• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இன்னுயிராவாய் என்னுயிரே - 26

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம்-26


ஒரு வாரம் மிக வேகமாகக் கடந்திருந்தது. தர்சன் மனைவியைக் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக்கொண்டான் என்றுதான் சொல்லவேண்டும். அந்தளவுக்கு அவளின் தேவைகளைப் பார்த்துப் பார்த்துச் செய்தான்.

காலையில் தலை சுற்றலிலும் மயக்கத்திலும் சோர்ந்து கிடப்பவளை, தன் கைப்பிடியிலேயே வைத்து காலைக் கடன்களை முடிப்பது தொடங்கி, அவள் மறுக்க மறுக்கப் பிடிவாதமாக எதையாவது உண்ணவும் குடிக்கவும் கொடுப்பதில் இருந்து, கோவில், குளம் என்று அவளுக்குப் பிடித்த இடங்களுக்கு அழைத்துச் செல்வது வரை பெரும்பாலான நேரத்தை அவளுடன் செலவழித்தான்.

ஆனால், அவற்றை எல்லாம் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இலக்கியா தான் இல்லை. அவன் பரிவும் பாசமும் காட்டக்காட்ட இன்னுமின்னும் அவனிடமிருந்து ஒதுங்கத் தொடங்கினாள்.

இப்போதெல்லாம் அவளுக்கு ஒரே எரிச்சலாக இருந்தது. தனக்கு என்ன வேண்டும்? என்ன வேண்டாம்? என்று ஒன்றுமே பிடிபடவில்லை. அவர்களின் அறைக்குள் போகவே பிடிக்கவில்லை. தோட்டமே கதி என்று கிடந்தாள். அதைக் கவனித்துவிட்டு, அவளுக்குப் பிடித்த ரோஜாச்செடிகளைப் பல வண்ணங்களில் வாங்கிவைத்தான் தர்சன். அவளோ அவற்றைத் திரும்பியும் பார்த்தாள் இல்லை.

அங்கே, அவளது தாய்வீட்டில் இலக்கியாவின் அறையில் இருந்த ஒன்றிரண்டு ரமணிச்சந்திரனின் புத்தகங்களைக் காட்டி, “யார் படிப்பது?” என்று அவன் கேட்டபோது, “நான்தான். எனக்கு ரமணிம்மாவின் கதைகள் மிகவும் பிடிக்கும்.” என்று விழிகள் மின்ன அவள் சொன்னதை நினைவில் மீட்டியவன், ரமணிச்சந்திரன் எழுதிய அத்தனை புத்தகங்களையும் வாங்கிப் போட்டான். அவளோ அவற்றைத் தொட்டுக் கூடப் பார்த்தாள் இல்லை.

இப்படியெல்லாம் அவளுக்காக எதையாவது செய்துவிட்டு அதைப் பார்த்ததும் மலரும் அவளின் முகத்துக்காக, விழிகளை உயர்த்தி மகிழ்ச்சியோடு அவனைப் பார்க்கும் பார்வைக்காக, அந்தச் செவ்விதழ்கள் அவனைப் பார்த்துச் சிந்தும் புன்னகைக்காக அவன் ஆவலுடன் காத்திருக்க அவளோ அவன் முகம் பார்க்கவே மறுத்தாள்.

என் முகத்தைக்கூடப் பார்க்கமுடியாத அளவுக்கு அப்படி என்னதான் நடந்தது என்று சுள்ளென்று கோபம் வந்தாலும், அவள்மீது கொண்ட அன்பு அதைக் காட்டவிடாமல் தடுத்தது.

அன்று அவர்களது அறையில் கணவனோடு சோபாவில் அமர்ந்து இருந்தாள் இலக்கியா. அவன் தொலைக்காட்சியில் மூழ்கியிருக்க, அவளோ அவனிடம் ஏதோ சொல்ல எண்ணி அவன் புறமாகத் திரும்புவதும் பிறகு தலையைக் குனிந்து கைகளைப் பிசைவதுமாக இருந்தாள்.

அவளை முதலில் இருந்தே கவனித்துக் கொண்டிருந்த தர்சனுக்கு மனைவியின் செய்கை வேடிக்கையாக இருந்தாலும், அவளாகவே வாயை திறந்து சொல்லட்டும் என்று எண்ணி பேசாமலேயே இருந்தான்.

திண்டாட்டத்தோடு சற்று நேரத்தைக் கழித்துவிட்டு, “வந்து..” என்று இழுத்தாள் இலக்கியா.

அவள் இப்போதெல்லாம் தன்னை அத்தான் என்று அழைப்பதே இல்லை என்று உள்ளூர வருத்தத்துடன் எண்ணியபோதிலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் திரும்பி அவளைக் கேள்வியாகப் பார்த்தான் தர்சன்.

“வந்து…”

“நீ எப்போதோ என்னிடம் வந்துவிட்டாய். அதனால் விஷயத்தைச் சொல்லு லயா.” என்றான் புன்சிரிப்புடன்.

பெரிய புன்னகை மன்னன் என்று மனம் புகைந்தாலும், “இந்தக் கட்டிலை மாற்றுவோமா?” என்று மெல்லக் கேட்டாள் இலக்கியா.

தர்சனின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன. “ஏன்? அது நன்றாகத்தானே இருக்கிறது. அதைவிட எல்லாவற்றுக்கும் வசதியாக, பெரிதாகத்தானே இருக்கிறது.” என்றான் கண்ணைச் சிமிட்டி குறும்புடன்.

பெரிய காதல் மன்னன்! மனம் புகைய தலையைக் குனிந்துகொண்டாள் அவள்.

மனைவியையே சற்று நேரம் பார்த்த தர்சன் அவளின் காதருகில் குனிந்து, “உனக்குப் புதுக் கட்டில் வேண்டுமா?” என்று கிசுகிசுப்பான குரலில் கேட்டான்.

நிமிர்ந்து அவனைப் பாராதபோதும் அவள் தலை மேலும் கீழுமாக அசைந்தது.

“சரி. வாங்கிவிட்டால் போச்சு. இதைச் சொல்வதற்கா இந்தத் தயக்கம் தயங்கினாய்.” என்று சிரித்தான் அவன்.

“அது.. அது மட்டுமில்லை..”

“வேறு என்ன?”

“இந்தச் சோபாவையும்..” என்று அவள் இழுக்க, “மாற்றவேண்டுமா?” என்று கேட்டான் அவன்.

“ம்..” என்றாள் அவள் தயக்கத்துடன்.

விழிகளில் யோசனையுடன் மனைவியைப் பார்த்தான் தர்சன். அவள் தலையை உயர்த்தினால் அல்லவோ அந்தப் பார்வை புரிய.

“சரி. இதையும் மாற்றிவிடுவோம்.” என்றான் அவன்.

“எல்லாவற்றையும் மாற்றலாமே..” உள்ளே போய்விட்ட குரலில் சொன்னாள் இலக்கியா.

தர்சனுக்கு மனைவியை எண்ணி சற்று வியப்பாகவும் அதிசயமாகவும் இருந்தது. அன்று வவுனியாவில் வைத்து அவளுக்கு நகைகளும் உடைகளும் வாங்கியபோது, கஷ்டத்தை உணராமல் வளர்ந்ததில் காசை வீணாகச் செலவழிக்கிறீர்கள் என்று கோபப்பட்டவள் இன்று நல்ல பொருட்களை எல்லாம் எறிந்துவிட்டு புதிது வாங்குவோம் என்கிறாளே. அப்போ இது வீண் செலவில்லையா? அவனளவில் இந்தச் செலவெல்லாம் ஒரு விசயமே அல்லதான். ஆனாலும்...

அவள் மனதில் என்ன நினைக்கிறாள், எதற்காக இப்படி எல்லாவற்றையும் மாற்றச் சொல்கிறாள் என்று அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுவே பழைய தர்சனாக இருந்திருக்க விடாப்பிடியாக நின்று அவளின் மனதில் இருப்பதை அவள் வாயாலேயே வெளியே கொண்டுவந்திருப்பான்.

ஆனால், மனைவியை உயிராய் நேசிக்கும் இந்தப் புதிய தர்சனால் அது முடியவில்லை.

“சரி லயா. எல்லாவற்றையும் மாற்றிவிடலாம். ஆனால் ஏன் திடீரென்று?” என்று கேட்டான் தர்சன்.

என்ன சொல்வாள்? அவை அனைத்தும் உன் முதல் மனைவியை எனக்கு நினைவூட்டுகிறது என்றா? அல்லது நீ அவளுடன் வாழ்ந்த வாழ்க்கையை ஞாபகப் படுத்துகிறது என்றா? ஒன்றுமே சொல்லாமல் தலையைக் குனிந்து தன் விரல்களையே ஆராய்ந்தபடி அமைதியாகவே இருந்தாள் இலக்கியா.

மனைவியின் அருகே இன்னும் நெருங்கி, அவளின் வெண்டைப் பிஞ்சு விரல்களோடு தன் விரல்களை விளையாட விட்டபடி, “நாளைக்கே நாம் இருவருமாகப் போய் எல்லாவற்றையும் உனக்குப் பிடித்த விதமாகவே வாங்கி வரலாம். சரியா..?” என்று கேட்டான் தர்சன்.

“நா..ன் எதற்கு?” அவனைத் திரும்பிப் பார்த்துக் கேட்டாள் இலக்கியா.

அவள் விழிகளோடு தன் விழிகளைக் கலந்தபடி, “இனி எல்லாமே உனக்குப் பிடித்தபடிதான் இருக்கவேண்டும்.” என்றான் அவன்.

நீயே நான் நினைத்தபடி இல்லையே என்று மனம் மருக, மீண்டும் தலையைக் குனிந்து கொண்டவளிடம், “இப்போதெல்லாம் நீ என்னோடு பழையமாதிரி பேசுவதே இல்லை லயா..” என்றான் தர்சன், தன்னுடைய வருத்தத்தை மறைக்க முயன்ற குரலில்.

அதைக் கேட்டவளின் விழிகளில் நீர் திரண்டது. ஆனாலும் வாயை திறந்து பதில் சொல்ல இயலவில்லை அவளால். சற்றுநேரம் அவளின் பதிலுக்காகக் காத்திருந்த அவனும் பிறகு அதைப்பற்றி எதுவும் கேட்கவில்லை.

அடுத்த நாளே மனைவியை அழைத்துச் சென்று, அவள் கைகாட்டிய கட்டில் முதல்கொண்டு, சோபா, மேசை, நாற்காலி, டிரெஸ்ஸிங் டேபிள் என்று அனைத்தையும் அவளுக்குப் பிடித்த விதமாகவே வாங்கிப்போட்டான்.

ஏன் என்று கேட்ட அன்னையிடம், “பழையது எல்லாமே காலாவதி ஆகிவிட்டது.” என்றான் குதர்க்கமாக.

“டேய்! என்னடா உளறுகிறாய். இதுக்கு எல்லாமாடா காலாவதி திகதி இருக்கும்?” என்றவரிடம், “இருக்கும்மா. அதெல்லாம் உங்கள் கண்ணுக்குத் தெரியாது.” என்றவனை, இவனுக்கு என்ன விசர் ஏதும் பிடித்துவிட்டதா என்பதாகப் பார்த்தார் மஞ்சுளா.

தாயின் பாவனையில் எழுந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு சென்றுவிட்டான் தர்சன்.

மேலும் சில நாட்கள் பெரிய மாற்றம் இன்றிக் கடந்தது. ஆனாலும் லக்கியின் மனதின் அலைப்புறுதல் மட்டும் நிற்கவே இல்லை. இன்னுமின்னும் மனதில் ஒரு வேதனை நிரந்தரமாக இருந்து அரித்துக்கொண்டே இருந்தது.

வெண்பாவை நினைவு படுத்துகிறது என்று கட்டிலை மாற்றியவளால், சோபாவை மாற்றியவளால், மேசையை மாற்றியவளால் அதே வெண்பாவை நினைவு படுத்தும் கணவனை மாற்றமுடியுமா? அவன் இன்னொருத்தியுடன் வாழ்ந்தவன் என்கிற நினைப்பை மாற்ற முடியுமா? அவள் அவனுக்கு இரண்டாம் தாரம் என்கிற உண்மையைதான் மாற்ற முடியுமா?

எதையுமே மாற்ற முடியாதே!

மனதின் வெறுப்பும் கசப்பும் அடங்க மறுத்தது!.

அந்த நினைவுகளே அவளைக் கொல்லாமல் கொன்றதில் ஒரு கட்டத்தில் அவளால் அந்த வீட்டிலேயே இருக்க முடியாது போல் ஆனது.

இதில் உடலில் உண்டான மாற்றங்கள் வேறு அவளைப் போட்டு பாடாய்ப் படுத்தின.

ஒருநாள், “நான் அம்மா வீட்டுக்குப் போகவா?” என்று கேட்டபடி கணவனிடம் வந்து நின்றாள் இலக்கியா.

மனைவியின் ஒவ்வொரு விருப்பங்களையும் நிறைவேற்றக் காத்துக் கிடந்தவன், ”ஓ..! போகலாமே. நாளைக்கே போவோமா. காலையிலேயே போய்விட்டு இரவுக்குத் திரும்பலாம்.” என்றான் உற்சாகமாக.

“இல்லை.. அது நா..ன் அங்கே போய் இருக்கலாம் என்று..” அவனைப் பாராது அவள் சொல்ல, அவனது புருவங்கள் சுருங்கின.

‘நாம் போகலாமா’ என்றும் கேட்காமல் ‘நான் போய்விட்டு வரட்டுமா’ என்றும் கேட்காமல் ‘நான் போய் இருக்கப் போகிறேன்’ என்று சொல்கிறாளே. அதன் பொருள்?

கனமும் அவளைப் பிரியமுடியாமல் அவன் தவிக்க, அவளானால் தாய் வீட்டுக்குச் செல்கிறேன் என்கிறாளே என்று சட்டெனக் கோபம் மூண்டது. ஆனாலும் அடக்கிக்கொண்டான்.

“ஏன்?”

பதில் சொல்லாமல் நிற்கும் மனைவியையே கூர்ந்தான் தர்சன்.

“இங்கே உனக்கு என்ன குறை? அல்லது ஏதும் ஆசை இருந்தால் சொல்லு செய்கிறேன்.” என்று தணிவாகவே கேட்டான்.

“அம்மா வீட்டுக்குப் போகத்தான் விருப்பம்..” கிளிப்பிள்ளையாக மீண்டும் அதையே சொன்னாள் அவள்.

பிறந்த வீட்டுச் சொந்தங்களைக் காண ஆசைப் படுகிறாளோ என்று எண்ணியவன், ஒருகையால் அவளின் இடையை வளைத்து மறு கரத்தால் அவளது நெற்றி கன்னம் என்று வருடிகொண்டே, “நான் வேலைக்குப் போகும்போதெல்லாம் உன்னை அங்கே கொண்டுபோய் விடுகிறேன். நாள் முழுவதும் நீ அங்கேயே இரு. பிறகு வேலை முடிந்து வரும்போது வந்து உன்னையும் அழைத்துவருகிறேன். சரியா?” என்று இதமான குரலில் கேட்டான்.

இல்லையே.. அவளால் இந்த வீட்டில், இந்த அறையில் இருக்கவே முடியவில்லையே.. அவள் கேட்பது கணவனின் முகத்தையே பார்க்காத தனிமையை அல்லவா.. இதை எப்படி அவளால் அவனிடம் சொல்ல இயலும்?

“இல்லை.. நான் அங்கேயே..” என்று அவள் ஆரம்பிக்கையிலேயே, “அது முடியாது லயா!” என்று மறுத்தான் தர்சன்.

அதிர்ச்சியோடு அவள் நிமிர்ந்து பார்க்க, “இதுதான் உன் வீடு. இங்கேதான் நீ இருக்கவேண்டும். அம்மா வீட்டுக்கு விருந்துக்குப் போகலாமே தவிர அங்கே போய்த் தங்கமுடியாது. நான் விடமாட்டேன். புரிந்ததா?” என்று அதட்டியவன், “அவர்களைப் பார்க்க விருப்பம் என்றால் மட்டும் சொல்லு. போய்விட்டு வரலாம்!” என்று அழுத்தம் திருத்தமான குரலில் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றான்.
 
Last edited by a moderator:

Vishakini

Moderator
Staff member
என்ன அராஜகம் என்று கொதித்தது அவள் உள்ளம். அவளைப் பெற்றவர்களின் வீட்டுக்குப் போவதற்குக் கூட அவளுக்கு உரிமை இல்லையா? எல்லாமே அவன் நினைத்தபடிதான் நடக்க வேண்டுமா? அவளுக்கு என்று ஒரு விருப்பம், ஆசை இல்லையா? இதென்ன ஜெயில் வாழ்க்கை? என்று புழுங்கியது அவள் நெஞ்சம். அப்படிப் புழுங்க மட்டுமே அவளால் முடிந்தது.

அன்றும் அதற்குப் பிறகு வந்த நாட்களிலும் முகத்தை நீட்டிக்கொண்டு இருந்த மனைவியைப் பார்த்த தர்சனுக்குச் சிரிப்பாக இருந்தது. குழந்தையைச் சுமப்பவளும் ஒரு குழந்தையாகவே தெரிய, அவள் மனச்சுணக்கத்தைப் போக்கும் வேகம் எழுந்தது அவனுக்கு.

அடுத்தநாள் காலை விடிந்ததும், “வெளியூர் போகிறோம். இரண்டு நாட்கள் தங்குகிற மாதிரி இருக்கும். வெளிக்கிடு.” என்றான் தர்சன்.

“நான் வரவில்லை.” என்றாள் இலக்கியா.

புன்சிரிப்புடன் மனைவியை நெருங்கி, அவன் மீதிருந்த கோபத்தில் அழுந்த மூடியிருந்த பட்டான இதழ்களைத் தடவியபடி, “எங்கே போகிறோம் என்று தெரியாமல் அவசரப்பட்டு வாயை விடாதே..” என்றான் முறுவல் மாறாத முகத்துடன்.

முகத்தைத் திருப்பிக்கொண்டாள் இலக்கியா. “எங்கே என்றாலும் நான் வரவில்லை.”

“இன்னும் ஒரு மணித்தியாலத்தில் தயாராகி நீ வருகிறாய்!” என்றவனின் முகத்திலிருந்த முறுவல் மாறாதபோதும் குரலில் கூர்மை ஏறியிருந்தது.

அந்தக் குரலை மீறும் துணிவற்று, இதென்ன சர்வாதிகாரம் என்று பொறிந்தபடி தயாரானாள் இலக்கியா.
 
Last edited by a moderator:

Vishakini

Moderator
Staff member
காரில் கணவனோடு பயணிக்கையிலும் முகத்தை ஜன்னலுக்கு வெளியே திருப்பியபடி வந்தவளின் விழிகள், கார் முல்லைத்தீவை நோக்கிச் செல்வதைப் பெயர்ப்பலகை மூலம் அறிந்ததும் விரிந்தன. கணவன் புறமாகத் திரும்பி, “எங்கே போகிறோம்?” என்று கேட்டாள்.

“எங்கே என்றாலும் வரவில்லை என்று சொன்னவள் இப்போது எதற்குக் கேட்கிறாய்?” சிரிப்புடன் கேட்டான் தர்சன்.

லக்கியின் முகமோ கூம்பிப் போனது. “நீங்கள் ஒன்றும் சொல்லத் தேவையில்லை..” என்றபடி அவள் முகத்தைத் திருப்ப, சிறுபிள்ளைத்தனமான அவளின் கோபத்தில் வாய்விட்டுச் சத்தமாக நகைத்தான் அவன்.

“இப்போ இங்கே என்ன நடந்தது என்று இந்தச் சிரிப்புச் சிரிக்கிறீர்கள்?” முகம் சிவக்க படபடத்தாள் லக்கி.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அவள் தன்னிடம் வாயாடுவதை எண்ணியவனின் மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

“சிரிப்பது ஒரு குற்றமா?” பேச்சை வளர்க்க எண்ணி அவன் கேட்க, அவளோ மௌனத்தைக் குத்தகைக்கு எடுத்தாள்.

“எங்கே போகிறோம் என்று தெரியவேண்டாமா?” மீண்டும் ஆரம்பித்தான் தர்சன்.

“வேண்டாம்!”

“எனக்கு வேண்டுமே! நான் சொல்லியே தீருவேனே!” என்று விளையாட்டாக அடம்பிடித்தான் அவன்.

“உனக்கு மிகவும் பிடித்த இடத்துக்கு. அதுவும் நீ போகவேண்டும் என்று ஆசைப்பட்ட இடத்துக்கு..” என்று அவன் சொல்கையிலேயே, அதுவரை நேரமும் ஊகமாக இருந்த விஷயம் அவளுக்கு உறுதியானது.

“வற்றாப்பளை அம்மன் கோவிலுக்கா?” ஆர்வத்தை அடக்க முடியாது கேட்டாள்.

திரும்பி மனைவியின் ஆர்வம் நிறைந்த முகத்தைப் பார்த்தபடி, “ம்ம்..” என்றான் தர்சன்.

மீண்டும் வீதியில் பார்வையைப் பதித்து, “நாளைக்கு வற்றாப்பளை அம்மனின் வைகாசி விசாகப் பொங்கல்.” என்றான் தர்சன்.

அப்போதுதான் அது அவளுக்குமே நினைவில் வந்தது. மனதில் இருந்த சஞ்சலங்களிலும், வேதனைகளிலும் எல்லாவற்றையுமே மறந்துவிட்டேன் என்று அவள் நினைக்கையிலேயே, “நீ ஆசைப்பட்டது போலவே நீரில் விளக்கு எரியும் அதிசயத்தையும் பார்க்கலாம்.” என்றான் அவன்.

அவன் சொன்னதைக் கேட்டு மனதில் மகிழ்ச்சி மத்தாப்பாய் பூக்கத்தான் செய்தது. ஆனாலும், அதை அவனுக்குக் காட்டிக்கொள்ளாமல் அமைதியாக இருந்தாள் அவள்.

முல்லைத்தீவில் இருந்த உயர்தர ஹோட்டல் ஒன்றின் அறையில் அன்றிரவு தங்கிவிட்டு, அடுத்தநாள் நந்திக் கடலோரத்தில் வீற்றிருக்கும் கண்ணகி அம்மன் கோவிலுக்கு மனைவியை அழைத்துச்சென்றான் தர்சன்.

வற்றாப்பளையில், அண்டமெல்லாம் ஆள்கின்ற ஆதிபராசக்தியின் சொரூபமாய் வீற்றிருந்து அருளாட்சி புரியும் அம்மனைப் பார்த்ததும் ஆறுதலும் பரவசமும் ஒருங்கே தோன்றின இலக்கியாவுக்கு.

கரங்கூப்பிக் கண்களை மூடியவளின் மனமோ, “துணிவோடு பெண் சக்தியாய் எழுந்துநின்று மதுரையையே எரித்த கண்ணகித்தாயே என் வாழ்க்கையைச் சிறக்கச் செய். என் கணவனை எனக்கு மட்டுமே சொந்தமாக்கித் தா..” என்று வேண்டியது.

அமைதியாய் வீற்றிருந்த அம்மனின் இதழ்களில் புன்னகை அரும்பியது. ‘உன் கணவன் உன்னிடம் எப்போதோ வந்துவிட்டான். அதை நீதான் இன்னும் உணர்ந்துகொள்ளவில்லை. என் காலடி தேடிவந்த உன் மனதின் வேதனைகள் அனைத்தும் விரைவிலேயே சூரியனைக் கண்ட பனியென விலகிவிடும்.’ என்று அந்தத் தாய் அருள்பாலித்ததை உணரும் சக்தி அற்றபோதும், இலக்கியாவின் மனதில் அமைதியும் சாந்தியும் குடிவந்தது.

எனவே கணவனின் அருகில் நின்று சந்தோசமாகவே அங்குத் தொடங்கிய பொங்கல் விழாவை பார்க்க ஆரம்பித்தாள். மக்கள் கூட்டம் அவளை நெருக்கும் போதெல்லாம் கைகளால் அவளுக்கு அரண் அமைத்துக் காத்தான் தர்சன்.

அவர்கள் பார்த்துக்கொண்டு இருக்கையிலேயே, மெய் சிலிர்க்கவைக்கும் பறை முழக்கத்துடன், மணிகள் ஒலிக்க, தீர்த்தக்குடத்தைத் தோளில் தாங்கிய ஒருவரை அழைத்து வந்தனர் அம்மனின் பக்தர்கள்.

“கடலில் இருந்து தண்ணீர் எடுத்து வருகிறார்கள். அதைத்தான் தீர்த்தம் என்பார்கள்.” என்று மனைவிக்குத் தீர்த்தக்குடத்தைக் காட்டி விளக்கினான் தர்சன்.

“மெய்யாகவே தண்ணீர் தானா?” நம்பமுடியாத அதிசயத்தோடு அவள் கேட்க, மனைவியைப் பார்த்துப் புன்னகைத்தான் தர்சன்.

“மெய்யாகவே கடல் நீர்தான். ஊரே கூடிப்போய் அம்மனுக்கும் கடலுக்கும் பூசை செய்து எடுத்து வரும் கடல்நீர்தான் அது.” என்றான் அவன்.

‘அது எப்படி நீரில் விளக்கு எரியும்?’ என்கிற கேள்வி அவள் மனதில் எப்போதும்போல் எழுகையிலேயே, அவள் கண் முன்னாலேயே அந்தக் குடத்தில் இருந்த நீரில் விளக்கு ஏற்றப்பட்டது.

இது எப்படிச் சாத்தியம்? என்று அவளின் மட்டுமல்லாத லட்சோப லட்ச மக்களின் கேள்விக்கு அம்மனின் அருள்மழை மட்டுமே காரணம் என்பதுதான் பதிலாக இருந்தது.

அவளது மேனியெங்கும் சிலிர்ப்பு ஒன்று ஓடிமறைய, அதை உணர்ந்துகொண்ட தர்சன் இலக்கியாவைத் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டான்.

அவனது பாதுகாப்பில் நின்றவள் அவனை நிமிர்ந்துபார்த்து புன்னகைக்க, அவனும் அவளைப் பார்த்துப் புன்னகைத்தான். பிறகு கண்களாலேயே அங்குப் பார் என்று காட்ட, அவன் காட்டிய இடத்தைப் பார்த்தவளின் விழிகள் இன்னுமின்னும் வியப்பால் விரிந்தது.

அம்மன் கோவிலின் மரபு முறைப்படி பூசைகள் நடத்தப்பட்டு, ‘வளந்து பானை’ எனப்படும் பொங்கல் பானை அடுப்பில் ஏற்றப்பட்டு நெருப்பு மூட்டப்பட்டது. பொங்கல் பொங்கியபோதும் அந்தப் பானையில் கட்டப்பட்டிருந்த நூலோ, அதன் வாயை சுற்றிக் கட்டப்பட்டிருந்த வெற்றிலைகளோ எரிந்து சாம்பல் ஆகவே இல்லை. அப்படியே இருந்தது. ஆனால், நெருப்பு மட்டும் தகதக என்று எரிந்துகொண்டிருந்தது.

இதெல்லாம் எப்படிச் சாத்தியம்? அதிசயம் என்பதைத் தாண்டி அன்னையின் அருள்தான் என்று உணர்ந்த இலக்கியாவுக்கு மேனியெங்கும் ஒருவிதப் பரவசம்.

அதன்பிறகு கண்ணகியின் வரலாற்றைச் சித்தரிக்கும் பல கூத்துக்களும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது. அதோடு, இலட்சக்கணக்கான அடியவர்கள் காவடி, கரகம், பாற்குடம், தீச்சட்டி ஏந்துதல் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.

எல்லாவற்றையும் பார்த்துவிட்டு மனைவியை அழைத்துக்கொண்டு நந்திக் கடலோரம் நோக்கி நடந்தான் தர்சன்.

“என்னால் இன்னும் நம்பவே முடியவில்லை..” என்றாள் இலக்கியா.

அவளைப் பார்த்து அவன் புன்னகைக்க, “உங்களுக்கு இது அதிசயமாக இல்லையா?” என்று கேட்டாள் இலக்கியா.

“சின்ன வயதில் முதல்முறை பார்த்துவிட்டுப் பலநாட்கள் இதைப்பற்றியே பேசினேனாம் என்று அம்மா சொல்வார். இப்போது அதிசயம் என்பதை விட அற்புதம் என்றுதான் நினைத்திருக்கிறேன். அல்லாவிட்டால் ஒவ்வொரு வருடத்திலும் இன்றைய தினத்தில் மட்டும் இது எப்படிச் சாத்தியம்?” என்று கேட்டான் அவன்.
 

Vishakini

Moderator
Staff member
“ம்ம்.. உண்மைதான். ஆனால் இன்று என்ன விசேசம்?”

“அது.. மதுரையை எரித்த கண்ணகி தெற்கு நோக்கி சென்றாள் என்றும், அப்படி அவள் வரும் வழியில் பத்தாவதாக இளைப்பாறிய இடம்தான் நந்திக் கடலோரமாம். அதனால் பத்தாப்பளை அதாவது பத்தாவது பளை என்று பெயர் பெற்றதாம். அதுவே மருவி பற்றாப்பளை என்றாகி இப்போது வற்றாப்பளை என்று அழைக்கப்படுவதாகச் சொல்வார்கள்.” என்று ஊர் பெயரை விளக்கியவன் தொடர்ந்தான்.

“மூதாட்டி ரூபத்தில் நந்திக் கடலோரம் வந்த கண்ணகி, அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களிடம் தனக்குப் பசிப்பதாகக் கூறி பொங்கல் செய்து தரும்படியும், இருட்டிவிட்டதால் விளக்கு ஏற்றும்படியும் சொல்லியிருக்கிறாள். அந்தச் சிறுவர்கள் விளக்கு ஏற்ற நெய் இல்லையே என்றிருக்கிறார்கள். அதற்குக் கடல் நீரில் ஏற்றும்படி கண்ணகி சொன்னதாகவும், அவ்வாறே செய்த சிறுவர்கள் கடல் நீரில் விளக்கு எரிவதைக் கண்டு மெய்சிலிர்த்து நின்றதாகவும் சொல்கிறது அம்மனின் புராணம். அதை நினைவுகூரும் விதமாகத்தான் இன்று வைகாசி விசாகப் பொங்கலை கொண்டாடுகிறார்கள்.” என்று விளக்கினான் தர்சன்.

கணவன் சொன்னதை அமைதியாக உள்வாங்கிக் கொண்டவளின் மனம் முழுவதும் நிறைந்திருந்தவள் அந்த அம்மனே!

கடல்காற்று முகத்தில் மோத, சற்றே மேடிட்டிருந்த வயிற்றை ஒரு கையால் பற்றியபடி, தன்னருகில் மெதுவாக நடந்துவந்த மனைவியைத் திரும்பிப் பார்த்தான் தர்சன். மலர்ச்சியோடு இருந்த முகத்தில் களைப்பும் இருப்பதைக் கண்டுவிட்டு, கடற்கரையில் ஓரிடத்தில் அவளை அமர வைத்துவிட்டு, “ஏதாவது குடிக்க அல்லது சாப்பிட வாங்கி வருகிறேன். இங்கேயே இருக்கிறாயா?” என்று கேட்டான்.

அவள் தலையை ஆட்டவும், “இங்கேயே இரு..” என்றுவிட்டு திரும்பி கோவில் பக்கமாக நடந்தான் தர்சன்.

செல்லும் கணவனையே பார்த்துக் கொண்டிருந்தவள், “வெகு தூரம் போய்விடாதீர்கள்.” என்றாள் சத்தமாக.

அவளைத் திரும்பிப்பார்த்து தலையை அசைத்துவிட்டுச் சென்றான் அவன். அங்குக் கடல் நீரில் கால்களை நனைப்பதும், நல்ல உடைகளோடு இருக்கிறோமே என்கிற எண்ணமே இல்லாமல் கடற்கரையில் விழுந்து புரண்டு விளையாடுவதுமாக இருந்த குழந்தைகளை இதழ்களில் பூத்த புன்னகையோடு பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள் இலக்கியா.

எங்கள் குழந்தையும் பிறந்தால் இப்படித்தான் இருக்கும் போல என்று எண்ணியவளின் மனக்கண்ணில், கணவனைப் போலவே ஒரு குட்டிக் குழந்தையைக் கண்டபோது பரவசமாக இருந்தது.

குழந்தையின் நினைவிலேயே மூழ்கிக் கிடந்தவளின் விழிகளில், தூரத்தில் கம்பீரமாகக் கால்களை எட்டிப்போட்டு அவளை நோக்கி நடந்துவரும் அந்தக் குழந்தையின் தந்தையின் பிம்பம் விழ, மனம் மயங்கியது.

வெள்ளை வேட்டி கட்டி, அதே வெண்மையிலேயே அணிந்திருந்த சட்டையின் முதல் இரண்டு பட்டன்கள் திறந்து கிடக்க, முழுக்கைச் சட்டையின் கைகள் முக்கால்வாசிக்கு மடித்து விடப்பட்டிருக்க, உறுதியான மணிக்கட்டில் அகன்ற கருப்புநிற கைக்கடிகாரத்தைக் கட்டியிருந்தான். கால்புதையும் கடற்கரை மணலில் நடப்பதற்கு இலகுவாக வேட்டியின் கீழ்முனையை அந்தக் கையால் பற்றியபடி கம்பீரம் குன்றாது நடந்து வந்தவனின் கட்டழகு அவள் மனதில் கல்வெட்டாய்ப் பதிந்தது. போதாக்குறைக்குக் கடற்கரை காற்றின் புண்ணியத்தில் அவன் நெற்றியில் மோதிவிளையாடிய முன்னுச்சி முடிக்கற்றைகளும், கீற்றாய் இடப்பட்டிருந்த திருநீறு சந்தனமும் வேறு கண்களையும் மனதையும் களவாடியது.

வைத்தவிழி வாங்காது தன்னையே பார்த்துக்கொண்டு இருந்தவளை, அங்கிருந்து வரும்போதே கவனித்துவிட்ட தர்சனின் இதழ்களில், உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் புன்முறுவல் மலர்ந்தது. அருகில் வந்ததும் கண்களில் குறும்பு மின்ன கேள்வியாக ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கினான்.

என்ன சொல்வாள்? உன் கம்பீரமான தோற்றம் என்னை மயக்குகிறது என்றா? மனம் தடுமாறப் பார்வையைத் திருப்பிக்கொண்டாள் இலக்கியா.

முறுவல் விரிய மனைவியின் அருகில் அமர்ந்து குடிக்க வாங்கிவந்த குளிர்பானத்தை அவளிடம் நீட்டிவிட்டு, அவள் காதருகில் குனிந்து, “பிடித்திருக்கிறதா?” என்று ரகசியமாகக் கேட்டான் தர்சன்.

பாதிச் சிரிப்பும் பாதி வெட்கமுமாக நிமிர்ந்து அவனைப் பார்த்தவளின் விழிகள் இதென்ன கேள்வி என்று அவனிடம் கேட்டது. அதைப் புரிந்துகொண்டவன் கண்ணைச் சிமிட்டி, “இல்லை.. இமைக்காமல் என்னையே பார்த்துக்கொண்டு இருந்தாயே.. அதுதான் பிடித்திருக்கிறதா என்று கேட்டேன்..” என்று மேலும் வம்பு வளர்த்தான் அந்தக் கள்ளன்.

இலக்கியாவுக்கு மேலும் மேலும் சிரிப்புத்தான் பொங்கியது. அதை அடக்கிக்கொண்டு, “சும்மா இருங்கள். யாரின் காதிலாவது விழுந்தால் என்ன நினைப்பார்கள்..” என்றாள் மழுப்பலாக.

“என் பெண்டாட்டியிடம் என்னைப் பிடித்திருக்கிறதா என்று நான் கேட்பதைப் பற்றி எவன் என்ன நினைக்க இருக்கிறது.” என்று விளையாட்டாகச் சொன்னவன் தொடர்ந்து, “நீ வாயால் சொல்லாத பதிலை உன் கண்கள் என்னிடம் சொல்லிவிட்டது..” என்றான் துள்ளலான குரலில், அவளைப் புரிந்து கொண்டவனாக.

அவள் மனதை அவளாகச் சொல்லாமலேயே புரிந்துகொண்டிருக்கிறான் என்று நினைக்கையில் துள்ளிய உள்ளம், உன்னைத்தான் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று நினைத்ததும் வாடியது.

ஒன்றுமே சொல்லாமல் அங்குத் திரண்டு நின்ற ஜனத்திரளை வேடிக்கை பார்ப்பதுபோல் காட்டிக்கொண்டாள் இலக்கியா.

அன்றைய அவர்களின் பொழுது அங்கேயே கழிய அடுத்தநாளும் மனைவியோடு ஊரை சுற்றித் திரிந்தவன் அதற்கு அடுத்தநாள் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

வீட்டுக்கு வந்ததும் மீண்டும் அவள் நெஞ்சம் கண்டதையும் எண்ணி தவிக்கத் தொடங்கியது.

அதை உணராத தர்சன் தன்னால் இயன்றவரை அவளைக் கவனித்துக்கொள்ள, அவளோ எதையும் யாரிடமும் வாய்விட்டுச் சொல்ல இயலாமல் மனதோடு போராட என்று நாட்கள் நகர்ந்தன.

ஒருநாள் காலையில் எப்போதும்போல மனைவியைக் கவனித்துவிட்டு தர்சன் வேலைக்குச் செல்ல, அவன் சென்ற சிறிது நேரத்திலேயே வந்திறங்கினார் மகேஸ்வரி. கூடவே வெண்பாவும்!
 
Top Bottom