அவனுக்கும் எனக்கும் ஓர் அரசாட்சி
அத்தியாயம் -05
அன்று நேரமே வந்த மகனைக் கனகு யோசனையாகப் பார்த்தார்.
"என்ன அரசா? இன்னைக்குச் சீக்கிரமே வந்துட்ட, மோர் கலந்து கொண்டு வரவா?" கனகுவின் முகத்தில் இருந்த கேள்வியைப் படித்து வாணியே அரசனிடம் கேட்டார்.
"இல்லை சித்தி, வேண்டாம்," என்றவன் பேச்சை நிறுத்தித் தாயின் முகம் பார்த்தான்.
மெல்லிய கொலுசு சலசலக்க அங்கே வந்த மருமகளைக் கண்டு இரு அத்தைமாருக்கும் நெஞ்சில் சுருக்கென்று ஆனது.
"இந்தப் பிள்ளைக்கு மாற்று உடுப்பே இல்ல. இதை எப்படி நாம் கவனிக்காமல் விட்டோம்?" என வாணியிடம் மனம் கசந்து போய்க் கனகு கூற, "எனக்கும் தெரியலைக்கா... நானும் கவனிக்காமல் விட்டுட்டேனே," என்றவருக்கும் அவளைக் கண்டு வருத்தம்தான்.
இரு தாய்மாரின் முகத்தில் இருந்த சங்கடத்தை உணர்ந்தவனின் முகம் மென்மையுற்றது.
"டிரஸ் எடுக்க டவுனுக்குக் கூட்டிட்டுப் போறேன்," என்று பொதுவாகக் கூற, அதற்கு மௌனமாகத் தலையசைத்தத் தாயை எண்ணி அவனுக்குள் பெருமூச்சு எழுந்தது.
"அப்புறம் போயிட்டு வாரேன் அத்தைஸ்... டவுனிலிருந்து உங்களுக்கு ஏதாவது வேணுமா?" என்று கேட்டவளிடம் என்ன கூறுவதென்று தெரியாமல், இருவரும் வேண்டாம் என்று தலை மட்டும் அசைத்தனர்.
"எதுக்கும் புதுப் புடவைகளை எடுத்து வச்சுக்கோங்க.தேவைப்படும்," என்று புதிராகக் கூறிவிட்டுச் செல்பவளைப் புரியாமல் பார்த்த கனகு, "இவ என்ன சொல்லிட்டுப் போறான்னு உனக்காவது புரியுதா?" என்று கேட்டார்.
"உங்களுக்கே புரியாதப்ப எனக்கு மட்டும் என்ன தெரியும்?" என்று விழிகளை உருட்டிய ஓரகத்தியை மார்க்கமாகப் பார்த்துவிட்டு, வேலைகளைக் கவனிக்கச் சென்றார்.
வண்டியானது சேலத்தின் ‘லலிதாம்பிகை ஜவுளி மாளிகை’யில் வந்து நிற்க, எதுவும் பேசாமல் அவனைப் பின்தொடர்ந்தாள் மீனாட்சி.
முதலில் புடவைகளை அவள் எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்க, சில நிமிடங்கள் கழித்து யோசனையுடன் அவளை நெருங்கினான் தேனரசன்.
"தேவையானதை எதுவும் யோசிக்காமல் எடுத்துக்கோ," என்று கூற,
"ஆமாம், இன்னும் தேவைதான்," என்றவள், தன் இடப்பக்கம் அடுக்கி வைத்திருந்ததைக் காட்டினாள்.
அவள் எடுக்கத் தயக்கம் காட்டக்கூடாது என்று நினைத்துக் கூற வந்தவன், அவள் அடுக்கி இருந்த துணிகளின் அளவைக் கண்டு செருமலுடன் அங்கிருந்து நகர்ந்து கொண்டான்.
பட்டுப்புடவை, காட்டன், பூனம் புடவை என்று அவள் அடுக்கி வைக்கப் பார்வையாளராக நின்று கொண்டான்.
ஒரு மணி நேர வேட்டைக்குப் பிறகு அவள் வெளிவர, இப்போது அவளைப் பின்தொடர்ந்தான்.
அவளின் பார்வை சுடிதார் பிரிவுக்குச் செல்ல, பின்னால் மூன்று ஆட்கள் புடவைகளை ஏந்தி வருவதைக் கண்ட பிறகும், "வேணும்னா எடுத்துக்கோ," என்றான்.
அவளோ அதற்கு எதிர்த்திசையில் இருந்த பெண்களுக்கான தனிப் பிரிவுக்குச் சென்றுவிட, நெற்றியைத் தேய்த்துக் கொண்டவன் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்.
அதே நேரம் வீட்டில், ஆடலரசனும் அன்பரசனும் இணைந்து வர, அவர்களுக்குத் தண்ணீரைக் கொடுத்துவிட்டுப் பெண்கள் இருவரும் அவர்கள் முகம் பார்த்து அமைதியாக நின்றனர்.
"அம்மா என்ன பண்றாங்க? சாப்ட்டீங்களா?" என்று வேலம்மாளை விசாரித்த ஆடலரசன், "குணவதி எங்கே?" என்று கேட்கவும் கனகவள்ளி தயங்கினார்.
குணவதி நேற்றிலிருந்து அறையை விட்டு வெளியே வராமல் முடங்கிக் கிடக்க, வேலம்மாள் மட்டும் துணையாக இருப்பதை எங்ஙனம் கூறுவதென்று புரியாமல் விழிக்க, ஆடலரசனின் பார்வையின் பொருளை உணர்ந்து வாணி அனைத்தையும் கூறினார்.
"சரி, ரெண்டு பேரையும் கூட்டிட்டு வாங்க," என்றதும் வாணி சென்று அழைத்து வந்தார்.
தங்கையின் முகம் சோர்ந்து போய்க் காணப்பட, அதைக் கவனித்தப்படி கனகுவிடம், "வடிவும் தமிழும் எங்க போனாங்க?" என்றார் ஆடலரசன்.
"வடிவு மாட்டுக் கொட்டகையில இருக்கா. தமிழ் எங்க போனான்னு தெரியலை."
"அந்தப் பொறுக்கி எங்காவது ஊரைச் சுத்திக்கிட்டு இருக்கும்!" என்று அன்பரசன் இடைப்புகுந்து மகனின் மீது இருந்த கோபத்தைக் காட்டினார்.
ஆடலரசன் தம்பியை முறைக்க, அண்ணனின் பார்வையில் அன்பரசன் தலையை வேறுபுறம் திருப்பிக் கொண்டார்.
ஆடலரசன் தொண்டையைச் செருமிக் கொண்டு, "அரசன் கல்யாண விஷயம் ஊருக்கு நாமளே சொல்றதுதான் முறையா இருக்கும். இப்பவே நிறைய பேருக்குத் தெரிஞ்சிருந்தாலும் வாயை மூடிட்டு இருக்காங்க. இன்னும் எத்தனை நாள் மறைக்க முடியும்? ஜோசியர்கிட்ட போய் நாள் பார்த்தோம். நாளைக்குக்கூட நாள் நல்லா இருக்காம்," என்றார்.
"அப்போ முடிவே பண்ணிட்டுதான் கேக்குறீங்களா அண்ணா?" என்ற குணவதியின் வார்த்தைகளில் இருந்த வலியை உணர்ந்து,
"என்ன குணா இது... வடிவை நினைச்சு ஏன் விசனப்படுற? நம்ம வீட்டுப் பிள்ளை... அவளை அப்படியே விட்டுவிடுவோமா என்ன? வடிவு பிரச்சினையையும் அரசன் பிரச்சினையையும் ஒண்ணா குழப்பிக்காதே," என ஆறுதலாக ஆரம்பித்தவர், இறுதியில் கண்டிப்பாக முடித்தார்.
"எப்படிக் குழப்பிக்காமல் இருக்க முடியும் அண்ணா? வடிவைப் பற்றி ஊர் என்ன நினைப்பாங்க? என் பொண்ணு பத்திரமா என் கூட இருப்பான்னு நினைச்சேன். இப்ப என்னன்னா அந்த வீட்டுப் பொண்ணை மருமகளாக்கிக் கூட்டிட்டு வந்திருக்கீங்க. அவ எப்படியோ.யோசிக்க மாட்டீங்களா?" என்று ஆதங்கமாகக் கேட்டார் குணவதி.
"என்ன பேச்சு இது? கல்யாணமே முடிஞ்சு வந்தப்புறம் இப்படி எல்லாம் பேசுறது சரியில்லை," என்று அன்பரசன் அதட்டினார்.
"அண்ணா, நீயும் புரியாமல் பேசாதே. எனக்கு ஏதோ சரியா படலை... அந்தப் பொண்ணு எப்படியோ? அவங்க குடும்பமும் சரியில்லை."
"நாம எதிர் கேள்வி கேட்க முடியாத இடத்துல இருக்கோம் குணா. அவங்க வீடு சரியில்லைன்னா நம்ம வீட்டுப் பையன் மட்டும் என்ன பண்ணினான்?" என்று ஆடலரசன் தங்கையைப் பார்த்து நிதானமாகக் கேட்க, "அண்ணா!" என்றார் அதிர்வுடன்.
"பின்னே என்ன? கையும் களவுமா ஊர்க்காரங்க பிடிச்சிருக்காங்க... அப்படியே விடுவாங்களா? ஏதோ பஞ்சாயத்து ஆகாமல் முடிஞ்சிருக்கு. ஏற்கனவே தலைக்கு மேல பாரமா இருக்கு. நீயும் பேசி எங்களைச் சங்கடப்படுத்தாதே. நம்ம பக்கம் தப்பு இருக்குறப்ப என்னன்னு பேச முடியும்? நீ வடிவு வாழ்க்கையை இதுல கொண்டு வராதே. அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சுத் தருவது எங்க பொறுப்பு," என்றார் ஆடலரசன்.
அதில் முணுமுணுப்புடன் குணவதி வாயை மூடிக்கொண்டார்.
"ஆத்தா, நீ சொல்லு."
"இல்லையா... நடந்தது நடந்து போச்சுதான். ஆனாலும் எனக்கு ஏதோ சரியா படலை."
"ஏன் ஆத்தா? அந்தப் பிள்ளையைப் பிடிக்கலையா?" என்று தளர்ந்து போய்க் கேட்டார் ஆடலரசன்.
"அட ஏன்டா... எனக்கு என்ன, நானா வாழப் போறேன்? வீட்டோட மூத்த வாரிசு, அவன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு ஒரு எண்ணம். ஒரு வார்த்தை அவன்கிட்ட கேட்கணும் இல்லையா?"
'அட! தாலியைக் கட்டி கூட்டிட்டு வந்தவர்கிட்ட இனிமேல்தான் கேட்கணுமாம்க்கும்!' என்று வாணி முணுமுணுக்க,
"அட, நீ வேற... அமைதியா இரு," என்று அதட்டிய கனகு, நொந்து போய் நடக்கும் உரையாடலைப் பார்த்தார்.
பேச்சுகள் நீண்டு கொண்டே செல்லக் கனகவள்ளி, "ஏங்க, ஒரு வார்த்தை அரசனுக்குக் கால் பண்ணிக் கேளுங்க," என்றார்.
எப்படியும் அரசனிடமிருந்து பதில் வராமல் இவர்கள் பேச்சை முடிக்கப் போவதில்லை என்று உணர்ந்து கூறினார்.
அதன்படி ஆடலரசனிடமிருந்து அழைப்பு செல்ல, உடைகளை எடுத்துக் கொண்டிருந்தவளின் மீதிருந்த பார்வையை விலக்கிக் கொண்டு, அலைபேசியை எடுத்துத் தன் காதில் வைத்தான் தேனரசன்.
நாளை நல்ல நாளாக இருப்பதாகக் கூறிய தந்தை அப்படியே தயங்க, "என்னய்யா? என்னாச்சு? ஏதாவது பிரச்சினையா?" என யோசனையுடன் கேட்டான்.
"இல்லப்பா.ஊர் சனத்தைக் கூப்பிட்டு ஒரு விருந்து வைக்கலாம்னு..." என்று அவர் வார்த்தைகளை இழுக்க, தேனரசனுக்குப் புரிந்து போனது.
"பண்ணுங்க, இதுல என்ன கேட்க இருக்கு? நான் ஏதாவது வாங்கிட்டு வரணுமா?" என்று அவன் இலகுவாகக் கூற, அதன் பிறகு கேட்கவே ஆடலரசனுக்குத் தயக்கமாக இருந்தது.
"அது இல்லப்பா.உனக்கு இந்தக் கல்யாணத்தில் முழு விருப்பம்தானே? ஊருக்குச் சொல்லலாமா, இல்லை...?" என்ற வினாவுடன் அவர் நிறுத்த, கண்களை இறுக்கமாக மூடித் திறந்தான் தேனரசன்.
தன் எதிரே இருப்பவளை அழுத்தமாகப் பார்த்தபடி, "என் வாழ்க்கையில ஒரு தடவைதான் கல்யாணம். அதுவும் முடிஞ்சிடுச்சு... மத்த ஏற்பாட்டைப் கவனிங்க. அம்மாட்ட கொடுங்க," என்றவன்.
நாளைக்குத் தேவையான பொருட்களையும் கேட்டு குறித்துக்கொண்டான்.
அலைபேசி ஸ்பீக்கரில் இருந்ததால் மொத்தக் குடும்பமும் கேட்டுக்கொண்டிருக்க, "வேலையை ஆரம்பிக்கலாம்," என்று கூறிய ஆடலரசன், வேலைகளை அனைவருக்கும் பகிர்ந்து அளித்துவிட்டு, மனைவியைக் கூட்டிக்கொண்டு ஆட்களை அழைக்கச் சென்றார்.
"முடிஞ்சுதா?" தன் அருகே வந்தவளிடம் கேட்டபடி தேனரசன் எழ, அந்தத் தளத்தில் எடுத்த பொருளுக்கான பில்லை அவன் கரத்தில் திணித்துவிட்டு, "அட இருங்க... எதுக்கு இந்த அவசரம்? கொஞ்சம் பொறுங்க அத்தான்," என்றாள் மீனாட்சி.
அந்தத் தளத்தின் இறுதியிலே அணிகலன்களிலிருந்து அழகு சாதனப் பொருட்கள் வரை இருக்க, அங்கு சென்று தனக்குத் தேவையானதை வாங்கிக்கொண்டு வந்தாள்.
இருவரும் எதுவும் பேசாமல் மௌனமாகப் பணம் செலுத்தும் இடத்திற்கு வர, பில் வந்ததும் பணம் செலுத்த அவள் முற்பட்டாள்.
இத்தனை நேரம் அமைதியாக இருந்தவனின் முகத்தில் இப்போது கோபத்தின் நிழல் படர்ந்தது.
பில்லை வாங்கப் போனவளின் கரத்தை அழுத்தமாகப் பற்றியவன், அவள் கரத்தில் இருந்ததைப் பிடுங்கி அவனே உடைகளுக்கானப் பணத்தைத் தந்தான்.
"இல்ல வேண்டாம்," என்றவளின் மறுப்பில் அவன் முறைக்க, அவள் வாயை மூடிக்கொண்டாள்.
மீண்டும் மௌனமாகவே அவர்களின் பயணம் தொடர்ந்தது.
அவளிடம் கேட்க ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் அவன் வாயை மூடிக்கொண்டான்.
"அட, என்னடி சங்கதி ஊருக்குள்ள? என்னென்னமோ நடக்குது.முந்தாநாள்தான் வடிவைக் காணோம்னு ஊரே சலம்பிட்டு இருந்தாங்க. சரி, பிள்ளை கிடைச்சிருச்சுன்னு தகவல் வந்ததும் போய் ஒரு எட்டு பார்க்கலாம்னு நினைக்கிறதுக்குள்ள, கனகு அண்ணியே வந்து அரசனுக்குக் கல்யாணம் ஆயிடுச்சு, விருந்துக்கு வாங்கன்னு கூப்பிட்டுப் போறாங்க," என்று அங்காலாய்ப்பாகக் கூறியவர்.
மேலும், "பெரிய வீட்டுச் சங்கதி ஒண்ணும் அகப்படலை. ஏன்டி, உனக்கு ஏதாவது தெரியுமா?" என்றார்.
"எனக்கு என்ன தெரியும்?" என்ற செல்வியின் வார்த்தை அப்படியே நிற்க, அதைக்கூட உணராமல், "அட, ஊர் பொம்பளைங்களே உன்கிட்டதான் துணி தைக்க வராங்க. துணியை மட்டுமா தைக்கிறீங்க. ஊரு கதையும் தானே சலம்பிட்டு இருக்கீங்க," என்று அவர் பேச, இதற்கு மேல் அப்படியே விட முடியாது என்று செல்வியே,
"வா அரசா, வாம்மா," என்று வரவேற்க, "என்ன, அரசனா!" என்று கேட்டபடி செல்வியின் மாமியார் திடுக்கிட்டு எழுந்தார்.
அவனை எதிர்பாராமல் திகைத்து உடனே, "அட, வா ராஜா... உன்னைத்தான் நினைச்சுட்டு இருந்தோம்," என்றவர், உடனே சமாளிப்பாக அசட்டுச் சிரிப்பையும் தந்தார்.
நெற்றியில் தட்டிக்கொண்டு உள்ளே சென்ற செல்வி, தண்ணீரை எடுத்து வந்து கொடுத்தார்.
"பத்து மணிக்குள்ள மூணு பிளவுஸ் தைத்துத் தரணும்... கொஞ்சம் அவசரம்," என்று மீனாட்சியே பேசினாள்.
"டிசைன் வைக்கணுமா?" என்றதும், அவள் புடவையை எடுத்துக்காட்ட, "டிசைன் பெருசா வைக்க முடியாதுமா," என்றார் செல்வி.
"பரவாயில்லை, நீட்டா தைத்துக் கொடுத்தா போதும்," என்றாள்.
அளவு எடுக்க அவளை மற்றொரு அறைக்கு அழைத்துச் சென்றார் செல்வி.
செல்வியின் மாமியாரோ, "அது வந்து தம்பி... அப்பா, அம்மா இப்பதான் அழைச்சிட்டுப் போனாங்க," என்றவர்.
"வடிவு பிள்ளையை நினைச்சு ரொம்ப வருத்தமாயிடுச்சு. நம்ம வீட்டுக்கு வந்த பிள்ளைக்கு இப்படியானது ரொம்ப மனசைச் சங்கடப்படுத்திட்டு," என வருத்தம் தெரிவித்தார்.
அதற்குப் பதில் பேசாமல் தலையை மட்டும் அசைத்து வைத்தான் தேனரசன்.
மீனாட்சி வரவும், "கிளம்பறோம்," என்று பொதுவாகக் கூறிவிட்டு விடைபெற்றனர்.
இருவரும் வீட்டிற்குள் நுழையும்போது கூடமே பேச்சுச் சத்தத்தில் நிறைந்திருந்தது.
வேலம்மாளின் ஒன்றுவிட்ட தங்கையோ, "இதுதான் அரசனைக் கட்டிக்கிட்ட பொண்ணா?" என அவளை மேலும் கீழும் அளந்தபடி கேள்வியை எழுப்பினார்.
வேலையாட்கள் தூக்கி வந்த உடைப்பைகளை விருந்தினர் அறையில் வைப்பதைப் பார்த்தவர்.
"என்னடா இது... நீ கூடையா சீர் கொண்டு வருவேன்னு பார்த்தா, நாங்க படி அளக்கணும் போலயே!" என்று எள்ளலாக அவர் ஆரம்பித்தார்.
சென்று கொண்டிருந்த தேனரசனின் நடை அப்படியே நிற்க, அழுத்தமாக அவரைப் பார்த்தான்.
உடனே தாய் கனகுவை, 'என்ன இது?' என்பது போல் நோக்க, அவரும் சங்கடமாக இவற்றைக்கண்டார்.
எப்படி அவர் பேச்சைத் தடுத்து நிறுத்துவது என்று புரியாமல் தன் மாமியாரை உதவிக்கு நாடினார்.
"அட! ஊர் வேணாம், உறவு வேணாம்... நீங்க மட்டும் போதும்னு எல்லாத்தையும் விட்டுட்டு, 55 கிலோ தங்கக் கட்டியா நானே சீதனமா வந்திருக்கேன். நான் போதாதா உங்க அரசனுக்கு?" என்று சவடலாகக் கூறிய மீனாட்சியைக் கண்டு, கூடம் மொத்தமும் அமைதியானது.