• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அத்தியாயம் - 7

STN - 92

New member
Staff member
மனம் - 7

நிலைமை கைமீறி சென்றதை உணர்ந்த ரோஷன், “வாங்க வாங்க எல்லாரும் வாங்க. நம்ம அட்சயா என்ன காரியம் பண்ணுறான்னு உங்க கண்ணால நீங்களே பாருங்க. ஏன்டா எங்க வீட்டு பொண்ணு பின்னாடி சுத்துறனு தட்டிக்கேட்ட என்னையவே இவன் அடிச்சிட்டான்.” என கதையையே மொத்தமாக மாற்றி சொன்னான்.

அங்கிருந்த சூழலில் சட்டையில்லாமல் துண்டுடன் நின்றிருந்த குருவையும் தலை கலைந்து தாவணி நழுங்கி இருந்த அட்சயாவையும் தான் அனைவரும் குறுகுறுவென கூறு போட்டனர். இவர்கள் போட்ட கூச்சலில் ஃபோன் பேசிக்கொண்டிருந்த அபிலாஷும் கீழிறங்கி வந்துவிட்டான்.

விஷயத்தை கேள்விபட்ட பரிமளம், ஆவுடையப்பன் சபாபதி, கங்கா மற்றும் பூர்ணிமா என அனைவருமே பதறியடித்து மேலே வந்தனர். அவர்களுக்கும் அங்கே என்ன நடக்கிறது என புரியவில்லை.

அதுவரை மற்றவர்களின் பார்வையில் கூனிக்குறுகி நின்றிருந்த அட்சயா பரிமளத்தை கண்டதும்,
“அம்மா..” என அவரின் கைபிடித்தவள் “ம்மா.. அம்மா இந்த ரோஷன் பொய் சொல்லுறான் ம்மா. நான் பூர்ணி கூப்பிட்டான்னு தான் இங்க வந்தேன் ஆனா இங்க வந்ததுக்கு அப்புறம் தான் எனக்கு தெரியுது. இவன் தான் என்னை பொய் சொல்லி இங்க வர வெச்சிருக்கான்.” என அழுதபடியே அட்சயா தன்னிலை விளக்கம் கொடுத்தாள்.

“பூர்ணிமா எதுக்கு அட்சயா. வேற யாரோ தங்கியிருக்க ரூமுக்கு உன்னை வர சொல்ல போறா? மாட்டிக்கிட்டேன்னு என் தங்கச்சி மேல பழியை போடுறீயா?” என நக்கலாக சிரித்தான் ரோஷன்.

“ம்மா நிஜமா மா. வேணும்னா என்னோட ஃபோன் கூட செக் பண்ணி பாருங்க. பூர்ணி போன்ல இருந்து தான் அவசரம்னு இந்த ரூம்க்கு வர சொல்லி மெசேஜ் வந்துச்சு.” என மொபைலை காட்டினாள்.

அதில் அனைவரின் கவனமும் பூர்ணிமாவின் பக்கம் சென்றது. சபாபதியோ அவளை குற்றம் சாட்டும் பாவனையில் பார்த்து வைத்தான். அதில் உள்ளுக்குள் எதோ உடைவது போல் பூர்ணிமாவிற்கு இருந்தது. ஆனாலும், “என்னோட ஃபோனை சார்ஜ்ல போட்டு வெச்சிருந்தேன். இப்ப ஃபோன் என்கிட்ட இல்ல..”

அனைவரும் வந்தவுடன் குளியலறைக்குள் உடை மாற்ற சென்றிருந்தான் குருபிரசாத். அவன் மாற்றிவிட்டு வெளியே வர அனைவருமே குருபிரசாத்தை தான் குற்றவாளியாக பார்த்தனர்.

அங்கே கீழ கிடந்த பூர்ணிமாவின் ஃபோனை அப்பொழுது தான் பார்ப்பது போல் எடுத்த ரோஷன். “இதோ பூரணியோட ஃபோனும் இங்க தான் இருக்கு. அப்ப இவன் தான் அட்சயாக்கு மெசேஜ் பண்ணி வர வெச்சிருக்கான்.” என தான் தப்பிப்பதற்கு ஏதேதோ காரணங்களை அடுக்கி மற்றவரை திசை திருப்பிக் கொண்டிருந்தான், ரோஷன்.

ரோஷனின் நண்பன் ஏற்பாடு செய்த ஆளோ, “எங்க வீட்டு பொண்ணுக்கு பதினெட்டு வயசு முடிஞ்சதால தப்பிச்சிருக்க டா நீ. இல்லைனா போட்சோ வழக்கு போட்டு, உன்னை உள்ள தள்ளி உனக்கு வாழ்க்கையே இல்லாம பண்ணிருப்போம்.”

குருவோ அலட்டிக் கொள்ளாமல், “இந்த பொண்ணு பெரு தான் அட்சயாவா? அதுவே எனக்கு இப்ப தான் தெரியும். அப்புறம் பூர்ணிமானு சொன்னீங்களே அது யாருன்னு கூட எனக்கு தெரியாது. போலீஸ் போவீங்களா வாங்க போகலாம். பயப்படுறதுக்கு நான் ஒரு தப்பும் செய்யலையே..” என கைகளை கட்டி அமைதியாக அதே சமயம் அழுத்தமாக உரைத்தான். அவன் நின்ற தோரணையை அவனிடம் பொய் இல்லை என உரைத்துவிட்டது.

“ஆமா ம்மா. அவங்களுக்கு என்னை யாருனே தெரியாது. அவங்க தான் என்னை ரோஷன் கிட்ட இருந்து காப்பாத்தினாங்க..” என அந்த சூழ்நிலையிலும் குருபிரசாத்திற்கு ஆதரவாக பேசிய அட்சயாவை வியந்து பார்த்தான் குருபிரசாத்.

“போதும் அட்சயா. உண்மை தெரிஞ்சிடுச்சுன்னு என்மேல பழி போட்டு இவனை காப்பாத்த நினைக்காத.” என ரோஷன் சொல்ல, அங்கிருந்த உறவினர் கூட்டம் அட்சயாவை தான் சந்தேகமாக பார்த்தனர்.

ரோஷனின் கண்ணசைவில்
கூட்டத்தில் இருந்த ஒருவர், “இவன் தான் நம்ம வீட்டு பொண்ணுகிட்ட வம்பு பண்ணிருக்கான். இவனை சும்மா விடாதீங்க..” என குருவின் அருகில் வர,

“ஒரு நிமிஷம்.” என அவர்களை தடுத்து நிறுத்தியவன், “இங்க என்ன நடந்துச்சுன்னு வெளிய இருக்க CCTV மூலமா உண்மை தெரிஞ்சிடும்.” என குரு சொன்னான்.

“இங்க மேல்மாடில CCTV வேலை செய்யாதுன்னு தெரிஞ்சே தான நீ சொல்லுற?” என குருவை ஏளனமாக கேட்டான் ரோஷன்.

“யார் சொன்னா வேலை செய்யாதுன்னு? நேத்து நைட்டே அதை ரிப்பேர் பண்ணுயாச்சு..” என உதட்டோர சிரிப்பில் சொன்னான் குருபிரசாத்.

இந்த விஷயம் ரோஷனிற்கே புதியது! அவன் நேற்று மாலையே இங்கே வந்து பார்த்திருக்க CCTV வேலை செய்யவில்லை என சொல்லியிருந்தனர். அதன் பொருட்டே யோசிக்காமல் நாச வேலையில் துணிந்து இறங்கினான். ஆனால் இப்பொழுது என்ன செய்வது என மீண்டும் குருட்டு வழியில் யோசிக்க துவங்குனான். காலம் எல்லா நேரமும் வஞ்சகர்களுக்கு வசப்படுவதில்லையே! அப்படியிருந்தால் உலகம் எப்படி இயங்கும்?

ஆளாளுக்கு தன் பெண்ணை பற்றி பேசுவதில் வேதனையடைந்த பரிமளம் அழுகையில் இருந்தார்.
“அக்கா நீயாவது என்னை நம்பு க்கா.” என சிறுப்பிள்ளையாய் அழுகையுடன் கேட்ட அட்சயாவின் ஒரு கையை கங்கா பிடித்துக்கொள்ள மற்றொரு கையை பூர்ணிமா ஆதரவாக பற்றியிருந்தாள்.

அன்று வினாத்தாளை திருத்தும் பணியாக கோபிநாத் வேறொரு பள்ளிக்கு சென்றிருந்தார். ஆகையால், கங்கா எவ்வளவு முயன்றும் கோபிநாத்தை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. அவர் இருந்திருந்தால் இந்த சூழ்நிலையை நிச்சயம் சரியாக கையாள்வார் என கங்காவிற்கு புரிந்தது.

அட்சயாவின் வீட்டினருக்கு அவளின் மேல் நிச்சயம் சந்தேகம் இல்லை. ஆனால் மகளை அனைவரின் முன்பும் நிரூபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தனர். அதனால் யாரையும் நம்பாமல் சபாபதியே நேராக சென்று அங்கிருந்த CCTV காட்சியை மண்டபத்தில் இருக்கும் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப சொன்னான்.
 

STN - 92

New member
Staff member
முதலில் குருபிரசாத் அந்த அறைக்குள் சென்றான். அவனை தொடர்ந்து உள்ளே சென்ற அபிலாஷ் சில நிமிடங்களில் அலைபேசியுடன் வெளியேறியிருந்தான். மீண்டும் பத்து நிமிடம் கழித்து அட்சயா உள்ளே சென்றாள்.

அங்கிருந்த சிலர் அட்சயாவை அற்பமாக பார்க்க, உடலே நடுங்க பூர்ணிமாவின் கையை இறுக்கி பிடித்துக் கொண்டாள். அட்சயா சென்ற அடுத்த நிமிட ரோஷன் அந்த அறைக்குள் செல்ல அவனின் பின்னே வந்த நண்பன் கதவை வெளியே தள்ளிட்டான்.

“இங்க பாருங்க. உள்ள வரப்ப உங்க பொண்ணு கைல அவளோட ஃபோன் மட்டும் தான் இருக்கு. ஆனா இந்த பையன் கைல தான் மேல இருந்த இன்னொரு ஃபோன் இருக்கு. உங்க வீட்டு பையன் தான் இந்த பொண்ணுகிட்ட வேறொரு பொண்ணு மாதிரி மெசேஜ் பண்ணி, தப்பா நடந்துக்க முயற்சி பண்ணிருக்கான். நல்ல நேரம் நான் உள்ள இருந்ததால உங்க பொண்ணை என்னால காப்பாத்த முடிஞ்சது. இல்லைனா..” என CCTVயின் காட்சிகளை விளக்கி சொல்லியிருந்த குருபிரசாத்தின் கையை பிடித்துக்கொண்ட ஆவுடையப்பன்,

“உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுறதுனே தெரியல தம்பி. நீங்க யாரு, உங்க ஊரு, பெரு எதுவுமே தெரியாது. ஆனா என் பொண்ணுக்கு நடக்க இருந்த அநியாயத்துல இருந்து அவளை காப்பாத்தியிருக்கீங்க..” என கண்ணீர் மல்க நன்றியுரைத்தார்.

அவ்வளவு தான் சபாபதி ரோஷனின் மேல் பாய்ந்துவிட்டான். அவ்வளவு நேரம் அடக்கி வைத்த ஆத்திரத்தை மொத்தமாக அவனிடம் காட்டினான். ரோஷனைவிட இருவயது சிறியவன் என்றாலும் தங்கைக்கான அவனின் அடி ஒவ்வொன்றும் இடியாக ரோஷனின் மேல் விழுந்தது. “விடுப்பா. விடுப்பா..” என பெரும் முயற்சி செய்து தான் அவர்களை பிரித்தனர் உறவினர்.

“எதுக்கு ப்பா இப்படி செஞ்ச? மாமனா உன்னை தோள்ல தூக்கிப்போட்டு வளத்ததுக்கு ரொம்ப பெருசா பண்ணிட்ட..” என தள்ளாட்டத்துடன் நிற்க சுதன் தான் அவரை தாங்கி பிடித்தான்.

“நான் அட்சயாவை லவ் பண்ணேன். அதை அவகிட்ட சொன்னா அவ ஒத்துக்கல. இதோ இந்த அத்தை நேத்தே எனக்கு பொண்ணு கொடுக்க முடியாதுன்னு முடிவெடுத்துட்டாங்க. அதான் என்கூட அவ இருந்துட்டா.. என்னை தான அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு இப்படி பண்ணேன்.” என நெஞ்சை நிமிர்த்தி செய்த குற்றத்தை நியாயமாக்க முயன்றான்.

“டேய்..” என மீண்டும் சீறிக்கொண்டு சபாபதி செல்ல அவனை பிடித்து வைத்தனர்.

“மாமா மகள் மேல உனக்கு உரிமை இருக்கு. ஆனா இப்படி ஒரு குறுக்கு வழில போக கூடாது.” என பொறுமையாக அங்கே பேசிக்கொண்டிருக்க. குருபிரசாத்தின் பொறுமை பறந்திருந்தது.

“இவன் கிட்ட என்ன பேச்சு. வாங்க போலீஸ் போகலாம். இவனையெல்லாம் சும்மா விட கூடாது.” என குரு, ஆவுடையப்பன் முன்னே சென்று நின்றான்.

மகனின் நடவடிக்கையை பார்த்து அதிர்ந்திருந்த சுடர்கொடி ஆவுடையப்பனின் அருகில் சென்று, “அண்ணா. என்புள்ள வாழ்க்கை ண்ணா. போலீஸ்லாம் போகாதீங்க..” என அவர் காலிலே விழுந்து கதறினார்.

“ச்சீ” என்றாகியது குருபிரசாத்திற்கு.

“இந்த உலகத்துல பொண்ணுங்களுக்கு எதிரா நடக்குற முக்காவாசி குற்றம் வீட்டுக்கு தெரிஞ்சவங்களால தான் நடக்குது. இதோ இவங்கள மாதிரி ஆட்களால தான் அவங்களுக்கு தண்டனை கூட கிடைக்க மாட்டிங்குது.” என சுடர்கொடியை காண்பித்து கத்தினான்.

ஆவுடையப்பனின் அமைதியே அவர் போலீஸ் போக விரும்பவில்லை என பறைசாற்றியது. “மொதல்ல நீங்க எல்லாரும் இங்க இருந்து வெளியே போங்க..” என்ற சபாபதி தங்கையை பூர்ணிமாவிடமிருந்து இழுத்துக் கொண்டான்.

ஏற்கனவே அண்ணனின் மேல் கோபமும் வருத்தமும் கொண்டிருந்த பூர்ணிமாவிற்கு சபாபதியின் செய்கை மிகுந்த வலியை கொடுத்தது.

சற்று நேரம் முன்பு அவளுக்கு ஆசையாக சபாபதி வாங்கி கொடுத்த டைரி மில்க்கின் குளிர் கூட அவளின் கரத்தில் அப்படியே இருந்தது. ஆனால், அதனை வாங்கிக் கொடுத்தவனோ வெப்பமாய் தகித்தான். சொல்லாமல் இருவருக்குள் மலர்ந்திருந்த மௌன காதல் அன்றுடன் முற்று பெற்றிருந்தது.

மற்றவரின் முன் தலை குனிந்து நின்ற ரோஷனின் தந்தை கைகூப்பி மன்னிப்பை கேட்டுவிட்டு பூர்ணிமாவுடன் வெளியேறினார். பையனை கைத்தாங்களாக தூக்க சென்ற சுடர்கொடி ரோஷனுக்கு கையை கொடுத்தார்.

அவரின் கையை தட்டிவிட்டவன், “ஏய் அட்சயா. என்னைக்கு இருந்தாலும் நீ எனக்கு தான் டி. உன்னை எவன் கல்யாணம் பண்ணிக்க வந்தாலும் நமக்குள்ள எல்லாமே.. எப்படி எல்லாமே முடிஞ்சிடுச்சுன்னு சொல்லுவேன்.” என எல்லாம் என்ற வார்த்தைக்கு அழுத்தத்தை கொடுத்தவன்,

“ஏன் இவனும் அந்நேரம் நம்ம கூட தான் இருந்தான்னு சொல்லுவேன்.” என குருபிரசாத்தை கை காட்டியவன், “சாட்சிக்கு இதோ இந்த வீடியோ இருக்கு. இனி உன்னால என்னை தவிர யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது.” என நாக்கில் நரம்பில்லாமல் பேசினான்.

“ஐயோ என் புள்ள வாழ்க்கை. ஏன் டி இதுக்கு தான் பரீட்சை இருக்கு வர மாட்டேன்னு சொன்ன உன்னை வற்புறுத்தி வரவெச்சேன்னா..” என அட்சயாவை அடித்துக்கொண்டே பரிமளம் அழுதார்.

ஒருவித திக்ப்ரமையில் அட்சயா அசையாது அமர்ந்திருந்தாள். மொட்டாய் இருக்கும் மங்கையவள், மலர்ந்து மனம் பரப்பும் வேளையில் மொத்தமாக கசக்க பட்டாள்.

“நீயென்ன டா. அந்த பொண்ணு மேல பழி சொல்லுறது? எங்க கூப்பிட்டாலும் நான் வந்து உண்மையை சொல்லுறேன். நீங்க அழுகாதீங்க..” என பரிமளத்திடம் கூறினாலும் இலக்கில்லாமல் வெறித்த அட்சயாவின் மீது தான் அவனின் பார்வை இருந்தது.

“டேய் நீ சொன்னா நம்புனா தான? அப்படி சொல்லுவேன் டா நான். இவ்வளவு ஏன் நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்குறப்ப நீ தான் வி..” என அடுத்து என்ன சொல்லியிருப்பானோ அவனின் வாயில் குத்துவிட்டான் குருபிரசாத். உடனே வாயில் இருந்து ரோஷனிற்கு இரத்தம் வழிந்தது.

“ஏன்டா உனக்கு அசிங்கமா இல்லை. உன்னோட தங்கச்சி பேரை யூஸ் பண்ணி இன்னொரு பொண்ணு மேல இப்படி அபாண்டமா பழி போடுற..” என அதுவரை அடக்கி வைத்த ஆத்திரத்தை மொத்தமாக காட்டியிருந்தான், குருபிரசாத். யாராலும் அவனை தடுக்க முடியவில்லை. சபாபதியை கூட சுலபத்தில் பிரித்திருக்க, ரோஷனை குரூபிரசாதிடமிருந்து சுத்தமாக அகற்ற முடியவில்லை.

“டேய் குரு. செத்துற கித்துற போறான் டா. அவனை விடு.” என அபிலாஷும் சுதனும் தான் முயன்று விளக்கினர்.

அப்பொழுதும் அடங்காமல், “என் மேலேயே கை வைக்குறீயா டா? உன்னோட கல்யாணத்துலயும் வந்து பிரச்சனை பண்ணுவேன் டா. உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம்னு ஒன்னு நடக்கவே விட மாட்டேன்.” என சொல்லிய ரோஷன் அவனையறியாமலே பழிவெறியில் இருவரின் பெயரையும் சேர்த்துவைத்தான். அது தான் விதியின் சதி போலும்!

“போடா பைத்தியம்.” என்ற குருவும் அவனை வெளியே தள்ளிவிட அவனின் அம்மாவுடன் வெளியேறியிருந்தான்.
 

STN - 92

New member
Staff member
“நம்ம பொண்ணு கொஞ்சம் சூதானமா இருத்துருக்கணும். எந்த புத்துல எந்த பாம்பு இருக்குமோ..” என வந்திருந்தவர்கள் பேச பேச ஆவுயடையப்பன் என்ன நினைத்தாரோ குருபிரசாத்தின் கையை பிடித்து அட்சயாவை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டார்.

அங்கிருந்த யாருமே இதனை எதிர்பார்க்கவில்லை. “அப்பா என்ன பண்ணுறீங்க..” என முன்னே வந்த கங்காவையும், சபாபதியையும் பார்வையாலே தடுத்திருந்தார்.

“சார். என்னை பத்தி என்ன தெரியும்? உங்க பொண்ணை கல்யாணம் பண்ணிக்க சொல்லுறீங்க..” என்ற குரு நழுவ பார்த்தான்.

“நான் தூக்கி வளர்த்தவன், என் பொண்ணு மேல பழியை போடுறான். ஆனா நீங்க அவளுக்காக பேசுனீங்களே தம்பி அந்த ஒண்ணே உங்க நல்ல குணத்தை காட்டுது.” என்றவர் விடாமல் அவனின் கரத்தை பிடித்தார்.

“ஐயோ!” என்றாகியது குருபிரசாத்திற்கு. சுதனின் அம்மாவும், அப்பாவும் கூட குருவிடம் பேசினார்கள்.

அட்சயாவின் சோர்ந்த முகத்தை பார்த்தவனின் மனம் அழுத்த, “சரி சார். கல்யாணம் பண்ணிக்குறேன். உங்க பொண்ணு முதல்ல படிப்பை முடிக்கட்டும். என்னோட அப்பா அம்மாவோட வந்து முறைப்படி பேசி கல்யாணத்தை வெச்சிக்கலாம்.” என சம்மதித்தான்.

ஆனால், எங்கே அவர்கள் வீட்டினர் அவனின் மனதை மாற்றி விடுவார்களோ என பயந்த பரிமளம். “என் பொண்ணுக்கு வாழ்க்கை கொடுங்க தம்பி. அவளை இப்படியே விட்டா நாளை பின்ன அந்த ரோஷன் மாதிரி வேற யாரும்.அவளுக்கு தொல்லை கொடுப்பாங்க..” என கையெடுத்து கும்பிட,

“ஐயோ என்னங்க பண்ணுறீங்க..” என அவரின் கையை கீழிறக்கினான். அவனின் அம்மா பாக்கிய லட்சுமியை நினைத்து குருவிற்கு ஒருபுறம் பயமிருந்தாலும், சூழ்நிலை அவனை முடிவெடுக்க வைத்தது.

“சரி இப்பவே பண்ணிக்குறேன் ஆனா உங்க பொண்ணு கிட்ட நான் தனியா பேசணும்.” என்றதும் ஆவுடையப்பனும் பரிமளமும் அவனை சந்தேகமாக பார்த்தனர்.

“என்னங்க என்னை நம்பி பொண்ணையே கொடுக்குறீங்க. ரெண்டு நிமிஷம் பேச விட மாட்டீங்களா..” என சிரிப்புடன் கேட்டான். அதில் அவர்களும் சற்று இயல்பாகினர்.

அறைக்குள் எல்லாம் செல்லாமல் மண்டபத்திலே ஒரு ஓரமாக அட்சயாவை அழைத்து வந்திருந்தான். குனிந்த தலையை நிமிராமல் அட்சயா இருக்க,

“நம்ம ரெண்டு பேருக்கும் தான் கல்யாணம் பேசுறாங்க.. உனக்கு தெரியும் தான..” என இடுப்பில் கைகளை ஊன்றியபடி கேட்டான். அதற்கு ஆமாம் என தலையை மட்டும் அசைத்தாள்.

“உனக்கு இதுல விருப்பமா..?”

“எங்க வீட்ல என்னோட விருப்பத்தை கேட்கலையே. நீங்க மட்டும் எதுக்கு கேட்குறீங்க?” என நிமிர்ந்து அவனை பார்த்தாள். அழுதது கண்ணீரின் தடம் அவளின் கன்னத்தில் கோடாக இருக்க, கண்கள் இரண்டும் சிவந்து அவள் அழுத தடத்தை அழுத்தமாக சுட்டிக்காட்டியது.

“ஏன்னா.. லைஃப் லாங் நாம ஒண்ணா இருக்க போறோம். சோ, எனக்கு உன்னோட விருப்பம் தான் முக்கியம்.” என்றான் சட்டமாக.

“இதுக்கு நான் என்ன சொல்லணும். உண்மையை சொல்லவா? பொய் சொல்லவா?” என அவனை நேர்பார்வை பார்த்து கேட்டாள்.

“இனிப்பான பொய்க்கு கசப்பான உண்மையே பெட்டெர். உனக்கு என்ன தோணுதோ அதை சொல்லு..”

“எனக்கு இன்னும் ரெண்டு நாள்ல செமெஸ்டர் எக்ஸாம். அதை நான் எழுதணும். கல்யாணத்துக்கு அப்புறமும் என்னை படிக்க விட்டீங்கன்னா எனக்கு ஓகே.” என்றாள் விழிகளில் ஒரு எதிர்பார்ப்புடன்.

‘இப்படி பட்ட நிபந்தனையோட யாரும் கல்யணத்துக்கு ஓகே சொல்லிருக்க மாட்டாங்க டா குரு. நீ கொடுத்து வெச்சது அவ்வளவு தான்’ என மனத்திற்குள்ளே நினைத்தவன், “எவ்வளவு வேணுமோ அவ்வளவு படி.” என சொல்லிவிட,

“இரண்டாம் முகூர்த்தம் முடிய இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்காம் அச்சு..” என கங்கா அவளை அழைக்க, உடை கூட மாற்றாமல் அப்படியே அக்கினியின் முன்னே அமர்ந்தனர். துரிதகதியில் அனைத்தும் முடிய குருபிரசாத்தின் கரத்தில் மஞ்சள் தாலி வந்திருந்தது.

தாலியை வாங்கிய குருபிரசாத் அட்சயாவை ஒரு நொடி பார்த்தான். விழிகள் கலங்க அவனையே இமைக்காமல் பார்த்தவளின் கழுத்தில் மூன்று முடிச்சியிட்டு, அட்சயாவை மனைவியாகிக் கொண்டான் குருபிரசாத்.

அட்சயாவுக்கு அட்சதையை தூவிய பரிமளத்தின் கண்கள் கலங்கியது. அவரின் அருகில் வந்த சுதனின் தாயார், “குருவை எனக்கு ஏழேட்டு வருஷமா தெரியும். ரொம்ப நல்ல பையன். நீங்க கவலை படாதீங்க உங்க பொண்ணை பத்திரமா பார்த்துக்குவான்.” என நற்சான்றிதலை வழங்கினார்.

பல பெண்களின் கல்யாணத்திற்கு விதவிதமாக ஆடைகளை விற்ற ஆவுடையப்பன், அவர் மகளின் திருமணத்தையே அவள் ஆசைப்பட்ட உடையில் நடத்த முடியாமல் போனது.

பின், அங்கிருந்தே அனைவரும் குருபிரசாத்தின் வீட்டிற்கு கிளம்ப முடிவெடுத்தனர். “திருமணம் தான் அவசர கதியில் நிகழ்ந்திருக்க முறைப்படி அவர்கள் வீட்டில் சென்று பேச வேண்டும்” என முடிவெடுத்து சில சொந்தபந்தங்களை உடன் அழைத்துக்கொண்டு புறபட்டனர்.

சபாபதி வாகனத்தை ஓட்ட அவனின் அருகில் குருபிரசாத் அமர்ந்திருந்தான். பின்னிருகையில் பரிமளத்திற்கும் ஆவுடையப்பனுக்கும் நடுவில் அட்சயா அமர்ந்திருந்தாள். மற்றவர்கள் எல்லாரும் வேறொரு காரில் பின் தொடர்ந்தனர். வழியிலே குருபிரசாத்தின் குடும்பத்தை பற்றி கேட்டுக்கொண்டே வந்தார் ஆவுடையப்பன்.

அனைத்தும் காதில் விழுந்தாலும் அன்னையின் தோளில் சாய்ந்து கண்ணை மூடியிருந்தாள் அட்சயா. கண்ணாடி வழியே அவ்வப்பொழுது அவளை பார்த்துக்கொண்டான் குருபிரசாத்.

சேலத்தில் இருந்து கிளம்பும் பொழுதே அக்காவின் கணவர் அசோகனுக்கு அழைத்து விபரத்தை சொல்லிய குரு, “நாங்க வரப்ப எல்லாரும் நம்ம வீட்ல இருக்க மாதிரி பார்த்துக்கோங்க அத்தான்.” என்றிருந்தான்.

மாலை நான்கு மணிப்போல் மதுரையின் அருகே ஒரு டீக்கடையில் வண்டியை நிறுத்தியிருக்க, “எனக்கு எதுவும் வேணாம்.” என்ற அட்சயாவை தனியாக விட்டு செல்ல தயங்கினர்.

“நான் பார்த்துக்குறேன்.” என குரு சொன்னதும் மற்றவர்கள் வெளியே சென்றார்கள். கிட்டத்தட்ட மூன்று மணி நேர பயணத்தில் களைத்திருந்தாலும் அனைவரின் மனதிலுமே ஒருவித படபடப்பு இருக்க தான் செய்தது.

“உங்க வீட்ல சொல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டத்துக்கு திட்டுவாங்களா?” என சிறுப்பிள்ளையாய் அட்சயா கேட்டாள். அதில் அவளை பார்த்த மாதிரி திரும்பி அமர்ந்தவன், “இல்லையே கொஞ்சுவாங்க..” என்றிட அவனை முறைத்துவிட்டு திரும்பினாள்.

‘பாருடா.. மேடமுக்கு கோபம் கூட வருது..’ என அவன் நினைக்க ஜன்னலை தட்டிய சிறுவன் பூவை வாங்கிக் கொள்ளுமாறு கூறினான். குருவிற்கு ‘வேண்டாம்.’ என சொல்ல மனம் வரவில்லை. எனவே வாங்கியவன் அட்சயாவின் கையில் கொடுத்தான்.

“எனக்கா?” என விழித்தவளிடம், “நான் இதுவரைக்கும் பூ வெச்சதே இல்லை. சோ இது உனக்கு தான்.” என்றான். ஏனோ அவனின் மனம் அவளிடம் உரிமையாய் வம்பு வளர்க்கவே சொன்னது.

“உங்க வீட்டுக்கு போனாலும். ரெண்டு நாள்ல என்னை செம் எழுத விடுவாங்க தான..” என்றவளை கூர்ந்தவன்,

“இனி அது உன்னோட வீடும் தான் அட்சயா. என்னோட வேலை இப்போதைக்கு பெங்களுர் தான். சென்னைக்கு ட்ரான்ஸ்பார் கேட்கலாம். அதுவரைக்கும் நீ உன்னோட ஹாஸ்டல்ல இருந்தே படிக்கலாம்.” என அவன் சொல்ல அவளின் முகம் பளிச்சிட்டது. காலையில் இருந்து எது எதுவோ அவர்கள் இருவரின் வாழ்வில் திட்டமிடாமல் நிகழ்த்திருந்தாலும், கணவன் மனைவி என்ற பந்தத்திற்குள் இணைந்ததும் அவர்களே அவர்கள் வாழ்வின் அடுத்தகட்ட நிகழ்வை திட்டமிட்டனர்.

வெளியே சென்ற அனைவரும் வந்த பின் அட்சயாவின் கையில் இருந்த பூவை பார்த்ததும் பரிமளத்தின் மனதே குளிர்ந்துவிட்டது. மருமகன் அவரின் மகளுக்காக வாங்கிக்கொடுத்த இரண்டு முழம் பூ அவரை மகிழ்ச்சி கொள்ள செய்தது.

அட்சயாவை வற்புறுத்தி கழிவறை அழைத்து சென்று முகம் கழுவி அவளின் தலையை திருத்தி அந்த பூவையும் வைத்துவிட்டார். எதுவும் சொல்லாமல் பொம்மைப்போல் அட்சயா இருந்தாள்.

அதன் பிறகு வண்டி எங்கும் நிற்காமல் விருதுநகரை நோக்கி விரைய, மாலை ஆறுமணிக்கு மேல் குருபிரசாத் வீட்டின் வாயிலில் தான் நின்றது.
 

Kalai Karthi

Active member
குரு அச்சு கியூட். பாக்கி அன்னிக்கு சண்டை போட்டு அனுப்பிட்டாங்களா?
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online

No members online now.
Top Bottom