• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உந்தன் நெஞ்சில் உயிராக 12

STN - 03

Member
Staff member
உந்தன் உயிராக 12

அந்த காலை நேரம் அத்தனை ரம்யமிக்கதாக இருந்தது திகழுக்கு. காரணம் அவனவள்.

இத்தனை வருட காதலில் ஒரு முறை கூட நிகழ்ந்திடாத முழு இரவு உரையாடல்.

என்ன பேசினார்கள்? பேசியதெல்லாம் அர்த்தமானதா? என கேட்டால் அவர்களுக்கும் தெரியாது. ஆனால் நீண்ட இரவில் இருவருக்குமாய் அரங்கேறிய பேச்சுக்கள் சங்கீத ஸ்வரங்களாய்...

செந்தாவின் எண்ணை பதிந்து வைத்ததற்கே அவ்வளவு விசாரணை செய்த கல்யாணி மீண்டும் இதுபோன்று அலைபேசியை தினம் தினம் ஆய்வு செய்தால் எனும் பெரும் வினாவில்... தனது காதலை மறைத்து வைப்பதில் உடன்பாடில்லை என்றாலும் மகன் பாசத்தில் கல்யாணி என்னவும் செய்வார் என்று மனதோடு வைத்துக் கொண்டான்.

எப்போது கல்யாணியின் தாய்ப்பாசம் தனக்கு விலங்காகிறது என உணரத் துவங்கினானோ, அவரின் அன்புக்கு தானாக அடங்கிப் போகாமல் அவரால் கட்டுப்படுத்தப்படுகிறோம் என விளங்கிக் கொண்டானோ அது முதல் சிறு சிறு விடயங்களில் தனது அதிருப்தியை, விருப்பமின்மையை காட்டத் துவங்கினான் திகழோவியன்.

அவரின் அன்பு தன்னிடத்தில் திணிப்பாக மாறிவிட்டது என்பதை அறிந்து கொள்வதற்கே அவனுக்கு இத்தனை வருடங்கள் ஆகி இருக்கிறது.

அவரின் அந்த அன்பின் சிறையும், பாசத்திணிப்பும் தனது காதலுக்கு தடையாக அமர்ந்திடுமோ எனும் பயம் எழுந்திட அவரின் கைப்பிடிக்கல்லிருந்து மெல்ல வெளிவர துவங்கினான். அதனை அவர் உணராது பார்த்துக் கொண்டான்.

அதில் முதலாவது தினமும் அவர் குளிக்க வைப்பது, தன்னுடைய ஆடைத்தேர்வு, அவருடன் உறங்குவது என அனைத்திற்கும் அவர் நோகாது தகுந்த காரணங்கள் கூறி எட்ட நிற்க வைத்தான்.

இதில் கல்யாணிக்கு ஏகப்பட்ட வருத்தங்கள்.

இருப்பினும், "இருவது வயதுக்கு மேல ஆவதுங்மா... இன்னமும் நீங்க குளிக்க வைக்கிறது ரொம்பவே கூச்சமா இருக்குங்மா. தலை தேச்சிக்க என்னால ஆவாதுங்களா? இனி என்ட்ர சின்ன சின்ன வேலையையும் நான் பார்த்துக்கிறேனுங்மா" என அவன் நேரடியாக அழுத்தமாக சொல்லும்போது அவரால் மறுக்க முடியவில்லை.

'இப்போதெல்லாம் தனது தங்கோ, கன்னுக்குட்டி, கண்ணு, சாமி ஆகிய அழைப்புகள் அவனிடம் வேலை செய்வதில்லை' என்பதை புரிந்து கொண்டார்.

அதிலும் கோவிந்தன் அன்று பேசியப்பேச்சில், "ரொம்ப இறுக்கி பிடிச்சா மூச்சு முட்டிப்போவும்" என சொல்லியதில் உண்மை உள்ளது என கொஞ்சமே கொஞ்சம் திகழிடம் தனது பிடியை தளர்த்தினார்.

அதில் திகழாக அவரை எட்ட நிற்க வைத்து தனக்குத்தானே செய்து கொள்ளும் சிறு சிறு விஷயங்கள் மட்டுமே அடக்கம்.

இப்போதெல்லாம் கல்யாணி பிடிவாதம் திகழிடம் எடுபடுவதில்லை.

தனக்கு விருப்பப்பட்ட இருசக்கர வாகனத்தில் தான் பணிக்கு செல்கிறான். இரவு நேரம் தான் வீடு திரும்புவான். விடுமுறை தினங்களில் நண்பர்களுடன் ஊர் சுற்றுகிறான். அவர்களின் ஊர் மைதானத்தில் நண்பர்களுடன் அரட்டையில் கலந்துகொள்கிறான்.

இதிலெல்லாம் அவனை கட்டுப்படுத்த நினைத்தாலும் இப்போதெல்லாம் கல்யாணியால் முடியவில்லை.

அன்றொரு நாள் அப்படித்தான், விடுமுறை நாளில் கிளம்பி நின்ற திகழோவியன் எங்கு செல்கிறேனென்று முன்னதாக சொல்லாது, வண்டியை வெளியில் தள்ளியபடி,

"தொண்டாமுத்தூர் போய் வாரனுங்... மாமா வீடு எப்படியிருக்குன்னு தெரியாதுங்களே! பார்த்துப்போட்டு வர்றேனுங். அத்தையும் போன் பண்ணும்போதெல்லாம் வந்து போ கண்ணுங்கிறாங்க... இன்னைக்கு சுதிர்தா மாமாவுக்கு பொறந்தநாளாச்சே போய் வாரனுங்க" என்று வண்டியில் ஏறி அமர்ந்தான்.

அவனுக்கு செந்தாழினியை நேரில் பார்க்க வேண்டுமென்ற எண்ணமும்.

இத்தனை வருடம் தான் காத்து வரும் பெரும் ரகசியம் உடைபட்டுவிடுமோ எனும் அச்சம் சூழ நொடியில் கல்யாணி வெறிபிடித்தவராக மாறியிருந்தார்.

"நீ போகக்கூடாது திகழு" என்று வண்டிக்கு முன் வந்து நின்றவர், திகழ் சுதாரிக்கும் முன்பு வண்டியிலிருந்து சாவியை எடுத்திருந்தார்.

"ம்மா... என்ன பண்றீங்கங்" என்றவன் வண்டியை விட்டு இறங்கி, அவரை நெருங்கி, சாவியை வாங்க முயன்றான்.

அவரோ "கொடுக்கமாட்டேன்" என அவனை திமிரி விலக்குவதில் அத்தனை ஆவேசம் காண்பிக்க,

"நானு பஸ்ல போயிருக்கிறேனுங்மா" என்று தெருவில் நடக்கத் துவங்க, "கண்ணு திகழு" என்று ஈனக்குரலில் விளித்தவர், அவன் திரும்பிப் பார்த்திடவே மயங்கி விழுந்திருந்தார்.

பதறி ஓடி வந்தவன் அவரைத் தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் செல்ல,

"என்னாச்சு?" என பக்கம் வந்தார் கோவிந்தன். அதுவரை உள்ளிருந்து வெளியில் இருவரின் பேச்சினையும் கேட்டுக் கொண்டுதான் இருந்தார்.

உண்மை தெரிந்ததற்கு பின்னர் திகழிடம் ஓரிரு வார்த்தைகள் பேசத் துவங்கியிருந்தார் கோவிந்தன்.

"தெரியல... மயங்கிட்டாங்க" என்று திகழ் கூற,

"கோவமா கத்தி பேசினதுல பிரஷர் கூடியிருக்கும்" என்ற கோவிந்தன், அவரின் முகத்தில் தண்ணீர் தெளிக்க, மெல்ல கண் விழித்தார் கல்யாணி.

"ம்மா ஒண்ணுமாவலங்களே!" என்று உண்மையான தவிப்போடு திகழோவியன் கேட்டிட, "உன்ற மடியில கிடக்கிற வரை எனக்கு ஒண்ணுமாவது தங்கோ" என்று அவனின் தாடை பிடித்தவர், "இப்போலாம் இந்த அம்மாவை பிடிக்காம போயிடுச்சா கண்ணு?" என்றார்.

"அப்படியில்லங்மா" என்ற திகழ், "உங்களைவிட்டு எங்கங்போறேன். என்ட்ர தாய்மாமா வீடுதானுங்களே" என்றான்.

"உனக்கு அவங்களை பார்க்கனும்னா சொல்லு கண்ணு... நான் இக்கட்டிக்கு வரவைக்கிறேன். நீ இம்புட்டு தொலைவு தனியா போவவேணாம் சாமி" என்றார்.

திகழோவியன் கோவிந்தனைப் பார்க்க, வழக்கம்போல் தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லையென ஒதுங்கிக்கொண்டார் அவர்.

"உன்னை தொலைவுல அனுப்பி வச்சிப்போட்டு நான் தவிச்சி காத்துக்கெடக்கோனும் தங்கோ" என்றவர் கண்களில் கண்ணீரை கொட்ட, "சரிங்மா போவலங்... நீங்க ரெஸ்ட் எடுங்கங்" என்று எழுந்து நின்றவன், "இப்படியே நீங்க பண்றதும் சரியாப்படலங்" எனக்கூறி அறைக்குள் சென்று மறைந்தான்.

அடுத்தநொடி கண்களை துடைத்துக்கொண்டு எழுந்து நின்ற கல்யாணியை வெறுப்பாகப் பார்த்த கோவிந்தன்,

"நல்ல நடிப்பு" என்றார்.

"யாரு நடிச்சா?" என்ற கல்யாணி, "நிஜத்துக்கும் இப்போலாம் அடிக்கடி மண்டைவலி வருது" என்றார்.

"ஆனா இப்பைக்கு நீ மயக்கம் போட்டது பொய்தானா?"

"ம்க்கும்..."

"அவனக்கே எல்லாம் புரிய ஆரம்பிச்சிடுச்சு. எனக்கு தெரிய வந்த மாதிரி ஒருநாள் அவனுக்கும் உண்மை தெரிய வரும். அப்போ அவன் முழுசா உன்னை வெறுக்கப்போறான் பாரு" என்று கோவிந்தன் சொல்லிட, கல்யாணிக்கு திகழோவியனை மீண்டும் தனது கைக்குள் கொண்டுவரும் வேகம்.

எவ்வளவு முயன்றும் கல்யாணியால் வளர்ந்து நிற்கும் ஆண் மகனை ஐந்து வயது பிள்ளையாக மாற்றி தனது தாயெனும் சிறைக்குள் அடக்கிட முடியவில்லை.

செந்தா நினைத்த நேரம் அவனிடம் பேசிட, அவனுக்கு குறுந்தகவல் அனுப்பிட அனுமதி கேட்டதற்கு பின்னால், இரவில் சில நிமிடங்கள் அவளுடன் உரையாடத் துவங்கியிருந்தான். பேசி முடித்த அடுத்த கணம் தகவல்களை அழிக்கவும் பழகியிருந்தான்.

ஒருநாள் கல்யாணி உறங்கிவிட்டதாக எண்ணி திகழோவியன் செந்தாழினியிடம் புலனத்தில் உரையாடிவிட்டு உறங்க கண்களை மூடிட, கல்யாணி அவனது அலைபேசியை எடுத்து ஆராய்ந்துப் பார்த்தார். தற்செயலாக அவர் புறம் திரும்பிய திகழோவியன் அவரின் அச்செயலைக் கண்டு அதிர்ந்துதான் போனான்.

பெற்றவர்களுக்கு காதல் தவறான ஒன்றுதான். அதற்காக இந்தளவிற்கு இறங்கி, தான் யாருடன் பழகுகிறேன், பேசுகிறேன் என்று வேவு பார்க்க வேண்டுமா என்று கல்யாணியின் அச்செயல் ஆதங்கமாக திகழின் மனதில் தேங்கியது.

அடுத்தநாளே தன்னுடைய அறையில் கல்யாணி தன்னுடன் உறங்குவதை தடுத்திருந்தான்.

"நீங்க என்ட்ர ரூம்ல தூங்குறீங்கன்னே நைட்ல படிக்க முடியாம போவுதுங்மா" என்று காரணம் சொல்லியவன், "பையன் எனக்கு சில விஷயங்கள், நீங்க கூடாலே இருக்கும்போது சங்கடமா இருக்குங்மா" என்று மேலும் ஏதேதோ காரணம் சொல்லி அறையை தானிருக்கும் நேரங்களில் தாழிடத் துவங்கியிருந்தான்.

திகழோவியனிடம் முளைக்கும் மாற்றங்களையெல்லாம் மீண்டும் மாற்றிட வேண்டுமென கல்யாணி என்னென்னவோ செய்தும் முடியாமல் போனது. வருடங்களும் ஓடியிருந்தது.

காலை முகம்கொள்ளா மலர்ச்சியுடன் அறையைவிட்டு வெளியில் வந்த மகனின் மீது ஆராய்வாகப் படிந்தது கல்யாணியின் முகம்.

"என்ன சாப்பாடுங்மா?" கேட்டுக்கொண்டே வந்தமர்ந்தவன் முன்பு, தட்டை வைத்த கல்யாணி,

"நைட்டெல்லாம் உன்ற ரூம்ல பேச்சு சத்தமா இருந்துச்சு கண்ணு. யாரு கூடலா தங்கோ பேசிட்டு இருந்த?" என்றார்.

"யாரோட பேசினா என்னங்மா?" பட்டென்று திருப்பிக் கேட்டிருந்தான்.

"நான் கேட்கக்கூடாதா சாமி?" அவர் உடனடியாக தனது அழுகையை கையிலெடுக்க,

"சாப்பாடே வேணாமுங்க" என்று எழுந்தவன், பையை எடுத்துக்கொண்டு அலுவலகம் புறப்பட்டிருந்தான்.

இரவு தன்னவளுடன் உரையாடியதால் உண்டான மொத்த மகிழ்வும் காணாமல் போயிருந்தது.

திகழோவியனுக்கு கல்யாணி யாருடன் பேசினாய் என்று கேட்டதெல்லாம் வருத்தமில்லை. பாதி இரவிற்கு மேல் துவங்கிய உரையாடல். அதனை அவர் கேட்பதுதான்... அந்த நேரத்தில் அவன் பேசுவது அவருக்குத் தெரிந்திருக்கிறதென்றால் கதவில் காது வைத்துக் கேட்காமல் எப்படி? ஓட்டுக்கேட்பது, அந்த நேரத்தில் தன்னை கண்காணிப்பது அவனுக்கு அப்படியொரு கோபத்தைக் கொடுத்தது. ஆனால் அவரிடம் காட்டிட முடியாதே!

மொத்த கோபத்தையும் வண்டியின் வேகத்தில் காண்பித்தான்.

சட்டைப் பையிலிருந்த அலைபேசி ஒலியெழுப்பிட, தான் வந்த வேகம் கண்டு கல்யாணித்தான் அழைப்பாராக இருக்குமென்று கண்டுகொள்ளவே இல்லை.

மீண்டும் ஒலிக்கவே தான் எடுக்காது ஓயாதென, வண்டியை சாலையின் ஓரம் நிறுத்திவிட்டு, அலைபேசியை கையிலெடுத்தான்.

செந்தாழினியின் முகம் திரை நிறைத்திருக்க, ஏற்று காதில் வைத்தான்.

நொடியில் முகத்திலும் மனதிலும் வெடிக்க துடித்த கோப உணர்வுகள் யாவும் மாயமானது. இதழில் குறுநகை பூத்தது.

"ஆபீஸ் போயிட்டீங்களாங் மாமா?" என வேகமாகக் கேட்டிருந்தாள்.

எப்போதும்போல் அந்த மாமா என்ற வார்த்தையில் கட்டுண்டு உருகிக் கரைந்தான்.

அந்த மாமா எனும் அழைப்பு அவர்களுக்குள் உறவாடத் துவங்கியதே ஒருவித அழகியல் தான்.

அப்போது திகழோவியன் படிப்பில் இறுதி ஆண்டில் இருந்தான்.

தினமும் கல்லூரியில் பார்த்துக்கொண்டாலும், அவர்களின் பேச்சு புலனம் வழிதான்.

எதிரெதிரே நின்றிருந்தாலும் அதில் தான் பேசிக்கொள்வார்கள்.

அப்படித்தான் வகுப்பிலிருந்த செந்தாழினி திகழோவியனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிட, அவனும் ஆசிரியர் பாடம் நடத்துவதை கவனித்தவனாக பெஞ்சுக்கு கீழே அலைபேசியை மறைத்து வைத்து பதில் அனுப்பிக் கொண்டிருந்தான்.

"ஒரு சிங்கிள் பையன நீ வெறுப்பேத்திக்கிட்டே இருக்க மச்சான்" என்று மணி புலம்பும் அளவுக்கு இருக்கும்.

எழுத்தாக வந்து கொண்டிருந்த உரையாடலுக்கு நடுவில் திடீரென குரல் பதிவு வரவும்...

திகழோவியன், "க்ளாஸ்ல இருக்கேன். டெக்ஸ்ட்டா அனுப்பு!" என்று அனுப்பியது அவளால் பார்க்க முடியாமல் போனது.

அவளிடமிருந்து பதில் வராதுபோகவே,

"அவளுக்கு க்ளாஸ் ஸ்டார்ட் ஆகிடுச்சிப்போலடா" என்று பாடத்தில் கவனமான திகழோவியன், வகுப்பு முடிவடைந்ததற்கான ஒலி அடிக்கவும் மணியுடன் வெளியேறினான்.

"மதியம் கிளாஸ் இல்லை. கிளம்புரியா?" என்றான் மணி.

"செந்தாழினியை பார்க்கணும்டா. காலையில நான் வரதுக்குள்ள அவளுக்கு கிளாஸ் ஆரம்பிச்சிடுச்சு. லஞ்ச் பாக்ஸ் மாத்தி வைக்கப்போனப்பவும் பார்க்க முடியல" என்ற திகழோவியன், "நீ கிளம்புடா. இப்போ பஸ் விட்டா, பொறவு செக்கென்ட் சிங்கில் லேட்டாகும் உனக்கு" என்றான்.

"சரிடா... பார்த்துக்கோ" என்ற மணி சென்றிட, நூலகத்திற்கு முன்னிருந்த மரத்துக்கு கீழ் வந்தமர்ந்தான் திகழோவியன்.

செந்தாழினி இறுதியாக அனுப்பிய குரல் பதிவு நினைவுவர, அலைபேசியை எடுத்தான்.

கிட்டதட்ட ஏழு நிமிட குரல் பதிவு.

"இம்புட்டுக்கு அப்படியென்ன" என்ற யோசனையோடே அதனை ஒலிக்கச் செய்தான்.

"எனக்கும் என்ட்ர மாமாவுக்கும் கல்யாணப் பேச்சு பேசுறாங்க செந்தா" என்று வசந்தியின் குரல் கேட்க, "அதுக்குள்ளவா கல்யாணம்?" என்று கேட்டது செந்தாழினியின் குரல்.

இருவரும் பேசிக்கொண்டது தவறுதலாக வந்துவிட்டதென திகழ் நினைக்க,

"அவரு வெளிநாட்டுக்குப் போறாரு புள்ள... அதான் நிச்சயம் போட்டுப்புடலாம் பேசிக்கிறாங்க" என்றாள் வசந்தி.

வசந்தியின் தனிப்பட்ட விஷயமென்பதால், தான் கேட்பது நன்றாக இருக்காதென நினைத்து திகழ் அணைக்க முயல,

"ஓ" என்ற செந்தாழினியின் குரல் அவனைத் தடுத்திருந்தது.

"குரல்லே சுருட்டி வச்சிக்கிறா?" என்று புன்னகைத்த திகழோவியன், அடுத்து செந்தா கேட்டதில் சுவாரஸ்யமானான்.

"நீ அவங்களை மாமான்னு தான் கூப்பிடுவியா?" எனக் கேட்டாள்.

"இப்பவரைக்கும் இல்ல. கொஞ்சம் டெரர் பீஸ். பேசினதுமில்லை. ஆனா பார்க்க மட்டும் செய்வேன். இனி கூப்பிட வேண்டியதுதான். கட்டிக்கிடப்போறவங்கள மாமான்னு சொன்னாதான் நல்லாயிருக்கும். எங்க அம்மா இப்பவும் எங்க ஐயனை அப்படித்தான் கூப்பிடுறாங்க" என்ற வசந்தி, "உங்க அம்மா கூப்பிட்டதில்லையா?" என்றாள்.

"நான் கவனிச்ச வரைக்கும் இல்லை. தனியா கூப்பிட்டுப்பாங்களா இருக்கும்" என்றாள் செந்தாழினி.

"அதைவிடு... நீ லவ் பண்றவங்களை மாமா சொன்னதில்லையா?" என்றாள்.

"வசந்தி இதென்னப் பேச்சு?" என்ற செந்தாழினி, நொடியில் சுதாரித்து "நான் லவ் பண்றேன்னு யாரு புள்ள சொன்னது உனக்கு?" என்று விழி விரித்தாள்.

"யாரு சொல்லோணும்... மொச புடிக்கிற நாய் மூஞ்ச பார்த்தா தெரியாது" என்ற வசந்தி, "லவ் பண்ற பொண்ணுங்க பண்ற அத்தனை விஷயமும் பண்ற. அப்புறம் கண்டுபிடிக்கலனா நானென்ன உன் பிரண்டு. இதுல உன்ற கூடவே வேற திரியுறேன். ஆனால் ஆள் யாருன்னுதான் தெரியல" என்றாள்.

"சொல்லக்கூடாதுன்னு இல்லை..." என்று செந்தாழினி இழுக்க...

"காரணம் என்னவா வேணும்னாலும் இருக்கட்டும். நீ நான் கேட்டதுக்கு பதில்சொல்லு" என்றாள்.

"கூப்பிட்டதில்லை வசந்தி" என்ற செந்தாழினி, "எப்பையாவது பேர் மட்டும் சொல்லுவேன்" என்றான்.

"அடிபோடி போக்கத்தவளே... அதெல்லாம் தனி ஃபீல்'டி. சில விஷயமெல்லாம் இப்பைக்கு தான் ரசிக்க முடியும். அழகாவும் இருக்கும்" என்ற வசந்தி, "என்ற மாமனை மாமா சொல்லவே எனக்குள்ள குஷியாவுது புள்ள" என்றாள்.

"எனக்கு அப்பப்போ தோணும். பெரியவங்க, சட்டுன்னு பேர் சொல்லவும் ஒரு மாதிரி இருக்கும்... இருந்தாலும், அவங்களுக்கு புடிக்கலன்னா என்ன பண்றது?" என்று செந்தாழினி ஒருவித தயக்கமான குரலில் மொழிய, திகழோவியனின் இதழ் மலர்ந்து விரிந்தது.

அதற்கடுத்து, "மேம் லேபுக்கு வர சொல்றாங்க" என்று வேறொரு பெண்ணின் குரல் கேட்க, பதிவு முடிந்திருந்தது.

அவர்களுக்குள்ளான இயல்பான உரையாடல், ஆனால் திகழோவியனுக்குள் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தது.

அதிலும், "கூப்பிடணும் தோணும்" என்ற செந்தாழினியின் அந்நேர குரல் அவனுள் ஏதோ செய்தது.

கல்யாணியைத் தாண்டி நெருக்கமான உறவென்றால் மணி தான். ஆனால் அனைத்துமாகிய முதல் உறவு அவனின் செந்தாழினி.

தொடர்ச்சி கீழே...
 

STN - 03

Member
Staff member
உறவின் உரிமையான அழைப்பு அவளிடமிருந்து வருகையில் எத்தனை சுகமளிக்குமென ஏங்க ஆரம்பித்தான்.

அங்கு ஆய்வுக்கூடத்தில் வகுப்பு முடிந்து பையில் அனைத்தையும் எடுத்து வைத்தவளாக, 'அவங்களுக்கு எப்பவோ கிளாஸ் முடிஞ்சிருக்குமே! போயிட்டாங்களா இருக்காங்களா தெரியல. மெசேஜ் எதுவும் பண்ணியிருக்காங்களா?' என நினைத்துக்கொண்டே அலைபேசியை திறந்தாள்.

வீட்டிலிருக்கும் நேரம் அவனிடமிருந்து எதுவும் தகவல் வந்து பெற்றோர் பார்க்க நேரிடுமோ என அவனது எண்ணை அர்ச்சீவ்வில் போட்டு வைத்திருந்தாள். புலனம் உள் நுழைந்தால் மட்டுமே அவனிடமிருந்து தகவல் வந்திருக்கிறதா என்பது தெரியும். அவள் உள்ளே சென்று பார்க்க,

"டெக்ஸ்ட்டா அனுப்பு" என்று அவன் அனுப்பி வைத்திருந்ததில், "நானென்ன வாய்ஸ் நோட் அனுப்பினேன்" என்று ஓடவிட்டு கேட்டுவளுக்கு மூச்சே நின்றது.

அதிலும் தான் பேசியது...

"அய்யோ... என்ன நினைப்பாங்க" என்று கையை உதறியவள், அவன் கேட்டிருக்கிறானா என ஆராய்ந்துப் பார்த்திட, ஆமெனக்காட்டியது.

இவளுக்கு கையெல்லாம் உதற ஆரம்பித்தது.

"போச்சு... யாரும் தப்பா நெனச்சிப்புடக் கூடாதுன்னு நேர்ல பேசவே யோசிக்கிறாங்க... இதுக்கென்ன சொல்லப்போறாங்களோ" என்று முனகியவள், அந்த குரல் பதிவை இருவருக்கும் சேர்த்து அழித்திருந்தாள்.

அதனை பார்த்துவிட்ட திகழோவியன், "லைப்ரரிக்கு வா!" என செய்தி அனுப்பி வைத்தான்.

ஒருவித படபடப்புடன் வந்து சேர்ந்தாள். பையை வெளியில் கப்போர்டில் வைத்துவிட்டு, உள்ளே செல்வதற்கான வருகை குறிப்பேட்டில் கையெழுத்திட்டவள், உள்ளே செல்லாது தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்தாள்.

மதிய உணவு நேரமென்பதால் நூலகத்தில் யாரும் இல்லை. வெறிச்சோடிக் காணப்பட்டது.

"இவங்க எங்கன்னு தெரியலையே" என்று ஒரு கால் பின்னால் தூக்கியிருக்க, ஒரு கால் நிலத்தில் ஊன்றி, சுவற்றை பற்றிப் பிடித்தவளாக உள்ளே பார்வையை சுழற்றிக் கொண்டிருந்தவள், பின்னால் கேட்ட குரலில் மூச்சை இறுக்கிப் பிடித்தாள்.

"நான் இங்கிருக்கேன்!"

"ஆத்தி..." என்ற அவளின் ஓசை தனது செவியும் நுழைய சன்னமாக முறுவலித்தான்.

"ஏன் இங்க நின்னுட்டு இருக்க..." என்றவன், "உள்ள வா!" என அவளின் பின்னலை பிடித்தவனாக உள்ளே அழைத்துச் சென்றான்.

"நெக்ஸ்ட் க்ளாஸ் இருக்குங்க... பொறவு பேசுவோமா?" என்றவளை கண்டுகொள்ளவே இல்லை அவன்.

"அய்யோ லைப்ரரி சார் இருப்பாங்களேங்" என்று அவள் கூற, அப்போதும் அவளின் பின்னலை விடாது நின்றவன், "சாப்பிட போயிருக்கார். அவர் வரவரைக்கும் என்னை பார்த்துக்க சொல்லியிருக்கார்" என்றான்.

"ஓ..." என்றவள், "நீங்க இப்படிலாம் இல்லைங்ளே... இன்னைக்கு என்ன?" என்றாள்.

அவனும், "இன்னைக்கு என்ன?" என்று புத்தகங்கள் அடுக்கி வைத்திருக்கும் ராக்கிற்கு இடையில் வந்துதான் அவளை விட்டான்.

போக வேண்டுமென்றால் அவனைத் தாண்டித்தான் அவள் செல்ல வேண்டும்.

"பேசவே யோசிப்பீங்க... ஜடையெல்லாம் பிடிக்கிறீங்க?" என்றாள்.

"சரி சொல்லு" என்று கைகளைக் கட்டிக்கொண்டு புத்தக ராக் மீதே பக்கவாட்டில் சாய்ந்து நின்றான்.

"என்ன சொல்லங்க?"

"உனக்குத் தெரியாதா செந்தாழினி" என்றவன் அவளை நெருங்க மெல்ல அடி வைத்தான்.

"நீங்க ஏனுங் கேட்கக்கூடாததெல்லாம் கேட்டீங்... தப்பில்லைங்களா?" என்று திக்கித் திணறியவள், பின்னால் நகர்ந்தாள்.

"நீ அனுப்பி வச்சதை நான் கேட்டேன். அவ்ளோதான். நீ அனுப்பாததை நானென்னவோ ஒட்டுக் கேட்ட மாதிரி சொல்ற" என்ற திகழோவியன் புத்தக ராக் இடித்து நின்றவளின் ஒரு பக்கம் கை ஊன்றியவனாக, புருவத்தை ஏற்றி இறக்கினான்.

"அது... அது... உங்களுக்கு டெக்ஸ்ட் பண்ணிட்டு இருக்கும்போது வசந்தி பேசுனாலுங்களா... உங்களுக்கு லாஸ்ட் மெசேஜ் சென்ட் கொடுத்திட்டு பக்கத்துல மைக் டச் ஆனதே கவனிக்கலங்... மேம் வர சொன்னாங்க சொன்னதும் வாட்ஸ்அப் க்ளோஸ் பண்ணி வைக்கும்போது போற அவசரத்துல சரியா கவனிக்காம சென்ட் ஆகிடுச்சுங்" என்றாள்.

இமைகள் படபடக்கும் அவளின் கருவிழி ஓட்டத்திற்கு திகழோவியனின் விழிகளும் அலைந்தது.

அவனின் அப்பார்வையில் உள்ளுக்குள் இதயம் தடதடக்க, அவளுக்கோ மூச்சினை இழுத்து சுவாசிக்க வேண்டும் போலிருந்தது.

"நான் விளக்கம் கேட்கவே இல்லை."

"வெறேன்னங்?"

"உனக்கு தோணுச்சுல..."

"ஆங்..." அவள் விழிகள் பிளந்து உறைந்தன.

"அய்யோ உங்களுக்கு இன்னைக்கு என்னவாச்சுங்" என்றவளின் விழிகள் அத்தனை நெருக்கமாய் நின்றிருப்பவனின் விழிகளோடு கலந்து சதிராடியது.

"என்னை சொந்தமா நினைச்சு ஒரமுறை சொல்லிக் கூப்பிடப்போற மொத சொந்தம் நீதான்" என்று நெஞ்சக்கலங்களோடு, குரல் தவிப்பில் மூழ்க திகழோவியன் சொல்லிட...

கலங்கிவிட்ட கண்களோடு தன்னைப்போல், "மாமா" என அவளின் இதழ்கள் உச்சரித்திருந்தன.

சட்டென்று அவளின் கன்னம் தாங்கி தலை முட்டி நின்றவன்,

"எதுக்கும் ஆசைப்பட்டதெல்லாம் கிடையாது. கிடைக்காது தெரியும். உன்மேல இந்த ஆசை எப்படின்னு தெரியல. பிடிச்சிருக்கு... ரொம்ப..." என்றான்.

அவனின் ஒற்றைத்துளி கண்ணீர் அவளின் பாதம் சொட்டியது.

"மாமா..."

"சொல்லிக்க சொந்தமுன்னு இருந்தும் இல்லாத நிலையிலதான் நான்" என்றவன், தன்னுடைய குடும்ப சூழலை அன்று தான் அவளிடம் தெளிவாகக் கூறினான்.

தாயின் அன்புச்சிறை, தந்தையின் ஒதுக்கம்... அதில் தனது மனம் கொள்ளும் அவஸ்தை, இழந்த சிறு சிறு விருப்பங்கள், ஏன் எதற்கென புரியாத காரணங்கள் எல்லாம்... எல்லாம் கூறினான்.

"உன்னை மட்டும் நான் இழந்திடவேக்கூடாது தாழினி" என்றவன் விலகி நின்று, ஈர விழிகளோடு அவளின் முகம் பார்த்து...

"ஐ லவ் யூ டி" என்றான்.

இதுநாள் வரை அவனின் தன்மீதான காதல் மனதை மட்டுமே அறிந்திருந்தவளுக்கு, அவனது மனதின் வேதனை பக்கங்கள் தெரிந்திட, அவனுக்காக துடித்திட்டாள்.

அவன் இதுநாள் வரை மூன்று வார்த்தையாக சொல்லாத காதலை இன்று அவன் சொல்லிட,

அவனுக்காக தவித்து நின்றவள்,

"மாமா" என்ற அழைப்போடு அவனின் நெஞ்சம் சேர்ந்திருந்தாள்.

"தாழினி... என்ட்ர செந்தாழினி" என்று மென் அணைப்பில் அவளுடன் இணைந்தான்.

காதலாக மனம் விரும்பும் பெண்... தனக்கான பெண்... தன்னை உயிராய் நேசிக்கும் பெண்... அழைத்திடும் உரிமையான விளிப்பு... அதற்கு ஈடுண்டோ!

'உலகமே தன்னுடைய கையில் குவிந்து நிற்கிறது.' அக்கணம் திகழோவியனின் மனம் அதனைத்தான் நினைத்திருந்தது.

தன்னுடைய அவ்வழைப்பில் அவன் ஏங்கும் உறவுகளின் வெறுமையுணர்வு விரட்டியடிக்கபடுகிறது என்று தெரிந்த பின்னர் அவ்வாறு அழைத்திட தயங்கிடுவாளா என்ன?

இருவருக்குள்ளும் அவ்வழைப்பு இயல்பான ஒன்றாகியது.

ஒருநாளில் பலமுறை அவள் அவ்வாறு அழைத்தாலும், முதல் அழைப்பும், முதல் அணைப்பும் அவனது நினைவில் குளிர்ந்து நிறையும்.

"காலேஜ் போவலையா நீ? இப்போ கால் பண்ணியிருக்க?" திகழோவியன் கேட்க,

"நம்மட காலேஜுக்கு மொத இருக்க ஸ்டாப்பில் நிக்கிறேனுங் மாமா. நீங்க எங்க வாரீங்கங்?" என்றாள் செந்தாழினி.

"பத்து நிமிஷத்துல வாரேன்" என்ற திகழோவியன், அவள் சொல்லிய நிறுத்தம் வர, அங்கிருந்த நிழற்கூடத்தில் அமர்ந்திருந்தாள் செந்தாழினி.

"இங்கென்னடி" என்றவன் வண்டியைவிட்டு இறங்கும் முன்பு, அவனுக்கு பின்னால் ஏறி அமர்ந்தாள்.

"எங்கப்போவனும்?"

"உக்கடம் லேக் போவலாங்களா?"

"காலேஜ் போவலையா?"

"லீவு!"

"உனக்கு மட்டுமா?"

"ஏனுங் மாமா கேள்வியா கேட்கிறீங்க... போங்கங். எங்கவூரு பஸ் வருது" என்று அவனின் தோளில் தட்டினாள்.

"நான் லீவ் சொல்ல வேணாமா?"

"அங்கபோய் சொல்லிக்கலாங் மாமா" என்றவள் தனது துப்பட்டாவை எடுத்து தலையில் சுற்ற, திகழோவியன் தன்னுடைய ஹெல்மெட்டைக் கழட்டி அவளிடம் கொடுத்தான்.

"நைட்டு கால் பேசும்போது எதுவுமே சொல்லல" என்று திகழோவியன் வண்டியை செலுத்தினான்.

"நாளன்னையிலிருந்து ஸ்டடி லீவ். அடுத்தவாரம் பரீட்சை ஆரம்பமாவுது. பொறவு நம்ம கோயம்புத்தூருக்கே ஒரு கும்புடுதான். அம்புட்டு லேசுல என்ட்ர ஐயன் வெளியவிடமாட்டாங்க. மொபைல்லே லவ் பண்ண வேண்டியதுதான்... அதான் இன்னைக்கு உங்களோட..." என்றாள்.

"சடன் பிளானா?"

"ஆமா... காலையில பவளமல்லி பறிக்கும்போதுதான் தோணிச்சு."

"பூ வச்சிருக்கியா? நானு கவனிக்கலையே!"

"உம்மட மொகமே வாட்டமா இருக்குங் மாமா. மனசுல வெறென்னவோ வருத்தமிருக்காப்ல தெரியுது. அதான் என்னைய முழுசா கவனிக்கலங் நீங்க" என்றவள், "உம்மட ஊர்ல என்ட்ர ஒரமுற யாரோ இருக்காங்களாட்டுக்கு. காலையில ஐயன் பேசிக்கிட்டு இருந்தாங்க. நாலு நாள்ல குலசாமிக்கு படையல் போடுறோம். அதுக்கு அவங்களையும் கூப்பிடணும் பேசிக்கிட்டாங்க. கோவிலும் அங்கதான் இருக்காம். எனக்கே இப்போதான் தெரியும்" என்றாள்.

"ஆமாவா?" என்ற திகழோவியன் ஏரி வந்ததும் வண்டியை நிறுத்தியிருந்தான்.

உக்கடம் ஏரி கோவை நகரின் முக்கியமான ஏரிகளில் ஒன்று. இது கோவை நகர மையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது.

ஏரிக்கரையில் நடைபயிற்சி செய்யவும், பறவைகளை ரசிக்கவும், சூரிய உதயம் மற்றும் அஸ்தமனக் காட்சியை பார்க்கவும் பலர் வருகிறார்கள். குறிப்பாக மழைக்காலம் மற்றும் குளிர்காலத்தில் காட்சி மிகவும் அழகாக இருக்கும்.

"ஐ லவ் கோவை" என்ற எழுத்துக்கள் அவ்விடத்திற்கு மேலும் அழகு சேர்த்தது.

"இன்னைக்கு பொழுது இங்கதானா" என்ற திகழோவியனின் கையை பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள் செந்தாழினி.

"இங்க கொஞ்ச நேரம், மதியத்துக்கு மேல ஆதியோகி போகலாம்" என்றவள், "பைக் ஓட்ட சொல்லித்தாங்க... நேரம் ஓடிடும்" என்றாள்.

செந்தாழினியின் விழிகளில் குழந்தைத்தனமான உற்சாகம் துள்ளிக் கொண்டிருந்தது.




"உனக்கா?"

"கத்துத் தர்றீங்ளா இல்லைங்ளா?"

அவளின் ஆர்வத்தை ரசித்தவன் சிரித்தபடி தலையசைத்தான்.

ஏரியைச் சுற்றியிருந்த சாலையில் மக்கள் நடமாட்டமில்லாது இருந்த ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்து வண்டியை நிறுத்தினான்.

செந்தாழினி வண்டியை விட்டு இறங்க, இருந்த நிலையிலிருந்து பின்னால் தள்ளி அமர்ந்தவன், "இங்க உட்காரு" என்று தனக்கு முன்னால் தட்டிக் காண்பித்தான்.

"நானா?"

"பின்ன நானா!" என்று அவளின் தலையில் வலிக்காது கொட்டியவன், "இங்க உட்காராம எப்படி வண்டி ஓட்ட கத்துப்ப" என்றான்.

செந்தாழினி வெட்கத்தோடு அவனைப் பார்த்தாள்.

"என்ன?"

"நீங்க பின்னாடி?"

"பைக் ஓட்டக் கத்துக்கணும்னு சொன்னியே. வேறெப்படி சொல்லித்தர்றது?"

சரியென தலையை உருட்டியவளாக முன்புறம் அமர்ந்தாள்.

திகழோவியன் அவளின் இருபுறமும் கரங்களை நீட்டி ஹேண்டிலைப் பற்றினான்.

அவனின் நெருக்கத்தில் செந்தாழினியின் இதயம் தாறுமாறாகத் துடித்தது.

"மாமா..."

"ம்?"

"இப்படி நெருக்கமா இருந்தா எப்படிங் வண்டி ஓட்டுறது?"

"நெருக்கமா இல்லாம எப்படி கத்துக்குடுக்குறது?" என்றவனின் இதழ் சிரிப்பில் துடித்தது.

"சீண்டுறீங்களாங் மாமா!"

"ச்ச... ச்ச..." என்றவன், "கிளட்ச் இதுதான். ஆக்ஸிலேட்டர் இதுதான். மெதுவா விடு" என்றான்.

அவள் சொன்னபடி செய்ய, வண்டி திடீரென்று குலுங்கி நின்றது.

"அய்யய்யோ!" என்று பதறியவள் உடனே அவன் கையைப் பிடித்தாள்.

"அடடா... இன்னும் ஸ்டார்ட்டே பண்ணல."

"தெரியாமப்போச்சுங்."

"அதான் நான் இருக்கனே."

சாதாரண வார்த்தை தான். ஆனால் அர்த்தம் நிறைந்ததல்லவா! அந்த வார்த்தை அவளின் உதட்டில் மெல்லிய புன்னகையை வரவழைத்தது.

மீண்டும் முயற்சித்தாள். வண்டி மெதுவாக முன்னே நகர்ந்தது.

"அப்படித்தான்... சூப்பர்" என்றான்.

காற்று முகத்தில் மோத, செந்தாழினியின் மகிழ்ச்சி இரட்டிப்பானது.

"மாமா... நானே ஓட்டுறேனுங்க!"

சிறிது தூரம் சென்றதும் பயத்தில் மீண்டும் அவனின் கையைப் பற்றிக்கொண்டாள்.

"விழுந்துடுவேனோ?"

"நான் இருக்கும்போது எப்படி விழுவ. நேரா ஓட்டு!"

அவனின் கன்னம் அவளின் கன்னம் உரச, அவனது முகம் அவளின் தோள் பதிந்திருந்தது. அவனது கவனம் முழுக்க, அவளுக்கு பயிற்றுவிப்பதில் இருக்க, அவளுக்கோ அவனுடனான நெருக்கம் குறுகுறுக்க வைத்தது.

"மாமா..." திணறலாய் அவனது செவி மோதியது அவளின் அழைப்பு.

"என்னடி?" என்றவன் அவள் கையில் தடுமாறிய வண்டியை பிடித்து நிலையாக நிறுத்தினான்.

"வண்டி ஓட்டும்போது கவனம் முன்னாடி ரோட்ல இருக்கணும்" என்றவன், அவளை பார்க்க, அவளோ பக்கவாட்டில் அவனை பார்வையால் தீண்டிக் கொண்டிருந்தாள்.

"இன்னைக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குங்க. உம்மட கூட இப்படியே வாழ்ந்துடனுங்க மாமா" என்ற செந்தாழினியின் கண்கள் கலங்கின.

"ம்ப்ச்... தாழினி" என்று அவளின் கண்களை துடைத்தவன், "உனக்கு பார்க்கணும் தோணும்போதெல்லாம் சொல்லு. நான் வர்றேன்" என்றான்.

"மாமா..."

"ம்?"

"நான் உங்களை ரொம்ப நிறைய லவ் பண்றேனுங்க." அவள் மெதுவாகச் சொல்ல, அந்த வார்த்தை காற்றில் கரைந்து அவனது இதயத்தை வருடியது.

"சொல்லணுமா?" என்று அவளின் தலையை மெல்ல இடித்தவன், "என்ட்ர மொத்த சந்தோஷமும் நீதான். உன்னை என் கைக்குள்ள எப்படி கொண்டுவர்றனும் தெரியும்" என்றான்.

இருவரின் பக்கவாட்டு ஓரவிழிப் பார்வையில் நேசம் மீதூறியது.

ஏரிக்கரையில் வீசிய தென்றலோ, நீரில் மின்னிய சூரிய ஒளியோ, தண்ணீரின் சலசலப்போ... எதுவும் இருவரின் உலகத்திற்குள் நுழைய முடியவில்லை.

அவர்களின் உலகத்தில் நிறைந்திருந்தது முழுக்க காதலே!

இங்கு எதுவொன்று அதிகம் கொள்கிறதோ அதற்கு ஆயுள் குறைவென்பது தானே நியதி. அதற்கு அவர்களின் காதலும் விதிவிலக்கல்ல.

எந்தளவிற்கு நேசம் சுமந்து நெருக்கம் கொண்டார்களோ... அவையெல்லாம் நான்கு நாளில் கானல் நீராக மாறவிருக்கிறது.

ஒருவருள் ஒருவர் காதலாய் பார்வையில் நிறைந்திருக்க நாளையை அறியாமல்

ஒருவரின் நெஞ்சில் ஒருவர்
உயிராக வாழ்ந்து கொண்டிருந்தனர்.


❤

நெஞ்சில் உயிர் நிறையும்...
 
Top Bottom