• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அத்தியாயம் - 4

ரோசி கஜன்

Administrator
Staff member
"கயழ்விழி!" அட்சர சுத்தமாக உச்சரித்தாள், தன்னை ரூயி என்று அறிமுகப்படுத்திக்கொண்ட அப்பெண்.

"உள்ள வாங்கோ!" தமிழில் அவள் சொன்ன விதம் கயல்விழி ஆட்களின் விழிகளை விரியச் செய்தது.

"தமிழ் தெரியுமா?" வியப்பை வார்த்தைகளில் வெளிப்படுத்தினான், பூபாலன்.

"கொஞ்...சம்" கண்களைச் சுருக்கி விரல்களால் அபிநயித்துக் காட்டியவள் லாதியின் தலையை அன்போடு வருடினாள்.

அது ஒரு தொடர்மாடிக்குடியிருப்பு. நியுயோர்க்கில், கயல்விழியின் அலுவலகத்துக்குச் செல்ல இருபது நிமிடங்கள் பிடிக்கும் தூரத்திலிருந்தது. நான்கு அறைகள் உள்ள விசாலமான வீட்டில், அவள் வேலை செய்ய வந்த அலுவலக ஊழியர்கள் எட்டுப் பேர் தங்கியிருக்கிறார்களாம். அதில், இவளோடு சேர்த்து நான்கு பெண்கள். படபடவென்று ஆங்கிலத்தில் விபரம் சொன்னபடி, “இந்த முதல் அறை நம்மட!" அறையைத் திறந்து, "உள்ளே வாங்க!" தயங்கி நின்றவர்களை வரவேற்றாள், ரூயி.

முதல் பார்வையிலேயே, அறையின் சுத்தம் கயல்விழி மனதில் ‘அப்பாடா’ என்ற உணர்வைத் தோற்றுவித்தது. எதிர் எதிரே இரு கட்டில்கள், சுவரோடு பதித்த ஒரு அலுமாரி, இரு கதிரைகளோடு பெரிய மேசை, அறையோடு குளியலறை. பூபாலன் விழிகள் அளவெடுக்க, "பரவாயில்ல என்னப்பா? பெட்டையும் ஓகே போல இருக்கு!" அவன் காதைக் கடித்தாள், காயு.

"இந்தக் கட்டில் உன்னுடையது. பாதி அலுமாரியில் பொருட்களை வைக்கலாம். கட்டிலுக்குக் கீழயும் பெரிய லாச்சி இருக்கு, உடைகளை வைத்துக்கொள்ளலாம்." இழுத்துக் காட்டினாள், ரூயி. "சமையலறை எல்லாருக்கும் பொது. டைம் போட்டுச் சமைக்கிறனாங்கள். உனக்கு விருப்பம் எண்டா நானும் நீயும் சேர்ந்து சமைக்கலாம்." என்று தொடர, முறுவலித்தாள் கயல். அவள் சைனா உணவுகளுக்கும் இவள் உணவுமுறைக்கும் சரிவருமா என்று சிந்திக்க, "ரெண்டு வருசமா யாழ்ப்பாணத்தில இருந்தன் கயல்விழி, உங்கட சாப்பாடுகள் நல்ல விருப்பம். " என்றாள், அவள்.

"ம்ம்... சேர்ந்தே சமைக்கலாம்." சொல்லிவிட்டாள்.

சிறிது நேரம் கதைத்துவிட்டு, "ஏதாவது குடிக்கிறீங்களா?" அவள் உபசரிப்பை நாசுக்காக மறுத்த பூபாலன் தம்பதிக்கு, கயல்விழியின் இருப்பிடத்தில் நல்ல திருப்தி.

"கயல்விழி, இப்போதைக்கு அத்தியாவசியமாத் தேவை எண்டுறதுகள வாங்கிட்டு வருவமே!" புறப்படத் தயாராகிக் கேட்டான், பூபாலன். “அதான் நானும் சொல்ல நினைச்சன்.” காயு சொல்ல, "இல்ல இல்ல வேணாம், அதெல்லாம் நாளைக்கு நான் வாங்கிறன்." அவசரமாக மறுத்தாள், கயல்விழி.

"உம்மட விருப்பம் எல்லாம் நாங்க கேட்கேல்ல என்னப்பா? வாரும் போயிட்டு வருவம்!" அதட்டல் போட்டாள், காயு.

ஆங்கிலத்தில் உரையாடியதில் ரூயின் முகத்தில் முறுவல். "உன் சொந்தமோ?" கயலிடம் வினவ, வினாடி நேரம் தடுமாறிவிட்டாள், அவள். சுதாகரித்து, நண்பர்கள் என்று சொல்ல முதல், "இவள் என் சகோதரி" கயல்விழியின் தோள்களைப் பற்றியபடி சொல்லியிருந்தாள், காயு.

கயலுக்குச் சட்டென்று விழிகள் கலங்கிவிடும் போலிருந்தது. வெளியூரில், ஒரே நாளில் அவளுக்கென்று ஒரு குடும்பம் உறவாகியுள்ளதே! இனிமையான இதம் சேர்த்த உறவு! அவள் கரமும் காயுவை வளைத்து விடுவித்தது.

அடுத்த ஒரு மணித்தியாலம் பல்பொருள் அங்காடியில் பொறுமையாகவே கழிந்தது. பணமும் செலுத்த விடாது மல்லுக்கட்டி வென்றுமிருந்தாள், காயு.

"நீ படுத்திற பாட்டுக்கு, ஆள் இனி நம்மட வீட்டுப்பக்கமே வரா இருந்து பார்!" பகிடி பண்ணினான் பூபாலன். கயலை, மனைவி ஒரு வழி பண்ணுவதைப் பார்க்கையில் பெரும் இரசிப்பாகவிருந்தது, அவனுக்கு. அவனுக்கு நினைவுள்ள வரை, கயல் ஒரு கார மிளகாய்; சிரிப்பதை விட சினப்பதை விருப்பமாகச் செய்பவள்; எந்நேரமும் ‘உர்’ தான். அதெல்லாம் மனைவியிடம் பலிக்கவேயில்லையே!

"பாத்திருக்க எட்டாகிட்டு!" வெளியில், பனிக்கால இருட்டும் குளிரும் ஆட்சியில் கோலோச்சி நின்றன; கூடவே சுள்ளென்ற காற்றும்!

"நீங்க ரெண்டு பேரும் காருக்கயே இருங்க, நான் குடுத்திட்டு வாறன்." கயல்விழியோடு இறங்கினான், பூபாலன்.

"நானும் வாறன் பா, ஒரேயடியா கொண்டு போயிறலாம்."

“இல்ல நாங்களே கொண்டு போகலாம்." பூபாலன். இருவர் கைகளும் பைகளால் நிறைந்திருந்தன. யன்னலால் தலைநீட்டிய சிறுமியின் உச்சியில் முத்தம் கொடுத்து விடைபெற்றாள், கயல்விழி.

"ஸ்வீட்டீ!" பின்னால் தவழ்ந்து வந்தது லாதியின் செல்லக் குரல். இதுநாள்வரை, கயல் இந்தளவு அன்பை எவரிடமும் உணர்ந்ததில்லை. திரும்பியவள் கண்கள் கலங்கிப் போயின.

"மறக்கக் கூடாது, சனி...இல்ல இல்ல வெள்ளியே வீட்ட வர வேணும் சரியோ!" அன்பான எச்சரிக்கை.

"தாயைப் போல பிள்ளை!" பூபாலன் நகைத்தான். திரும்பி வந்து மீண்டுமொருமுறை முத்தம் கொடுத்துவிட்டு, வருவதாக உறுதியும் கூறிவிட்டுப் பூபாலனோடு நடந்தாள், கயல்விழி.

அடுத்து வந்த இரு தினங்களும் எப்படிப் போனதென்றே தெரியவில்லை. கூடவே தங்கியிருப்போரோடு அறிமுகம் செய்து கொள்வதிலும், ரூயியோடு சேர்ந்து சமையல் செய்வதிலும் பொழுது போயிற்று. மறக்காது காலை மாலை நலம் விசாரிக்கும் காயுவும் தன் சின்ன உலகத்தினுள் இழுத்துப் பிடித்து வைத்துக் கதை பேசும் லாதியும் இவள் நாட்களுக்கு மேலதிக வண்ணம் சேர்க்க, அவை பரபரவென்று கடந்து போயின.

“செல்லக் குட்டி, கொஞ்ச வேலைகள் இருக்கு; அடுத்த கிழமை கட்டாயம் வருவன்.” லாதியை, தொடர்ந்து நான்காவது கிழமையாக சமாதானம் செய்வித்தும் இருந்தாள்.

“ ‘அண்டைக்கு ஒருநாள் வேண்டா வெறுப்பா வந்து நிண்டவா. இனி இந்தப் பக்கமும் ஆள் வராது.’ எண்டு, பூபாலன் சொல்லுறது சரிபோலக் கிடக்கே!” அடிக்கடிக் கடித்தாள், காயு.

“அய்யோ இல்ல இல்ல; உண்மையாவே இந்த ஒரு மாதமும் பே வேலை காயு!” அவளிடம் மறுத்தவள் விழிகளோ, எதுவும் சொல்லாது பார்த்திருக்கும் லாதியில். வீடியோ கோலில் வந்தால் தாயைக் கதைக்கவிடாது கலகலப்பவள் அமைதியாக இருந்தாள்.

“என்ன அங்க பார்வை? ஒருக்காவா இரண்டு தரமா தொடர்ந்து ஏமாற்றினா சின்னப்பிள்ள இப்பிடித்தான் இருப்பாள்!” காயு வேறு தூண்டி விடுகிறாளே!

“குட்டிம்மா! இந்தக் கிழமை கட்டாயம் வருவன். நாங்க பார்க்குக்குப் போவம். பிறகு ரெண்டு பேரும் சேர்ந்து மஃபின் செய்து அம்மாட கிச்சின பிரட்டிப் போடுவம் சரியா?” லாதியைச் சமாதானம் செய்விக்க முயன்றாள்,கயல்.

“நேரம் கிடைச்சா வாங்கவன்!” பெரிய மனிசியாகச் சொல்லி கலகலவென்று சிரிக்க வைத்தாளவள்.

“குட்டிம்மாக்கு கோவமா? இந்தக் கிழமை வெள்ளி வந்தா திங்கள் விடியவரை பிள்ளையோட நிப்பன் சரியோ?” பட்டென்று இப்படிச் சொன்ன கயல்விழியை விரல் நீட்டி எச்சரித்தாள் காயு. சொல்லுவாய் வரவா போகிறாய் என்பதாக இருந்தது அது!

“வாங்கோவன் அந்த நேரம் பார்ப்பம்.” என்று, வந்தால் கண்டுகொள்வோம் என்ற கணக்கில் சொல்லியிருந்தாள், சிறுமி. அதற்காகவே போக வேண்டுமென்று இருந்தாள், கயல்விழி.


மேலும் வாசிக்க...

 
Top Bottom