வீட்டிலிருந்து கோபமாக கிளம்பிய முரளி நேராக தென்னந்தோப்புக்கு தான் வந்து சேர்ந்திருந்தான்.
வழக்கமாக அவன் வண்டியை நிறுத்த கூடிய இடத்தையும் தாண்டி இலக்கில்லாமல் சென்றவன் ஒரு கட்டத்தில் வண்டியை நிறுத்தி விட்டு ஆத்திரத்தோடு அருகிலிருந்த மரத்தினை பலமாக உதைத்தான்.
“ப்ச்..” என்று பற்களை கடித்தவனின் கண்களில் ஆத்திரத்தோடு ஏமாற்றமும் கலந்திருந்தது.
“எவ்வளவு ஆசையா அபியோட கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணினேன் ஆனா கடைசில அந்தாளால அவளுக்கும் இதே அவமானமா?” என்று தனக்கு தானே கேட்டு கொண்டவனின் முகத்தில் கசந்த புன்னகை.
தலையை கோதிய படி பல அடி தூரம் நடந்தவன் ஒரு கட்டத்தில் கிணற்று மேட்டில் அமர்ந்தான்.
அதே நேரம் அவன் பின்னே கேட்ட காலடி சத்தத்தில் திரும்பாமல், “நீ எதுக்குடி இங்கே வந்த?” என்றான் காட்டமாக.
“உன்னை தனியா விட்டா இன்னும் கோபப்படுவ...” என்றபடி அவன் அருகே வந்து நின்றாள் ராகவி.
“அதுக்காக?” என்று அவளை திரும்பி பார்த்தவன் விழிகளில் சீற்றம் மிளிர்ந்தது.
“எதுக்கு மாமூ இவ்வளவு கோபம்?”
“அதுதான் தெரியுது இல்ல அப்புறம் எதுக்குடி இங்க வந்த, போ..” என்று விரட்டினான்.
“உன் கோபத்தை பார்த்து மத்தவங்க பயந்து எட்ட நிக்கலாம் ஆனா என்னால் அப்படி இருக்க முடியாது”
“கண்டவனுக்காக நீ வாங்கி கட்டாத முதல்ல போடி இங்க இருந்து..” என்றான் குறையாத ஆவேசத்தோடு.
ஆனால் அதற்கெல்லாம் அசரக்கூடியவளா நம் நாயகி?!
நிதானமாக வந்து அவன் அருகில் அமரவும் முரளியோ அடுத்த நொடியே தள்ளி அமர்ந்தான்.
“பார்ரா!! ரொம்ப தான் பண்ற சண்டியரே.. இப்போ யார் மேல உனக்கு கோபம், அதை சொல்லு?”
“என்ன தான்டி வேணும் உனக்கு?…” என்று முரளி அவளை முறைக்கவும்,
“எனக்கு எதுவும் வேண்டாம் ஆனா உன்னோட கோபத்தை என்கிட்டே காட்டுன்னு தான் சொல்றேன்.. மனசுக்குள்ள வச்சு உன்னை நீயே வருத்திக்காத மாமூ..”
“எவன் மேலயோ இருக்கிற கோபத்தை உன்மேல காட்ட நான் என்ன முட்டளாடி?”
“யோவ் சண்டியரே, அப்போ மாப்பிள்ளை வீட்டார் மேல காட்டினது மட்டும் சரின்னு சொல்றியா?”
“ராகா..”
“உன் கோபம் உங்க அப்பா மேல தானே?! ஆனா அவர் மேல காட்ட முடியாத கோபத்தையும் சேர்த்து மத்தவங்க மேல காமிச்சுட்டு இருக்கிற.. இது உனக்கே சரின்னு தோணுதா? சொல்லு..” என்றதில் அவனிடம் மௌனம்.
“சொல்லு மாமூ உன்னை தான் கேட்கிறேன்..”
“என்னடி சொல்ல சொல்ற? பல வருஷத்துக்கு பிறகு அந்த வார்த்தையை கேட்கிறப்போ கோபப்படாம என்னடி பண்ண சொல்ற?!” என்று வெடித்தவன்,
“அந்த ஆளு பண்ணின தப்புக்கு இன்னும் எத்தனை வருஷத்துக்கு நாங்க அவமானப்படணும்? எவ்வளவு தூரம் ஓடினாலும் இந்த அவமானம் மட்டும் விடாதுல...” என்று முரளி உடைந்த குரலில் சொல்ல, ராகவியின் மனம் கனத்தது.
முரளியின் கரத்தை எடுத்து தன் கையில் வைத்து கொண்டு வருடியவள், “அவங்க பேசினதுக்காக நீ ஏன் மாமூ மனசை போட்டு இவ்வளவு குழப்பிக்கற?”
“ஏன்னா அது பொய் இல்லையே ராகா.. அந்தாளு கொலை பண்ணது உண்மை தானே? அதுக்காக இத்தனை வருஷம் நானும் அம்மாவும் அனுபவிச்சோம் ஆனா அபிராமி?” என்றவன் குரல் மெல்ல உடைய தொடங்கியது.
“அவ என்ன பண்ணினா? அவ வாழ்க்கை எதுக்கு இதுல சிக்கணும்? இதெல்லாம் நினைச்சாலே எனக்கு...” என்றவன் அடுத்து தொடர முடியாமல் தலையை அழுத்தமாக பிடித்துக்கொண்டான்.
அவன் படும் பாட்டை இன்று நேற்றல்ல அவளுக்கு விபரம் தெரிந்த நாள் முதலாகவே பார்த்து கொண்டு தான் இருக்கிறாள் ராகவி.
அவளுக்கும் பாரிநேயன் மீது கோபம் இருந்தது. அதுவும் தன் மாமூவை மனம் நோக செய்து அவன் படிப்பை பாதியில் நிறுத்தி ஊர்ராரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக்கிய மாமன் மீது அதிகளவு கோபம் இருந்தது.
ஆனால் இப்போது அந்தளவு இல்லை.
“ஒருத்தர் செய்த தப்புக்கு அவரோட குடும்பமே ஆயுள் முழுக்க தண்டனை அனுபவிக்கணும்னு எந்த சட்டத்துலயும் இல்லை...”
“சட்டத்துல இல்லடி... ஆனா சமூகத்துல இருக்கு..”
“சமூகம் என்ன சொன்னாலும் அபிராமிக்கு நீ இருக்கே மாமூ... அது போதாதா?!...”
“போதாதுடி!” என்று கையை இழுத்து கொண்டவன்,
“ஒருத்தன் நல்லவனா வாழணும்னு நினைச்சா மட்டும் போதாதுன்னு வாழ்க்கை தினமும் நிரூபிக்குது. நான் படிப்பை விட்டேன்... ஃப்ரெண்ட்ஸ் இல்லாம வாழ்ந்தேன்... ஊருக்குள்ள தலை நிமிர முடியாம எத்தனை நாள் நசுங்கி இருக்கேன் தெரியுமா?” என்றவன் மனதில் வருடங்களாக அடக்கி வைத்திருந்த வலி வெளி வர அவளும் அமைதியா கேட்டு கொண்டிருந்தாள்.
“ஆனா அபிராமிக்கு இது எதுவும் வரக்கூடாதுன்னு தான் அவளை வெளியூர்ல படிக்க வைச்சேன். அதே போல நல்ல வாழ்க்கை அமைஞ்சுடும்னு நினைச்சேன்...” என்று விரக்தியாக புன்னகைத்தவன்,
“ஆனா கொலைகாரன் பொண்ணுன்னு தெரிஞ்ச ஒரு நிமிஷத்துல எல்லாம் முடிஞ்சிடுச்சு...” என்றான்.
“நீ இவ்ளோ சொன்ன, ஆனா உன்னை பார்த்தா எனக்கு ஒரு விஷயம் மட்டும் தான் தோணுது சண்டியரே...” என்றவளை ‘என்ன?’ என்பதாக பார்த்தான் முரளிதரன்.
“ஒரு கொலைகாரனோட மகனா இல்ல.. உன் குடும்பத்தை தாங்கி நிற்குற மனுஷனா, நல்ல தலைவனா தான் தெரியற..”
‘ஊர் என்ன பேசுச்சுன்னு சொன்னியே தவிர்த்து இப்போ என்ன பேசுதுன்னு சொல்லாம விட்டுட்டியே மாமூ?! அதோடு உன்னை தெரிஞ்சவங்களுக்கு நீ யாருன்னு நல்லாவே தெரியும்...” என்றாள் நிதானமாக.
எதுவும் பேசாமல் அவளை பார்த்திருந்தவன் மெல்ல கண்களை மூடி ஆழ்ந்த மூச்சை வெளியேற்றினான்.
பல வருடங்களாக அவன் மனதில் கனன்று கொண்டிருந்த வலிக்கு, அவளது வார்த்தைகள் மயிலிறகாய் வருடி ஆறுதல் அளித்தது.
“இத்தனை வருஷமா எவ்வளவோ அவமானத்தை கடந்து உன்னை நீ யாருமே நினைச்சு பார்க்க முடியாத உயரத்துல கொண்டு நிறுத்தியிருக்க…”
“அப்படி இருந்தும் உன்னோட கோபம் மட்டும் மாறவே இல்லையே! அதுதான் எனக்கு கவலை கொடுக்குது. நீ கோபப்படறதால ஏதாவது மாறிடும்னு நினைக்கிறியா மாமூ”
“இல்ல ராகா! ஒரு விதத்துல பார்த்தா இவனுங்க பேசினது தப்பே இல்லை. கொலை செய்தவன் மகன் தானே நான்?!” என்றவனிடம் கசந்த புன்னகை.
“என் அடையாளத்தை கண் கூடா பார்த்த பிறகும் திரும்ப திரும்ப ஏன் அதையே சொல்றாங்க..”
“உனக்கான அடையாளம், பேர், புகழ் உனக்கானது அதை யாரும் மறுக்க முடியாது ஆனா...” என்றவள் தன் பேச்சை நிறுத்தவும் அவள் புறம் திரும்பியவன் “என்ன ஆனா?!” என்றான்.
“ஆனா நீ கோபத்தை விட்டுட்டு யோசிச்சா யார் மேல தப்புன்னு உனக்கே புரியும்..”
“அப்போ பேசினவங்க மேல எந்த தப்பு இல்லை என் மேல தான் தப்புன்னு சொல்றியா?”
“இல்லை மாமூ அவங்க ஆதங்கம் சரி ஆனா பேசின விதம் ரொம்ப தப்பு அதே போல உன்னோட கோபம் சரி ஆனா அதை நீ வெளிப்படுத்தின விதம் தப்புன்னு சொல்றேன்..”
“என்னடி பேசற? அவங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் இங்கே வராமலே போயிருக்கலாம் ஆனா வீடு தேடி வந்து ஏளனம் பேசுவாங்களா? அவமானப்படுத்துவாங்களா? யார் கொடுத்தா அந்த உரிமையை?”
“அவங்களும் ஒன்னும் அவமானப்படுத்தனும்னு கிளம்பி வரலையே மாமூ..”
“என்னடி சொல்ற?”
“ ப்ச் தரகர் எதுவும் சொல்லாம கூட்டிட்டு வந்தது அவரோட தப்பு. அது மட்டுமில்லாம உன்னோட வளர்ச்சி பிடிக்காத சிலர் ஊருக்குள்ள இன்னமும் இருக்க தான் செய்யறாங்க..”
“கொலைகாரன் மகன் ஊருக்கே படியளக்கும் சாமியா இருக்கானே.. நம்ம பொண்ணுங்க பயம் இல்லாம வேலை செய்யுதே சொந்த காலுல நிக்குதேன்னு சிலருக்கு வயித்தெரிச்சல் இருக்க தான் செய்யும் அதை இப்படி காட்டுறாங்க..”
“வழியில எதுக்காகவோ தரகர் விலகி போனப்போ மாப்பிள்ளை வீட்டாரை தேடி போய் இந்த விஷயத்தை சொல்லி சம்பந்தத்தை கெடுத்திருக்காங்க இதனால நீ உடைஞ்சு போக கூடாது மாமூ..” என்றிட அவனும் தணிந்தான்.
சிறுவயது முதலே முரளிதரன் பட்ட காயங்கள் கடந்து வந்த முப்பாதைகள் அனைத்தும் அவனை வெகுவாக இறுக வைத்திருந்தது. ஆனால் அவன் இளகும் ஒரே இடம் ராகவி மட்டும்தான்!!
அவளிடம் அவன் கொண்ட உரிமையும், அவளுக்கான அவன் கடமையும் இன்று நேற்று உருவானது அல்ல.
சிறுவயதிலிருந்தே வேரூன்றிய பந்தம் அது.
தன் கோபம், மகிழ்ச்சி, ஆதங்கம், வேதனை எதுவாக இருந்தாலும் எவ்வித கட்டுப்பாடும் இன்றி அவன் வெளிப்படுத்தும் ஒரே நபர் ராகவி தான்.
அன்னையிடம் கூட இந்த அளவு மனம் விட்டு பேச மாட்டான் தங்களிடம் ஓரளவிற்கு மேல் பேச்சுக்கள் வைத்துக் கொள்ளவும் மாட்டான்.
“இப்போ சொல்லு மாமூ, மாப்பிள்ளை வீட்டார் மேல நீ கோபப்பட்டது அடிச்சது தப்பா? சரியா?”
“தப்பு தான்டி!!”
“குட்!! இப்போ என்ன பண்ண போற?” என்று ராகவி கைகளை கட்டிக்கொண்டு முரளியை பார்த்தாள்.
ஒரு நொடி கண்களை மூடி ஆழ்ந்த மூச்சை எடுத்தவன் தன் கைபேசியை எடுத்து மாப்பிள்ளையின் தந்தைக்கு அழைத்தான்.
மறுபுறம் அழைப்பை ஏற்கவும், “நான் முரளி பேசறேன் ஸார்..” என்றான்.
“அதுதான் வீட்டை விட்டு போக சொல்லி அசிங்க படுத்திட்டீங்களே அப்புறம் எதுக்கு ஃபோன் பண்ணி இருக்கீங்க?” என்றார் கோபத்தோடு.
“முதல் முறை இந்த விஷயத்தை கேள்வி பட கூடியவங்க யாரா இருந்தாலும் உங்களை மாதிரி தான் கோபப்பட்டிருப்பாங்க.. ஆனா நான் அப்படி நடந்துகிட்டு இருந்திருக்க கூடாது. முதல்ல என்னை மன்னிச்சுடுங்க..” என்றதில் அவர் கோபம் சூரியன் கண்ட பனி போல நொடியில் மறைந்து போனது.
“தம்பி என்ன சொல்றீங்க?”
“தரகர் கிட்ட ஏற்கனவே விஷயத்தை சொல்லி தான் கூட்டிட்டு வர சொல்லி இருந்தேன். ஆனா அவர் சொல்லாம விட்டிருக்கார். அதனால நான் கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்..” என்று பேசி முடிக்கவும் அவனை நெட்டி முறித்தாள் ராகவி.
“இதுதான் என் மாமூ!!” என்று பெருமையோடு அவன் கன்னம் கிள்ளி முத்தம் வைத்தவள், “அதுதான் கோபம் போயிடுச்சே.. கொஞ்சம் சிரிக்கலாமே” என்றாள்.
அதில் தன்னை மீறி அவன் முகத்தில் புன்னகை உதயமாக, “சரி இளநீர் தள்ள சொல்லட்டா?” என்றான்.
“ஏன் நீ தள்ளி கொடுக்க மாட்டியா?” என்றதுமே வேட்டியை மடித்து கட்டியவன் ஒரே தாவலில் தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறித்து வந்து தானே அவளுக்கு சீவி கொடுத்தான்.
பாதி குடித்தவள் மீதியை அவனிடம் கொடுக்க மறுக்காமல் வாங்கி அருந்தியவன் அங்கிருந்த காவலரிடம் ராகவியின் ஸ்கூட்டியை கொண்டு வர சொல்லிவிட்டு அவளோடு கிளம்பினான்.