• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அவனுக்கும் எனக்கும் ஓர் அரசாட்சி - 6

Vishakini

Moderator
Staff member

அவனுக்கும் எனக்கும் ஓர் அரசாட்சி

அத்தியாயம் -06

படியில் நின்று கொண்டிருந்த தேனரசனோ, தன் இதழில் தோன்றிய கீற்றான புன்னகையுடன் தனது அறைக்குச் சென்றான்.

திடீரென்று மீனாட்சி கண்களைத் துடைக்கவும், அவளை நோக்கிச் சபையினரின் ஆதரவான பார்வையும், தன்னை நோக்கி அதிருப்தியும் வருவதைக் கண்டு,

"அடியாத்தி! நான் என்ன சொல்லிப்புட்டேன்னு கண்ணைக் கசக்குற? ஒரு வளமையைத்தானே சொன்னேன்," என்று தான் பேசிய பேச்சிலிருந்து நழுவி, வார்த்தைகளைத் திருப்பிப் போட்டார் வேலம்மாளின் ஒன்றுவிட்ட தங்கை.

"அட! நீங்க சொன்னதுக்கு நான் எதுக்குக் கண் கலங்கப் போறேன்? நீங்க என் புருஷனோட சொந்தமாச்சே.நான் எங்க கல்யாணத்தை நினைச்சுக் கண்ணைக் கசக்குனேன்," என்றவளிடமிருந்து மெல்லிய விசும்பல் வந்தது.

இதுதான் வாய்ப்பு என்பது போல், "இந்த ஊரோட சிங்கம்... அரசனைக் கட்டிக்கிறதுக்கு உனக்கு என்ன கசப்பு? எத்தனை பொண்ணுங்க நீ, நான்னு போட்டி போட்டு வந்தாங்க தெரியுமா?" என்று தன் பேரனின் பெருமையைப் பேசினார் வேலம்மாள்.

"அதுதானே, அவருக்கு என்ன... என் நிலைமைதான் இப்ப கவலைக்கிடம். சொந்த பந்தத்தோட நான் வரலையே... உங்க அரசன்... ஓ! மன்னிச்சிடுங்க, என் புருஷனை நம்பி வேற எதுவும் வேண்டான்னு வந்துட்டேன். இப்போ எனக்கு ஏது உறவு? எனக்கு எடுத்துச் செய்ய யார் இருக்கா?" என்று முந்தானையால் கண்ணைத் துடைக்க, மொத்தப் பெண்கள் கூட்டமும் அவளுக்கு ஆதரவாக மாறியது.

"அட, எங்க பெரிய வீட்டைப் பார்த்தா உனக்கு எப்படி இருக்கு? எத்தனை கல்யாணத்துக்கு எடுத்துக்கட்டிச் சீர் செய்யுறோம்! உனக்குச் செய்யறதுக்கு எங்களுக்கு என்ன? உறவே வேணான்னு எங்க பிள்ளைக்காக வந்திருக்க... உன்னை நாங்க தங்கமா தாங்க மாட்டோமா என்ன?" என்று பெண்கள் ஆதரவுக் கரத்தை நீட்ட, வேலம்மாளின் தங்கையும் ஆமோதிப்பதாகத் தலையசைத்தார்.

அந்தரப்பல்டி அடித்த தன் உறவினர்களைக் கனகுவும் வாணியும் வாயில் கை வைத்துப் பார்த்திருந்தனர்.

இத்தனை நேரம் அத்தனை பேச்சுகளையும் பொறுத்துக்கொண்டு, பல்லைக் கடித்து நின்றிருந்தனர்.

எப்படி இந்தப் பெண் அத்தனையையும் மாற்றினாள் என்று புரியாமல் அவளைப் பார்க்க, இவர்களின் பார்வையின் பொருளை அறிந்தது போல் கண்ணைத் துடைப்பது போல அவர்களை நோக்கியவள், ஒற்றைக் கண்ணைச் சிமிட்டிவிட்டு அப்படியே முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டாள்.

"அடியாத்தி!" என்ற கூவலுடன் நெஞ்சில் கை வைத்துக்கொண்ட வாணியை அனைவரும் நோக்கினர்.

"அது... ஆ... ஆப்பத்துக்கு அரிசி ஊற வச்சிருந்தேன். அதைப் பார்க்கணும், மறந்து போயிட்டேன்," என்ற சமாளிப்புடன் வாணி சமையலறைக்குள் சென்று மறைந்தார். மீனாட்சி தன் பேச்சால் அனைவரையும் கட்டிப்போட்டாள்.

அனைவரும் இரவு உணவை உண்டு அப்படியே கூடத்தில் கட்டையைச் சாய்த்துவிட, இரவு பதினொரு மணிக்குத் தமிழ் சென்று மீனாட்சிக்குத் தைத்த உடைகளை வாங்கி வந்தான்.

அனைவரும் உறங்கியிருக்க, என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறி கூடத்தில் அவன் நின்று கொண்டிருக்க, அறைக்கதவைத் திறந்து வந்த மீனாட்சி, அவன் கையிலிருந்த உடைப்பையைப் பார்த்துவிட்டு அவனையும் நோக்கினாள்.

தமிழ் என்ன பேசுவதென்று புரியாமல் தடுமாறி நின்றான்.

"அட, இன்னும் வரலையேன்னு பார்த்தேன்... பரவாயில்லையே, பொறுப்பா வாங்கிட்டு வந்துட்டீங்க," என்றாள்.

'பொறுப்பு' என்ற வார்த்தையில் அவள் கொடுத்த அழுத்தத்தில் அவனுக்குச் சுருக்கென்று இருந்தது.

துணிப்பையை அங்கிருந்த மேஜையில் வைத்துவிட்டு அங்கிருந்து நகரப் பார்க்க, "அடடடா! கொத்தமல்லிக் கொழுந்தே, நில்லுங்க... என்ன அவசரம்? சாப்டாச்சா?" என்றதும் தமிழ் தொண்டையைச் செருமிக் கொண்டான்.

"அட, வாங்க கொழுந்தனாரே!" என்றவள் அவனுக்கு உணவை பரிமாற, மறுக்க முடியாமல் அமர்ந்து உண்ண ஆரம்பித்தான்.

தண்ணீரை எடுத்து வந்து அவன் அருகே வைத்தவள், எதிரிலிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டாள்.

"அப்புறம், ஆள் கண்ணுலேயே அகப்பட மாட்டேங்குறீங்களே? அவ்வளவு வேலையா கொழுந்தனாரே?"

"இல்ல, அது..." என்று தடுமாறியவனுக்கு உணவு தொண்டையில் சிக்கிக்கொள்ள, தலையில் தட்டித் தண்ணீரை அவள் தர, அவள் அடியால் வலிக்கும் மண்டையைத் தேய்த்தபடி மீனாட்சியைப் பயத்துடன் பார்த்தான் தமிழ்.

"அண்ணனுக்குக் கூட மாட உதவி செய்யாமல் என்ன கண்ணாமூச்சி ஆட்டம்? ஒழுங்கா நாளைக்குக் கூட மாட இருந்து பொறுப்பா வேலையைக் கவனிங்க," என்று ஓர் அதட்டல் போட்டாள்.

பேச்சின் ஊடே மறுபடியும் அவள் பரிமாற, வலிக்கும் தொண்டையில் அதைத் தள்ளித் தண்ணீரைத் குடித்துவிட்டு அங்கிருந்து சென்றான் தமிழ்.

அவனை உணர்வுகளற்றுப் பார்த்தவள், சத்தம் செய்யாமல் பின்கதவைத் திறந்து அங்கே சென்றாள்.

கிணற்றடி... நிலவொளி மட்டுமே அங்கே ஆக்கிரமித்திருந்தது. துணி துவைக்கும் கல்லில் அமர்ந்தவளோ, வானில் தெரியும் நிலவை வெறித்தாள்.

கண்களில் வைரம் என ஒற்றைத் துளிக் கண்ணீர் உருவாகி, அது அவள் கன்னத்தின் வழியே பயணித்து நிலத்தை அடைந்தது.

அடுத்த நாள் அதிகாலையில் பரபரப்பாக அனைவரும் கிளம்ப, அரக்கு நிறப் பட்டுப் புடவை அணிந்து தயாராகி வந்தவளைக் கண்டவர்களின் கண்கள் நிறைந்தது.

திருமணம் எப்படி நடந்து இருந்தாலும், தங்கள் அரசனுக்குப் பொருத்தமானவள் என்ற எண்ணம் அவர்களுக்குள் எழாமல் இல்லை.

கனகுவுக்கு மனமெல்லாம் நிறைந்து போனது.

வாணி அவர் கை பிடித்து உலுக்க, "பிள்ளை கழுத்து மொட்டையா இருக்கு... அவளுக்கு நகையைப் போட்டு அழைச்சுட்டு வர்றேன்," என்றதும் வாணி சந்தோஷமாகத் தலையாட்டினார்.

"நான் இங்க வேலையைக் கவனிக்கிறேன், நீங்க போங்க அக்கா," என்றார்.

மீனாட்சியின் கையைப் பற்றித் தன் அறைக்கு அழைத்துச் சென்றவர், தன்னிடம் இருக்கும் நகைகளை எடுத்துக்கொடுக்க, மறுக்காமல் வாங்கி அணிந்து கொண்டாள் மீனாட்சி.

அதே நேரம் அறைக்குள் வந்த ஆடலரசன் இரு பெண்களையும் பார்த்துவிட்டு வெளியேறப் பார்க்க, "அட, நில்லுங்க மாமா!" என்றாள் மீனாட்சி.

"ரெண்டு பேரும் ஒண்ணா நில்லுங்க," என்று அவர்கள் காலில் விழுந்து ஆசி வாங்க, மனதில் இருந்த தயக்கங்களைக் களைந்து முழு மனதுடன் ஆசி வழங்கினர்.

ஆடலரசன் உடனே மனைவியைப் பார்க்க, அவரோ பீரோவிலிருந்து ஐந்நூறு ரூபாய் நோட்டுகள் சிலவற்றை எடுத்து அவர் கையில் கொடுக்க, "நல்லாயிருமா..." என்று ஆசீர்வாதமாக அவள் கையில் திணித்தார் ஆடலரசன்.

இரண்டு மினி வேன் மற்றும் கார்களில் சொந்தங்கள் இணைந்து குலதெய்வக் கோயிலுக்கு வந்து இறங்கினர்.

பூஜைக்கு அனைத்தும் தயார் செய்யப்பட்டிருக்க, தம்பதியருக்கான பூஜை நிறைவாக ஆரம்பித்தது.

தாம்பாளத்தில் மஞ்சள் தடவப்பட்ட தேங்காயில் அவர்களின் வழக்கப்படி தாலியானது, தங்கச் சங்கிலியில் கோர்த்து வைக்கப்பட்டிருந்தது.

அதைக் கண்டதும் மீனாட்சியின் உடல் மெலிதாக அதிர்ந்தது.

அருகில் நின்றிருந்த தேனரசனின் பார்வை உடனே அவள் மீது படிய, முயன்று அவனை நோக்கிப் புன்னகைத்தாள்.

மேளதாளங்களின் சத்தம் கேட்கவும் உணர்வு பெற்று, கடவுளை இருவரும் வணங்கினர்.

ஆடலரசனும் கனகவள்ளியும் தம்பதியராகத் தாலியை எடுத்து மகன் கையில் அளித்தனர். தாலியானது தேனரசனின் கைகளில் வீற்றிருக்க, இப்போது அவள் விழிகளோ தைரியமாக அவன் விழிகளை எதிர்கொண்டன.

தன் குலதெய்வத்தை வேண்டியபடியே அவள் கழுத்தில் தாலிச் சங்கிலியை அணிவித்தான்.

நெற்றியில் குங்குமம் இட்டவன், தாய் அளித்த மெட்டியை அவள் பாதம் தொட்டுப் போட்டுவிட்டான். நிறைவாகத் திருமணம் முடிந்தது.

கோயிலுக்குச் சொந்தமான மண்டபத்தில் அனைவரும் அமர, மணமகள் பொங்கல் வைக்கத் தேவையான பொருட்களைக் கனகுவும் வாணியும் எடுத்துக் கொடுக்க, மீனாட்சி புடவையை இடுப்பில் சொருகிக்கொண்டு பொங்கல் வைத்தாள்.

அருகிலே ஆறு ஓட, தேனரசன் கரையில் அமர்ந்து சலசலத்தோடும் நீரையே வெறித்துக் கொண்டிருந்தான்.

"அண்ணா..." என்ற தமிழின் அழைப்பில், அவன் முகம் இறுக்கம் பெற்றது.

"எல்லாம் என்னால்தான்... தப்பு நடந்துருச்சு. என்னை மன்னிச்சிடுங்கண்ணா," என்றவனின் குரல் கரகரத்தது.

"உன்கிட்ட பேசுற மனநிலைமையில நான் இல்லை... போ தமிழ்," என்றவனின் அழுத்தமான கட்டளையில், மறுபேச்சு பேசாமல் அங்கிருந்து நகர்ந்தான் தமிழ்.

"பொங்கல் ரெடியாயிடுச்சு, வாங்க அத்தான்," என்ற அழைப்பில் மற்றவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு அவளிடம் சென்றான்.

சொந்த பந்தங்களின் மொத்தக் கண்ணும் இருவரின் ஜோடிப் பொருத்தத்தில்தான் நிறைந்து இருந்தது.

அதே மண்டபத்தில் விருந்தும் தயார் செய்யப்பட, ஊர்க்காரர்களும் வந்து மணமக்களை வாழ்த்திவிட்டு விருந்து உண்டு சென்றனர்.

அனைத்தும் முடிந்து வீடு வர மாலையாகிவிட்டது.

வெளியூர்ச் சொந்தங்கள் பண்ணை வீட்டில் தங்க, உள்ளூர்ச் சொந்தங்கள் நாளை வருவதாகக் கூறிக் கிளம்பினர்.

இப்போது மிக நெருங்கிய சொந்தங்களும் வீட்டினரும் மட்டுமே இருக்க, மீனாவை ஓய்வெடுக்க அனுப்பினர்.

இரவு உணவு தயாரானதும், அவளை எழுப்பி விளக்கேற்றப் பணித்தனர், மீனாட்சியும் செய்தாள்.

உறவினர்களிடம் பேசப் போனவளைத் தடுத்து, "நீ போய்க் குளிச்சுத் தயாராகி வாம்மா," என்றார் கனகு.

தன் அண்ணன் மகளை உடன் அனுப்ப, மீனாட்சிக்கு விஷயம் புரிந்துபோனது.

அதில் உள்ளே ஒருவிதத் தடுமாற்றம் உண்டானாலும், வெளியில் சாதாரணமாகக் காட்டிக்கொண்டாள்.

தயாராகி வந்தவளுக்கு உணவையும் அளிக்க, அவளின் பார்வை மாடி அறையை வெறித்தது.

அதே நேரத்தில் கதவைத் திறந்து வந்தவனின் பார்வையும், அவள் விழிகளில் நிலைபெற்றது.

அதில் மெல்லிய பதற்றம் உருவாக, உடனே பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.

அவள் உணவை முடித்து நிமிரும்போதும் கூடமே வெறிச்சோடியிருக்க, வாணியும் கனகுவும் புன்னகையுடன் அவளைப் பார்த்தபடி நின்றனர்.

அவளைத் தயார் செய்த பெண் கையில் சொம்புடன் அருகே வந்தாள்.

அவள் கையில் அதைத் திணித்துவிட்டு, "வா..." என்று அழைக்க, மீனாவோ கனகுவையும் வாணியையும் பார்க்க, அவர்களோ "போ..." என்று தலையசைத்தனர்.

சொம்பின் வழியே கரங்களில் இதமான சூடு பரவியது.

அறை அருகே வந்ததும் கால்கள் அப்படியே பின்னி நின்றவளைக் கண்டு, "சங்கடப்படாதீங்க... ஆசைப்பட்டவன்தானே, எல்லாம் அரசன் பார்த்துப்பான்," என்றவள்.

"வாங்க..." என்று இழுத்துச் சென்றாள்.

அறை வாயிலில் அவளை நிறுத்தியவள், "உங்களுக்குத் தெரியாததா... இருந்தாலும் சொல்றேன்," என்று அவள் காதில் கிசுகிசுக்க, மீனாட்சியின் கருவிழிகள் அதிர்வில் விரிந்தன.

"இனி நீங்க பார்த்துக்கோங்க," என்றவள் கதவை மெலிதாகத் தட்டிவிட்டு அங்கிருந்து செல்ல, 'அடியே!' என்று உள்ளுக்குள் அதிர, கதவு மெலிதாகத் திறக்கப்படவும் யோசனையுடன் நிமிர்ந்தாள் மீனாட்சி.

பிறகு எந்தச் சத்தமும் வராமல் போக, கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்ல, தேனரசன் மெத்தையில் அமர்ந்திருந்தான்.

கட்டில் மல்லிகை மற்றும் பன்னீர் ரோஜா இதழ்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அவனோ அசராமல் ஜன்னல் வழியே தெரிந்த நிலவை வெறித்துக் கொண்டிருக்க, 'எத்தனை நேரம் இப்படியே நிற்பது?' என்று பெருமூச்சு விட்டுக்கொண்டு அவன் அருகே வந்தவள்,

"அத்தான், பால்." என்று அவன் முன் சொம்பை நீட்டினாள்.

அதற்கு அவன் பார்த்த பார்வையை அவள் சளைக்காமல் எதிர்கொண்டாள்.

'இப்பொழுதாவது உண்மையைச் கூறுகிறாயா?' என்ற கேள்வி அவன் பார்வையில் இருக்க, அதை உணராதது போல், "அட, வாங்கினாத்தானே உங்க காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க முடியும் அத்தான்," என்றவளின் கூற்றில், பால் சொம்பை வாங்கி மேஜையில் வைத்தான் தேனரசன்.

மீனாட்சி நெருங்க, தேனரசன் அங்கிருந்து அகன்று பால்கனிக்குச் சென்றுவிட்டான்.

"அத்தான், காத்து வாங்கணுமா நீங்க? பொறுமையா வாங்கிட்டு வாங்க," என்றவளின் குரலில் நக்கல் இழையோடுகிறதோ என்று தோன்றினாலும், ஏனோ அவன் அவள் பக்கம் திரும்பவே இல்லை.

மீனாட்சியோ வசதியாக மெத்தையில் படுத்துக் கண்ணயர்ந்தாள்.
 
Top Bottom