இது காதல் காவியம் - 22

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,210
16,607
113
Germany
“ராவு சாப்பாடெல்லாம் இருக்கு.நல்லா போட்டு சாப்பிடுங்க.உடனே போகாம கொஞ்ச நாள் தங்கிட்டுப் போங்க தம்பி.புள்ள பாவம்.தனியா இருக்கா. இவ்வளவு நாளுக்குப் பிறகு வந்திருக்கீங்க.மெலிஞ்ச மாதிரியும் தெரியுது.என்ன செய்ற உங்கட வேலையும் அப்படித்தானே.”என்றார் காமுப்பாட்டி.

வீட்டிற்கு வெளியே கதிரை போட்டு அமர்ந்திருந்த ரொஷான் வழமையான மெளனப் புன்னகையுடன் அவரைப் பார்த்தான்.”அப்பச்சி எப்படி? நல்லமா” எனக்கேட்டான்.

“நல்லம்தான் தம்பி.ஆனா மகன் பார்க்க வரலையென்ற கவலையில தினமும் அழுவாரு” என கண்களைத் துடைத்துக்கொண்டார் காமு.

“ம்ம்ம்..நான் வந்து பார்க்குறன்.
கவலை தேவல்ல.எல்லாரும் இருக்கம் தானே” என்றான்.

“நன்றிப்பா” என உணர்ச்சிவசப்பட்டவர், “உள்ளுக்கு போங்க தம்பி.இங்க சரியான நுளம்பா இருக்கும்” என்றுவிட்டு வீட்டிற்குப் போகத்தயாரானார்.

அப்போது, “பாட்டி..” என உள்ளே இருந்து அழைத்தாள் மீரா.

“என்னம்மா?” என குரல் கொடுத்தவாறே காமு சென்றார்.அவள் குரலில் ஏதோ ஒரு பதட்டம் இருந்ததால், காமுவோடு வெளியே நின்றிருந்த ரொஷானும் யோசனையோடு திரும்பிப்பார்த்தான்.போன,அதே வேகத்தில் திரும்பி வந்த காமு

“தம்பி பாத்ரூம் டெப் உடைஞ்சி போயிட்டு.அதான் கூப்பிட்டிருக்கா.உடனே சரிபண்ணுங்க.இல்லாட்டி தண்ணி வீணாகும்.” என்றவர்,

“நான் வாரன் தம்பி.நேரமில்ல .இருட்டாகிட்டு.பாவம் அவரு வேற தனியா இருப்பாரு.நீங்க இங்க இருக்கிற வரை தூங்குறவ வரமாட்டா.நான் அவாட்ட சொல்லிட்டன்.நீங்கதான் வந்துட்டீங்களே.உங்களுக்கு ஏதும் தேவன்டா எனக்கு கோல் எடுங்க” என்றபடி சென்றுவிட்டார்.

“பாட்டி.. என உள்ளிருந்து அழைத்துக்கொண்டே இருந்தாள் மீரா. “பாட்டி, எங்க இவ்வளவு நேரம்? கொஞ்சம் வந்து இதப் புடிங்க.நான் உடுப்பு மாத்…” பேச வந்ததை பாதியிலேயே நிப்பாட்டினாள் மீரா.

இவன் ஏன் வந்த? என்ற சங்கடப்பார்வையோடு அங்கு வந்த ரொஷானை பார்த்தாள்.காரணம் அவள் இருந்த கோலம் அப்படி.உச்சியில் போடப்பட்ட கொண்டை.முழங்கால் வரை மடித்துவிடப்பட்ட ஜீன்ஸ்.டீசர்ட் ஒரு பக்கம் மொத்தமாக நனைந்து தாறுமாறாக அவளைக் காட்டிக்கொடுத்தது.தூங்குவதற்கு முன் ப்ரஷ் பண்ணும் பழக்கம் உள்ளதால் அதை வேறு வாயில் வைத்திருந்தாள்.

நிலைமறந்து கையை எடுக்க தண்ணி அவள் மீது அடித்தது.அதே வேகத்தில் உள்ளங்கையால் பொத்தினாள்.என்ன இது கடவுளே…. இந்த பாட்டி எங்க போய்த் தொலஞ்சயோ தெரியா? என மனதிற்குள் பொரிந்தவள் அவனைப் பார்த்தவாறே “காமுப்பாட்டி……” என சிணுங்கினாள் மீரா.

அவளை விடாது பார்த்தவாறே பக்கத்தில் வந்தவனோ வாயிலிருந்த அவள் ப்ரஷ்க்ஷை எடுத்தான்.பின்னர், பக்கவாட்டில் சென்ற பெரிய குழாய்களில் ஒரு குழாயில் பொருத்தப்பட்ட டெப்பை இறுக மூட தண்ணியும் சட்டென்று நின்றது.

“இப்போ கைய எடுங்க..” என்றான் ரொஷான்.

“தண்ணி வரல்ல” என்றபடி சந்தோசமாய் கையை எடுத்தவள் நிமிர்ந்து அவனைப் பார்க்க, அவன் பார்வையோ விடாது அவளைத் துளைத்தது.வேகமாக வெளியே செல்லப்போக, அவள் கையைப்பிடித்து நிப்பாட்டினான்.

“வெய்ட்! என்றுவிட்டு டவலுடன் வந்தான்.

“தேங்க்ஸ்” என்று வாங்கியவள் அவனை நிமிர்ந்தே பார்க்கவில்லை.
காரணம் அவனது பார்வை.

காலையில் வழமைபோல சோம்பலாகக் கண்விழித்தாள் மீரா. வெளியே காமு யாருடனோ பேசிக்கொண்டிருப்பது கேட்டது.ரொஷான் வீட்டிலிருப்பது அப்போதுதான் அவளுக்கு நினைவு வந்தது.நேற்றிரவு அவளுக்குள் அப்படியொரு பயம்.காரணம் அவன் எங்கே தூங்கப்போகிறானோ என்று.ஆனால் அவன் வெளியே ஹாலில் உள்ள சாய்வு நாற்காலியில் தூங்குவதாகச் சொன்னதும் அவளுக்கு அப்பாடியென்றிருந்தது.
அவனது உயரத்திற்கு அது சிரமம்தான் என்றாலும் வேறுவழிதான் என்ன?

இப்படியாக,பாதி நினைவும்,பாதி தூக்கமுமாக கட்டிலில் அங்குமிங்கும் உருண்டவளை காமு அழைத்துக் கொண்டிருந்தார்.

“மீராம்மா…. எழும்பல்லியா? நேரமாகிட்டே”

“ம்ம்ம்… வாரன் பாட்டி. என பதிலுரைத்தவள்,நேற்றுவரைக்கும் நேர காலம் இல்லாமல் எழுந்து பழகியவளுக்கு கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது.

“என்ன பாட்டி நேரத்தோட வந்துட்டீங்க?.”என்றபடி கதிரையில் அமர்ந்தாள் மீரா.தூக்கத்திலிருந்து மீளாத அவள் விழிகளை கசக்கியபடி இருந்தவளின் கன்னத்தில் ஒரு கிள்ளு விட்டார் காமு.

என்ன பாட்டி…??என முழித்தபடி அவரைப் பார்த்தாள்.

“ம்ம்ம்…தம்பி மிச்ச நாளுக்குப் பிறகு வந்திருக்கு.இவ்வளவு நேரம் தூங்கலாமா?? வெளியபோகப் போகுது.நேரத்தோட எழும்பியிருக்கலாமே”.

“நான் எழும்பி என்ன செய்யனும்?” என உண்மையிலேயே புரியாமல் கேட்டாள்.எதார்த்தமான கணவன் மனைவியாக வாழ்ந்தால் தானே காமுவின் கேள்விக்கான அர்த்தம் அவளுக்குப் புரியும்.

கறுப்பு பேண்ட்,வெள்ளை டீசர்ட்டில் பாதி கேசுவல், பாதி ஆபீஸியல் லுக்குடன் அங்குமிங்கும் திரிந்த ரொஷானை குழப்பமாகப் பார்த்தாள் மீரா.

இந்த விடிகாலையில எங்க போறார்?? இவரால எப்பவும் எனக்குப் பிரச்சினைதான்.
கோபமாகக் கண்ணை உருட்டியபடி அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மீரா.

அவள் பார்வையை உணர்ந்தானோ?
“என்ன?” என்றபடி பக்கத்தில் நெருங்கியபடி வந்தமர்ந்தான்.
அவனது பர்பியூம் வாசனை அவளோடு ஒட்டிக்கொண்டது.உடனே காமு அங்கிருந்து வெளியேற,
மீராவுக்கு சங்கடமாய்ப் போனது.
விருட்டென்று எழுந்து அவனைவிட்டு விலகிப்போனாள்.

“பேபி….நான் கொஞ்ச நாளைக்கு இங்க தான் இருக்குற.ரெஸ்ட் தேவை.அதுதான்.” என்றவனது முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது.

அவளோ வெறுமனே ம்ம்.. என்று மட்டும் சொல்லிவிட்டு உள்ளே வந்துவிட்டாள் தான்.ஆனால் அவன் சொன்ன செய்தியில் அவள் மனது முழுக்க ஒரே படபடப்பு.அவனது வாசனை முழுக்க நைட்டியில் இருந்ததால் ஒரு மாதிரியான மனநிலையில் இருந்தாள் மீரா.

அதற்குப்பிறகு வந்த நாட்களில் மீராவுக்கு பதட்டத்திலேயே சென்றது.காமுப் பாட்டியை சமாளிப்பது ஒரு பக்கம்,இரவானால் எங்கே தூங்கப்போகிறானோ என்ற யோசனை ஒரு பக்கம் என ஒவ்வொரு நாளையும் கடத்திக் கொண்டிருந்தாள் மீரா.அதிலும் குறிப்பாக ,போகும் போதும், வரும் போதும் ஏதோ ஒரு வகையில் அவளைத் தொட்டோ தடவியோ மிகவும் அரிதாக உச்சி முகர்ந்து விட்டுச் செல்லும் அவனை கொஞ்சமும் அவளால் தவிர்க்க முடியாதிருந்தது.அது பிடித்திருக்கிறதா இல்லையா என்று கேட்டால் அவளுக்குக்கும் பதில் தெரியாது.

அன்று ரொஷான் வீட்டிலேயே இருந்தான்.வழமையாக ஏழு மணி வாக்கில் செல்பவன் இன்று, படுக்கையை விட்டு அசையவில்லை. அறையிலிருந்து வெளியே வந்த மீரா, ரொஷான் இன்னமும் சோபாவில் தூங்கிக் கொண்டிருப்பதை அதிசயமாகப் பார்த்தபடி வந்தாள்.

அவன் வீட்டிலிருந்தால் இவளுக்கு சற்று சங்கடமாகவே இருக்கும்.காலைக் கடன்களை முடித்து விட்டு வெளியே வந்தாள்.அவனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.அப்போது காமுப்பாட்டி வெளியே கதவைத் தட்டிக் கொண்டிருந்தார்.

“ஹய்யோ…இந்த பாட்டி இவர் தரையில படுக்குறத பார்த்தா கேள்வியா கேட்குமே..” கையை பிசைந்தபடி நின்றாள்.அவன் எழுந்தால்தானே ஏதாவது செய்யலாம்.அவனோ கொஞ்சமும் அசையவில்லை.ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.முடிவுக்கு வந்தவளாய்,அவன் தோளைத்தட்டி எழுப்பினாள் மீரா.

கொஞ்சம் சிரமப்பட்டு கண்விழித்தாலும் உடனே நிதானத்திற்கு வந்தான்.ஆனால் மீராவை இவ்வளவு அருகில் எதிர்பார்க்கவில்லை என்பதை அவன் பார்வை உணர்த்தியது.அவள் நீளக்கூந்தலில் இருந்து சொட்டிய ஒன்றிரண்டு துளிகள் அவன் இதழ்களில் விழ,அவன் பார்வையில் இருந்த ஏதோ ஒன்றில் மீரா, கொஞ்சம் திணறித்தான் போனாள்.

“பாட்டி கதவை தட்றாங்க.நீங்க எழும்பி ரூம் போங்க.நான் திறக்கனும்” என்றாள்

அவளது வேகமாகப் பேசும் தமிழ் எப்போதும் அவனுக்குப் புரிபடாது.அவளது பதட்டத்தில் அவனோ முழித்துக் கொண்டிருந்தான்.

பொறுமையிழந்தவளோ,அவசரமாக அவனது தலையணையை வேகமாக இழுத்து அறையில் போட்டாள். “வெளியே காமுப் பாட்டி மிச்ச நேரமா தட்றாங்க.நீங்க வெளிய தூங்குறத பார்த்தா எனக்கிட்ட நிறைய கேள்வி கேட்பாங்க.ப்ளீஸ் உள்ளுக்கு போங்க”என நிறுத்தி நிறுத்திப் பேசினாள்.

அவனுக்கோ சுத்தமாக காரணம் விளங்கவில்லை.ஆனாலும் அவள் சொன்னதைச் செய்தான்.

“நான் குளிச்சிட்டு இருந்தன் பாட்டி.அதுதான் விளங்கல்ல” என்றபடி கதவைத் திறந்தாள் மீரா.

அவள் சொன்னதும் அவர் முகத்தில் பிரகாசம் தெரிந்தது.
“சந்தோஷம் சந்தோஷம்.இப்டியே நீங்க நல்லா இருக்கனும்.இதுதானே வாழ்க்கை” என அவளை திருஷ்டி கழித்துவிட்டு வெட்கமாக உள்ளே சென்றார்.

மீராவிற்கு குழப்பமாக இருந்தது. “நான் குளிக்கிறதுல இவங்களுக்கு அப்படி என்ன சந்தோஷம்.அதுவும் குளிக்கிறதுதான் வாழ்க்கை என்டு வேற சொல்றாங்க.”

மீராம்மா…

“சொல்லுங்க பாட்டி”என குரல் கொடுத்தபடி உள்ளே சென்றாள்.

“சாமி கும்புட்டிங்களா?” என்று கேட்டார் காமு.

இ..இல்ல என்றாள்.வழக்கமாக அவள் அதை செய்வதில்லை. வீட்டிலிருக்கும் போதும் இந்த சடங்கெல்லாம் அவள் பாட்டிதான் பார்ப்பது.பொட்டு வைக்க நெற்றியைக் காட்டுவதோடு சரி.மற்றபடி எதுவுமில்லை.

“வாழ்க்கைய புதுசா தொடங்கி இருக்கீங்க.இதுக்கெல்லாம் கடவுள் ஆசிர்வாதம் வேணும்.இதெல்லாம் சடங்கு பார்த்து செய்ய வேண்டியது.எல்லாம் சூழ்நிலை தானே.அது பரவாயில்ல.ஆனா,இனி நடக்குறதெல்லாம் நல்லபடியா நடக்கனும்.பதினாறு செல்வமும் கிடைக்கனும் என்டெல்லாம் வேண்டிக்கனும்.இருங்க நான் வெளிய போய் பூ வாங்கிட்டு வாறன்.”என்றபடி சென்றார் காமு.

மீராவுக்கு அப்போதுதான் ஒன்று உறைத்தது. “இந்த படத்துல வார மாதிரி நமக்கு ஃப்ர்ஸ் நைட் நடந்துட்டதா நினைச்சிட்டாங்க போல”.அவளுக்கே ஒரு மாதிரியாக இருந்தது.இருக்குற மன உளைச்சலுக்கு இது வேறயா? என்று நினைத்தவள்,அவளையறியாது கவலையாக அறையின் பக்கம் பார்த்தாள்.

காரணம் இன்று அவளது பிறந்த நாள்.அப்பா,பாட்டி இருந்தா எப்படியெல்லாம் அவளை சந்தோஷப்படுத்தி இருப்பார்களென்று அவளுக்குத்தானே தெரியும்.இங்கு யாருமேயில்லியே.தந்தையின் நினைவில் கண்களில் நீர் கோர்த்தது.மனது கனக்க,கவலையின் உருவாய் அமர்ந்தாள்.அவளது தோற்றமே அவள் கவலையை உணர்த்தியது.

என்ன? என்று அவள் தலை மேல் கைவைத்தான் ரொஷான்.
வழமைக்கு மாற்றமாக, அவனின் தொடுகையில் இருந்து விலகாமல் குனிந்த தலையாய் இருந்தாள் மீரா.

அவள் முகம் பார்ப்பதற்காய் முழந்தாளிட்டவனை உணர்வற்றுப் பார்த்தாள்.ஒரு வேளை இவனை பார்த்திருக்காவிட்டால் என் வாழ்க்கையில் எல்லாம் சரியாக நடந்திருக்குமா? ஒரு கணம் யோசித்தாள்.ஆனால் அவனது கனிவான பார்வையில் அது எங்கோ மறைந்து போக, அவளறியாது விழிநீர் வழிந்தது.

“பேபி?? என்ன? அழுகை வேணாம்.என்ன வேணும் பேபி?எல்லாம் கேளுங்க” என்றான்.அவன் குரலில் தெரிந்த பதட்டமும் அதிலிருந்த மென்மையும் அவள் அழுகையை அதிகப்படுத்தியது.

“அழ வேண்டாம் பேபி.ப்ளீஸ்” கெஞ்சினான்.

அவளோ “எனக்கு பாட்டியோட பேசனும்” என கேவிக் கேவி அழுதாள்.

கையிலிருந்த ஃபோனை நீட்டினான் ரொஷான்.வாங்கிக் கொண்டவளோ, அழைப்பதா இல்லையா என யோசித்தாள்.காரணம் அவளது இந்த அழுகை அவள் பாட்டியை அல்லவா பலவீனப்படுத்தும்.மீரா எதையும் சமாளிப்பாள்,தைரியமான பெண் என்ற நம்பிக்கையில் தானே அவளை இவ்வளவு தூரம் தனியாக ரொஷானுடன் அனுப்பி வைத்திருக்கிறார்.

“பேசுங்க பேபி” என்றான்.

“நான் அழுதா பாட்டிக்கு கஷ்டமா இருக்கும்.அதுதான் நான் அவங்களோட அடிக்கடி பேசுறதில்ல.ஆனா இன்டக்கி பேசியே ஆகனும்.எதிர்பார்த்துட்டு இருப்பாங்க.எனக்கு அழுகையா வருது.” குழந்தையைப் போல் அழுதழுது பேசியவளின் முகத்தை கைகளால் தாங்கிப் பிடித்தான்.

“பேபி…. நீங்க ஏன் அழுகை.ஸ்ட்ரோங்க் கேர்ள் தானே.நான் உங்களோட இருக்கன்.ப்ளீஸ் அழுகை தேவையில்ல” என்றான்.

தன் முன்னே மண்டியிட்டு எதையோ யாசிப்பவனைப் போல் அவன் பேச, அவள் அழுகை நின்றது.
அவனையும்,ஃபோனையும் மாறி மாறி பார்த்தவாறே, மீரா ஹோம் என அவன் எடுத்துக் கொடுத்த நம்பருக்கு அழைப்பெடுத்தாள்.

ஹலோ,நான் மீரா பேசுறன் சித்தி.

“……….”

“நல்லாருக்கன் சித்தி.பிரச்சினை இல்ல.அதனால தான் கோல் எடுத்தன்.இந்து,நீங்க,பாட்டி எல்லாரும் நல்லமா?

“......”


“ஒவ்வொரு மாசமும் மறக்காம பாட்டிய க்ளினிக் கூட்டிட்டு போங்க.பாபுவால பிரச்சினை இல்லியே?

“......”

“அது போதும்.பாட்டி எங்க?”அவங்கள்ட்ட கொடுங்க சித்தி.”


“.....”

பாட்டிம்மா?? எப்டி இருக்கீங்க?மீரா கன்னக்குழி விழ,கண்களை உருட்டிப் பேசினாள்.அந்த முகத்தில் அப்படியொரு சந்தோசம்.அவள் முன்னேயிருந்த ரொஷான் கண்கொட்டாது அவளைப் பார்த்திருந்தான்.

“........”

“தேங்க்ஸ் பாட்டிம்மா.லவ் யூயூயூ.எனக்கு பரிசு இருக்கா?


“.......”

“நான் வருவன்.இ….இவரு கொஞ்சம் பிஸி.எல்லாம் சரியாகட்டும் வாறன்” அவனைப் பார்த்தவாறே சொன்னாள்.


“........”

இங்க என்ன விஷேசம்??

“...........”

பாட்டியின் கேள்வியில் அவள் கண்களை விரித்தாள்.அவர் கேட்கும் விஷேசமும்,இன்று காமுப் பாட்டியின் நடத்தைக்கும் சம்மந்தம் இருக்குதல்லவா?? அப்போது பார்த்து ரொஷான் அவள் கன்னக்குழியை தொட,அவளோ முறைத்தவாறே தட்டிவிட்டாள்.அவன் மீண்டும் தொட்டான்.

“......”

“ஆஆங்…...விளங்குது பாட்டி.அதெல்லாம் என்ன அவசரம்.இன்டைக்கி எனக்கு பிறந்தநாள்.அத விட என்ன விஷேசம் என்றாள்.அவன் கைகளை தன் கன்னத்திலிருந்து எடுத்தவாறே.

சற்று நேரம் உரையாடிவிட்டு ஃபோனை கட் செய்து அவனிடம் கொடுத்தாள்.அழுததால் சிவந்திருந்த அவள் முகம்,இப்போது அவனை முறைத்தது.

என்ன? எ…எனக்கு இது பிடிக்காது என்றாள்.

அவனோ,அவள் உச்சி முகர்ந்து “ஹேப்பி பர்த்டே” என்றான்.

அவள் இதை சத்தியமாக எதிர்பார்க்கவில்லையே.பாட்டியோடு பேசியது அவனுக்கு விளங்கிட்டு போல என நினைத்தாள்.அவள் விழிகள் நொடியில் வியப்பிற்கு மாற நாணமாக “தேங்க்ஸ்” என புன்னகைத்தாள்.

அந்தநாள் முழுக்க மீரா அவ்வளவு சந்தோசமாக உணர்ந்தாள்.
காரணம் பாட்டியோடு பேசியது,ரொஷானின் வாழ்த்து,சம்பந்தம் இல்லையென்றாலும் காமுப் பாட்டியின் சம்பிரதாயங்கள்,
கடைசியாக அவள் கழுத்து கை விரல்கள் என மினுமினுத்துக் கொண்டிருக்கும் தங்க ஆபரணங்கள் வரை.

ஆம். ரொஷான் அவளை நகைக் கடைக்கு அழைத்துச் சென்றான்.அவள் எவ்வளவோ மறுத்தும் வாங்கிக் கொள்ளுமாறு வற்புறுத்தினான்.காமுப் பாட்டி மட்டும் வராவிட்டால் அவள் நிச்சயம் திணறிப் போயிருப்பாள்.அவளுக்கு இதைப் பற்றி எந்த அறிவும் இல்லை.அப்பா வாங்கிக் கொடுப்பதை மறுப்பில்லாமல் போடுபவளுக்கு,இப்படியெல்லாம் தேர்வு செய்வதென்பது புதிதாகவே இருந்தது.

கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தை பார்த்தாள்..இதய வடிவில் பெண்டன் வைத்த மாலை,இதயங்கள் பின்னலிடப்பட்டது போன்ற கைசெய்ன்,மோதிரம்,ஒரு ஜோடிக்காப்புகள்.

இப்படியெல்லாம் அவள் அணிந்ததே இல்லை.உண்மையிலேயே, தான் அழகாக இருக்கிறோமோ என்ற சந்தேகத்தில் பார்த்து நின்றாள் மீரா.ஆனால், மயில் தோகை போல விரிந்த கூந்தலுடன் மெரூன் வண்ண சல்வாரில் நின்றவள் பேரழகிதானென்று பின்னின்று பார்த்த ரொஷானுக்கு நன்றாகவே தெரியும்.
 
Last edited by a moderator:

Author: நிதனிபிரபு
Article Title: இது காதல் காவியம் - 22
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.