்காததையா இப்பொழுது தூங்க போகுகிறான்?’ என அபிலாஷ் அவனை திரும்பி பார்த்தபடியே வண்டியை ஓட்டினான்.

“மொட்டை போடுற பங்க்ஷன் எப்படிடா போச்சு?”

“ம்ம்ம்.”

“தீப்பெட்டி ஆபிஸ் வேலை நல்லபடியா முடிஞ்சிதா..”

“ம்ம்ம்.”

கண்ணை மூடிக்கொண்டே ராகம் பாடியவனிடம் அபிலாஷும் அதற்குமேல் வேறேதும் கேட்கவில்லை.

அவர்கள் அபார்ட்மென்டின் முன்பு வண்டியை நிறுத்திய அபிலாஷ், “சமைக்கிறேன்னு எதையாவது பண்ணாத குரு. இன்னைக்கு ஜெசி உனக்கும் சேர்த்து சமைக்கிறேன்னு சொல்லிருக்கா. மணி ஆறு தான ஆகுது. நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு.” என சொல்லிவிட்டு குருவின் வீட்டிற்கு எதிராக இருந்த அவனின் ப்ளாட்டிற்குள் நுழைந்தான் அபிலாஷ். ஜெசி என்னும் ஜெசிந்தா, அபிலாஷின் காதல் மனைவி.

இருளை விலக்கிக்கொண்டு விடிந்துக் கொண்டிருக்கும் காலை வேளையில் குருபிரசாத்திற்கு உறக்கம் வரவில்லை. எனவே, பாட்டை சத்தமாக வைத்துவிட்டு, பால்கனியை ஒட்டி போடப்பட்டிருக்கும் ட்ரெண்ட்மில்லிடம் சென்றான். அது அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று!

அவனின் மனநிலைக்கு ஏற்ப அதனின் வேகத்தை கூட்டியும் குறைத்தும் அதனில் நடப்பதோ, ஓடுவதோ என செய்வான். தற்சமயம் அலைபாயும் அவனின் மனதை அடக்குவதற்கு ட்ரெண்ட்மில்லின் வேகத்தை கூட்டிவைத்து ஓட துவங்கினான்.

கால்கள் முன்னோக்கி ஓடினாலும் அவனின் மனது பின்னோக்கி இருநாட்களுக்கு முன் நிகழ்ந்த நிகழ்வை நினைத்தது.

“நாங்க பார்த்த பொண்ணுக்கு என்ன குறை குரு? கல்யாணம் பண்ணிக்கிட்டா தான் என்ன?” பாக்கியம் சத்தமிட்டார்.

“நா குறைன்னு சொல்லவே இல்லையே ம்மா. எனக்கு விருப்பம் இல்லை.”

“இன்னும் அந்த பொண்னையே நினைச்சிக்கிட்டு இருக்கியா நீ?” என்ற பாக்கியத்தை குரல் ஓங்க, “பாக்கியம்.” என்ற குணசீலனின் அழைப்பில் அமைதியானார்.

குணசீலன் பாக்கியத்தை எதிர்த்து பேசுவது எல்லாம் அதிசயம் தான். எனவே, குரு அவரை வியப்பாக பார்த்தான். அவர்களுடன் இருக்கும் பாக்கியத்தின் தாய் தந்தை கூட அவரை பார்த்தனர்.

“உனக்கும் வயசை முப்பது ஆக போகுது குரு. அந்த பொண்ணு தான் வேணும்னா சொல்லு.. நாங்க பேசி பார்க்குறோம்.” என்ற குணசீலனை இடையிட்ட பாக்கியத்தை பார்வையாலே அடக்கியவர்,

“மெத்த படிச்சி வேலை பார்க்குற. எது சரியோ நீயே யோசனை பண்ணிக்கோ.” என அறைக்குள் செல்ல, அவரின் பின்னே சென்ற பாக்கியம் அவரிடம் வாக்குவாதம் செய்வது வெளியே இருந்த அனைவருக்கும் கேட்டது.

கலைவாணி, பாக்கியத்தின் தாயார், முகமே வாடிவிட்டது. “நீனு கலியாணத்துக்கு சரி சொல்லக்கூடாதா ராசா? இன்னும் அந்த பொண்ணு நினைப்பு இருக்கோ உனக்கு?” என குருவின் தடையை பிடித்து கேட்டார்.

“என்னோட விருப்பு வெறுப்பை தாண்டி, நான் யாரை கல்யாணம் பண்ணாலும், வர போறவா இவங்க சொல்லுறதை கேட்கணும்னு எதிர்பார்த்தா முடியுமா அம்மாச்சி?”,

“அவங்களை நீங்க பெத்தவங்க, அவங்க என்னை பெத்தவங்கன்னு அவங்களோட அதிகாரத்துக்கு நாம அமைதியா போனாலும் வர்றவங்களும் அமைதியா இருக்கணும்னு இல்லையே..” என இருபுருவங்களை உயர்த்தி கேட்டான்.

“ஒரே பொண்ணுன்னு நாங்க தான் ராசா அப்படி வளர்த்துட்டாம். உங்க அம்மா சொல்லுற மாதிரி அந்த பொண்ணு நினைப்பு உனக்கு இருக்கா? இருந்தா இந்த தாத்தா கிட்ட சொல்லு. உன்னோட கலியாணத்தை நடத்தி வைக்குறது என்னோட பொறுப்பு.” என துரைசாமியும் கேட்டார்.

அதில் பக்கென்று சிரித்தவன், “அப்படிலாம் எதுவும் இல்லை தாத்தா. அந்த பொண்ணை பத்தி எதுவும் பேசாதீங்க. நாளைக்கு நான் சென்னை கிளம்புறேன்.” என அத்துடன் முடித்துக் கொண்டான்.

நிகழ்விற்கு வந்தவன், ட்ரெண்ட்மில்லில் பயிற்சியை முடித்துவிட்டு குளித்துக் கிளம்ப அபிலாஷும் காலை உணவுடன் உள்ளே வந்தான்.

“ஜெசிந்தாக்கு தேவை இல்லாத வேலை அபி..” என சொன்னாலும் உணவினை வாங்கிக்கொண்டான்.

“இன்னைக்கு நான் கொடுத்தா. நாளைக்கு உனக்கு கல்யாணம் ஆனதும் நீ எனக்கு கொடுக்க மாட்டியா என்ன?” என்ற அபிலாஷின் எதிர் கேள்வியில் வாயை மூடிக்கொண்டான் குருபிரசாத். அபிலாஷ் கொடுத்த உணவினை உண்டுவிட்டு அவனுடனே அலுவலகம் கிளம்பிச் சென்றான்.

அவர்கள் இருவருமே ஒரே ப்ராஜெக்ட்டில் வேறு வேறு குழுவில் வேலை பார்ப்பவர்கள். அந்த குழுவிற்கு அவர்கள் தான் தலைமை வகிக்கின்றனர். எனவே அனைவருமே ஒரே தளத்தில் இருக்கும் அலுவலக அறையில் தான் வேலை செய்கின்றார்கள்.

மின்தூக்கியில் அபிலாஷுடன் ஆறாவது தளத்திற்கு வந்த குருபிரசாத்தின் மனம் நிலையில்லாமல் தவித்தது. முழுதாக நான்கு வருடங்கள் கடந்து அட்சயாவை சந்திக்க போகிறான். இந்த நான்கு வருடத்தில் அவளின் வாழ்வில் என்ன வேண்டுமென்றாலும் நடந்திருக்கலாம். எனவே, அனைத்திர்க்கும் அவனின் மனதை தயார் செய்திருந்தான்.

அவனின் மனநிலையை உணர்ந்தவனாக அலுவலக அறைக்குள் நுழைந்த அபிலாஷ் ஓரிடத்தில் எட்டி பார்த்துவிட்டு. “இன்னும் வரல போல டா.” என அவனின் இருக்கைக்கு சென்றான்.

‘ஊஃப். காலேஜ் பையன் மாதிரி பண்ணாத டா. உனக்கும் அவளுக்கும் நடுவுல எதுவும் இல்லை.’ என மானசீகமாக சொல்லிக் கொண்டவன் அவனின் இருக்கைக்கு சென்றான். ஒருவாரம் முழுக்க வீட்டில் இருந்தபடியே வேலையை பார்த்தாலும் திங்கட்கிழமை காலை என்பதால் குருவிற்கு வேலைகள் வரிசை கட்டி நிற்க, அதனை கவனிக்க சென்றான்.
 

STN - 92

New member
“சரி ம்மா. பத்திரமா இருக்குறேன். நேரத்துக்கு சாப்புடுறேன். இப்ப நீங்க போனை வெச்சாதான் என்னால வேலைக்கு கிளம்ப முடியும். சோ ப்ளீஸ் ம்மா. நான் ஈவ்னிங் வந்து மீதியை பேசுறேன் பாய் ம்மா..” என அழைப்பை துண்டிதத அட்சயா அலுவலகத்தின் கிளம்பினாள்.

அட்சயாவுடன் சென்னை வந்த சபாபதி, அவளை ஒரு நல்ல விடுதியில் தங்க வைத்து, அங்கிருந்து அலுவலகம் எப்படி செல்வது என அனைத்தையும் பழக்கப்படுத்திவிட்டு தான் சேலத்திற்கு திரும்பியிருந்தான்.

“எண்டே டீம் லீட் நாளை வரும் மோளே..” என நேற்று பவ்யா சொன்னது நினைவில் வந்தது. பவ்யா, அட்சயாவுடன் தான் இந்த அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தவள். ஒன்றாக இந்த ப்ராஜெக்ட்டில் சேர்ந்ததால் இருவருமே தோழிகள் ஆகினர். பவ்யா குருபிரசாத்தின் டீமில் இருப்பவள்.

அலுவலகத்திற்கு வந்த இருவருமே ஒரு ட்ரைனிங் ப்ரோக்ராம் என மீட்டிங் ஹாலிற்கு சென்றுவிட்டனர். மதிய உணவிற்கு பிறகு தான் அவர்களின் அலுவலக அறைக்கே வந்தனர். அதன் பிறகு மீட்டிங் என மீதி நாளும் நகர்ந்திருந்தன.

மாலையில் வீட்டிற்கு கிளம்பிய குருபிரசாத் லிப்ட்டிற்குள் நுழைந்தான். அவனின் பின்னே தான் அட்சயாவும் பவ்யாவும் வந்தனர். குரு உள்ளே சென்ற பின் அவர்கள் இருவரும் உள்ளே சென்றனர்.

பார்த்தவுடனே அவளை அடையாளம் கண்டுக்கொண்டான் குருபிரசாத். ஆனால் அவளை பாராதது போல் இருந்துக்கொண்டான்.

லிஃட்டின் உள்ளே நுழைந்ததுமே அவனை பார்த்த அட்சயா அதிர்ந்து பின் குழம்பினாள். ‘அவங்க குருபிரசாத் தானா இல்லை எனக்கு கண்ணு தெரியலையா?’ என அவள் யோசிக்கும் பொழுதே
ஆறாம் தளத்தில் இருந்த மின்தூக்கி ஒவ்வொரு தளமாக அனைவரையும் ஏற்றிக்கொண்டு இறுதியாக தரைதளம் வந்து நின்றது.

லிஃட்டில் இருந்து வெளியே வந்த அட்சயாவிற்கு இன்னமும் அதிர்ச்சி விலகவில்லை. ‘அவங்க குருபிரசாத் தானா? உலகம் உண்மைல அவ்ளோ சின்னதா?’ என ஏதேதோ நினைத்துக்கொண்டு அவனின் முதுகை பார்த்தபடியே பவ்யாவுடன் நடந்தாள்.

“மோளே. அவனை நோக்கு. தட் ப்ளூ ஷார்ட். எண்டே டீம் லீட்.”

“அ.. அவரோட நேம் என்ன?” என சாதாரணமாக அட்சயா கேட்பதுபோல் இருந்தாலும் உள்ளுக்குள் நடுங்கியது.

“குருபிரசாத். ஷார்ட்டா குரு.” என சொல்லிவிட்டு பவ்யா சாதாரணமாக நடக்க தொடங்கினாள்.

ஆனால், அவள் கூறி சென்ற பெயர் அட்சயாவிற்குள் சில அதிர்வுகளை உருவாக்கியது.
இறந்த காலத்தின் நிகழ்வுகள் நிழல்களாக அவளின் நினைவில் தோன்றி துரத்தின. அன்றிரவே அவளின் அண்ணன் சபாபதிக்கு அழைத்துவிட்டாள் அட்சயா.

“சொல்லு அச்சு. இன்னைக்கு ஆபிஸ் எப்படி போச்சு. சாப்டியா? ஹாஸ்டல் சாப்பாடு ஒன்னும் செய்யல தான?” என அடுக்கடுக்காய் கேள்விகளை எழுப்பினான். தங்கையிடம் எந்த ஒரு பதிலும் வரவில்லை என்றவுடன் அமைதியானவன்,

“அச்சு! அங்க ஏதும் ப்ராப்லம் இல்லை தான?” என சபாபதியின் குரலில் அக்கறை நிறைந்திருந்தன.

“அ.. அண்ணா. அது.. இங்க.. எங்க ஆபிஸ்ல..” என்று திணறியவள் நீண்ட மூச்சினை எடுத்துவிட்டு, “இங்க என்னோட ஆபீஸ்ல தான் அவர்.. அவங்களும் வேலை பார்க்குறாங்க போலண்ணா..” என முழுதாக சொல்லி முடித்தாள்.

தங்கை இவ்வளவு தயங்குவதிலே அது யாராக இருக்கும் என யூகித்தவன், “குருபிரசாத்தா?” என்றான் அதிர்வை மறைத்தபடி.

“ஆமா ண்ணா. அவங்களும் என்னோட ப்ராஜெக்ட் தான். ஆனா, என்னோட டீம் இல்லை. பவ்யா டீம்.”

சிறிது நேரம் அமைதி காத்த சபாபதி, “நீ கிளம்பி ஊருக்கு வந்துடுறியா அச்சு?.”

“ண்ணா. நான் ஒரு வருஷம் பாண்ட்ல சைன் பண்ணிருக்கனே ண்ணா. இப்ப வேலையை விட்டுட்டு வீட்டுக்கு வந்தா ஐம்பதாயிரம் கட்டணுமே.”

“எனக்கு காசு முக்கியமே இல்லை அச்சு. உன்னோட நிம்மதி தான் அண்ணாக்கு முக்கியம்.”

“இல்ல ண்ணா நான் இங்கயே இருக்கேன்.”

“உன்னால தனியா சமாளிக்க முடியாது அச்சு. அண்ணா சொல்லுறதை கேளு.”

“நானா போய் எதுக்குன்னா அவங்ககிட்ட பேச போற? ப்ளீஸ்ணா. உனக்கே தெரியும் அம்மாகிட்டயும் அப்பாகிட்டயும் எவ்வளவு கஷ்டப்பட்டு பர்மிஷன் வாங்கி வேலைக்கு வந்திருக்கேன். இப்ப நான் வந்துட்டா திரும்ப அனுப்ப மாட்டாங்க. ப்ளீஸ் ண்ணா..”

“அச்சு. நீ என்ன பண்ணுறன்னு உனக்கு புரியுதா?”

“நா..நான் வேற ஒரு வேலைக்கு சேர முடியுமான்னு பார்க்கிறேன் ண்ணா. இப்போதைக்கு அம்மா, அப்பா கிட்ட சொல்லாத ண்ணா ப்ளீஸ்..” என்ற தங்கையின் கெஞ்சலில் அவளின் விருப்பத்திற்கே விட்டுவிட்டான். அவன் மனதிலும் ஒரு கணக்கு இருக்க தான் செய்தது!

அட்சயா ஃபோனை வைத்துவிட, அவளின் ரூமில் தங்கியிருக்கும் மற்றொரு பெண் அவளின் காதலனுடன் பேசிக்கொண்டிருந்தாள். பேசும் பொழுது அவளின் முகத்தில் தோன்றும் வர்ணஜாலங்களே அவள் யாருடன் பேசிக் கொண்டிருக்கிறான் என கூறிவிட்டது. அவளை தொந்தரவு செய்யாமல் அமைதியாக படுத்துவிட்டாள் அட்சயா.

படுத்த அட்சயாவின் மனதில், ‘குருபிரசாத்தும் அவளை கண்டுக் கொண்டானா? அவருக்கு கல்யாணம் ஆகியிருக்குமா?’ என்ற கேள்வி வண்டாக குடைந்தது. ஆகையால், வெகுநேரம் கழித்தே உறக்கம் அவளை நெருங்கியது.

“நாலு வருஷத்துல அட்சயா ஆளே மாறிட்டா தான? எனக்கு கூட ஃபர்ஸ்ட் அடையாளம் தெரியல குரு. அவளோட நேம், பேக்ரௌண்ட் இன்பார்மேஷன் வெச்சி தான் கண்டுபிடிச்சேன்.” என அபிலாஷ் தன்னை தானே ஒரு சிஐடி அளவுக்கு புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தான்.

“அதுக்கு இப்ப என்ன பண்ணனும்.” என்ற குருவை குறுகுறுவென பார்த்தவன்,

“அட்சயா சிங்கிள்னு தான் டா பயோடேட்டால போட்டிருக்கா..”

“குரு அண்ணா கூட தான் இன்னமும் ஸ்டேட்டஸ் சிங்கள்னு வெச்சிருக்காரு.” என ஜெசிந்தா எடுத்துக் கொடுத்தாள்.

“இப்ப உங்க ரெண்டு பேருக்கும் என்ன வேணும்?” என கணவன் மனைவி இருவரையும் பார்த்தவன், ஊரில் இருந்து கொண்டுவந்த பழங்கள் காய்கறிகள் என ஜெசிந்தாவிடம் கொடுத்தான். ஜெசிந்தாவும் அதனை வாங்கிக்கொண்டாள்.

“இனிமேலாவது ஏதாவது நல்ல முடிவா எடுப்பன்னு தான்.” என அபிலாஷ் சொல்ல,

“முடிஞ்சி போனதுக்கு போய் மோளம் அடிக்க சொல்லுற?” என சிரித்தவனிடம்,

“ஓ முடிஞ்சி போயிடுச்சா? அப்படினா சார் வேற கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான?”

“...”

“எனக்கு தெரியும் குரு. உன்னால அது முடியாது. ஏன்னா?”

“ப்ச் போதும் அபி. எனக்கு வேலை இருக்கு..” என்றவன் மடிக்கணினியை இயக்கினான்.

“நாலு வருஷம் கழிச்சு ரெண்டு பேரும் மீட் பண்ணுறீங்கன்னா கண்டிப்பா அது கர்த்தரோட கிருபை தான ண்ணா.” என ஜெசிந்தா சொல்ல,

“ஆமா டா. எனக்கென்னமோ நீங்க ரெண்டு பேரும் மனசை விட்டு பேசுனாலே போதும்னு தோணுது.”

“அபி. வெளிய இருந்து பார்த்தா உனக்கு ஈஸியா தான் இருக்கும். அன்னைக்கு என்ன நடந்துச்சின்னு உனக்கு முழுசா தெரியும் தான? அன்னைக்கு நீயும் என்கூட தான இருந்த?”

“ஹான் நல்லா நடந்துச்சே. நான் பெருசா? நீ பெருசானு எல்லாரும் மென்டல் மாதிரி முடிவெடுத்தீங்க.. கடைசில உங்க அம்மா வந்து மொத்த ஆட்டத்தையும் கலைச்சு விட்டுட்டாங்க..” என அபிலாஷ் நக்கல் குரலில் சொன்னான்.

“அத தான டா. முடிஞ்சிடுச்சுனு சொல்லுறேன்.” என்ற குருவை முறைத்த அபிலாஷ்,

“இன்னைக்கு தான ஸ்டார்ட் பண்ணிருக்கேன். உன்னையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா தான் டா வழிக்கு கொண்டுவர முடியும்..” ஜெசிந்தாவையும் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டான்.

நிகழ்ந்த விஷயங்களை மறக்கவும் முடியவில்லை! கடக்கவும் முடியவில்லை! அவன் ஆழ்மனதின் ஆழத்தையும் அதில் இருக்கும் கசப்புகளை அவன் மட்டுமே அறிவான்.

மறுநாளில் இருந்து அட்சயா, குருபிரசாத் இருவருமே மற்றவரை கண்டும் காணாமல் இருந்துக் கொண்டனர். அவர்களை கவனித்த அபிலாஷ் தான் தலையிலே அடித்துக் கொண்டான்.

ஒருவாரம் சென்றிருக்க, இருவரும் மின்தூக்கியில் மீண்டும் சந்தித்துக் கொண்டனர். அட்சயா ஐடி கார்டு, பர்ஸ், வாட்டர் கேன் என அனைத்தையும் கையில் வைத்தபடியே உள்ளே நுழைந்தாள்.

‘எல்லாத்தையும் கையிலேயே வெச்சிக்கிட்டு இருப்பா போல..’ என குருபிரசாத் மனதில் நினைத்துக் கொண்டான். லிஃப்ட் ஒருஒரு தளமாக நின்றுக்கொண்டே ஆறாம் தளத்திற்கு சென்றது.

க்ராப் டாப்ஸும் ஜீன்ஸும் அணிந்திருந்த அட்சயா கூந்தலை போனி டேயில் போட்டிருந்தாள். லிஃட்டில் இருக்கும் கண்ணாடி வழியே அவளை கவனித்தான் குருபிரசாத். ‘காலேஜ் முடிஞ்சி ஒரு வருஷம் இருக்கும். ஆனா இன்னும் காலேஜ் போற பொண்ணு மாதிரி தான் இருக்கா..’ என அவனை அறியாமலே சிரிப்புடன் நினைத்தவனின் மூளைக்குள்,

“எங்க வீட்டு பொண்ணுக்கு பதினெட்டு வயசு முடிஞ்சதால தப்பிச்சிருக்க டா நீ. இல்லைனா போட்சோ வழக்கு போட்டு, உன்னை உள்ள தள்ளி உனக்கு வாழ்க்கையே இல்லாம பண்ணிருப்போம்.” என ஆவேசமாக அன்று பேசிய குரல் ஒலித்தது.

அதில் அவனின் உடல் தானாக இறுக அவர்களின் தளம் வந்ததும் வேகமாக வெளியேறினான்.
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom