அத்தியாயம் 24 , 25 & 26

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ரோசி கஜன்

Administrator
Staff member
Nov 11, 2018
1,719
1,113
113
“சாப்பிட்டுட்டன் ஸ்வீட்டி, கெதியா வாங்கோ, அப்பா வந்திரப் போறார்!” மடமடவென்று தண்ணீரைப் பருகியபடி சொன்னாள், லாதி.

“இந்தா...தம்பியனும் சாப்பிட்டுட்டார்; வாய் கழுவிட்டு சரசுப் பாட்டிட்ட குடுத்தா கொஞ்ச நேரத்தில பால் குடுத்துப் படுக்க விடுவார்.” எழுந்தாள், கயல்விழி.

“அந்தத் தம்பி பார்சலக் கூடப் பிரிக்கேல்ல எண்டுறீங்க. கொஞ்ச நாள்ப் போக அவரே எடுத்துப் பாப்பார் தானே? நீங்க ஏன் அந்த வேலைக்குப் போறீங்க? வீண் சோலி பாக்கிறீங்க சொல்லிட்டன்.” சரசு, காயுவின் சொந்தச் சித்தி; ஒரே மகன் திருமணத்தின் பின்னர் தனியாக இருந்தவர், பூபாலனுக்கும் குழந்தைகளுக்கும் உதவியாக இருக்கும் அதேவேளை தன் தனிமையையும் விரட்டலாம் என்று வந்துள்ளார்.

“இல்ல ஆன்ட்டி, தங்கட பத்தாவது அனிவர்சரிக்கு இப்பிடியொரு ஃபோட்டோ பிரேம் செய்து இவேட அப்பாக்கு பரிசாக் குடுக்க வேணும் எண்டு காயா சொல்லி இருந்தா. நானும் அவவும்தான் ஃபோட்டோஸ் செலக்ட் செய்தம். அதெல்லாம் ஃபிரேமில எப்படி வந்திருக்கு எண்டு பாக்க ஆசையாக் கிடக்கு. அனிவர்சரி அண்டு, இரண்டு மாசங்களுக்கு முதல் வந்தது அப்பிடியே கிடக்கு. காயு சொன்ன மாதிரியே அவேட பெட் ரூமில கொழுவி விடுவம்.” என்றபடி, குழந்தையைப் ‘ப்ளே பென்’னில் விட்டவள், “ஃபோட்டோ கொழுவீட்டு வந்து பால் எடுத்துத் தாற ன்.” என்று முடித்தாள்.

“கூட மாட உதவிக்கு எண்டுதானே வந்து நிக்கிறன். அவன நான் பாக்க மாட்டனா? நான் குடுத்தாத் தான் வடிவா சாப்பிடுவான், நான் குளிக்க வச்சாத்தான் குளிப்பான், நான் தூங்க வச்சாத்தான் தூங்குவான் எண்டு அடுக்காதேயும் பிள்ள!” சரசு, சற்றே எரிச்சலோடு சொல்லிக்கொண்டுபோக, கயல் பார்வை அவர் முகத்தில் மோதித் தரித்து நின்றது.

“என்ன பாக்கிறீர்? அண்டைக்குக் குளிக்க வைக்கேக்க தொட்டிக்க விழ விட்டீங்க எண்டு தானே? அது நீர் பழக்கின பழக்கத்தில பெடி ஒரு இடத்தில நிண்டு குளிச்சாத்தானே? என்ன இருந்தாலும் இன்னும் கொஞ்ச நாளில நீர் போயிருவீர் எல்லா? எல்லாத்துக்கும் உம்மில தங்கி இருந்து போட்டு பிறகு அவே எப்படிச் சீவிக்கிறது?”

இங்கு வந்ததில் இருந்தே, அவள் சிறிது காலத்தில் போக வேண்டியவள் என்பதைச் சொல்லிக் காட்டாது இருக்க முடியவில்லை, சரசுவால். சுருக் சுருக் என்று தைக்கும் வகையில் கதைத்துவிடுவார். இந்த வீட்டுக்கு நீ மேலதிகம் என்ற மாதிரியே நடப்பவர், கயல்விழியின் இருப்பை இங்கு விரும்பவில்லை என்பதை வெளிப்படையாகவே காட்டுகிறார்.

கயல் முகம் கன்றிச் சிறுத்திட்டு. அதேநேரம், அன்று ஆதித் தண்ணீர்த் தொட்டிக்குள் விழுந்து நெற்றி புடைக்க அழுத காட்சி நினைவில் வந்து போயிற்று.

‘பச்! அவா என்னவும் சொல்லட்டும், நாம நம்மட வேலயப் பாப்பம்.’

“நீர் சாப்பிடவும் இல்ல என்ன? வேலையும் இருக்கல்லோ? இதுகள விட்டுப்போட்டு உம்மட சோலிகளப் பாருமன். உம்மட நல்லத்துக்குத்தானே சொல்லுறன்.”

“அது தொடங்க இன்னும் அரைமணித்தியாலத்துக்குக் கூடவே இருக்கு.” என்று மட்டும் சொல்லிக்கொண்டு நகர்ந்து விட்டாள், அவள். சேர்ந்து செல்ல துள்ளி ஆர்ப்பரித்தான் குழந்தை. அவனுக்கு டாடா காட்டிக்கொண்டே கயல்விழியைத் தொடர்ந்தாள், லாதி.

பேஸ்மென்டில், சாப்பாட்டு மேசை மீதிருந்தது, அப் பார்சல்.

“நான் பிரிக்கிறன் ஸ்வீட்டி!” லாதியும் பிடித்துக்கொள்ள, அங்கு கிடந்த சோஃபாவில் அமர்ந்து சேர்ந்தே பிரிக்கத் தொடங்கினார்கள்.

கயல்விழியின் விரல்களில் மெல்லிய நடுக்கமோடியது. இக்கணம் தான் செய்வது சரியான செயலா என்ற ஐயமேற்பட்டது. காரணம், லாதியின் முகத்தில் அதுவரை இருந்த ஆர்வம் போயிருந்தது. அந்த இடத்தை பதற்றமும் தவிப்பும் கைப்பற்றியிருந்தன. விழிகளில் உதடுகளில் என, மீண்டிருந்த இயல்பான துறுதுறுப்பும் மலர்வும் மறைந்திருந்தன.

‘ஆறிக்கொண்டு வாற இரணத்தைக் கிளருகின்றேனா?’ என்ற எண்ணம், கயல் மனதில் முணுமுணுப்பாகச் சுற்றிவரத் தொடங்கியிருந்தது. அதேநேரம், பட்டாம்பூச்சியாக, குடும்பத்தின் உயிர்ப்பாகச் சுற்றித்திரிந்த காயுவின் அடையாளங்கள் அனைத்தும் இங்கு எப்பவுமே இருக்க வேண்டும் என்றது உள்ளம். சிறுவயதில், மனவாழத்தில் படிந்துவிட்ட ஏக்கம், தம் வீட்டில் தாயின் அடையாளங்களைத் தேடி ஏமாற்றமடைந்த உணர்வு, என்றைகாவது ஒரு கணமாவது லாதிக்கு அப்படி நிகழ்ந்துவிடக் கூடாதென்று தீர்மானமாக நினைத்திட்டு.

“அம்மா ஆஆஆ!” கண்ணாடி மீதிருந்த வெள்ளை டிசுவை அகற்றிய லாதி அப்படியே ஃபோட்டோ மீதே கவிழ்ந்து விட்டாள்.

கயல்விழியும் அசைவற்றுத்தான் போனாள். சட்டென்று சிறுமியை ஆறுதல் படுத்த முடியவில்லை.

ஒரு குடும்பத்தின் பத்து வருட வாழ்கையைத் தன்னுள் அடக்கிக் கொண்டு, கண்ணைக் கவரும் வகையில் தான் அமைந்த பெருமிதத்தில் இருந்தது, அப் புகைப்படங்கள் அடங்கிய கண்ணாடிச் சட்டம்.

“குஞ்சு...” ஒற்றைக் கையால் லாதியை எழுப்ப முயன்று தோற்றவள் அப்படியே விலகி எழுந்தாள்.

“நாம இப்பப் போயிட்டு பிறகு வந்து பாப்பம் வாங்க.” சிறுமியைத் தூக்க முனைந்தாள்.

“நோ இல்ல...நான் அழேல்ல!” விம்மலை அடக்க முயன்றாள், லாதி. பார்வை மட்டும், ‘விலகேன்’ என்ற அடத்தோடு புகைப்படங்களில் அலைந்து திரிந்தது.

“அம்மாவப் பாக்க வேணும் போல இருக்கு... ஸ்வீட்டி!” அவளைக் கட்டிப் பிடித்து அழ, கயலாலும் தன்னைக் கட்டுப்படுத்திட முடியவில்லை

யார் யார் என்ன ஆறுதல் சொல்லிவிட்டாலும் பிஞ்சு உள்ளத்தில் அழுந்தப் படிந்த வலியும் ஏக்கமும் அவ்வளவு இலகுவில் மறையுமா என்ன? காலமே துணை!

சிறுமியை அணைத்தபடி அமர்ந்து, முகத்தை நிமிர்த்தி மென்மையாகக் கண்ணீரைத் துடைத்து விட்டாள்.

“எங்கட செல்லக் குட்டி எல்லா! இப்பிடி அழுதா இப்ப அப்பா வந்து, ‘உன்ன ஆர் இதையெல்லாம் எடுக்கச் சொன்னது?’ எண்டு எனக்கு ஏசப்போறார்.” முழியை உருட்டி பூபாலன் போல் கதைக்க, கண்ணீரோடு சிரித்தபடி அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள், லாதி.

“நான் அவர ஏச விட மாட்டன், பயப்படாதீங்க!” அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டபடி சொன்னவளை இறுக அணைத்துக்கொண்ட கயலின் விழிகளால் துயர் உருண்டது. பார்வை, புகைப்படத்தை நாடியது. அதிலிருந்து காயு தம்மையே பார்த்திருக்கும் உணர்வு பரவியது. இமைக்க மறந்த விழிகள் அப்படியே அப்புகைப்படத்தில் ஒட்டி நின்றன.

மனதில் என்ன என்னவோ உணர்வுகள். அவளுக்கே அவளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அதுவே, ‘நான் இங்க இருக்குமட்டும் உம்மைப் போல அம்மாவாக இருக்க ஏலாட்டியும் என்னால இயன்ற மட்டும் அம்மா எண்டு பிள்ளைகள ஏங்க விடாமல் பாப்பன், காயு!” விழிகள் கரைதட்ட, மனம் முணுமுணுத்துக் கொண்டது.


 

Author: ரோசி கஜன்
Article Title: அத்தியாயம் 24 , 25 & 26
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.