அத்தியாயம் - 43

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ரோசி கஜன்

Administrator
Staff member
Nov 11, 2018
1,719
1,113
113
வேந்தன், பட்டென்று எழுந்து நாதனோடு சென்ற விதம் எல்லோரையும் போல் கவியின் நெற்றியையும் சுருங்க வைத்திருந்தது. அப்படியிருக்கையில், அதில் நின்று யோசிக்க முடியாது வந்தழைத்துச் சென்றுவிட்டாள், மணப்பெண்ணின் தோழியொருத்தி.

அங்கு, அவர்கள் கேட்டதைச் செய்துகொண்டிருந்தவள் மனம் நிலையில்லாது தத்தளித்துக்கொண்டேயிருந்தது. என்னவென்று அறிந்தால்தான் நிம்மதியாக இருக்கும் என்ற கட்டத்தில், கைவேலையை அப்படியே விட்டுவிட்டு மெல்ல நழுவி முன்வாயில் நோக்கி வர, சிவாவும் மாறனும் உள்ளே நுழைந்து வேந்தனின் பெற்றோர் பக்கமும் திரும்பாது இறுகிய முகத்தோடு கடந்து செல்வதைக் கண்டவள் மேலும் குழம்பியே போனாள்.

மறுநொடியே, "ஏதோ பெரிசா நடந்திருக்கு!" முணுமுணுப்போடு வேந்தன் பெற்றோரை நோக்கிச் சென்றிருந்தாள்.

தம்மை நோக்கி வந்தவளைக் கண்டதும் தாமதிக்கவில்லை, நடந்தவற்றை ஒன்றுவிடாது கொட்டிவிட்டார், ரத்னா.

"விக்கிட அம்மா சொல்லேக்க உங்கட தங்கச்சி என்ர நினைவில் வரவே இல்லம்மா. உங்களத் தானே தம்பியோட கன தடவை கண்டிருந்தன். அதுவோ என்னவோ அப்பிடி நினைச்சுக் கதைச்சு ...பச்! எல்லாம் என்ர முட்டாள்தனம். பிள்ளையின்ர மனசையும் நல்லாவே கஷ்ட்டப்படுத்திட்டன்." அவள் கரம்பற்றி கண்ணீரோடு மன்னிப்புக் கேட்டிருந்தார்.

கேட்டிருந்த கவிதான் அவர் சொன்னவற்றை ஏற்கவே தடுமாறிப்போனாள். இதயம் அடைத்திட்டு! அப்பவே இலக்கியாவிடம் கேட்டிருந்தாளே! சந்தேகமும் பட்டிருந்தாள். முன்னப்பின்ன அறியேன் என்று சாதித்தவள், இன்று காதலிக்கிறார்களாமே! அவள் மறைக்கப்போய் இன்று தானல்லவா அந்தரப்பட்டு நிற்கவேண்டியுள்ளது! இவ்வளவும் செய்துவிட்டு, 'தன்ர விருப்பத்த மறந்து எனக்குப் பிச்சை வேறு போடுறாளாமே!' அதில் இன்னமும் கோபமேறியது, கவிக்கு.

'என்னைப்பற்றி இவள் என்ன நினைச்சுக்கொண்டாள்? ஆசைப்பட்டது வேணும் எண்டு நிக்கிறனான் தான்; அதுக்காக இன்னொருத்தியை விரும்புகிறவனையுமா? ச்சே!' அருவருப்பாக இருந்தது அவளுக்கு. தங்கை மீது அளவுக்கும் மீறிய கோபமேற்பட்டது.

'அவ்வளவு கீழ்த்தரமா என்னை நினைக்க அவள் ஆர்? இல்ல ஆர் எண்டு கேக்கிறன்?' விறுவிறுவென்று சென்று பளார் பளாரென்று இழுக்கும் ஆவேசம்!

அந்தக் கோபமே அவளைச் சுதாகரிக்க வைத்திருந்தது. சிலநாட்கள்தான் என்றாலும் வேந்தனை அவள் விரும்பினாள், மனதார! உறுதியாகத் தாயிடம் சொல்லுமளவுக்கு! அவனுக்கும் அவளுக்கும் திருமணம் என்றதில் மிகுந்த ஆனந்தத்திலிருந்தாள். சற்றுமுன் அவன் வந்திறங்கி நின்ற கணம் உரிமையோடு இரசித்தாள். இதோ இந்தக்கணம் அதுவெல்லாம் இல்லவே இல்லையாம். கடிகார நெட்டை முள் ஒரு சுற்றுச் சுற்றமுதல் இதுதான் வாழ்க்கையென்றிருந்தது அந்நியமாகியிருந்தது. முகத்திலறைந்த உண்மை இதயத்திலும் விழுந்ததுதான். இல்லையென்று சாதிக்கப்போவதில்லை. அதற்காக, வெட்ட வெளிச்சமாகக் கிடக்கும் உண்மையை மறுக்கவும் மாட்டாள்.

நிமிர்ந்து நின்று வேந்தனின் பெற்றோர்களை நேருக்கு நேராகப் பார்த்துத் தேற்றினாள்.

"அய்யோ ஆன்ட்டி, இப்ப என்ன நடந்திட்டு எண்டு நீங்க இப்பிடி நிக்கிறிங்க? இதில எல்லாம் என்ன இருக்கு? யோசிச்சுப் பார்த்தா ஆரிலும் பிழ இல்ல. விடுங்கோ விடுங்கோ!" அவரைக் கட்டிப் பிடித்து ஆறுதல் சொன்னாள்.

"நாம விரும்பிறது எல்லாம் எல்லா நேரத்திலும் கிடைக்காது தானே ஆன்ட்டி. அதுக்குப் போய் நீங்க மன்னிப்பு அது இதெண்டு கொண்டு" உரிமையோடு கண்டித்தவள், அவர் விழிகளால் கண்ணீரைத் தள்ள வைத்து விட்டாள்.

“எப்படி இருந்தாலும் நீங்க எனக்கு மாமி. சொந்தம் சொந்தம் தான்."

ரத்னா அழுதே விட்டார். வேந்தனின் தந்தைக்குக் கூட கண்கள் கலங்கிப் போயின.

‘இப்பிடி ஒரு தங்கமான மருமகள் எனக்குக் கிடைக்கேல்லையே!’ ஏக்கமோட, “எனக்கு இன்னொரு மகன் இல்லையே எண்டு இப்பக் கவலையா இருக்கம்மா!" அவளை இறுகக் கட்டிப் பிடித்தபடி சொன்னார் ரத்னா. கலங்கிய விழிகளை அவர் பார்வையில் படாது மறைக்க முடியவில்லை, கவியால்.

மகள், வாசலில் நின்று இவர்களோடு கதைப்பதைக் கண்டுவிட்டு வந்திருந்த சுகுணா நடந்தவற்றைக் கேட்டுச் சிலையாக நின்றிருந்தார். இலக்கியாவின் செய்கையில் மனதுள் வெகுண்டு போனார்.

'எத்தனை சந்தர்ப்பங்களில சொல்லி இருக்கலாம்? இதென்ன கள்ளத்தனம்? என்ர மகள் விரும்பிறன் எண்ட உடனே சொல்லேல்லையா? ரெண்டு பேரையும் ஒரே மாதிரித்தானே வளத்தன். இண்டைக்கு என்ர மகள் மனமுடைஞ்சு அதை மறைச்சுக்கொண்டு நிக்கிறது மாதிரிச் செய்து போட்டாள்.' மனதுள் கொந்தளித்ததை வெளியில் காட்டாதிருக்கப் பெரும் பாடுபட்டுவிட்டாரவர்.

தாயைக் கண்டதும் அவர் நின்ற நிலையிலேயே தாம் கதைத்தவற்றைக் கேட்டுவிட்டார் என்று புரிந்து கொண்டாள், கவி.

"ம்மா ஒண்ணும் இல்ல நான் ஓகே!" தாயிடம் நகர்ந்தவள், அதற்குள், "நீங்க எல்லாரும் எங்களை மன்னிக்க வேணும், அவசரப்பட்டு..." சுகுணாவின் கரத்தைப் பற்றிக்கொண்டு ஆரம்பித்த வேந்தன் அன்னையை முறைத்தாள்.

"ஆன்ட்டி இப்ப உங்களுக்கு அடிதான் போடப் போறன்! கண்ணைத் துடையுங்கோ, என்ன ஏதெண்டு ஆரும் வந்து கேட்க முதல் உள்ள வந்திருங்கோ!" கண்களைத் துடைத்தவரை கை பிடித்து அழைத்துச் சென்று முதலிருந்த இடத்தில் அமர்த்த, "என்னப்பா நடந்திட்டு? ஏதாவது பிரச்சினையோ?" கேட்ட மனைவிமாருக்கு, "கலியாணம் முடியவிட்டுக் கதைப்பம்." என்ற மாறனும் சிவாவும் அவளையே தான் பார்த்திருந்தார்கள். அவள்தான் ஒருவரையும் பார்க்கவில்லை.

"எங்க இந்த அம்மா, பார்த்திட்டு வாறன் இருங்கோ!" நகர்ந்தவள் கரத்தைப் பற்றி நிறுத்தினார், ரத்னா.

"இந்தாங்க இது உங்களுக்கு எண்டு நான் பாத்துப் பாத்து வாங்கினது." வரும் போது கொண்டு வந்த பரிசுப்பொருள் வேந்தன் கையிலிருந்து அவன் பெரிய தமக்கை கைக்குப் போய் மேசைக்கு வந்திருந்தது. அதையெடுத்து அவள் கரத்தில் கொடுத்த போது கொடுத்தவரினதும் வாங்கினவளினதும் விழிகள் கலங்கிமுட்டிப் போயின.

"தாங்க்ஸ் ஆன்ட்டி!" சொல்லிவிட்டு நிற்காது நகர்ந்தவள் தாயை நாடிச் சென்றாள்.

அவரோ, இறுகிப்போன முகத்தோடு கைபேசியில் கதைத்துக்கொண்டிருந்தவர் மகளைக் கண்டதும் அழைப்பைத்துண்டித்துவிட்டு என்ன கதைப்பதென்று புரியாது அவளை அணைத்துக் கொண்டார்.

'உன்ர விருப்பத்த என்னட்டச் சொல்லியும் நிறைவேற்றி வைக்க முடியாமல் போய்ட்டம்மா!' மனதுள் அழுதார், சுகுணா.

"ம்மா உண்மையா எனக்கு...நான் பெரிசா எடுக்கேல்லம்மா விடுங்கோ!" கவி.

"போற வாறா சனம் எல்லாம் பார்த்துக்கொண்டு போகுது உள்ள வாங்க, எங்க அப்பாவும் நாதன் சித்தப்பாவும்? ஆரூரனும் கண்ணில படேல்ல!" சுற்றிலும் விழிகளை ஓட்டியபடி கேட்டவள், தனக்குக் கவலையில்லை என்றமாதிரி நடிக்கிறாள் என்றே பட்டது சுகுணாவுக்கு.

மகளை இந்தளவுக்கு தர்மசங்கடமான நிலையில் நிறுத்தியது இலக்கியாதானே! அவளில் கோபம் அதிகரித்துக்கொண்டே போயிற்று!

"அங்க அறைக்குப் போன இலக்கியா மயங்கி விழுந்திட்டாளாம். அப்பாக்கு எடுத்தனான், சொன்னார். இந்தப் பிள்ளை இன்னும் என்ன என்ன நாடகம் போடப் போகுதோ!" கோபத்தோடு சொன்னவர் கரத்தைப் பற்றி, "மயங்கிப் போட்டாளோ! ஏன் என்ன நடந்திட்டு? வாங்க, பக்கத்தில தானே போய்ப் பார்த்திட்டு வந்திருவம்." அதுவரை இலக்கியிலிருந்து கோபம் எங்கு போனதென்று தெரியவில்லை, பரபரத்தாள் கவி.
 

Author: ரோசி கஜன்
Article Title: அத்தியாயம் - 43
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

ரோசி கஜன்

Administrator
Staff member
Nov 11, 2018
1,719
1,113
113
எப்போதுமே தன் சிறு விருப்புக்கும் குறுக்கே நிற்காத தங்கையில் அவளுக்கு அன்பில்லையா என்ன? ‘அவளுக்கு மட்டும் தான் என்னில அன்பு போலவும் நான் ஏதோ மற்றவே விரும்பிறது எல்லாத்தையும் தட்டிப் பறிக்கிறதும் போலவும் எல்லா நினைச்சுப் போட்டாள்!.’ கண்கள் கலங்கிற்று அவளுக்கு.

"உனக்கு வேற வேலை இல்லையா? அப்பாவேயல் பார்ப்பினம் தானே, வா நாம உள்ள போவம். இனி வரவேற்புத் தொடங்கிற நேரமாகுது." என்று திரும்பிய சுகுணா, " எனக்கு வேந்தன் வீட்டு ஆக்களப் பார்க்கவே ஒரு மாதிரிக்கு கிடக்கு!" முணுமுணுத்தார்.

அதையெல்லாம் கவனிக்கவில்லை கவி. "பச்! அதெல்லாம் நல்லா நேரம் கிடக்கம்மா வாங்க." அவரை இழுத்துக்கொண்டு வெளியில் வந்தவள், "வேனும் இல்ல என்ன? ஒரு டேக்சி பிடிப்பம், இதில பக்கத்திலதானே!" சுகுணாவின் முணுமுணுப்பைக் கருத்திலெடாது அழைத்து வந்து விட்டாள்.

தாம் தங்கியிருக்கும் விடுதிக்கு வந்து சேர எடுத்த அக்கொஞ்ச நேரத்தில், முதல் நாளிலிருந்து தங்கை என்ன பாடு பட்டிருப்பாள் என நினைத்துப் பார்த்தவளுக்கு, இலக்கியாவிலிருந்த மனக்குறையெல்லாமே போயே போயிருந்தது. தனக்காகத் தங்கை தன் வாழ்வையே உதறிட முடிவெடுத்ததைத் துளியும் ஏற்கமுடியாதிருந்தாலும் அவள் தனக்காகவென்று, அதுவும் தன் விருப்பம் தெரிந்தபின்னர் அப்படியொரு முடிவெடுத்ததை எண்ணியவளால் இலக்கியாவில் இருந்த கோபத்தைப் பிடித்தெல்லாம் வைக்க முடியவில்லை.

சுகுணாவோ, "சின்ன சின்ன விசயங்களிலும் உன்ர விருப்பத்துக்கு மதிப்பளிக்கிறவள். அவள் ஆசையா வாங்கினதுகள நீ கேட்டோன்ன மறு கதை கதையாது தாறவள். அப்ப எல்லாம் எனக்குக் கூட உன்னில் தான் கோவம் வாறது. இப்பப்பார் எல்லாத்துக்கும் சேர்த்து வச்சுப் பழிவாங்கினது போல ஒரு வேலை செய்து போட்டாள்." அடிக்குரலில் சொன்னவர், கவியின் விழிகளின் கலகத்தில் மேலும் இலக்கியாவில் கோபம் கொண்டார்.

"இவள் முதலே தன்ர விருப்பத்தைச் சொல்லியிருக்க மிச்சப் பிரச்சினை வந்திராதே. அதுக்குள்ள நல்ல பிள்ளைக்கு நடிப்பு! விட்டுக்குடுக்கிறாவாம். அந்தப் பெடி சரியெண்டு விட்டுப்போட்டு போகமாட்டார் எண்டு இவளுக்குத் தெரிஞ்சே தான் இவ்வளவு நாடகம் போடுறாள். எல்லாம் எனக்குத் தேவைதான்." தொடர்ந்து புறுபுறுத்தார்.

“பச்! நடந்ததில ஆரிலும் பிழை இல்ல. வேணும் எண்டும் ஒருவரும் ஒண்ணும் செய்யேல்லம்மா. விடுங்கோ. நானே பேசாமல் இருக்கிறன் பிறகு என்ன சொல்லுங்க?" மகள் கண்டிப்போடு சொல்லிவிட, அதன் பின் அவர் எதுவும் கதைக்கவில்லை.

அப்படி, விரைந்து வந்து அறைக்குள் உள்ளிட்டவர்கள் அங்கே வேந்தனை மட்டும் எதிர்பார்க்கவேயில்லை.

'இவர் வீட்ட போய்ட்டார் எண்டு ஆண்ட்டி சொல்லுறா...இவர் இங்க...' எண்ணமோட அவனை ஊன்றியொரு பார்வை பார்த்தாள், கவி.

ஆரம்பத்தில் இலக்கியாவிலிருந்த மொத்தக் கோபமும் துளி மிச்சமில்லாது அவன் புறம் பாய்ந்திட்டு. அந்தப் பார்வையில் கோபத்தோடு குற்றச்சாட்டுமிருந்தது.

"நீங்க அண்டைக்கு என்னட்ட சொல்லி இருக்கலாம் வேந்தன். இப்ப இந்தளவு பிரச்சனை வந்தே இராது. சொல்லி இருக்கலாம் இல்லை, கட்டாயம் சொல்லி இருக்க வேணும்." இறுகிய குரலில் சொன்னவளுக்கு அந்த இடத்தில் வைத்து என்ன பதில் சொல்வது? அன்றைய சூழல் வெளிப்டையாகக் கதைக்க உகந்ததாக இருக்கவில்லை என்றதை விட, இவளோடு சம்பந்தப்படுத்தி இப்படியெல்லாம் இவ்வளவு வேகமாக விசயங்கள் நடக்குமென்று அவன் என்ன சாத்திரமா பார்த்தான். வார்த்தைகளை விடாதிருப்பதே மேலென்றுணர்ந்து முகமிறுக வாய் மூடி நின்றான், வேந்தன். பார்வை மட்டும் இலக்கியாவில்.

அங்கு நின்றவர்கள் பார்வையோ அவனில்! ஒரு குற்றம் புரிந்தவன் போலேவே பதிய, அதைப் பார்த்த இலக்கியாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதோடு தமக்கை என்ன சொல்கிறாள் என்ற குழப்பம் வேறு!

மேலே சிந்திக்கவிடாது நெருங்கியிருந்தாள், கவி.

"அப்பிடியே உனக்கு நாலு குத்துக் குத்த வேணும் எண்டுதான் வந்தனான். அது பார்த்தா...இதெல்லாம் என்னடி கூத்து? மென்டலா நீ? பெரிய தியாகி எண்ட நினைப்பும் என்ன? எரும!" கோபத்தோடு படபடத்தவளுக்கு அழுகை முட்டிட்டு!

சட்டென்று தமக்கையைக் இறுக கட்டிக்கொண்டு விம்மியழுதுவிட்டாள், இலக்கியா.

"சொறிக்கா! இப்பிடியெல்லாம் நடக்கும் எண்டு நான் கொஞ்சமும் நினைகேல்ல. சொறிக்கா!" அழுகையோடு வார்த்தைகளை உதிர்த்தவளை இறுக கட்டிக்கொண்ட கவியின் கண்களால் பொலபொலவென்று வடிந்தது, கண்ணீர்.

அதற்குமேல் அங்கு நிற்க பெரும் அசௌகர்யமாகவிருந்தது, வேந்தனுக்கு. வெளியே வந்து நின்றுகொண்டான்.

"என்னதான் சொல்லு இவ்வளவையும் மறைச்சுக்கொண்டு பிடிக்காதபோல நாடகம் போட்டுக்கொண்டு வந்தது என்ர தங்கச்சியா எண்டு கிடக்கு! இப்பவும் என்னால நம்பேலாமல் இருக்கு!" கவி சொன்னதுதானே அங்கு நின்ற பெரியவர்கள் மனதிலும்.

வெளியில் நின்றாலும் வேந்தன் காதுகள் இங்கேதானிருந்தது. சின்னதாகத் தயக்கமிருந்தாலும் மீண்டும் உள்ளே வந்தவன், "சொறி கவி, எங்களால உங்களுக்கு வீணான மனக்கஷ்டம், உண்மையாலுமே மன்னிச்சுக்கொள்ளுங்க!" என்றவன், "நீங்க...உங்கள நல்ல ஃபிரெண்டா தான் இப்பவும் நினைக்கிறன்." தயங்கினாலும் சொல்லிவிட்டான். உண்மையில் கவியை இப்படியொரு நிலையில் பார்க்க அவனுக்குப் பிடிக்கவில்லை. அதுவும் தன்னால் அவள் வருந்தி நிற்கிறாள் என்றது அவனுக்குள் பெரும் குன்றலைக் கொடுத்திட்டு.

"ம்ம்ம் மன்னிச்சம் மன்னிச்சம்,போனாப்போதெண்டு சரியோ! ரெண்டு கிழமையா அவள் போட்ட நாடகத்தில் பெரும் பங்கு உங்கட தானே? ரெண்டு பேரும் பெரும் கள்ளர் படை!” சொல்லிக்கொண்டே, தங்கையின் தலையில் நச்சென்று குட்டும் வைத்தாள்.

“ஸ்ஸ்...” கண்ணீரோடு தலையைத் தேய்த்துக்கொண்ட இலக்கியா, "சொறிக்கா!" அதிலேயே நின்றாள்.

“அவளே இப்பத்தான் மயங்கி எழும்பி இருக்கிறாள். இப்பிடிக் குட்டுறம்மா." சுதர்சன் சட்டென்று சொல்லியிருக்க, "அதும் நடிப்போ என்னவோ!" இறுக்கமாக இடையிட்டது. சுகுணாவின் குரல்.

தாயைப் பார்த்த இலக்கியா அவர் சொன்னதையோ குரல் முகபாவத்தையோ கருத்திலெடாது, " அம்மா!" அவரை நோக்கிச் செல்ல, சட்டென்று கையுயர்த்தி நிறுத்திவிட்டார், சுகுணா.

"தயவு செய்து என்னோட கதைக்காத! நான் சரியான கோவத்தில் இருக்கிறன். பிறகு எதையாவது சொல்லித் துளைச்சிருவன்." கடுமையாகத்தான் சொல்லிவிட்டார். நாதனும் சுதர்சனும் கூட அந்தரத்தோடு வேந்தனைப் பார்த்தார்கள்.

"ம்மா என்ன நீங்க?" கவி முறைத்தாள்.

"நீ சும்மா இரம்மா. வரவேணும் பார்க்கவேணும் எண்டு நிண்ட, பார்த்தாச்சு எல்லா? வெளிக்கிடு, அங்க தேடப்போகினம். இங்க நடக்கிற கூத்துக்களச் சொல்லி விளங்கப்படுத்த ஏலுமா இப்ப!" படபடத்தவர், "என்னப்பா நீங்களும் வாங்க." சுதர்சனிடம் சொன்ன வேகத்தில் நகர்ந்தவர் வேந்தனை ஏறிடவும் இல்லை.

அப்படியே ஸ்தம்பித்து நின்றிருந்தாள், இலக்கியா. சுகுணா, இதுவரை இப்படி அவளோடு கதைத்ததில்லை. அப்படியென்றால் இங்கு நடந்தவை அனைத்துக்கும் அவள் மட்டுமே பொறுப்பு! கண்ணீர் கசிந்தது. வேந்தனுக்கும் அதிர்ச்சிதான். இருகிழமைகளாக சுகுணாவைத் தெரியும் . மிகவும் அன்பான பெண்மணி. அதிலும் சின்னமகளில் பாசம் அதிகம் என்று நினைத்திருந்தான். இப்போது பார்த்தால்?
 

ரோசி கஜன்

Administrator
Staff member
Nov 11, 2018
1,719
1,113
113
கவியின் பார்வை அந்தரத்தோடு வேந்தனில் படிந்து தங்கையிடம் சென்றது. நகர்ந்து அவள் கரத்தைப் பற்றிக்கொண்டே, "அம்மா என்ன நீங்க? இவளையும் கூட்டிக்கொண்டு போவம் கொஞ்சம் நில்லுங்கவன்." என்றவள் குரலில் விசுக்கென்று திரும்பியிருந்தார், சுகுணா. பார்வை இலக்கியாவைச் சுட்டது. அதுவும் அவள் கண்ணீரில் அவருள் கனன்ற கோபம் அதிகமாகிற்று!

"இங்க ஆரும் பபாக்கள் இல்ல கவி. இப்ப அங்க இருந்துதானே அவா வந்தவ. பிறகென்ன? நீ வா!" அந்நியராகிப்போனார் சுகுணா.

கவி, வேந்தனைப் பிடித்திருக்கு என்றவள், இப்போது அங்கு நின்று பெரும் பாடுபட்டு நடிக்கிறாள், நிலைமையைச் சரி செய்யப்பார்க்கிறாள் என்றுணர்ந்தவர் உள்ளம் எரிமலையாகவிருந்து.

"சுகுணா கொஞ்சம் நில்லுங்க, எல்லாருமாப் போகலாம்." சொன்ன சுதர்சன் குரலில் முடிவு இருந்தது.

"அதுசரி, இப்பிடி இப்பிடி எல்லாரும் தலையில வச்சு ஆடித்தான் இப்ப இங்க வந்து நிக்குது; என்னவும் செய்யுங்க, நான் வெளில நிக்கிறன்." விறுவிறுவென்று சென்றுவிட்டார்.

'என்னதிது அவளும் மகள்தானே? ஆரோபோலக் கதைச்சிட்டுப் போறார்!' புதுக்குழப்பம் வேந்தனுள்.

"நான் வரேல்ல கா, நீங்க போயிட்டு வாங்க." மெல்லச் சொல்லியிருந்தாள், இலக்கியா.

கவியைத் தம் மருமகளாகப் பார்த்த வேந்தன் வீட்டார் இப்போது எப்படித் தன்னை எதிர்கொள்வார்கள் என்ற பயம் வேறு முளைத்திருந்தது. கடந்த இரு கிழமைகளும் ஆசையாக இரசித்து அனுபவித்த நேசம் இப்போது எல்லாராலும் எள்ளி நகையாடப்படும் உணர்வு, யாரையும் எதிர்கொள்ளும் துணிவைத் தரேன் என்றது.

கோபம், அதட்டல், நேசம், எதிர்பார்ப்பு என்று பல்லுணர்வுகளோடு நிற்கும் வேந்தனைக் கூட அவள் பார்க்க விரும்பவில்லை. சோர்வோடு அங்கிருந்த கதிரையில் அமர்ந்தும் விட்டாள்.

"காய்ச்சல் எண்டா டொக்டரிட்ட போகலாம் வா. பக்கத்தில்தான்." வேந்தன். எத்தனைக்குப் பொறுமையாக இருப்பதென்றிருந்தது அவனுக்கு.

இலக்கியா பதில் சொல்லவில்லை. திரும்பவும் முட்டி நின்ற கண்ணீரைச் சொரியவும் மனம் வரவில்லை. துக்கத்தோடு கண்ணீரையும் சேர்த்து விழுங்கிச் சமாளிக்க முயன்றாள்.

தங்கை கழுத்தில் கைவைத்துப் பார்த்த கவி, “முதல் ரெண்டு பரசிட்டமோல் போட்டுட்டு லைட்டா எதையாவது சாப்பிட்டுப் போட்டு முகம் கழுவிற இலக்கியா. வெளிக்கிட்டு வாற. எல்லாத்துக்கும் அரை மணித்தியாலம் தான் உனக்கு டைம். என்ன சொல்லுற?" அதட்டினாள்.

"அதுதான் ...கொஞ்ச நேரம் போயிருந்திட்டு வருவம் இலக்கியா." சுதர்சன்.

"வேந்தன்ட அம்மா அப்பா அக்காக்களும் இருக்கினம்." என்ற சுதர்சன், " தம்பி...என்ன எல்லாமோ நடந்திட்டு! நடக்கிறத விளங்கிக்கொள்ளவே நேரம் போதேல்ல. ஒண்டையும் மனசில வச்சிராதீங்க!" மனைவி கதைத்த விதத்தில் அவருக்கே ஒரு மாதிரியாகிற்றே! அவன் கரங்களைப் பற்றிக் கொண்டவர் விழிகள் கலங்கியிருந்தது.

"ஐயோ அங்கிள்! எல்லாக் குழப்பமும் எங்களால. பிறகு நான் என்ன நினைக்க இருக்கு?" சொல்லிக்கொண்டே அவரைக் கட்டிப் பிடித்து முதுகில் தட்டிக் கொடுத்தவன் பார்வை இலக்கியாவில். அவள் பார்வையும் அவனில் தான்.

"பிஸ்கட்ஸ் தான் கிடக்கு. சாப்பிடுறியா? இல்லாட்டி கன்டினில ஏதாவது பார்ப்பமா?" கவி.

"நீ எழும்பி முகத்தக் கழுவு, நான் போய் ஏதாவது வாங்கிக்கொண்டு வாறன்." பதிலுக்குக் காத்திராது நகர்ந்தான், வேந்தன். அவனையே சிலவினாடிகள் பார்த்திருந்துவிட்டுத் திரும்பிய கவியிலிருந்து எவ்வளவு முயன்றும் முடியாது ஒர் ஆழ்ந்து பெருமூச்சு வெளியேறியது. இவன் காட்டும் இந்த அக்கறையும் பரிவும் தானே அவள் மனதை அவன்பால் சாய்த்ததும். கண்கள் கலங்குவதையுணர்ந்தவள் பட்டென்று குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

சில நிமிடங்களின் பின்னால் வெளியில் வந்தவள் முகம் அமைதிக்குத் திரும்பியிருந்தது.

"போ இலக்கி, முகம் கழுவி வெளிக்கிட்டு வா. சாப்பாடு வர சாப்பிட்டுப் போட்டுப் போவம். அம்மா வேற வெளில நிக்கிறா." அவளை எழுப்பி உள்ளே அனுப்பிவிட்டு, "கதவ லொக் பண்ணாத!" எச்சரித்துவிட்டுத் திரும்பியவளை பெருமை பொங்க அணைத்து உச்சி முகர்ந்தார், சுதர்சன்.

சற்று முன்னர் வரை நடந்த குளறுபடியால் கலங்கி நின்றிருந்தார். அடுத்து என்ன செய்வதென்று குழம்பி நின்றிருந்தார். அவர் மகளோ, எத்தனை இலாவகமாகச் செயல்பட்டு சுமுகமாக்கியிருக்கிறாள். இத்தனைக்கும் அவனை விரும்புகிறேன் என்றவள். மிகவும் பெருமையாக இருந்தது அவருக்கு. அவர்களிருவரையும் பார்த்து நின்ற நாதன் பார்வையும் அதைத்தான் உணர்த்திற்று.

புத்தகப் பாடத்தில் சிறப்பான தேர்ச்சி பெறுவது மட்டுமல்ல கெட்டித்தனம்! வாழ்வு புதிது புதிதாக முன்வைக்கும் புதிர்களையும் சிக்கல்களையும் இயன்றமட்டும் திறமையாகக் கையாள்வதும் பெரும் கெட்டித்தனத்தில் தானேயுண்டு! மனதின் கடிவாளத்தை நிதானமெனும் பிடியில் வைத்திருப்பவரால் மட்டுமே இது சாத்தியம்.

‘என்ர செல்லத்துக்கு அருமையான சம்பந்தம் பார்த்துச் செய்து வைக்கிறதுதான் என்ர முதல் கடமை!' உறுதியோடு எண்ணிக் கொண்டார்.

டோஸ்ட் வாங்கிக் கொண்டுவந்து கவியிடம் கொடுத்துவிட்டு, "நான் காரடியில நிக்கிறன் கவி." கைபேசியை இயக்கிக் காதில் பொருத்திக்கொண்டே நகர்ந்து விட்டான் வேந்தன்.