அத்தியாயம் 33

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ரோசி கஜன்

Administrator
Staff member
Nov 11, 2018
1,719
1,113
113
பயணத்தின் பதின்மூன்றாம் நாள்...

"நீடில்ஸ்ல இருந்து ‘கிரிஃபித் ஒப்செர்வடோரி’ (The Griffith Observatory) நாலரை மணித்தியாலத்தில போயிரலாம் என்ன வேந்தன்?" மாறன் கேட்டதற்கு, "ஓம், பதினொன்றரைக்கு முதலே போயிரலாம் எண்டு நினைக்கிறன்." என்றானவன்.

"அங்க பார்த்திட்டு லொஸ் ஏஞ்சல் சிட்டில நடந்து திரிஞ்சிட்டு அப்பிடியே ஷொப்பிங் கொஞ்சம் செய்திட்டு..." இப்படியே மாறி மாறி கதைபட்டு, கலகலப்போடு பயணப்பட்டவர்கள் காலை பதினொன்று கடக்கையில், கலிபோர்னியாவின் லொஸ் ஏஞ்சல்ஸின் ‘ஹொலிவுட் மலை’யில் தெற்கு நோக்கிய சரிவிலுள்ள ‘கிரிஃபித் பூங்கா’வில் அமைந்துள்ள ‘கிரிஃபித் ஆய்வகத்தை’ அண்மித்திருந்தார்கள். கடல் மட்டத்திலிருந்து 1134 அடியுயரத்திலிருந்தது, பொதுமக்களின் பார்வைக்கென்றே அமைக்கப்பட்ட அவ்வாய்வகம்.

மீண்டும் ஒரு மலைப்பாதைப் பயணம்.

“ரோட்டு ஒடுக்கமா இருக்கு, பார்த்துத் தம்பி.” என்ற சுகுணாவின் குரலில் இலேசான பயம்.

வேந்தன் முறுவலித்தான். அந்தச் சாட்டில் பின்புறம் பாய்ந்த பார்வை இலக்கியாவில் பட்டு மீண்டது. அவள் பார்வையோ வெளிபுறத்தில். உதயத்தின் மலர்வு அவள் முகத்திலும் குடியிருந்தது. முதல் நாள் மாலைப்பொழுதில் பல்பொருள் அங்காடியில், சிறு பொழுதேனும் அவளோடு கழிக்க முடிந்ததில் அவனுக்குமே பலத்த சந்தோசம் தான். தாமிருவர் மட்டுமாக அங்காடி வண்டிலைத் தள்ளியபடி கதைத்துப் பேசியபடியே தேவையானவற்றைத் தெரிந்தெடுக்கையிலெல்லாம் கற்பனையில் அவளுடனான வாழ்வே வலம் வந்திருந்தது. ‘எப்படா கலியாணம் கட்டப் போற?’ என்று, தாய் அலுத்துக் கொண்டதும் தான்.

வீட்டினரின் விருப்பைத் தட்டிக் கழித்த காத்திருப்பு இவளைச் சந்திக்கத்தானே! மீண்டும் பார்வை பின்புறம் பாய்ந்தது. இந்தப் பயணத்தில் இவர்களின் நெருக்கத்துக்குத் துணைபோனதன் பெரும்பங்காற்றிய உள்க்கண்ணாடி பளிச்சென்று தன் கடமையில் கண்ணாக இருந்தது.

“சனமாக் கிடக்கு...பார்க்கிங் எல்லாம் கிட்டவா கிடைக்குமோ என்னவோ!” என்ற நாதன், அவளையே சுற்றி நின்ற அவன் மனதைத் திருப்ப முயன்றார்.

“லீவு நேரம் இப்பிடித்தான் அங்கிள். கிட்டவா கிடைச்சா நல்லம், இல்லாட்டியும் நடக்கிறதுக்கு யோசிக்கிற ஆக்கள் இல்லத் தானே!” சீண்டலாகச் சொன்னவன் இலக்கியாவின் கடியை எதிர்பார்த்தான்.

அவள் ஏமாற்றவில்லை. தாமதியாது முறைத்தவளின் முறைப்பை முறுவலோடு ஏற்றுவிட்டு அவன் பார்வை திரும்புகையில், “தம்பி அதால திரும்ப வேணும் என்ன?” நாதன் சொல்லிக்கொண்டிருக்கையில் வாகனம் தாண்டிவிட்டிருந்தது.

“பச்!” திருப்பத்தைத் தவற விட்டவனுக்கு தன்னிலேயே கோபமெழுந்தது.

“சரி சரி...திரும்பி வரலாம் தானே?” ஆறுதலாகச் சொல்லி விட்டாலும் நெளிந்து வளைந்து முன்னேறிய குறுகலான பாதையில் தான் நாதனின் பார்வை.

வாகனம் ஊர்ந்து செல்ல, உள்ளே இருந்தவர்களின் மனதில் இலேசான கிலியை உண்டு பண்ணியது, அச்சூழல்.

“பெரிசா எல்லாம் தனக்குத் தெரியும் எண்டு இருந்தா இப்பிடித்தான் நடக்கும்.” இலக்கியாவின் சீண்டலில் வேந்தன் முகத்தில் முறுவல் படர்ந்தது.

“திரும்பி வர நிறையத் தூரம் போக வேணும் போல!” நாதனுக்கும் யோசனை.

இடையில், முன்புறமிருந்து வந்த காருக்கு வழிவிட நன்றாக ஒதுங்கி வாகனத்தை நிறுத்தினான். அவர்கள் நிறுத்திய பக்கத்தில் கிடுகிடு சரிவு! உள்ளேயிருந்தவர்களில் பெரும்பான்மையினர் கண்கள் மூடிக்கொண்டன.

‘வாகனத்துள் அசைந்தாலே பிரண்டு விடுவோமோ’ யன்னலோரமிருந்த சுகுணாவின் விழிகள் இறுக மூடிக்கொண்டன. அருகிலிருந்த ராஜியின் மகளை இறுக அணைத்துப் பிடித்தும் கொண்டார்.

“இப்ப மட்டும் சின்னதா சறுக்கினாச் சரி!” ஆரூரன் முணுமுணுக்க, “நல்லதாக் கதைக்க வராது உனக்கு!” அவன் தாய் கோபிக்க, “அப்ப இண்டையான் நாள் சரி! இப்பிடியே மலைக்காட்டுக்க சுத்திப்போட்டு இருக்க வேண்டியதுதான். கனவு கண்டு கொண்டு காரோடினா இப்பிடித்தான்!” இலக்கியாவின் சீண்டல் வேறு இடைபுகுந்தது.

மீண்டும் வாகனத்தை ஓட்டத் தொடங்கியிருந்த வேந்தன் பார்வை ரியர் வியூ மிரரை உரச முதலே, “இலக்கி!” கண்டிப்போடு வெளிப்பட்டிருந்தது, கவியின் குரல்.

“உனக்கு எத்தின தரம் சொன்னாலும் விளங்காதா? மெண்டல் போல கதைக்கிற. முதல் எந்த நேரம் எப்பிடிக் கதைக்கிறது எண்ட சென்சும் இல்ல.” அவள் சீறலில் இலக்கியின் முகம் சுருங்கிப் போயிற்று. அதைப் பார்த்த வேந்தன் சட்டென்று ஓரமாக நிறுத்திவிட்டான்.

“தம்பி ஏன்? பின்னால் கார் ஒண்டு நிக்குது, நாம போனாத் தான் அதும்...” நாதன் சொல்லிக் கொண்டிருக்கவே பின்னால் திரும்பியவன், “அவா பகிடிக்குக் கதைக்கிறா எண்டளவுக்கு விளங்காமல் இருக்க நான் முட்டாளில்ல கவி. சோ...என்ன வச்சு நீங்க கொழுவல் படாதீங்க!” சொன்னவன் முகத்திலிருந்த இறுக்கத்தில் கவியின் முகம் சிறுத்திட்டு.

“அவேட கதைகளை எல்லாம் காதிலும் வாங்காதீங்க தம்பி.” பட்டென்று நாதன் சொல்ல, “நான் நல்லதுக்குத்தான் சொன்னன்.” இறங்கிவிட்ட குரலில் சொன்னாள் கவி.

“இதில என்ன நல்லது இருக்கு. அதோட இது எத்தினையாவது தடவையா என்ன வச்சு பிரச்சினை வருது!” அதே இறுக்கத்தோடு சொல்லிக்கொண்டே வாகனத்தை இயக்க, சங்கடத்தோடு வேந்தனில் நிலைத்திருந்த நாதனின் விழிகள் கண்டிப்போடு தமையன் மகளில் படிந்தது.
 

Author: ரோசி கஜன்
Article Title: அத்தியாயம் 33
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

ரோசி கஜன்

Administrator
Staff member
Nov 11, 2018
1,719
1,113
113
கவிக்கு அருகிலமர்ந்திருந்த மாறன் வேறு, “உனக்கும் எத்தின தடவை சொல்லியாச்சு, என்ன கதைக்க முதலும் யோசிச்சிட்டுக் கத. உப்புப் பெறாததுகளுக்கு எல்லாம் சீறுர கவி. நீ ஒண்ணும் சின்னப்பிள்ள இல்ல.” அடிக்குரலில் கடிந்து கொள்ள, கவியின் விழிகளில் நீர்ப்படலம். பட்டென்று வெளிப்புறம் திரும்பிக்கொண்டாள். அக்கணம், அமைதியாகிவிட்ட தங்கையில் பெரும் கோபம் தான் எழுந்தது.

முதல்நாள், கவியின் நடவடிக்கை சாதாரணம் என்றதைக் கடந்ததாக வேந்தனுள் படிந்ததும், ‘பயமா இருக்கு’ என்று இலக்கியா சொன்னதற்கும் தொடர்பிருக்குமோ’ என்ற அவன் எண்ணமும் சேர்ந்தே கவியிடம் அப்படிச் சீறலாகக் கதைக்க வைத்துவிட்டிருந்தது. அவனால் அதில் துளியும் பிழை காண முடியவில்லை. இருந்தாலும், அருகிலமர்ந்திருக்கும் நாதன் தொடங்கி பெரியவர்களுக்கு தன் செய்கை நிச்சயம் தர்மசங்கடம் உருவாக்கியிருக்குமே! கணத்தில் உணர்ந்திருந்தான். கவியிடம் அப்படிச் சொன்ன வேகத்தில் இலக்கியாவின் பார்வையைச் சந்தித்தவன் அவள் முகத்திலும் அதே அதிர்வைக் கண்டிருந்தானே!

வாகனமோட்டுவதில் கவனம் குவிந்திருக்க, “திரும்ப வேண்டிய இடத்தத் தவறவிட்டுட்டன் எண்டதில இருக்க நீங்க அப்பிடிக் கதைக்கக் கொஞ்சம்...” என ஆரம்பித்துவிட்டு, “சொறி கவி!” சொல்லிவிட்டிருந்தான்.

"இட்ஸ் ஒகே...நான் ஒண்டும் நினைக்கேல்ல!" முணுமுணுத்தாளவள். அதேவேகத்தில் திரும்பி தங்கையை ஒரு முறை முறைத்தாளே! அதையும் கண்டுவிட்டான், வேந்தன்.

'சொறி சொல்லாம இருந்திருக்க வேணும்.' அவன் எண்ணம் இப்படிச் சென்றால், முதலிரு விரல்களையும் அழுந்தப் பற்றி, தன் வாயில் அழுத்தமாக கோடிட்டுக் காட்டிக்கொண்ட இலக்கியாவை என்ன செய்வது?

'அவா இனி வாயே திறக்க மாட்டாவாம்.' சிடுசிடுப்போடு எண்ணிக்கொண்டவன், 'எல்லாம் இன்னும் ரெண்டு நாளைக்கு.' சமாதானமும் செய்துகொண்டான்.

அடுத்து வந்த அரைமணிநேரம் பெரும்பாலும் அமைதியே! வாகனம் வேறு அப்படியே போய்க் கொண்டிருந்தது. கடைசியில், கிடைத்த சிறு இடத்தில் திருப்பிக்கொண்டு வந்தால், அருகில் நிறுத்துமிடமெல்லாம் நிறைந்திருந்தன.

“எப்பிடியும் பதினைஞ்சு இருபது நிமிச நடை வரும், ஒண்ணும் செய்ய ஏலாது.” என்றுவிட்டு, கீழே, சற்றுத் தூரம் இறங்கியே வாகனத்தை நிறுத்தினான்.

என்னதான் பாதையின் இருமருங்கிலும் ஓங்கியுயர்ந்த மரங்கள் நின்றாலும் அதுவொரு உயர்ந்தமலைப்பகுதியே என்றாலும் வெயிலின் தாக்கத்துக்கொன்றும் குறைச்சலாக இருக்கவில்லை.

பாதையோரமாக இருந்த நடைபாதை வழியாக மெல்ல மெல்ல நடக்கத் தொடங்கினார்கள். முன்னால் சென்று கொண்டிருந்த ஆரூரன், வேந்தன் நாதனைப் பிடித்துவிடுவதுபோல் வேகமாக நடந்தாள் இலக்கியா. பின்னால் மற்றவர்கள்.

நடைபாதை, சில இடங்களில் வெறும் மண்பகுதியாகவும் அதேநேரம் நல்ல ஏற்றமாகவுமிருக்க, மூச்சு வாங்க வாங்க அவள் தம்மைக் கடந்த விதம் பார்த்த வேந்தனின் புருவங்கள் உயர்ந்தன. அவளோ, அதைக் கவனியாத பாவனையில் முன்னேற முயல, "என்ன இந்தக் கொஞ்ச நேரம் நடந்தே களைச்சுப் போனீங்க போல!" வெகு மரியாதையாகக் கடித்தானவன்.

சட்டென்று திரும்பினாள். "ஆங்! ஆரு களைச்சது? அன்ன நடை நடக்கிற நீங்களா நானா? முதலே ஒழுங்காப் பார்த்துத் திருப்பியிருக்க பக்கத்தில நிப்பாட்டி இருக்கலாம். இப்ப இவ்வளவு தூரம் இந்த ஏற்றத்தில நடக்க வச்சிப்போட்டு..." படபடத்துவிட்டவள் பார்வை அவனைக் கடந்தது. பின்னால், அவளையே பார்த்தபடி முகமிறுக வந்துகொண்டிருந்தாள், கவி. மறுநொடியே, வலக்கையால் வாயைப் பொத்திக் கொண்டாளிவள்.

“மனம் எத்தின தரம் சொன்னாலும் என்ர வாய் சொல் கேளாதாம்!” பொத்திய கையை எடாதே சத்தமாகச் சொல்லவும் செய்தாள்.

“ஹா...ஹா...” வேந்தன் சிரித்துவிட, நாதனும் ஆருரனுமே சேர்ந்து சிரித்தார்கள்.

அவன் சிரிப்பில் கணம் தங்கி விலகிய இலக்கியாவின் பார்வை கையிலிருந்த பச்சை அப்பிளில். தன்னையும் மீறித்தான் கை நீட்டியிருந்தாள். அவனும் கணமும் தாமதிக்கவில்லை. இரண்டெட்டு முன்னேறி கொடுத்து விட்டிருந்தான்.

“ஏனம்மா உன்னட்ட இல்லையோ? தம்பி சாப்பிட எடுத்தது.” நாதன் சொல்ல, “அதானேக்கா, பொறுங்க நான் பார்க்கிறன்.” தன் முதுகுப் பையை முன்னாலெடுத்தான், ஆரூரன்.

“அப்ப இந்தாங்க.” அவனிடம் நீட்ட, “சாப்பிடு...நீ சாப்பிட்டா நான் சாப்பிட்டது போல!” அவளுக்கு மட்டுமே கேட்கும் தொனியில் சொன்னவன், மின்னலாக கண்ணடித்துவிட்டிருந்தான்.

நெருங்கி வந்த நாதன், ஆருரனிடமிருந்து தன் முகமாறுதலை மறைக்க வேண்டுமே! “அத வேந்தனிட்டக் குடு!” பட்டென்று திரும்பி ஓட்டமாக முன்னேறினாள்.

“எடுத்த ஃபோட்டோக்கள் போதும் பிள்ள.” நாதன் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே மெல்ல மெல்ல பின்புறமாக நடந்தபடி அவர்களைத் தன் கைபேசிக்குள் அடக்கிக் கொண்டவள், “கவிக்கா, இதில நிண்டு ஒரு செல்ஃபி எடுப்பமா?” இடக்கைச் சரிவால் விரிந்த நகரைக் காட்டிக் கேட்டாள்.

“விருப்பம் எண்டா நீயே எடு!” வெடுக்கென்று பதில் வந்தது. மாறிவிட்ட முகத்தோடு முன்னால் நடந்தவளோடு ஓடி வந்து இணைத்திருந்தான், ஆரூரன்.

இப்படியே, வந்தவர்கள் ‘கிரிஃபத் ஒப்செர்வேட்டரி’ முன்னால் வந்து நின்று அப்பழமை வாய்ந்த ஆய்வகத்தை இரசித்தபடியே நுழைந்தார்கள்.

நுழைபாதை நிலத்தில், பால்வீதியில் கோள்களின் இருப்பு நிலையை விளங்க வைக்கும் வகையில் சூரியனும் கோள்களும் பெயர்த்தட்டில் பொறிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தபடி நகர்ந்தவர்கள், உயர்ந்து நின்ற கொன்கிரீட் சிற்பத்தைச் சற்றே தள்ளி நின்று இரசித்தார்கள்.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
Nov 11, 2018
1,719
1,113
113
“இதில இருக்கிற உருவங்கள் எல்லாம் ஆர்? ஒண்டு ரெண்டு ...” எண்ணிய ராஜியின் மகள், “ஆறு பேர் இருக்கினமே!” ஆர்வமாகக் கேட்க, “ஒகே கூகிள்...உங்கட வேலையையும் தொடங்குங்கோ!” நமுட்டுச் சிரிப்போடு சொல்லிவிட்ட இலக்கியா, “பச் சும்மா இருக்க மாட்டியா என்ன!” தன் வாயிலேயே ஒரு தட்டுப் போட்டு, சுற்றி நின்ற பெரியவர்கள் முகத்தில் முறுவலைக் கொண்டு வந்தது மட்டுமின்றி, கவி முகத்தில் கூட சிறு முறுவலை எட்டிப்பார்க்க வைத்தாள்.

வேந்தனுக்கோ, அவள் முகத்திலிருந்து பார்வையை அகற்றவே விருப்பமில்லை. அவள் விழிகளில் தெறித்த சீண்டலும் சரி, வார்த்தைகளில் பாவனைகளில் வெளிப்பட்ட நக்கல் நையாண்டியுமே, அவனை, அவள்பாலே இழுத்துக் கொண்டிருந்தது. அருகில் நிற்போரைக் கருத்தில் கொண்டு மனதைக் கட்டுப்படுத்துவதும் மிகப்பெரும் சவாலாகவே இருந்தது.

இருப்பினும், "நீங்களே சொன்ன பிறகு செய்யாமல் இருப்பமா என்ன?" சொன்னவன் விழிகளில், நகைப்போடு போட்டிபோட்டபடி நேசம் மின்னியது. அவன் அதை மறையாது வெளிப்படுத்திவிட, பட்டென்று தூபி நோக்கிப் பார்வையைத் திருப்பிவிட்டாள், இலக்கியா.

அவன் முகத்தில் முறுவல் விரிந்தது. “இதில ஒண்டு... கலிலியோ, ஆல்பர்ட் ஐயின்ஸ்டைன்... இந்தத் தூபி கட்டேக்க உயிரோட இருந்தாராம். அதனால அவரிட உருவம் இதில வரேல்லையாம் எண்டு வாசிச்ச நினைவு...” சொல்லிக்கொண்டே, பேசிக்குள், இலக்கியாவைப் பல கோணங்களில் பத்திரம் செய்வதில் முனைப்போடிருந்தானவன்.

“கிரேக்க வானியலாளர் ‘ஹிப்பார்கஸ்’, சூரியனை மையமாகக் கொண்ட பிரபஞ்ச மாதிரியை உருவாக்கிய ‘நிக்கொலாஸ் கொப்பர்நிக்கஸ்’, 17 ம் நூற்றாண்டின் அறிவியல் புரட்சியின் முக்கிய நபராக இருந்த ‘ஜோஹன்னஸ் கெப்லர்’, நமக்கு எல்லாருக்கும் தெரிஞ்ச செல்வாக்கு மிக்க விஞ்ஞானியும் அறிவியல் புரட்சியின் முக்கிய நபருமான ‘ஐசக் நியூட்டன்’ மற்றது கணிதம், வானியல், வேதியல் எண்டு எல்லாத்துறையிலும் சிறந்து விளங்கிய விஞ்ஞானி ‘ஜோன் ஹெர்ஷல்’, இவர்தான் வரைபடத்தையும் கண்டுபிடித்தார். இவையளோட, வானியல் அவதானிப்பு, நவீன இயற்பியல், விஞ்ஞான முறை, மற்றும் நவீன அறிவியல் எல்லாத்துக்குமான தந்தை ‘கலிலியோ’. இவே ஆறுபேரும் தான் இதில இருக்கிறது.” கைபேசியில் பார்த்தபடி முடித்து வைத்திருந்தான், ஆரூரன்.

“அடடா கூகிளுக்கு ஒரு அசிஸ்டன் ரெடி!” பட்டென்று சொல்லியிருந்தாள் அஜி.

"சித்தி நீங்களுமா? அங்க கீழயே பெயர்கள் போட்டிருக்குப் பாருங்க."

“என்னதான் சொல்லு, நீ அசிஸ்டன் வேல பார்க்கத் தொடங்கிற்றடா.” என்றவாறே, அஜிக்கு ஹை பை கொடுத்தாள், இலக்கியா. இப்படியே கதைத்தபடி, மாறி மாறி தனியாகவும் சேர்ந்தும் நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்கள்.

தூபியின் மேலே கரும் பச்சை நிறத்திலிருந்த கோளவடிவை பேசிக்குள் உள்ளடக்கிக் கொண்ட இலக்கியா, அருகில் நின்ற ஆரூரனிடம், “இதைப் பார்த்தா வான வெளியில சூரியன மையமாகக் கொண்ட கோள்கள்ட அமைப்பு, சுற்றுப் பாதை போல இருக்கே!” என்றாள்.


“நானும் அதைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறன்.” ஆரூரன் சொல்ல, “ சூரியன மையமாகக் கொண்ட கோள்களின்ட கட்டமைப்போட வானியல் ரேகைகள், கிரகணம் என்ற முக்கியமான அம்சங்களையும் கொண்டதுதான் அந்த வளையங்கள். தொள்ளாயிரம் பவுண்ட் நிறையாம்.” இலக்கியாவின் மறுபுறமிருந்து ஒப்பித்தவனைத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாளவள். சற்று முன்னர் பார்க்கையில் தள்ளி நின்றிருந்தானே!


“நீங்கதானே வேலையைத் தொடங்கச் சொல்லி இருக்கிறீங்க. அதுதான் சின்னதா சந்தேகம் வந்தோன்ன நமக்குத் தெரிஞ்சதுகளச் சொல்லலாம் எண்டு...” கொடுப்புக்குள் நகைத்தபடி வெளிப்படையாகவே வம்பிழுத்தான், வேந்தன்.


“உங்கள...” வாய்க்குள் முணுமுணுத்தவள், தூபியின் முன்னாலிருந்த வளைய உருவைப் பார்க்கும் வகையில் நகர, விடாது நகர்ந்தவன், “அதோட, தொலைநோக்கி கண்டு பிடிக்கிறதுக்கு முதல், வானியல் நிலைகள் பற்றின முடிவுகள எடுக்க வானியலாளர்கள் இதைத்தான் கருவியாப் பயன்படுத்தினவேயாம்.” என்றதும், “தம்பிக்கு உண்மையாவே எல்லாம் தெரிஞ்சிருக்கு!” வியந்தார், நாதன்.


“ஐயோ சித்தப்பா, நேற்றிரவு இருந்து கூகிளில வாசிச்சிருப்பார். போகப்போற இடத்தப் பத்தித் தெரிஞ்சு கொள்ள வேணும் எண்டெல்லாம் இல்ல, நமக்குச் சொல்ல வேணும், நீங்க இப்படி ஆச்சரியப்பட வேணும் எண்டு!” விழிகள் நகைக்க நகைக்க சொல்லிக்கொண்டு வந்தவள் தன்னையும் மீறித்தான் சற்றே எட்டிப் பார்க்க, அவளை ஏமாற்றாது நெருப்புப் பார்வையை வீசியபடி நின்றிருந்தாள், கவி.

“அவையல் கிடக்கினம் தம்பி, நீங்க இது என்ன எண்டு சொல்லுங்க.” சுகுணாவே கேட்டுவிட, “எக்குவட்டோரியல் சண்டயல் (equatorial sundial) ஆன்ட்டி” என்று ஆரம்பிக்கவே, “இந்த வளையத்தில பொறிச்சு இருக்கிற அடையாளங்கள் ஒருவருடைய நிழலிட போக்கை அனுமானிக்க உதவுமாம். சூரியன வச்சு நேரத்தைக் கணிக்க இது உதவுமாம். சுருக்கமா சொன்னா பூமிக்கான டைம் கீப்பர் இவர்தான்.” படபடவென்று குறுக்கிட்டிருந்தான், ஆரூரன்.

“பார்ரா! அசிஸ்டன் வேகம் கூடியவரா இருக்கிறாரே! இவர் இனி எங்களுக்கு வேணாம். நாங்க ஆருரனையே வச்சிருக்கிறம்.” இலக்கியாவேதான்.

“இவைக்குப் பொறாமை அண்ணா, காதிலும் வாங்காதீங்க!” முறுவலோடு சொன்னான், ஆரூரன்.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
Nov 11, 2018
1,719
1,113
113
“ச்சே ச்சே! இப்ப இவா என்ன சொன்னா? நான் இங்க கவனமா நிண்டதில ஒண்டும் கேட்கேல்ல.” பதிலுக்கு வேந்தன் சீண்ட, “ஆங்! உங்கள இப்பிடியே நடையைக் கட்டச் சொன்னம்.” என்று அவர்கள் கலகலத்துக்கொண்டு நிற்க, பார்த்து நின்ற கவியின் மனம் தான் எரிந்திட்டு. இப்பயணத் தொடக்கத்திலிருந்து அவளல்லவா அவனோடு இப்படிக் கலகலத்துக்கொண்டு வந்தவள். இன்று? ஒரு போதுமில்லாமல் வேந்தன் இலக்கியாவோடு சேர்ந்து நின்று பகிடிக் கதைகள் கதைத்துச் சிரிப்பதைப் பார்த்தவளுக்கு, சற்று முதல், தான் அப்படிச் சொன்னதற்காக வேண்டுமென்றே செய்கிறார்களோ என்ற ஐயம் வேறு முளைத்திருந்தது.

“ம்ம் சரி, இனி உள்ள பார்ப்பமே... நல்ல சனமாவும் இருக்கு.” நகர்ந்தார் நாதன்.

“உலகத்திலேயே நிறையச் சனம் வந்து போற ஆய்வு மையம் இதாம். நிறைய பிரபல்யமான படங்களின்ட காட்சிகள் படமாக்கிய இடமிது!” சொல்லிக்கொண்டே, முதல் ஆளாக நடந்தான், ஆரூரன்.

அவனை முந்திக்கொண்டு படிகளில் துள்ளியேறிய இலக்கியா, “எல்லாரும் அப்பிடியே மெல்லவா வாங்கோ பாப்பம்.” புகைப்படங்களைத் தட்டினாள். பின்புறம் எழுந்து நின்ற மலைத்தொகுதிகளோடு அவர்கள் நடந்து வரும் காட்சி வெகு அழகாக அவள் கைபேசிக்குள்!

மெல்ல... வேந்தனை மட்டுமாகச் சில கிளிக்குகளில் அடக்கிக் கொண்டவள் அவர்கள் நெருங்கி வரவே சகோதரனோடு சேர்ந்துகொண்டாள்.

நுழைந்ததுமே முதலில் தென்பட்டது பெரிய கிணறு போன்றதொரு அமைப்பே. சுற்றி நெருக்கமாக நின்ற மக்கள் சிலர் விலகிக்கொள்ள நெருங்கிப் பார்த்தார்கள்.

“ஃபோக்கோ பெண்டுலம் (Foucault pendulum)” வேந்தன் குரல் பின்னாலொலிக்கத் திரும்பிப் பார்த்துவிட்டுச் சரேலென்று திரும்பிவிட்டாள், இலக்கியா. குடும்பத்தினர் எல்லோருமே ஒன்றாகத்தான் நின்றிருந்தார்கள். அச்சிறு இடத்தில் ‘சின்னதாகவேனும் உணர்வுகளை முகத்தில் வெளிகாட்டிவிட்டால்’ என்ற தவிப்பும் நுழைந்து கொண்டது, ‘இப்ப எனக்குப் பின்னாலதான் வந்து நிக்க வேணுமா?’ என்ற சிணுக்கதோடு!

அவள் விழிகளின் தவிப்பை உணர்ந்திருந்தாலும் அசையவில்லை, அவன்.

“மணிக்கூடு இல்ல என்ன?” ராஜியின் மகள். குழிக்குள் வட்டக் கடிகார அமைப்புப் போலிருந்தாலும் ஒன்றிலிருந்து நாற்பத்தி நான்கு வரை எண்கள் எழுதப்பட்டிருந்தன.

“உலகில உள்ள மிகப்பெரிய விஞ்ஞானக் கருவிகளில ஒண்டான இத, பூமி தன் அச்சில் சுழலுறதுக்கான ஆதாரமாகச் சொல்லலாம்.” அவன் சொல்வதைக் கேட்டபடி எல்லோர் பார்வையும் மேலேயும் கீழேயும் சென்று வந்தன.


மேலிருந்து கம்பியில் இறங்கிய பெண்டுலம் அங்குமிங்குமாக அசைந்தவண்ணமிருந்தது.

“மேல உள்ள சித்திரம் 1935 ல கீறினதாம்.” தகவல் சொன்னான், ஆரூரன். பெண்டூலத்தின் மேலே இருந்த சித்திர வேலைபாடுகள் அவர்களின் பார்வையை மட்டுமில்லை, புகைப்படக்கருவிகளினதும் கைபேசிகளினதும் கவனத்தை முழுதாய்த் தன்பக்கமிழுத்தவண்ணம் இருந்தன.

பயணம் ஆரம்பித்த நாளிலிருந்து மகிழ்வில் நிறைந்திருந்த கவியின் இதயம், இன்று காலையிலிருந்து அமைதியிழந்து தவிப்பதில், இதையெதையுமே இரசிக்க முடியவில்லை. சுவாரசியமே இல்லாது கமராவுக்கு மட்டுமே வேலை கொடுத்துக் கொண்டிருந்தாள். எல்லோருமே அவள் இறுக்கமுணர்ந்து தம் பேச்சினுள் இழுக்க முயன்று முயற்சி புரிந்தாலும் மாட்டிக்கொள்ளவில்லை, அவள்.

ஒரு சிறு சந்தர்ப்பம் கிடைத்துவிட்டாலே போதும் வேந்தனிடம் நாலு வார்த்தைகள் கதைத்துத் தன் மனப்பாரத்தை இறக்கி வைத்து விடுவாள்.

பகிடியே என்றாலும் அவனைச் சீண்டுவதைப் பொறுக்க முடியாதுதானே தங்கையைக் கண்டித்தாள்! அது பார்த்தால்? தன் குடும்பமேயென்றாலும் 'சொறி' என்றொரு வார்த்தையை உதிர்த்து விட்டாலும் அவர்கள் முன்னால் அவன் அப்படிச் சீறியதை கொஞ்சமேனும் ஏற்கவோ நியாயப்படுத்தவோ முடியாதிருந்தது, அவளால்.

குடும்பத்தின் ஆரவாரத்திலிருந்து சற்றே தள்ளியே நின்றிருந்தவள் பார்வை மட்டும் வேந்தனையே தொடர்ந்து கொண்டிருந்தது.

"இந்தப் பக்கமா அந்தப்பக்கமா?" வினவினான் ஆரூரன். அங்கிருந்து வல இடப்பக்கமாக இரு கண்காட்சிக் கூடங்களிருந்தன.

" முதல் இந்தப்பக்கமாப் பார்ப்பம்." மகனைப் பிடித்துக்கொண்டு வலப்புறமாக (Hall of the Eye exhibits) நகர்ந்தான், மாறன்.

அங்கே, நடுநாயகமாக சோலார் தொலைநோக்கியிருக்க இருபுறமும் விண்வெளி சம்பந்தமான விபரங்கள் படங்களோடிருந்தன.

"படிக்கிற பிள்ளையளுக்கு ஆர்வமா இருக்கும். ஆருரனும் இலக்கியும் தான் இங்க வரவே வேணும் எண்டு நிண்டவை." என்றபடி வந்தார் சுகுணா.

“த டெர்மினேட்டர் மற்றது ட்ரான்ஸ்போமர்ஸ் படங்களில பார்த்த இடத்த இப்பிடி வரேக்கப் பார்ப்பமே எண்டு நினைச்சன்.” என்றான் ஆரூரன்.

இப்படி இவர்கள் கதைத்துக்கொண்டு நிற்க, அங்கே ஒருபுறமாகவிருந்த கம்பிகள் இல்லாது மின்சாரத்தைக் கடத்தும் ‘மின்னல் தீப்பொறிகள்’ (Tesla Coil) உள்ள பகுதி நோக்கியிழுத்த மகனோடு மாறன் நகர, மற்றவர்களும் சேர்ந்து கொண்டார்கள்.

அடுத்து, அதற்கு நேர் எதிரே இருந்த ‘கமரா ஓப்ஸ்கியுரா’ (Camara obscura) அறைக்குள் நுழைந்தார்கள்.

மெல்லிருட்டில் இருந்த அறை நடுவில் வட்டவடிவ மேசைபோலிருந்த திரையில் அவ்வாய்வு கூடத்தின் வெளிப்புறக் காட்சி, வாகனங்கள் செல்லும் தெருவென்று தெளிவாகவே தெரிந்தது.

“மேல இருந்து படமெடுத்துப் போடினமோ!?” ஆச்சரியத்தோடு கேட்டாள், ராஜியின் மகள்.

“இல்லடி, கூரையிலிருந்த துளைவழியா வெளில உள்ள காட்சிகளை உள்ள அனுப்புற வேலைய, கூரைக்கு மேல இருக்கிற கண்ணாடி பொருத்தப்பட்ட சின்ன சுழலும் கோபுரம் செய்யுது சரியோ.” ஆரூரன் விளக்க, “எப்படி என்ர ட்ரைனிங்?” எதிரே நின்ற இலக்கியாவிடம் கேட்டான், வேந்தன்.

“ஓமோம் பெரிய கெட்டித்தனம்!” வாய்க்குள் முணுமுணுத்துவிட்டு பட்டென்று வெளியில் வந்து விட்டாளவள். ‘எல்லாரும் சுற்றி நிக்க என்ன பார்வை வேண்டிக்கிடக்கு!’ மனதுள் முணுமுணுத்தாலும் அவள் பார்வை அவனை நோக்கித் திரும்பிற்று. அவன் பார்வை இவளில் தானே! புருவம் உயர்த்தி விசாரித்தான். பட்டென்று நகர்ந்துவிட்டவள் ஆர்வத்தோடு எல்லாவற்றையும் பார்த்துச் செல்ல, இளையவர்களும் அவளோடு நகர, கவி மட்டும் சுவாரசியமின்றிப் பார்த்தபடி மறுபுறமாக நகர்ந்தாள்.

"கவிக்கா மௌன விரதமாம்!" ஆரூரன் சொன்னது கவியின் காதுகளுக்குச் சென்று அவள் பார்வையில் கோபத்தைக் கசிய வைத்தது. இலக்கியாவோ திரும்பியும் பாராது அங்கிருப்பவற்றை கைபேசியினுள் அடக்கிக் கொள்வதில் கண்ணாகவிருந்தாள்.

"ஐயோ கேட்டுட்டு!" மும்முரமாக ரொக்கட் பற்றிய விரங்களில் ஒன்றை வாசிக்கத் தொடங்கிவிட்டான், ஆரூரன்.