• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அத்தியாயம் - 9

STN - 92

Member
Staff member
மனம் - 9

அட்சயாவின் தொலைபேசி அழைப்பின் பெயரில் அவள் தங்கியிருந்த விடுதிக்கு குரு, அபிலாஷ் மற்றும் ஜெசிந்தாவும் சென்றுக் கொண்டிருந்தனர். வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்த குருவிடம், “என்னவாம் டா. ஆச்சரியமா உன்னை வர சொல்லிருக்கா?” என்றான் அபிலாஷ்.

“எனக்கும் தெர்ல டா. ரோஷன் அவங்க ஊர்ல தான் இருக்கான் அது கன்பார்ம். எதுவும் பிரச்சனை இல்லாம கூப்பிட்டிருக்க மாட்டா..” என்ற குரு வாகனத்தை அட்சயா தங்கியிருக்கும் விடுதியின் முன் நிறுத்தினான்.

அங்கு வாசலிலே இரவுடையில் நின்றிருந்த அட்சயாவின் கண்கள் அவள் அழுதிருந்ததை பறைசாற்றியது.

காரிலிருந்து இறங்கியவர்கள் அட்சயாவின் அருகில் சென்றனர். அவர்களை பார்த்த விடுதியின் காப்பாளர். “நீங்க தான் இந்த பொண்ணுக்கு சொந்தகாரங்களா சார்? இந்த பொண்ணு கூட தங்கியிருக்க பொண்ணோட ஐஞ்சு பவுன் செய்யினை இவங்க திருடிட்டதா சொல்லுறாங்க. இவங்க கிட்ட கேட்டா இவங்க எடுக்கவே இல்லை; எனக்கு அதை பத்தி ஒண்ணுமே தெரியாதுன்னு சாதிக்குறாங்க. அந்த பொண்ணு போலீஸ் போவேன்னு மிரட்டிட்டு இருக்கா. அதான் அட்சயா கிட்ட அவளுக்கு தெரிஞ்சவங்களை கூப்பிட சொன்னேன்.” என கடகடவென சொன்னார்.

“எனக்கு அதை பத்தி எதுவும் தெரியாது..” என்றாள் அட்சயா குனிந்த தலையுடன்.

“ரூம்ல ஒழுங்கா தேடி பார்த்தீங்களா?” என்றான் குரு யோசனையுடன்.

“நல்லா பார்த்துச்சு சார். நானே நேரடியா போய் ரூம் முழுக்க தேடி பார்த்தேன். இருங்க அந்த பொண்ணையே கூப்பிடுறேன்.” என ஷீலாவை அழைத்தார். அவளின் முகத்திலும் அழுத தடம் தெரிந்தது.

வேகமாக குருவின் அருகில் வந்தவள், “நீங்க தான அன்னைக்கு இவ கூட இங்க வந்திருந்தது சார்? இவ கிட்ட சொல்லி என்னோட செயினை கொடுக்க சொல்லுங்க ப்ளீஸ். எங்க அப்பா ஆசையா வாங்கி கொடுத்தது.” என அழுதாள்.

“அட்சயா தான் பார்க்கலனு சொல்லுறாளே. அண்ட் ரூம் முழுக்க பார்த்துச்சு தான? மத்தவங்க ரூம்லயும் நீங்க நல்லா பாருங்க. தேவை இல்லாம எதுக்கு அவ மேல சந்தேகப்படுறீங்க?” என்றான் குரு.

“எல்லாரோட ரூம்லயும் பார்த்துச்சு சார். நேத்து நைட் என்னோட பில்லோக்கு கீழ தான் வெச்சிருந்தேன். காலைல காணோம். இவ மட்டும் தான் என்னோட ரூம்ல இருந்தா. அப்ப அவ மேல தான சந்தேகம் வரும்?” என அட்சயாவை முறைத்தாள் ஷீலா.

அட்சயாவிற்கு அசிங்கமாக இருந்தது. ‘திருடி’ என்ற பழியை அவளின் மீது சுமத்தி காலையில் இருந்தே இப்படி தான் அவளை கீழாக அனைவரிடமும் பேசிக் கொண்டிருக்கிறாள் ஷீலா.

“நாம ரெண்டு பேரும் ரெண்டு மாசமா ஒரே ரூம்ல ஷரிங்ல இருக்கோம். ஆனா நீ என்னையே சந்தேகப்படுறீயா?” என்ற அட்சயாவின் குரலில் உணர்வே இல்லை.

அன்று மாலை தான் அட்சயா விடுதியை காலி செய்யவிருக்கிறாள். ஆனால் இப்பொழுது இப்படி ஆகும் என அவள் சுத்தமாக நினைக்கவில்லை. இன்னும் சற்று நேரத்தில் சபாபதியும் வந்துவிடுவான். அவனிடம் என்ன சொல்வது என நினைக்க நினைக்க அவளின் கண்ணில் இருந்து கோடாக கண்ணீர் இறங்கியது.

“நீ எடுத்திருந்தா கொடுத்துடு அட்சயா. இல்லனா நா போலீஸ் போவேன்.” என ஷீலா மீண்டும் மிரட்ட தொடங்கவும் செய்யாத தப்பிற்கு அட்சயாவிற்கு பயம் வந்துவிட்டது. பழக்கமில்லாத ஊரில் போலீஸ் ஸ்டேஷன் என்றதும் பயந்தவள் நொடியும் யோசிக்காமல் தான் குருபிரசாத்திற்கு அழைத்துவிட்டாள்.

“இங்க என்ன நடக்குதுனே எனக்கு தெரியல. நிஜமா நான் அதை எடுக்கல..” என குருவை பார்த்தாள்.

அவளை அந்நிலையில் பார்க்கவே அவனுக்கு மனம் பிசைந்தது. நேற்றிரவு அணிந்திருந்த இரவுடையில் தலை கலைந்து கண்கள் கலங்கி நின்றிருந்தாள். “அழுதா சரியாகிடுமா?” என அவளின் கண்களை துடைத்தவன், “போ போய் வேற டிரஸ் மாத்திட்டு வா.” என்றவனை புரியாமல் பார்த்தாள்.

“போ.” என்றவன் ஜெசிந்தாவையும் அவளின் உடன் அனுப்பினான். சிறிது நேரம் யாருக்கோ அழைத்து பேசிக் கொண்டிருந்தான். பின் சில நிமிடங்களில் அவனுக்கும் ஓரிரு அழைப்பு வர, அதிலும் பேசிவிட்டு அவன் திரும்ப அட்சயா சுடிதார் அணிந்து வந்திருந்தாள். கூந்தலை மொத்தமாக போனி டேயிலில் அடக்கியிருந்தாள்.

“சார். நான் இங்க அவ்ளோ டென்சன்ல இருக்கேன். நீங்க கூலா இருக்கீங்க. எடுத்ததுல உங்களுக்கும் பங்கு இருக்குனு சொல்லிட்டாளா? அதான் அமைதியா இருக்கீங்களா? எனக்கு இப்பவே என்னோட செயின் வரணும். இல்லனா அவங்க எடுத்ததுக்கு மதிப்பா பணமாவது நீங்க கொடுக்கணும். இல்லைனா நான் போலீஸ் போவேன்.” என ஷீலா மீண்டும் கத்தினான்.

அபிலாஷிடம் ஏதோ சொல்லிவிட்டு அவனை அனுப்பிவைத்த குரு, “நானும் அதையே தான் சொல்லுறேன். ஐஞ்சு பவுனை சாதாரணமா விட முடியாது. உடனே போலீஸ் காம்பலைன்ட் கொடுங்க போங்க.” என்றான் அலட்டிக்கொள்ளமல்.

“என்ன சார் போலீஸ் போக மாட்டேன்னு பார்க்குறீங்களா? எதோ ரெண்டு மாசம் பழகினதால தான் இவ்ளோ நேரம் அமைதியா இருந்தேன். இருங்க இப்பவே போலீசுக்கு கால் பண்ணுறேன்..” என்றவளை தடுத்தாள் அட்சயா.

அதில் குரு அவளை முறைக்க, “நான் தான் எடுக்கலனு சொல்லுறேனே ஷீலா. அப்புறம் எதுக்கு போலீஸ் போகணும்?” என குருவிடம் திரும்பாமலே கேட்க,

“எனக்கு என்னோட நகை வேணும் இல்ல அதுக்கு இணையா காசு வேணும். அப்படியில்லனா நான் போலீஸ் போவேன். நீ தான் என்கூட இருந்த உன்மேல தான் நான் காம்பலைன்ட் கொடுப்பேன்.” என ஷீலா சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தாள்.

‘மறுபடி போலீஸ் ஸ்டேஷனா? ஒருமுறை அங்க போய் மொத்த வாழ்க்கையையும் தொலைச்சது பத்தாதா?’ என்றவளின் உடல் வெடவெடுத்தது. “பார்த்தியா போலீஸ்னு சொன்னதும் உன்னோட உடம்பு நடுங்குது. அப்ப நீ தான் அதை எடுத்திருக்க. ஒழுங்கா கொடுத்துடு அட்சயா..” என ஷீலா மீண்டும் மீண்டும் அட்சயாவின் மீதே பழியை சுமத்தினாள்.

குருவின் அருகில் சென்ற அட்சயா, “அவ கேட்குற காசை கொடுத்துடவா? ஈவ்னிங் நான் வேற ஹாஸ்டல் மாறிடுவேன். இதுக்கு அப்புறம் எந்த பிரச்சனையும் வராது தான?” என அவனின் முகத்தை பார்க்க, குரு அவளை முறைத்துக் கொண்டு இருந்தான்.

“அப்ப எதுக்கு டி எனக்கு கால் பண்ணி வர சொன்ன?” என சீறினான் குரு.

“வேற என்ன பண்ணுறது?” என திருதிருத்தவளிடம்,

“அவ சொல்ற செயினை நீ பார்த்துருக்கியா?”

“ம்ம்ம். ஒரு வாட்டி காட்டினா நான் பார்த்துருக்கேன். நேத்து நைட் அவ தூங்குறப்ப பார்த்த ஞாபகம் இல்லை.” என்றாள் அட்சயா. அன்றொருநாள் அட்சயா புடவை அணிந்த பொழுது, இந்த செய்யினை போட்டுக்கோ அட்சயா நல்லாருக்கும் என ஷீலா கொடுத்ததும் அதை அட்சயா மறுத்ததும் அவளுக்கு நினைவு வந்தது.

“அவங்களோட பேக்ல செக் பண்ணியா?”

“ஆமா.. காலைல இருந்து எங்க ரூம்ல ஒரு சின்ன இடம் கூட விடாம தேடிட்டோம்.” என அட்சயா சோர்வுடன் சொன்னாள்.

அந்நேரம் இரு காவலர்களுடன் அபிலாஷ்
அங்கே வந்தான். “இவங்க செயின் தான் காணோமாம் மேடம். என்னனு பாருங்க.” என குருவே அவர்களிடம் நேராக சொல்லிவிட்டான்.

இதனை ஷீலாவே எதிர்பார்க்கவில்லை. போலீஸ் அவர்களின் பாணியில் விசாரிக்க ஓரளவு சமாளித்தாள். பின் அவர்களின் அறைக்குள் சென்று தேட செயின் கிடைக்கவில்லை. மாறாக ஒரு அடகு கடையின் ரசீது தான் கிடைத்தது.

பின் ஷீலாவே அனைத்தையும் ஒப்புக்கொண்டாள். தொலைந்து போனதாக சொன்ன செயின் அவளின் காதலனுக்காக அடகு வைத்ததாகவும் இப்பொழுது ஊருக்கு போக நகை வேண்டும் என்றவுடன் அட்சயாவை வைத்து பணம் பறிக்க நாடகமாடியதாகவும் ஒப்புக்கொண்டாள்.

அவளின் முன்னே சென்ற அட்சயா அவளின் கன்னத்திலே ஓங்கி அறைந்தாள். காலையில் இருந்து எவ்வளவு இழிவான சொற்களையெல்லாம் அவளிடமிருந்து கேட்டிருந்தாள். “சாரி அட்சயா.. சார் ப்ளீஸ் கேஸை வாபாஸ் வாங்குங்க. எங்க வீட்டுக்கு தெரிஞ்சா நா அவ்ளோதான்.” என்றவளிடம் குரு கருணையே காட்டவில்லை.

“நீங்க ஸ்டேஷன் வந்து எழுதி கொடுங்க சார்.” என குருவிடம் சொன்ன போலீஸ் ஷீலாவுடன் முன்னே சென்றுவிட்டார்கள்.

ஏமாற்றபட்ட உணர்வில் அட்சயாவின் முகம் வெளிறி இருந்தது. “பிரச்சனைனு வந்தா ஃபேஸ் பண்ணனும். நாம தப்பிச்சா போதும்னு ஓட கூடாது.” என குரு குட்டு வைத்தான்.

“அது.. போலீஸ்னு சொன்னதும் எனக்கு பயமாகிடுச்சு. அதுக்கு தான் உங்களையும் கூப்பிட்டேன். சாரி..” என்றாள்.

அப்பொழுதே நேரம் பண்ணிரண்டை கடந்திருக்க அப்பொழுது தான் சபாபதி அங்கு வந்தான். “உங்க தங்கச்சியை பார்த்துக்கோங்க.” என்ற குரு அபிலாஷ், ஜெசிந்தாவை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டான்.

நடந்ததை கேட்ட சபாபதி விடுதி உரிமையாளரிடம் சண்டையிட்டுவிட்டு அட்சயாவை அந்த விடுதியில் இருந்து மொத்தமாக அழைத்து சென்றுவிட்டான்.

இங்கு போலீஸ் ஸ்டேஷன் வந்த குருபிரசாத் ஷீலாவின் மேல் புகார் கொடுத்துவிட்டு வெளியேறினான்.

போலீஸ் ஸ்டேஷன் வரும்வரை தைரியமாக இருந்தவனுக்கு அங்கு உள்ளே போகும் பொழுதே அட்சயா சொன்னது போல் மனது பிசைந்தது. இதே போன்ற ஒரு போலீஸ் ஸ்டேஷனில் தான் அவனின் திருமணமும் முறிந்திருந்தது!

மதியத்திற்கு மேல் வீட்டிற்கு வந்தவன், குளித்து உடை மாற்றி அபிலாஷின் கட்டயத்தில் அவனின் வீட்டிலே சாப்பிட்டுவிட்டு வந்தவனுக்கு அடுத்து என்ன என புரியவில்லை.

ஒரு பிரச்சனை என்றதும் இவனை தான் அட்சயா அழைத்தாள் என்பதே அவனுக்கு இதமாக இருந்தது. ‘இன்னைக்கு கூப்பிட்டவ,

அன்னைக்கு விட்டுட்டு போனா தான..?’ என்றவனின் சிந்தனை அவன் திருமணம் புரிந்த நாளிற்கு சென்றது.
 

STN - 92

Member
Staff member
“முக்கியமான விஷயம் பேசணும் மாமா. நாங்க வீட்டுக்கு வாரோம்.” என அசோகன் சொல்லியிருக்க தீப்பெட்டி தொழிற்சாலையில் இருந்து விரைவாக பாக்கியலட்சுமியும் குணசீலனும் வீட்டிற்கு வந்திருந்தனர். என்ன விஷயம் என அவரின் மகள் நளினியிடம் கேட்டாலும் பதில் கிடைக்கவில்லை.

சிறிது நேரத்தில் வாசலில் வந்து நின்ற காரில் இருந்து குருபிரசாத் ஒரு பெண்ணுடன் மணக்கோலத்தில் கீழே இறங்கினான். இல்லை இல்லை அவள் சாதாரண பாவாடை தாவணி அணிந்திருக்க இவன் பேண்ட் சட்டையில் இருந்தான். அட்சயாவின் கழுத்தில் தொங்கிய தாலி தான் அவர்களுக்கு திருமணமாகியதை உறுதிப்படுத்தியது.

அபிலாஷுடன் வேறொரு வாகனத்தில் வந்த மற்ற அட்சயாவின் உறவினர்களும் அவர்களுடன் வந்து நின்றனர்.

வீட்டின் வெளியே பார்த்த பாக்கியத்திற்கு ஒன்றும் புரியவில்லை. அதிர்ச்சியுடன் வாசலிலே அவர்களை நோக்கி நடந்தார். அவரின் பின்னே குருவின் மொத்த குடும்பமும் சென்றது.

அதற்குள் அவர்களை பார்த்த அக்கம் பக்கத்தினரும் அவர்களின் வீட்டில் அருகில் வந்து நின்றுவிட்டனர்.

“நம்ம பாக்கியத்தோட பையன் யாரோ ஒரு பொண்ணை லவ் பண்ணி சென்னைல இருந்து கல்யாணம் முடிச்சி கூட்டிட்டு வந்துட்டானாம்.”

“ரெண்டு வீட்டுக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க போல. அதுக்கு தான் படிக்க, வேலைக்குன்னு வெளிய அனுப்பவே ரோசனையா இருக்கு..” என காத்துவாக்கில் நாற்பது விதமாக கதையை கட்டினார்கள்.

“இது தான் நீங்க சொன்ன விஷயமா?” என இரண்டு வயது ஸ்ருதியை கையில் பிடித்தபடி அசோகனிடம் நளினி கேட்க, “உன் தம்பிக்கிட்டயே கேளு.” என அவளை திருப்பிவிட்டான்.

பாக்கியம் அவர்களை உள்ளே அழைக்கவே இல்லை. அமைதியாக குருவை பார்த்தவர் அட்சயாவின் கழுத்தில் தொங்கும் தாலியை பார்த்தார். அதில் அட்சயாவின் முகம் வெளிரிட, தானாகவே குருவின் கையை பிடித்துக் கொண்டாள். “அம்மா.. என்ன நடந்ததுன்னு உள்ள போய் பேசலாம்..” என பொறுமையாக குரு சொன்னான். சுற்றியும் வேடிக்கை பார்ப்பதே அவனுக்கு பிடிக்கவில்லை.

“உள்ள வந்து என்ன பேசணும் குரு? படிப்பு, தொழில்னு எல்லாமே உன்னோட முடிவு தான். ஆனா இப்படி கல்யாணத்துல கூட எங்களை கேட்காம நீயே முடிவெடுப்பன்னு நாங்க எதிர்பார்கல.” என பாக்கியலட்சுமியின் குரல் கணீரென்று வந்தது. அந்த குரலிற்கே அட்சயாவின் உள்ளம் பதற துவங்கியது.

அவர்களின் ஊரில் இருந்து கிளம்பும் பொழுதே, “அவங்க வீட்ல என்ன சொன்னாலும் கொஞ்சம் பொறுமையா போகணும் அச்சு.” என பலவிதமாக பரிமளம் அட்சயவிற்கு அறிவுரை வழங்கியிருந்தார். பதினெட்டு வயதில் இருந்தவளிற்கு இந்த கல்யாணம் அதனை தொட்டு வரும் உறவுகளின் உரசல்கள் என அனைத்துமே புதியது. அதிலும் திருமணம் என்ற வார்த்தையை கூட அந்நாள் வரை யோசிக்காதிருந்தவளிற்கு பாக்கியத்தின் அதிரடி பேச்சு அந்நொடி அவளின் மனதில் பயத்தை விதைத்தது.

“அது வந்து சம்பந்தி. என்ன நடந்ததுனா” என ஆவுடையப்பன் தானாகவே வந்து விளக்கம் கொடுக்க முனைய,

“யாருக்கு யார் சம்பந்தி? நீங்க யாருனே எனக்கு தெரியாது.” என முகத்தில் அடித்தது போல் பேசினார் பாக்கியலட்சுமி. தன்னுடைய விருப்பமோ சம்மதமா இல்லாமல் நடந்த மகனின் திருமணத்தை அவர் அங்கீகரிக்க யோசிக்க கூட தயராகயில்லை.

பாக்கியத்தின் பேச்சில் ஆவுடையப்பன் மட்டுமில்லாமல் உடன் வந்த அனைவருக்குமே ஒருமாதிரி ஆகிவிட்டது. பிடித்திருந்த குருவின் கையை விலக்கிய அட்சயா ஆவுடையப்பனின் அருகில் சென்று நின்றுக் கொண்டாள். ‘இவ வேற?’ என அவளை முறைதான் குருபிரசாத்.

“அவங்க என்ன நடந்ததுன்னு சொல்லட்டும் பாக்கியம்? முதல்ல அவங்களை உள்ள கூப்பிடு. வீட்டு மானத்தை வெளிய இருந்து நீயே ஏலம் விடுவ போல..” என குணசீலன் கொஞ்சம் இறங்கி வந்தார்.

“இன்னும் போறதுக்கு என்ன இருக்கு.” என்ற பாக்கியம் நுழைவாயிலை தாண்டி வாகனங்களை நிறுத்தும் இடம் காலியாக இருக்க அங்கே தான் அனைவரையும் அழைத்தார்.

அதில் குருவின் மனம் வெகுவாக முரண்டியது. அவன் அறிந்த வரையில் பாக்கியம் சற்று பிடிவாத குணம் உடையவர் தான். அதற்காக மற்றவர்களை மதிக்க மாட்டார் என்றில்லை. அவர் வளர்ந்த சூழ்நிலை அப்படி. வீட்டில் ஒரே மகள் என செல்லமாக வளர்த்திருந்தாலும், ஆண்மகன் இருந்திருக்கலாம் என பாக்கியத்தை சிறு வயதில் இருந்தே மற்றவர்கள் குறைவாக சொல்லியிருக்க, ஏன் நான் அனைத்தையும் பார்க்க மாட்டேனா? என்ற எண்ணத்தை தானாகவே அவருக்குள் வேரூன்றியது.

அதன் பொருட்டு வீட்டு நிர்வாகம், தொழில் என அனைத்தையும் அவரே முன்னிலையில் இருந்து பார்ப்பார். பெண் தானே என ஏமாற்ற கூடாது என யோசித்த பாக்கியம் சற்று கடுமையாக தான் அனைவரிடமும் நடந்துக்கொள்வார். காலப்போக்கில் அதுவே அவரின் குணமாகிவிட்டது. அப்படிப்பட்டவருக்கு அவர்களின் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்யும் சாதுவான குணசீலனை பிடித்துவிட்டது. எதிர் துருவங்கள் ஈர்க்கும் விதி இவர்களுக்குள்ளும் வசப்பட, ஒரே மகள் என்பதால் குணசீலனை வீட்டோடு மருமகன் ஆக்கிக்கொண்டனர் பாக்கியத்தின் பெற்றவர்கள்.

என்ன தான் பாக்கியம் கடுமையானவர் என்றாலும் அனைவரையும் சமமாக தான் நடத்துவார். பாக்கியம் கொஞ்சம் கறார் தான். ஆனா நேர்மையானவர் என்று தான் அனைவரும் அவரை குறிப்புடுவர்.

அப்படி பட்ட அன்னை, இன்று தான் திருமணம் செய்து வந்திருந்தவளை வீட்டின் உள்ளே கூட அனுமதிகாதது குருவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அவன் அன்னை சுலபமாக ஏற்றுக்கொள்ள மாட்டார் என அவன் அறிவான். அதற்காக என்ன ஏதென விசாரிக்க கூட செய்யாமல் இப்படி உதாசினமாக நடந்துகொள்வது அவனுக்கு ஏற்புடையதாக இல்லை.

இருந்தும் தன்னிலை விளக்கமாக நடந்து முடிந்த அனைத்தையும் ஒன்றையும் மறைக்காமல் அவன் வீட்டினரிடம் சொன்னான் குருபிரசாத். ‘அப்ப நம்ம பையனா விரும்பி கல்யாணம் பண்ணல.’ என்ற ஒன்றே பாக்கியத்திற்கு ஆசுவாசத்தை கொடுத்தது.

“யாரோ பண்ண தப்புக்கு நீ எதுக்கு குரு சிலுவை சுமக்கணும். அந்த பொண்ணை அப்படியே விட்டுட்டு வீட்டுக்குள்ள போ..” என்றார்.

யாருமே இதனை எதிர்பார்க்கவில்லை. அட்சயாவின் பெற்றோர் அவரின் பேச்சில் வெகுவாக கலங்கிவிட்டனர். குருவின் பெரிய வீட்டையும் அதனை சுற்றியுள்ள தோட்டத்தையும் பார்த்தவர்களுக்கு மயக்கம் வராத குறை தான். ‘சுதனுடன் பெங்களூரில் வேலை பார்க்கிறான்.’ என அறிந்தவர்களுக்கு அவனின் இந்த செல்வ செழிப்பு அவர்களுக்கு தடுமாற்றத்தை கொடுத்தது. அதற்கு இணையாக பாக்கியத்தின் ஆளுனையான தோற்றம், ‘சின்ன பெண்ணான அட்சயா இங்கே எப்படி வாழ போகிறாளோ?’ என அச்சத்தையும் கொடுத்தது.

“ம்மா.. என்னை நம்பி கல்யாணம் பண்ணி வந்துருக்கா மா. எப்படி விட முடியும்?” என்ற மகனை தீர்க்கமாக பார்த்தார்.

“அப்படினா உனக்கு உன்னோட அம்மா சம்மதம் தேவையில்லை அப்படிதான?”

“ம்மா. என்ன பேசுறீங்க? அந்த சூழ்நிலை அப்படி ம்மா..” என குரு விளக்கம் கொடுத்தான்.

“அவங்க எந்த ஆளுங்க?” என குருவின் அம்மாச்சி கலைவாணி கேட்க,

“என்ன?” என அதிர்ந்தான் குருபிரசாத்.

“அவங்க நம்ம ஆளுங்க இல்லை தான குரு. வேணாம் ராசா.” என திடமாக அவரும் மறுத்தார். அதனை மெளனமாக ஆதரித்த பாக்கியத்தை வெறுப்புடன் பார்த்தான்.
 

STN - 92

Member
Staff member
“அப்படி உங்கள மீறி அவளை உள்ள கூட்டிட்டு வந்தா என்னமா பண்ணுவீங்க?” என எதிர்த்து நின்றான் குருபிரசாத்.

அங்கிருந்த பூச்சு மருந்தை எடுத்தவர். “என்னை மீறி அந்த பொண்ணு உள்ள போனா நான் தற்கொலை பண்ணிப்பேன்.” என மிரட்டினார்.

‘எங்கே மகன் மொத்தமாக போய் விடுவனோ?’ என யோசித்தவருக்கு மகனின் மேல் இருந்த உரிமை உணர்வு பாக்கியத்தை அப்படி யோசிக்கவைத்தது. வாழ்க்கையை அதன் போக்கில் விட்டிருந்தாலும் தெளிவான சிந்தனையும் நிதானமுமாக அதனை கையாளும் குருபிரசாத்தே அந்நேரம் தடுமாறி தான் நின்றான்.

பாக்கியத்தின் பதிலில் அட்சயாவிற்கு மேலும் மேலும் மனதின் பாரம் தான் அதிகரித்தது. ‘எதுக்கு கல்யாணம்னு ஒன்னு பண்ணனும்? இப்படி இங்க வந்து நிக்கணும்?’ என யோசிக்கவே தொடங்கிவிட்டாள். அவர்களுடன் வந்திருந்த உறவினர்களுக்கும் சற்று அதிர்ச்சியாக இருந்தது.

“இந்தாம்மா. உங்க வீட்டுக்கு எங்க பொண்ணை வாழ அனுப்புனா இப்படி தான் மிரட்டுவீங்களோ? உங்களை நம்பி எப்படி எங்க பொண்ணை விடுறது..?” என பயத்தை நேரடியாக பேச,

“அம்மாகிட்ட நானே பேசிக்குறேன். அநாவசியமா நீங்க அம்மாவை எதுவும் சொல்ல வேண்டாம்.” என தடுத்த குரு பாக்கியத்தின் அருகில் சென்றான்.

“இல்லை குரு. என்கிட்டே வராத. நீ அந்த பொண்ணை விட்டுட்டு வந்தா மட்டும் தான் வரணும்.” என்ற அம்மாவை விட்டுவிட்டு இயலாமையாக குணசீலனை பார்த்தான் குருபிரசாத். அவருக்கு பாக்கியம் செய்வது பிடிக்கவில்லை என்றாலும் மகனின் திருமணத்தையும் ஆதரிக்க தோன்றவில்லை. எனவே அமைதியாக இருந்துக்கொண்டனர்.

அசோகன், நளினி மற்றும் அட்சயாவின் பெற்றோர்கள் என அனைவருமே பாக்கியத்திடம் பேச அவர் கொஞ்சமும் அசையவில்லை.

“இது சரிப்பட்டு வராது போல.. வாங்க போலீஸ் ஸ்டேஷன் போவோம்.” என அவர்களின் உறவினர்கள் சொல்ல,

“ஏண்ணே போலீஸ் ஸ்டேஷன் போகனுமா?” என பரிமளம் பரிதவிக்க,

“பின்ன என்ன பரிமளம் அந்தம்மா அது பாட்டுக்கு தற்கொலைனு மிரட்டுது. நம்ம புள்ளை வாழ வேணாமா? நாளைக்கே எதாவது நடந்துட்டா யாரு பொருப்பெடுக்குறது?” என அவர்களுக்குள் பேசி பேசி விஷயத்தை காவல் நிலையம் வரை அந்த இரவிலும் இழுத்துச் சென்றனர்.

“போலீஸ் ஸ்டேஷன் தானே வாங்க நானே நியாயம் கேட்குறேன்.” என ஆளுக்கு முன்னாக கிளம்பினார் பாக்கியம்.

குருபிரசாத்திற்கு அதில் துளியும் விருப்பம் இல்லை. அங்கு சென்று மட்டும் என்னவாகிடும் என யோசித்தவனை அபிலாஷும் அசோகனும் தான் அழைத்து சென்றனர்.

“உங்க பொண்ணுக்கு அநியாயம் நடந்தப்ப மட்டும் உங்க தங்கச்சி மகன்னு போலீஸை வேணாம்னு சொல்லிட்டு. இப்ப உங்க பொண்ணு வாழ்க்கைக்காக இப்படி எல்லாரையும் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் கூட்டிட்டு வந்திருக்கீங்க?” என பாக்கியம் நக்கலாக கேட்டார்.

அவர் சொல்வதில் இருந்த உண்மை சுட, ஆவுடையப்பனுக்கு சகலமும் ஆடியது. அதில் சற்று தள்ளாடியவரை அட்சயாவும் சபாபதியும் பிடித்துக் கொண்டனர்.

“உங்களுக்கு என்னப்பா அச்சு? நாம நம்ம வீட்டுக்கே போய்டலாம் ப்பா. எனக்கு பயமா இருக்கு..” என அழுகையில் அட்சயா சொன்னாள்.

“போதும் ம்மா நடிச்சது. எனக்கென்னமோ இன்னும் சந்தேகமா தான் இருக்கு. நான் கூட சில படத்துல பாத்துருக்கேன். வாட்டசாட்டமா வசதியான பையன் கிடைச்சா இப்படி கழுத்தை நெறுக்கி புடுச்சி கல்யாணம் பண்ணி வைப்பாங்கலாமே? நீங்களும் அப்படி தான் உங்க பொண்ணை பணத்துக்காக கல்யாணம் பண்ணி வெச்சிங்களோ?” என பாக்கியம் மேலும் கேட்டிட, வேகமாக அவரை நோக்கி திரும்பிய சபாபதியை பிடித்துக்கொண்டார் ஆவுடையப்பன்.

“ம்மா.. தேவையில்லாம பேசாதீங்க.” என குரு அதட்டியபின் தான் வாயை மூடினார் பாக்கியம். ஆனால் அதற்குள்ளே பேச வேண்டியதை பேசிவிட்டாரே!

காலையில் இருந்து மற்றவர்களின் பார்வையில், பேச்சில் கீழாக உணர்ந்த அட்சயாவிற்கு இந்த திருமணமே பணத்திற்காக என அவர் சொல்லியது மனதை அழுத்தியது. அதுவும் அவளின் முன்னே ஆவுடையப்பனின் தடுமாற்றம் அவளின் இதயத்தையே நொறுக்கியது.

‘யாருக்கு வேணும் உங்க பணம்?’ என யோசித்தவள் இதற்கு மேல் தனக்காக பெற்றவர்கள் மற்றவரின் முன் தலை குனிய கூடாது என நொடி பொழுதில் முடிவெடுத்திருந்தாள்.

தனியாக இருக்கும் பொழுது நாம் எடுக்கும் முடிவு நம்மை மட்டுமே சாரும். ஆனால் திருமணம் என்ற பந்தத்தில் வேண்டியோ வேண்டாமலும் இணைந்த பின் ஒருவரின் முடிவு மற்றவரை நிச்சயம் பாதிக்கவே செய்யும்.

பதினெட்டு வயதில் பக்குவமில்லாமல், குருவை பற்றிய சிந்தனை சிறிதும் இல்லாமல் அந்நொடி அவளையும் அவளின் பெற்றோரை பற்றியும் மட்டும் யோசித்தாள் அட்சயா.

நடந்ததை முழுதாக கேட்ட காவல் அதிகாரி குருவையும் அட்சயாவையும் அவரின் முன்னே அழைத்தார். “உங்க ரெண்டு பேர் விருப்பத்துல தான் இந்த கல்யாணம் நடந்துச்சா?” என அவர்களிடம் நேராகவே விசாரித்தார்.

“நான் முழு சம்மதத்தோட தான் தாலி கட்டினேன்.” என்ற குருவை பாக்கியம் முறைத்தார்.

காவல் அதிகாரி அட்சயாவை பார்க்க, “என்னோட விருப்பம் இல்லாம தான் இந்த கல்யாணம் நடந்தது. அம்மாப்பா வற்புறுத்துனதால தான் நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.” என குனிந்தபடியே சொன்னவள் யாரின் முகத்தையும் பார்க்கவேயில்லை. குருவின் பார்வை அவளையே தான் துளைத்தது. அதனை உணர்ந்தாலும் அவனிடம் திரும்பவில்லை.

“அச்சு என்னம்மா பண்ணுற?” என பரிமளம் அவளின் அருகில் வர,

“யாரும் கிட்ட வர கூடாது. ரெண்டு பேரும் மேஜர் அவங்களே முடிவெடுப்பாங்க.” என மற்றவர்களை தடுத்துவிட்டார் காவலதிகாரி.

“ம்மா. காலைல இருந்து நீங்க எல்லாரும் சொல்லுறதை தான நான் கேட்டுட்டு இருக்கேன். இப்ப நானே என்னோட முடிவை எடுத்துக்குறேன் ம்மா.” என அழுகையில் சொல்லியவளை என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

“இப்படி பண்ணாத அச்சு. இப்ப அவசரமா முடிவெடுத்துட்டு நாளைக்கு வருத்தப்படுவ..” என ஆவுடையபன்னும் சொல்ல,

“ஏன் ப்பா. நீங்க என்னை பார்த்துக்க மாட்டீங்களா?” என்றவளிடம் எப்படி புரியவைக்க என மற்றவர்களுக்கு தெரியவில்லை. அனைவரும் குருவை பார்க்க அவனோ கைகளை கட்டிக்கொண்டு அட்சயாவை தான் அழுத்தமாக பார்த்தான்.

“அப்ப இவங்க கூட வாழ உனக்கு விருப்பம் இல்லையா மா?”

“இல்லை சார். என்னால அவங்க கூட வாழ முடியாது. நான் எங்க அம்மாப்பா கூடவே போய்டுறேன்.” என தழுதழுக்க கூறினாள்.

“அப்புறம் என்ன ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சம்மந்தம் இல்லைனு எழுதி கொடுங்க..” என சொல்லிவிட,

கையெழுத்து போட அட்சயா குனியும் பொழுது அவளின் கழுத்தில் இருந்த குருபிரசாத் கட்டிய தாலி முன்னே வந்தது. கையெழுத்து போட்டு குருவிடம் நீட்ட அவனும் கையொப்பம் போட்டுவிட்டான்.

“அதான் எங்க பேரனையே வேணாம்னு சொல்லிட்டியே மா. அவன் கட்டுன தாலி மட்டும் எதுக்கு உனக்கு? அந்த தாலியை கழட்டி கொடுமா..” என குருவின் அம்மாச்சி சொல்ல நொடியும் யோசிக்காமல் அதனை கழட்டி அங்கிருந்த மேசையில் வைத்தாள், அட்சயா.

“ஐயோ! என் பொண்ணோட வாழ்க்கை இப்படி ஆகிடுச்சே.. யாராவது வீட்டுக்கு வந்த பொண்ணுகிட்ட தாலியை கழட்டி கேட்பாங்களா?” என பரிமளம் அழுக அவரை சமாதான படுத்தினான் சபாபதி.

வெளியேறும் பொழுது கூட, “அட்சயா..” என அவளை அழைத்தான் குருபிரசாத்.

“காலைல என்னை காப்பாத்துனதுக்கு ரொம்ப நன்றி. உங்க அம்மா பாக்குற பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு நீங்க சந்தோசமா இருங்க. என்னை விட்டுடுங்க ப்ளீஸ். இப்போதைக்கு எனக்கு படிக்கணும். அவ்ளோ தான். இங்க.. இதெல்லாம் என்னால நிச்சயமா தாங்கவே முடியல. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுங்க.” என கைகூப்பி அவனிடம் சொல்லிவிட்டு சென்றுவிட்டாள். அவ்வளவு சொல்லியவள் பிடிக்கவில்லை என சொல்லவில்லை. அதை குருவும் குறித்துக் கொண்டான்.

அங்கிருந்து வேகவேகமாக வீட்டிற்கு வந்தான் குரு.
அவனின் பின்னே வந்து வாசலிலே நின்ற அபிலாஷை புருவம் சுருக்கி பார்த்தவன், “மத்தவங்களை மாதிரி நான் ஜாதி பார்த்து உன்கூட பழகல அபி. என்மேல நம்பிக்கை இருந்தா உள்ள வா..” என மாடிக்கு சென்றுவிட்டான். அவனின் பின்னே அபிலாஷும் சென்றான்.

மொட்டை மாடியில் மல்லாக்க படுத்து கையை நேற்றில் பதித்து படுத்திருந்தான் குருபிரசாத். எதற்கு இந்த சந்திப்பு; கல்யாணம்; பிரிவு என அன்று நடந்த அனைத்தும் குருவின் மனதில் ரயில் பெட்டியாக தொடர்ந்து வந்தது.

அந்நேரம் அவர்களுக்கு அழைத்த சுதன், “ஃபர்ஸ்ட் நைட் டெக்காரேஷன் எப்படி டா போகுது..” என அபிலாஷிடம் கேட்க, அவனை திட்டிய அபிலாஷ் முழுவதுமாக சொல்லிவிட்டான்.

“என்ன டா சொல்லுற?” என சுதன் அதிர்ந்தான்.

“ஃபோனை குடு.” என அபிலாஷிடம் இருந்து வாங்கிய குருபிரசாத், “சுதன். எனக்கு அந்த ரோஷன் நாயை பத்தி ஃபுல் டீடெயில்ஸ் வேணும்.”

“...”

“ப்ச். நேரடியா எதுலயும் இறங்க மாட்டேன் டா. நீ டீடெயில்ஸ் அனுப்பு. அப்புறம் அட்சயா பேமிலி இப்ப தான் இங்க இருந்து கிளம்பினாங்க. அவங்க அங்க பத்திரமா போராங்களான்னு பார்த்து சொல்லு.” என வைத்துவிட்டான்.

மறுநாளே பெங்களுர் கிளம்பியவனிடம் வந்தார் குணசீலன். “கொஞ்ச நாள் போகட்டும் குரு. அப்பா அம்மா கிட்ட பேசி பாக்குறேன்.” என்றார்.

“போதும். நீங்க செஞ்சது எல்லாமே போதும். இதோட நிறுத்திக்கோங்க..” என பேக்குடன் வெளியே வந்தவன் அன்னை அமர்ந்திருப்பதை கவனித்து அவரின் அருகில் சென்றான்.

“நீங்க ஒத்துக்க மாட்டீங்கன்னு தெரியும் ம்மா. ஆனா எப்படிம்மா அப்படியெல்லாம் உங்களால பேச முடிஞ்சிது? அவளுக்கு பதினெட்டு வயசு தான் ம்மா. பிரிஞ்சு போறதுக்கு காரணம் எனக்கு இங்க இருக்க பயமா இருக்குனு சொல்லிட்டு போய்ட்டா ம்மா..” என அவரிடம் நேரடியாகவே கேட்டான்.

“அப்படியா என்னோட கையையும் காலையும் புடுச்சி கல்யாணம் பண்ண வெச்சிருக்க முடியும்? இந்த சொத்துக்காக தான கல்யாணம் பண்ணாங்கன்னு சொன்னீங்க? நீங்களே இந்த சொத்தை நல்லா ஆண்டு அனுபவிச்சிக்கோங்க..” என கத்திவிட்டு பெங்களூர் சென்றுவிட்டான்.

அதன் பின் ஒருவருடம் கடந்திருக்க, அவர்களுக்கு விவாகரத்தும் ஆகிவிட்டது. அவ்வப்போது சுதன் மூலம் அட்சயாவை பற்றிய செய்திகளை தெரிந்துக் கொள்வான். ஆனால் அவனாக அவளிடம் பேச முயன்றதே இல்லை.

அவனால அவளை முழுமையாக கடக்கவும் முடியவில்லை. திருமணத்திற்கு பிறகான வாழ்க்கை என சில நிமிடங்களே என்றாலும் முழுமனதோடு அவளிடம் பேசியிருக்க அவனால் அதனை சுலபமாக மறக்க முடியவில்லை.


அட்சயா படிப்பை முடித்து, சில மாதங்கள் கழித்து அவளுக்கு வேறொரு இடத்தில மாப்பிள்ளை பார்க்கின்றனர் என தெரிந்த பொழுது தான் அவளை மீண்டும் அவனின் வாழ்வில் கொண்டு வர திட்டமிட்டவன், அதனை நடத்தியும் விட்டான்.

ஆனால் அட்சயாவாக அவனிடம் வர வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.
 
இதில் ரொம்ப பாவம் குரு தான்....
பாக்கி சொன்ன ஒரே விஷயம் சரி.....உங்க பெண் வாழ்க்கையையே கெடுக்க பார்த்து இருக்கான்....
அவனுக்கு தண்டனை அவளோ தானா?????
குருவை இவங்க இவளோ நெருக்காம இருந்து இருக்கலாம்.....
அச்சு பயந்ததில் நியாயம் இருக்க தான் செய்து......

ஆன குரு நினைக்கற மாறி அச்சுவே வந்தாலும்.....
பாக்கியா சமாளிக்க என்ன யோசனை வெச்சி இருக்கான்??????
 

STN - 92

Member
Staff member
இதில் ரொம்ப பாவம் குரு தான்....
பாக்கி சொன்ன ஒரே விஷயம் சரி.....உங்க பெண் வாழ்க்கையையே கெடுக்க பார்த்து இருக்கான்....
அவனுக்கு தண்டனை அவளோ தானா?????
குருவை இவங்க இவளோ நெருக்காம இருந்து இருக்கலாம்.....
அச்சு பயந்ததில் நியாயம் இருக்க தான் செய்து......

ஆன குரு நினைக்கற மாறி அச்சுவே வந்தாலும்.....
பாக்கியா சமாளிக்க என்ன யோசனை வெச்சி இருக்கான்??????
எல்லாரும் அந்தந்த நேரத்துக்கு ஏத்த மாதிரி மத்தங்கவங்களை பத்தி கொஞ்சமும் யோசிக்காம நடந்திருப்பாங்க..

பாக்கியம் கூட அவங்க நிலைல அப்படி தான் இருந்திருப்பாங்க.

எல்லாரோட கருத்தையும் யோசிச்ச குரு தான் கடைசில மாட்டிக்கிட்டான்.

இவ்ளோ தூரம் கொண்டு வந்த குரு பாக்கியத்தையும் சமாளிப்பான்🙏

ரோஷனுக்கான தண்டனை இனி வர்ற எபிஸ்ல வரும்😁

நன்றி dear❤
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online

Top Bottom