• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உந்தன் நெஞ்சில் உயிராக 11

STN - 03

Member
Staff member
உந்தன் உயிராக 11

வீட்டிற்குள் வந்த ராஜேந்திரன் தன்னை மோதியதுகூட தெரியாது வேகமாக வெளியேறும் திகழையே பார்த்தபடி நின்றுவிட, மகனின் பின்னே வந்த கல்யாணி தன்னுடைய அண்ணனைப் பார்த்ததும் தொண்டையை செருமினார்.


"வாங்ண்ணா!" என்றழைத்த கல்யாணியின் குரலில் பார்வையை திருப்பி வீட்டிற்குள் வந்தார் ராஜேந்திரன்.

"சட்டுன்னு நெடு நெடுன்னு வளர்ந்துபுட்டான்" என்று திகழைப்பற்றி பேசியவராக ராஜேந்திரன் இருக்கையில் அமர,

"என்னங்ண்ணா திடீர்னு?" என்றவாறே அவரின் எதிரில் அமர்ந்தார் கல்யாணி.

"மாப்பிள்ளை இல்லையாம்மா?" என்று ராஜேந்திரன் கேட்க,

"என்ன விசயமாங்ண்ணா?" என்றார் கல்யாணி.

"எல்லாம் தெரிய வேண்டிய விசயத்தை தெரியப்படுத்தனுமே" என்ற ராஜேந்திரன், "உன்ற அண்ணி அங்க தெவசம் பண்ணிக்கிட்டு இருக்கா. அதான் அவளுக்கும், உன்ற புருஷனுக்கு மட்டும் உண்மையை சொல்லிப்புடுவோம்" என்றார்.

அவர் சொல்லி முடித்ததுதான், அங்கு முற்றத்தில் வைத்திருந்த பூந்தொட்டியை எடுத்து ராஜேந்திரன் தலைமீது போட வந்துவிட்டார் கல்யாணி.

"அய்யோ கல்யாணி என்ன பண்ற?" என்று ராஜேந்திரன் சுதாரித்து தொட்டியை பிடுங்கி கீழே வைத்தார்.

"என்ன உண்மை... எந்த உண்மை" என்று கேட்ட கல்யாணி, "அதெல்லாம் ஒண்ணுமில்லை. காலத்துக்கும் யார்கிட்டவும் சொல்லமாட்டேன்னு சொல்லியிருக்கீங்" என்றார்.

"சொன்னதான். என்ட்ர மனசுக்குமே இந்த விஷயம் கடைசி வரைக்கும் யாருக்கும் தெரியக்கூடாதுங்கிறது தான் எண்ணம்!" என்ற ராஜேந்திரன், "உயிரோட இருக்க புள்ளைக்கு வருசா வருசம் உன்ற அண்ணி தெவசம் கொடுக்கிறது எனக்கு ஒப்பல. ரொம்பவே வேதனையா, சங்கடமா இருக்கு" என்றார்.

"ஓஹோ... உண்மையை சொல்லிக்காட்டி, இருபது வருசத்துக்கு முன்னாடி மறைஞ்ச என் வலியை திரும்ப எனக்கு கொடுக்கலாம்னு பாக்குறியாங்ண்ணா... இம்புட்டு வருசம் கொடுக்காத மாதிரி இப்போ வந்து சடவுற" என்ற கல்யாணி ராஜேந்திரன் எதிர்பார்க்காது, அங்கிருந்த கத்தியை எடுத்து தன் கழுத்தில் வைத்துக் கொண்டார்.

"நான் என் உசுருக்கும் மேல பாசம் காட்டி வளர்த்திருக்கேன். அவ்ளோ லேசுல விட்டுக்கொடுத்துப்புட மாட்டேன். நீ மட்டும் உண்மையை சொல்லிப்பாரு, என்ட்ர உசுரு இருந்த தடம் இல்லாம அழிச்சிக்குவேன்" என்றார். அப்பட்டமான மிரட்டல்.

"அன்னைக்கு நான் செத்துப்போவேன்னு தான செஞ்ச, எப்பைக்கும் யாருக்கும் எதுவும் தெரியாது. நாமளும் சொல்லிக்கத் தேவையில்லைன்னு சொல்லிப்போட்டு இப்போ வந்து உண்மையை சொல்லணும், உரக்க சொல்லணும்னு நாடகம் போடுற?" என்ற கல்யாணி, "நீ இப்படியெல்லாம் பண்ணுவன்னு தெரிஞ்சுதான்... தாய் மாமா வீடுன்னு கூட அனுப்பாமா, பொறந்த வீடுன்னு நானும் அக்கட்டிக்கு எட்டிப்பார்க்காம இருக்கேன்" என்றார்.

ராஜேந்திரனுக்கு அன்னைக்கு யோசிக்காது முடிவெடுத்தது, இன்றளவிலும் சரியெனும் எண்ணம் தான். சாகப்போன உயிரை தனது செயல் இத்தனை வருடங்கள் உயிருடன் வாழ வைத்திருக்கிறதே எனும் நிம்மதி. நல்லதை தான் செய்திருக்கிறோம் எனும் நம்பிக்கை.

ஆனால் தான் செய்த செயலால் தனது வீட்டில் நடைபெறும் திதி நிகழ்வைத்தான் அவரால் ஏற்க முடியவில்லை.

தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் எனும் வரையறை தான்.

"இப்பவும் ஊர் உலகத்துக்கு சொல்லப்போறதில்லை கல்யாணி. காமாட்சிக்கிட்டயும், உன்ற புருஷன்கிட்டயும் மட்டும் சொல்லுவோம்" என்று அவர் முடிக்கும் முன்பு கழுத்தில் கத்தியை வைத்து அழுத்தியிருந்தார்.

அதில் சிறு கீறல் ஏற்பட்டு துளி ரத்தம் எட்டிப்பார்க்க, ராஜேந்திரன் பதறிவிட்டார்.

'எல்லாம் பிள்ளைப்பாசம்! எந்த எல்லைக்கும் போவ வைக்குது' என நிறுத்தியவர், "அப்பைக்கும், இப்பைக்கும் உனக்கு நல்லதுன்னுதான் போறேன்" என்று மேற்கொண்டு எதுவும் பேசாது வெளியேறியிருந்தார்.

அன்று தங்கையின் திருமண வாழ்வு முக்கியமாகப்பட்டது. இன்று இத்தனை வயதிற்கு மேல் உண்மை தெரிந்தால் என்ன எனும் நிலை. தெரியும் உண்மை பலருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். பலரால் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். ஒருமுறை முயன்று பார்ப்போமென எண்ணியவர், தங்கையின் செயலில் தெரியாமலே போகட்டுமென திரும்பிச் சென்றிருந்தார்.

ராஜேந்திரன் சென்றதும் வேகமாக கதவடைத்துவிட்டுத் திரும்பிய கல்யாணி அங்கு நின்றிருந்த கோவிந்தனை கண்டதும் அதிர்ந்தார்.

அவரின் அதிர்வெல்லாம் ஒரு நொடி தான்... அலட்சியமாக அவரைத் தாண்டிக்கொண்டு அடி வைத்தார் கல்யாணி.

"என்ட்ர இத்தனை வருஷ விடைத்தெறியாத கேள்விக்கு விடை கிடைச்சிடுச்சு" என்று கோவிந்தன் சொல்ல, கல்யாணி அவரின் முன் வந்தார்.

"என்ன கேள்வி? என்ன விடை?" கல்யாணி ஒன்றும் தெரியாததைப்போன்று கேட்க, அவரிடம் விரக்தியாய் சிறு முறுவல்.

"விதைக்கவே முடியாத காட்டுல அறுவடை எப்படின்னு?" என்று கேள்வியை நிறுத்திய கோவிந்தன், "விதைக்க காடும் தேவையில்லை, விதையும் தேவையில்லை, சுத்தி இருக்கவங்களை முட்டாளாக்கினா போதும்னு அண்ணனும் தங்கச்சியும் புரிய வச்சிடீங்க!"

"தெரிஞ்சதை யார்கிட்டவும் சொல்லாம இருந்தா நல்லது" என்று கல்யாணி கூற,

"உன்னோட தாய்பாசத்துக்காக இன்னொரு தாயை இருவது வருசமா தவிக்க வச்சிக்கிட்டு இருக்கன்னு உன்ற மனசுக்கு புரியலையா கல்யாணி. குற்றவுணர்வா இல்லையா! படிச்ச படிப்பு, உன்ற வேலை எதுவும் மேன்மையை சொல்லித்தரலாயா?" எனக் கேட்டார் கோவிந்தன்.

"உம்மட அம்மா தினம் என்னை குத்திக்காட்டி பேசுவாங்களே அப்போ உங்க அம்மாவுக்கு மென்மையை சொல்லித்தர வேண்டியதுதான" என்ற கல்யாணி, "நான் சந்தோஷமா, நிம்மதியா இருக்கிறது புடிக்கலையா?" என்று ஆக்ரோஷமாகக் கத்தியிருந்தார்.

"நீ என்ன சொன்னாலும் இனிமேலும் என்னால அமைதியா இருக்க முடியாது... உன்ற பாசங்கிற சிறையில அந்த பயிர் வாடி வதங்குறதை இதுக்கு பொறவும் என்னால பார்த்துக்கிட்டு இருக்க முடியாது. உன் கைக்குள்ள பொத்தி வச்சிக்கணும்னு எவ்வளவு இறுக்கம்? ஒருகட்டத்துக்கு மேல மூச்சுமுட்ட ஆரம்பிச்சிடும். வாடுறதுக்குள்ள சேர வேண்டிய இடத்துல சேர்த்துபுடு" என்றார்.

"என்ன புதுசா அவன் மேல பாசம்?" முகம் சுளித்தவராகக் கேட்டிருந்தார் கல்யாணி.

"நீ எங்கடி பாசம் காட்ட விட்ட... ஒரு பொழுது நான் தூக்கிப் பார்க்க விட்டிருப்பியா?" என்றவர், "என் ரத்தமில்லனாலும், நீ ஏதோ வேலை பார்த்திருக்கன்னு புரிஞ்சாலும், ஊர் பேச்சுல இருந்து உன்ற மனசுக்கு நிம்மதி கிடைக்குதேன்னு அமைதியா இருந்தது என் தப்பு" என்றார் கோவிந்தன்

கல்யாணி முறைத்துகொண்டே எதுவும் பேசாது நின்றிருக்க,

"நீ அனுபவிச்ச வலிதான அவங்களுக்கும். உண்மை தெரிஞ்சும் நானெப்படி அமைதியா இருக்கிறது" என்றார் கோவிந்தன்.

"போங்க... போய் சொல்லுங்கங். அதெல்லாம் பார்க்க நான் உசுரோடிருந்தாதானுங்களே" என்று கண்களை துடைத்தார் கல்யாணி. மெல்லிய விசும்பலோடு.

"உன்ற கரைச்சலுக்கும் மிரட்டலுக்கும் உன்ற அண்ணன் வேணா பயப்படலாம். எதையெதை தானமா கொடுக்கணும் விவஸ்தையில்லாம கொடுத்திருக்கலாம். ஆனா நான் அப்படியில்ல. இருபது வருஷமா ஒரு தாயோட கண்ணீருக்கு காரணமாயிருக்க உன்ற பக்கமெல்லாம் உன்னையை விரும்பி கட்டுன பாவத்துக்கு காலத்துக்கும் என்ட்ர தலையில தூக்கி சுமக்க முடியாது. இப்போவே தொண்டாமுத்தூர் கிளம்புறேன். நீயும் வர்ற" என்று கோவிந்தன் அறைக்குள் நுழைய, பின்வாசல் கதவு படீரென திறக்கும் சத்தம் கேட்டு வேகமாக அவர் செல்ல, தோட்டத்திலிருந்த கிணற்றில் குதித்திருந்தார் கல்யாணி.

"கல்யாணி..." பெருங்கூவலோடு தானும் கிணற்றில் குதித்த கோவிந்தன், நீரில் அமிழ்ந்து வெளிவந்து மீண்டும் மூழ்கிய கல்யாணியின் கற்றை கூந்தலை பிடித்திழுத்து, மெல்ல தூக்கி வந்து கிணற்றுப் படிகளில் அமர்த்தினார்.

உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும், தலை வலியை கொடுக்க, கண்களை சுருக்கி மூடி திறந்தார்.

கணவர் தன்னைக் காப்பாற்றி விடுவாரென்று கல்யாணிக்கு நன்கு தெரியும். அதற்காகத்தானே கதவை அதிக சத்தத்தோடு திறந்திருந்தார்.

எவ்வளவு தான் கோபம், ஏமாற்றமிருந்தாலும், இன்னமும் கல்யாணி கோவிந்தனின் காதல் மனைவி தானே! கல்யாணியின் செயல்களால் விலகியிருந்தாலும் வைத்த காதல் இல்லையென்றாகாதே!

"கூடயிருக்க யாரும் நிம்மதியா இருக்கவேக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டியா?" அத்தனை கோபமாகக் கேட்ட கோவிந்தன், கிணற்று சுவற்றிலே கையை மடக்கி வேகமாகக் குத்தியிருந்தார்.

"தெரிஞ்சதை தெரிஞ்சமாதிரியே காட்டிக்காம நீங்க அமைதியா இருந்தா யார் நிம்மதிக்கும் ஒண்ணுமாகாது" என்ற கல்யாணி, தலையில் சுரீரென்று வலி கொடுக்கவே, அழித்துப் பிடித்தார். நொடியில் வலி மறைந்திருந்தது.

"இப்போ புரிஞ்சிருக்குமே உங்களுக்கு. நான் செத்துப்போவேன்னு நடிப்புக்கு சொல்லல... இதுக்கு பொறவு என்ன பண்ணனும் நினைக்கிறீங்களா பண்ணிக்கோங்க" என்று அமர்ந்திருந்த படியிலிருந்து எழுந்து மேலே சென்றுவிட்டார் கல்யாணி.

ஆரம்பத்தில் எழுந்த சந்தேகத்தால் பேசுவதை குறைத்து விலகியிருந்த கோவிந்தன், இன்று முழு உண்மை தெரிந்த பிறகு மொத்தமாக வெறுத்தேவிட்டார்.

உண்மையை சொல்ல முடியாத கோபம் அவருள் கனன்றுகொண்டே இருந்தது.


அக்கணம் முதல் கல்யாணியின் முகம் பார்ப்பதையே தவிர்த்து ஏற்கப் பழக ஆரம்பித்தார்.

தொடர்ச்சி கீழே 👇🏻
 

STN - 03

Member
Staff member
வகுப்பறை பெஞ்சில் திகழோவியன் தலை கவிழ்ந்து படுத்திருந்தான்.

காலை கல்லூரிக்கு வந்தது முதல் திகழோவியன் அப்படித்தான் இருக்கின்றான். வகுப்பில் பேராசிரியர் இருக்கும்வரை, கரும்பலகையை வெறித்துக்கொண்டு இருப்பவன் அவர்கள் சென்ற அடுத்த நொடி தலை சாய்த்துக் கொள்கிறான்.

"என்ன திகழ் சௌரியம்தானா?" நண்பன் ஒருவன் கேட்க, அவனிடம் பதிலே இல்லை.

"என்ட்ரகிட்டவே என்னன்னு சொல்லமாட்ரான்" என்ற மணி, "உடம்பு சுகமில்லையோ" என அவனின் கழுத்து, கன்னமென கை வைத்துப் பார்த்தான்.

"விடு மணி... இப்போ பிரேக்குக்கு அப்புறமும் கிளாஸ் இல்லையே! கொஞ்ச நேரம் தூங்கட்டும். சரியாகிப்புடுவான்" என்றான் இன்னொரு மாணவன்.

"ம்ம்ம்" என்ற மணி, திகழின் காதுக்கு அருகில் குனிந்து, அதிக ஓசையின்றி...

"காலையில சாப்பிடாம வந்துப்புட்டியாடா! நான் வேணுன்னா செந்தாகிட்ட சாப்பாடு வாங்கிட்டு வரவா?" எனக் கேட்டான்.

"பேசாம போடா!" என்ற திகழோவியன் மற்றைய பக்கம் தலையை திருப்பி வைத்துக்கொண்டான்.

"என்னன்னு சொன்னாதாண்டா தெரியும். எதுக்கு வாட்டமா இருக்க?"

"மருதமலை முருகனுக்கு வேண்டுதலு" என்று கடுப்பில் கடுகடுத்தான் திகழோவியன்.

"காலையில செந்தாவை பாக்கலயோ நீ!"

"கொஞ்சம் அடங்குடா" என்ற திகழோவியன், "நீ அவகிட்ட நான் இப்படியிருக்கேன்னு எதுவும் சொல்லிக்கிட்டு இருக்காத" என்றான்.

"நீயே சொல்லிப்புட்ட..." என்று மணி கூறிட, திகழோவியன் தலையை தூக்கிப் பார்க்க, அவர்களுக்கு முன்னால் செந்தாழினி நின்றிருந்தாள்.

சடுதியில் நிமிர்ந்து அமர்ந்து கேசத்தை கைகளால் ஒதுக்கி, அவளைப் பார்த்து புன்னகைத்திருந்தான்.

"கண்ணுக்கு சேரவே இல்லைங்" என்றவள் மணியிடம் பேசுவதைப்போன்று தோற்றம் கொண்டாலும், அவளின் பேச்சு திகழோவியனிடமிருந்தது.

அவனது புன்னகையில் உயிரில்லை என்பதை குறிப்பிட்டிருந்தாள்.

"லைப்ரரி நேரம் எப்போ?" செந்தாழினி கேட்டிட,

"இப்போ நீ ஃப்ரீயா?" எனக் கேட்டிருந்தான் திகழோவியன்.

அவள் மெல்ல ஆமென தலையசைக்க, "நம்ம செக்கென்ட் லேபுக்கு போ... வர்றேன்" என்றான்.

செந்தாழினி சரியென சென்றிட,

"இன்னமும் எதுக்குடா மறைக்கிற! நம்ம பசங்க... என்ன பேசிபுடப்போறானுவ?" எனக் கேட்டான் மணி.

"ம்ப்ச்..." என்ற திகழோவியன், "இது நீ நினைக்கிற மாதிரி இல்லை மணி... லவ் இருக்கு, அதுக்காக எல்லாரும் மாதிரி நாங்களும் இருக்கணும் எந்த அவசியமும் இல்லையே! லவ் பண்றோம் தான் அதுக்காக மெச்சூர்ட் அப்படின்னு ஒன்னு வேணாமா? என்னை பசங்க ஓட்டுனா பரவாயில்லை. பார்க்குற நேரமெல்லாம் அவளையும் சேர்த்து எல்லாரும் சீண்டுவாங்க. அதுவும் நம்ம பசங்கள சொல்லவே வேணாம். புரோஃபசர் யாருக்கும் போச்சுன்னா, வீடு வரைக்கும் போயிடும். அவளுக்கும் சங்கடம். இப்போதைக்கு காதல் மட்டும் போதும். அதனால வர பிரச்சினையை சமாளிக்க இன்னும் வயசு வேணும். அதுவரை இப்படித்தான்" என்ற திகழோவியன் எழுந்துகொண்டான்.

"எங்கடா, கேண்டீனுக்கா?" வேறொரு நண்பன் கேட்டிட,

"லேபுக்கு... வாரியாக்கும்?" என்றான் திகழ்.

"எப்பா சாமி... உன்ற நட்புக்கு ஒரு கும்புடு" என்ற அவன், "ஃப்ரீ ஹவர் முடிஞ்சதும் எழுப்பிவிடுங்கடா" என்று படுத்துக்கொண்டான்.

அதில் சிறு சிரிப்போடு திகழோவியன், முதுகலை மாணவர்கள் பயன்படுத்தும் ஆய்வு கூடத்திற்குள் கதவினை திறந்து கொண்டு வந்தான்.

அங்கு ஏற்கனவே செந்தாழினி அவனின் வரவிற்காகக் காத்திருந்தாள்.

முதுகலை மாணவர்களின் வகுப்பு மதிய நேரத்திற்கு பிறகு தான் என்பதால், அதுவரை அங்கு யாரும் வரமாட்டார்கள்.

இந்த நான்கு மாத காலத்தில் இதுவே இப்படி தனித்து சந்திப்பது முதல்முறையாகும்.

திகழோவியன் வருவதை கதவு திறந்து மூடிய சத்தத்தில் அறிந்து அவன் பக்கம் திரும்பியவள், தனது பார்வையை அவனது சோர்ந்த முகத்தில் ஆராய்வாகப் படரவிட்டாள்.

என்னதான் அவனின் முகம் பார்த்திருந்தாலும், அவன் தன்னை நெருங்கும் ஒவ்வொரு அடி இடைவெளி குறைப்புக்கும் அவளின் இதயம் எம்பி குதித்தது. ஒரு பக்கமாகப் போட்டிருந்த துப்பட்டாவின் முனையை இரு உள்ளங்கையிலும் சுருட்டிப் பிடித்து பதற்றம் போக்க முயன்றாள்.

இரு அடி இடைவெளியில் திகழோவியன் முன் வந்து நின்றிருந்த போதிலும், அவனது மூச்சுக்காற்று தன்னை தீண்டுவது உணர்ந்தவள் தன்னைப்போல் ஒரு அடி பின் வைத்து நகர்ந்திருந்தாள். இருப்பினும் அவளது பார்வை மட்டும் அவனது முகத்திலிருந்து விலகவில்லை.

"என்னன்னு கண்டுபுட்டீங்களா?"

செந்தாழினி விழி மாற்றாது இருக்க திகழோவியன் கேட்டிருந்தான்.

"என்னங்...?"

கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு, கால்களை மாற்றிப்போட்டு, பின்னிருந்த மேடையில் சாய்ந்து நின்றான்.

"மொகத்தை உத்துப் பார்த்தியே, அதான் என்னமாச்சும் கண்டுபுட்டியான்னு கேட்டேன்" என்றான்.

"ஏன் வாடியிருக்கீங்?"

"இந்தப்பொண்ணை காலையில பார்க்கலைங்களே... அதனாலவா இருக்கும்" என்ற திகழோவியன், "நீ எதுக்கு கிளாசுக்கு வந்த?" எனக் கேட்டான்.

"நீங்க சொன்ன காரணமேதானுங்க" என்ற செந்தாழினி, "மெய்யாலுமே நீங்க ஓகேங்ளா ஓவி" என்றாள். பரிதவிப்புடன்.

முதல்முறை தனது பெயரில் கொஞ்சத்தை அவள் சொல்லிக் கேட்கிறான்... அதிகத்துக்கும் பிடித்தது. அந்த குரலும், அந்த விளிப்பும்.

"இப்போ உன்ற பக்கட்டிக்கு நிக்கிறனே உனக்கு தெரியலையா?" என்று புருவத்தை ஏற்றி இறக்கினான்.

மேலேறிய புருவம் கீழிறங்கும் முன்பு, அவனது நெற்றியில் வழிந்த கேசத்தை தொட்டிருந்தது. அதில் அவளின் ரசனை குவிந்து திண்டாடியது. சட்டென்று பார்வையை அவனது முகத்திலிருந்து நிலம் தாழ்த்தியிருந்தாள்.

அவளது செயலில் அவனது இதழ் மலர்ந்து உறைந்தது.

இதுவரை மணிக்கணக்கில் பல கதைகள் பேசியதில்லை... பார்வைமொழி காதல் மட்டுமே! ஏனோ இந்தநொடி அவளுக்கு அவனிடம் பேசிட கேட்க நிறைய தோன்றியபோதும், அவர்களுக்கிடையேயான வழமையான இந்த அமைதியே அத்தனை நிறைவாய் தோன்றியது.

நிமிடங்கள் கடக்க... அவனின் மென்மையானப் பார்வையில் சில்லாகியவளின் உள்ளங்கை வியர்த்து பிசிபிசுக்க,

"நான் போகட்டுங்ளா?" என்றாள். நாணம் துடிக்கும் அவஸ்தையாய்.

"போகணுமா?" அவனது கேள்வியில் விலுக்கென முகம் உயர்த்தி அவனின் விழிகள் சந்தித்தாள்.

வேணாமென இருபக்கமும் தலையசைத்தவள்,

"அக்கட்டிக்கு வந்து நிக்கவா?" என்று அவனின் அருகே பக்கவாட்டில் சுட்டுவிரல் காண்பித்தாள்.

"வாயேன்" என்று அவன் சொல்லிவிட்டான், ஆனால் கேட்ட அவளுக்குத்தான் கேட்டிருக்க வேண்டாமோ என்றிருந்தது.

அவனுடன் நெருங்கி நின்று, கைகள் கோர்த்து, தன்னை உரசும் அவனின் தோள்மீது தலை சாய்த்து கண்கள் மூடி, அந்நேரத்தை ரசிக்க பெரும் ஆசை அவளிடம். ஆனால் அவனோ இடைவெளியை காண்பிக்க அவளுக்கு தயக்கமாக இருந்தது.

செந்தாழினி நின்ற இடத்தில் ஒற்றை பாதத்தை அசைப்பதும், முன் வைத்து பின் எடுப்பதுமாய் இருக்க, அவளின் அந்நிலை அவனுக்கு ரசிப்பதாய்.

"ம்ப்ச்... இது ஆவரதுக்கில்லைங்... நான் போறேனுங்" என்று திரும்பியவளின் கையைப் பிடித்து இழுத்திருந்தான். லாவகமாக அவள் உணரும் முன்பு தனதருகில் தோள்கள் உரச நிறுத்தியிருந்தான்.

"இப்போ சாஞ்சிக்கலாம்... நான் ஒன்னும் சொல்லமாட்டேன்" என்று தன்னை தலை தூக்கி விழியுரத்தி பார்த்தவள், தான் தலை கவிழ்ந்து விழி தாழ்த்தி நோக்கினான்.

அவள் வைத்திருந்த பூவோடு சேர்த்து அவளின் பின்னலும் அவன் பக்கமாக, அவளின் தோள் வழி முன் வந்து விழுந்திருக்க... இமைகள் தழுவிய அவனது கருவிழி அவளின் பூவில் படிந்தது.

பவளமல்லி. சரமாய் கட்டி வைத்திருந்தாள்.

அவளின் கழுத்து தீண்டிய சரத்தில் ஆரஞ்சு வர்ண காம்பில் வெண்மையாய் இதழ் விரித்திருந்த மலர், அவளது சிவந்த நிறத்திற்கு அத்தனை எடுப்பாய், அவளின் அழகை அவனுக்கு கூட்டிக் காட்டியது.

"இந்த பூ ரொம்ப பிடிக்குமோ?"

"ஆமா!" என்றவள், "ஆனா உம்மட அளவுக்கு இல்லைங்" என்றாள்.

"தெரியுமே!"

"தெரிஞ்சா சரிதானுங்."

அவள் சொல்லிய பாவனையில் முறைத்துப் பார்த்தவன், அவளின் பதில் முறைப்பில் சட்டென்று சிரிக்க, அவளும் அவனுடன் சிரித்திருந்தாள்.

அர்த்தமற்ற சிரிப்பு அந்நேரத்தை அவர்களுக்கு அத்தனை அழகாய் மாற்றியது.

"டைம் ஆச்சு... போவலாம்" என்று திகழோவியன் சொல்ல, அவனது புஜத்தில் சட்டையை பற்றி இழுத்திருந்தாள்...

"என்னம்மா?"

"சாஞ்சிக்கலைங்களே!" கருவிழி அவனது முகத்தில் பந்தாட காற்றாய் மொழிந்தாள்.

"நான் வேணாம் சொல்லலையே" என்றவன் தானே அவளின் தலையை தனது தோளில் சாய்த்து, அவளின் கரத்தை தன்னுடைய கரத்தோடு பின்னியவாறு விரல்கள் கோர்த்துப் பிடித்திருந்தான்.

மனதினால் காதல் புரிதலோடு வளர்ந்திருக்க, நெருக்கங்களும் இயல்பாய் அவர்களிடம் சேர்ந்திருந்தது.

கண்கள் மூடி அவன் தோள் சாய்ந்திருக்கும் அவளுக்கும், தனது கைக்குள் அடங்கியிருக்கும் அவளது கை விரல்களை உரிமையாய் தீண்டியிருக்கும் அவனுக்கும், காதல் பேரின்பமாய் இதயத்தில் தேங்கியது. அக்கணம்.

கல்யாணியினால் உண்டாகியிருந்த வேதனைகள் யாவும் அவளின் அருகாமையில் அவனுக்கு நீர்த்துப்போனது.

ஒரு நிமிடம்... இரு நிமிடம்... நீள,

வெளியிலிருந்து அழைக்கும் குரல்.

"திகழு..." அதிக ஓசையின்றி செவி நுழைய, இரண்டாவது அழைப்பில் யாரென்று கண்டுகொண்ட திகழோவியன்,

"மணி கூப்பிடுறான்" என்று அவளை விலக்கி நிறுத்தியபோதும், கரத்தினை விடவில்லை.

"வாடா!"

திகழோவியன் வரச்சொல்லவே உள்ளே வந்தான் மணி.

"உன்ற கிளாஸ் இன்சார்ஜ் உன்னை கூப்பிட்டாங்களாம். வசந்தி நீ காணோம்னு தேடிட்டு இருக்காள்" என செந்தாழினியிடம் கூறினான்.

"அச்சோ" என்று நெற்றியில் தட்டிக்கொண்டவள், "அவர் தானுங் கோர் பேப்பர். ரெக்கார்ட் சப்மிட் பண்ணனுங்க... வர்றேன்" என்று அடிகள் வைத்திட, கோர்த்திருந்த கரங்கள் பிரியாது பிடி கூடியது.

மணி தள்ளிச்சென்று கதவருகே நின்றான்.

தலையை மட்டும் திருப்பி திகழோவியனைப் பார்த்த செந்தாழினி...

"போவனுங் ஓவி" என்றாள். தவிப்பாய்.

"போ!" என்றவன் பிடியை மட்டும் விடுவதாக இல்லை.

அவளுடனான இந்த நேரம் அத்தனை பிடித்தது அவனுக்கு. அதிகம் பேசிக்கொளவில்லையென்றாலும், மனங்கள் உறவாடிய நிமிடங்கள் நெஞ்சில் தித்திப்பாக சுவை சேர்த்திருக்க... அவளை விட முடியாது தத்தளித்தான். இன்னும் கொஞ்ச நேரம் அவளுடன் இருக்கவே அவன் மனம் விரும்பியது.

செந்தாழினி அந்த அறையைத் தாண்டி சென்றுவிட்டாள் அவன் யாரோ, அவள் யாரோ! பார்வைமொழி காதல் மட்டுமே மனதின் வழி அவர்களுக்குள் ஜீவித்திருக்கும்.

மீண்டும் இதுபோன்ற கணங்கள் எப்போது வாய்த்திடுமோ எனும் ஏக்கம் அவனிடத்தில்.

அவனின் எண்ணாவோட்டம் தான் அவளுக்கும்.

அவனது ஏக்கங்களை தனக்குள் நிரப்பியவளாக,

"போவணுமே!" என்றாள்.

"போ" என ஒவ்வொரு விரலாய் பிரித்து மொத்தமாக அவளது கரத்தை விடுத்தான்.

செந்தாழினி செல்லாது நின்றிருக்க...

"போடா!" என்றான். கண்கள் அசைத்து.

முன் சென்றவள் மீண்டும் திரும்பி வந்து...

"டெய்லி இப்படி என்ட்ரகூட பேசுவீங்களா?" எனக் கேட்டாள்.

அவனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. காதலில் தனக்கு உண்டான தவிப்புகள் யாவும் அவளுக்கும் தானே! அதற்காக தினமும் இந்த செயலை தொடர முடியாதே! இப்போதைய கவனம் படிப்பில் தானே பதிய வேண்டும். அதற்காகவும் தானே இந்த தூரவிழி காதல்.

அவன் பதில் சொல்லாதிருக்க...

"கால் பண்றீங்களா?" என்றாள்.

திகழின் நெற்றிச் சுருங்கிட,

"நெம்பரெல்லாம் எடுத்தீங்கங்" என்றாள்.

"ஹோ..." என்றவன், "கூப்புடனும் தோணும். அப்போ கூப்புடுறேன்" என்றான்.

"ஹான்... அட்லீஸ்ட் மெசேஜ். வாட்ஸ் ஆப் சாட்" என நிறுத்தியவள், "ரொம்பலாம் இல்லை. உம்மடகிட்ட பேசணும்னு என்ட்ர மனசு நினைக்கமே! அப்போ... அப்பைக்கு மட்டும்" என்றாள்.

"டேய்..." என்று ஒரு கையை இடையில் குற்றியவன், பற்கள் தெரிய சத்தமின்றி சிரித்தவனாக, மற்றொரு கையால் நெற்றியைத் தேய்த்தான்.

"ப்ளீஸ்..." முகம் சுருக்கி அவள் கேட்ட பாவனையில் தன்னைப்போல் சரியென்றிருந்தான்.

"தேங்க் யூ" என்று அவன் என்னவென்று உணரும் முன்பு, தானே உணராது இயல்பாய் அவனின் கன்னத்தை பிடித்து இழுத்தவளாக ஓடியிருந்தாள்.

அவளிடத்தில் வயதிற்கு உண்டான துள்ளலும், உற்சாகமும். அவனிடத்தில் வயதிற்கு உண்டான ஆசைகள் எல்லாம் துறந்தே பழகியதால் உண்டான அதிகப்படியான முதிர்ச்சி.

இளமை காதலை தனது முதிர்ச்சியான காதலால் எங்கும் தத்தளிக்காது மூன்று ஆண்டுகள் நிதானமாய் நீந்தி கரை சேர்த்திருந்தான் திகழோவியன்.

கருத்தாய், கவனமாய்.

இருவரின் காதலும் மணியைத் தவிர்த்து யாருக்கும் தெரியப்படுத்தவில்லை. அந்த சாமர்த்தியத்தில் தான் அவர்களின் காதல் செழித்து வளர்ந்தது.

அவனுடன் பழக பழக அவளும் தனது காதலில் அமைதியை கொண்டு வந்திருந்தாள்.

திகழோவியன் கல்லூரி படிப்பை முடித்திருக்க, செந்தாழினி இறுதி ஆண்டின் இறுதியில்.


திகழ் கோவையில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியில் சேர்ந்திருந்தான்.

சொல்லாமல் புரிந்த காதல்,
சொல்லினால் சிதறும் எனவே,
தூரத்தில் நின்றும் நெருக்கமாகவே,
தோளில் சாய்ந்து கனவுகாணவே!


நெஞ்சில் உயிர் நிறையும்...
 
Top Bottom