அத்தியாயம் - 8

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ரோசி கஜன்

Administrator
Staff member
Nov 11, 2018
1,719
1,113
113
“இன்னும் கொஞ்ச நாளைக்கு நிண்டுட்டுப் போவீங்க எண்டு நினைச்சன் ஆன்ட்டி.” உள்ளிட்டாள், கயல்விழி.

“வாரும் பிள்ள!" இன்முகமாக வரவேற்றபடி, "எனக்கும் நிக்க ஆசைதான் மா...” சொல்லவந்ததை முடிக்கவில்லை, “இந்தா முதல் இவனப் பிடியும்!” அவளைக் கண்டதும் நெளிந்து வளைந்து தாவும் பேரனைக் கொடுத்தார், காயுவின் தாயார்.

"டேய் டேய்...வாங்கோ வாங்கோ செல்லக்குட்டி!” அப்போதான் குளித்திருப்பான் போலும், பேபி லோஷன் வாசம் நாசித் துவாரங்களை இதமாய் நிறைத்தது. குழந்தையை அணைத்துப் பிடித்துக் கொஞ்சிக்கொண்டே அங்கிருந்த இருக்கையை நிறைத்தாள், கயல்.

"அடுத்த மாசக்கடைசில பூபாலனிட அம்மா இங்க வர நான் கனடா போவம் எண்டுதான் நினைச்சன்; அதுக்க, சின்னவள் படியில சறுக்கி விழுந்திட்டாளாம்; கால் சுளுக்கு அங்க இங்க அசைய ஏலாமல் இருக்கம்மா எண்டு ஒரே நொய் நொய் எண்டபடி.” சொன்னபடி, தானும் அமர்ந்து கொண்டார், காயுவின் அன்னை.

"என்னதான் சொல்லும் கயல், அம்மாக்கு எப்பவும் கடைசி மகளில தான் பாசம் கூட. அதான், நேற்றிரவு அவள் சொல்ல இண்டைக்குப் பெட்டி கட்டுறார் பாருமன்." முறைத்தபடி வந்தாள், காயு.

அவளோடு வந்த லாதி, "ஸ்வீட்டி ஏன் லேட்?" சிட்டாகப் சென்று கயலின் கழுத்தை வளைத்துக் கொஞ்சினாள்.

மடியிலிருந்த குழந்தையை ஒரு கையால் அணைத்தபடி மறுகையால் சிறுமியை வளைத்துக் கொண்ட கயலைப் பார்த்து இடுப்பில் கை வைத்து முறைத்தாள், காயு.

காயுவின் தாயார் பார்வையும் அவர்களில் தான். "உனக்கேன் நான்? இங்க பாரன் அவையள! இனி உன்ர மகளுக்கும் மகனுக்கும் நானொருத்தி இங்க இருக்கிறன் எண்ட நினைவே வராது."

"உங்களை ஏன், என்னையே ஆர் எண்டு கேட்பினம்! பிறந்து ஆறு மாதமும் ஆகேல்ல, நுள்ளானுக்கே கயலை அவ்வளவு அடையாளம் தெரியுது பாருங்கம்மா!" சொல்லிக்கொண்டே அவர்களருகில் இடித்துக்கொண்டு அமர்ந்தாள், காயு. அதேவேகத்தில், “குட்டியப்பர் அம்மாட்ட வாங்கோ!” மகனை நோக்கிக் கையை நீட்டினாள். அவனோ, கால்களைக் கைகளை அடித்துத் தாயின் அருகாமையை இரசித்தாலும் கயலோடுதான் அணைந்தான்.

"பார் பார்... இவன் பொல்லாத கள்ளன்!" குழந்தையின் கன்னத்தை வலிக்காது கிள்ளிவிட்டு, "பேசாமல் இங்கயே வந்திரும் எண்டா கேட்கிறாவே இல்லையம்மா; ஒரேயடியா பிள்ளைகளத் தன்ர தலையில கட்டிப்போட்டுருவன் எண்டுதான்." கயலைச் சீண்டுவதைத் தொடர்ந்தாள்.

கயல் பதில் சொல்ல முதல், "ச்சே ச்சே பிள்ள அருமையானவா!" காயுவின் தாய்.

“இப்ப ஆர் இல்ல எண்டது! ஆனா பிடிவாதம் எக்கச்சம்.” என்றுவிட்டு, “வாடா தம்பியா, பால் குடிக்க; பிறகு வந்து ஸ்வீட்டியோட செல்லங் கொஞ்சலாம்.” குழந்தையோடு நகர்ந்தாள், காயு.

இப்படியே, நாட்கள் அவசர கதியில் நகர்ந்தாலும் கயல்விழியின் வேலைக்குப் பின்னரான பொழுதுகள் மிக மிக இரம்மியமாகிற்று. அந்தப் பொழுதுகளைத் தமக்கே தமக்கென்று களவாடிக்கொண்டார்கள், காயுவின் குழந்தைகள். இவளும் தான், விரும்பியே களவு கொடுத்துக் கொண்டாள்.

இப்பிடியிருக்கையில்...2019 ஆண்டுக் கடைசியில் மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தின் தலைநகரான ‘வுகான்’ நகரை உலுக்கியெடுக்கத் தொடங்கியிருந்தது, புதுவகை வைரசான ‘கொரோனா’. ‘மனிதரால் உருவாக்கப்பட்டதா மிருகங்களில் இருந்து உருவானதா?' தலைசுற்றலான கதைகள், விவாதங்கள் பரபரப்போடு உலா வந்தன. உலகமெங்கும் விதம் விதமான பேசுபொருளாகவும் மாறியிருந்ததிது. இருந்த போதும், அடிப்படையில் இது சீன நாட்டினருக்கான இக்கட்டாகவே பார்க்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டின் இறுதியில், இதுபற்றி இணையவெளியில் பல காணொளிகள் உலா வந்து கொண்டிருந்தன. அவற்றின் மூலம் கொரோனாவின் வீரியம் மெல்ல மெல்ல வெளியுலகின் கவனம் பெற்றது. எந்த நாட்டை எடுத்தாலும் முக்கிய செய்திகளில் இதுவே இடம் பிடித்துக் கொண்டது, பீதியின் சாயலோடு. அவற்றிலொரு காணொளி மூலம், தனிமைப்படுத்தப்பட்டிருந்த ‘வுகான்’ நகரின் அவலக்கோலம், கொரானாவின் பயங்கரத்தன்மை உலகுக்கு மிகத் துல்லியமாக உணர்த்தப்பட்டதெனலாம்.

அந்தகார இரவொன்றில், வுகானைச் சூழ்ந்திருந்த கருமையை விரட்டி விடும் பிரயத்தனத்தில் மின்குமிழ்கள் இருக்க, தம்மைச் சூழ்ந்திருந்த அசாதாரண நிலையிலிருந்து மீழ, நம்பிக்கையை மட்டுமே நம்பியிருந்தார்கள், அங்கிருந்த மக்கள். அதுவே, இரவானதும் தத்தம் வீடுகளில் இருந்தபடியே குரல் எழுப்பி ஒருவர் ஒருவருக்குத் தைரியம் கொடுக்கவும் வைத்திருந்தது. இம்மாபெரும் இக்கட்டிலிருந்து எப்படியும் மீண்டிடுவோம் என்ற நம்பிக்கையை ஒருவர் ஒருவருக்கு விதைத்துக் கொண்ட அக்காட்சி, பார்த்தோர் உள்ளங்களில் கலக்கத்தையும் கண்ணீரையும் ஒருங்கே தோற்றுவித்தது.

அப்போதும் அங்கிருந்த நிலை உலகமெங்கும் வரும் என்றெல்லாம் யாருமே நினைத்திருக்கவில்லை. அமெரிக்காவில், 2020 ஆம் ஆண்டு தை மாதத்தில் முதலாவது கொரோனா நோயாளில் கண்டறியப்படுகையிலும் அதைத் தொடர்ந்த நாட்களிலும் எவருமே அவ்வளவாகப் பெரிதாக எடுக்கவில்லை. நாட்கள் செல்ல செல்ல, சீனாவில் ‘கொரோனா’ நோய் பற்றிய பீதியும் இழப்பும் கட்டுக்குள் வந்திட, உலகுக்கே சவால்விடும் கொள்ளை நோயானது, அது. மரணங்கள் மலிந்து போயின. அமெரிக்காவிலும் நோய்க்கிருமியின் பரவல் நிலை முற்றிவிட்ட பின்னரே அதன் கனத்தை உணர்ந்தார்கள், மக்கள். உல்லாசமாகச் சுற்றித் திரிந்த பெருநகர வீதிகளில் எல்லாம் பிணங்களின் ஆக்கிரமிப்பானது.

இப்படியிருக்கையில், 2020 மே மாதக் கடைசியில் பூபாலன் கொரோணாவின் தொடுகையுணர்ந்தான். இதுதான் என்று அறிந்ததும் அதிர்ந்து கலங்கினாலும் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை, அவன். 'சின்னப்பிள்ளைகள் உள்ள வீடு கவனமா இருந்தாச் சரி' என்ற முடிவில், தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொண்டான். மருத்துவர் ஆலோசனைகளை ஒன்றுவிடாது பின்பற்றினான். காயுவுக்கும் அறிவுறுத்தினான்.


மேலும் வாசிக்க ...

 

Author: ரோசி கஜன்
Article Title: அத்தியாயம் - 8
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Shameem @ Sumithra