• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உந்தன் நெஞ்சில் உயிராக 14

STN - 03

Member
Staff member
உந்தன் உயிராக 14

மூன்று மாதங்களுக்குப் பிறகு...

உக்கடம் ஏரி... நடைமேடை பகுதியில் போடப்பட்டிருந்த கல் மேடையில் தவிப்போடு அமர்ந்திருந்தாள் செந்தாழினி.

கண்கள் வீங்கி சிவந்திருந்தன. திகழோவியனுக்காகக் காத்திருக்கிறாள்.

அன்று கோவிலில் என்ன பேசுவது என்ன செய்வதென்று எதுவும் தெரியாது, அறிந்து கொண்ட விஷயத்திலிருந்து எப்படி மீள்வது, என்ன முடிவெடுப்பது என எதுவும் புரியாது, அகம் சேர்ந்த கசப்பினை உள்ளுக்குள் துளி துளியாய் வேதனையோடு விழுங்கியவாறு, முகம் கூட பார்க்க முடியாது அமைதியாக பிரிந்திருந்தனர்.

"மாமா" என்றழைத்தவளை பட்டென்று அப்படி அழைக்காதே என்று சொல்லிவிட்டான்.

ஏன் அவ்வாறு கூறினானென்று அவனுகேத் தெரியவில்லை.

'தெரிந்துகொண்ட உறவு முறையால் தன்னைப்போல் மனம் உறவுக்கு மதிப்பளிக்க எண்ணியதா?' என மனதிற்குள் போட்டு ஆராய்ந்தவனாக, கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்தது முதல் தனத்தறையில் குறுக்கும் நெடுக்குமாக நடை பயின்று கொண்டிறிருக்கிறான்.

செந்தாழினியின் மீதான நேசம் இக்கணமும் இதயத்தின் மேலே ததும்பி அலையாடுகிறது.

அவளை வேறொரு பந்தத்தில் நிறுத்தி வைத்து விலக்க முடியாதென சிறு அலசலுக்குப்பின் கண்டுகொண்டவனுக்கு, தங்களுக்கிடையே திடீரென முளைத்து பெரும் விருட்சமாய் தடையமைத்து நிற்கும் புதிய உறவுமுறையின் மீது அத்தனை ஆத்திரம் முகிழ்த்தது.

'இன்று தெரியாதது தெரியாமலே போயிருக்கலாமே' என நொடிக்கு நொடி அவனது உள்ளம் குமுறிக் கொண்டிருக்கிறது.

எத்தனை அழகாய் துவங்கி, மலர்ச்சியாய் வளர்ந்த காதல். இப்படி ஒரு நொடியில் கருகிப் போகுமென சிறு பொழுதில் ஒரு நொடியேனும் இருவரில் ஒருவரும் நினைத்திருக்கமாட்டார்கள்.

நெஞ்சம் அடைத்து, தொண்டையில் வலி கூடிட, கண்கள் உடைபெடுத்து கன்னம் உருண்டன கண்ணீர்.

தரையில் மண்டியிட்டு பின் படிந்த கால்கள் மீதே மடங்கி அமர்ந்தவன், தரையில் அழுத்தமாக ஓங்கி ஓங்கி அடித்தான்.

இதயத்தில் குத்திக் கொண்டிருக்கும் வலியை விட, அவ்வலி அத்தனை பெரிதாக தெரியவில்லை.

'நீயில்லாம முடியாதுடி... எப்புடி தாழினி?' என்று மனதோடு கேட்டுக்கொண்டவனுக்கு இதனை சரி செய்யும் பாதை தான் தெரியவில்லை.

சீர் செய்திட வேண்டுமென்றால் வாழ்க்கையையே பிறப்பிலிருந்து மாற்றியமைத்திட வேண்டுமே! முடிந்திடுமா? இனி வாய்ப்புகள் மறுஜென்மமென்ற ஒன்று உண்டென்றால் தான்.

உண்மையான பந்தமறியாது, சூழ்நிலை கைதிகளாக, விதியின் புயலில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன காதல் நெஞ்சங்கள்.

நெஞ்சில் உயிராக நிறைந்திட்ட காதலெல்லாம் வேள்வித் தீயில் பொசுங்கிக் கொண்டிருக்கிறது.

அழுது புலம்பி ஓய்ந்தவன், தீர்க்கமான ஓர் முடிவெடுத்தவனாக செந்தாழினிக்கு அழைத்திட்டான்.

இரவு முழுக்க அழைப்புகள் நீண்டன. ஏற்கப்படவில்லை. குறுந்தகவல்கள் பறந்தன. பார்க்கப்படவில்லை.

அவளின் நிலையை அவனால் உணர முடியுமே! உணர்ந்து கொண்டான். இக்கணம் தன்னைக் காட்டிலும் அவளின் நிலை மோசமாக இருந்திடுமே! அவளை அவனன்றி வேறு யாரால் அதீதமாக புரிந்துகொள்ள முடியும்? உயிரில் உள்வாங்கிக்கொள்ள முடியும்?

அவளாக அமைதி அடைந்து, முடிவெடுத்து வரட்டுமென காத்திருக்கத் துவங்கினான்.

அடுத்தநாள் வேலைக்கு சென்றும் மனம் ஒருநிலையில்லாது தவித்துக்கொண்டே இருக்கிறதென நினைத்தவன் அன்றைய பொழுது நள்ளிரவு தாண்டிய வேளையில் நேரத்தைப் பார்க்காது மணிக்கு அழைத்திருந்தான்.

இரவு நேரப்பணியில் அப்போதுதான் சிறு ஓய்வாக அமர்ந்த மணி முதல் அழைப்பிலே எடுத்திருக்க...

"தூங்கலையாடா?" என்று எவ்வளவோ முயற்சித்தும் வலி நிறைந்த குரலை மாற்ற முடியாது திக்கலோடு வினவியிருந்தான்.

"நைட் ஷிஃப்ட்" என்ற மணி, "என்னமாச்சு திகழு... குரல் வாட்டமா தெரியுது" என்று நண்பனை நொடியில் அவதானித்தவனாகக் கேட்டான்.

நேற்றைய தின நிகழ்வை வலியோடு சொல்லிய திகழோவியன், "அவள் என் தங்..." என அந்த வார்த்தையை கூட சொல்ல முடியாது நிறுத்தியிருந்தான்.

உண்மை தெரிந்ததும் திகழ், செந்தா கொண்ட அதிர்விற்கு சற்றும் குறைவில்லாது மணியும் அதிர்வை உள்வாங்கியிருந்தான்.

"என்னடா சொல்ற நீ?" என்ற மணி இருக்கையை விட்டே எழுந்திருந்தான்.

"அவள் ஐயனும், என்ட்ர ஐயனும் அண்ணன், தம்பியாம்!" கடுகடுவென சொல்லியிருந்தான்.

"இதெப்புடிடா... இம்புட்டு வருஷமா தெரியாமலா இருந்துச்சு?"

"எல்லா அப்பா மாறியும் இவரும் எங்கூடால இருந்திருந்தா, அவரு பக்கட்டிக்கு இப்படியொரு சொந்தமிருக்குன்னு மொகம் தெரியலன்னாலும், பேராவது தெரிஞ்சிருக்குமே!" என்ற திகழோவியன், "அம்மா ஒருநாளும் அவங்க ஒரமுற பத்தியே பேசினதில்லைடா" என்று சலிப்பாகக் கூறினான்.

"அட்லீஸ்ட் தாய் மாமான்னு இருக்க சொந்ததுக்கூட உறவாட விட்டு, வர போவ பழக்கியிருந்தா... முன்னவே அவளையும் தெரிஞ்சிருக்கும். அவள் என்ன பந்தமுன்னும் தெரிஞ்சிருக்கும்" என்று ஆற்றாமையாக மொழிந்தான்.

மணிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

"இப்போ என்னடா பண்ணலாம் இருக்க... செந்தா என்ன சொல்லுச்சு?"

"என்ன பண்ணலாம்?" என்ற திகழோவியன், "நீ என்ட்ர இடத்திலிருந்தா என்ன பண்ணுவ?" எனக் கேட்டிருந்தான்.

"நானா?" "நானு..." மணிக்கு நொடியில் மண்டை வெடித்துவிடும் போலிருந்தது.

"என்ட்ரகிட்ட கேட்டா நானென்னடா சொல்ல?" என்ற மணி, "காதல் முக்கியம்டா... ஆனா அதைவிட உறவுன்னு ஒன்னு இருக்கே! சேர்ந்தாலும் வரம்பு மீறின உறவாத்தான் பார்ப்பாங்க. நிம்மதியா வாழவிடமாட்டாங்க" என்றான்.

மணி சொல்வது நிதர்சனம். ஆனால் திகழோவியனால் ஏற்றுக்கொள்ளத்தான் முடியவில்லை.

"அதுக்காக சட்டு சட்டுன்னு சொக்காவை மாத்துற மாதிரி மனசை மாத்திக்க முடியாதே. அவளை போய் நானெப்படிடா அப்படி பார்க்க முடியுமா? இதுதான் உண்மைன்னு தெரிஞ்சும் அவளை அந்த உறவுல நிறுத்தி வைக்க முடியலடா. எம்புட்டுக்கோ முயற்சி பண்ணி பார்த்துப்புட்டேன். சத்தியமா முடியலடா. அவள் தான் என் பொண்டாட்டின்னு..." என்றவன் வேகமாக வார்த்தையை நிறுத்தியிருந்தான்.

"உன்னால இப்பைக்கு இப்படியும் சொல்ல முடியலதான. காதல் தான். பக்கட்டிக்கு இருந்து பார்த்திருக்கேனே! உம்மட மாதிரி வேறவொரு காதலை பார்த்ததுமில்லை. ஆனா ஒண்ணுமே பண்ணமுடியாத சூழ்நிலையில இருக்கோம். புரிஞ்சிக்கோ திகழு. தங்கச்சியையே கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு ஊர் அம்புட்டுக்கு பேசும். நமக்கே நெறிமுறைன்னு ஒண்ணு இருக்கே. இப்பைக்கு காதலை விட்டுக்கொடுக்க முடியாம, வேகத்துல ஒரு முடிவை எடுத்துப்புடலாம். பின்னாடி ரொம்பவே உறுத்தலா மாறிப்போவும்" என்று தன்னளவில் எடுத்துக்கூறினான்.

"அப்போ நாங்க பிரியனும்னு தான் நீ சொல்லவர்றியா?"

"நானென்ன சொல்றன்னு உனக்கே புரியும்."

"இப்பைக்கு எந்தவொரு முடிவும் எடுக்காம கொஞ்சநாளுக்கு ஆறப்போடுன்னு மனசு சொல்லுது" என்றான் திகழோவியன்.

"நல்லது... அதுவும் சரிதான். பொறுமையா விஷயத்தை ஆறப்போட்டாலே ஒரு தெளிவை கொடுக்கும்" என்ற மணி, "நல்ல முடிவுடா!" என்றான்.

"ஆனா காதல் அப்படியே தான் இருக்கும். அதுல எந்த மாத்தமும் இல்லை" என்று திகழோவியன் சொல்லிய அழுத்தத்தில் மணிக்கு பயந்து வந்தது.

இப்போதைக்கு பொறுமையாக இருந்துவிட்டு, பின்னாளில் தனக்கு வேண்டியதை செய்து, சமூகத்தில் நெறி தவறியவன் என்ற பெயரைப் பெற்றிடுவானோ என நண்பனுக்காக அச்சம் கொண்டான்.

பொல்லாத சமூகமாயிற்றே! உண்மை எதுவென ஆராய்ந்துப் பார்த்திடாது தீர்ப்பு வழங்கிடுமே!

"என்னடா அமைதியாகிட்ட?"

"என்ன சொல்லணும் தெரியலடா!"

"அமைதியா இருக்க வேண்டியதுதான்" என்ற திகழோவியன், "உன்றகிட்ட பேசினா நல்லாயிருக்கும் தோணிச்சு. அதான் நேரங்காலம் பார்க்காம கூப்பிட்டுப்புட்டேன்" என்றான்.

"அடிவாங்குவ நீ" என்ற மணி, "பேசினியா?" என்றான்.

"இல்லடா... கால் பண்ணேன் எடுக்கல. நானொரு முடிவுக்கு வந்திருக்க மாதிரி அவளும் ஒரு முடிவுக்கு வரணும்ல... வரட்டும். அவளே கூப்பிடுவா! அடுத்த வாரத்துல பரீட்சை வேற. என்னாலதான் அவளை பார்க்க முடியாது. நீ அவளைப் பார்த்து எதையும் போட்டு குழப்பிக்காம பரீட்சையை நல்லா எழுத சொல்லு" என்றான்.

"ம்ம்டா."

நண்பனிடம் பகிர்ந்துக்கொண்டதால் அந்த நேரத்திற்கு மனதின் வலி மட்டுப்பட்டது போலிருக்க, மேலும் சில நிமிட பேச்சிற்குப்பின் அழைப்பைத் துண்டித்திருந்தான்.

அவளாக ஒரு முடிவெடுத்து வரட்டுமென நினைத்தவனால், அவளிடம் பேசாது இருக்க முடியாது, அடுத்த இரண்டு நாளிலே கல்யாணிக்கு சொல்லாது வேலைக்கு செல்வதைப்போன்று தொண்டாமுத்தூர் சென்றுவிட்டான்.

வரவே வராத பிள்ளையை வீட்டிற்குள் அழைத்து, மணியில் அவனுக்கு பிடித்த உணவெல்லாம் செய்து கொண்டாடி மகிழ்ந்துவிட்டார் காமாட்சி.

"பொண்ணுகூட இல்லை. பொறவு என்னத்துக்குங்மா மருமகனுக்கு இவ்ளோ ஆர்ப்பாட்டம்!" என்று சுகிர்தன் கேலி செய்ய... "அவனுக்கு தாய் மாமன் வீடுடா இது. பொண்ணு இருந்தாதான்னு இல்லை. அவனுக்கு அடுத்து தான் உனக்கே உரிமை" என்று திகழோவியனை செல்லம் கொஞ்சி சில மணி நேரத்தில் அத்தனை சீராட்டியிருந்தார் காமாட்சி.

சுகிர்தனுக்கு பதில் வழங்கியிருந்தாலும், வேறொரு பதிலை அவரது ஆழ் மனம் மட்டுமே அறிந்திடும்.

காமாட்சி பிறந்தவுடன் இறந்ததாக நினைத்துக் கொண்டிருக்கும் அவரது இளைய மகன் உயிரோடிருந்திருந்தால் அவனும் திகழோவியன் போன்றுதான் இருந்திருப்பான்.

திகழோவியனுக்கு பிறந்தநாளே, இறந்தநாளாகியிருந்தது. விதியென சொல்லிக்கொண்டாலும் கல்யாணி மற்றும் ராஜேந்திரன் ஆடிய ஆட்டத்தால்.

"வாடா நம்மட காட்டுப்பக்கட்டிக்கு போய் வருவோம்" என்று சுகிர்தன் அழைத்திட சரியென்றான்.

அங்கு வந்து வீட்டு வாயிலில் வண்டியை நிறுத்தியதுமே திகழோவியனுக்கு கண்கள் பக்கத்து வீட்டில் தான் நிலைத்தது.

"உன்ற மாமாவூட்டுக்கு பக்கத்து வூடுதான் செந்தா வூடு." எப்போதோ மணி சொல்லியதை வைத்து, வலது பக்கம் எந்தவொரு வீடுமில்லாது இருக்கவே, இடதுபக்கமிருக்கும் வீடாகத்தான் இருக்குமென்று அவ்வீட்டை பார்வையால் சுற்றிவந்தான்.

அரவம் ஏதுமில்லை.

வீட்டுக்குள்ளே இருந்தால் அவளை பார்க்க முடியாதென சுகிர்தன் அழைத்ததும் அவனுடன் கிளம்பிவிட்டான்.

"உன்ற அம்மா உன்னைய இக்கட்டிக்கு அனுப்பமாட்டாங்களே! இன்னைக்கு எப்படி விட்டாங்க?" வீட்டிற்கு பின்னாலிருக்கும் வரப்பு மீது நடந்திட சுகிர்தன் திகழிடம் கேட்டான்.

"நான் வந்தது அம்மாக்கு தெரியாதுங் மாமா!" என்று திகழோவியன் சொல்ல, "தெரிஞ்சுச்சுன்னா சும்மா விடுவாங்களா?" என்றான் சுகிர்தன்.

"பார்த்துக்கலாமுங்க" என்ற திகழோவியன், சுகிர்தன் பின்னால் நடந்தாலும், அவனது பேச்சுக்கு பதில் பேசினாலும் கண்கள் என்னவோ செந்தாழினியின் வீட்டைத்தான் மேய்ந்தன.

"அந்த வூடு செந்தாழினியோடாதுதானுங் மாமா?" சுகிர்தனிடமே கேட்டுவிட்டான்.

"அந்த பிள்ளையை உனக்கெப்புடி டா தெரியும்?"

"கூடப்படிச்ச புள்ளைங்க மாமா? ஜூனியர். ஒரே டிபார்ட்மெண்டு."

"ஓ... அதுதான். ஆனா இப்பை அந்தப்புள்ளையை பார்த்தாலும் பேசிக்காத... அவள் ஐயனுக்கும், உன்ற மாமனுக்கும் தினம் ஒரு யுத்தம் தான்" என்றான் சுகிர்தன்.

"சரிங்மாமா" என்று திகழோவியன் கூற, அவனுக்கு முன்னால் நடந்த சுகிர்தன் நடை நின்றது.

"என்னாச்சுங் மாமா?"

"உன்ற பேச்சுக்கு காரணமான புள்ளையே இக்கட்டிக்கு இட்டேரி தடத்துல உட்கார்ந்திருக்குடா" என்றான் சுகிர்தன்.

அவனை எட்டிக்கொண்டு திகழோவியன் முன்னால் பார்க்க, வரப்பில் கால்களைக் கட்டிக்கொண்டு, கையின் மீது தலை சாய்த்து, உணர்வற்ற பார்வையோடு, சுழித்து ஓடும் வாய்க்கால் நீரினை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் செந்தாழினி.

அவளின் தோற்றம், பார்த்ததும் திகழோவியனை உருக்குலைத்தது.

"என்ன சடவோ தெரியல. வா நாம பொறத்தால போவோம்" என்று சுகிர்தன் திரும்பிட, "பார்த்துப்பேசி வெகு நாளாச்சுங் மாமா! ரெண்டு வார்த்தை பேசிப்போட்டு வரட்டுங்ளா?" என்றான் திகழோவியன்.

தொடர்ச்சி கீழே...
 

STN - 03

Member
Staff member
"உன்ற மாமா பார்த்தாருன்னா ஓரியாட்டம் தான்" என்ற சுகிர்தன், என்ன நினைத்தானோ, "கூட படிச்ச புள்ளைங்கிற... வெடுக்குன்னு பேசிப்போட்டு வந்துப்போடு" என்று வந்த வழியே தள்ளிச் சென்றான்.

திகழோவியன் அவளின் அருகில் சென்று நிற்க, பார்வையில் பதிந்த பாதம் வைத்தே,

"மா..." என வேகமாக தலையுயர்த்திப் பார்த்தவளின் வார்த்தை முற்றுப்பெறாது தொண்டைக்குழியோடு நின்றிருந்தது.

"கூப்புடமாட்டியா தாழினி..."

சடுதியில் கன்னம் நனைத்திட்ட கண்ணீரை துடைத்தவாறு, "கூப்பிடுற ஒரமுறையே வேறையாச்சுங்களே!" என்றாள்.

"அப்போ உன்ற மனசுக்கு நம்மட விருப்பத்தைவிட ரெண்டு நாள்ல திடீர்னு வந்து நின்ன உறவு முக்கியமாப்போச்சா?" என்றான்.

"எனக்கு இந்த கேள்விக்கு பதிலே தெரியலங்க" என்றவள், "உம்ம என்ட்ர மனசுக்கு புடிக்காமலே இருந்திருக்கலாமுங்க" என்றாள்.

சூழல் புரிகிறது. அவளின் பேச்சுக்கான காரணங்கள் புரிகிறது. ஆனாலும் அவள் இறுதியாக சொல்லியதை ஏனோ அவனது காதல் மனதால் ஏற்க முடியாது போனது. வெகுவாக காயம்பட்டது. அவளது வார்த்தையில்.

அவளை பார்க்க வேண்டுமென நினைத்தான். பார்த்துவிட்டான்.

முடிவெடுக்க முடியாத சிக்கல் தானே. பெரிதாக குழம்பியிருப்பாள் என்பதும் புரிகிறது. குழப்பத்தோடு இருப்பவளிடம் மேற்கொண்டு பேசினால், வார்த்தைகளால் இருவருமே காயப்பட வாய்ப்புள்ளதென நினைத்த திகழோவியன் எதுவும் பேசாது திரும்பி நடந்திட,

"என்னைய பார்க்கத்தான் வந்தீங்களாங் மா..."

சட்டென்று நின்று அத்தனை வேகமாக திரும்பியிருந்தான்.

"உன்ற மூளையை ஓரம் வச்சிப்போட்டு... மனசு சொல்றதை கேளு. அப்படித்தான் கூப்புட வருதுன்னா, அப்படியே கூப்புடி. யாரு என்ன பண்ணிப்போடுவாங்க. என்னமோ வாய் வரை வந்து வந்து நிறுத்தறவ?" என்று வெடித்தான்.

அவனுமே இதுவா அதுவா என முடிவெடுக்க முடியாதுதான், அமைதியாக இருப்போமென்று முடிவெடுத்தான். ஆனால் தற்போது அவளின் பழைய அழைப்பு இல்லையென்பதையே ஏற்க முடியவில்லை.

தன்னுடைய மனது எந்த புள்ளியில் சாய்கிறது என்பது விளங்காது, கரை ஒதுங்கா படகாய் தத்தளித்தான்.

முதல்முறை அவனின் கோபம் காண்கிறாள். பேசவே அத்தனை மென்மையை மேற்கொள்பவன், இன்று கடிந்துகொள்வதை நம்ப முடியாது விழித்துப் பார்த்தாள்.

"இப்படி பார்க்கதடி" என்று இரு கைகளையும் அவளின் முகம் நோக்கி ஆவேசமாக கொண்டு சென்றவன்,

"திகழு..." என்றழைத்த சுகிர்தன் குரலில், வேகமாக கைகளை உதறி அவளை விலகி நடந்தான்.

இப்படியொரு சந்திப்பு நடந்தது என்பதையே பின்னாளில் சுகிர்தன் நினைவில் கொண்டிருக்கவில்லை. நெருக்கமான பேசும் வட்டமாக இருந்திருந்தால் நினைவில் நின்றிருக்குமோ என்னவோ? முகம் பார்த்தாலே ஒதுங்கிப்போகுமளவில் தானே இருந்தார்கள். அதோடு திகழோவியனும் அவ்வீட்டிற்கு வந்த பின்னர் அவளிடம் தெரிந்தவளென பேசியதுமில்லையே! அதனால் தான் அன்றைய இரவில் செந்தாழினி அழைத்து இருவரும் ஒன்றாகத்தான் படித்தோமென தங்களின் காதலை சுகிர்தனிடம் கூறியபோது, முன்னவே என்றோ ஓர்நாள் திகழோவியன் ஒன்றாக படித்ததை சொல்லியிருக்கிறான் என்பது நினைவில் வராமல் போனது.

செந்தாழினி தன்னை பார்க்கவே தயங்குகிறாள் என்பதில் வெகுவாக உள்ளம் சுருண்ட திகழோவியன், சுகிர்தனுடன் வீட்டிற்கு வந்த சில நிமிடங்களிலேயே புறப்பட்டிருந்தான்.

அவன் பெரும் கவலையை சுமந்துகொண்டு செல்ல... வீட்டில் அவனுக்கு மற்றொரு சோதனை காத்திருந்தது.

திகழோவியன் வீடு போய் சேர்ந்திடும் முன்பு, அவன் இங்கு வந்து சென்றது கல்யாணிக்குத் தெரிந்திருந்தது.

தொண்டாமுத்தூரிலிருந்து வந்த திகழோவியன் வண்டியை வீட்டின் முன் நிறுத்தியபோது, இரவு எட்டு மணியைத் தாண்டியிருந்தது.

வீட்டு வாசலில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது.

வண்டியிலிருந்து இறங்கியவன் உள்ளே நுழைந்தான். ஹாலின் நடுவே அமர்ந்திருந்த கல்யாணியின் முகத்தைப் பார்த்ததும் அவனது கால்கள் சற்றே நின்றன.

முகத்தில் வழக்கமான பாசம் இல்லை. கண்களில் எரிச்சல் மட்டுமே.

"எங்கடா போயிருந்த?" குரலிலிருந்த கடுமையில் திகழோவியன் புருவம் சுருக்கினான்.

"வேலை விஷயமா வெளிய போயிருந்தேங்மா."

"வேலை விஷயமாவா... இல்ல தொண்டாமுத்தூர் வரைக்கும் போயிட்டு வந்தியா?"

ஒரு நொடி திகழோவியனின் முகம் இறுகியது.

'அவருக்குத் தெரியாமல் போய்வந்தது எப்படி தெரிந்தது' என யோசித்தவன், அடுத்த நொடியே அதை விட்டுவிட்டான்.

'ராஜேந்திரன் மாமா சொல்லியிருப்பார்.' அவன் எண்ணம் சரியே! அவர்தான் திகழோவியன் வீட்டுக்கு வந்த சந்தோஷத்தில், "இம்புட்டு வருஷத்துக்கு பொறவாவுது அவனை இக்கட்டிக்கு அனுப்பி வைக்கணும் மனசு வந்துச்சே" என்று கல்யாணிக்கு அழைத்து சொன்னதோடு, கல்யாணி பதில் பேசும் முன் வைத்துமிருந்தார்.

"ஆமாங்மா." மறைக்கவில்லை. மறைக்க விருப்பமுமில்லை.

"நான் போவக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன்?"

"போனதுல என்னங்மா தப்பு?" அவன் அமைதியாகத்தான் பேசினான். ஆனால் அந்த அமைதியே கல்யாணியை மேலும் சீண்டியது.

"அந்த வீட்டுக்காரங்களோட ஒட்டுறதுக்காகத்தானே போன?"

"அவங்க நம்மட சொந்தக்காரங்கங்மா."

"அவங்க சொந்தமெல்லாம் வேணாம். உனக்கிருக்க ஒரே சொந்தம் நான் மட்டும் தான். உன்ற மனசுலையும் இந்த எண்ணம் மட்டுந்தான் இருக்கோணும்."

"ஏனுங்மா! நாம ஒண்ணும் யாருமே இல்லாதவங்க இல்லைங்களே! உம்மட அண்ணன் சொந்தமே வேணாம் சொல்ல காரணம் எதுவும் இருக்குங்ளாங்மா?" திகழோவியன் சட்டென்று இப்படி கேட்பானென கல்யாணி நினைக்கவில்லை.

நொடியில் மனம் அழுத்தம் கொள்ள, தலையில் வலி சுரீரென்றது. நொடி நேர வலியென்றாலும் நிலைகுலைந்து தள்ளாடி நிலைபெற்றார்.

"ம்மா... என்ன பண்ணுதுங்மா!" அவரின் முன் சென்று மண்டியிட்டு கரங்களைப் பற்றிக்கொண்டான்.

"என்னைய விட உனக்கு அவங்க முக்கியமா போயிட்டாங்களா தங்கோ?" கல்யாணியின் குரல் உடைந்தது.

திகழோவியன் பார்வையைத் தாயின் மீது நிலைநிறுத்தினான்.

அவரது கோபத்தின் பின்னால் இருக்கும் காரணம் அவனுக்கு விளங்கவில்லை.

"முக்கியம், முக்கியமில்லங்கிற கேள்வியே இல்லங்மா."

"அப்போ?"

"இம்புட்டு வருஷமா ஒரு சொந்தத்தையே மறைச்சிட்டீங்க." அவன் சொல்லிய சொந்தம் வேறு, அவர் புரிந்துகொண்ட சொந்தம் வேறு.

'தனது குட்டு வெளிப்பட்டுவிட்டதோ? மொத்தமாக தன்னை வெறுத்து சென்றிடுவானோ?' உள்ளுக்குள் அரண்டுப்போனார்.

"திகழு..."

"ஏன் மறைச்சீங்கங்மா?"

"அதை பேச வேண்டிய அவசியமில்லை" என்று கல்யாணி எழுந்துக்கொள்ளப் பார்க்க,

"எனக்கு இருக்கு" என்றவன், "அப்பா ஏனுங் என்னைய அவர் புள்ளையாவே பார்க்கல... அப்படி பார்த்திருந்தா தெரிய வேண்டிய சொந்தமெல்லாம் தெரிஞ்சிருக்கும்லங்மா?" என்றான்.

"நான் உன்ற நல்லதுக்குத்தான்..." தற்போது அவன் பேசியது புரியவில்லையென்றாலும், மனதை கவ்விப்பிடித்திருக்கும் பயத்தில் சமாளிக்கவென்று எதையோ கூறினார்.

"எது நல்லதுங்க?" திகழோவியனின் குரல் உயர்ந்தது.

"என்ட்ர வாழ்க்கையில முக்கியமான விஷயத்தை கூட தெரியாம வச்சது நல்லதுங்ளா?" இருக்கும் கோபத்தை, இயலாமையை யாரிடம் காட்டுவதெனத் தெரியாது, அவரிடம் குமுறலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான்.

அவன் கண்களில் தெரிந்த வலியில் கல்யாணி திகைத்தார்.

"என்ன நடந்துச்சு சாமி?" அவனுக்கான உண்மையான பதற்றம் அவரிடம். என்னயிருந்தாலும் அவருக்கு அவன்மீதிருப்பது உண்மையான பாசமல்லவா. அந்த பாசம் நீள வேண்டுமென்று தானே அவர் செய்யும் அனைத்தும்.

திகழோவியன் பதில் சொல்லவில்லை. சொன்னால் அனைத்தும் சிதறிப்போகும்.

செந்தாழினியைப் பற்றியும் சொல்ல வேண்டி வரும்.

"ஒண்ணுமில்லைங்."

"பொய் சொல்லாத தங்கோ."

"இப்பைக்கு பேச மனசில்லைங்மா" என்றவன் அவ்வளவுதான் என்பதைப்போன்று நேராக தனது அறைக்குள் சென்றுவிட்டான்.

கதவு மூடிய சத்தம் வீடு முழுக்க எதிரொலித்தது.

கூடத்தில் நின்ற கல்யாணியின் இதயம் வேகமாக துடித்தது.

'ஏதோ நடந்திருக்கு...' அவர் உள்ளம் எச்சரித்தது. 'தெரியக்கூடாததை தெரிந்து கொண்டானோ? முன்னவே அவனிடம் சொல்ல நினைத்தவர் (ராஜேந்திரன்) நேரில் பார்க்கவும் சொல்லிவிட்டாரோ? வளர்த்தப்பாசத்தை மீறிட முடியாது ஒன்றும் அறியாததைப்போன்று கடந்து செல்ல முயல்கிறானோ?' அவரின் மனம் இப்படித்தான் உண்மையில்லா ஒன்றை நினைத்துக்கொண்டது.

அன்று முதல் திகழோவியனின் சிறு சிறு அசைவுகளையும் கூடுதல் கவனமாக கவனிக்கத் துவங்கினார்.

திகழோவியன் கோவிந்தனின் உறவுகளைப்பற்றித் தெரிந்துகொண்ட வேதனையில் உழன்றவனாக, அமைதியில் நாட்களைக் கடத்த முடியாது கடத்திக்கொண்டிருக்க... கல்யாணியோ தான் மறைத்து வைத்திருக்கும் அவனது ரகசியம் தெரிந்ததாலே இந்தளவிற்கு அமைதியாகிவிட்டான் என தவறாக புரிதல் கொண்டார். அதிலும் சிறு நிம்மதியாக அவன் தன்னுடனே இருப்பதில், அவனின் அமைதியை கலைக்கும் விதமாக மேற்கொண்டு எந்தவொரு பிரச்சினையையும் அவர் கிளப்பவில்லை.

கல்யாணிக்கு திகழோவியன் தன்னுடனே இருக்க வேண்டும். அதற்காக மட்டுமே மௌனத்தைக் கடைபிடித்தார்.

*******************

தொண்டாமுத்தூரில்...

அறைக்குள் தனியாக அமர்ந்திருந்த செந்தாழினி, கையில் இருந்த அலைபேசியை திறந்தாள்.

அன்றுதான் இறுதி தேர்வு முடிந்திருந்தது. தேர்வை முடிப்பதற்காகவே சிலவற்றை சில நாட்களாக ஒதுக்கி வைத்திருந்தாள். அப்படி அவளாக நினைத்துக் கொண்டிருந்தாள்.

இடைப்பட்ட நாளில் மணி ஒருமுறை அவளை சந்தித்துப் பேசியிருக்க,

"முடிவெடுக்கிற நிலையில இப்பைக்கு நானில்லங்" என்று அவனிடம் முழுதாக பேசாதுகூட சென்றிருந்தாள்.

திகழோவியனின் எண்ணை பார்த்தபடி நீண்ட நேரம் தயங்கியவள், தயக்கத்தோடே நாட்களையும் கடத்தியிருந்தாள்.

மாதங்கள் உருண்டிட... அவனின்றி ஒன்றுமில்லை என்பதை, கொண்ட உறவுமுறை தவிர்த்து விளங்கிக்கொண்டாள்.

காதல் எதையும் செய்ய வைத்திடுமாம். வேண்டுமென்பதை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் வேண்டுமென்ற ஒன்றையும் நிறைவேற்றிக் கொள்ளுமாம்.

செந்தாழினியையும் ஒன்றை செய்யத் தூண்டியது. அதன் விளைவாக ஒரு முடிவெடுத்தவளாக, அன்றைய இரவில் எவ்வித தயக்கமுமின்றி திகழோவியனுக்கு அழைத்துவிட்டாள்.

"நாளைக்கு உக்கடம் லேக்ல மீட் பண்ணலாங்க" என்று நேரத்தைக் கூறியவள் அழைப்பை வைத்திருந்தாள்.

நெஞ்சில் உயிர் நிறையும்...

 

ஷமீம்

Active member
கல்யாணியும் ராஜேந்திரனும் செஞ்ச வேலை தெரியும் போது இருக்கு கச்சேரி..
 
Top Bottom