இது காதல் காவியம் - 12

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,210
16,607
113
Germany
மீராவுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.கிட்டத்தட்ட இருபது நாளுக்குப் பிறகு ஊருக்குப் போகிறாளே.

“அப்பா,பாட்டி நாளைக்கி நான் உங்க கூட இருப்பேன்.எவ்வளவோ பேசணும்.நீங்கல்லாம் டி.விலயும் பேப்பர்லயும் மட்டும் தான் போர் யுத்தம்னு பார்த்திருப்பீங்க.நான் நேர்ல நிறைய பார்த்துட்டன்.
நினைக்கும் போதே அவளது உடம்பு சிலிர்த்தது.கடவுளே...இதெல்லாம் பார்க்குற கடைசி தலைமுறை இதுவாகவே இருக்கட்டும்.இனிப் பிறக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் நிம்மதியையும்,உரிமையினையும் நீதான் கொடுக்கனும்” என வேண்டிக் கொண்டாள்.

ராணுவம் பற்றி எத்தனையோ எதிர்மாறான கருத்துக்களை கேட்டிருக்கிறாள்.ஆனால் ரொஷான் அதிலிருந்து நிச்சயம் மாறுபட்டவன் தான்.

திடீரென்று,நேற்றய சம்பவங்கள் நினைவுக்கு வர உடனே முகம் மாறிப்போனாள்.இதயம் அவளைக் கேட்காமல் தாளம்தப்பித் துடித்தது.தொண்டைக்குள் ஏதோ ஒன்று அடைத்துக் கொள்ள கதவின் லாக்கை ஒரு தடவை சரிபார்த்தபடி நிலத்தில் மீண்டும் அமர்ந்தாள் மீரா.

அவள் நேற்றுக் கழற்றி எறிந்த அந்த வெள்ளை நிற கவுன் அறையின் மூலையில் கிடந்தது.ஏன் அப்படி நடந்துகிட்டானோ? அதை நினைக்காதே என்று சொன்னாலும் மனது அலைபாய்ந்தது.
எல்லாவற்றிலும் “முதல் நினைவுகள்” என்ற ஒன்று தவிர்க்க முடியாத நினைவுகள் தானே.

அவளது இடையை அவனது வலிமையான கரங்கள் சுற்றி வளைத்த போது தான் தன்னிலையும்,அவன் நிலையும் உணர்ந்தாள்.சுத்தமாக சிரிப்பு மறைய கண்கள் முழுக்க பயத்தோடு அவனது கையை விலக்க போராடினாள் என்றே கூற வேண்டும்.

கையருகில் இளம் பெண்,விடிந்தும் விடியாத அதிகாலையின் ஈரக்காற்று,அவிழ்ந்தும் அவிழாத அவள் கூந்தல்,அதிலிருந்து வந்த ஷேம்புவின் வாசனை என எல்லாம் சேர்ந்து அவனை சலனப்படுத்தியிருக்காவிட்டால் அவன் ஆண் மகன் என்று சொல்வதே தவறல்லவா..?

அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளினாள்.அப்போதும் அவன் அசைந்தபாடில்லை.கதைப்புத்தகத்தில் படித்த தேக்குமர உடம்பு சம்பந்தமே இல்லாமல் நினைவுக்கு வர கோப மிகுதியில் அவனது காயத்தை அழுத்தினாள்.

“ஷ்ஷ்ஷ்”... என்றான்.

”அப்போ...ப்ளீஸ் விடுங்க.ம்ம்ம்…. விடுங்க..விடு…என இன்னும் அழுத்தினாள்.வலியினால் அவன் கொஞ்சம் பிடியைத் தளர்த்தினான்.அவனைத் தள்ளிவிட்டு மானாய் ஓடி வந்து கதவை சாற்றியவள் தான்.
மாலாம்மா வந்த பிறகே திறந்தாள். “பாவம்னு மருந்து கட்டினதுக்கு நல்லா வேணும் எனக்கு”

அப்போது அவன் கண்களில் கெஞ்சல் இருந்தது.ஏதோ ஒரு தேடலும்,வேண்டுதலும் இருந்தது.ஒரு கணம் மீராவை சிந்திக்க வைத்த பார்வையது.நிச்சயமாக அந்தப் பார்வையில் விரசமேயில்லை.

ரொஷான்…..கொஹெத? ரொஷான்…என்ற பெண் குரல் மீராவை அந்த நினைவிலிருந்து மீட்டக, யாரது என்ற ஆர்வத்தில் கதவைத் திறந்தாள்.மாலா கடைக்குச் செல்வதாகப் போனதால் தான் இவள் உள்ளே வந்து பூட்டிக்கொண்டாள்.

சே...என்ன உடுப்பு இது.இஷ்டத்திற்கு இறக்கித் தைக்கப்பட்ட ஒடுக்கமான டீசர்ட்டும்,மினி ஸ்கர்ட்டுமாக இருந்தாள்.அவளைப் பார்க்க மீராவுக்கே ஒரு மாதிரியாக இருந்தது.

யாரு நீ?? ரொஷான் எங்க? நயோமி அக்கா சொன்னா.அப்போ நான் நம்பல்ல.அவரு கூட தனியா என்ன பண்ணுற? என்றபடி மீராவை நெருங்கிவந்தவள் “வெளிய போடி” என மீராவைப் பிடித்துத் தள்ளினாள்.அதை எதிர்பார்க்காத. மீரா கதவில் போய் மோதி நின்றாள்.அவள் பேச்சு முழுதாய் புரியவில்லை என்றாலும், நயோமி என்ற பெயர் கேட்ட பொழுது ஓரளவு யூகிக்க முடிந்தது.

மரக்கறிக் கூடையுடன் உள்ளே வந்த மாலாவின் பக்கம் ஓடிச்சென்ற மீரா,.”இவங்க யாரு மாலாம்மா? கோபமா இருக்காங்க.” எனக் கேட்டாள்.

அவரோ பதட்டமாய்… “வாங்க விதுர்ஷி. எப்படி இருக்கம்மா? எப்போ வந்தீங்க.?சார். வெளிய போயிட்டாங்க.உக்காருங்கம்மா.”

“வாய மூடு.இவள் யாரு? எப்ப இருந்து இருக்கா? காசுக்கு படுக்குறவளா? ரொஷானையே மடக்கிட்டாளா? நயோமி அக்கா சொன்னப்பவே வந்து கேட்டிருக்கனும்.நீயும் இதுக்கு உடந்தையா? இவள் தமிழா? அப்போ கட்டாயம் கேவலமானவளாத் தான் இருப்பா.” அவள் பேச்சின் பிரதிபலிப்பாய் மாலாவின் முகத்தில் அருவெறுப்பு,கோபம் என மாறி மாறி வந்து போனது.

ஆங்காரமாய் அங்கிருந்த கதிரையில் இருந்தாள்.ஃபோனை எடுத்து பட்டனைத் தட்டியவள், “ஹலோ….நயோமிக்கா நான் ரொஷான் வீட்டுல இருக்கன்.நீங்க வாங்க.இப்பவே வாங்க..”என வைத்தாள்.அவள் கண்களில் பாம்பின் சீற்றம் தெரிந்தது.

“விதுர்ஷி….சார் வந்த பிறகு எல்லாம் பேசலாம்.அவருக்கு கோல் பண்ணுங்கம்மா.”

“உன்னோட வேலையப் பாரு” என்றாள்.

“இது நல்ல பெண்.நாளைக்கி ஊருக்குப் போயிடும்.ஊரடங்கால சார் இங்க கூட்டிவந்திச்சி.மற்றபடி ஒன்னுமில்லம்மா.தம்பியப் பத்தி உங்களுக்குத் தெரியாதா.நீங்க கோல் பண்ணித் தாங்க நான் பேசுறன்.”

முறைத்தவள். “உன்ன அடிச்சித் துரத்த எனக்கு அவ்வளவு டைம் எடுக்காது.ரொஷானுக்கு சமைத்துப் போடுற.அதுக்காக விடுறன் தள்ளிப் போ” என்றாள்.

அதன் பிறகு மாலா எவ்வளவோ கெஞ்சினார்.கடைசியாக ஏதோ ஒன்றை அவர் சொன்னபிறகு தான் அந்த விது அடங்கினாள்.
முறைப்புடன் மீராவைப் பார்த்தவள் கொஞ்சமும் மாலாவை பொருட்படுத்தாமல் யாருடனோ தீவிரமாக ஃபோன் பேசியபடி காரில் ஏறிச்சென்றாள்.ஏமாற்றமாக வந்த மாலா,மீராவின் தலையைத் தடவி பாவமாகப் பார்த்தார்.

மீராவுக்கு நிறுத்தி மெதுவாகப் பேசினாலே விளங்குவது கடினம்.இவர்களதோ வேகமான சிங்கள உரையாடல்கள் வேறு.இதிலிருந்து என்னதான் விளங்கமுடியும்? மாலா அவளிடம் தனக்காக மிகவும் கெஞ்சுகிறார் என்பது மட்டும் புரிந்தது.என்ன மாலாம்மா??. எனக் கேட்டுப் பார்த்தாள்.அவர் என்ன தான் சொல்வது.

அவசரமாக ரொஷானை அழைத்தார்.பத்து முறைக்குப் பின்னர் தான் ரொஷான் அழைப்பை எடுத்தான்.அவன் ஏதோ சொல்லியிருக்க வேண்டும் போல.மாலா மீராவைக் கைப்பிடித்து வெளியே கூட்டிப்போனார்.அவர் முகத்தைப் பார்த்தவாறே ஒன்றும் புரியாதவளாய் அவளும் கூடவே சென்றாள்.

********
சார்...என விறைப்பாய் சல்யூட் போட்டபடி ஒருவன் வந்தான்.அதற்கு பதில் சொன்ன ரொஷான் ம்ம்...என புன்னகையோடு உத்தரவு சொன்னான்.

ஒரு லெட்டரை அவனிடம் கொடுத்துவிட்டு அதே போல் நகர்ந்து சென்றான்.இது ஒரு சடங்கு.அரச மட்டத்திலிருந்து ஏதும் முக்கியமான தகவல் வந்தால் இப்படித் தான் தரவேண்டும் என்று. ஏகப்பட்ட விசாரிப்புகளுடன் ரொஷான் என விழிக்கப்பட்ட அந்தக்கடிதத்தை படித்தவன் மடித்து பக்கெற்றில் சொருகிக் கொண்டான்.கணத்த அந்தக் காக்கி உடையின் முன்பட்டனைத் திறந்தவன் ஒரு நாற்காலியில் உட்கார்ந்தான்.அவன் முகத்தில் உடல் களைப்பைத் தாண்டி அலைக்கழிப்புத் தெரிந்தது. சார்….என ஒருவன் வைத்துவிட்டுப்போன குளிர்பானத்தை ஒரு மிடரில் குடித்து வைத்தான்.தனக்காக செய்யும் எதிலும் நிதானம் இருக்காது.
இயந்திர கதியில் தான் நடத்துவான்.காரணம் அவன் வாழ்வில் கொண்ட விரக்தி.

தன் வாழ்க்கையில் எதற்குமே ஆசைப்பட்டதே இல்லை.பணத்துக்கு பஞ்சமில்லை.அதைத் தான் நீ செய்ய வேண்டுமென்று கட்டளை போடவும் யாருமில்லாத சுதந்திரமான சிறைச்சாலை தான் அவன் வாழ்க்கை.அவன்தான் நல்லது கெட்டதென்ற கடிவாளம் போட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறான்.அதெல்லாம் நேற்று காணாமல் போய்விட்டதா?? பெண் வாசனை நுகராதவனல்ல.ஆனால் இவ்வளவு மென்மையாய் குழந்தைத்தனமாய் யாரும் அவனை நெருங்கியதில்லை.எத்தனையோ வலிகளை தனித்தே சமாளித்தவனுக்கு மீராவின் அண்மை இன்னும் வேண்டும் போலிருந்தது.பக்கத்தில் அவள் நின்ற போது நாடி நரம்பெல்லாம் பரவசமாய் புதிதாய் உணர்ந்தான்.இப்போது நினைக்கும் போதே அவள் தனக்கு வேண்டுமென்ற தவிப்பு அவனுக்குள் அடங்கவில்லை.முதன் முதலாய் அவளை பார்த்ததில் இருந்து இன்று வரை அவனை ஆச்சர்யப்படுத்திக் கொண்டிருந்தாள்.

முதல் சந்திப்பிலேயே அவன் தொடுகையினை சகிக்காமல் அவள் காட்டிய விலகல் முற்றிலும் புதிது.பிறகு அவளுடனான அடுத்தடுத்த நிகழ்வுகளில் சுவாரஷ்யம் நிறைய இருந்தாலும் உதவி நேயமே அதிகம்.இன வேறுபாட்டில் அநியாயமாக ஒரு அப்பாவிப் பெண் தண்டிக்கப்படுவதிலிருந்து அவளைக் காத்தான் என்றே கூறவேண்டும்.ஆனால் அதையும் தாண்டி ஏதோ ஒன்று அவனை ஈர்த்தது.

“சார்…..ஜெனரல் சார்கிட்டருந்து அழைப்பு வந்தது.அவசரமா உங்ககிட்ட பேசனுமாம்.”

ஓகே.நான் பார்க்குறன் என்றபடி எழுந்து கடமைக்குள் தன்னை புகுத்திக்கொண்டான் ரொஷான்.

இருமருங்கிலும் பூந்தோட்டமாய் செறிந்த அப்பாதை கட்டிட வாசல்வரை நீண்டு சென்றது. ஆர்மியில் இருப்பவர்களின் தனித்துவமது.அவர்கள் இருக்கும் இடமாக இருக்கட்டும் சுற்றுச் சூழலாக இருக்கட்டும் மிக நேர்த்தியாகவும் அழகாகவும் இருக்கும்.

ஜீப்பிலிருந்து இறங்கியவனை சல்யூட் அடித்து வரவேற்றான் ஒருவன்.சின்ன தலையசைப்புடன் வேகமாக உள்ளே சென்றான் ரொஷான்.பொதுவாக ஜெனரல் இங்கெல்லாம் வர மாட்டார்.அவரை சந்திக்கத் தான் அனைவரும் தலைமைக் காரியாலயத்திற்குச் செல்ல வேண்டும்.அப்படியிருக்க அவரே தன்னைச் சந்திக்க நேரில் வந்திருக்கிறார்.யோசித்தவாறே வேகநடையுடன் அவரின் அனுமதி பெற்ற பின் உள்ளே சென்றான்.

விறைப்பாய் ஒரு சல்யூட் வைத்தான்.

“வாங்க.வெல்கம் ரொஷான் அபயவர்த்தன.வாழ்த்துக்கள்.
உங்களுக்கு தந்த கடமையை எதிர்பார்த்ததை விட சிறப்பா செய்து முடித்திருக்கீங்க.”என்றபடி அவனை தளுவிக் கொண்டார் ஜெனரல் சில்வா.அவரைத் தவிர்த்து லெப்டினன்,கேர்னல் ஆகியோரும் அங்கிருந்தனர்.

ஆர்ப்பாட்டமில்லாமல் சின்னச் சிரிப்புடன் அவர்களது பாராட்டை வாங்கிக்கொண்டான் ரொஷான்.

குடும்பிமலை என்றழைக்கப்படும் தொப்பிக்கலைப் பகுதியில் தான் கிழக்கிற்கான உச்சகட்ட போர் நடந்துகொண்டிருந்தது.ஒவ்வொரு தலைமைகளுக்கும் அவர்களுக்கென்று பிரித்துக் கொடுக்கப்பட்ட பகுதியில் தங்களுக்கான கடமையை சிவில் ராணுவங்களின் துணை கொண்டு செய்து கொண்டிருந்தனர்.
அதனடிப்படையில் ரொஷான் வாகரைக்குப் பொறுப்பாக்கப்பட்டான்.
நேற்று வாகரை நகர் அவனது தலைமையில் ராணுவமயமாக்கப்பட்டது.
அதுவும் குறுகிய காலப்பகுதியில் குறைந்த உயிர்ச்சேதங்களுடன்.இதனால் போக்குவரத்து சீராக்கப்பட்டதுடன் அப்பகுதிக்கான ஊரடங்கும் தளர்த்தப்ட்டிருந்தது.

பொதுவாக பெரிய பதவியிலிருப்பவர்கள் வரைபடங்கள் மூலமே வியூகங்கள் அமைத்துக் கொடுத்து சிவில் ராணுவங்களை வழிநடத்திக்கொள்வர்.அவர்கள் களத்தில் இறங்குவது அரிது.
ஆனால் ரொஷான் அப்படியல்ல.
சாதாரண சிவில் ராணுவம் போல் தன் கீழே நியமிக்கப்பட்ட அனைவரோடும் களத்தில் இறங்கிவிடுவான்.அதற்கு முக்கிய காரணம் இப்பதவியிலிருக்கும் பெரும்பாண்மையானவர்கள் சிங்களவர்கள் என்றபடியால் மற்றய இன மக்களின் மனதில் பாதுகாப்பு அச்சம் பற்றி இருந்தது.நாட்டை காப்பவர்கள் மீது மக்களுக்கே நம்பிக்கையற்ற தன்மை.அதற்குக் காரணம் இவர்களது ஒரு வகையான அடக்குமுறையும்,இன ரீதியான பாகுபாடும் தான் என்பது அவனுக்குத் தெரியும். அதனாலேயே இயன்றவரை அனைவரையும் தன் கண்காணிப்பில் வைத்துக்கொள்வான்.
யார் தப்பு செய்தாலும் தண்டணை மிகக் கடுமையாக இருக்குமென்பதால் அவனுக்குக் கீழே இருப்பவர்கள் எப்போதும் அலர்ட்டாகவே இருப்பார்கள்.

“ரொஷான், உன்னோட வெற்றியின் பெரிய பலமே இந்த அடக்கம்தான்” என தட்டிக் கொடுத்தார் சில்வா.

“ஆனா சார்,இவன் மேல புகார் இருக்கு” என்றார் லெப்டினன்.

என்ன??

இவன் எந்த மீடியாவையும் அனுமதிக்கல்ல.பேட்டி கூட கொடுக்கல்ல.அதனால வெளிய பார்க்குற மக்கள் என்ன பேசிக்கிறாங்க தெரியுமா? வாகரையில இருக்குற மக்களை ராணுவம் கொன்று குவிக்கிறாங்கன்னும்,இறப்புக்களை மறைக்கத்தான் அந்தப் பகுதி யாருக்கும் அனுமதிக்கப்படாம இருக்கும்னும் பேசிக்கிறாங்க” என்றார்.

“சாரி சார்...எனக்கு மீடியாவுல நம்பிக்கை இல்ல.அவங்க அரசாங்கத்துக்கு சார்பா இருக்காங்க.இல்லன்னா தங்களோட சேனலை பெரிதுபடுத்த ப்ரேக்கிங் நியூஸ் தேடுறாங்க.யாருக்குமே மக்களை பற்றி கவலை இருக்கிறதில்ல.”

“இங்கப் பாரு ரொஷான்.நீ திறமையானவன் தான் ஏத்துக்கிறன்.அதுக்காக உன்னோட தப்பை சரி பண்ண பேசாத.நீ பார்த்த வேலையால ப்ரஷர் எங்களுக்குத் தான்.” என காட்டமாகப் பேசினார் லெப்டினன்.”இதுக்கு நீ பெரிசா ரிபோர்ட் கொடுத்தே ஆகனும்.”

“ரொஷான் நானும் கேள்விப்பட்டன்.
ஏன் அப்படிப் பண்ற?? மீடியா இல்லன்னா மக்களுக்கு எப்படி நம்மளோட மூவ்மென்ட் தெரியும்? அவர் சொல்றது சரிதானே” என்றார் சில்வா.

லெப்டினன் முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடித்தது.
ரொஷானை ஏகத்துக்கும் முறைத்தார்.அப்போது அவரது ஃபோன் அடித்தது.
சார்...எக்ஸ்கியூஸ்மி என வெளியில் நகர்ந்தவர். “சொல்லு நயோமி...என்ன பிரச்சினை??

".........."

“விது எல்லாம் சொன்னா.நான் பார்த்துக்கிறன்.ப்ளடி ராஸ்கல்.அவனை மாட்டாம நான் இன்னிக்கி வீட்டுக்குப் போகமாட்டன்.நீ எங்க?”

"........"

நோ...விதுவ தனியா விடாத.நீயும் போ.முதல்ல அவளக் கைது செய்ய ஏற்பாடு பண்ணு.மற்றத நான் பாக்குறன்.

"........"

காரணமா?? வேறென்ன?.விசாரனைக்கைதி. பிறகு போர்க் குற்றவாளி என கண்கள் பளபளக்கச் சிரித்தார் அந்த லெப்டினன்.
 
Last edited by a moderator:

Author: நிதனிபிரபு
Article Title: இது காதல் காவியம் - 12
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.