இன்னுயிராவாய் என்னுயிரே - 12

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,629
6,856
113
அத்தியாயம்-12


காலையில் விழித்துக்கொண்ட தர்சனுக்குத் தலையைத் தலையணையில் இருந்து தூக்கக்கூட முடியவில்லை. அந்தளவுக்கு வலித்தது. கைகள் இரண்டாலும் நெற்றியைப் பற்றியபடி புரண்டவனுக்கு, அப்போதுதான் தான் தன் அறையில் இருப்பதே உறைத்தது.

‘நேற்று குடித்துவிட்டு இங்கேயா வந்தேன்?’ என்று நினைத்த மாத்திரத்தில் பதட்டத்தோடு சட்டென்று எழுந்து அமர்ந்தான். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அவன் குடிப்பது தெரிந்திருக்குமா?

இருக்கிற பிரச்சினை போதாது என்று இது வேறா என்று நினைத்து, நெற்றியில் அறைந்துகொண்டான்.

வெளியே தலைகாட்டவே ஒருமாதிரி இருந்தபோதும், குளித்துத் தயாராகி வந்தவனின் மனமோ உள்ளே தயங்க, அதைக் காட்டிக்கொள்ளாது படியிறங்கினான்.

எதிரே வந்த ஆரணி, தர்சனைக் கண்டதும் புன்னகைத்தாள்.

சங்கடத்துடன் கூடிய புன்னகையைத் தானும் சிரமப்பட்டுச் சிந்தியவன், “சாரி அண்ணி..” என்றான் உள்ளே போன குரலில்.

“எதற்கு?” புருவங்கள் சுருங்கக் கேட்டாள் ஆரணி.

நேற்று குடித்துவிட்டு வந்தேன், அதற்காக என்பானா? அல்லது உங்கள் திருமணத்தின்போது இறுதிவரை என்னால் நிற்கமுடியவில்லை, அதனால் என்பானா? அல்லது இன்னதென்று தெரியாமல் குற்ற உணர்ச்சியில் துடிக்கும் மனதை சமாதானப்படுத்த என்பானா?

எதையும் வாய்விட்டுச் சொல்ல முடியாமல், “எல்லாவற்றுக்கும் தான் அண்ணி..” என்றான் பொதுவாக.

அவனைப் புரிந்து கொண்டவளாக இதமாகப் புன்னகைத்தாள் ஆரணி. “உங்கள் அண்ணாவிடம் மன்னிப்புக் கேட்பீர்களா?”

அன்று கேட்ட மன்னிப்பு நினைவலைகளில் மிதந்தபோதும், “இல்லை.. லேசில் கேட்கமாட்டேன்..” என்றான் அவன்.

“ஏன்?”

“அவன் என் அண்ணா..”

“அவர் அண்ணா என்றால் நான் உங்கள் அண்ணி. அவரில் பாதி. என்னிடமும் நீங்கள் எதற்காகவும் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை.” என்றாள் வாஞ்சையுடன்.

“தாங்க்ஸ் அண்ணி..” என்றவனை, உரிமையோடு பொய்யாக முறைத்தாள் ஆரணி.

உதட்டில் புன்னகை தானாக மலர, “ஓகே அண்ணி! நான் சொன்ன சாரி, தாங்க்ஸ்.. இரண்டையும் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன், சரியா?” என்றான் தர்சன்.

“ம்.. சரி.” என்று தலையை அசைத்துச் சொன்னவள், “குடிக்க என்ன கொண்டுவர? டீயா? காபியா?” என்று கேட்டாள்.

“எதென்றாலும் சரிதான் அண்ணி.” என்றுவிட்டு தர்சன் அகல, சமையலறைக்குச் செல்லத் திரும்பியவள் தன்னையே விழிகளால் பருகியபடி நின்ற கணவனைக் கண்டதும் முகம் சிவந்தாள்.

அதுவரை நேரமும் மனைவியும் தம்பியும் உரையாடிக் கொண்டிருந்ததை ரசித்தபடி பார்த்துக் கொண்டிருந்த அமலன், மனைவி தன்னைப் பார்ப்பதைக் கண்டதும் இதழ்களில் உதித்த ரகசியப் புன்னகையுடன் கண்களில் குறும்பு மின்ன ஒற்றைப் புருவத்தை விசமத்துடன் தூக்கினான்.

அதைக் கண்டுகொண்டவளின் முகமோ செவ்வானமாகச் சிவந்து போனது. நேற்றுவரை அந்த வீட்டையும் வீட்டு மனிதர்களையும் அன்னியமாக எண்ணியவளை இன்று என் வீடு, என் சொந்தம் என்று உரிமையோடு நினைக்க வைத்துவிட்டானே! அதுவும் ஒரே இரவில்!

அந்த உணர்வையும் உரிமையையும் கொடுத்தவன் அவளது ஆருயிர் கணவன்! அதை மட்டுமா கொடுத்தான், அவனையும் சேர்த்தல்லவா கொடுத்தான்!

அந்த நினைவு தந்த மயக்கத்தில் அதற்குமேலும் கணவனின் முன்னால் நிற்க முடியாமல் வெட்கம் பிடுங்கித் தின்ன சமையலறைக்கு விரைந்தாள் ஆரணி. வெட்கத்தில் ஓடும் மனைவியைப் பார்த்த அமலனின் முகத்தில் சந்தோசப் புன்னகை மலர்ந்தது.

அதுவரை, அந்தப் புதுமணத் தம்பதியருக்குள் நடந்த பார்வைப் பரிமாற்றத்தை கண்டும் காணததுபோல் காட்டிக்கொண்ட தர்சன் உள்ளூரச் சிரித்துக் கொண்டான்.

அண்ணனின் மணவாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருக்கிறது என்பது விளங்கியதில், அவன் மனதில் இருந்த சுமைகளில் ஒன்று அகன்றது.

முதல்நாள் ஏன் குடித்துவிட்டு வந்தாய் என்று கேட்கப் போகிறார்களே என்று அவன் உள்ளூரக் கலங்கிக் கொண்டிருக்க, அதைப்பற்றி யாருமே அவனிடம் கேட்கவில்லை. மஞ்சுளா உட்பட!

அது தந்தையின் உத்தரவால் மட்டுமே சாத்தியம் என்பதை உணர்ந்துகொண்டவனுக்கு அவரது முகத்தை நிமிர்ந்தே பார்க்க முடியவில்லை. அவமானத்தில் குன்றிக் குறுகிப் போனான்.

அதன்பிறகு அப்படியான தர்மசங்கடமான சூழ்நிலையை அவன் உருவாக்கவே இல்லை. தொழிலே கதி என்று கிடந்தான். தூங்குவதற்கு மட்டுமே வீட்டுக்கு வந்தான்.

“ஏன் தர்சா இப்படி உன்னை நீயே வருத்திக் கொள்கிறாய்..” என்று தாயாக மஞ்சுளா புலம்பியபோது, “கொஞ்சம் வேலைமா..” என்று முடித்துவிட்டான்.

அதையே அவர் கணவரிடமும் சொல்லிப் புலம்பியபோது, “முதலில் நடந்தவைகளில் இருந்து அவன் வெளியே வரட்டும். அதற்குக் கொஞ்ச நாட்கள் பொறு.” என்று அவரும் சொல்லிவிடவே, பொறுப்பதைத் தவிர வேறு வழியின்றிப் போனது அவருக்கு.

அதோடு, இப்போதெல்லாம் வீட்டுக்கு வருகையில் அவன் நிதானத்துடன் வருவதே தற்போதைக்குப் போதுமானதாக இருந்தது.



அன்று துவைத்துக் காயவைத்து அயர்ன் செய்த தர்சனின் உடைகளை வைப்பதற்காக அவனின் அறைக்கு எடுத்துச் சென்றார் மகேஸ்வரி.

அந்த அறைக்குள் சென்றவருக்கு, வெண்பாவின் அனைத்துப் பொருட்களும் அகற்றப்பட்டு இருப்பதைக் கண்டதும் நெஞ்சுக்குள் வலித்தது. மகள் மேல் ஆத்திரமும் கோபமும் இருந்தாலும், இப்போது எப்படி எங்கே இருக்கிறாளோ என்கிற கவலையும் அவரை அரிக்காமலில்லை!

ஆனாலும், அவளைத் தேடிப்போக மனம் இடம் கொடுக்கவில்லை. மனதைக் கல்லாக்கிக்கொண்டு அவனின் ஆடைகளைக் கப்போர்ட்டுக்குள் வைத்துவிட்டுத் திரும்பியவரின் விழிகளில் கட்டிலுக்குக் கீழே கிடந்த போத்தல்கள் சிக்கின.

அதைப் பார்த்ததும் அதிர்ந்துபோனார். வீட்டிலிருக்கும் அனைவரும் அவன் குடிப்பதை நிறுத்திவிட்டான் என்று நினைத்திருக்க, அவனோ யாருக்கும் தெரியாமல் அறையில் வைத்துக் குடிக்கிறான் என்று தெரிந்த மாத்திரத்தில், அவனை இந்த நிலைக்கு ஆளாக்கிய மகள் மேல் இன்னும் கோபம் வந்தது.

அதோடு, பகல் முழுவதும் வேலை என்கிற பெயரில் தன்னை வருத்திக் கொள்பவன் இரவில் குடித்து உடம்பைக் கெடுக்கிறானே.. இவனை இப்படியே விடக்கூடாது என்று எண்ணினார். அதோடு, மகள் செய்த தப்புக்கு அவன் தண்டனை அனுபவிப்பதா? அதை அவர் பார்த்துக்கொண்டு இருப்பதா?

ஒரு முடிவோடு அந்த அறையை விட்டு வெளியேறினார் மகேஸ்வரி.



அன்று விடுமுறை முடிந்து மீண்டும் ஆரம்பித்து இருந்தது அந்தப் பள்ளிக்கூடம். சாதாரணத் தரத்தில்(ப்ளஸ் வன்) சித்தியெய்திய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புக்களும்(ப்ளஸ் டூ) அன்று புதிதாக ஆரம்பம் ஆனது.

ஆங்காங்கே கும்பல் கும்பலாக மாணவியர் கூடியிருக்க, தோழிகளான திவ்யா, தேவி, உமா மூவரும் உற்சாகமாக எதையெதையோ சலசலத்துக் கொண்டிருந்தனர்.

“அங்கே பாருங்கடி, தீபா வருகிறாள்..” பள்ளிக்கூட வாசலிலேயே ஒரு கண்ணை வைத்திருந்த திவ்யா சொல்லவும், எல்லோரும் திரும்பிப் பார்த்தனர்.

தீபாவும் தங்களை விழிகளால் தேடுவதைக் கண்டுகொண்டவர்கள், “ஹேய் தீபா.. இங்கே வாடி. நாங்கள் இங்கே இருக்கிறோம்.” என்று கைகளை உயர்த்திக்காட்டிக் கூவினர்.

இவர்களைக் கண்டுகொண்ட அவளும், “ஹேய்…!” என்றபடி ஓடிவந்தாள்.

அவளோடு இன்னொரு பெண்ணும் வருவதைக் கவனித்த தோழிகள், “யாருடி அது? புதிதாக இருக்கிறாளே..” என்று தங்களுக்குள் கேட்டுக் கொண்டனர்.

“பொறு, அவளையே கேட்கலாம்..” என்றாள் உமா.

“எல்லோரும் எப்படிடி இருக்கிறீர்கள்?” என்றபடி தோழிகளைக் கட்டிக்கொண்டாள் தீபா.

யாழ்பாணத்தில் இருக்கும் அவளின் சித்தி வீட்டுக்குத் தீபா சென்றிருந்ததில் விடுமுறையின்போது சந்திக்கும் வாய்ப்பு அவர்களுக்குக் கிட்டவே இல்லை. எனவே விசாரித்தாள்.

“எங்களுக்கு என்ன, எல்லோரும் நன்றாக இருக்கிறோம். நீ என்னடி, கொஞ்சம் உடம்பு வைத்துவிட்ட மாதிரி இருக்கே?”

“ஆமாம்டி. இந்தச் சித்தி எப்போ பார் எதையாவது என் வாயில் திணித்துக் கொண்டே இருப்பார். பிறகு எப்படி உடம்பு வைக்காமல் இருக்கும்..”

“விடு விடு.. இப்போவும் தளதளத் தக்காளிப்பழம் மாதிரி அழகாத்தான்டி இருக்கிறாய்..” என்று வாரினாள் உமா.

“உன்னை..” என்று அடிக்கக் கையை ஓங்கியவளிடம் இருந்து தப்பித்துத் தள்ளிநின்று சிரித்தாள் உமா.

இதையெல்லாம் ஒரு சின்னப் புன்னகையுடன் பார்த்து ரசித்தபடி நின்றாள் அந்தப் புதிய மாணவி.

“ஹாய்.. நான் தேவி. இந்த மாட்டுக்கு உங்களை அறிமுகம் செய்து வைக்கவேண்டும் என்கிற அறிவுகூட இல்லை.” என்று தீபாவை வைதபடி தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டாள் தேவி.

“ஹாய்.. என் பெயர் இலக்கியா. அவள் உங்களை எல்லாம் நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்டிருக்கிறாள் இல்லையா. அதுதான்.” என்றாள் மென்மையான குரலில், தோழியை விட்டுக் கொடுக்காது.

அங்கிருந்த அனைவருக்கும் அவளைப் பிடித்துப் போக அந்த ஒரு செயலே போதுமானதாக இருந்தது.
 
Last edited by a moderator:

Author: Vishakini
Article Title: இன்னுயிராவாய் என்னுயிரே - 12
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,629
6,856
113
அதோடு, பகல் முழுவதும் வேலை என்கிற பெயரில் தன்னை வருத்திக் கொள்பவன் இரவில் குடித்து உடம்பைக் கெடுக்கிறானே.. இவனை இப்படியே விடக்கூடாது என்று எண்ணினார். அதோடு, மகள் செய்த தப்புக்கு அவன் தண்டனை அனுபவிப்பதா? அதை அவர் பார்த்துக்கொண்டு இருப்பதா?

ஒரு முடிவோடு அந்த அறையை விட்டு வெளியேறினார் மகேஸ்வரி.



அன்று விடுமுறை முடிந்து மீண்டும் ஆரம்பித்து இருந்தது அந்தப் பள்ளிக்கூடம். சாதாரணத் தரத்தில்(ப்ளஸ் வன்) சித்தியெய்திய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புக்களும்(ப்ளஸ் டூ) அன்று புதிதாக ஆரம்பம் ஆனது.

ஆங்காங்கே கும்பல் கும்பலாக மாணவியர் கூடியிருக்க, தோழிகளான திவ்யா, தேவி, உமா மூவரும் உற்சாகமாக எதையெதையோ சலசலத்துக் கொண்டிருந்தனர்.

“அங்கே பாருங்கடி, தீபா வருகிறாள்..” பள்ளிக்கூட வாசலிலேயே ஒரு கண்ணை வைத்திருந்த திவ்யா சொல்லவும், எல்லோரும் திரும்பிப் பார்த்தனர்.

தீபாவும் தங்களை விழிகளால் தேடுவதைக் கண்டுகொண்டவர்கள், “ஹேய் தீபா.. இங்கே வாடி. நாங்கள் இங்கே இருக்கிறோம்.” என்று கைகளை உயர்த்திக்காட்டிக் கூவினர்.

இவர்களைக் கண்டுகொண்ட அவளும், “ஹேய்…!” என்றபடி ஓடிவந்தாள்.

அவளோடு இன்னொரு பெண்ணும் வருவதைக் கவனித்த தோழிகள், “யாருடி அது? புதிதாக இருக்கிறாளே..” என்று தங்களுக்குள் கேட்டுக் கொண்டனர்.

“பொறு, அவளையே கேட்கலாம்..” என்றாள் உமா.

“எல்லோரும் எப்படிடி இருக்கிறீர்கள்?” என்றபடி தோழிகளைக் கட்டிக்கொண்டாள் தீபா.

யாழ்பாணத்தில் இருக்கும் அவளின் சித்தி வீட்டுக்குத் தீபா சென்றிருந்ததில் விடுமுறையின்போது சந்திக்கும் வாய்ப்பு அவர்களுக்குக் கிட்டவே இல்லை. எனவே விசாரித்தாள்.

“எங்களுக்கு என்ன, எல்லோரும் நன்றாக இருக்கிறோம். நீ என்னடி, கொஞ்சம் உடம்பு வைத்துவிட்ட மாதிரி இருக்கே?”

“ஆமாம்டி. இந்தச் சித்தி எப்போ பார் எதையாவது என் வாயில் திணித்துக் கொண்டே இருப்பார். பிறகு எப்படி உடம்பு வைக்காமல் இருக்கும்..”

“விடு விடு.. இப்போவும் தளதளத் தக்காளிப்பழம் மாதிரி அழகாத்தான்டி இருக்கிறாய்..” என்று வாரினாள் உமா.

“உன்னை..” என்று அடிக்கக் கையை ஓங்கியவளிடம் இருந்து தப்பித்துத் தள்ளிநின்று சிரித்தாள் உமா.

இதையெல்லாம் ஒரு சின்னப் புன்னகையுடன் பார்த்து ரசித்தபடி நின்றாள் அந்தப் புதிய மாணவி.

“ஹாய்.. நான் தேவி. இந்த மாட்டுக்கு உங்களை அறிமுகம் செய்து வைக்கவேண்டும் என்கிற அறிவுகூட இல்லை.” என்று தீபாவை வைதபடி தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டாள் தேவி.

“ஹாய்.. என் பெயர் இலக்கியா. அவள் உங்களை எல்லாம் நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்டிருக்கிறாள் இல்லையா. அதுதான்.” என்றாள் மென்மையான குரலில், தோழியை விட்டுக் கொடுக்காது.

அங்கிருந்த அனைவருக்கும் அவளைப் பிடித்துப் போக அந்த ஒரு செயலே போதுமானதாக இருந்தது.

பிறகு என்ன? நட்பால் இணைய நான்கு நிமிடங்களே அதிகம் அல்லவா.. அதுநாள் வரை நால்வர் கொண்ட அந்தத் தோழியர் கூட்டம் அந்த நொடியில் இருந்து ஐவராக மாறிப்போனது.

“தீபா, உனக்கு ஒரு விஷயம் தெரியுமாடி..?” உமாவை கடைக்கண்ணால் பார்த்தபடி தேவி கேட்க, “உன்னை இப்போது அவள் ஏதாவது கேட்டாளா? வாயை வைத்துக்கொண்டு பேசாமல் இருடி!” என்று முகம் சிவக்க கோபம் காட்டினாள் உமா.

அவளின் அந்தக் கோபமே ஆர்வத்தைத் தூண்ட, “என்னடி விஷயம்? சொல்லு சொல்லு. இவள் எதற்கு இந்தக் குதி குதிக்கிறாள்?” என்று கேட்டாள் தீபா.

“அதுவா.. அதுவா… அதுவா..” என்று உமாவை வெறுப்பேற்றிவிட்டு, “இதுநாள்வரை செல்வி உமாவாக இருந்தவள் விரைவில் திருமதி உமா ஆகப் போகிறாளாம்..” என்று போட்டுடைத்தாள் தேவி.

“என்னது? உண்மையாவா உமா? அப்போ படிப்பு?”

“நீயொருத்தி! அவள் காதல் படிப்பை எப்போதோ படிக்கத் தொடங்கிவிட்டாள். இப்போ வந்து பள்ளிப்படிப்பைப் பற்றிக் கேட்கிறாய்..” என்றாள் திவ்யா.

“இப்போ என்னிடம் அடிதான்டி வாங்கப் போகிறீர்கள் எல்லோரும்.” என்று தோழிகளைப் பார்த்து முறைத்த உமா, “நான் படித்து மட்டும் என்ன செய்யப் போகிறேன் தீபா? அப்பாவுக்கு என்னை வேலைக்கு விட விருப்பம் இல்லை. அருண் வீட்டிலும் விடமாட்டார்கள். அருணுக்கு இந்த வருடத்தோடு இருபத்தியெட்டு வயது முடிவதால் எலோரும் அவசரப்படுகிறார்கள். ஆனால் திருமணத்துக்குப் பிறகு படிக்க வைப்பதாக அருண் சொல்லியிருக்கிறார்.” என்றாள்..

வசதியான வீட்டுப் பெண்ணான உமாவுக்கு நாட்டுப் பிரச்சினையால் இரண்டு வருடம் படிக்க முடியாமல் போயிருந்தது. அதனால், அவள் இப்போது உயர்தரத்தில் சேர்ந்திருந்தாலும் வயது பத்தொன்பதை நெருங்கியிருந்தது.

படிப்பை விடாமல் திருமணத்துக்குப் பிறகும் படிக்கத்தான் போகிறாள் என்பதில் சந்தோசமாக இருந்தாலும், கிடைத்த சந்தர்ப்பத்தை விட்டுவிடுமா தோழியர் கூட்டம். அவளை நன்றாக ஓட்டினர்.

“அட அட.. அவருக்கு வயசாகுதாம்.. அதனால் கல்யாணமாம். இவள் திருமணத்துக்குப் பிறகும் படிப்பாளாம்.. இதை எல்லாம் எங்களை நம்பச் சொல்கிறாயா நீ?” இது திவ்யா.

“திருமணத்துக்குப் பிறகு அவள் நிச்சயம் படிப்பாள் திவி. ஆனால் அது வே...ற.. படிப்பு. இல்ல உ..மா… அது அவளின் அத்தான் மட்டுமே அவளுக்குச் சொல்லிக்கொடுக்கும் படிப்பு..” என்றது தேவி.

“அது இப்போவே ஆரம்பித்தாகிவிட்டதோ என்னவோ.. யாருக்குத் தெரியும்..” என்றாள் தீபா.
 

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,629
6,856
113
அதைக்கேட்டுச் சலங்கைகள் எனச் சிரிப்புச் சத்தம் அந்த இடத்தை நிறைக்க இலக்கியாவும் மென்னகை புரிந்தாள். இளங்கன்றுகள் அல்லவா. அளவு கணக்கின்றித் துள்ளின.

முகம் சிவக்கப் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த உமா கடைசியில் பொங்கிவிட்டாள். “ஏன்டி, என்னை இந்த ஓட்டு ஓட்டுகிறீர்களே, நீங்கள் மட்டும் கல்யாணமே ஆகாமல் கன்னிகளாகவா கடைசிவரை இருக்கப் போகிறீர்கள்? உங்களுக்கும் இந்தக் காதல் கல்யாணம் எல்லாம் நடக்கும் தானே. அப்போது பார்த்துக் கொள்கிறேன்.” என்று கருவினாள் அவள்.

“இபோ நாங்கள் சொன்னோமா அதெல்லாம் எங்களுக்கு நடக்காது என்று. எப்போதுடா நடக்கும் என்று காத்திருக்கிறோமாக்கும். கல்யாணம் ஆகி, முதலிரவை முடித்துப் பிள்ளையைப் பெற்று, அதை இதே பள்ளிக்கூடத்துக்கு எப்போது கூட்டி வருவேன் என்று நான் காத்திருக்கிறேனாக்கும்..” என்று திவ்யா சொன்னதும், மீண்டும் ஒரு சிரிப்பலை அங்கே எழுந்து அடங்கியது.

இப்படியே சுழன்ற அவர்களின் பேச்சு, அவர்களுக்கு வரப்போகும் மாப்பிள்ளை எப்படியிருக்க வேண்டும் என்பதில் வந்து நின்றது.

“எல்லாப் பெண்களும் பார்த்துப் பொறாமை படும் அளவுக்குப் பணக்கார, அழகான மாப்பிள்ளை வேண்டும்.” என்று விழுந்தடித்துச் சொன்னாள் தேவி.

“அப்போ உன் புருஷன் உனக்குச் சொந்தமில்லை..” என்றாள் உமா.

மீண்டும் சிரிப்பொலி கேட்டது அங்கே.

“எனக்கு என் அத்தானே போதும்..” என்றாள் தீபா.

“எனக்கு என் ஹீரோவேதான் வேண்டும்.” என்றாள் திவ்யா சோகத்தோடு.

“ஏன்டி இந்த உலகத்தில் வேறு ஆண்களே இல்லையா உனக்கு?” என்றாள் உமா.

யார் அந்த ஹீரோ என்பதாக இலக்கியா பார்க்க, “உனக்கு லக்கி?”என்று கேட்டாள் தீபா.

“எனக்கு..?” என்று புருவம் சுருக்கி யோசித்துவிட்டு, “எந்தக் கற்பனையுமே பெரிதாக இல்லை. ஆனால், என்னை மட்டுமே காதலித்து எனக்காகவே வாழ்பவராய் இருக்க வேண்டும். அவருக்கு நான் மட்டுமே உலகமாக இருக்கவேண்டும். வேறு எந்தப் பெண்ணையும் அவர் நிமிர்ந்தும் பார்க்கக் கூடாது.” என்றாள் இலக்கியா.

“ஹேய்.. சூப்பர்டி!” என்று பாராட்டினர் எல்லோரும்.

அப்போது பள்ளிக்கூட வாசலில் ஒரு கார் வந்து நின்றது.

“ஹை! என் ஹீரோடி.. என் ஹீரோ வருகிறான்...” என்று துள்ளிக்குதிக்காத குறையாகக் கூவினாள் திவ்யா.

“அடச்சி! அடங்கு. சும்மா சும்மா உளறாதே! அவனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது.” எரிச்சலுடன் சொன்னாள் உமா.

“அதனால் என்ன? அதுதான் அவள் ஓடிவிட்டாளே. இப்போது என் ரூட் கிளியர்.” என்றாள் திவ்யா, அப்போதும் விழிகளால் தர்சனை விழுங்கியபடி.

“என்னடி சொல்கிறாய்?” அங்கு அர்ஜூனைத் தூக்கிக்கொண்டு மகேஸ்வரியுடன் சென்றுகொண்டிருந்த தர்சனைப் பார்த்தபடி கேட்டாள் இலக்கியா.

“அவள் ஒரு லூசு லக்கி. அதுதான் தத்தக்கா பித்தக்கா என்று உளறுகிறாள். அங்கே வருகிறார் பார். அவர்தான் மகேஸ்வரி மிஸ். எங்கள் தமிழ் ஆசிரியை. நீ ஆர்ட்ஸ் தானே எடுக்கப்போகிறாய். பெரும்பாலும் உனக்குத் தமிழ் பாட ஆசிரியையாக அவர் வந்தாலும் வருவார்.” என்று மேலதிகத் தகவலை வழங்கியவள் தொடர்ந்தாள்.

“அவருக்கு அருகில் வருவது அவரின் அண்ணன் மகன். பெயர் பிரியதர்சன். அவனைக் காதலிக்கிறேன் என்று கொஞ்சநாள் சொல்லிக்கொண்டு இவள் திரிந்தாள். திடீரென்று பார்த்தால் மிஸ்ஸின் மகளோடு அவனுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது என்றார்கள். பிறகு பார்த்தால் அவள் எங்கோ ஓடிவிட்டாளாம் என்று கதை. இதில், அந்தப் பெண்ணை இவர் லவ்வோ லவ்வு என்று லவ்விக் கட்டிக்கொண்டாராம். உள்ளுக்குள் என்ன அநியாயம் நடந்ததோ? அம்மாவைக் கூட விட்டுவிட்டு ஒரு பெண் போகிறாள் என்றால், இவன் எப்படியானவனோ, என்னென்ன கெட்ட பழக்கம் இருக்கிறதோ யாருக்குத் தெரியும் சொல்லு? அளவு கணக்கில்லாத பணம் வேறு! இதையெல்லாம் யோசிக்காமல் இன்னும் அவன்தான் என் ஹீரோ என்று சொல்லிக்கொண்டு அலைகிறாள் இந்த லூசு!” என்று ஆத்திரத்தோடு சொன்னாள் உமா.

அதைக்கேட்ட இலக்கியாவின் மனதில் தர்சனின் மேல் ஒருவித வெறுப்பும் பிடித்தமின்மையும் தோன்றியது. நடந்து கொண்டிருந்தவனையே விழிகளால் தொடர்ந்தபடி, “சீச்சி.. இரண்டாம் தாரமாகப் போக உனக்கென்ன வேண்டுதலா திவி.” என்றாள் இலக்கியா முகத்தைச் சுளித்தபடி.

“இரண்டாம் தாரம் என்றால் என்னடி? அவனுக்கு ஒரு வாழ்க்கையை நான் கொடுத்துவிட்டுப் போகிறேன். ஆனால், அவனிடம் இருக்கும் பணத்துக்குக் காலம் முழுமைக்கும் ராணி மாதிரி வாழலாம் தெரியுமா. அந்தப் பணமே இரண்டாம் தாரம் என்கிற பெயரை மறைத்துவிடும்.” என்றாள் திவ்யா.

“அப்படிச் சொல்லாதே திவி. கூலி வேலைக்குப் போனாலும், ஒருவேளை கஞ்சி குடித்தாலும் பரவாயில்லை. நம் கணவன் நமக்கு மட்டுமே சொந்தமானவனாக இருக்கவேண்டும். நம்மை மட்டுமே தாங்கவேண்டும். குடிசையில் இருந்தாலும் கணவனின் மனதில் ராணியாக இருக்கவேண்டும். எதையும் பங்கு போடலாம். காதலை பங்கு போடவும் முடியாது! போடவும் கூடாது!” மெல்லிய குரலில் சொன்னாலும் தன் மனதைத் தெளிவாகச் சொன்னாள் இலக்கியா.

“ஹேய்! என்னடி இது? இவ்வளவு சீரியசாகப் பேசுகிறாய். அதெல்லாம் எனக்கும் தெரியும்பா. இது சும்மா பொழுது போக்குக்குப் பேசுவது தானே! மற்றும்படி உன்னைப் போல்தான் நானும். அதனால் கவலைப்படாதே..” என்று தோழியை அணைத்துக்கொண்டாள் திவி.