• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிழலை கடந்த காதல் -2

STN - 24

New member
அத்தியாயம் -2

இரவு எட்டு மணியைக் கடக்க,

சசியின் தோளில் தட்டிய பரத்,
"டேய், என்ன யோசனையில் இருக்க?" என்று கேட்டான்.

"ஒன்னும் இல்லடா."

"நீ முதல்ல வீட்டுக்குக் கிளம்பு. போய் தங்கச்சியைப் பாரு."

"வேலை இருக்கு மாப்ள."

"அப்புறமா வேலையைப் பார்க்கலாம். நேரம் ஆகுது பாரு. மாசமா இருக்க புள்ளை நேரத்துக்குச் சாப்பிட வேண்டாமா?"

"அதுக்கு?"

"பிரியாணி வாங்கித் தர சொல்லல. தங்கச்சிக்குப் பிடிச்சதா ஏதாவது வாங்கிக் கொடு. கிளம்பு நீ."

"இல்லடா, வேலை நிறைய கிடக்கு பெண்டிங்க்ல."

"நான் பார்த்துக்கறேன். போ. நீ இங்க இருந்தாலும் உன்னால வேலையில கான்சன்ட்ரேஷன் பண்ண முடியாது."

அதை உணர்ந்த சசியும்,
"சரி..." என்று தலையசைத்துவிட்டு, தன் பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

அவசரத்துக்கு அவனுக்குப் பைக்குதான் சரியாக இருக்கும். ஆரம்பத்தில் நண்பனுடன் அவனும் ட்ரெயினில்தான் வந்து கொண்டிருந்தான். ஆனால் மனைவி மாசமாக இருந்த பிறகு, ட்ரெயின் சரிப்பட்டு வராது என்பதால் வண்டியை எடுத்துக்கொண்டு வந்து விடுவான்.

நேராக பைக்கை எடுத்துக்கொண்டு தனக்குத் தெரிந்த ஒரு பாட்டியின் வீட்டு முறை உணவுக் கடையில் வண்டியை நிறுத்தினான்.

உள்ளே சென்றவன்,
"பாட்டி, மாசமா இருக்க பிள்ளைக்கு இடியாப்பம் வேணும்," என்றான்.

சிரித்தவர்,"எத்தனை மாசம்ய்யா பேத்தி?" என்று அவன் கன்னத்தைத் தட்டிக் கேட்டார்.

"நிறை மாசம் பாட்டி."

"ஓ... இந்த நேரத்துல இடியாப்பம் பிரச்சினை இல்ல. ஆனா தேங்காய் பாலு..." என்றவர்,
"புள்ள ஆசையா கேட்டிருக்கும் இல்ல?" என்று சிரித்தார்.

"நீங்க வேற பாட்டி. நீங்க தேங்காய் பாலுக்கு யோசிக்கிறீங்க. அவ பிரியாணி கேக்குறா."

சிரித்தபடியே அவனுக்கு இடியாப்பத்தைக் கட்டினார். மேலும் இரண்டு இடியாப்பங்களை வைத்து,

"போதும் பாட்டி. அதுக்கு மேல வேணாம்," என்றான்.

"மாசமா இருக்க புள்ள. ஒண்ணு, ரெண்டு சேர்ந்து சாப்பிட்டா குறைஞ்சிடாது பா. மீதம் இருந்தா வீட்ல இருக்க யாராவது சாப்பிடுவீங்க," என்றபடியே கட்டியவர்,

அவனிடம் இடியாப்பத்தை நீட்டியபடி,"சாப்பிட்ட உடனே பேத்தியை வெந்நீர் குடிக்கச் சொல்லு. சீக்கிரம் ஜீரணமாகும். இல்லன்னா நெஞ்சு கரிக்கிற மாதிரி இருக்கும். சாப்பிட்ட உடனே படுக்க வைக்காம கொஞ்சம் நடக்க வை" என்றார்.

"சரி" என தலையசைத்தவன், அவர் அதிகமாக வைத்த இடியாப்பத்திற்கும் சேர்த்துப் பணம் கொடுக்க,

"என் பேத்தியா இருந்தா கொடுக்க மாட்டேனா? நீ கேட்டதுக்கு மட்டும் காசு எடுத்துக்கறேன்," என்றபடி அவன் கேட்டதற்கான பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, மீதிப் பணத்தை அவனிடமே நீட்டினார்.

அவனும் சிரித்தபடி வாங்கிக்கொண்டு, வேறு எதுவும் சொல்லாமல் வீட்டிற்கு வண்டியை விட்டான்.

முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு ஹாலில்தான் உட்கார்ந்திருந்தாள் அவனது மனைவி, மாமியாருடன்.

"என்னவாம் இப்ப உன் மருமகளுக்கு? இப்படி ஒவ்வொருத்தவங்களா செல்லம் கொஞ்சித்தான் அவளை கெடுத்துட்டு இருக்கீங்க."

"போடா. புள்ள ஆசையா பிரியாணி கேட்டுச்சு. சாப்பிடக் கூப்பிட்டாலும் வரமாட்டேங்குது."

"விடும்மா, நான் பார்த்துக்கறேன்," என அவளை டைனிங் டேபிளில் உட்கார வைத்து, தான் வாங்கி வந்த இடியாப்பத்தை எடுத்து நீட்டினான்.

அவனை முறைத்துவிட்டு அமைதியாகச் சாப்பிட்டாள்.

சாப்பிட்டு முடித்தவள் அவன் தோளில் சாய்ந்துகொள்ள,

"ஏன்டி, என்ன தேடுதுன்னா எதையாவது ஒண்ணு சொல்லிக்கிட்டே இருப்பியா? அது வேணும், இது வேணும்னு நேரடியாவே சொல்லிப் பழக மாட்டியா?" என்றான்.

"அப்படியே நான் நேரடியா வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிட்டா, உடனே வந்துட்டுத்தான் மறு வேலை பார்ப்பீங்களா? எனக்கு இந்த வேலை இருக்கு, அந்த வேலை இருக்குன்னு பேச்சை மாத்த மாட்டீங்க? போன் பண்ணாலும் ரெண்டு வார்த்தை பேசிட்டு வச்சிடுறீங்க."

"உன்ன வச்சிக்கிட்டு மேய்க்க முடியலடி இம்சை," என செல்லமாக அவள் தலையில் கொட்டினான்.

"டேய்! மாசமா இருக்க புள்ளைய நேரம் கெட்ட நேரத்துல தலையில எதுக்குடா கொட்டுற?" என்று அதட்டினார்.

ஹாலில் உட்கார்ந்து இவர்களின் சம்பாஷணைகளைக் கேட்டபடி சிரித்துக் கொண்டிருந்தார் சசிதரனின் அம்மா தெய்வானை.

"உன் மருமகள ஒண்ணும் பண்ணல தாயே. பார்த்துக்கோ. கொஞ்சம் வேலை இருக்கு," என எழுந்துகொள்ள,

அவனது கையை வேகமாகப் பிடித்தாள் ரேகா.

"வந்ததுதான் வந்துட்ட. இப்ப என்ன? நீ புள்ளைய பாரு," என எழுந்துகொண்டார் தெய்வா.

சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தவன், அவளுக்குச் சுடுதண்ணீர் கொடுத்து குடிக்க வைத்துவிட்டு, அதன் பிறகு அவளை நடக்க வைத்தான்.

அவள் அசதியாக இருக்கவும், ரூமுக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்தவன், பாத்ரூமில் வெந்நீர் பிடித்துக்கொண்டு வந்து, அன்னக்குண்டானில் கல் உப்பு சேர்த்து அவள் கால்கள் இரண்டையும் அதில் வைத்து விட்டான்.

நிறை மாதமாக இருப்பதால் நீர் கோர்த்துக்கொண்டு கால் வீக்கம் இருந்தது.

சசிதரனின் மனைவி ரேகாவிற்கு.
ரேக்ஸ் என்று அவனால் செல்லமாக அழைக்கப்படுபவள்.

தாய், தந்தை என அவளுக்குப் பெற்றவர்கள் யாரும் இல்லை.

அவள் பத்து வயதில் இருக்கும்போது, தாய் தந்தை இருவரும் அவளை தாய் மாமா வீட்டில் விடுமுறைக்காக விட்டுவிட்டு ஊருக்குச் சென்றிருந்தனர்.

அவர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி, அதில் பலர் உயிரிழந்தனர்.

அவர்களில் இவளது பெற்றோரும் அடக்கம்.

அதன் பிறகு தாய் மாமாவின் வளர்ப்பில்தான் வளர்ந்தாள்.

ஆனால் அவருடைய மனைவிக்கு இவளைக் கண்டாலே ஆகாது.

தாய் மாமாவும் இவளை தொடர்ந்து வளர்ப்பதற்குச் சிரமப்பட்டார்.

அவருக்கும் இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தனர்.

இவளையும் சேர்த்து வளர்ப்பது அவருக்குச் சிரமமாகவே இருந்தது.

அப்படி தாய் மாமா வீட்டில் வளர்ந்தவள், பருவமடைந்த பிறகு...

"இப்போ என் பிள்ளைகளோட சேர்த்து இவளுக்கும் நானே நகை நட்டு சேர்த்து வைக்கணுமா?" என்றுதான் கணவன் மனைவிக்குள் சண்டை வந்தது.

"நான் படிச்சு நல்ல வேலைக்குப் போறேன் அத்தை. என்னைப் படிக்க மட்டும் வையுங்க," என்று கேட்டிருந்தாள் ரேகா.

அவளது மாமா தன்னால் முடிந்த அளவிற்கு அவளைக் கல்லூரி வரை படிக்க வைத்தார்.

கல்லூரியில் படிக்கும்போது காதலித்தவன்தான் சசிதரன்.


ரேகா, மாமாவின் மகளைவிட வயதில் மூத்தவளாக இருக்க, அதையே காரணமாகக் கொண்டு ரேகாவின் அத்தை பேச ஆரம்பித்தார்.

"என் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கணும். இவளை வச்சிக்கிட்டு என் பொண்ணை எப்படி கட்டிக்கொடுப்பேன்?" என்று கேட்டார்.

அதற்கு ரேகாவின் மாமா,
"முதல்ல என் தங்கச்சி மகளுக்கு முடிச்சுட்டுத்தான் உன் மகளுக்கு பார்க்கணும்," என்றார்.

"ஓ... அப்போ இவ உங்க மக இல்லன்னு சொல்றீங்களா?" என்று குத்தலாகக் கேட்டார் அவர்.

"நான் எப்போடி அப்படிச் சொன்னேன்? நம்ம மகளைவிட மூத்தவ இருக்கும்போது, இளையவளுக்கு முன்னாடி எப்படி பார்க்க முடியும்? அதான் சொன்னேன்," என்றார் அமைதியாக.

"ஏங்க, கொஞ்சமாச்சும் என் புள்ளைகளுக்கு அப்பா மாதிரி பேசுங்க. இம்புட்டு நாள் நீங்க வளர்க்கும்போது நான் ஏதாவது கேட்டேனா?

இப்போ உங்க மருமகளே வேலைக்குப் போய்ச் சேர்த்து வைத்த காசுல என்னத்த சேர்த்து வைத்திருக்கா? ஒரு ரெண்டு, மூணு பவுன் தேறுமா? அவ செலவுக்கே அவ சம்பாத்தியம் சரியா போகும். அதையும் தாண்டி..." என்று பேசிக் கொண்டிருந்தவர், கணவனின் முறைக்கும் பார்வையில் அமைதியாகிவிட்டார்.

"அப்படி ஒண்ணும் என் தங்கச்சி மகளை நான் உட்ற மாட்டேன். என்னால முடிஞ்ச அளவுக்கு, உனக்குத் தெரியாம ஒரு பத்து பவுன் சேர்த்து வைத்திருக்கேன். போதுமா?

அதை வைத்து அவளைக் கட்டிக்கொடுத்துப்பேன். பத்தலைன்னா எங்கயாச்சும் கடன் வாங்கிக்கூட என் தங்கச்சி மகளை நல்லபடியா கட்டிக்கொடுத்துக்கிறேன்.

உன் மகளுக்காக நீ சேர்த்து வைத்திருக்கும் எதிலயும் நான் கை வைக்க மாட்டேன்" என்று உறுதியாகக் கூறினார்.


ரேகா கண்கள் கலங்க,

"இல்ல மாமா... அது..." என்று தடுமாறினாள்.

அன்றுதான் தன் விருப்பத்தை தாய் மாமாவிடம் கூறியிருந்தாள்.

"என்னம்மா சொல்ற? இம்புட்டு நாள் சொல்லவே இல்லையே?"

"அப்பன், ஆத்தா இருந்திருந்தா சொல்லணும்னு தோணி இருக்கும். மாமாதானே? எதுக்குச் சொல்லணும்னு நினைச்சிருப்பா?" என்று அவளது அத்தை இடையில் பேசினார்.

தன் மனைவியை முறைத்து அதட்டியவர், தங்கை மகளைப் பார்த்தார்.

"அப்படியெல்லாம் நினைக்கல மாமா. அத்தை சொல்ற மாதிரி, இப்பவே சொல்ல அதுக்கு அவசியம் இல்லன்னு நினைச்சேன். இப்போ நீங்க நம்ம பபிக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சதுக்குப் பிறகுதான் சொல்லணும்னு தோணுச்சு.

அதுவும், நான் இருக்க அவளுக்குக் கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்றீங்க. அதான் அவளுக்கு குறுக்க நான் நிற்க வேண்டாமே?

எனக்காக இவ்வளவு நாள் நீங்க பார்த்துப் பார்த்து பண்ண வரைக்குமே போதும் மாமா..." என்று கண்கலங்கியவள், தான் யாரை விரும்புகிறாள், அவன் யார், என்ன செய்கிறான் என அனைத்தையும் கூறிவிட்டாள்.

விசாரித்துப் பார்த்தார்.

அவருக்கும் அனைத்தும் திருப்தியாக இருக்க,
"அந்தப் பையன் வீட்டுல ஒத்துப்பாங்களாம்மா?" என்று சிறிது தயக்கத்துடனே கேட்டார்.

"நான் அவர்கிட்ட பேசுறேன் மாமா," என்றாள் ரேகா.

அதன்பிறகு சசியை நேரில் பார்த்து, வீட்டில் நடந்ததை அவனிடம் கூறியிருந்தாள்.

"நான் வீட்டுல பேசுறேன் ரேக்ஸ். அம்மா, அப்பாவுக்கு ஏற்கனவே சம்மதம்தான்! ஒண்ணும் பிரச்சனை இல்ல" என்றான்.

ஒரு சில நொடிகள் தயங்கினாள்.

"உன் அண்ணன் இருக்கான். எந்தப் பிரச்சனையா இருந்தாலும் சமாளிச்சு உன்னை என் கையில ஒப்படைப்பான்," என்று அவளுக்கு உறுதியளித்திருந்தான்.

நண்பன் காதலிக்கிறான் என்று தெரிந்ததிலிருந்தே, அவளைத் தங்கையாகப் பாவித்திருந்தான் பரத்.

அதுவும், பெற்றோர்கள் யாரும் இல்லை என்று தெரிந்த பிறகு, "உனக்கு நான் இருக்கிறேன்" என்று வார்த்தைகளால் சொல்லவில்லை என்றாலும், தனது செயல்களால் அவளுக்கு உணர்த்தியிருந்தான்.

அப்படி இருக்கையில், இப்போது "உன் அண்ணன் இருக்கான்" என்று சசி கூறியதும், அவளுக்கும் ஆறுதலாக இருந்தது.

அதன்பிறகு தங்கள் வீட்டில் வந்து பேசுமாறு கூறினாள்.

சசி தனது நண்பனிடம் விஷயத்தைக் கூற, அவனும் நேராக தனது நண்பனின் அம்மா, அப்பாவைப் பார்க்கச் சென்றான்.

"அத்தை... மாமா..." என்று சிறுவயதிலிருந்தே அழைத்துப் பழகியவன் என்பதால்,

"அத்தை, தங்கச்சி வீட்டுல போய் பொண்ணு கேட்கலாம்" என்று கூற,அவர்களும் சம்மதம் தெரிவித்தனர்.

ஏற்கனவே சசியின் காதல் விஷயத்தை வீட்டில் கூறியிருந்தார்கள்.

உடனே தன் பெற்றவர்களையும், சசியின் பெற்றவர்களையும் அழைத்துக்கொண்டு பெண் கேட்க கிளம்பிவிட்டான்.

மறுநாளே,அங்கு கூட்டமாக வந்து நிற்க,ரேகாவின் தாய் மாமா மனைவிதான் வாயில் விரல் வைத்து நின்றார்.

அருகில் நின்ற தன் மகளை இடித்தவர், "நீயும் தான் இருக்கியே? என்னத்துக்கு இருக்க? அப்பன், ஆத்தா இல்லனாலும் எப்படி குடும்பமா வந்து பொண்ணு கேக்குறாங்க பார்த்தியா? வசதியான இடமாவும் இருக்கும் போல!" என்று தன் மகளை நொந்துகொண்டார்.

கணவனின் முறைப்பில், வந்தவர்களை வரவேற்று உபசரிக்க ஆரம்பித்தார்.

அப்படியே ரேகா , சசியின் திருமணம் பரத்தின் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.

"அவள் எனக்கும் தங்கச்சிதான்" என்று கூறி, அவனும் சில பொறுப்புகளை ஏற்றுக்கொண்டபோது,

"என் தங்கச்சி மகளுக்கு நான் எதுவுமே போட மாட்டேன்னு நினைச்சுட்டியா பா?" என்று பரத்திடம்தான் வருந்தினார் ரேகாவின் மாமா.

"அச்சோ மாமா! நான் அப்படிச் சொல்லவே இல்ல. நீங்க செய்யுங்க. உங்களுக்கும் கஷ்டம்தானே? ஒண்ணுக்கு ரெண்டு பொண்ணு இருக்காங்க. அதுவும் கல்யாண வயசுல இருக்காங்க.

அத்தை சொல்றதையும் தப்புன்னு சொல்லிட முடியாது இல்ல. நீங்க ரேகாவுக்கு செய்யணும்னு நினைக்கிறதச் செய்யுங்க," என்றான்.

இருவருமே பங்கு எடுத்துத் திருமணத்தை கோலாகலமாக நடத்தி முடித்தனர்.

இப்போது வளைகாப்பையும் பரத்தும், அவளது தாய் மாமாவும் பாதி பாதிப் பங்கெடுத்துத்தான் சீரும் சிறப்புமாக நடத்தி முடித்திருந்தனர்.

ஆனால், ரேகா தன் தாய் மாமா வீட்டில் ஒரே ஒரு பகல் மட்டும் இருந்துவிட்டு, அன்று இரவுகூட அங்கு தங்கவில்லை.

தன் கணவனுக்கு அசௌகரியமாக இருக்கும் என்று எண்ணியவள், மாலையே விளக்கு வைப்பதற்கு முன்பாக, ஒரே ஊர் என்பதால் மாமாவிடம் தன் நிலையை எடுத்துக் கூறி, அவரது வருத்தத்தைப் போக்கிவிட்டு கிளம்பியிருந்தாள்.

அவளது அத்தை அதை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

'சந்தோஷம்... இனிமே என் உசுர வாங்காம இருந்தா போதும்!' என்று நினைத்தார்.

சசியும் பெரியதாக அவரைக் கண்டுகொள்ளவில்லை.

ஏன்?இத்தனை நாள் தங்கை மகளுக்காகப் பொறுத்துப் போன அவளது மாமா கூட, தன் மனைவியைப் பெரிதாகக் கண்டுகொள்ளாமல்,

"நீ இல்லன்னா என் தங்கச்சி மகளைப் பார்த்துக்க ஆள் இல்லன்னு நினைச்சியா? அவளுக்கு ஒரு குடும்பமே இருக்கு. பார்த்துப்பாங்க.

நீ போய் உன் வேலையைப் பாரு.

இனி காசு, பணம்னு எதுவுமே இங்கிருந்து கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது உனக்கு.

என் தங்கச்சி மக, அவ மனசுக்கு நல்ல வாழ்க்கை வாழ்றா.

அவளுக்கு தலைப்பிரசவம் கூட அவ அண்ணனே சீரும் சிறப்புமா பார்த்துப்பான்.

வளைகாப்பை ஊரே மெச்சுற மாதிரி முடிச்சவனுக்குத் தெரியாதா?" என்று பரத்தின் தோளில் கை போட்டுத் தட்டிக் கொடுத்தார்.

அவனும் சிரித்த முகத்துடன்,

"சரி மாமா. நீங்க மனசு கஷ்டப்படாதீங்க. அப்பப்ப வந்து பாத்துட்டுப் போங்க தங்கச்சியை.
என்னதான் நான் பார்த்துக்கிட்டாலும், நீங்க பார்க்கிற மாதிரி வராது" என்றான்.

அவன் ரேகாவைத் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல முயல,
"அண்ணா, தப்பா எடுத்துக்காதீங்க. அங்க வராம இங்க நம்ம வீட்டுக்கு வந்தா மாமாவுக்கு கஷ்டமாயிடும். நான் அவரோட இருக்கத்தான் விருப்பப்பட்டேன்" என்று கூறினாள்.

அதன்பிறகு தன் கணவருடன் தன் புகுந்த வீட்டிற்குச் சென்றுவிட்டாள்.

மாமியார் உள்ளங்கையில் வைத்து தாங்குபவர்.

தெய்வானை, ரேகாவைத் தன் மகளாகவே பாவித்துக் கொண்டிருந்தார்.

மகள் இல்லையே என்ற வருத்தத்தில் இருந்தவருக்கு, மருமகள் மகளாக கிடைத்திருந்தாள்.

அவளை எல்லா வகையிலும் தாங்கிக் கொண்டிருந்தார்.

அதுவும் இப்போது நிறை மாதமாக இருக்கும்போது விட்டுவிடுவாரா?

வீட்டு வாரிசு என்பதைத் தாண்டி, ரேகாவைத் தன் மகளாகத்தான் நினைத்தார்.

ஆகையால் தினமும் அவளுக்குத் தேவையான அனைத்தையும் அவர்தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

மகன் கிளம்பிய பிறகு, மருமகள் முழுவதுமாக அவரது பொறுப்புதான்.

எல்லாப் பக்கமும் அனைவரும் ரேகாவுக்கு சாதகமாக இருக்க,

உள்ளுக்குள் அவளது உடல்நிலையால் அவ்வப்போது நொந்து கொள்வது சசி மட்டுமே.

செல்லம் கொடுத்து, அவள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் தினமும் இரவு நேரத்தில் அவதிப்படுவது அவன்தான்.

ஆகையால் அனைவரையும் குற்றம் சாட்டுவான்.

"அதைத் தவிர உனக்கு வேற என்னடா வேலை?" என்று அவன் வாயை அடைத்து விடுவார்கள் அனைவரும்.

அனைவரும் அவளை நன்றாகப் பார்த்துக் கொள்வதில் அவனுக்கும் உள்ளுக்குள் மகிழ்ச்சிதான்.

ஆனால் இந்த நேரத்தில் அவள் கேட்பதை அப்படியே செய்து கொடுப்பதும், வாங்கிக் கொடுப்பதும் தான் இப்போது அவனுக்கு இருக்கும் பெரும் தலைவலி.

கிட்டத்தட்ட டெலிவரி தேதியும் நெருங்கிவிட்டது.

இன்னும் யாரும் அவன் பேச்சைக் கேட்பதாக இல்லை!
 
Top Bottom