குட்டிப்பாப்பா மட்டுமா தனக்காக ஏங்குகிறது? அதன் அம்மாவும் தான் ஏக்கத்திலும், விரகத்திலும் தன் மனதுக்குள்ளேயே காந்தர்வ திருமணம் செய்து கொண்ட காதல் மணாளனுக்காக தவிக்கிறாள். ஏனடா அவரை பார்த்தோம் என்று அவள் நினைக்காத நாள் என்று ஒன்றும் இல்லை. வித்யாசாகரை அவ்வளவு காதலிக்கிறாள். எவ்வளவு என்றால் தன்னையே அவரிடம் தரும் அளவுக்கு. அவரது உயிரை தனது வயிற்றில் ஏந்தும் அளவுக்கு.
இதோ இன்று அந்தக் காதல் அவளிடமிருந்து தனியே பிரிந்து நின்று அவளை கலங்க செய்கிறது.கேள்விகள் கேட்கிறது. விலகி சென்று அவளை அழ வைக்கிறது. அட போடா மாதவா! என்ன காதலோ,என்ன கத்திரிக்காயோ!என்று அவளது தம்பி அடிக்கடி கிண்டல் செய்வது உண்டு.அப்போதெல்லாம் வயிறை பிடித்துக்கொண்டு சிரித்த நிமிஷங்கள் இப்போது சாகம்பரியை பார்த்து சிரிக்கிறது.
வித்யாசாகர் வாழ்விலும் நிறைய மாற்றங்கள்.பெண் என்று அவர்கள் வீட்டில் பேச்சு எடுத்தாலே அவருக்கு சாகம்பரியின் நினைவு தான் வருகிறது. தன்னை விட்டு விலகி காதலனுடன் சென்ற மனைவியை பற்றி கொஞ்சமும் அவருக்கு அக்கறையோ, உண்மையில் ஞாபகமோ இப்போது துணி கொண்டு துடைத்து விட்டது போல இருக்கையில் சாகம்பரி அவரது மனதை ஆட்டி வைக்கிறாள்.
அவளை பார்க்கவேண்டும் போல ஒரு வேகம் . பார்வையுடன் அவர்களது போக்கு நிற்குமா என்றால் விடை நிச்சயம் "நோ " தான். அதற்கும் மேலே செல்லத்தான் விருப்பம் கொண்டிருந்தார்.
அதற்கும் மேலே செல்லத்தான் விருப்பம் கொண்டிருந்தார். இருவருக்குமான அந்தரங்க தருணங்களை யோசித்து உருகிக்கிடப்பதே தனிமையின் வேலை ஆயிற்று.
அறையில் இரவு படுக்கையில் அமர்ந்துகொண்டு தனது தனிப்பட்ட மடிக்கணினியை இயக்கியவர் ,அவருக்கு வந்திருக்கும் பிரத்யேகமான மெயில்களை பார்த்துக்கொண்டிருந்தார். சுந்தரிடமிருந்து அவர்களது ஹோட்டல் சம்மந்தமான கடந்த மூன்று மாதங்களுக்கான வரவு செலவு கணக்குகள், ஆடிட்டரிடமிருந்து வந்திருந்த ரிப்போர்ட் ஆகியவற்றை அனுப்பியிருந்தான்.
அதை பார்த்தவனுக்கு ,அங்கே முதன்முதலில் சாகம்பரியை சந்தித்தது நினைவுகளில் வந்தது. மேற்கொண்டு மெயில்களை படிப்பதை விடுத்து,அவர்கள் இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை பார்ப்பதில் நுழைத்துக் கொண்டார்.
இருவரும் சேர்ந்திருந்த மாதங்களில் எப்படியும் மாதத்தின் ஒருமுறையாவது எங்காவது வெளியே சென்றுவிட்டு வருவார்கள். இருவரும் ஒருமுறை ஹம்பி சென்றுவிட்டு வந்திருந்தார்கள். இன்னொரு முறை சாகம்பரி ஏதோ ஒரு காரணத்திற்க்காக மூன்று நாட்களுக்கு விடுப்பு எடுத்திருந்தாள். அவளை அந்த வேலையை செய்யவிடாமல் கிளப்பிக்கொண்டு கோவாவுக்கு வந்துவிட்டார் வித்யாசாகர். அங்கே கோவாவில் அவள் சிணுங்கல்கள் அதிகமாக கேட்டது. இரண்டு நாட்கள் பறந்து சென்றது.
இருவருமாக அவ்வளவு புகைப்படங்களை ,சுயமியை அவரது அலைபேசியில் கிளுக்கிக் கொண்டார்கள். வித்யாசாகருக்கு ஆவலுடன் இருப்பது கொஞ்சமும் திகட்டவில்லை. அதற்குப் பிறகுவந்த நாட்களில் இருவருமே உறவின் அடுத்த நிலைக்கு வந்துவிட்டதை உணர்ந்த தருணங்கள் தான்.
வித்யாசாகருக்கு சாகரிப் பெண் என்னவோ அவருக்காகவே பிறப்பெடுத்ததை போல உணர்ந்தார். அவளை தினமும் அன்பில் குளிப்பாட்டினார். சுகமாக சாகம்பரி அவருக்குள் மூழ்கினாள்.இவ்வளவுக்குப் பின்னும் ஏனோ அவளை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அவருக்குத் தோன்றவில்லை.
அவள் விட்டு செல்வதற்கு ஒரு வாரம் முன்பு அவள்," வித்யா.. நாம் கல்யாணம் செஞ்சுக்கலாமே. லைஃப் நல்லாவே போகும்ன்னு எனக்கு தோணுது. வாட் யு பீல்?" அவளது திருமணம் பற்றிய எதிர்ப்பார்ப்பு அவருக்கு வினோதமாக இருந்தது.
"இப்போ நாம வாழுற வாழ்க்கைல என்ன குறையுது?இதுக்குத்தான் நா முன்னாடியே சொன்னேன்.எனக்கு இந்த லிவ் இன் எல்லாம் ஒத்து வராதுன்னு. ஏற்கனவே நம்மோட ஏஜ் டிபேரென்ஸ் எனக்கு டிஸ்டர்ப் ஆகுது. ஏற்கனவே ஒருமுறை நா கல்யாணம் செஞ்சு அடிபட்டாச்சு.அப்பட்டமா ஏமாற்ற பட்டிருக்கேன்.இப்போ திரும்ப... ஐ டோன் க்னோ வாட் டு சே ".அவரது வார்த்தைகளின் நடுக்கமும்,அதில் இருக்கும் உறுதியும் சாகம்பரியை ஏதோ செய்தது.
அதற்க்கு மேல் திருமணம் பற்றி அவள் எதுவும் பேசவும் இல்லை.கேட்கவும் இல்லை. பழைய நினைவுகளில் வித்தியாசகரின் முகம் சுருங்கிப்போனது. அவள் கேட்டதை நான் மறுத்திருக்க கூடாது. பிறகு இருவருக்குள்ளும் ஏதோ திரையிட்டது போல ஒரு ஒட்டாத தன்மை. இருவருக்குள்ளும் எபப்டி உருவானது என்று தெரியவில்லை.
ஆரம்பத்திலேயே திருமணம் செய்து கொள்ள வாய்ப்பு இல்லை என்றுதான் வித்யாசாகர் சொல்லிவிட்டாரே. இப்போது என்ன புதியதாக என்று பெண் அவள் தன்னையே கேட்டுக்கொண்டாள்.தனக்கே சொல்லிக்கொண்டாள்.சாதாரணமாகத்தான் இருந்தாள்.அல்லது இருப்பதாக காட்டிக்கொண்டாள்.
அந்த நாளுக்குப் பிறகு வித்யாசாகரை தன்னைத் தொட அவள் அனுமதிக்கவில்லை. "ஸாரி வித்யா..எனக்கு சுத்தமா இன்னிக்கு மூட் இல்ல.கொஞ்சம் கேப் எடுப்போமே. எனக்கு கொஞ்சம் அனீஸியா இருக்கு.இன்னிக்கு வேலை அதிகம்.சுத்தமா முடியல "என்று காரணங்களை அடுக்கினாள்.
தான் திருமணம் பற்றிய எண்ணத்தை இன்னமும் மாற்றிக்கொள்ளாதது அவளுக்கு மனதுக்கு கஷ்டமாக இருந்திருக்கும் என்று புரிந்துகொண்டு கொஞ்சம் விலகியிருக்க முயற்சி செய்தான் வித்யாசாகர். அது எவ்வளவு கடினமாக இருந்தது என்று சொன்னால் புரியாது.
திரும்பவும் அவளிடம் பேசினார்," ஏன்டாமா ..நாம இப்போ கல்யாணம் செஞ்சுக்கமாயும் ஹாப்பியாதான இருக்கோம். பிறகு என்ன?என்னால உன்னை விட்டு விலகி இருக்க முடியல. ட்ரஸ்ட் மீ. நா உன்னை எப்பவுமே விடற ஐடியா இல்லை. இப்படியே நம்ம லைஃப்பை லீட் பண்ணுவோம். "
அவரது வார்த்தைகளின் பிரதிபலிப்பாக அவள் முகத்தில் ஒரு புன்னகை கீற்று.அதன் பிறகு எல்லாம் சரியாகிவிட்டது போலத்தான் இருந்தது.இருவருக்குமான இரவுகள் நீண்டது போல இருந்தது.ஒருவரை விட்டு ஒருவரால் விலகி இருக்க முடியவில்லை.
ஏதோ ஊழிக்காலம் போல பெண்ணிடம் அப்படி ஒரு வேகம் . வித்யாசாகரை பிடிவாதமாக சாகரி தனக்குள் சுழற்றிக்கொண்டாள்.
மோகத்தின் ஆழத்தில் வித்யாசாகர் தன்னை தொலைத்திருந்த தருணங்கள். சட்டென ஒருநாள் அந்த மோகத்தை அறுக்கும் கத்தியாக அவளது வார்த்தைகள்.
" நா என்னோட பேரண்ட்ஸ், அண்ட் தம்பிய மிஸ் பண்றேன்.அவங்ககிட்டயே போகப்போறேன்'.எந்த உரிமையும் அவளை தடுப்பதற்கு இல்லாத நிலையில் சரி என்று ஒப்புக்கொள்வதை தவிர வேறு வழி இருக்கவில்லை.
சாகம்பரி அவரது அடுக்ககத்திலிருந்து தனது பெட்டி படுக்கையை கட்டிக்கொண்டு கிளப்பிவிட்டாள்.அதற்குப்பிறகு தினமும்தான் எத்தனையோ பெண்களை சந்திக்கிறார். அவரிடம் அதற்க்கான எந்த தாக்கமும் இல்லையே! ஒன்று அவருக்கு நன்றாகவே புரிகிறது.திருமணம் என்றதற்கு தான் மறுத்த பிறகு அவள் தன்னை சுதாரித்துக்கொண்டு சாதாரணமாக இருக்க எவ்வளவோ முயற்சி செய்ந்திருக்கிறாள்..முடியாது இனி என்ற பிறகு பிரியும் முடிவை எடுத்திருக்கிறாள்.
அவள் திருமணத்திற்கு கேட்டதே தனது மகளுக்கான அங்கீகாரத்திற்காகத்தான் என்று தெரியும்பொழுது வித்யாசாகர் என்ன செய்யப் போகிறார்?
அவர் வீட்டிலும் திருமணம் சம்மந்தமாக கெடுபிடிகள் அதிகமாகிவிட்டது. யாரோ ஒரு பெண்ணுடன் தனியாக தங்கியிருக்கும் மகனை வித்யாசாகரின் பெற்றவர்கள் அறிவார்கள்.அவரது சித்தப்பா ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தைக் கொண்டு கண்காணித்ததில் சாகம்பரி பற்றிக் கிடைத்த தகவல்கள் அவரை நெற்றியை சுருங்க வைத்தது என்றால் வித்யாசாகரின் பெற்றவரை ஆச்சர்யம் கொள்ள வைத்தது.
"இப்படி நல்ல குடும்ப பின்னணி இருக்குற பொண்ணு. நல்ல கட்டுக்கோப்பான ஆர்தடாக்ஸ் பாக்கிரௌண்ட். இந்தமாதிரி கல்யாணம் செஞ்சுக்கமா ரிலே ஷன்ஷிப்ல இருக்குறது எப்படி சாத்தியம்.பணத்துக்காக வந்ததாகவும் தெரியல. வித்யாகிட்டயிருந்து பணம் ,நகைன்னு எதுவும் வாங்கிக்கவும் இல்ல. இன்னமும் நண்பனோட ஹோட்டல்ல வேலைதான் பாக்குறா. ஏன் இப்படி ?என்றுதான் இருந்தது பெரியவர்களுக்கு.
இன்னொரு பெரிய ஆச்சர்யம்,எந்த பெண்ணையும் வேறு கண்ணோட்டத்தில் பார்க்காத ,திருமணம் முடிந்தும் கட்டை பிரம்மச்சாரியாக வளம் வந்து கொண்டிருந்த தங்கள் மகனை அந்த பெண் எப்படி தன்னிடம் மசிய செய்தாள், என்பதும் இருவருக்குமான வயது வித்தியாசமும் ஆச்சர்யங்களின் உச்சம்.தங்கள் மகன் ஆணழகன் என்பது தெரியும்தான்! ஆனாலும்,இதெல்லாம் டூ மச் .கொஞ்சம் வயது வித்யாசமாவது குறைவாக இருந்திருந்தால் பரவாயில்லை என்று எண்ணாமல் இருக்கமுடியவில்லை.
வித்யாசாகரின் அம்மா தான் சொன்னார்," இந்தப்பொண்ணு பரவாயில்ல போலிருக்கு.எப்படியாவது வித்யாவை கல்யாணம் செஞ்சுகிட்டு, அவனை பிள்ளை குட்டியோடு வாழவைத்தால் சரி என்று. கேட்டுக்கொண்டிருந்த வித்யாசாகரின் சித்தி வாய்விட்டு சிரித்தே விட்டார். எல்லோருக்குமே வித்யாசாகரின் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்ததும் அவன் திருமணமே வேண்டாம்.பெண் துணை பெரும் சாபம் என்று நின்று விட்டது எல்லாம் குடும்பத்திற்கே சாபம் போல இருந்தது. அவனுக்கு பிறகு பிறந்த வீட்டின் பிள்ளைகள் கடைக்குட்டி முதற்கொண்டு அனைவருக்குமே திருமணம் முடிந்து குழந்தைகள் குடும்பம் என்று இருக்கையில் இவன் தனித்திருப்பது பெரும் மன அழுத்தத்திற்கு அவனது பெற்றவர்களை தள்ளியிருக்க அதன் வெளிப்பாடுதான் ,மேற்கண்ட அவன் அம்மாவின் பேச்சு. அவர்களை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
வித்யாசாகரின் வீட்டிலும் அவரது ஜாதகத்தை எடுத்துக்கொண்டு வீட்டுப்பெரியவர்கள் ஜோசியரை நோக்கி படையெடுத்தார்கள். கையில் ஒரு சில ஜாதகங்களை பொருத்தம் பார்ப்பதற்காக என்று எடுத்துக்கொண்டு இருந்தார்கள். ஜோசியர் வித்யாசாகரின் ஜாதகத்தை கூட்டிக்கழித்து பார்த்துவிட்டு,"இந்த ஜாதகருக்கு ஏற்கனவே ரெண்டு முறை கல்யாணம் முடிஞ்சு மூணு இல்ல நாலு வயசுல குழந்தை இருக்குமே. ரெண்டாவது கல்யாணம் செஞ்ச பெண்ணும் இப்போ இவரோட இல்ல. திரும்பவும் கல்யாணத்துக்கு பாக்க போறீங்களா?" என்று பெரிய சைசில் வெடிகுண்டை வெடிக்கவிட வித்யாசாகரின் அம்மா நெஞ்சில் கை வைத்து அமர்ந்துவிட்டார். அங்கிருந்தவர்கள் அனைவருக்குமே குழந்தையா...இதைப்பற்றி வித்யாசாகரிடம் எப்படி விசாரிப்பது என்றுதான் இருந்தது.
சென்னையில் மதிய உணவுக்காக அலுவலக உணவு அறையில் லன்ச் பாக்ஸ்ஸை திறந்தவளின் பார்வை அவர் அணிவித்திருந்த மோதிரத்தின் மீது விழுந்தது. இரண்டு கரங்கள் ஆரத்தழுவி கொண்டிருப்பது போல, அதன் இரண்டு பக்கங்களிலும் வைர கற்கள் பதிக்கப் பட்டிருந்தது. இருவரும் ஒன்றாக வாழ ஆரம்பித்த முதல் நாளில் அவர் இவளுக்கு அணிவித்து விட்டது.அதற்குப் பிறகு அவர் எந்த பரிசு பொருட்களும் கொடுக்கவே கூடாது என்று தீர்மானமாக சொல்லிவிட்டாள்.
திருமணம் இல்லாத உறவா..நானா..என்று தவித்துக் கொண்டிருந்த மனதுக்கு நிஜத்தில் அந்த மோதிரம் ஆறுதல்தான்.அதை தாங்கள் இருவருக்குமான உறவுக்கான அங்கீகாரமாகத்தான் அவள் பார்த்தாள்.அதை அவரிடம் சொன்னதில்லை.
மதியம் தனது உணவை சாப்பிட்டுக்கொண்டிருந்த வித்யாசாகருக்கு புரை தட்டியது. அவள் சென்ற பிறகு இப்படித்தான் அடிக்கடி நிகழ்வது. அவள்தான் தன்னை நினைத்து கொண்டிருக்கிறாள் என்று லேசாக புன்னகை பூத்தவாறே கடந்து விடுகிறார்.அவர் மனதில் பெண்ணவள் இப்போது எப்படி இருக்கிறாளோ..ஒருவேளை திருமணம் முடிந்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டார். அந்த நினைப்பே நெஞ்சில் முள் ஏறியதைப் போல உணர்வை தோற்றுவிக்க உணவை வைத்துவிட்டு எழுந்துவிட்டார். நெஞ்சுவரை கசப்பு இறங்கியது.