• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அத்தியாயம் - 40

ரோசி கஜன்

Administrator
Staff member
மடிக்கனணியை மூடிவைத்துவிட்டு நிமிர்ந்த வேந்தன் பார்வை அருகிலிருந்த கைபேசியில்! “பச்!” கரமிரண்டையும் தூக்கிச் சோம்பல் முறித்தபடி இலகுவாகச் சாய்ந்தமர்ந்து கொண்டான்.

‘இதோட எத்தின தரம்? இனி எடுக்கிறேல்ல...அவளா எடுக்கட்டும்.’ முறுக்கிகொண்ட மனம் சொன்னதைக் கேட்கவில்லை, கரம். மறுநொடியே, கைபேசி அவன் கையில்! விரல்கள் வேகமாக அவளுக்கு அழைப்பை ஏற்படுத்தியுமிருந்தன. மீண்டும் பழைய பல்லவி தான்.

‘நேற்றிரவிலிருந்து ஃபோன ஓப்ல வச்சிருக்கிறாளே!’ சிடுசிடுப்பையும் மீறி நம்பவும் முடியாதிருந்தது. மனம் முழுவதும் முதல் நாளிரவு அவளோடு நெருங்கி நின்ற உணர்வின் ஆதிக்கமென்றால், காதோரமாக அவள் மென்குரலில் சொல்லிய ‘லவ் யூ’ மீண்டும் மீண்டும் ஒலித்து அவனை நிலைகொள்ளவிடாது தவிக்க வைக்கிறதே!

“அப்படி என்னடி செய்யிற? என்ர ஃபோன எடுக்கிறத விட உனக்கு அந்தக் கலியாணம் பெரிசாப் போட்டுதா?” சத்தமாகவே சொல்லிவிட்டவனுக்கு, ‘ஆளில்லா வீட்டிலிருந்து பைத்தியம் போல் அலட்டுறனே!’ என்றுமிருந்தது.

முதல் நாளிரவு, பெரும் சந்தோசத்தோடு வீடு வந்திருந்தான். கணமும் தாமதியாது “இந்தா உங்கட மருமகள், எப்பிடி இருக்கிறாள் சொல்லுங்க பாப்பம்!’ என்று, இலக்கியாவைக் காட்ட வேண்டும்; அவளைக் கண்டதுமுதல் நடந்தவையெல்லாவற்றையும் சுருக்கமாகச் சொல்லிவிடவேண்டும்; "எப்படா இந்த வீட்டுக்கு ஒரு மருமகள் வருவாள்?" என்றேங்கி நின்ற பெற்றோரின் முகத்தில் வியப்பும் மகிழ்வும் போட்டிபோடுவதைக் கண்ணாரக் காண வேண்டும்; இரவோடிரவாக, தமக்கைமார் நெருங்கியவர்களென்று செய்தி சொல்லும் அன்னையின் மகிழ்வை அணுவணுவாக இரசிக்க வேண்டும்; எவ்வளவு விரைவாக முடியுமோ வீட்டினரைக் கொண்டு இலக்கியா வீட்டினரோடு கதைக்கவேண்டுமென்று அவன் மனதுள் பற்பல எண்ணங்கள்!

அதுபார்த்தால், வீட்டின் வெறுமை அவனுள் பொங்கிக் கொண்டிருந்த உற்சாகத்தில் பட்டுபட்டென்று நீர் தெளித்தடக்கிவிட்டது.

முதுகுப்பையை வைத்துவிட்டு தொப்பென்று அமர்ந்தவன் உடல் களைப்பில் துவண்டிருந்தது. இத்தனை நாள் தெரியாத களை இப்போது தெரிந்தது. 'நல்ல குளியல் போட வேணும்.' எண்ணிக்கொண்டே தாய்க்கு அழைத்தான்.

"வீட்ட வந்திட்டன் மா, எங்க ஆளைக் காணேல்ல?"

"உனக்குத்தான் அடிக்க நினைச்சன், நீயே எடுத்திட்ட தம்பி." என்ற ரத்னா, "இப்பயா வந்தனீ? ஆறுமணிபோல வந்திருவன் எண்டு நேற்றிரவு சொன்னியே!" அம்மாக்களின் விசாரணை மட்டும் எக்காலத்துக்கும் பொது!

"அப்படித்தான் மா நினைச்சன், கொஞ்சம் பிந்திட்டு! நீங்க எங்க நிக்கிறீங்க?

"நான் இங்க உன்ர பெரியக்கா வீட்ட வந்திருக்கிறன். கடைசி மகனுக்குக் காய்ச்சல் எண்டாள் எண்டு பாக்க வந்தா அவளுக்கும் அவ்வளவா உடம்புக்கு முடியேல்ல. அதான் இண்டைக்கு இங்க நிண்டிட்டன் தம்பி!"

"ஓ! நான் விடிய வாறன்...இல்ல இப்ப வரவா?"

"அதெல்லாம் ஒண்ணும் தேவையில்லை. அலைஞ்சு களைச்சு வந்திருப்ப, சாப்பாடு எல்லாம் செய்து வச்சிருக்கிறன் பாத்துச் சாப்பிடன். விடிய எடுக்கிறன் என்ன." என்றவர், "என்னமாதிரி உன்ர ஆக்களக் கவனமா கொண்டுவந்து விட்டாச்சோ!" என்றார், ஒரு மாதிரிக் குரலில்.

அதுவும் ‘உன்ர ஆக்களில்’ நல்ல அழுத்தம்.

“அதென்னம்மா என்ர ஆக்கள்?" கேட்டவனுக்குச் சிரிப்பு!

"நீங்கதானே தம்பி கூட்டிக்கொண்டு வந்தீங்க, அதைத்தான் அப்பிடிச் சொல்லிட்டன்." என்றாரவர்.

"ம்ம்...அவையளை விட்டுட்டன்." என்றவன், "உங்களோட ஒரு முக்கிய விசயம் கதைக்க வேணும் எண்டு வந்தா நீங்க..." அவன் முடிக்கவில்லை, இடையிட்டிருந்தாள் அவன் பெரியக்கா.

"அப்படி என்னடா தம்பி முக்கிய விசயம்? எனக்கும் சொல்லன் கேப்பம்!" என்றவள், அவன் முறுவலை விரித்தாள்.

"அக்கா எப்பிடி இருக்கு இப்ப? என்ன திடீரெண்டு?"

"அதெல்லாம் பெரிசா ஒண்ணும் இல்லடா.” என்றவள், “காச்சல் தடிமன் எல்லாம் சொல்லிக்கொண்டே வரும்? இப்ப, காதல் சொல்லிக்கொண்டு வாறதில்ல எல்லா? அப்படித்தான் இதும்.”

“அய்யோக்கா! ஒரு கதைக்குக் கேட்டன்.”

“பிள்ள என்ன நீ?” தாய் ஒரு தட்டுப் போட, பட்டென்று கதையை மாற்றியும் விட்டாள், அவள்.

“இல்ல, ரெண்டு நாளுக்கொரு தடவ சரி எடுத்துச் சுகம் விசாரிக்கிற என்ர அருமைத் தம்பி ரெண்டு கிழமையா எடுக்கேல்லையா, மனம் ஏங்கிப் போட்டுதுடா! அதான் இலேசாக் காய்ச்சல். சின்னவனும் மாமா மாமா எண்டு சொல்லி அழுது அழுதுதான் காச்சல். மாமாவுக்குத் திடீரெண்டு முக்கிய அலுவல் வந்திட்டு எண்டா அவனுக்கு விளங்கவா போகுது!" சீண்டல் குரலில் தொடர்ந்தாள்.

"என்னக்கா நீங்க! உண்மையாவே நேரம் கிடைக்கேல்ல கா. அதான்..." சமாதானமாகத் தொடங்கினான், வேந்தன்.

“தெரியும் தெரியும் ட்ரைவ் பண்ணுறது மட்டுமா எத்தின வேலை!...ம்ம்ம்" இடையிட்டவள், "நீ நினைச்சிருந்தா எடுத்திருக்கலாம் வேந்தன். சின்னக்காவும் அதைத்தான் சொல்லிக்கொண்டிருந்தவள் தெரியுமா? உனக்கு எங்களை நினைவே இருக்கேல்லையோ எண்டும் எனக்குச் சந்தேகம்." அவள் விடுவதாயில்லை.

"பிள்ள இங்க தா. களைச்சு வந்தவனை நீ வேற!" தாய் கைக்கு மாறியிருந்தது, பேசி.

"நீ சொல்லு தம்பி, என்ன சொல்ல வேணும் எண்டனி?"

"அது ஃபோனில கதைக்கிற விசயம் இல்லம்மா. நேர்ல நாளைக்கு வந்து சொல்லுறன்."

"அப்பச் சரி!" என்றவர், "நாளைக்கு ஒரு கலியாண ரிசப்சன் வேற இருக்கு. கட்டாயம் போக வேண்டிய இடம். அப்பாவும் வர இல்ல."

"ஓ! எங்க போய்ட்டார் அப்பா, அங்க உங்களோட வந்திட்டார் எண்டு இருந்தன்?"

"நேற்றுத்தான் கனடா போனவர், வர ஒரு கிழமை எடுக்கும். நீயும் நானும் போயிட்டு வருவம் என்ன?"

"நாளைக்கா? நான்...” இழுத்தவன், “அப்பா கனடா போனதச் சொல்லவே இல்ல.” முடித்தான்.

“நீ எல்லாம் சொல்லிப் போட்டுத் தானே செய்யிறனி?” தமக்கையின் குரல் இடையிட்டது.

"அவள்ட கதைய விடய்யா. அங்க முக்கிய வேலை எண்டு நேற்றிரவுதான் வெளிக்கிட்டவர்.” என்றுவிட்டு, “ரிசப்சன் பின்னேரம் தானே? நல்லா ரெஸ்ட் எடு! பின்னேரம் ஒரு ஐஞ்சரை ஆறு போலப் போனாலும் காணும்." சொன்னவர், "நீ இங்க வாறியா இல்ல மத்தியானத்துக்கு மேல நானே வரட்டா?" வினவினார்.
 
Last edited:

ரோசி கஜன்

Administrator
Staff member
"இல்லம்மா, நீங்க அங்கயே இருங்க." என்றவன், "கலியாண வீட்ட போக இங்க வந்தா வெளிக்கிட வேணும்?" கேட்க, "இல்ல இல்ல, நான் இங்க இருந்தே வரலாம்." என்றாரவர்.

"அப்ப நான் பின்னேரம் வந்து அப்பிடியே அங்க இருந்தே போகலாம்." என்றிருந்தான் இவன்.

தாயோடு கதைத்துவிட்டு இலக்கியாவுக்கொருதடவை அழைத்துப் பார்த்தான். பேசி அணைத்துவைக்கப்பட்டிருக்க, 'ஓஃப் பண்ணிட்டுத் தூங்கிட்டாள் போல!' எண்ணிக்கொண்டே குளித்துவிட்டு வந்துறங்கிவிட்டான். விடியவும் நேரம் சென்றேதான் எழுந்திருந்தான்.

எழுந்த வேகத்தில் அவளுக்கழைக்க மறுபடியும் தொடர்பு கிடைக்கவில்லை. காலைக்கடன்களை முடித்துவிட்டு வந்து மீண்டும் அழைத்தான். மீண்டும் மீண்டும் அணைத்துவைக்கப்பட்டிருந்த கைப்பேசி அவன் பொறுமையைச் சோதித்துவிடவே ஆரூரனுக்கு எடுத்தான்.

அவனோடு கதைத்துவிட்டு வைத்தவன், "விடிஞ்சத்தில இருந்து கலியாண வீடு போற பிசியில நிக்கினம் அண்ணா. எல்லாரும் வெளிக்கிடுகினம்." என்று அவன் சொன்னதில் மனதில் ஏகத்துக்கும் முறுகல்.

‘ஒருதடவையேனும் ஃபோன் பாக்க நேரமில்லாம அப்பிடி என்ன புதுமையான வெளிக்கிடல்!’ புறுபுறுப்போடுதான் மணித்துளிகளைக் கடக்க வேண்டியிருந்தது.

‘சரி, செய்ய வேண்டிய வேலைகளைச் சரி செய்வம்’ என்றமர்ந்தவனால் ஒருகட்டத்துக்குமேல் அதுவும் முடியவில்லை. இப்போ அவனுக்குள்ள பெரிய வேலை, முதல் செய்யவேண்டியதும் கூட, இலக்கியோடு தொடர்புடையது மட்டுமே!

ஒரு நப்பாசையில் மீண்டும் அழைத்துப் பார்த்தான். மௌனமே பதில்! வாட்ஸ் அப் திரையில் அவனோடு நெருங்கி நின்றிருந்தாள், இலக்கியா. ‘கோல்டன் கேட்’ சுற்றத்தில். அதையே பார்த்திருந்தவன் மனதில் சுணக்கமெல்லாம் மறைந்திட்டு. முறுவலோடு, கைபேசியிலிருந்த புகைப்படங்களை கணனிக்கு மாற்றும் வேலையில் ஈடுபட்டான்.


அன்று மாலை ....

"நேற்று என்ன எல்லாம் சொல்லிக் கடிச்சவா பெரியக்கா. இப்ப நான் இங்க வர அவா இல்ல!" என்றபடி உள்ளிட்ட மகனை கட்டியணைத்துக்கொண்டார், தாய்.

"என்னதான் வீடியோக் கோலில கண்டாலும் என்ர செல்லத்தக் கண்டு மூணு மாசங்கள் இருக்கும் தெரியுமா?" பாசமாக முகம் வருடியவரை இறுகக் கட்டிக்கொண்டான், வேந்தன்.

"சும்மா கலாதியாத்தான் வெளிக்கிட்டு இருக்கிறீங்கம்மா?" தாயைப் பார்த்தவன், "அம்மோய்! இந்தச் சாரி நான் உங்கட பிறந்தநாளுக்கு வாங்கித் தந்ததோ! கட்டியிருக்க இன்னும் வடிவா இருக்கு! ஆர் கட்டினது என்ர அம்மாவாச்சே!" மீண்டும் கட்டிபிடித்தவன் கன்னத்தில் செல்லமாகத் தட்டியவர், எதையோ சொல்ல வந்துவிட்டு அடக்கிக் கொண்டார்.

"ஏதாவது குடிக்கிறியாப்பு? இல்லாட்டிப் போவமே!"

"இப்பவேவாம்மா? ஆறுபோல போனாப் போதும் தானே? இப்ப வெளிக்கிட்டம் எண்டா நாலுக்கே அங்க நிப்பம்." மணிபார்த்தபடி சொன்னான்.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
"அது பரவாயில்ல. என்ன குடிக்கப்போற எண்டு சொல்லு!" பரபரத்தவரிடம் இலக்கியா பற்றிச் சொல்ல நினைத்தானவன்.

"அம்மா நேற்றே உங்களிட்ட ஒண்டு சொல்ல வந்தன். நீங்க இங்க வந்து..." ஆரம்பித்தவனைத் தொடரவிடவில்லை, ரத்னா.

"என்ன எண்டாலும் வீட்ட போய் ஆறுதலாக் கதைக்கலாம் அப்பு! இப்ப வெளிக்கிடுவம். பார், இந்த நேரம் பார்த்து உங்கட அப்பா எடுக்கிறார்!" கைபேசியைக் காதில் வைத்தபடி உள்ளே நகர்ந்தவர், கதைத்துக்கொண்டே வந்து குளிர்பாணம் கொடுத்துவிட்டு மீண்டும் உள்ளே விரைந்தார்.

அடுத்துச் சிலநிமிடங்களில், “போவமா தம்பி?" கைப்பையையோடு சேர்த்துப் பரிசுப்பொருள் பெட்டியையும் எடுத்துக்கொண்டு வர, “தாங்க நான் கொண்டுவாறன்.” அந்தப் பெட்டியை வாங்கிக்கொண்டவன் வெளியில் நடக்க, கதவைச் சாத்திவிட்டு வந்து காருக்குள் ஏறியமர்ந்தவருக்கு, அடுத்தொரு அழைப்பு.

"சின்னக்கா தான்." காரைக் கிளப்பியவன் காதில் வைத்தார். அவளும், "உனக்கு இப்ப எங்களை நினைவெல்லாம் இருக்காடா?" கடியோடுதான் ஆரம்பித்தாள்.

சிலவார்த்தைகள் தான் கதைத்திருப்பான், "சரி நேர்ல கதைக்கலாம் தானே!" தன் காதில் பொருத்திக்கொண்டவருக்கு, அரைமணிநேர காரோட்டத்தில் வசிக்கும் சின்னமகளிடம் கதைக்க நிறையவே விசயங்களிருந்தன.

கலியாண மண்டபம் வந்து சேரும் வரை அவர் வாய் ஓயவில்லை.

"பச்!" அலுத்தும் பார்த்தான். காரில் செல்கையில் சரி தன் நேசம் பற்றிச் சொல்லிவிடலாம் என்றெண்ணியவனுக்கு மிஞ்சியதென்னவோ ஏமாற்றமே! என்னவென்பதாகச் சாடையில் கேட்ட ரத்னாவோ கைபேசியழைப்பை மட்டும் துண்டிக்கவேயில்லை.

நேரத்துக்கே வந்திருந்ததில் மண்டபத்தின் முன்னாலே இடமிருக்க வாகனத்தை நிறுத்தினான், வேந்தன்.

“பிள்ள நாங்க வந்து சேர்ந்திட்டம், நீ வந்திட்டியோ?” கேட்டுக்கொண்டே அவனுக்கு முதலே இறங்கியிருந்தார் ரத்னா, "தம்பி மறக்காமல் கிஃப்ட்ட எடுத்திட்டு வாங்க! என்றபடி.

"அம்மா பே பிஸியாப்போன மாதிரி இருக்கே. எந்தநேரமும் ஃபோன்!" பகிடியாகச் சொல்லிக்கொண்டே இறங்கி, பின்புறமிருந்த பரிசுப் பெட்டியையும் எடுத்துக்கொண்டு தாயாரோடு சேர்ந்து நடந்தவன், சற்றே தள்ளி மண்டப வாசலில் குடும்பமாக வந்து நின்றவர்களைக் கண்டுவிட்டு நடப்பதை மறந்து நின்றுவிட்டான்.
 
Top Bottom