• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஆழியே மெளனம் ஏனோ - 11

Vishakini

Moderator
Staff member

மௌனம் -11

பழைய நினைவுகளிலிருந்து மீண்டு வந்த நித்யமயூரியின் கண்கள் கலங்கியிருந்தன.

அவளது முகத்தைப் பார்த்த நவீன், அவளது மனநிலையை மாற்ற நினைத்து,
“என்ன, காலையிலேயே ட்ரீம்ஸா?” உன் லவ்வரோட சேர்ந்ததுல இருந்து என்னை டீல்ல விட்டுட்ட இல்லையா?” என்று நவீன் கிண்டலாகக் கேட்டான்.

நித்யமயூரி அவனை முறைத்தவாறே, “எதுக்கு நவீன் இப்போ சம்பந்தமே இல்லாமல் உளறுற?”என்று வினவினாள்‌.

“அதான்... நீ ஆசைப்பட்ட வேலை‌ கிடைச்சிருச்சே. அதைத்தானே லவ் பண்றேனு ஃப்ர்ஸ்ட் நைட்லேயே சொன்ன. அதைக் கேட்டதும் என் பிஞ்சு நெஞ்சு எப்படி வலிச்சது தெரியுமா.” என்று சிரிப்பை அடக்கிக் கொண்டே வம்பிழுத்தான்.

“ஐயோ! நவீன் தெரியாமல் சொல்லிட்டேன். ஆளை விடு. இதையே சொல்லிச் சொல்லி என்னை வம்பிழுக்கிறது‌ உனக்கு வேலையாப் போச்சு. எனக்கு ஆபிஸுக்கு டைமாகிடுச்சு‌‌, நான் கிளம்பணும்.” என்றவாறே பரபரக்க.

இப்பொழுது அவளை முறைத்தான் நவீன்.

“என்ன நவீன்?” என்று நித்யமயூரி வினவ.

“இவ்வளவு நேரம் கனவுலயே சுத்திட்டு, இப்போ எதுக்கு அவசர அவசரமா கிளம்புற? பர்மிஷன் கேளு. பொறுமையா கிளம்பு. நான் வேணும்னா ட்ராப் பண்ணிட்டு போறேன்.” என்ற நவினை, இறுக அணைத்தவளோ,

“லவ் யூடா. உன்னை எனக்கு கட்டி வச்ச ஒரே காரணத்தால தான் எங்க குடும்பத்தை மன்னிக்கிறேன்.” என்றாள்.

“ஏன் நித்தி? கல்யாணம் பண்ணி வைக்கிறது அவ்வளவு பெரிய குத்தமா? எதுக்கு இவ்வளவு கோபப்படுற?”

“ப்ச்! உனக்குப் புரியாது நவீன். எங்க தனு செஞ்ச தப்புக்கு எனக்கு தண்டனை கொடுத்தாங்க. நீயும், அத்தையும் நல்லவங்களா இருந்ததால நான் தப்பிச்சேன். என் ஆசைக்காக, நா பாரீன்ல படிக்கணுங்கறதுக்காக உன் வேலையை அங்க மாத்திக்கிட்டு, என் கனவுக்கு கை கொடுத்தீங்க. இதை வேற யாராவது இருந்திருந்தா, கல்யாணத்துக்குப் பிறகு படிக்கக் கூடாது... வெளிநாட்டுல என்ன படிப்பு வேண்டிருக்கு? இங்கேயே படின்னு ஏதாவது சொல்லி இருப்பாங்க. அப்போ என்னோட நிலைமை என்ன ஆகியிருக்கும்னு கொஞ்சம் யோசிச்சுப் பாரு.”

“சரி விடு நித்தி. அவங்களும் வேணும்னு செஞ்சிருக்க மாட்டாங்க.”

“உனக்காகத்தான் அந்த கிழவியை சும்மா விடுறேன்.”என்று கூறியவள், தன்னுடைய பாஸிடம் பர்மிஷன் கேட்டு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பினாள்.

நித்யமயூரி லண்டனில் உள்ள பிரபல ஃபேஷன் ஸ்டூடியோவில் அசிஸ்டன்ட் ஃபேஷன் டிசைனராக வேலை செய்து கொண்டிருக்கிறாள்.

இந்த இடத்திற்கு வருவது தான் அவளது பல வருடக் கனவு. அந்தக் கனவு நனவான மகிழ்ச்சியில் இருக்க வேண்டியவளோ தோழியின் பிரச்சனையால் மனம் உடைந்துப் போனாள்.

தான் அறியாமல் முட்டாள்தனமாக நடந்துகொண்டு, தோழியை இவ்வளவு வேதனைப்பட வைத்துவிட்டோமே என்ற குற்றவுணர்வும் அவளை வாட்டியது. அன்று கோபத்தில் ஒரு சில வார்த்தைகளை மட்டும் பேசாமல் இருந்திருந்தால், இவ்வளவு பெரிய பிரச்சனை வந்திருக்காது என்று எண்ணி வருந்தியவளோ,

இந்தியாவிற்கு சென்று ஆழினியை எப்படியாவது சமாதானப்படுத்த வேண்டும் என்று யோசித்தவள், அவளது வேலையை கவனிக்கச் சென்றாள்.

ஆனால் அது அவ்வளவு எளிதல்ல என்று தெரியவில்லை.

நித்யமயூரியின் வார்த்தையை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு, தனது கனவுகளையெல்லாம் துறந்து, வீட்டில் கூண்டுக்கிளி போல வாழ்ந்து கொண்டிருக்கிறாள் ஆழினி.



தங்களுடைய டெக்ஸ்டைல் ஸ்டோருக்கு வந்திருந்த செழியனுக்கு ஆழினியின் மனக்குமுறல்கள் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

அவள் பேசியதை முழுவதும் கேட்டிருந்தால் அவன் கோபப்பட்டிருப்பான். ஆனால் அவன் கேட்டது அவளது புலம்பலின் பிற்பகுதியை மட்டுமே. அதனால், ஆழினி விவாகரத்து செய்ய நினைப்பதை அவன் அறியவில்லை.

தன்னுடன் நேரம் செலவிட வேண்டும் என்ற அவளது ஏக்கம் தான் அவனுக்குப் புரிந்தது.

‘ஒரு வேளை ஆழினிக்கு என்னைப் பிடிக்குமோ. என்னோட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு நினைக்கிறாளோ. ஆனா அவளுக்கு இன்னும் என் மேல நம்பிக்கை இல்ல. வீட்டில இருக்கிறவங்க பேசுறதைக் கேட்டு, நான் அவளை விட்டுடுவேன்னு நம்பிட்டு இருக்கா.

என் அத்தைக்கு உதவிப் பண்றது அவளுக்குப் பிடிக்கல.

விகாஸ் முக்கியமான ஏற்றுமதி சம்பந்தமான வேலையா வெளிநாட்டுக்குப் போயிருக்கான். அப்போ நான் தானே உதவணும்? அதைப் புரிஞ்சுக்காம என் மேல கோபப்படுறா.

என் குழந்தை இல்லாமல் போனது அவளுக்கு மட்டுமா வருத்தம். எனக்கு இல்லையா? முதல்ல அவ கன்சீவ்வா இருந்த விஷயத்தையே என்கிட்ட சொல்லல. அலட்சியமா நடந்துக்கிட்டு, குழந்தையை இழக்க காரணமாயிட்டா. ஆனா இன்னைக்கு அந்தக் குழந்தையை நினைச்சு அழறா. அவளை என்னால புரிஞ்சுக்கவே முடியல.

முதல்ல அவளைப் பற்றி நான் முழுசா தெரிஞ்சுக்கணும். அதே மாதிரி என்னைப் பத்தியும் அவளுக்குப் புரிய வைக்கணும். அதுக்கு அவளோட நான் தனியா டைம் ஸ்பென்ட் பண்ண வேண்டும்.” எண்ணியவன், அவளுடன் வெளியூர் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தான்.


ஐந்தாவது வருடத் திருமணப் பரிசாக, ஆழினியுடன் எங்கேயாவது டூர் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தான்.

இது கிட்டத்தட்ட அவர்களுடைய ஹனிமூன் போலத் தான். ஏனெனில் திருமணமான பிறகு
இரண்டு, மூன்று முறை கவிதா இந்த விஷயத்தைப் பற்றி பேசியிருந்தார்.

ஆனால் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு சூழ்நிலை குறுக்கிட்டதால், அந்தப் பயணம் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.

ஒவ்வொரு முறையும் திட்டம் மட்டுமே போட்டிருந்தான்; ஆனால் அது செயலாக மாறியதில்லை. இந்த முறை அந்தத் திட்டத்தை எப்படியும் நிறைவேற்ற வேண்டும் என்று உறுதியாக எண்ணினான்.

‘அஞ்சு வருஷத்துக்கு பிறகு ஹனிமூன் போற ஒரே ஜோடி நாங்களா தான் இருப்போம்.’ என்று எண்ணியவனுக்கு சிரிப்பு வந்தது.

‘ஹனிமூனுக்கு போறதை அப்புறம் பார்ப்போம். முதல்ல அவளை நம்ம கடைக்கு கூட்டிட்டு வரணும்.’என்று மனதில் நினைத்தவன், தனது வேலைகளைக் கவனித்தான்.

மாலையில் அத்தையுடன் சென்று குழந்தைக்குத் தடுப்பூசி போட்டுவிட்டு வந்தவன், இரவில் தனது மனைவியை அழைத்துக்கொண்டு அவர்களது மெயின் பிராஞ்சிற்கு வந்தான்.

இரவு நேரத்தில் இவர்களின் கார் வெளியே செல்வதைப் பார்த்த சிந்துஜா பதறி, தம்பிக்கு அழைத்தாள்.

அந்த அழைப்பைப் பார்த்த வியன்செழியனோ எடுக்காமல் யோசனையுடன் இருந்தான்.

‘எதுக்கு இப்போ அக்கா கூப்பிடுறா? ஃபோனை எடுத்து பேசி பிளானை மாற்றினால், நிச்சயம் ஆழினி உடைந்து போவாள்.’ என்று எண்ணியே அந்த ஃபோன் காலை தவிர்த்தான்.


அருகில் இருந்த ஆழினியும்,
‘ஏன் போன் எடுக்காம இருக்காங்க? டிரைவிங் பண்ணிட்டு இருக்கிறதுனால எடுக்கலையோ...” என்று எண்ணிக்கொண்டிருந்தாள்.

காருக்குள் மௌனம் மட்டுமே ஆட்சி செய்தது.

அடுத்ததாக சிந்துஜா அவளுக்கு அழைத்தாள். ஆழினி ஃபோனை அட்டென்ட் செய்ய முயல,

“வேண்டாம்... காலையில பேசிக்கலாம்,” என்று ஒரு வார்த்தையில் நிறுத்திவிட்டான் வியன் செழியன்.

அவளும் “சரி...” என்று தலையசைத்தாள்.

‘தன்னைவிட அவனுக்கு அவங்க குடும்பம்தான் முக்கியம்? இன்னைக்கு அதிசயமா போன் எடுக்க வேண்டாம்னு சொல்றாரே. ஆச்சரியமா இருக்கு.’என்று மனதிற்குள் யோசித்தவளுக்குத் தெரியவில்லை, அவளுக்காக இன்னும் நிறைய அதிர்ச்சிகள் காத்திருந்தன.

கார் நேராக அவர்களது துணிக்கடையின் முன் நின்றது.

“என்ன வேணும்? சாரி கட்டுறியா... இல்ல லெஹங்கா மாதிரி ட்ரை பண்றியா?” என்று முதல் முறையாக அவளுடைய விருப்பத்தைக் கேட்டான்.

அந்த ஒரு கேள்வியே அவளது கண்களைக் கலங்க வைத்தது.

சிறுவயதிலிருந்து அவளுக்குக் கிடைக்காத ஒன்று என்றால் அது சாய்ஸ் தான்.

‘இது வேணுமா? அது வேணுமா?’ என்று யாரும் அவளிடம் கேட்டதே இல்லை.

ஆசிரமத்தில் இருந்த போது, எந்த ஆடை யாருக்குப் பொருத்தமாக இருக்குமோ அதைத் தான் மதர் கொடுப்பார். புதிதாக ஆடைகள் கிடைப்பது அரிதிலும் அரிது. யாராவது பெரிய பணக்காரர்கள் பிறந்தநாள் அல்லது திருமண நாள் கொண்டாட்டத்திற்காக புதிய துணிக் கொடுத்தால் தான் கிடைக்கும். அதுவும் பெரும்பாலும் எல்லோருக்கும் பெரிய சைஸ் ஆடைகளையே கொடுப்பார்கள்.

அதனால் ஆழினி எதிலும் பெரிய எதிர்பார்ப்பு வைத்துக் கொள்ள மாட்டாள்.

திருமணமாகி இந்த வீட்டிற்கு வந்த பிறகும் அதே நிலைதான். எந்த விசேஷம் வந்தாலும் வீட்டிலுள்ளவர்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரி என்று அவர்களே உடையைத் தேர்ந்தெடுத்து விடுவார்கள்.

கலர் செலக்ட் பண்ணுவது மட்டும் தான் இவளது வேலை.

கவிதாவோ,
“உனக்கு பிடிச்சது எதுன்னு சொல்லும்மா...” என்று கேட்பார்.

ஆனால், அவள் யோசிப்பதற்குள் மற்றவர்கள் “எனக்கு இது வேணும்... அது வேணும்...” என்று எடுத்துக் கொள்வார்கள். சில நாட்கள் போராடிப் பார்த்தவள், பிறகு அதையும் விட்டுவிட்டாள்.

ஆனால் இன்று...

முதல் முறையாக அவளை கடைக்கு அழைத்து வந்து, “உனக்கு என்ன பிடிக்கும்?” என்று அவளது கணவன் விருப்பத்தைக் கேட்க.

அந்த நொடி, சொல்ல முடியாத உணர்வு அவளை ஆட்கொண்டது.

அவளை ஒரு கணம் அமைதியாகப் பார்த்த வியன் செழியனோ, அடுத்த நிமிடமே லெஹங்கா மெட்டீரியல்கள், டிசைனர் சேரி என அனைத்தையும் எடுத்துவரச் சொன்னான்

ஒவ்வொன்றையும் அவள் மீது வைத்து பார்த்து,

“இது அழகா இருக்கும்... இல்லை இது இன்னும் நல்லா இருக்கும்...” என்று ஒவ்வொன்றாகத் தேர்ந்தெடுக்க ஆரம்பித்தான்.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த கடை ஊழியர்களுக்கே ஆச்சரியம்.

“முதலாளியை இப்படி இதுவரைக்கும் பார்த்ததே இல்ல...” என்று தங்களுக்குள் பார்த்துக்கொண்டனர்.

ஆழினியோ அதிர்ச்சியிலேயே உறைந்து நின்றாள்.

இறுதியாக இரண்டு லெஹங்கா மெட்டிரியலைத் தேர்வு செய்தவன்,
அவள் மேல் மீண்டும் வைத்து,”பிடித்திருக்கிறதா?” என்று வினவ.

அவள் மேல் இருந்த லெஹங்காவை மெதுவாக வருடிப் பார்த்தாள்.

பிடித்ததைத் தேர்ந்தெடுக்கும் உரிமை கூட கிடைக்காமல் வளர்ந்தவள், இன்று தனக்காக ஒருவர் ஒவ்வொரு ஆடையையும் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுப்பதை நம்பவே முடியவில்லை.

கண்களில் வழியத் துடித்த கண்ணீரை உள் இழுத்தவாறே, தலையசைத்தாள்.

அவளை ஒரு பார்வை பார்த்தவன், கடை சிப்பந்தியிடம் அதை எடுத்து வைக்கச் சொல்லி விட்டு,

டூருக்குத் தேவைப்படும் என்று
ஜீன்ஸ், டி-ஷர்ட், சுடிதாரை எடுத்துப் போடுமாறு கூறினான்.

அதற்குள் தன்னை சமாளித்த ஆழினியோ, “ ஜீன்ஸ்லாம் பாட்டிக்கு பிடிக்காது.” என்று முணுமுணுத்தாள்.

“நான் பாட்டிக்கு வாங்கல. உனக்குத் தான் வாங்குறேன்.” என்றதும் வாயை மூடிக் கொண்டாள் ஆழினி.


வீட்டிற்கு திரும்பும் வழியில்,
“லெஹங்கா ஸ்டிட்ச் பண்ண எத்தனை நாளாகும்?” என்று வினவினான்.

“ இரண்டு நாள்ல முடிஞ்சிடுவேன்.” என்றாள்.

“அப்போ அந்த பிங் லெஹாங்காவை முதல்ல ஸ்டிச் பண்ணி போட்டுக் காட்டு. ஃபிட்டிங்கா இருந்தா பங்ஷனுக்காக எடுத்த ஸ்கைப்ளூவையும் ஸ்டிச் பண்ணு. இல்லைனா வெளியே குடுத்திடலாம்.”என்று இயல்பாகச் சொன்னான் வியன் செழியன்.

அவளோ அதிர்ச்சியில் அவனைப் பார்த்தாள்.

“எதுக்கு இவ்வளவு ஷாக்?” என்று வினவியவாறே அவளைப் பார்த்தான்.

“அது… டிரஸை போட்டு காட்டச் சொன்னீங்க?” என்று தடுமாறிக் கூற.

அவளை ஒரு பார்வை பார்த்தவனோ, “ட்ரெஸ்ஸை போட்டுத் தானே காட்ட சொன்னேன். ரீமூவ் ‌…” என்று ஆரம்பிக்க.

அவன் வாயை வேகமாக பொத்தினாள்.

அவளது செயலில் காரை ப்ரேக்கிட்டு நிறுத்தினான்.

இருவரும் ஷாக் அடித்தாற் போல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
 

ஷமீம்

Well-known member
ஏன்பா அஞ்சு வருஷமா அம்னீஷியால இருந்தியா? இப்ப தான் மனைவி மேல் பாசம் வருது..
 
Top Bottom