• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அன்பில் வந்த ராகமே - 18

STN 23

New member
“என்னடி சொன்ன?” என்று சுந்தரவல்லி மருமகளை உலுக்க,

“ஆமா அத்தை, அன்னைக்கு அவனை கொன்னது பாரி அண்ணன் இல்லை நான் தான். நம்ம குடும்பத்துக்கு ஒரு அவப்பெயர் வந்துட கூடாது என் மேல எந்த களங்கமும் வர கூடாதுன்னு எனக்காக பழியை ஏத்துகிட்டு ஜெயிலுக்கு போயிட்டார்..”

“புத்தியோட தான் பேசறியா? என்ன அறிவுகெட்டதனமான பேச்சு இது?” என்று பார்த்தசாரதி கேட்கவும்,

“எப்படி வேணும்னாலும் நினைச்சுக்கோங்க ஆனா இது தான் உண்மை…” என்றவர் தான் இந்த ஊருக்கு வந்தது முதலே மாரிமுத்து அவருக்கு தொந்தரவு கொடுத்ததை சொல்ல தொடங்கினார்.

ஒவ்வொரு நிகழ்வையும் கேட்டு கொண்டிருந்த இருவருக்கும் அத்தனை அதிர்ச்சி.

இறுதியாக திருவிழாவின் போது அவனை கொன்றதை பற்றி விவரித்தவர், “அன்னைக்கு நான் தவறி தொட்டி மேல விழலை. கர்ப்பிணியா இருக்கேன்னு சொல்லியும் வெறியோட என்னை துரத்தினான். என் குழந்தை கலைஞ்சதுக்கும் அவன் தான் காரணம், அண்ணன் நிரபராதி! நம்புங்க..” என்றவர் கண்ணீரோடு சொல்லி முடிக்க சுந்தரவல்லி மருமகளை அரவணைத்து கொண்டார்.

“ஏன்டி கூறுகெட்டவளே இம்புட்டு சங்கதியை ஏன்டி எங்க கிட்ட சொல்லாம போன?” என்றார் ஆதங்கத்தோடு.

“சொல்லி இருந்தா மட்டும் என்னாகி இருக்கும்னு நீங்களே சொல்லுங்க அத்தை?” என்று கேட்க அவரிடம் பதில் இல்லை.

“அன்னைக்கு எனக்கு வயசும் இல்லை, தைரியமும் இல்லை.. குழந்தை போயிட்டதுல அடுத்து என்ன செய்யணும்னு கூட தெரியலை. அந்த நேரத்துல எனக்கு தெரிஞ்சது ஒண்ணே ஒண்ணு தான்…” என்று கண்ணீரை துடைத்து கொண்டு அவர்களை பார்த்தவர்,

“என் வாழ்க்கையும், என் குடும்பமும் சிதறக்கூடாதுன்னு... ஆனா அதுக்காக அண்ணன் இவ்வளவு பெரிய தியாகம் பண்ணுவாருன்னு நான் கனவுல கூட நினைக்கலை..”

“நீங்க என்னை தப்பா நினைச்சாலும் பரவாயில்ல ஆனா அண்ணனை மட்டும் தப்பா நினைக்காதீங்க. இத்தனை வருஷமா அவர் அனுபவிச்சது தண்டனை இல்ல த்தை நரகம்!!”

“செய்யாத தப்புக்காக ஜெயிலுக்குள்ள இருந்ததை விட, தன் குடும்பம் ஒவ்வொரு நாளும் அவமானப்படுறதை தெரிஞ்சும் எதுவும் செய்ய முடியாம இருந்தது தான் அவருக்கு பெரிய வேதனை...”

“முரளி தம்பிக்கு அவர் மேல உள்ள கோபம், அண்ணியோட கண்ணீர், அபிராமி வந்த சம்பந்தம் முறிஞ்சது தெரிஞ்சு அவர் மனசு எந்தளவு வேதனை பட்ட போதும் அமைதியா இருக்கார்னா அது அவரோட பெருந்தன்மை.” என்றவர் தன் இரு கரங்களையும் கூப்பி,

“என் பொண்ணு வாழ்க்கை பாதிக்க படறதை பார்த்த பிறகும் இந்த உண்மையை மறைச்சு வைக்க எனக்கு மனசு இல்ல. என்ன தண்டனை என்றாலும் ஏத்துக்க நான் தயார் ஆனா அண்ணனை மட்டும் வெளியே கொண்டு வந்துடுங்க. அவர் இனிமேலும் செய்யாத தப்புக்காக தண்டனை அனுபவிக்கக் கூடாது..”

“என்கிட்டயாவது ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே?!”

“என்னைக்கு நான் சொல்றதை நீங்க காது கொடுத்து கேட்டு இருக்கீங்க? இதை நான் சொல்றதுக்கு? ஒருவேளை நான் சொல்லி இருந்தாலும் அப்படியே அதை நம்பி இருக்க போறீங்களா என்ன?”

“நம்பறேன் நம்பலை அது இரண்டாம் பட்சம் ஆனா ஒரு வார்த்தை சொல்லி இருந்தா எவ்வளவோ விஷயத்தை தடுத்து இருக்க முடியுமே?!” என்றவர் மனம் முழுக்க தேவமங்கைக்கு இழைத்த அநீதி தான் முள்ளாய் குத்தியது.

அதேசமயம் ஜெயில் சம்பிரதாயங்களை முடித்துக் கொண்டு பாரிநேயனுக்காக விசிட்டர்ஸ் அறையில் இருவரும் காத்திருந்தனர்.

அவர்களை நோக்கி வந்தவரின் விழிகள் தன்னையே பார்த்தபடி நின்றிருந்த மகனை தான் முதலில் பாசத்தோடும் பரிவோடும் அள்ளிக்கொண்டது.

பின்னே இறுதியாக ஏழு வயதில் அவனைப் பார்த்தது. அதன் பின் மகனை நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம் அவருக்கு என்றுமே கிடைத்தது கிடையாது.

தேவநங்கை அவரைப் பார்க்க வரும் போது ஒவ்வொரு வருடமும் புகைப்படம் மூலமாக தான் மகனின் வளர்ச்சியை இதுவரை அறிந்து வைத்திருந்தார்.

சென்ற முறை ராகவி முரளியை அழைத்து வந்த போது கூட அவனின் கோபம் முகத்தை அவர் கண்டது. அது கூட ஒரு சில நிமிடங்கள் தான்.

ஆனால் இன்று அதே மகன் கனிவோடும் பாசத்தோடும் அவரை கண்டதும் எழுந்து நிற்பதை கண்டவருக்கு அடுத்த அடி எடுத்து வைக்க முடியாதளவு நெஞ்சம் நிறைந்து கனத்தது.

“என்ன மாமா இங்கேயே நின்னுட்டீங்க? வாங்க” என்று பாரியை அழைத்து வந்து முரளியின் முன் நிற்க வைத்தாள்.

வாஞ்சையோடு மகனை பார்த்திருந்தவரிடம் “எப்படி ப்பா இருக்கீங்க?” என்று முரளி கேட்க மகனின் வார்த்தையில் மனிதர் முழுதாக உடைந்து விட்டார்.

என்ன இருந்தாலும் “தந்தை” எனும் ஸ்தானத்தை அவருக்கு முதன் முதலில் கொடுத்தவன் அல்லவா அவரது மகன்!!

எத்தனை ஆசையும் பாசமுமாக அவனை வளர்த்தார். ஆனால் அவனின் மொத்த வெறுப்பையும் இத்தனை வருடங்களில் சம்பாதித்து இருப்பவருக்கு ‘அவன் பாசம் மீண்டும் கிடைக்காதோ?! அப்பா என்று அழைக்க மாட்டானோ?!’ என்று ஏக்கமும் எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருந்தது.

அவரின் ஏக்கமே எத்தனையோ நாட்கள் அவரை உணவின்றி உறக்கமின்றி தவிக்க செய்திருக்கிறது.

இப்போது முரளி “அப்பா!!” என்று அழைக்கவும் ஆனந்தத்தில் கண்ணீர் கரை புரண்டோடியது பாரிநேயனுக்கு.

நெஞ்சம் ததும்ப பாரியின் விரல்கள் மகன் முகத்தை ஆசையாய் வருடியது. தந்தையின் ஸ்பரிசத்தில் நெகிழ்ந்து நின்ற முரளி அவர் கரங்களைப் பிடித்து அதில் அழுத்தமாக முத்தமிட்டு, “என்னை மன்னிச்சிடுங்க ப்பா..” என்றான் கலங்கிய குரலில்.

“நீ ஏன் ப்பா இதெல்லாம் கேட்டுட்டு? ஊரார் அவமானத்துக்கு உங்களை ஆளாக்கிட்டு, கண்ட பேச்சு வாங்க வச்சுட்டு நான் இங்க குத்துக்கல்லா தானே இருந்தேன். அதுக்கு நீ தான் என்னை மன்னிக்கணும்..” என்றிட அவரை வேகமாக அணைத்துக் கொண்டான் முரளி.

அதேநேரம் அங்கே வந்த வார்டன், “இப்படி ஜெயிலுக்குள்ள வந்து கேக் வெட்டுறது எல்லாம் விதிமுறைகளுக்கு எதிரானது தம்பி. ஆனால் உங்க அப்பா இத்தனை வருஷம் நல்ல நடத்தை கொண்டவர் யார் கூடவும் எந்த பிரச்சினையும் கிடையாது..”

“அதோடு இத்தனை வருஷம் அவர் கூட பேசாம இருந்த நீ முதல்முறையா அவர் பிறந்தநாளை கொண்டாடணும்னு ஆசைப்பட்டதால சூப்பரண்டன்ட் உனக்கு சிறப்பு அனுமதி கொடுத்திருக்கிறார்…”

“பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாரி” என்றவர் “நீ கொடுத்த கேக் அப்புறமா உன் அப்பாவுக்கு கொடுப்போம், இப்போ இதை வச்சு கொண்டாடுங்க...” என்று சிறிய ரக கேக்கை அவர்கள் முன் வைத்தார் வார்டன்.

“நீங்க செய்த உதவிக்கு ரொம்ப நன்றி சார்..” என்றான் முரளி.

“இருக்கட்டும் பா. அவர் இந்த கொலையை செய்யலை நீங்க கேஸை ரீஓபன் பண்ண போறேன்னு சொல்லி இருக்கீங்க ரொம்ப நல்ல விஷயம் உண்மை சீக்கிரமே வெளியே வரணும்..” என்று அவர்களை வாழ்த்தினார்.

வார்டன் அங்கிருந்து விலகியதும் “பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா…” என்று கேக்கை அவரிடம் நீட்டினான் முரளி.

மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து, “வாங்க மாமா, உங்க மகனோட ஆசையை நிறைவேற்றுங்க…” என்றாள் ராகவி புன்னகையுடன்.

மெழுகுவர்த்தியை அணைக்காமல் அப்படியே பக்கம் எடுத்து வைத்தவரிடம், “ஏன் மாமா?” என்றாள் ராகவி.

“என் மருமகள் ஏத்தினதை எப்படி என்னால அணைக்க முடியும்? சீக்கிரமே எங்க வீட்டுல நீ விளக்கேத்தனும் ராகவி..” என்று ஆசையோடு சொன்னவர், “ஆனா மச்சான் உங்க கல்யாணத்துக்கு எதிரா இருக்கிறார் தானே?! அதுவும் என்னால!” என்றவர் கண்களில் நீர் திரண்டு விட்டது.

“என்னப்பா இது? பிறந்தநாள்ல யாராவது அழுவாங்களா மாமா?” என்ற முரளியும் ராகவியும் சிரிக்க முயன்றாலும் அவர் வேதனையை உணர்ந்து அவர்கள் குரலும் உடைய தான் செய்தது.

“உன் மாமா ரொம்ப நல்லவர் முரளி.. நானும் உன் அம்மாவும் சேரக்கூடாதுன்னு எவ்ளோ எதிர்ப்பு தெரியுமா? ஆனாலும் இறுதி வரைக்கும் எங்களுக்காக எங்க கூட இருந்த மனுஷன். அவங்க குலதெய்வ கோவிலுக்குள்ள என்னை வரக்கூடாதுன்னு எவ்ளோ பேர் தடுத்தாங்க தெரியுமா?!..”

“அதை எல்லாம் மீறி கூட்டிட்டு போனவர், எங்களாலேயே நிறைய எதிர்ப்பை சந்திச்சு அவருக்கு நியாயமா கிடைக்க வேண்டிய எத்தனையோ மரியாதைகளை தூக்கி எறிஞ்சவர்.. என்னை வேற ஆளா வித்யாசமா பார்க்காம அவங்க ஆளுங்களுக்கு சமமா நடத்தினவர்...” என்று பழைய நினைவுகளை பகிர்ந்தார்.

“நேரமாச்சு மாமா, இன்னும் பதினைந்து நிமிஷம் தான் இருக்கு, சீக்கிரம் கட் பண்ணுங்க..” என்றதில் பாரிநேயன் கேக்கை வெட்டி மகனுக்கு ஆசையோடு ஊட்டி விட தானும் அவருக்கு ஊட்டி விட்டான் முரளி.

அடுத்த துண்டை ராகவிக்கு ஊட்டி விட்ட பாரியின் மனம் மனைவி மகளை தேடியது.

“என்ன மாமா, அத்தை அபி வரலையேன்னு பார்க்கறீங்களா? அவங்க உங்க பேர்ல அர்ச்சனை பண்ணிட்டு, அன்னதானம் கொடுக்க போயிருக்காங்க, எப்படியும் சாயந்திரம் பிரசாதத்தோடு இங்க வருவாங்க..” என்றாள் சிரிப்போடு.

“உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கணும் ப்பா..” என்றான் முரளி.

“என்னபா கேளு..”

“முதல் பத்து வருஷம் உங்களுக்கு ஜாமீன் கிடையாதுன்னு சொல்லிட்டாங்க சரி... அதுக்கு அப்புறமும் ஏன் ப்பா ஜாமின்ல வரல?”

"மங்கை வக்கீல் வச்சு ஏற்பாடு பண்றேன்னு சொன்னா. ஆனா ஊருக்குள்ள எல்லாரும் பேசுற பேச்சு, அதோட என் மேல உனக்கு இருந்த வெறுப்பு... இதையெல்லாம் யோசிச்சு தான் வரல..”

“வெளிய வந்து கொஞ்ச நாள் இருந்துட்டு மறுபடியும் உள்ள போறதுக்காக எதுக்கு உன்னோட மன நிம்மதியை கெடுக்கணும்னு தோணிச்சு..”

“அதை விட பதினேழு, பதினெட்டு வயசுல உனக்கு இருந்த ஆவேசம்... எங்க ஏதாவது தப்பான முடிவெடுத்துருவியோன்னு ஒரு அப்பாவா ரொம்ப பயந்தேன். அதனால உன் முன்னாடி வராம இருக்கிறது தான் உனக்கு நான் செய்யக்கூடிய ஒரே நல்லதுன்னு நினைச்சேன்…”

“ஆனா எனக்கும் ஒரு ஆசை இருந்தது…”

“என்ன ப்பா?”

“என்னைக்காவது ஒரு நாள் என் மகனை நேருக்கு நேர் பார்க்கணும், அவனை உணரணும் என்று! நீயா வந்து பார்க்க மாட்டேன்னு தெரியும் என் மனசாட்சியுமே அதுக்கெல்லாம் வாய்ப்பு இல்லை பேராசை படாதான்னு சொல்லும் ஆனாலும் அந்த ஆசையை என்னால கட்டுபடுத்த முடியலை…”

“உன் அம்மா கிட்டயும் இதை பல நாள் சொல்லி இருக்கேன். அவளும் ‘உங்க ஆசை நிறைவேறும் நான் ப்ரார்த்திக்கிறேன்னு சொல்லுவா முரளி..’ அவளோட வேண்டுதல் இன்னைக்கு பலிச்சுடுச்சு என் ஆசையும் நிறைவேறிடுச்சு.. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு பா...” என்று புன்னகையோடு மகனை அணைத்து கொண்டு அவன் உச்சியில் முத்தமிட்டார்.

“உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமா?”

“என்னது ப்பா?”

“என் மருமக முதல்முறை என்னை பார்க்க வந்த போதே அந்த நாள் சீக்கிரம் வர வைப்பேன்னு நம்பிக்கை கொடுத்தா, அதே மாதிரி உன்னையும் கூட்டிட்டு வந்துட்டா..” என்று புன்னகைத்தவர்,

“ஆனா அன்னைக்கு உன் கோபத்தைப் பார்த்து நானே பயந்துட்டேன். அதுக்கப்புறம் என் ஆசையை விட உன்னோட நிம்மதி தான் முக்கியம்னு முடிவு பண்ணி அதையே இவக்கிட்டயும் சொன்னேன்…”

“ஆனா என் மருமக விட்ற மாதிரி தெரியல. ‘உங்க ஆசையை நான் கண்டிப்பா நிறைவேற்றுவேன் மாமா’ என்று சொல்லி இன்னைக்கு என் பிறந்தநாளையே மறக்க முடியாத நாளா மாத்திட்டா…” என்றவர் ராகவியை அருகே அழைத்து அவள் உச்சியில் முத்தமிட்டார்.

“மாமா, இப்படி சென்டிமென்ட் டயலாக் பேசிட்டு இங்கயே உட்கார்ந்துட்டு இருக்கலாம்னு நினைக்காதீங்க. இன்னைக்கே நாங்க வக்கீலை பார்க்க போறோம் கேஸ் ரீஒபன் பண்றோம் சீக்கிரமா வெளியில வந்து உங்க பொண்ணு கல்யாணத்தை நடத்த பாருங்க. அதுக்கப்புறம் எங்க அப்பா கிட்ட வந்து பொண்ணு கேளுங்க…”

“எதுக்கு ராகவி வக்கீல் எல்லாம்? அதுதான் நன்னடத்தை காரணமா இந்த வருஷமே என்னை விடுதலை செய்துடுவாங்கன்னு சொன்னேனே.. இன்னும் ஒரு நாலஞ்சு மாசம் தான் அதுக்கு எதுக்கு நீ கோர்ட்டு, வக்கீல்னு செலவு பண்ற?”

“இல்லப்பா. நீங்க கொலைகாரன் என்ற பட்டத்தோட ஊருக்குள்ள வரக்கூடாது.. உங்களை நிரபராதின்னு நிருபிக்க வேண்டியது என் கடமை”

“முரளி!”

“மாமா, தற்காப்புக்காக செய்யப்பட்ட செயல் எல்லா நேரத்திலும் குற்றம் ஆகாது. அதுக்கு சட்டத்துல வழி இருக்கு. ஆனா அது உண்மையிலேயே தற்காப்புக்காக நடந்ததுன்னு ஆதாரத்தோட நிரூபிக்கணும்..”

“ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பது தான் சட்டத்தின் அடிப்படை எண்ணம். ஆனா நீங்க ஒரு நிரபராதியா இருந்தும் இருபது வருஷம் தண்டனை அனுபவிச்சிட்டீங்க. இதுக்கு மேல நீங்க இந்தப் பழியை சுமக்க வேண்டாம்…” என்று நம்பிக்கை கொடுத்து கிளம்பினர்.

இருவரும் பண்ணைக்கு வந்து சேர்ந்த போது அங்கே பார்த்தசாரதியின் கார் நிற்பதை கண்டு ஆச்சர்யத்தோடு ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

“அப்பாக்கு உண்மை தெரிஞ்சுடுச்சு போல மாமூ..” என்று மகிழ்ச்சியாக சொன்னவள் ஓட்டமும் நடையுமாக வீட்டினுள் செல்ல அங்கே சாரதி தங்கையின் கைகளை பிடித்து கொண்டு கண்ணீரோடு மன்னிப்பு கேட்டு கொண்டிருந்தார்.

பரிமளா மூலமாக செய்தி அறிந்த தேவமங்கைக்கும் பெரும் அதிர்ச்சி தான். உண்மையை அறிந்ததில் தன்னை மீறி அவர் கண்கள் கண்ணீரை சொறிந்து கொண்டே இருந்தது.

“நிச்சயமா இது ஈடுகட்ட முடியாத இழப்பு தான் அண்ணி. உங்களுக்கு நடந்த எதுவுமே சாதாரணமானது இல்லை ஆனா அண்ணன் கிட்ட எவ்வளவோ கெஞ்சியும் அவர் உண்மையை சொல்ல கூடாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டார்..”

“அவர் வார்த்தைக்காக என்று சொன்னாலும் எனக்குமே இத்தனை வருஷம் அந்த தைரியம் வரலை… ஒவ்வொரு முறை உங்களை பார்க்கும் போதும் மனசாட்சி முள்ளா குத்தும் அன்னைக்கு ராத்திரியெல்லாம் தூக்கம் இல்லாம அழுதுட்டு இருப்பேன்…”

“ஒருவேளை நான் சுயநலமா உண்மையை மறைச்சுட்டதா உங்களுக்கு இருந்ததா, தோணினா என்னை ஒரு அடி கூட அடிச்சுடுங்க அண்ணி..” என்று மங்கையின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் பரிமளா.

பரிமளாவின் கண்ணீர் மங்கையின் பாதங்களை சுடவும் தான் ஸ்மரன் பெற்றவர், “எந்திரி பரிமளா..” என்று அவரை எழுப்பி நிறுத்தியவர், “போனது போகட்டும் நீ எதை நினைச்சும் கவலைபடாத நான் உன்னை தப்பா நினைக்கலை..” என்றார்.

“ஒருபக்கம் மருமகனுக்காக வேதனை படுறதா இல்லை இவளை சமாதானம் படுத்துறதான்னு ஒண்ணுமே புரியலை மங்கை. பலநேரம் சமையல்கட்டுல கூட அழுதுட்டு இருப்பா நான் கூட புருஷன் பொண்டாட்டி சண்டைன்னு நினைச்சு இருந்துட்டேன். இப்போ எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை..” என்றார் சுந்தரவல்லி.

“அண்ணன் உன்னை விட்டுட்டு போனப்போ நீ ஒரு வயசு குழந்தை. அப்பா பாசம் உனக்கு கிடைக்க விடாம பண்ணின என்னை மன்னிச்சுடு அபி..” என்று அவளிடமும் மன்னிப்பு கேட்க அவளோ பதறிக்கொண்டு அவர் கைகளை பிடித்து கொண்டாள்.

அதற்குள் அங்கே வந்த முரளி, “மாமி நீங்க எதுக்கும் கவலை படாதீங்க அப்பா சீக்கிரமே நிரபராதியா வெளியில வந்துடுவார்..” என்று சொல்ல தேவமங்கை ஆனந்த அதிர்வோடு மகனை பார்த்தார்.

“ராகா சொன்னா ம்மா. நான் இப்போ அப்பாவை பார்த்துட்டு தான் வரை..” என்று சொல்ல மகன் கைகளை பிடித்து கொண்டவருக்கு வார்த்தை எழவில்லை.

“அத்தை, மாமூ மாமாவை வாய் நிறைய அப்பான்னு சொன்னதுலயே அவர் ஜென்ம சாபல்யம் அடைஞ்சுட்ட மாதிரி அவ்ளோ சந்தோஷபட்டார்..” என்று நடந்ததை விவரிக்க மங்கைக்கு ஆனந்த கண்ணீர் பெருகியது.

“இப்படி ஒரு நாளுக்காக தான்டி நான் காத்திருந்தேன்” என்றார் மகிழ்ச்சியோடு.

“அதுமட்டுமில்லை மாமூ, மாமா கிட்ட மன்னிப்பு கேட்டு சந்தோஷமா பேசி கேக் ஊட்டி விட்டதுல அவரோட வேதனை எல்லாம் காணாம போயிடுச்சு..”

“நீ அழுது வடியாம மாமாவுக்கு ஆரத்தி எடுக்க தயாரா இரு..” என்றிட அபிராமி ஓடி வந்து அவளை கட்டிக்கொண்டு, “நிஜமாவா அண்ணி..” என்றாள்.

“ஆமா அபி, உன்னோட கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கிறதுல இருந்து மண்டபம் பார்த்து உன்னை தாரை வார்த்து கொடுக்கிறது வரை எல்லாமே மாமா தான் செய்ய போறார்..” என்றதில் அபிராமி துள்ளி குதிக்காத குறை தான்.

அதேநேரம் “மாப்பிள்ளை” என்று முரளியின் முன் வந்த பார்த்தசாரதி, “என்னை மன்னிச்சுடுங்க மாப்பிள்ளை..” என்றிட சுந்தரவல்லி ஆனந்த கண்ணீரோடு அனைவரையும் பார்த்திருந்தார்.
 
Top Bottom