• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அன்பில் வந்த ராகமே - 12

STN 23

New member
முரளி ராகவியை பளீரென அறைந்திட ராகவி மட்டுமல்ல பாரிநேயனும் அதை எதிர்பாராது திகைத்து போனார்.

“மாமூ” என்று கலங்கிய விழிகளோடு ராகவி பார்க்க,

“மூச்!! இன்னொரு வார்த்தை பேசின நான் மனுஷனா இருக்க மாட்டேன்டி” என்று எச்சரித்தான்.

அதற்குள் மகனிடம் வந்த பாரி, “மருமகளை ஏன் பா அடிச்ச? எனக்காக தான் உன்னை கூட்டிட்டு வந்தது” என்றவரை பார்த்தவனுக்கு கட்டுக்கடங்கா கோபம்.

ஆனால் அவன் பேசும் முன்னமே, “வேண்டாம் மாமா, நீங்க அவர் கிட்ட எதுவும் பேசாதீங்க. சூழ்நிலை இன்னும் மோசமாகிடும். உங்க பையனை கண்ணார பார்த்தாச்சு தானே, ப்ளீஸ் நீங்க கிளம்புங்க..” என்று இருவருக்கும் இடையில் நின்று கொண்டு பாரியை சமாதானப்படுத்த முரளி வெளியேறி விட்டான்.

பத்து நிமிடங்கள் கழித்து ராகவி வெளியில் வர முரளியும் அவன் புல்லட்டும் அங்கே இல்லை.

அதை கண்டவளுக்கு அத்தனை கோபம். உடனே முரளிக்கு அழைக்க அவன் ஏற்கவே இல்லை. ஆட்டோ பிடித்து பஸ் ஸ்டாண்டிற்கு சென்றவள் ஊருக்கு கிளம்பினாள்.

மேலும் ஒரு வாரம் கடந்த நிலையில்…

தன் அறையில் அமர்ந்திருந்த முரளியின் மனமெங்கும் ராகவியின் நினைவே ஆக்கிரமித்து இருக்க, அவனால் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை.

ராகவி பண்ணைக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு வாரமாக போகிறது. ‘ஏன் அவள் வரவில்லை?’ என்று அன்னையும் தங்கையும் முதல் மூன்று நாட்கள் அவனைப் போட்டு படுத்தி எடுத்தனர்.

அன்று ஜெயிலில் இருந்து திரும்பிய போது ராகவி மீது அவனுக்கு இருந்த கோபம் இப்போது இல்லை. ‘எப்படி அந்த ஆளை பார்க்க செல்வதை மறைத்து க்ரிஷை பார்க்க போவதாக சொல்லி அவனை ஏமாற்றலாம்..’ என்ற ஆதங்கம் தான் அவனுக்கு மேலோங்கி இருந்தது.

ஆனாலும் நான்கு நாட்களுக்கு மேல் அவனால் அதை இழுத்துப் பிடிக்க முடியவில்லை.

‘அவசரப்பட்டு அவளை கை நீட்டி விட்டோமோ?!’ என்று இப்போது தோன்றியது. ஆனால் அன்று பாரியை கண்ட நொடி அவர் மீது இருந்த ஆத்திரத்தையும் சேர்த்து இவள் மீதல்லவா காண்பித்து விட்டிருந்தான்.

ராகவி சொன்னது முற்றிலும் சரியே!!

பாரி மீதான தன் கோபம் வரைமுறையே இல்லாமல் அனைவரின் மீதும் திரும்பிக் கொண்டிருக்கிறது.

முன்பு போல அவள் சென்னையில், இவன் இங்கே என்று இருந்திருந்தால் கூட பெரிதாக எதுவும் தோன்றியிருக்காது. ஆனால் கடந்த இரண்டு வாரங்களாகவே ராகவியோடு அவன் தொழிலை மேம்படுத்தும் வேலையில் இறங்கியவனுக்கு.. அவள் இல்லாமல், அவளுடன் பேசாமல், அவளோடு நேரம் செலவழிக்காமல் எதையோ இழந்தது போலத் தவித்து போனான்.

இத்தனைக்கும் கோபம் குறைந்து அவன் செய்த தவறு புரிபடவும் அவளுக்கு அவன் மெசேஜ் அனுப்பியது மட்டுமல்லாமல் அழைப்பும் விடுத்தான். ஆனால் அதற்கு மறுபுறம் இருந்து தான் எந்த பதிலும் வரவில்லை.

இரண்டு நாட்கள் தொடர்ந்து குறுஞ்செய்தியாக அனுப்பிக் கொண்டிருந்தவன், அவள் அதை பார்த்த பின்னும் பதிலளிக்காமல் இருக்கவும் ஓரளவு அவள் கோபத்தை புரிந்து கொண்டான்.

உழைத்து உரம் ஏறிய கரம் அவனுடையது!!

முரளி சற்று அழுத்திப் பிடித்தாலே அவள் கரம் கன்றிப் போகும். அதிலும் அவன் அடித்த வேகத்தில் நிச்சயம் அவள் கன்னமும் சிவந்து, விரல்களின் தடம் நன்றாகத் தெரிந்திருக்கும் என்பதை உணர்ந்தவன்,

“அப்படி என்னடா கோபம் உனக்கு?” என்று தன்னையே திட்டிக் கொண்டு மீண்டும் அவளுக்கு அழைத்தான்.

முழுதாக அழைப்பு சென்ற போதும் அவள் ஏற்கவில்லை.

மீண்டும் ஒரு முறை, “ஸாரிடி என் ராங்கி, எவ்ளோ கோபம் இருந்தாலும் நான் உன்னை அடிச்சிருக்கக் கூடாது…” என்று குறுஞ்செய்தி அனுப்ப நொடி பொழுது கூட தாமதிக்காமல் அவளும் அதை படித்தாள்.

படிக்க மட்டும் செய்தாளே தவிர அவனுக்கு எந்த பதிலும் கொடுக்கவில்லை.

அதை கண்டவனுக்கு இன்னும் சூடேறி போனது. “இப்படி உசுர எடுக்கிறாளே ராங்கி…” என்று வாய் விட்டு சொன்னவன் மீண்டும் அவளுக்கு அழைத்தான்.

இம்முறை அவன் அழைக்க, அவள் துண்டிக்க, அவனும் வீம்போடு அடுத்தடுத்து அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தான். அவளும் அசராமல் உடனுக்குடன் துண்டித்துக் கொண்டிருந்தாள்.

தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்த முரளிக்கு, ‘அவளை எப்படி வழிக்கு கொண்டு வருவது?’ என்று தெரியவில்லை.

ஒருமுறை அடித்ததற்கு ஆயிரம் முறைக்கு மேல் மன்னிப்பு கேட்ட போதிலும் அவள் இளகவும் இல்லை மனம் இறங்கவும் இல்லை.

“அண்ணா, இந்த மாச பால் கணக்கு அம்மா முடிச்சுட்டாங்க. நானும் கம்ப்யூட்டர்லயும் ஏத்திட்டேன். எதுக்கும் நீங்க ஒரு முறை பார்த்திடுங்க…” என்று புத்தகத்தை அவன் முன்னால் வைத்தாள் அபிராமி.

ஆனால் முரளியிடம் எந்த அசைவும் இல்லாததை கண்டவள், “அண்ணா, நான் சொன்னது கேட்டுச்சா?” என்றாள்.

அப்போதும் அவன் பதில் அளிக்காமல் போகவும் சத்தம் இல்லாமல் வெளியில் சென்றாள் அபிராமி.

வழியில் எதிர்பட்ட சாந்தா கேட்ட கேள்விக்கு பதில் சொன்னவள் மங்கையை தேடி சென்று, “ம்மா, அண்ணி வராததுல அண்ணா ரொம்பவே அப்செட்டா இருக்காங்க. நீங்களாவது அவங்க கிட்ட பேசி பாருங்க…” என்றாள்.

“நானும் பேசிட்டேன்டி. ஆனாலும் ராகவி அவ்வளவு சீக்கிரம் இறங்க தயாரா இல்லை. என்ன இருந்தாலும் உன் அண்ணன் அவசரபட்டு கை நீட்டினதும் தப்புதானே?! அவர் மேல இருக்கிற கோபத்தை இவன் மேல காட்டினா எப்படி?”

“அதுக்காக அண்ணனுக்கு தெரியாம அவர்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாமல் ஜெயிலுக்கு கூட்டிட்டு போனது சரின்னு சொல்றியா ம்மா? உனக்கு தெரியாதா அண்ணாவுக்கு அவர் மேல எவ்வளவு கோபம் இருக்குன்னு? அப்படி இருந்தும் சொல்லாம செஞ்சா யாரா இருந்தாலும் அதிர்ச்சியாக தானே செய்வாங்க?” என்று அண்ணனுக்கு வக்காலத்து வாங்கினாள் அபிராமி.

“புரியுதுடி. அதுக்காக பொட்டப் புள்ளையை கை நீட்டலாமா? கல்யாணமான நாளில் இருந்து உங்க அப்பா என்னை ஒரு அடி கூட அடிச்சது கிடையாது. ஆனா உன் அண்ணன் தாலி ஏறுவதற்கு முன்னாடியே அவளை கை நீட்டி இருக்கான்..”

“அப்போ தாலி கட்டின அப்புறம் அடிச்சா சரின்னு சொல்றியா ம்மா?”

“அப்படி சொல்லலடி. எப்ப அடிச்சாலும் அது தப்புதான்!! ஆனா நான் சொல்ல வந்தது, உன் அண்ணி முகத்தை நீயும் பார்த்த தானே?! எப்படி செவந்து போயிருந்துச்சு. அண்ணனும் பரிமளாவும் அதை பத்தி விசாரிச்சிருக்க மாட்டாங்களா? அப்போ இவன் தான் அடிச்சான்னு தெரிஞ்சா எப்படி பொண்ணு கொடுப்பாங்க?”

“அதுவும் சரிதான். ஏற்கனவே அன்னைக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை கூட கல்யாணம் பண்ணி வைக்க நம்ம சொந்த பந்தம் எல்லாம் மாமாவுக்கு அழுத்தம் கொடுத்துட்டு இருந்துச்சுன்னு மல்லிகா அத்தை சொல்லுச்சு. இதுல இதுவும் சேர்ந்துச்சுன்னா நிச்சயமா அண்ணியை கட்டிக் கொடுக்க மாட்டார் ம்மா…” என்றாள் வேதனையோடு.

“அதுக்குத்தான்டி நானும் பயப்படுறேன். இவன் கொஞ்சம் நிதானமா இருந்திருக்கலாம்னு சொல்றது ஏன்னு புரியுதா?”

“புரியுதும்மா. ஆனா பாவம் அண்ணா, அண்ணி வந்துருவாங்கன்னு காலையிலிருந்து ஒரே இடத்துல உட்கார்ந்து இருக்காங்க. எதுக்கும் நீங்க ஒரு முறை பேசி பாருங்களேன்..”

“அவன் தான அடிச்சான்! அவனே சமாதானப்படுத்தட்டும். நாம தலையிட வேண்டாம். நான் சொன்னா மட்டும் உன் அண்ணி உடனே வந்துருவாளா என்ன?!.. வீம்பு பிடிச்சவ, இவனா அவளை தேடி போய் கூப்பிடுற வரைக்கும் அசைய மாட்டான்னு தான் தோணுது..”

“அண்ணன் மாமா வீட்டுக்கு போய் கூட்டிட்டு வரணும்னு சொல்றியா?”

“ஆமாடி..”

“இதெல்லாம் நடக்கிற காரியமா?”

“என்னை கேட்டா?! போ, போய் உன் அண்ணனுக்கு சொல்லு… நடக்குதா இல்லையான்னு அப்புறம் பார்ப்போம்..” என்று இவர்கள் பேசிக் கொண்டிருக்க, வெளியே முரளியின் புல்லட் சத்தம் கேட்டது.

ஆம், அவன் நேரில் செல்லாமல் அவள் இங்கு வரப்போவதில்லை என்பதை உணர்ந்த முரளி வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு ராகவியை தேடி கிளம்பி விட்டான்.

பார்த்தசாரதியின் வீட்டின் முன் முரளியின் புல்லட் வந்து நிற்கவும், பெரும் வியப்புடன் அதை வேடிக்கை பார்த்து நின்றது ஊர்.

பின்னே, இது அவர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்காத காட்சி அல்லவா!

ஆளாளுக்கும் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

ஆனால் எதையும் கண்டுகொள்ளாதவனாக வீட்டினுள் நுழைந்தான் முரளி.

“ராசா வாயா…” என்று முற்றத்தில் அமர்ந்து கேழ்விறகை சுத்தம் செய்து கொண்டிருந்த சுந்தரவல்லி ஓடி வந்து பேரனை வரவேற்றார்.

“எங்க ஆயா, அந்த ராங்கி?” என்றவன் விழிகள் அனைத்து புறமும் சுழன்றது.

“பின்கட்டுல இருக்கா, வாயா…” என்று அவனை அழைத்துக் கொண்டு செல்ல,

"சரி நீ போ அப்பத்தா, நான் அவ கிட்ட பேசிட்டு வரேன்…” என்றவன் படிகளில் இறங்கி செல்ல, வழியில் எதிர்ப்பட்ட பரிமளம் ஒரு நொடி திகைத்தாலும் அடுத்த நொடியே,

“வாங்க வாங்க தம்பி. எப்படி இருக்கீங்க?” என்று நலம் விசாரித்தார்.

பரிமளத்திற்கு திருமணம் ஆகி வந்தபோது முரளிக்கு மூன்று அல்லது நான்கு வயது இருந்திருக்கும். அன்றிலிருந்து இரு குடும்பமும் பிரியும் வரையில் “மாமி..” என்று அழைத்து அவரோடு உறவாடி இருக்கிறான்.

அதன்பின் அவர்களுக்கு இடையில் முற்றிலுமாக பேச்சு வார்த்தை இல்லாமல் போனதில், வெளியிடங்களில் அவரை பார்க்கும் போது சிறு புன்னகையோடு கடந்து விடுவான்.

“நான் நல்லா இருக்கேன் மாமி. நீங்க எப்படி இருக்கீங்க?” என்றிட புன்னகை முகமாக பதில் சொன்னார்.

“நல்லா இருக்கேன். ராகவி கிட்ட நானும் எத்தனையோ முறை சொல்லிப் பாத்துட்டேன். ஆனா அவ கேட்கவே இல்லை தம்பி. பிடிவாதமா இருக்கா…” என்றவரும் அன்று ராகவியின் கன்னத்தில் பதிந்திருந்த விரல் தடத்தை கண்டு முதலில் அதிர்ந்து தான் போனார்.

பின் மகளிடம் விசாரித்து தெரிந்து கொண்டவர், முரளி மன்னிப்பு கேட்டு அனுப்பிய குறுஞ்செய்திகளை பார்த்த பின்னரும், "கிளம்பி போடி..." என்று மகளிடம் எத்தனையோ பேசிப் பார்த்தார்.

ஆனால் அவள் எதற்கும் மதிப்பளிக்காமல் தன் வேலையை பார்க்கச் சென்று விட்டாள்.

“இந்தப் பக்கம்..” என்று சுந்தரவல்லி வழி காட்ட, “சரி நீ போ அப்பத்தா. நான் அவ கிட்ட பேசிட்டு வரேன்…” என்றவன் அங்கே துணி துவைக்கும் கல் மீது அமர்ந்திருந்த ராகவியை கண்டு அவன் விழிகள் அசைய மறுத்தது.

பின்னே! தலைக்கு குளித்து, கூந்தலை இரு ஓரங்களிலும் சிறு கிளிப்பில் அடக்கியவள், நீலமும் சிவப்புமான தாவணியில் கை நிறைய கண்ணாடி வளையல்கள், காதில் ஜிமிக்கி என்று தேவதையாக ஜொலித்து கொண்டிருந்தாள்.

அவள் இதழ்கள் ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்தபடி இருக்க பரிமளா அரைத்து கொடுத்த மருதாணியை கால்களுக்கு வைத்து முடித்து கையில் வைக்க தொடங்கினாள்.

“ஏன்டி வீட்டுக்கு வரலை?” என்றான் எடுத்ததுமே..

“எதுக்கு வரணும்?” என்றாள் அவனைப் பார்க்காமல்.

“அதை ஏன் எங்கேயோ பார்த்துட்டு சொல்ற? என் மூஞ்சியை பார்த்து சொல்லுடி…”

“பார்க்கற மாதிரி இருந்தா நாங்களே பார்க்க மாட்டோமா?” என்று கடுப்போடு சொல்ல, “அடிங்க! என்ன சொன்ன?” என்று அவள் அருகே வந்தான்.

“ஸ்பீக்கர் பாக்ஸ் அவுட்டா? பார்க்கிற மாதிரி இருந்தா பார்க்க மாட்டோமான்னு கேட்டேன்…” என்றாள் அலட்சியமாக.

“இவ்ளோ கொழுப்பு ஆகாதுடி உனக்கு?” என்று அவள் காதை பிடித்து திருக போனவன் தன் செய்கையை நிறுத்தி விட்டு,

“எவ்ளோ மெசேஜ் பண்ணேன்? ஏன்டி எதுக்குமே பதில் சொல்லலை?” என்றான்.

“இது என்ன கேள்வி? நீ உன் இஷ்டத்துக்கு என்னை அடிக்கலாம், திட்டலாம் ஆனா நான் எதுவும் கேட்கக் கூடாதா? இத்தனைக்கும் நீ என்னை அங்கேயே விட்டுட்டு கிளம்பிட்ட” என்று தீயாய் முறைத்தவள்,

“யோவ் சண்டியரே, வார்த்தைக்கு வார்த்தை பொண்டாட்டின்னு சொல்லிட்டு என்னை அப்படியே விட்டுட்டு போவியா?” என்று முறைத்தவள்,

“அப்படி என்னய்யா என்னை விட உனக்கு உன்னோட கோபம் முக்கியமா போயிடுச்சு?” என்று கேட்க முரளி தவித்து போனான்.

“அதுதான் தப்புன்னு மன்னிப்பு கேட்டேனேடி..”

“இதோ பார், கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்னு நீ அடிச்சா வாங்கிட்டு உன் பின்னாடி குட்டி போட்ட பூனை மாதிரி சுத்துற ஆள் நானில்லை. நீ ஒரு ஸாரி கேட்டதுமே வெட்கம், மானம், ரோஷமே எல்லாத்தையும் விட்டுட்டு உடனே வருவதற்கு?”

“ஹே, என்னடி பெரிய வார்த்தையெல்லாம் பேசுற?”

“பின்ன நீ கேட்கிறது வேற எப்படி இருக்கு? என்ன ஏதுன்னு எதையுமே கேட்காம அவ்ளோ சீக்கிரம் கை நீட்டுவ, நாங்க ரோஷம் இல்லாம உன்னை தேடி வரணுமா? அதுக்கு வேற எவளையாவது பாரு…” என்றாள் சூடாக.

“ராங்கி அங்கேயே இருந்தா என்னுடைய ஆத்திரத்தை உன் மேல காட்டிடுவேனோன்னு தான் கிளம்பினேன்…” என்று சொல்ல அவள் அதை கண்டு கொள்ளாமல் மருதாணியை வைத்து கொண்டிருந்தாள்.

“ப்ளீஸ் ராகா, புரிஞ்சுக்கோடி”

“...”

“என்ன புரிஞ்சுக்கணும்? நானும் எத்தனையோ கோவில்ல வேண்டிகிட்டு உனக்கு கலர் கலரா கயிறு கட்டி பார்த்துட்டேன், எதுவும் வேலைக்கு ஆகலை. இனி உனக்கு கவுன்சலிங் கொடுத்து தான் உன் கோபத்துக்கு ஒரு முடிவு கட்டனும் போல..”

“ப்ச் நானும் கோபத்தை குறைக்கணும்னு தான் பார்க்கிறேன் ஆனா முடியலை. இதுல நீ அந்த ஆள் முன்னாடியே கொண்டு நிறுத்தினா எப்படி இருக்கும்னு கொஞ்சம் யோசிச்சு பாருடி..”

“நான் ஏன் யோசிக்கணும்? இனியும் அதையெல்லாம் யோசிக்க போறதில்லை. இதோ பார் சண்டியரே நானும் உன் மேல இன்னும் கோபமாத்தான் இருக்கேன். என் கோபம் குறையற வரைக்கும் வைட் பண்ணு…” என்றாள் அலட்டிக் கொள்ளாமல்.

“அடிப்பாவி! நீ இல்லாம எனக்கு ஒரு வேலையும் ஓடலை… ஏற்கனவே ஒரு வாரமா காத்துட்டு இருக்கேன். இன்னும் எவ்வளவு நாள்?” என்று முரளி பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான்.

“அது எனக்கு தெரியாது…” என்று தோளை குலுக்கியவள் மீண்டும் மருதாணி வைப்பதில் கவனமானாள்.

“ராகா மன்னிச்சுடுடி. இனி நிச்சயமா உன்னை அடிக்க மாட்டேன்..”

“...”

“ராகா…”

“ம்ம்…”

“ஒரு தடவை என்னை பார்த்து பேசுடி…”

“பார்த்தா கோபம் குறைஞ்சிடும்னு நினைக்கிறியா?” என்று கேட்டபடி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“கோபம் குறையுதோ இல்லையோ, முகத்தை திருப்பிக்கிட்டு பேசுறதை விட இப்படி பார்த்து பேசறது நல்லா இருக்கு…” என்றான் புன்னகையோடு.

“இப்படியெல்லாம் பேசினா நீ விட்டுட்டு போனதை மறந்துடுவேனா?”

“வேணும்னு விட்டுட்டு போகலைடி. ஆனா கொஞ்சம் தூரம் போனதுமே உன்னை தேடி வந்தேன்.. ஆனா நீ ஆட்டோல கிளம்பி போயிட்டதா அங்க இருந்தவங்க சொன்னாங்க.. ஆனாலும் பஸ் ஸ்டாண்டுக்கு தான் போயிருப்பன்னு அங்கேயும் வந்து தேடினேன் நீ இல்லை.. பத்து நிமிஷம் தொடர்ந்து கால் பண்ணியும் நீ எடுக்கவே இல்லை..”

“அப்புறம் தான், சென்னைக்கே தனியா போய் வர என் பொண்டாட்டி வேலூர்ல இருந்து நல்ல படியா வீடு வந்து சேர்ந்துடுவான்னு புரிஞ்சுகிட்டு கிளம்பினேன்..” என்றிட மருதாணியை வைத்து முடித்த ராகவி அங்கிருந்து கிளம்பினாள்.

“நான் பேசிட்டு இருக்கேன், எங்கடி போற?”

“வேலை இருக்கு..”

“எனக்கும் தான்!!”

“அப்போ போய் பாரு, எதுக்கு என் நேரத்தையும் வீணடிக்கிற?” என்றிட முரளியின் விழிகள் அவள் கன்னத்தை ஆராய்ந்து கொண்டிருந்தது.

“ரொம்ப செவந்து போயிடுச்சுன்னு ஆயா சொல்லுச்சு, இப்போ எப்படி இருக்கு?” என்றான்.

“அது உனக்கு தேவையில்லாத விஷயம்..”

“ராகா!!”

“மாமா கொலை பண்ணினார் அதை ஓத்துகிட்டும் ஜெயிலுக்கு போயிட்டார். ஆனா அவர் அந்த கொலையை செய்ய ஏதாவது ஒரு நியாயமான காரணம் இருக்கும்னு உனக்கு தோணவே இல்லையா மாமூ?” என்றாள் ஆழ்ந்த குரலில்.
 
Last edited:
Top Bottom