உந்தன் உயிராக 13
அன்று ஞாயிற்று கிழமை...
அலுவலகம் செல்ல வேண்டியதில்லை என்பதால் திகழோவியன் வழக்கமாக எழும் நேரம் கடந்தும் மெத்தையில் உருண்டு கொண்டிருந்தான்.
அலைபேசி அழைப்பில் சோம்பலாக எழுந்தமர்ந்து கண்களை தேய்த்தவனாக, தலையணைக்கு அருகில் கையை துழாவி அலைபேசியை எடுத்து யாரெனப் பார்த்தான்.
கல்யாணி அலைபேசியை ஆராய்ந்ததற்கு பிறகு தன்னவளின் பெயரை தனது பெயரிலே சேமித்திருந்தான்.
திகழோவியன் எனும் பெயர் திரை ஒளிர, "Mrs.திகழோவியன்" என அவனது உதடுகள் உச்சரித்து விரிந்தன. கண்களில் சட்டென்று படர்ந்தது சிறு மின்னல்.
அறைக்கதவு தாழிட்டிருக்கிறதா என்று பார்த்தவன், அழைப்பை ஏற்றிருந்தான்.
"மாமா வீடியோ கால் பண்ணட்டுங்ளா?"
"எதுக்காம்? பண்ணும்போதே வீடியோ காலா பண்ண வேண்டியதுதான!"
"அத்தை பக்கட்டிக்கு இருந்தா..." என்றவள், "பண்ணக்கூடாதுங்களா?" என்றாள்.
"அடியேய்... உன்ற கால் சத்தத்துலதான் எழும்பவ செய்தேன். தூங்குமூஞ்சியா இருக்கேன் தாழினி" என்றான்.
"ஓ... எப்படியிருந்தாலும் எனக்கு ஓகேதானுங் மாமா!"
"எப்படியிருந்தாலுமா?"
அவனது குரல் மாறுபாட்டில் என்ன புரிந்ததோ, "அப்போ உம்மட ஊர் கோவிலுதானுங்... வந்துபுடுங்கங்" என்றாள்.
"கோவிலுக்கு வந்தாச்சா?" என்று திகழோவியன் கேட்க,
"வீட்டை விட்டு பத்து நிமிஷத்துல கிளம்பிடுவோமுங்" என்றவள், "வீடியோ கால் வரமாட்டீங்களாங் மாமா?" எனக் கேட்டாள்.
"என்ன குரல் சோருது... கூப்பிடுறேன் வைம்மா" என்ற திகழோவியன், காணொளி அழைப்பு விடுத்து தனக்கு முன் அலைபேசியை நிறுத்தி வைத்தவனாக முகத்தை அழுந்த துடைத்து, முன்னுச்சி கேசத்தை இரு கைகளையும் சரி செய்துகொண்டிருக்க, செந்தாழினி அழைப்பை ஏற்றிருந்தாள்.
திரை நிறைத்த அவளின் தோற்றத்தில், அவனது கைகள் அசைய மறுத்து, விழிகள் உறைந்து கருவிழியில் மையல் குவிந்தது.
அவனது அசையா பார்வையில் உடல் கூச்செறிய, "ஏனுங் மாமா வச்ச கண்ணு எடுக்காம பாக்குறீங்கங்?" என்றவள், "நல்லாயிருக்கா?" என்று பின்னால் நகர்ந்து தனது முழு உருவமும் தெரியும்படி நின்றாள்.
"வெட்கப்பட வைக்கிற தாழினி" என்றவன், "அழகா இருக்கீங்க Mrs.திகழோவியன்" என்றான்.
"அச்சோ மாமா!" என்று இரு கைகளாலும் முகம் மூடியவள், "நீங்க சொன்னது நல்லாயிருக்குதுங்க!" என்றாள்.
'கரைய வச்சிடுவா!' அவளின் நாணத்தில் அவன் செம்மை கொண்டான்.
"ம்ப்ச்... மொகம் காட்டு தாழினி!"
"வெட்க வெட்கமா வருதுங் மாமா!" என்றவள் கையை விலக்கியவளாக முன்னாடி வந்தமர்ந்தாள்.
அலங்கார கண்ணாடி முன்பு அவளின் அலைபேசி நிறுத்தி வைக்கப்பட்டிருக்க, அதன் முன் இருக்கையில் அமர்ந்தவள்,
"அம்மா புடவைதான் கட்டோணும் சொல்லிப்புட்டாங்க மாமா... மொத முறை கட்டுனதும், உங்களுக்கு காட்டணும் தோணிச்சுங்" என்று சொல்லிக் கொண்டே, நெருக்க அடர்த்தியாய் கட்டிய பவளமல்லி சரத்தை எடுத்து தலையில் சூடினாள்.
இரு கைகளையும் உயர்த்தி தலைக்கு பின்னால் மலரோடு சேர்த்து வைத்து, ஒற்றை கையால் சரம் கீழே விழாது பிடித்துக் கொண்டவளாக, மாற்றி கரத்தில் கொண்டை ஊசியை எடுத்து, கீழ் உதட்டில் அழுந்த வைத்து கடித்து முனை நீக்கியவளாக பூவில் வைத்து முடியோடு சேர்த்து சொருகினாள்.
"மூச்சு முட்டுது..." என தலையை இரு பக்கமும் உலுக்கியவனாக வெளிப்படையாய் முனகியிருந்தான் திகழோவியன்.
"என்னதுங் மாமா?"
"மனுஷனை உசுப்பேத்தன்னே கால் பண்ணியா?" என்றவன், "கொல்றடி!" என்றான். எப்போதுமே அவன் குரல் காட்டிடாத கிறக்கம்.
"மாமா... " என்றவளிடம் குழைவு.
"பூ எடுத்து முன்னால விடு தாழினி" என்றவன், அவள் செய்ததும், "உன் பரீட்சை முடிஞ்சதும் வீட்ல சொல்லிடலாம் தோணுது" என்றான்.
"இன்னும் ரெண்டு வருஷம் போவட்டும் சொன்னீங்க?"
"அதுவரைக்கும் தாங்குவேனான்னு தெரியல" என்றவன், இரு கைகளாலும் முகத்தை அழுந்தத் தேய்த்தான்.
அவனது வார்த்தையிலும், செயலிலும் இமை தாழ்ந்தவள், கீழ் உதட்டை அழுந்த கடித்து விடுத்தாள்.
"சொல்லிடலாமா?"
"பிரச்சனை ஆவாதுங்களாங்க?"
"ஆவும்தான்... சமாளிக்கணும்... சமாளிக்கலாம்!"
"உன்ற ஐயனுக்கும், பக்கத்து வீடு ராஜேந்திரன் மாமாவுக்கும் என்ன சடவு?" என்று திகழோவியன் கேட்டதில், அவன் கூறிய மாமா என்ற வார்த்தையை கவனியாதவளாக, "அவங்க ரெண்டு பேரும் சின்னப்பிள்ளையில இருந்தே ஏன் எதுக்குன்னு தெரியாமலே இந்த வயசு வரைக்கும் ஓரியாட்டாம் கட்டிக்கிட்டு இருக்காங்க" என்றாள்.
"ஹ்ம்ம்..."
"ஆமாங்... நீங்க ஏனுங் அவங்களை கேட்கிறீங்... உங்களுக்கு எப்படிங் தெரியும்?" என்று அவள் கேட்கும்போதே, "செந்தா எம்மா நேரம் கிளம்புவ? உன்ற ஐயன் என்ட்ரகிட்ட ஏறுராறு" என்ற தேவகியின் குரலில், "அய்யோ அம்மா கூப்பிட்டுட்டாங்கங்... கோவில்ல பார்ப்போமுங்க மாமா" என்றவள் அலைபேசியை அணைக்க... அணையும் முன்பு,
"மெரூன் கலர் பொட்டு வை தாழினி" என்றவனின் குரல் அடங்கியது.
செந்தாழினி அலைபேசியை வைத்ததும், முந்தைய நிமிடங்களுக்கான மகிழ்வு திகழோவியனின் முகத்தில் மிச்சம் கொண்டிருந்தது.
அம்மகிழ்வுடனே எழுந்து குளித்து தயாராகி அறையைவிட்டு வெளியில் செல்ல, கூடத்தில் கோவிந்தன் கோபமாக நின்றிருந்தார். கல்யாணி இருக்கையில் அழுத்தமாக அமர்ந்திருந்தார்.
"என்னங்காச்சு?" திகழோவியன் இருவருக்கும் பொதுவாய் வினவினான்.
அவனது தோற்றத்தைக் கண்ட கோவிந்தன்,
"எங்குமாச்சும் வெளியில போறியா?" எனக் கேட்டார்.
"ம்ம்... ஃப்ரெண்ட் பார்க்கங்!"
"பொறவு பார்த்துக்கிடலாம். என்ட்ர கூடால கோவிலுக்கு வா!" என்றார்.
என்றுமில்லாதவர் கூப்பிடவே, எந்த கோவிலெனக்கூட கேட்காது.
"போலாங்... வண்டி எடுக்கட்டுங்களா?" என்றான் திகழோவியன்.
"நம்மட கோவிலுக்குத்தான். நடந்தே போவலாம்" என்ற கோவிந்தன், முன்னால் அடி வைக்க, திகழுக்குள் தானாக ஒரு உற்சாகம். அவனும் தன்னவளை காண அங்குதானே செல்லவிருந்தான்.
"போய் வாரேனுங்மா" என்று கோவிந்தனின் பின்னால் நடந்தான் திகழோவியன்.
உட்கார்ந்திருந்த கல்யாணி வேகமாக ஓடிவந்து திகழோவியனுக்கு முன் கைகளை விரித்து மறித்து நின்றார்.
"என்னங்மா?"
"நீ அக்கட்டிக்கு போவக்கூடாது."
கோவிந்தன் நின்று திரும்பியிருந்தார்.
"நீ போவக்கூடாது. அவ்ளோதான்."
"உனக்கு என்னதான் பிரச்சினை கல்யாணி. கோவிலுக்கு போயி வாரதுல என்னவாகிடப்போவுது. ரெண்டு நாளுக்கு முன்ன நாராயணன் வந்து சொல்லிப்புட்டு போவும்போது அமைதியாதான இருந்த. இப்பைக்கு வா போயி வருவோம் கூப்பிட்டாக்கா வர முடியாதுன்னு சடவு காண்பிக்கிற. வரவனையும் தடுக்கிற!"
"நீங்க எங்கமாச்சும் போங்கங்... அவனை ஏன் புதுசா கூட்டு சேக்குறீங்க?"
"புதுசாவா?" என்ற கோவிந்தன், "உன்ற ஆட்டத்துல நான் அவனைவிட்டு எட்ட நின்னதுதான் தப்பு" என்றார்.
இருவருமே பேசிக்கொள்வது திகழோவியனுக்கு விளங்கவில்லை. புரியாது பார்த்து நின்றிருந்தான்.
"ஒரு தடவை சொன்னா புரியாதுங்களாங்... தலைவலியா இருக்குது. திகழ் என்ட்ர கூட இருக்கட்டும். நீங்க போவனும், உங்க சொந்ததுக்குள்ள உறவாடணும்ன்னா தனியா போங்களேன். அவனை ஏன் கூட்டு சேக்குறீங்க?" என்று கோபமாகப் பேசினார் கல்யாணி.
"அடிக்கடி தலை வலிக்குதுன்னு சொல்றீங்களேங்மா. டாக்டர்கிட்ட போய் வாருவோங்களாங்மா" என்றான் திகழோவியன்.
"அம்மா மேல இன்னைக்குதான் கரிசனமும் பாசமும் பொங்குதா சாமி?" என்ற கல்யாணி, "இப்போலாம் நான் உனக்கு ஆவாதவளாகிப்புட்டேன்" என்றார்.
"அப்படிலாம் இல்லங்மா! ஏன் இப்படிலாம் பேசுறீங்கங்" என்ற திகழோவியன் கோவிந்தனைப் பார்க்க,
"அவளுக்கெல்லாம் ஒரமுறன்னு யாரும் வேணாம். பொறந்தவூர் மனுசங்களையே எட்ட வச்சிருக்கவகிட்ட, என் சொந்தபந்தம் கூட வந்து நில்லுன்னு எப்புடி சொல்றது" என்றார் கோவிந்தன்.
"திகழு நீ போவக்கூடாது. ரூமுக்கு போ!" என்ற கல்யாணி அவனின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு அவனது அறை நோக்கிச் சென்றார்.
"ம்மா என்ன பண்றீங்கங்மா" என்று அவரின் கையை பிரித்து வைத்தவன், "உங்களுக்கு ஒரமுற இருக்காங்களாங்?" என்றான் கோவிந்தனிடம்.
"என் சித்தப்பா மகன் இருக்கான். தொண்டாமுத்தூர்ல. இருக்கற ஒரே சொந்தம் அவன் தான்" என்ற கோவிந்தன், "அவன்தான் இன்னைக்கு நம்ம குலசாமி கோவில்ல படையல் வச்சிருக்கான்" என்று சொல்லும்போதே திகழோவியனின் இதயம் அதிர்வை உள்வாங்கியது.
'இருக்காது... இருக்காது...' என்று நெஞ்சை நீவிக் கொண்டவனின் காதில், "எம்மட குலசாமி கோவிலு உம்மட ஊர்லதான் இருக்காங் மாமா! படையல் போடணும் ஐயன் சொன்னாங்க" என்ற செந்தாழினியின் குரல் வேறு நேரங்காலமில்லாது அவனது செவிக்குள் நுழைந்து அவனுள்ளத்தில் பெரும் பிரளயத்தையே கிளப்பியிருந்தது.
இல்லையென்பதை உறுதி செய்திடவே, கல்யாணி மறுக்க மறுக்க கோவிந்தனுடன் கோவிலுக்கு வந்திருந்தான் திகழோவியன்.
இருவரும் இணைந்து நடந்தாலும் பேச்சென்பது இல்லை.
திகழோவியனின் இதயம் தடத்தடத்துக் கொண்டிருந்தது. அவனின் மனம் வேண்டாத ஒன்று நடக்கயிருப்பதை அவனுக்கு அறிவித்துக் கொண்டிருந்தது.
தன் மனம் கூறுவதைப்போன்று இல்லையென்பதை உறுதி செய்துகொள்ள, தானே பேசினான் திகழோவியன்.
"ஏனுங்க நம்மட கூட அவங்க ஒட்டுதலா இல்லை. இத்தனை வருஷத்துல இன்னைக்குதான் சொல்லியே இருக்கீங்க?"
"கல்யாணியை நான் கட்டிக்கிறதுல அவனுக்கு உடன்பாடில்லை. அதனால ரெண்டு குடும்பத்துக்கு போக்குவரத்தில்லாமப் போச்சு. கல்யாணி அண்ணனுக்கும், என்ட்ர தம்பிக்கும் எப்பவும் வாய்க்காத் தகராறு தான்... அதனால இவளுக்கும் எனக்குன்னு இருக்க ஒரேயொரு சொந்தத்து மேலயும் பந்தமில்லாப் போச்சு" என்றார் கோவிந்தன்.
அவர் சொல்லும் யாவும் அவனுக்கு உவப்பானதாகவே இல்லை. எல்லாம் அவனது காதலை வேறு பாதைக்கு மாற்றியமைக்கும் காரணியாகவேப்பட்டது.
கோவிலினுள் நுழைந்ததும் திகழோவியனின் கண்கள் செந்தாழினியைத் தேடித்தான் சுழன்றது.
"வாங்க... வாங்கண்ணா..."
"வாங்க மாமா" என்ற வரவேற்பு குரலைத் தாண்டி,
"இவன் தான் என்ட்ர தம்பி நாராயணன், இது அவன் பொண்டாட்டி தேவகி" என்று திகழோவியனை முதல்முறையாக தொட்டு, அவன் கவனத்தை தங்கள் பக்கம் திருப்பி அறிமுகம் செய்து வைத்தார் கோவிந்தன்.
கோவிந்தன் கூறிய இருவரின் பெயரிலே, அவனது இதயம் எரிமலையாய் பொங்கத் துவங்கியது.
'கூடாது... அப்படி இருக்கக்கூடாது... இல்லை... இல்லை...' என திகழோவியன் உள்ளுக்குள் மறுக,
"வா கண்ணு" என்றிருந்தனர் நாராயணன், தேவகி.
முடியவே முடியாது புன்னகைத்திருந்தான் திகழோவியன்.
"உன்ற பொண்ணு எங்க நாராயணா? அவள் பொறந்தப்போ பார்த்தது" என்று கோவிந்தன் கேட்க,
"இக்கட்டிக்குதான்... தண்ணி மொள்ள கிணத்துக்கு போயிருக்கு" என்று நாராயணன் கூற, "தோ வந்துட்டா" என்ற தேவகி, அங்கு அவர்கள் நின்றிருந்த இடத்திற்கு பத்தடி தூரத்தில் பொங்கல் பானையில் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தவளை,
"செந்தா..." என்று அழைத்திருந்தார்.
அவர் உச்சரித்த அந்தப் பெயரிலே திகழோவியனின் உலகம் தட்டாமாலை சுற்றியது. தள்ளாடி நிற்க முடியாது, கண்கள் இருட்டிக்கொண்டு வர, "ப்பா..." என்று உச்சரித்தவன் கோவிந்தனின் கையை இறுகப்பற்றி நின்றான்.
"என்னமாச்சு திகழு" என்ற கோவிந்தன், அவனை அங்கிருந்த கல்லின் மீது அமர்த்தினார்.
தேவகி கூப்பிட்டாரென்று வந்து கொண்டிருந்த செந்தாழினி,
"சொம்புல தண்ணி மொண்டா செந்தா" என்ற குரலில், திரும்பிச்சென்று மீண்டும் வந்தாள். நீர் நிறைந்த குவளையோடு.
"காலையில சாப்பிடலையா கண்ணு. பழம் கொண்டாரவா?" என்று தேவகி கேட்க,
"அதெல்லாம் வேணாமுங்" என்றவன், "நானு வூட்டுக்கு போவட்டுங்களாங்ப்பா?" என்றான்.
அதற்குள் செந்தாழினி அவர்களின் அருகில் வந்திருந்தாள். கல்லின் மீது அமர்ந்திருந்தவனை மூவரும் சூழ்ந்து மறைத்தவாறு நின்றிருக்க, திகழோவியனை அவளால் பார்க்க முடியவில்லை.
"இந்தாங்மா தண்ணி" என்று அவர் முன் குவளையை நீட்ட,
"அண்ணனுக்கு குடு செந்தா" என்று தேவகி விலகிட, கண்களில் வெறுமை குடிகொள்ள, அங்கு அமர்ந்திருந்தவனைப் பார்த்ததும் நிகழ் புரியாது நெற்றி சுருங்க தன்னவனைப் பார்த்தவள் அசையாதிருக்க...
"என்னடி அப்படியே உறைஞ்சு நிக்கிறவ... உனக்கு பெரியப்பாரு மகனாவுது. உன்ற அண்ணன் தான். தண்ணியை குடு" என்று அவளின் தோளில் தட்டினார்.
செந்தாழினி சட்டென்று கன்னம் வழிந்திட்ட நீரை வேகமாக புறங்கை கொண்டு துடைத்தவளாக குவளையை திகழோவியனிடம் நீட்டினாள்.
"வாங்கி குடிப்பா" என்ற நாராயணன், மகளிடம் திரும்பி, "என் பெரியப்பா மகன் இவங்க. பேரு கோவிந்தன். உன்ற பெரியப்பா" என்று கோவிந்தனை அறிமுகப்படுத்தினார்.
இத்தனை வயதுக்கு மேல் இப்படியொரு உறவு தேவைதானா என்று இரு இளம் உள்ளங்களும் சத்தமின்றி கதறிக் கொண்டிருந்தனர்.
உலகமே நின்றுவிட்டது போல இருந்தது.
செந்தாழினியின் கையில் இருந்த நீர் நிறைந்த குவளை லேசாக நடுங்கியது. அதில் அலைந்த நீர் போலவே அவளின் மனமும் சிதறி ஓடியது.
"உனக்கு பெரியப்பாரு மகனாவுது... உன்ற அண்ணன் தான்..." வார்த்தைகள் மீண்டும் மீண்டும் காதுக்குள் ஒலித்தன.
'இல்லை... இல்லை... இல்லை...'
அவள் மனம் அதை ஏற்க மறுத்தது.
மூன்று வருடங்களாக தனது இதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும் வாழ்ந்தவன்... தனது எதிர்காலம் என்று நினைத்தவன்... தனக்காகவே பிறந்தவன் என்று நம்பியவன்...
'அண்ணனா?' மூச்சு அடைத்தது. இதயத்தை கசக்கி பிழியும் வலி. ரத்தம் சொட்ட சொட்ட ஈட்டியை இறக்கி குடைவது போன்ற ரணம்.
திகழோவியனின் நிலையும் அதைவிட வேறாக இல்லை.
காலையில் காணொளி அழைப்பில்,
"அழகா இருக்கீங்க Mrs.திகழோவியன்..." என்று கூறிய தன் குரல் இப்போது அவனுக்கே அருவருப்பாகத் தோன்றியது.
சில நிமிடங்களுக்கு முன்பு வரை திருமணத்தைப் பற்றி நினைத்தவன்...
இப்போது அதே பெண்ணை தங்கை என்று ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை.
விதி இவ்வளவு கொடூரமாக விளையாடுமா?
"தண்ணிய குடிப்பா கண்ணு..." என்ற நாராயணனின் குரலில் திகழோவியன் நிகழ்வுக்கு வந்தான்.
செந்தாழினி நீட்டிய குவளையை வாங்கினான்.
அவளின் விரல்கள் நடுங்கின.
அவனது விரல்களும் நடுக்கத்தை பிரதிபலித்தன.
ஒரு கணம்... ஒரே ஒரு கணம்...
இருவரின் பார்வையும் சந்தித்தது. முட்டி மோதி கதறி துடித்தது. கண்ணில் உடைப்பெடுக்கும் நீரில் கலந்து உருகியது காதலின் அதீத உயிர்ப்பு.
அவர்களின் பார்வையில்... காதல் இருந்தது. வலி இருந்தது. இதயம் பிளவுறும் வேதனை இருந்தது. ஆனால் விழிகள் பேசிடும் வார்த்தைகள் இல்லை.
திகழோவியன் குவளையை உதட்டில் வைத்தான். தண்ணீர் தொண்டைக்குள் இறங்கவில்லை. எரிந்த நெருப்பு ஒன்றால் உள்ளம் கொதித்தது. காந்தியது.
"என்னப்பா உடம்பு சரியில்லையா?" கோவிந்தன் மீண்டும் கேட்டார்.
"கொஞ்சம் தலை சுத்துதுங்ப்பா..." என்று எப்படியோ சொன்னான். அடைத்த தொண்டை கரகரத்தது.
செந்தாழினி அவனின் வார்த்தைகளில் கண்களை மூடிக்கொண்டாள்.
அவனுக்கு தலைசுற்றவில்லை.
உயிரே சுற்றிக்கொண்டிருந்தது.
தங்களின் காதலுக்கு இப்படியொரு முடிவுரை இருக்குமென்று இருவருமே நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள்.
இன்னமும் அந்த நொடியை கடந்திட முடியாது காதல் உள்ளம் இரண்டும் தகித்துக் கொண்டிருக்க... பொங்கல் வைப்பதற்கான வேலைகள் பரபரப்பாக நடக்கத் துவங்கின.
உறவினர்கள் பேச்சு சத்தம், சிரிப்பின் ஓசை, குழந்தைகளின் துள்ளல் எல்லாம் கொண்டாட்டமாய் அவ்விடம் நிறைந்திருக்க... அந்த கூட்டத்தின் நடுவே இரண்டு உயிர்கள் மட்டும் தனித்தீவுகளாய் நின்றிருந்தன.
ஒருவரை ஒருவர் முகம் பார்க்காமல் இருக்க முயன்றனர். பெரும் பிரயத்தனம் செய்தனர்.
'உறவுமுறை வேறென்றால் கொண்ட நேசம் இல்லையென்றாகிடுமா? இது கடைசி வரை தெரியாமலே போயிருந்தால்? செந்தா எப்பவும் எனக்குன்னு இங்க ஒரு சத்தம் கேட்டுட்டே இருக்கே' என நெஞ்சை தட்டிக் கொண்டவனின் பார்வை தானாகவே அவளைத் தேடியது.
'பார்த்தால் வலி. பார்க்காவிட்டால் அதைவிட வலி. இந்த உறவை ஏற்று மதிப்புக் கொடுத்து காதலை துறக்க வேண்டுமா அல்லது காதலை முன்னிறுத்தி உறவின் நெறியை முறித்திட வேண்டுமா?'
மனதால் மட்டுமல்ல மூளையாலும் குழப்பியடிக்கப்பட்டான் திகழோவியன்.
செந்தாழினி கோவிலின் பின்புறம் சென்றிருந்தாள். திகழோவியன் தண்ணீரை குடித்து, குவளையை திருப்பிக் கொடுத்ததும் பொங்கி வரும் கேவலை அடக்க முடியாது ஓடி வந்திருந்தாள்.
கண்ணீரை அடக்க முடியவில்லை. இரு கைகளாலும் வாயை பொத்தி அழுதாள்.
"ஏன்டி..." என்று யாராவது கேட்டால் என்ன பதில் சொல்வது?
தான் காதலித்தவன் தன் அண்ணன் என்று தெரிந்ததால் அழுகிறேன் என்று சொல்ல முடியுமா?
தன் காதல் தவறானது என்று தெரிந்ததால் அழுகிறேன் என்று சொல்ல முடியுமா?
இல்லை. எதுவும் சொல்ல முடியாது.
மௌனமாகவே உடைந்து போக வேண்டும். மௌனமாகவே வலி சுமக்க வேண்டும். மௌனமாகவே மரித்துப்போக வேண்டும். மௌனமாகவே உள்ளத்தணலேற வேண்டும்.
அதே நேரம்... கோவிலின் மறுபக்கத்தில் அரசமரத்தடியில் நின்றிருந்தான் திகழோவியன்.
கண்களை மூடியிருந்தான்.
அவனுக்குள் ஆயிரம் நினைவுகள் வந்து போயின.
முதல் சந்திப்பு.
முதல் பார்வை.
முதல் புன்னகை.
முதல் பேச்சு.
முதல் உணவு.
முதல் தீண்டல்.
முதல் நெருக்கம்.
முதல் குறுஞ்செய்தி.
முதல் அழைப்பு.
முதல் பயணம்.
முதல் பிரிவு.
அனைத்தும் அடங்கி நிற்கும் முதல் காதல்...
இப்போது ஒரே நொடியில் அர்த்தமற்றுப் போனது.
"என்னடா திகழ் இது..." என்று தலையை பிடித்துக் கொண்டான்.
'காதலிக்கக் கூடாதவளை காதலித்துவிட்டோமா?' இதயத்தில் பாரம் கூடிக்கொண்டே இருந்தது.
கண்களில் இருந்து ஒரு துளி நீர் தரை விழுந்தது. கன்னம் இறங்கும் கண்ணீரை துடைக்கத் தோன்றவில்லை.
அது அவனது காதலுக்கான இறுதிச் சடங்காகத் தோன்றியது.
*******************
கோவிலின் பின்புற மண்டபத்தில் இருவரும் எதிரெதிரே நின்றனர்.
எப்போதும் பேச வார்த்தைகள் போதாத அவர்களுக்கு... இன்று பேச வார்த்தைகளே இல்லை.
செந்தாழினியின் கண்கள் சிவந்திருந்தன.
திகழோவியனின் முகம் வெளிறியிருந்தது.
ஒருவரின் முகம் பார்த்த மற்றவர்களுக்கு புரிந்துகொள்ள முடிந்தது... சூழ்ந்திருக்கும் வலியை.
"மாமா..." உச்சரிக்கவே முடியாது இதழ் பிரித்து அவள் விளித்திட
அவன் முற்றிலும் உடைந்து போனான். அவளுக்கு முதுகுக்காட்டி நின்று மரத்தின் தண்டில் ஓங்கிக் குத்தினான்.
மனம் படும் பாட்டிற்கு முன்னால் கை உணரும் வலி ஒன்றுமே இல்லையென்றாக, இந்த வலியை கடக்க இதைவிட பெரும் வலி அவனுக்கு வேண்டுமாக இருந்தது.
"அப்படி கூப்பிடாத தாழினி..." திகழோவியனின் குரல் நடுங்கியது.
அவன் விரும்பி வேண்டிய உரிமையான அழைப்பு. அவனையே சொல்லாதென்று சொல்ல வைத்திட்டது காலம்.
அவளுக்கு கண்ணீர் பெருகியது. அவனுக்கோ மனம் ஓலமிட்டது.
அவளின் கண்ணீரை துடைக்க எழுந்துவிட்ட கரத்தை பட்டென்று கீழிறக்கியிருந்தான். சட்டென்று செவி மோதிய "உன்ற அண்ணன்" என்ற குரல். இந்த ஓசையை கடக்கவே முடியாதா என்று துவண்டு போனான்.
"அப்போ நமக்குள்ள காதல் இல்லைங்ளா? இனி நான் எப்பவும் அப்படிக்கூப்பிடக் கூடாதா?" கேட்டவளுக்கு மட்டுமல்ல, அவனுக்குமே முதல் முறை மாமா என அழைத்த நிகழ்வு நெஞ்சின் ஓரம் கரை ஒதுங்கியது.
"நம்மளுக்கு ஏனுங் இப்படியாச்சு?" என்று கேட்டவள், முகம் மூடி துடித்து அழுதாள்.
"அழாதடி!" என்றவனுக்கு அவளது கேள்விக்கு பதில் சொல்லும் வலிமை சுத்தமாக இல்லை.
விதியைத் தவிர வேறு யாரையும் குற்றம் சொல்ல முடியவில்லை.
"உங்களால அழாம இருக்க முடியுதுங்களா?"
திகழோவியன் பதில் சொல்லவில்லை. அவனது இதயமும் அதே கேள்வியைத்தான் கேட்டுக்கொண்டிருந்தது.
அன்று...
காலத்தின் கோலத்தால் அவர்களின் காதல் இறந்த நாள். இறக்கும் வரை அவர்களோடு பயணிக்கப் போகும் வலியாக மாறியிருந்தது.

நெஞ்சில் உயிர் நிறையும்...