• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அத்தியாயம் - 36

ரோசி கஜன்

Administrator
Staff member
மறுநாள், பயணத்தின் இறுதிநாள்!

“என்ன தம்பி நேரத்துக்கே ரெடியாகிட்டிங்க? டீ கூட குடிகேல்ல, இங்க வந்து இருக்கிறீங்க!” என்றபடி வந்த நாதன், “சரி சரி கதைச்சிட்டு வாங்க.” அவன் அலைபேசியில் கதைத்துக்கொண்டிருப்பதைக் கண்டுவிட்டுக் கன்டீன் பக்கம் நடந்தார்.

முதல் நாள் அறைக்குப் போன வேகத்தில் படுத்துறங்கிப் போனான், வேந்தன். அதுவே நேரத்துக்கே எழுந்தும் விட்டான். மெல்லத் தயாராகி வெளியில் வந்தவன் அமைதியாகவிருந்த விடுதி வரவேற்பிலமர்ந்து முக்கியமான அலவலக வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அப்பால் நகர்ந்துவிட்டாலும் நாதனின் பார்வை வேந்தனில் தானிருந்தது. இவர்களோடு தங்கிய போதெல்லாம், இருந்து சிறிதுநேரம் கதைத்து மறுநாள் பயணம் விபரங்களை ஆலோசித்துவிட்டே தூங்குவான். நேற்றோ, உள்ளிட்ட வேகத்துக்குக் குளித்துவிட்டுப் படுத்துவிட்டான்.

நாதனுக்கும் மனதில் வருத்தம்தான். தான் பார்த்த பார்வை அவனுக்கு விளங்கிவிட்டதென்று புரிந்ததில் வந்த வருத்தமது. அவரையும் மீறித்தான் அப்படிப் பார்த்திருந்தார். அவன் அறிமுகமாகிய நாளிலிருந்த தம்மில் ஒருவனாக அவனைப் பிடித்திருந்தது. ‘அப்படியிருக்க...’ தலையை உலுக்கிக்கொண்டவர் அவன் கைபேசியை வைக்கவும், “தம்பி அறையில கோப்பி இருக்கு குடிச்சிட்டு வாங்கோவன்.” என்றபடி வந்தார்.

“கன்டினில குடிச்சிட்டன் அங்கிள்." என்றவன், கேட்டவர் முக மாறுதலை உணர்ந்ததும், "இரவு நேரத்துக்கே தூங்கிட்டன் தானே, விடியப்புறமே எழும்பிட்டன் அங்கிள். உங்களக் குழப்ப வேணாம் எண்டு இங்க வந்திருந்தன். கொஞ்சம் வேலைகள் பார்த்தன்." சமாதானமாகச் சொன்னபடி கரமிரண்டையும் தலைக்குப் பின்னால் உயர்த்திக் கோர்த்துநெட்டி முறித்தான்.

"அப்பச் சரி." அவன் குரலில் எந்தவித பேதத்தையும் உணராத நாதன் நிம்மதி கொண்டார்.

“எல்லாரும் வர சாப்பிட்டுட்டு வெளிக்கிடுவம்.” அவனருகில் அமர்ந்து கொண்டார்.

"ஓம், ஏழுக்கு வெளிக்கிட்டாலும் போதும்." என்றவன், "இண்டைக்குப் பின்னேரம் ஹோட்டலில் விட்டுட்டு நான் இந்த வாகனத்த கொண்டு போறன். உங்களுக்கு மிச்ச அஞ்சு நாட்களுக்கும் பெரிய வேன் ஒண்டு ட்ரைவரோட அரேஞ் பண்ணிட்டன். நாம அங்க போக அவர் வந்து நிப்பார்." என்றான், கணனியில் பார்வை இருக்க.

“பெரிய வேனெல்லாம் எதுக்குத் தம்பி? இதே போதும்."

“எப்பிடிப் போதும், இன்னும் நாலு பேர் வருகினம் தானே?".

"அது சமாளிக்கலாம் தம்பி."

"எனக்கு இதில ஒரு பிரச்சனையும் இல்ல அங்கிள்." என்றவனிடம், தொண்டைவரை வந்ததைக் கதைக்க முயலாது விழுங்கிக்கொண்டார், நாதன்.

அந்நேரம், “நாங்க எல்லாரும் ரெடியாகிட்டம் இங்க என்ன ரெண்டு பேரும் தனியா இருந்து கதைக்கிறீங்க?" என்றபடி வந்தான் ஆரூரன். பின்னால் மற்றவர்கள்.

"அப்ப சாப்பிட்டுட்டு வெளிக்கிடுவம்." எழுந்த நாதன் வந்தவர்களோடு நடக்க, கவியின் பார்வையைக் கவனமாகத் தவிர்த்துவிட்டெழுந்த வேந்தன் பார்வை கைபேசியில்.

காலை கண்விழித்ததும் இலக்கியாவுக்குக் குறுஞ்செய்தி தட்டிவிட்டே தயாராகி வந்திருந்தான்.

அதற்குப் பதில் வந்திருந்தது, 'என்ன நேரத்துக்கே கோழி கூவீட்டு?' என்று. இப்போதுதான் பார்த்தான்.

உதடுகளில் முறுவல் படர, ‘எல்லாரும் வந்திட்டினம் எங்க இன்னும் காணேல்ல?' தட்டிவிட்டபடி நடந்தான். அதையேதான் நாதனும் கேட்டார்.

“அவையள் எப்பவும் போல கடைசி!" ஆரூரன் சொல்ல, "கவின் இப்பத் தான் எழும்பினான் அண்ணா. இலக்கிதான் வெளிக்கிடுத்திறா. வந்திருவினம்." என்றான், மாறன்.

எல்லாரும் தத்தமக்கு வேண்டியதை வாங்கி உண்ணத் தொடங்கிய பின்னரே அஜி கவினோடு வந்தாள், இலக்கியா. எதிர்பார்த்திருந்தவன் கண்களோடு மின்னலாகப் பார்வை உரசிவிட்டு நகர, அவன் முகம் சுருங்கியது. அவள் விழிகளிரண்டும் அந்தளவுக்கு வீங்கிக் கிடந்தன.

'என்ன நடந்தது ஏன் முகமெல்லாம் வீங்கியிருக்கு?' இருக்கையில் இருக்க முதலே முனகிய கைபேசியைப் பார்த்தவள் இதழ்களில் மெல்லிய முறுவல்! அவளையே பார்த்திருந்தவன் அதை உள்வாங்கிக் கொண்டான்.

"அதெல்லாம் ஒண்ணுமில்ல. முழுகீட்டுப் படுத்ததாக்கும். ஒரே கண்ணெரிச்சல்!' தட்டி அனுப்பினாள்.

"அத வச்சிப்போட்டுச் சாப்பிட்டுட்டு வெளிக்கிடுங்க!" நாதன் அவளுக்குத்தான் சொன்னார். அதன் பிறகு, விரைவில் அன்றைய நாள் பயணத்தை ஆரம்பித்தார்கள்.
 
Last edited:

ரோசி கஜன்

Administrator
Staff member
“முதல் லாண்ட்ஸ் எண்ட் போயிட்டு கோல்டன் கேட் போவம் என்ன?” கேட்டுக்கொண்டே CA -99 N நெடுஞ்சாலை வழியாக வாகனத்தைச் செலுத்தினான் வேந்தன்.

“கிட்டத்தட்ட ஐஞ்சு மணித்தியாலம் பிடிக்கும் என்ன?” மாறன் கேட்க, "இடையில இறங்கி ஏற...எப்பிடியும் ஒரு மணியளவில போயிரலாம்." என்றான், வேந்தன்.

இலக்கியாவுக்கோ, “நான் கொஞ்சத் தூரம் ஓடவோ?” கேட்க ஆசையாக இருந்தாலும் வாய் திறக்கவில்லை. பின்னிருக்கையில் அமர்ந்து வெளிப்புறத்தைப் பார்த்திருந்தாள்.

சுற்றுலாவை வெற்றியாக முடித்த மகிழ்வோடுடனான கலகலப்பு வாகனத்துள்!

"இதுக்கெல்லாம் முக்கிய காரணம் வேந்தன் தான்." அவனுக்கருகில் அமர்ந்திருந்த நாதன். முதல் நாள் அவன் மனதை நோக வைத்துவிட்ட உணர்வை இப்படிச் சரி போக்கிட முனைந்தார்.

"இதையே எத்தின தடவைகள் சொல்லுவீங்க அங்கிள். நான் இதில ஒண்ணுமே செய்யேல்ல." முறுவலோடு சொன்னானவன்.

"அதானே சித்தப்பா. நாங்க ஒரு நாள் கூட நேரம் சென்று வெளிக்கிடேல்ல. எங்கயும் போட்ட திட்டத்த மீறி நிண்டு பிந்தேல்ல. அதனாலதான் இந்தச் சுற்றுலா நாம நினைச்ச மாதிரி நடந்ததது. அதைவிட்டுட்டு..." பட்டென்று ஆரம்பித்திருந்தாள், இலக்கியா.

அதே கையோடு, "கடவுளே! என்ர வாய் ஒருநிமிசம் சொல்கேட்டு இருக்காதாம். நான் உங்களப் பற்றி எதுவுமே சொல்லேல்ல சரியோ!" கையெடுத்துக் கும்பிட்டவளை, "உன்ன ..." என்றபடி பார்த்தான் மாறன். கவி மட்டும் திரும்பவேயில்லை. அருகிலிருந்த தாயின் தோளில் தலை சாய்த்துக்கொண்டாள்.

“ஹா...ஹா...நீங்க என்னைப் பற்றி தாராளமா என்னவும் சொல்லலாம். கேட்க ஆவலா இருக்கிறன்.” பட்டென்று சொல்லிவிட்ட வேந்தன், “இல்ல, காசு தந்து வாகனம் எடுத்திருக்கிறீங்க. சேர்விஸ் எப்படி எண்டு சொல்லுங்க, கேட்கிற கடைமை எனக்கு இருக்கு.” விழிகள் நகைப்பில் சுருங்கச் சொன்னான்.

“ஹா...ஹா...அப்படிச் சொல்லுங்கோ அண்ணா!” ஆரூரன் இடையிட, “கடவுளே! நான் வாய மூடிட்டன்.” மீண்டும் சொன்னாள், இலக்கியா.

கவிக்கு, தங்கையும் வேந்தனுமாகச் சேர்ந்து தன்னைக் கேலி செய்வதாகப்பட்டது. சிரமத்தோடு தன்னை அடக்கிக்கொண்டாள்.

வாகனம் ஓட்டிக்கொண்டிருந்தவனோ, அப்படிச் சொன்னவளை ஒரு தடவை திரும்பிப் பார்த்துவிட்டு, “அதோட உங்களோட வந்ததில என்ர சுயநலமும் இருக்கு அங்கிள்." சொன்னவன் விழிகள் மின்னலாக ரியர் வியூ மிரரில்! இலக்கியின் பார்வையும் அங்கேதானிருந்தது. நேசத்தோடு வந்த அவன் பார்வையில் பதற்றம் தொத்திய அவள் பார்வை மோதி விலகியது. மறுபுறமோ, நாதன், மாறன் மட்டுமல்ல, மூத்த மகளில் படிந்துவிலகிய சுகுணாவின் பார்வையும் வேந்தனில்!

'சொல்லப் போறாரோ!' இலக்கியாவின் மனம் பலமாகவே அடித்துக்கொண்டது.

“அதொண்டுமில்ல அங்கிள், எனக்குமே இப்பிடியான பயணங்கள் நல்ல விருப்பம். அதான் சந்தர்ப்பம் கிடைச்சத்தும் வெளிக்கிட்டுட்டன். என்ர வாழ்கையில மறக்கவே முடியாத பயணம் இது! இனி இப்பிடி எத்தினை பயணங்கள் செய்தாலும் இந்த ரெண்டு கிழமையும் எனக்கு மிக மிக விசேசம் அங்கிள்." என்று சொல்லி, இலக்கியின் மூச்சைச் சீராக்கினான் என்றால் விழிகளைக் கலங்கவே வைத்துவிட்டான். பட்டென்று வெளிப்புறமாகத் திரும்பிவிட்டாள்.

"அதான் உங்களோட சேர்ந்து உலகமே சுத்தப் போறமே என்ன கவிக்கா? இவர லேசில விடுறதில்ல எல்லா." ஆரூரன்.

"பின்ன! அவரே ஓடினாலும் இழுத்துப் பிடிக்கிற வழி எங்களுக்குத் தெரியாதா என்ன?" என்ற கவி, அவனைப் பார்க்கிறாள் என்று தெரிந்தாலும் நேரே பாதையில் பார்வையை பொருத்தியிருந்தான் வேந்தன்.

மனதுள் எரிச்சல் உருவாகினாலும் பதில் சொல்லாது மெல்லிய முறுவலோடு அந்தப் பேச்சைக் கடக்கவே நினைத்தான்.

"உங்களுக்கு நிறைய சொந்தக்காரர் இங்க இருக்கினம் எண்டா முதலே வந்திருப்பீங்களே!" நாதனிடம் கேட்டுப் பேச்சைக் கத்தரித்தும் விட்டான்.

"ஓம் தம்பி." நாதன் சொல்ல, "அஜிச் சித்தி ஆக்கள் இதான் முதல் முறை."

"சின்னப்பிள்ளைகளுக்கும் இதான் முதல் தடவை." ஆளாளுக்குச் சொல்ல, "போனமுறை வந்த நேரம் ரெட் வூட் ஃபொரஸ்ட் ( Redwood Forest CA )போனமே நினைவிருக்கா கவிக்கா?" முதல் நாளிலிருந்து தனக்குப் பாராமுகம் காட்டும் தமக்கையோடு கதைக்க முனைந்தாள், இலக்கியா.

"ம்ம்" என்றதோடு நிறுத்திவிட்டாள், அவள். இலக்கியின் பார்வை ரியர் வியூ தொட்டு வந்தது.

“இன்னும் ஐஞ்சு நாட்களுக்கு நிக்கப் போறம் தானே, வேணும் எண்டா போகலாம்." என்ற ஆரூரன், "அண்ணா போவமா?" வேந்தனிடம் கேட்க, சிரிப்போடு அவனைப் பார்த்தார், நாதன்.

"விட்டா உங்களைத் தங்களோட தங்க வச்சிருவினம்." ரதி சொல்ல, முறுவலோடு பார்த்துவிட்டு, "இல்ல ஆரூரன், நிறைய வேலைகள் இருக்கு?" என்றவன், "நீங்க போய்ப் பாருங்க, நான் டிரைவரிட்ட சொல்லுறன். அவருக்கு இங்க மூலை முடுக்கெல்லாம் தெரியும்." அவன் சொல்லி முடிய முதலே தலையை நிமிர்த்தியமர்ந்தாள் கவி.

"டிரைவரா?" கவி தான்.

"நாளையில இருந்து அஞ்சு நாளைக்கும் வேற வாகனம் புக் பண்ணியிருக்கிறார், டிரைவரோட. நான் இதே போதும் எண்டாலும் கேட்கேல்ல." என்றார் நாதன்.

"அப்ப நீங்க திரும்பி கனடா போகேல்லையா?" ஆரூரன் தான்.

"போக வேணும். அம்மா ஆக்களோட கொஞ்சநாள் நிண்டிட்டு."

அதன் பின்னர் நாதனும் அவனும் பொதுவாகக் கதைத்துக்கொண்டு வந்தார்கள்.

போகப்போக வெயிலும் ஏறியது. அதுபோலவே வெளிப்புறமும் பச்சை தொலைத்து வந்ததை அவதானிக்க முடிந்தது. சருகாகிக் கிடந்த சுற்றத்தில் பாதையின் இருமருங்கிலும் வரிசை தவறாது தெரிந்த அடர் பச்சை மரங்கள் வெகு அழகாக இருந்தன, குடைகள் போல்!

“இதெல்லாம் என்ன மரங்கள்? இந்தக் காய்வனவில இது மட்டும் பச்சையா இருக்கே!” வியப்போடு கேட்டாள் அஜி.

“இது...” வேந்தன் தொடங்க, “ஆமண்ட்.( Almond )” முடித்தான் ஆரூரன்.

“கூகிள், அஸிஸ்டனோட சேர்ந்து வேலையைத் தொடங்குங்க.” இலக்கியா சொல்லி முடிக்க, “நீங்க எப்படா சொல்வீங்க எண்டுதான் பார்த்துக் கொண்டிருந்தம் என்ன ஆரூரன்?” வேந்தன் சீண்டிக்கொண்டே கண்ணாடிவழியே பார்த்தான்.

“அதான் அதான்.” என்றுகொண்டே பின்னால் திரும்பிப் பார்த்த ஆரூரன், இலக்கியா பழிப்புக் காட்டியதைக் கண்டுவிட்டு அவள் பார்வையைத் தொடர்ந்து ரியர் வியூ மிரரைப் பார்க்க, பார்வையை விலக்கிவிட்டிருந்தான், வேந்தன். இருந்தாலும் முகத்தில் நல்ல சிரிப்பு.
 
Last edited:

ரோசி கஜன்

Administrator
Staff member
“இப்ப நாம நிண்டிட்டு வந்த பேக்கர்ஸ்ஃபீல்ட்ல( Bakersfield ) இருந்து ரெட் பிளஃப் எண்ட இடம் வரை...450,000 ஏக்கருக்கு மேல ஆமண்ட் மரங்கள் தான்." வேந்தன் தான்.

“பொறுங்கோ அண்ணா நானே சொல்லுறன், கலிபோனியா மாகாணத்திட முக்கியமானதும் அதிகளவுமான உற்பத்தி ஆமெண்ட் தான். அதோட அமெரிக்க உணவு ஏற்றுமதியில(food export) ஏழாவது இடமும் இதுக்குத்தான்.” கைபேசியைப் பார்த்தபடி ஒப்பித்தான் ஆரூரன்.

“இதெல்லாம் எங்களுக்குப் பார்க்கத் தெரியாது என்ன?” அவன் முதுகிலொன்று போட்டான் மாறன்.

“ஐயோ சித்தப்பா! இந்தப் பயணம் தொடங்கியதில இருந்து ஒராள் இதைத்தான் செய்யிறார், உங்களுக்குத்தான் விளங்கேல்ல! ஆரூரன் இப்ப நமக்கு முன்னால ஃபோனில பார்த்தான், இவர் முதல் நாளிரவு பார்த்தத இங்க சொல்லிக்கொண்டு இருக்கிறார்.” குதூகலத்தோடு இடையிட்டாள் இலக்கியா.

“ஹா..ஹா.. நாங்க அதைச் சரி செய்தமே. இல்லையோ என்ன ஏதெண்டு விபரம் தெரியாமல் சும்மா பார்த்துக்கொண்டு போயிருப்பீங்க!” சீண்டினான் வேந்தன்.

“பெரிய கெட்டித்தனம் தான்.” என்றவளை, பட்டென்று திரும்பிப் பார்த்திருந்தாள், கவி.

“இல்ல...இனி இந்தப் பயணத்தில் பார்த்த இடங்கள மறக்கவே மாட்டம் தானே. எல்லாத்துக்கும் ஒரே காரணம் அப்பிடியே ஆணி அடிச்சது போல வேந்தன் சொன்ன விளக்கங்கள்தான் தான் எண்டு நல்லதாத்தான் சொல்ல வந்தன்.” உதடுகளுள் நெரிந்த முறுவலோடு சொல்லிவிட்டு பார்வையை வெளிப்புறமாகத் திருப்பிவிட்டாள், இலக்கியா.

அதேவேகத்தில், “வேந்தன் இறங்கிப் பார்ப்பமா? ஆமெண்ட் எல்லாம் காச்சுக் கிடக்கு!” கேட்கவும் செய்தாள்.

“அதெல்லாம் சரிவராது, சும்மா இருங்க. துவக்கு வச்சுச் சுட்டாலும் கேட்க ஆளில்ல. பெரிசா ஆள் நடமாட்டமும் இல்ல.” சுகுணா சொல்லிக்கொண்டிருக்கையிலேயே அருகிலிருந்த மண் ஒழுங்கையில் வளைத்து நிறுத்தியிருந்தான், வேந்தன்.

“எல்லாரும் இறங்கிப் பார்க்கலாம்.” என்றபடி தானும் இறங்கினான்.

“ஐயோ இந்த வெயிலுக்கையா?” வாகனத்தின் கதவைத் திறக்க அனலடித்தது. கவி தலையை உள்ளே இழுத்துக்கொண்டாள்.

“இறங்குங்கோ அக்கா ஃபோட்டோ(photo) எடுப்பம்.” இலக்கியா எழுந்து வர, தங்கையை முறைத்தாளவள்.

“சரி சரி டப்பென்று இறங்கி ஏறுவம்.” எழுந்தார் சுகுணா.

சில நிமிடங்கள்தான், எல்லாரும் இறங்கி ஆமெண்ட் தோட்டப் பின்னணியில் நின்று சில புகைப்படங்களை எடுத்துவிட்டு ஓடிவந்து ஏறிக்கொண்டார்கள்.

“எங்க வேந்தன்...” கேட்டுக்கொண்டே நாதன் ஏறியமற, அவனோ, இறங்கிய வேகத்தில் தோட்டத்தினுள் நுழைந்து கை நிறைய ஆமெண்ட் காய்களை பறித்துகொண்டு நேரே இலக்கியா இருந்த யன்னலோரமாக வந்து, “இந்தாங்க...சாப்பிட்டிராதீங்க!” விழிகளில் சீண்டலிருந்தாலும் வெகு மரியாதையாக நீட்டினான்.

“தாங்க்ஸ் தாங்கஸ்!” அவன் முகம் பாராதே வாங்கிக் கொண்டவளுள் அவன் செயல் அவ்வளவு சந்தோசம் கொடுத்தது.

“இங்க ஒண்டு தாம்மா பார்ப்பம். நம்மட ஊர் கொட்டங்காய் போல இருக்கு!” சுகுணா கேட்க, “அதுதானே!” ரதியும் இணைந்துகொண்டார்.

“அதென்ன கொட்டாங்காய்? கேள்விப்பட்டதேயில்ல.” ஆரூரன் சந்தேகம் கேட்க, “கொட்டாங்காய் எண்டா தேக்கங்காய் டா.” என்றுவிட்டு, இலக்கியாவிடமிருந்து வாங்கிய காயை உடைத்து உள்ளே பச்சை நிறத்திலிருந்த ஆமெண்ட் பருப்பைப் பார்த்தார்கள்.

அப்படியே பயணப்பட்டவர்கள், மதியம் ஒரு மணியளவில் சான்ஸ் பிரான்ஸ்சிஸ்கோ (Golden gate)கோல்டன் கேட் நஷனல் ரிகிரியேஷன் பகுதியில் அமைந்துள்ள ‘லாண்ட்ஸ் எண்டு’ வந்து சேர்ந்து வாகனத்தை நிறுத்திவிட்டு நடக்கத் தொடங்கினார்கள்.

“மாமி ஆக்கள் மூன்றரை போல வந்திருவினம். நாமளும் வழமையை விட கொஞ்சம் நேரத்துக்கே போகலாம் என்ன?” சுகுணா கேட்க, "எப்பிடியும் ஆறு ஆறரையாகலாம் என்ன வேந்தன்?" நாதன் அவனைப் பார்த்தார்.
 
Last edited:

ரோசி கஜன்

Administrator
Staff member
"போயிறலாம் அங்கிள், அதோட இன்னும் அஞ்சு நாட்கள் இங்க தானே நிப்பிங்க, பார்க்க வேண்டிய இடங்கள ஆறுதலாப் பார்க்கலாம்." கதைத்துக்கொண்டே நாதனோடு நடக்க, ஆருரனும் சேர்ந்து கொண்டான்.

"நிறையத் தூரம் நடக்க வேணுமோ?" கேட்டபடி வந்து சேர்ந்துகொண்டாள், இலக்கியா.

"கவின் கேட்க வேண்டிய கேள்வி, ஆனா...பிள்ள ஒருக்காலும் கேட்கார்." சீண்டினான், வேந்தன்.

"ஹலோ! நாங்க ஒண்ணும் நடக்கப் பஞ்சிப்படுற ஆட்களில்ல சரியோ! சும்மாதான் கேட்டனான்." வெட்டும் பார்வையோடு சொன்னபடி அவர்களை முந்திச் சென்று, ‘Sutro District’ பெயர்ப்பலகையைப் புகைப்படமாகப் பத்திரப் படுத்தியவளை, அதேவேலையைச் செய்யும் சாட்டில் தன்பேசியினுள் பத்திரப்படுத்தினான் வேந்தன்.

சிறிது தூரம் தான், சரிவாக இறங்கிய படிகளுக்கப்பால் குடைவிரித்திருந்த நீல வானுக்குப் போட்டியாக பரந்து கிடந்த வட பசுபிக் சமுத்திரத்தின் பேரழகு நகரவிடாது கட்டிப் போட்டிட்டு!

வஞ்சனையின்றி வந்து தழுவிய காற்றின் கிச்சுக் கிச்சு மூட்டலில் நளினமாக ஆட்டம் போட்டன அலைகள். அவை, விரைந்து தவழ்ந்து வந்து பாறைகள் விளைந்து நின்ற கரையில் மோதியெழுந்து, குமிழியிட்ட நுரைகளை பூஞ்சிதறல்களாக அப்பகுதியெங்கும் அள்ளித் தெளித்துத் தம் மகிழ்வைப் வெளிப்படுத்தி நின்றன.

“வாஆஆஆவ்!” அச்சுற்றத்தை விரைவாகத் தம்முள் அடக்கிக் கொள்ளும் முனைப்பில் இலக்கியா மட்டுமில்லை, அனைவரும்தான்! தன்னை நாடி வந்தோரைச் சற்றுமே ஏமாற்றாது சுற்றிலும் ஆச்சரியத்தைத் தாங்கி நின்றது, அவ்விடம்!

“முதல் ‘கிளிஃப் ஹவுஸ்’ போவம்.” நகர்ந்தான். வேந்தன்.

“கொஞ்சம் பார்த்து நடவுங்க. சில இடங்களில ரோட்டு இல்ல, மேடும் பள்ளமுமா இருக்கும். கற்பாறைகள் கிடக்கு." பொறுப்பாகச் சொல்ல, "எல்லாருக்கும் கண் நல்லாத் தெரியும் நீங்க கவனமாக வாங்க." பின்னால் வந்தவர்களுக்கும் கேட்கும் வகையில் தான் சொன்னாள், இலக்கியா. எல்லோர் கவனமும் சுற்றத்தில்! புகைப்படம் செல்ஃபி என்று அவர்களிருக்க, "ஏதோ கையைப் பிடிச்சுக் கூட்டிக்கொண்டு போகப்போற கணக்கில!" கேட்கும் வகையில் முணுமுணுத்தபடி அவனைத் தாண்டி நடந்தாள்.

வேந்தன் விழிகள் நகைப்பில் சுருங்கின. இரண்ரெட்டெடுத்து வைத்து இணைந்து நடந்தவன், “நாங்க மாட்டம் எண்டா சொல்லுறம்.” சொன்னவன் பார்வை பட்டென்று கைப்பேசிக்குப் போனது. சற்றே பின்னால்தான் எல்லோரும் வந்து கொண்டிருந்தார்கள். அவன் அப்படிச் சொன்னதும் நாதன் ஆருரன் மட்டுமல்ல எல்லோர் பார்வையும் அவனில் தான்!

அவன் இப்படிச் சத்தமாகப் பதிலிறுப்பானென்று கண்டாளா என்ன? பேயறைந்த பாவனையில் திரும்பிப் பார்த்திருந்தாள். அவன் அவளைப் பார்க்கவில்லை, இருந்தாலும் அவன் முகத்தில் அடக்கப்பட்ட நகைப்பு!

'டோய்!' கறுவினாள், அவள்.

கைபேசியில், அவன் விரல்கள் எதுவோ தட்டி அனுப்பும் பாவனையில் விளையாடின. காதுக்குக் கைபேசியை நகர்த்தியவன், "சரிடா நான் பிறகு கதைக்கிறன்." என்றுவிட்டு அருகில் வந்திருந்த நாதனிடம் "ஃபிரெண்ட் அங்கிள்." திவ்வியமாகச் சமாளித்துவிட்டான்.

'கள்ளன்...இந்தாள் பெருங்கள்ளன்' சொல்லிக் கொண்டவளுக்கு, தானுமே கூட்டுக் கள்ளி என்பதும் புரிந்துதானிருந்தது. இருந்தாலும் இந்த இரண்டு கிழமைகளும் துளித் துளியாக இரசித்த பயணத்தை முழுமையாகச் சந்தோசமாகவே முடித்திட அவாக் கொண்டது அவளுள்ளம்.

அவனைச் சீண்டுவதைவிட வேறென்ன சந்தோசம் இருக்கப் போகுது? திரும்பிப் பார்த்தாள். அவன் பார்வை முன்னால் நடந்து கொண்டிருந்தவளில்தான். நெற்றியேறி இறங்கியது. பட்டென்று திரும்பிவிட்டாள்.

"அதென்ன கட்டுக் கட்டாக் கட்டிக் கிடக்கு? தொட்டிகள் போல இருக்கே!" பின்னால் தாயோடு வந்துகொண்டிருந்த கவி கேட்க, "சரி, உங்கட வேலையைத் தொடங்குங்கோ கூகிள்!" சிரிப்போடு சொன்னாள் இலக்கியா.

"ஆங்! இனி நெட் கனெக்ஷன் கட். சோ... நீங்களே தேடிக் கண்டுபிடிச்சுக் கொள்ளுங்கோ!" நக்கலாகச் சொன்னானவன்.

"பாருங்கோவன் இவர்ட கதைய! அது எல்லாம் ‘சூட்ரோ பாத்ஸ்’ ...உப்புத்தண்ணி நீச்சல் தொட்டிகள் கவிக்கா." என்றவள் பார்வை அவனில்தான். "ஏதோ இவர் சொல்லாட்டி எங்களுக்கு ஒண்டும் தெரியாது பாருங்க!" சொல்லவும் செய்தாள்.

"அத்தூரம் இருந்து இத்தூரம் நல்ல சந்தோசமா, பத்திரமா அந்தத் தம்பி கூட்டிக்கொண்டு வந்து விட்டாப் பிறகு வாயப் பாரன்." என்றார் ரதி.

"சித்தி..சித்தி...நாங்கதான் அவரப் பத்திரமா கூட்டிக்கொண்டு வந்தது. வேற ஆரும் வந்திருந்தா எவ்வளவு கரைச்சல் குடுத்திருப்பினம். நாங்க என்ன அப்பிடியா?" வம்பைத் தொடர்ந்தவளிடம், "இண்டைக்கு கடைசி நாள் நல்லாச் சண்டை போடுங்க!" என்ற ஆரூரன், " ‘சூட்ரோ பாத்ஸ்’ 1896 அளவில கட்டியதாம்." விபரம் சொல்ல கவனம் அங்கே சென்றிட்டு.

" ‘கிளிஃப் ஹவுஸ்’ அந்தா அங்க தெரியறது தானே?" திடீரென்று மாறன் கேட்க, சட்டென்று திரும்பிச் சிரித்துவிட்டு வாயில் கோடுபோட்டுக் காட்டினாள், இலக்கியா. "நீங்களே சொல்லுங்கோ! அப்பத்தான் எல்லாருக்கும் விளங்கும். போனாப் போகுது எண்டு பாவம் பார்த்து ஒத்துக்க கொள்ளுறன் சரியோ!" வேந்தனிடம் சொல்லிவிட்டுத்தான் திரும்பியிருந்தாள்.

"ஓம் அதுதான்." முறுவலோடு ஆரம்பித்தான் வேந்தன். எல்லோர் பார்வையும், சற்றே முன்னால் பெரும் பாறைகள் மீது அரண்மனைபோல் எழுந்துநின்ற கட்டிடத்தில்!

"கிட்டத்தட்ட 157 வருடங்களா ரெஸ்டாரண்ட், பார், கிஃப்ட் ஷொப் எண்டு எல்லாம் அங்க இருக்கு. அதில நின்று பசுபிக் சமுத்திரம் பார்க்க அவ்வளவு வடிவா இருக்கும்." பலதடவைகள் வந்து இரசித்த இடமாச்சே! இருந்தாலும் அலுக்காத இடங்களில் இதுவும் ஒன்று.

கதைத்துக்கொண்டே கிளிஃப் ஹவுஸ் வந்தவர்கள் ஓடிச்சென்று பார்த்தது பொங்கிப் பூரித்தாடிய சமுத்திரத்தைத் தான்.

கடலைக் காணாதவர்களா என்ன? என்றாலும் அந்த உயரத்திலிருந்து வேறொரு வகையில் ஈர்த்தது, எல்லையில்லாமல் பரந்து கிடந்த பசுபிக் சமுத்திரம்.

"கடவுளே! பெரிய கப்பலில ஆக மேல தட்டில நிண்டு கடலைப் பாக்கிறது போல இருக்கே!" ஆச்சரியத்தோடு சொன்னான் ஆரூரன்.

"ஓமடா... எனக்குத் தலை சுத்துது!" சுகுணா.

எல்லோரும் கீழே எட்டிப் பார்த்தார்கள். அலைகள் அவ்வளவு ஆக்கோராசமாகவொண்ணும் வருவது போல் தெரியவில்லை. ஆனால், கீழேயிருந்த பாறைகளில் வந்து மோதுகையில் சீறிச் சிதறி அப்பகுதியெங்கும் வெண்ணுரைப் போர்வையை விரித்துவிட்டன.

அடர் நீல சமுத்திரத்தில் அசைந்தாடிய வெண்ணுரை, வலப்புறமாகப் பார்வையைத் திருப்பினால் சமுத்திரத்தின் அப்பால் படர்ந்திருந்த மலைத் தொடரும் பெரிய கற்பாறைக் குன்றுகளும், இடப்புறமாக நீண்டு வளைந்து பரந்திருந்த கடற்கரையும், அது நெடுகிலும் வரிசை கட்டி நின்ற கார்களும் மக்கள் தலைகளுமாக அவ்விடம் மனதில் அழகாகவே பதிந்து போயிற்று!

“அங்காலதானே கோல்டன் கேட்?" வலபுறத்தைக் காட்டிக் கேட்டாள், இலக்கியா.

"ம்ம் நாம சூட்ரோ பாத்ஸ் பார்க்க அப்படியே இறங்கிப் போனா அதில ஒரு சின்னக் குகை இருக்கு. அதுக்கு அங்காள போய் நிண்டு பார்த்தா கோல்டன் கேட் தெரியும்.” அருகில் நின்று பதில் சொன்னான், வேந்தன்.

அக்கணம், அவளுக்கு அவனோடு சீண்டி விளையாட மனம் வரவில்லை. இருவருமாக நின்று ஒரு புகைப்படம் எடுத்தால் என்ற ஆசை தான் எழுந்து தொலைத்தது.

அவனுக்கு அருகில் நாதன் நின்றிருந்தார். அவனைப் பார்க்கவே கூடாதென்று தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு, “கடற்கரை வரைக்கும் போவமா?” கேட்டாள்.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
“ஓம்! பீச் பீச் போவம்.” துள்ளினான் கவின்.

“முதல் ஒரு கஃபே குடிச்சிட்டுப் போவமே.” மாறன் சொல்லிவிட, “சரி, அப்பிடியே கிஃபிட் ஷொப் போயிட்டு கடற்கரைக்கும் இறங்கிட்டுப் போவம்.” முடிவெடுத்துக் கட்டிடத்தினுள் நுழைந்தார்கள்.

"நாங்க கிஃபிட் ஷொப் போறம்." இளையவர்கள் செல்ல, அஜியும் சேர்ந்து கொண்டாள்.

வேந்தனுக்கென்று ஏதாவது வாங்கும் ஆசை இலக்கியாவினுள்!

அதேநேரம், "நாம வேந்தன் அண்ணாக்கு ஏதாவது வாங்குவமா? " ஆரூரன் கேட்க, "ஓம் வாங்குவம்." அஜி சொல்ல, தெரிவில் இறங்கியிருந்தாள் கவி.

பின்தங்கி நடந்தாள் இலக்கியா. அங்கிருந்தவை எதுவுமே அவ்வளவாகப் பிடிக்கவுமில்லை. அவற்றுள், வெண்மை நிறத்தில் கண்ணாடியில் வரையப்பட்டிருந்த ‘கிளிஃப் ஹவுஸ்’ சித்திரம் ஓரளவுக்கு அவளைக் கவர்ந்திருந்தது. மற்றவர்கள் மறுபுறமாகப் பார்த்துக்கொண்டு செல்ல, பட்டென்று அதை எடுத்த வேகத்தில் பணம் செலுத்தி கைப்பைக்குள் வைத்துக்கொண்டாள். சில நிமிடங்களுள் இது நடந்திருந்தது. இதயத்தின் படபடப்பு இன்னமும் அடங்கியிருக்கவில்லை. கேட்டுக் கேள்வியில்லாது அடித்துப்பிடித்துக்கொண்டு வெளியேறியது, நிம்மதி மூச்சு!

'இந்த ரெண்டு கிழமைகளா இவையளுக்கு மறைச்சு எத்தின செய்திட்டன், இதான் கடைசி!' பதற்றம் கொண்ட மனதுக்குச் சமாதான சொல்ல முற்பட்டபடி மெல்லச் சென்று மற்றவர்களோடு நின்றுகொண்டாள்.

"நீர் என்ன பின்னுக்கு நிக்கிறீர்? இதெப்பிடி இருக்கு? வேந்தனுக்கு வாங்கினது." காட்டிக்கேட்டாள், அஜி.

"பார்த்துக்கொண்டு வந்தன் சித்தி. நல்லாத்தான் இருக்கு." என்றவளுக்கு உண்மையில், அவர்களை நேருக்கு நேராகப் பார்க்கவே வெகு தயக்கமாக இருந்தது. இரு கிழமையாக எத்தனையோ கள்ளத்தனம் செய்துவிட்டாள் தான். அப்போதெல்லாம் காதலில் அது இயல்பானதாக, பிழையில்லாததாகவே இருந்திட்டு! இதோ, அது முடிவுக்கு வரும் நாள் நெருங்குகின்றது என்கையில் தொற்றிக்கொண்ட பதற்றம் இயல்பாக இருக்கவிடவில்லை.

"எடுத்திட்டாப் போவம்." பணம் செலுத்துமிடம் நடந்தாள், கவி.

எல்லோரும் தாம் வாங்கியதை வைக்க, இலக்கியா தள்ளி நின்று கொண்டாள்.

"என்ன நீ ஒண்ணும் எடுக்கேல்லையா?" கவி கேட்க, "இல்ல..." என்று ஆரம்பித்தவளுக்கு அதற்கு மேல் ஒன்றும் சொல்ல வரவில்லை.

முறைப்போடு தங்கையைத் தொட்டு விலகியது, கவியின் பார்வை.

"உனக்கும் எனக்கும் தான் இந்த மக் வாங்கினன்." தன் கையிலிருந்த இரு தேனீர்க் கோப்பைகளை வைத்துவிட்டு, "தள்ளுங்க சித்தி நான் கொடுக்கிறன்." எல்லாவற்றுக்குமாகப் பணம் செலுத்தினாளவள்.

இலக்கியாவுக்குத்தான் விழிகள் கலங்கிப் போயிற்று! தமக்கை, அவளோடு கதைக்கவில்லை. இருந்தாலும் எப்போதும் போலவே இப்போதும் தங்கையை மறக்கவில்லை.

‘வேந்தன் விசயத்தில அக்காவ வீணா சந்தேகப்பட்டுட்டன்’ தன்னைத்தானே வெட்கத்தோடு நொந்து கொண்டே வெளியில் வந்தவளுக்கு, வேந்தனுக்கென்று வாங்கிய பரிசு மிகையாகக் கனத்தது. ‘எப்படா அவரிட்டக் குடுக்கிறது’ சந்தர்ப்பம் பார்த்தபடியே வந்தாள்.

"எல்லாம் வாங்கியாச்சா? பீச் வரை போயிற்று வருவம். கடலுக்க இறங்கி ஆட்டம் போட்டுக்கொண்டு நிக்கிறதில்ல." சொல்லிக்கொண்டே நகர்ந்தார் நாதன்

"அதெப்பிடி? இல்ல அதெப்படி? முழங்கால் வரை போகலாம் சரியோ!" வேந்தனோடு நடந்தபடி சொன்னான், ஆரூரன்.

"விடுங்க நாதன், என்னவும் செய்யட்டும்." என்றார் சுகுணா. என்னதான் என்றாலும் இந்த இரு கிழமையும் அவர் மனதுள் ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது. 'வெளிக்கிட்ட பிரயாணம் கவனமாக முடிய வேணுமே!' என்ற எண்ணம் மனதில் நீங்காதிருந்தது. இப்போதோ மனம் இலேசான உணர்வு. சான்ஸ் பிரான்சிஸ்கோ ஏற்கனவே வந்த ஊர். அதுமட்டுமில்லாது, கணவர், ராஜி ஆட்கள், மாமியார் என்று எல்லோரும் இன்று வந்தும் விடுவார்களே!

அங்கிருந்து சரிவில் பரந்திருந்தது வட பசுபிக் சமுத்திரக் கரை!

'என்னோடு விளையாட ஒரு முழு நாளும் போதாது' சாவல் விடும் வகையில் ஈர்த்தது அந்நீலக்கடல்.

"பார்க்கவே நீச்சலடிக்க ஆசையாக் கிடக்கே! முழு நாளும் இருக்க விட்டாலும் இருக்கலாம்." சுற்றத்தைப் பார்த்தபடி சொன்னான் மாறன்.

"நீயே இப்பிடிச் சொன்னா அவையல் நீச்சல் அடிக்கவே தொடங்கிருவினம்." நாதன் சொல்ல, "ஹா...ஹா..." சிரித்தான் வேந்தன்.

"கொஞ்சத் தூரம் சரி கடலுக்க கால் நனைச்ச படி நடப்பம் சித்தப்பா!" சொன்னபடி, ஆருரனோடு சேர்ந்து ஓடினாள் கவி. ராஜியின் பிள்ளைகளும் சேர்ந்து கொண்டார்கள். மறுநொடி, தந்தையின் பிடியிலிருந்து கையை உருவிக்கொண்டு ஓடினான், கவின்.

"ஏனப்பா விட்டிங்க? போற வேகத்தில விழுந்தடிக்கப் போறான். தம்பி நில்லய்யா!" பின்னால் ஓடினாள், அஜி.

"நான் வீடியோ எடுக்கிறன், எல்லாரும் முன்னுக்குப் போங்க. வியூ அவ்வளவு சுப்பரா இருக்கு!" இலக்கியா பின்தங்கிவிட்டாள். உண்மையில் கொள்ளை கொண்டது அச்சுற்றம்! அவர்கள் அதில் இலயித்தபடி நடக்க, மிக இயல்பாகப் பின்தங்கி இலக்கியாவோடு சேர்ந்து நடந்தான், வேந்தன். சந்தர்ப்பம் பார்த்திருந்தவளாச்சே, பட்டென்று பரிசடங்கிய பையை எடுத்து, "பாக்குக்க வைங்க வேந்தன்." அவன் கையில் திணித்துவிட்டாள்.

"ஏய் என்ன இது!?"

"ப்ளீஸ்... முதல் உள்ள வைங்கவன்!" என்றுவிட்டு, அவனைத் தாண்டி ஒரே ஓட்டமாகச் செல்பவளை என்ன செய்வதாம்? கையிலிருந்த பை, தான் ‘பரிசு’ என்றது. அதற்காக 'கிடைத்த சிறு தருணத்தைத் துறந்து இப்பிடி ஓடவா வேணும்?' மனதில் சுணக்கம். அதேநேரம், அவள் பரிசு தந்த விதம் வாய்விட்டே சிரிக்கத் தோன்றியது. அவள் வதனத்தில் அவ்வளவு பதற்றம்.

‘இப்படிப் பயந்து கொண்டு ஆருமே பரிசு கொடுத்திராயினம், அதுவும் தான் விரும்பிறவனுக்கு!' முறுவலோடு எண்ணிக்கொண்டவனுக்கு, உள்ளே இருப்பது என்னவாக இருக்குமெனப் பார்க்கும் ஆவல் எழுந்தாலும் முனையாது நடந்தான், முறுவலோடுதான்.

"தம்பி..." நாதன் எதையோ கேட்க அதைப் பைக்குள் வைக்கவும் மறந்து போனான்.

முன்னே சென்றவர்களோடு சேர்ந்தபின்னரே மெல்லத் திரும்பிப் பார்த்திருந்தாள் இலக்கியா. பரிசு கையிலிருக்க நாதனோடு கதைத்தபடி வந்துகொண்டிருந்தான் வேந்தன். திக்கென்று போயிற்று அவளுக்கு.

'டோய்...முதல் அத உள்ள வச்சிப்போட்டு அலட்டுங்க.' குறுஞ்செய்தி. பார்த்தவன் உதடுகளில் வெளிப்படையாகவே முறுவல். அவன் பார்வை அவளை நாட, நாதன் பார்வையும் தொடர, சட்டென்று குனிந்து தன் காலணிகளைக் கழட்டி எடுக்கத் தொடங்கிவிட்டாள், இலக்கியா.

வெற்றுக்கால்களோடு கடல் தண்ணியை எற்றிக்கொண்டு நடந்து கொண்டிருந்தார்கள் இளையவர்கள்.

"கெதியா வாங்கோவன்." பெரியவர்களையும் அழைத்தார்கள்.

"நீங்க போங்க பிள்ளைகள் நாங்க கரையால வாறம்." என்றார் சுகுணா.

"ம்மா பேசாமல் வாங்கோ. வேந்தன் வரேல்லையா? என்ன கடல் தண்ணி எண்டாப் பயமோ!" சீண்டினாள், கவி.

அவன் பதில் சொல்லாது சிக்கனமாக முறுவலித்தான்.

"பச்! என்னவும் செய்யுங்க, நாங்க கொஞ்சத்தூரம் போகப் போறம்." சொல்லிவிட்டு நடந்தவள் மனதில் சுணக்கம். வேந்தன், முதல் நாளிலிருந்து ஒரு வார்த்தை கதைக்கவில்லை. அவளாகக் கதைப்பதற்கு சின்னதாகச் சிரிப்பு!

'இரும் இரும் எத்தின நாளைக்கு?' சொல்லிக்கொண்டவள் இதழ்களில் இரகசிய மலர்வு.

அடுத்த முக்கால் மணிநேரம் எப்படிப் போனதென்று தெரியாமல் கடந்திருந்தது. “பயணம் தொடங்கினதில இருந்து சின்னதா சந்தர்ப்பம் கிடைச்சாலும் மாறன் சித்தப்பா மனிசிட தோளில கைபோட்டு ஃபோட்டோ எடுக்க மறக்கிறதேயில்ல.” முழங்கால் மட்டுமான கடலுள் நின்று புகைப்படமெடுத்தவர்களில் பார்வையிருக்கச் சொன்னாள், கவி. அவளுக்கு அக்கணம் வேந்தனோடு தனியாக புகைப்படமெடுக்கவேண்டும் போலிருந்தது. பாராமுகம் காட்டுறானே! முயற்சி செய்து பார்க்கத் துணியவில்லை.

“ரதிச் சித்தி நீங்களும் சித்தப்பாவும் நில்லுங்கோ! பெரிசா வெட்கப்படாமல் வாங்கோ. எத்தின தடவைகள் நாங்களும் கேட்டுட்டம்.” இலக்கியா இழுத்துச் சென்று நிறுத்த, கவியும் ஆருரனுமாக நாதனையும் இழுத்துச் சென்று ரதியினருகில் நிறுத்த, இருவரும் நிறையவே அந்தரப்பட்டுவிட்டார்கள்.

“பிள்ளைகள் உங்களுக்கு வேற வேலையே இல்லையா?” முணுமுணுத்த நாதன், தன்னையும் மீறி மனைவியில் பார்வை பதித்து மிட்டார். “ஓஹோ!” பெரிதாகச் சிரித்தார்கள் இளையவர்கள்.

“அம்பதிலும் ஆசைவரும்...” வம்படியாக ராகம் இழுத்த மாறன், மனைவியின் இடியை பரிகாசச் சிரிப்போடு வாங்கிக்கொள்ள, “இவர் மட்டும் எடுப்பார் மற்றவை எடுக்கக் கூடாது. ம்ம்ம் பதினெட்டு என்று நினைப்பு!” கடித்தாள் கவி.

“ஹலோ தம்பி எனக்கு இன்னும் ஐம்பது ஆகேல்ல சரியோ!” ரதியின் குரல் மிரட்டலோடு இடையிட்டது.

“அப்பாவும் வந்திருக்க அம்மாவும் எல்லோ இப்ப நிண்டு இருப்பா” சுகுணாவையும் அந்தரப்பட வைத்துவிட்டு, கலகலத்தார்கள்.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
அப்படியே, நீலநிறச் சமுத்திரப்பின்னணியில், பல கோணங்களில் புகைப்படங்களைத் தட்டியபடி சிறிதுதூரம் சென்றுவிட்டுத் திரும்பியவர்கள் உண்மையில் நன்றாகவே களைத்துப் போய்விட்டார்கள்.

"ஐயோ சரியாப் பசிக்குதே!" எல்லார் வாய்களிலும் இதேதான். முதுக்குப் பைகளில் இருந்தவை எல்லாம் உள்ளே தள்ளியபடியே ‘சூட்ரோ பாத்ஸ்’ செல்லும் வழியில் நடந்தார்கள்.

"இனிக் கவனம் ஒருத்தரும் ஓடுறது இல்ல. மண் ரோட்டு, கல்லு குண்டு குழி எல்லாம் கிடக்கு." என்றபடி, மகனைத் தூக்கிக்கொண்டான், மாறன்.

"நோ நோ ... கவின் நடப்பான் அப்பா. பிளீஸ் இறக்கி விடுங்க!" நெளிந்து வளைந்து இறங்கியவன், "நான் இலக்கியா அக்காவோட..." ஒரே ஓட்டமாகச் சென்று பின்னால் வந்து கொண்டிருந்தவள் கரத்தைப் பற்றிக்கொண்டான். கொஞ்சமேனும் அவன் விரும்பியதைச் சாதிக்க அவள்தான் சரியான ஆள், இல்லையோ வேந்தன்.

"மேல நிண்டு பார்க்க ஒரு பெரிய தொட்டி போல தெரிஞ்சிது! இங்க பாருங்க எத்தின தொட்டிகள்.” என்ற அஜியோடு இணைந்து, “அந்தக் கட்டுகளில நாமளும் நடப்பம்." கவி சொல்ல, எல்லோருமே தொட்டிக்கட்டுகளில் நடந்து கடற்கரையோரமாக இருந்த கட்டில் நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள். அவர்களின் முன்னால், உப்புத்தண்ணீர் தொட்டிகள், பாறைக் குன்றுகள், அது கடந்து ஆதவனின் பசிக்கு இரையான மஞ்சளடித்த பகுதி, அதோடு போட்டிபோட்டு ஏகத்தாளமாக நிற்கும் பச்சைப் போர்வை போர்த்த பகுதி, மேலே நீலவானம் என்று, பார்ப்போரை மாய உலகுக்கு இழுத்துச் சென்றது, இயற்கை.

அது போதாதென்ற பின்புறத்தில் பூஞ்சிதறலாக நனைத்துச் சென்ற சமுத்திர நீர் வேறு!

அச்சூழலில், மேலதிகமாக, மனதுள் நிறைந்திருந்த நேசமும் நேசிப்பவனின் அருகாமையும்...

மெல்லத் திரும்பி அருகில் நிற்பவனைப் பார்த்தாள், இலக்கியா. அவன் பார்வையும் அவளில்தான். கவினைத் தூக்கிக்கொண்டு அவள் பின்னாலேதான் வந்திருந்தான்.

‘என்ன?’ அவன் நெற்றி ஏறியிறங்கியது. அவள் பதில் சொல்லாது பார்த்து நின்றதென்னவோ சில கணங்களே!

“வேந்தன் ணா, இலக்கிக்கா இங்க பாருங்கோ!” ஆருரனின் குரல் பட்டென்று நேரே பார்க்க வைத்ததென்றால் வரிசையில் கடைசியாக நின்ற கவியின் தலை எட்டி இவர்களை பார்க்க, “ஓ கவிக்கா! நேரா நில்லுங்க!” மீண்டும் குரலெழுப்பினான், ஆருரன்.

“ஒரு ஃபோட்டோ நேர் சீரா எடுக்கிறதுக்குள்ள மனுசருக்கு மூச்சு முட்டிப் போயிரும்!” அலுத்துக்கொண்டே வந்து, “மாறன் சித்தப்பா நீங்க எடுங்கோ நான் நிக்கிறன்.” ஆரூரன் சொல்ல, “ ஃபோட்டோக்கு நில்லு எண்டு சொல்லிப் போட்டு அரைமணித்தியாலமா டான்ஸ் ஆடினா அப்பிடித்தான். சும்மா போற போக்கில தட்டினா இயல்பா வரும். அதுக்குப் போய்! நீ சரி கெதியா எடு மாறன்.” அலுத்துக்கொண்ட நாதன், மகனை முறைத்தார்.

அடுத்த சில நிமிடங்களில் அருகேயிருந்த குகை நோக்கி நடந்தார்கள்.

“பெரிசா நீளமான குகையில்ல. இருந்தாலும் உள்ள போனொன்னா இருட்டு முகத்தில அடிக்கும்.” வேந்தன் சொன்னதே நடந்தது. தயாராக வைத்திருந்து கைபேசி லைட்டை ஒளிரச் செய்திருந்தான், ஆரூரன். கவியும் அதையே செய்தாள்.

நிலம் ஈரமாக இருக்க ஒருவித எச்சரிக்கையோடுதான் காலடிகளை எடுத்து வைத்தார்கள்.

குகையின் இடப்புறமாகவிருந்து சிறு இடைவெளியால் சமுத்திரத்தைப் பார்க்க முடிந்தது. திரண்டு வந்த அலைகள் படீர் படீரென்று மோதி அச்சரிவில் குவிந்திருந்த பாறைகளைத் தழுவிச் சென்ற காட்சி நின்று நிதானமாக இரசிக்க வைத்தது. பின்புறத்தில் சிதறும் சமுத்திர நீரோடு சேர்த்துப் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு முன்னேறினார்கள்.

"இனி என்ன கோல்டன் கேட் பார்க்கப் போவம்." குகையை விட்டு வெளியில் வந்ததும் சொன்னார் நாதன்.

"இப்பிடியே கொஞ்சத் தூரம் போனா கடற்கரையிலே இருக்கிற ‘லாபிரிந்த்’தையும்(Labyrinth) பார்த்திரலாம் அங்கிள்." சொன்ன வேந்தனோடு, "போவம் போவம்..." நடக்கவே தொடங்கியிருந்தார்கள், ஆரூரனும் கவியும்.

சிறு சிறு கற்கள் கொண்டு, பார்த்தும் தெளிவாகத் தெரியாதபடி சிக்கலான வழிகளோடு அமைக்கப்பட்டிருந்தது, அந்தப் புதிர்ப்பாதை வட்டம். அதனுள் நுழைந்து மிக்க கவனத்தோடு வெற்றிகரமாக வெளியே வரவேண்டும்.

"இதெல்லாம் எங்களுக்கு ஜூஜிப்பி!" முதலில் நுழைந்த ஆரூரனும் கவியும் மாறி மாறி முட்டுப்பட்டுவிட்டு ஒரு வழியாக வெளியில் வந்தார்கள். அவர்களின் ஆரவாரம் ஏற்கனவே அங்கு நின்றவர்களையும் மலர வைத்தது.

தொடர்ந்து இளையவர்கள் சென்றார்கள். மாறனும் அஜியும் ஒருவர் பின் ஒருவராகச் சென்று, "ஹே ...ஹே நாங்க ஒரு இடத்தில கூடத் தடுமாறேல்ல!" என்றபடி வெளியில் வந்தார்கள்.

"வேந்தன் எங்க?" சுகுணா.

"நான் இங்க நிக்கிறன்." அருகிலிருந்த குன்றின் மேலிருந்து இவர்களைத்தான் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தானவன்.

"நீங்க போகேல்லையா?" ரதி வினவ, "அவர் பிறந்து வளர்ந்ததே இதுக்குள்ள தான்!" கொடுப்புக்குள் நசுங்கிய முறுவலோடு சத்தமாகவே சொன்ன இலக்கியா, அதனுள் நுழைய காலெடுத்து வைத்தாள்.

மற்றவர்களோடு சேர்ந்து அவன் முகத்திலும் முறுவல். அதில் நின்றால் அவள் கரத்தைப் பிடித்துக்கொண்டு செல்லும் ஆவல் ஆட்டிப்படைக்கும் என்றுதானே விலகி வந்து நிற்கிறான்.

"மனசில எதையாவது நினைச்சிட்டு போயிட்டு வந்தா நினைக்கிறது நடக்குமாம்." சத்தமாகச் சொல்லியிருந்தான். பட்டென்று எல்லோர் பார்வையும் அவனை நோக்கித் திரும்பியிருந்தது. "அப்பிடி ஒரு நம்பிக்கை இருக்கு!" தொடர்ந்து சொல்லிவிட்டுப் புகைப்படமெடுக்கும் பாவனையில் நின்றவன், நீலச்சமுத்திரக் கரையில் நிற்கும் இளவரசியாக அவளைத் தன் கைபேசிக்குள் அடக்கிக்கொள்ளும் வேலையில் இறங்கியிருந்தான்.
 
Top Bottom