• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உந்தன் நெஞ்சில் உயிராக 17

STN - 03

Member
Staff member
உந்தன் உயிராக 17

ஐந்து மாதங்களுக்குப் பிறகு...

கோவில் மண்டபம்...

உற்றார் உறவினர்கள் நிறைந்திருக்க வண்ணக்கோலம் பூண்டிருந்தது.

ஒரு பக்கம் மங்கள இசை முழங்கிக் கொண்டிருக்க, மறுபக்கம் சுற்றத்தாரின் ஆர்ப்பரிப்பு.

தேவகிக்கும், காமாட்சிக்கும் அப்படியொரு ஆனந்தம். தங்களின் எண்ணம் நிறைவேறவிருக்கிறது என்பதில் கொண்டாட்டமாக திருமண வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.

கோவிலில் திருமண மண்டபத்திற்கு நேரெதிர் உள்ள ஆண்டவனின் சன்னதிக்கு வலது புறமிருக்கும் தடுப்புப் பகுதிக்குள், மாப்பிள்ளை அலங்காரத்தில் அமர்ந்திருந்தான் திகழோவியன்.

அருகில் நின்றிருந்த சுகிர்தன் தம்பியின் மாப்பிள்ளை தோற்றத்தை ரசித்திருந்தான்.

"இதை போட்டுக்கோ திகழு" என்ற சுகிர்தன் மேலுமொரு தங்கச் சங்கிலியை திகழோவியனுக்கு அணிவிக்க...

"எவ்ளோங்ண்ணா போடுறது. போட்டு இருக்கிறதே போதுங்கங்" என்றான்.

"எல்லாம் இந்த ஒரு நாளைக்குடா... இந்த நாளுக்காக நீ அனுபவிச்ச வலி கொஞ்சநஞ்சமில்லையே!" என்ற சுகிர்தன், "இனிமேலாவது உன்ற மனசு நிம்மதியா இருக்கோணும்" என்றான்.

"இனிமேலுக்கு அவன் நிம்மதிக்கு என்ன குறையாம்? அதான் ஆசைப்பட்டது கை சேருதுங்களே" என்று வந்த மணி, "உன்ற அம்மணி லைனில்" என அலைபேசியை கொடுத்தான்.

"இன்னும் கொஞ்ச நேரத்துல தாலிக்கட்டப் போறான்டா... இப்பைக்கு ஃபோனா?" என்று சுகிர்தன் கேட்க, "லவ்வர்ஸா கடைசியா ஒருமுறை பேசிக்கட்டுங்க... நாம அக்கட்டிக்குப் போவோம்" என்று சுகிர்தனனை இழுத்துக்கொண்டு சற்று தள்ளிச் சென்றான் மணி.

"சொல்லுங் அம்மணி!" அலைபேசியை செவி ஏற்றியவனின் குரலில் அப்படியொரு குழைவு.

"மாமா..." அவளின் அழைப்பு காற்றாய் செவி நுழைந்திட, அவளின் மூச்சு சில்லென்று முகம் தழுவும் மாயம் அவனிடம். முன்னுச்சி கேசம் சிலிர்த்திட, மென்மையாய் இமை மூடி உள்வாங்கியிருந்தான்.

இப்போதெல்லாம் அவளின் இந்த அழைப்பில் ஒவ்வொரு முறையும் இப்படித்தான் முன்பைவிட சிலிர்த்து அடங்குகிறான்.

இதெப்படி சாத்தியமானது என்றால், அவர்களின் காதல் சாத்தியப்படுத்தியிருந்தது.

காதல்...
விலக்கி வைக்க நினைத்துவிட்டால் சமாதானம் செய்திட ஆயிரமாயிரம் காரணங்கள் இருந்தாலும், வேண்டாமென்று ஒதுக்கிவிடும். அதே வேண்டுமென நினைக்க... நல்லதாய் ஒரு காரணம் கூட இல்லையென்றாலும், காதலே காதலாய் சேர்ந்திடும்.

அப்படித்தான் அந்த காயம் சுமந்த நெஞ்சங்கள் சேர்ந்ததும்.

காயப்படுத்தியவளுக்கு காயமென்றதும் தன்னுடைய காயத்தை புறம் ஒதுக்கியவனாக அவளைத்தேடி ஓடி வந்திருந்தான்.

மருத்துவமனை வளாகத்தில் அவளது பெற்றோர் மட்டுமின்றி தேவகிக்கு ஆறுதலாக காமாட்சியும், அவரை அழைத்து வந்தவனாக சுகிர்தனனும் அந்த நீண்ட வராண்டாவில் நின்றிருந்தனர்.

"வேணாம்னு சொன்னவ பேச்சை இந்த மனுஷன் கேட்கவேயில்லையே! அதுக்காக பாவிமவ இப்படியொரு காரியத்தை பண்ணிப்போட்டாளே!" என்று சேலை தலைப்பை வாயில் வைத்து அழுதவராக இருந்த தேவகியின் கரத்தினை தட்டிக்கொடுத்தவராக காமாட்சி அவரின் அருகிலே அமர்ந்திருந்தார்.

"வேணாம்னு சொன்னவளுக்கு எதுவோ வேணுமா இருக்கப்போயிதான, நடக்கயிருந்ததை நிறுத்த இப்படி பண்ணியிருக்காள். அது என்னன்னு கேளு. செய்து வச்சிப்போடுவோம். கோவக்காரந்தான். அதுக்காக பெத்த பொண்ணு ஆசையை நிறைவேத்தமா என்ட்ர சொல்லுதான் பெருசுன்னு நினைக்கிற ஆளில்லை" என்ற நாராயணன், "சும்மா அழுது அலட்டக் கூடாது. மருந்து போட்டியிருப்பாங்க போய் என்னன்னு பாரு" என்று மனைவியை அதட்டியிருந்தார்.

எப்போது திருமணமென்றாலும் இப்போது வேண்டாமென அடமாக மறுத்துக்கொண்டு வரவே மகளுக்கு ஏதேனும் விருப்பமிருக்குமோ என்று சந்தேகம் எழவே, அது உண்மையா பொய்யா என அறிந்து கொள்வதற்காக இல்லாத ஒருவன் பெண் பார்க்க வருவதாக சொல்லியிருந்தார்.

விடியல் கொண்ட பிறகும் சொல்லாது அழுத்தமாக இருப்பவளிடம், இனி இந்த மறைமுக ஆட்டம் எடுபடாதெனவே நேரடியாகக் கேட்க முடிவு செய்து அவளைத் தேடிக் கொண்டு வந்தவர், அவள் சமையலறையில் இருப்பதாக கூடத்தை துடைத்துக் கொண்டிருந்த தேவகி கூற சமயலறைக்கு வந்தவர் கண்டது...

வாணலியில் சூடாக காய்ந்துக் கொண்டிருந்த எண்ணெயை, தலையை மேல்நோக்கி உயர்த்தி, கண்களை மூடி கண்ணீர் காது மடல் வழிந்தோட, ஒற்றைக் கையால் சமையல் மேடையை பற்றிப் பிடித்து, தோல் வெந்துப்போகும் வலியை தாங்கியவளாக மற்றொரு கையால் கரண்டியால் காலில் ஊற்றியபடி நின்றிருந்த மகளைத்தான்.

"செந்தா" என்று பதறி அவளின் அருகில் நாராயணன் ஓடிய சத்தத்தில் அங்கு வந்த தேவகி,

"என்ன காரியம்டி பண்ணிப்போட்ட" என்று அவளின் தோளில் அடிக்க, நாராயணன் அவளின் கையிலிருந்த கரண்டியை வாங்கி வீசியவராக அடுப்பை அணைத்திருந்தார்.

"எனக்கு எதுவும் ஆனா அபசகுனம்னு வரையிருக்கவங்க வரமாட்டாங்கங்லம்மா" என்றவள், "செத்துப்போவ விருப்பமில்லைங்க... அது தப்பாச்சே! சின்ன காயம்னா கணக்குல சேர்த்துக்க மாட்டிங்களேங்... அதான்" என்றதோடு, "இந்த காயம் சரியாப்போற வரைக்கும் கல்யாணப் பேச்சு எடுக்கமாட்டிங்களேங்பா" என்று உதடு கடித்து வலியை பொறுத்துக்கொண்டு பேசியவள் அதற்கு மேல் தீ காயத்தின் எரிச்சலை தாங்க முடியாதவளாக தரையில் சரிந்திருந்தாள்.

அவளின் பேச்சிலே தனது கணிப்பு சரியென்று உறுதிபடுத்திக்கொண்ட நாராயணன், தற்போது அவளின் காயத்தை ஆற்றுவதுதான் அவசியமென மகளை கையில் அள்ளிக்கொண்டு மருத்துவமனை விரைந்தார். அவரின் பின்னாலே கத்திக்கொண்டு வந்த தேவகியின் அழுகையில் தான் திகழோவியனின் குடும்பம் வெளிவந்திருந்தது.

அவரின் அழுகை இந்த நொடி வரை நிற்காதிருக்கவே நாராயணன் மனைவியை கடிந்துகொண்டார்.

அவர் கடிந்துகொண்ட பேச்சில், அங்கு நின்றிருந்த சுகிர்தன் மற்றும் காமாட்சிக்கு, செந்தாழினியின் இச்செயல் யாருக்காக என்று புரிந்ததோடு, நாராயணனுக்கும் அவள் யாரையோ விரும்புகிறாள் எனுமளவில் தெரிந்திருக்கு என்பதையும் விளங்கிக்கொண்டனர்.

"அவங்க காயத்துக்கு ட்ரீட்மெண்ட் முடிஞ்சுது" என்று செவிலிப்பெண் வந்து சொல்ல, திகழோவியன் வேக எட்டுக்களுடன் அங்கு வந்து சேர்ந்தான்.

"வாடா திகழு" என்ற சுகிர்தன், "ட்ரீட்மெண்ட் முடிஞ்சுது. பார்க்கலாம் சொல்லிட்டாங்" என்றான்.

"ம்ம்..." என்றவன் ஒரு காலை பின்னால் சுவற்றில் பதித்து சாய்ந்து நின்றுகொண்டான்.

காமாட்சி ஏன் வந்திருக்கிறாரென நாராயணன் ஓரளவிற்கு அறிவார். இருவருக்குமான நட்பு இத்தனை ஆண்டுகள் தெரிந்தும் கண்டுகொள்ளவில்லை. அவரின் பகை ராஜேந்திரனுடன் தான் எனுமளவிற்கு அவரும் பக்குவம் கொண்டது, கல்யாணியின் இறப்பன்று நடந்த நிகழ்வுகளால் தான். யாரும் யாருக்கும் இங்கு நிரந்தரமில்லை என்பதை புரிந்துகொண்டாலே ஒருவருடனான கோபங்கள் அர்த்தமற்றவை என்பதை புரிந்துக்கொள்ளலாம். அதனை அன்று பிரித்துக்கொண்டதாலே நாராயணன் தனது பகை என்பதை அதற்கு பின்னான நாட்களில் ராஜேந்திரனுடன் நிறுத்திக்கொண்டார். அதனாலே அன்று வரப்பு சண்டையின் போது அவரால் திகழோவியனிடம் இயல்பாக பேசிட முடிந்தது. தற்போது மனைவிக்காக வந்து நிற்பவர்களிடம் முகம் காட்டாதிருக்கவும் முடிந்தது.

'காமாட்சியைக் கூட்டிக்கொண்டு சுகிர்தன் வந்தான். ஆனால் திகழோவியன் வர காரணமென்ன?' அவரின் மனம் யோசித்துக் கொண்டிருக்க, தேவகியும் காமாட்சியும் சிகிச்சை அறைக்குள் சென்று செந்தாழினியை இருபக்கமும் தோள் தாங்கி கைத்தாங்கலாக அழைத்து வந்திருந்தனர்.

வலது காலின் பாதத்திற்கு மேல் முழுக்க தோல் சுருங்கி சிவந்து, ஆங்காங்கே நீர் கோர்த்து பார்க்கவே ரணமாக இருந்தது.

பாதத்தை ஊன்ற முடியாது ஒவ்வொரு அடிக்கும் வலியால் முகம் சுருங்க, மூச்சினை இறுக்கிப் பிடித்தும், உதடு கடித்தும் வலியைப் பொறுத்தாள்.

கண்கள் மூடி நின்றிருந்த தம்பியை தோள் தொட்டு, செந்தாழினி வருவதை சுட்டிக்காட்டினான் சுகிர்தன்.

நாராயணன் கவனித்தும் அமைதியாக இருந்தார்.

"அய்யோ முடியலங்" என்ற செந்தாழினி அடுத்த அடி வைத்திட முடியாது அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திட,

"வலிக்கும் தெரிஞ்சு செய்துகிட்டதுக்கு யாரென்ன பண்ண முடியும். அனுபவிச்சுதான் ஆவணும்" என்ற நாராயணனின் குரலில் நிமிர்ந்தவள் தனக்கு நேரெதிர் தன்னையே பார்த்தபடி நின்றிருந்த திகழோவியனின் பார்வையை இமை சிமிட்டாது தாங்கி நின்றாள்.

"ஏண்டி?" அவனின் அகக்குரல் கேட்டிட,

"வேற வழித்தெரியலங் மாமா" என அனைவருக்கும் கேட்கும்படியே பதில் வழங்கியிருந்தாள்.

அவ்வளவு தான். அவளின் தவிப்புகள் நிறைந்த அந்த மாமா என்றழைப்பில் மொத்தமாக அவள் பக்கம் சாய்ந்துவிட்டான்.

இருந்த கோபமெல்லாம் அங்கு வருவதற்கு முன்பே எங்கோ சென்று மறைந்திருக்க, அவளின் ஓவியாக அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான். கரங்களை பற்றிக்கொண்டவனாக.

தேவகி காமாட்சியை பார்க்க, காமாட்சியும், சுகிர்தனும் நாராயணனைத்தான் அதிர்வாய் நோக்கினார்.

எதுவும் பேசிவிடுவாரோ என்ற பயம் எழாமலில்லை.

"மன்னிச்சிட்டீங்களாங் மாமா" என்று உதடு துடிக்க கேட்டவளின் பின்னந்தலையில் கை வைத்தவன் தனது மார்போடு அவளின் முகம் புதைய அழுத்திக் கொண்டான்.

"எல்லாம்... எல்லாமே மறந்துப்புடலாம்" என்றவன், "புதுசா லவ் பண்ணலாங் அம்மணி" என்றான்.

"அம்மணி சொல்ல இப்போதான் மனசு வந்துச்சாங்" என்றவள் தனது தாய் தந்தையர் தங்களின் நிலையை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்தும், அவனின் முதுகோடு கையிட்டு அணைத்துக் கொண்டாள்.

அவ்வழைப்பை திகழோவியன் எப்போதும் வாய் அழைப்பாகப் பயன்படுத்தியது இல்லை. ஆனால் புலனத்தில் உரையாடலில் அவனின் ஆரம்பம் அவ்வர்த்தையாகத்தான் இருக்கும்.

"அம்மணி" என்ற அவ்வெழுத்துக்கள் அவனது குரலாகத்தான் அவளின் அகம் நிறையும்.

இப்போது முதல்முறையாக அவன் சொல்லிக் கேட்க இதயத்தின் தாள லயங்கள் எல்லாம் உடலின் அணுக்களை மீட்டும் மாயம். கூடுதல் இன்பமாய் அவனின் கோபம் துறந்து ஏற்றுக்கொண்டது.

"லவ் யூங் மாமா!"

"உன்ற புள்ளயை பொறவு லவ் பண்ண சொல்லுங்மா! இவரு பார்வையே சரியில்லை" என்று சுகிர்தன் காமாட்சியின் காதில் கிசுகிசுக்க...

"லவ்வா!" என்று சத்தமாகக் கேட்டு விழிகள் விரித்தார் தேவகி.

"ஆமா... எங்களுக்கும் இப்பைக்குதான், நேத்து தெரிஞ்சுது" என்றார் காமாட்சி. நாராயணனை மறந்தவராக.

அவர்களின் பேச்சுக்கேட்டு தொண்டையை செருமி தனது இருப்பை உணர்த்தினார் நாராயணன்.

"அண்ண... அது வந்து" என காமாட்சி ஏதோ சொல்ல முற்பட...

"சுமக்க முடியாத பாரத்தை சுமந்தவன்... நானும் வலிக்க வச்சிப்புட மாட்டேன். மனசுன்னு ஒன்னு எனக்குமிருக்கு" என்ற நாராயணன், "பொறுமையா கூப்புட்டு வந்து சேருங்கங்" என்று தோளில் கிடந்த துண்டை உதறி மீண்டும் தோளில் போட்டவராக வெளிவாயில் நோக்கி சென்றார்.

தேவகியும், காமாட்சியும் அவரின் பேச்சினை நம்ப முடியாது வாய் பிளந்து பார்த்து நிற்க, சுகிர்தன் வாய் பொத்தி சிரிப்பை அடக்கினான்.

அவர் பேசிய வார்த்தைகளும், துண்டை உதறி போட்டதும், தற்போது பின் உருவம் தெரிய நிமிர்ந்து செல்வதும், சுகிர்தனனுக்கு பின்னணியில்,

"அந்த வானத்தைப்போல மனம் படைச்ச மன்னவனே..." என்ற பாட்டை எடுத்துக்கொடுக்க வந்த சிரிப்பை கட்டுப்படுத்தியிருந்தான்.

"எதுக்குடா சிரிக்கிற?" காமாட்சி அவனின் முதுகிலே அடித்தார்.

"இவங்க காதல் தெரிஞ்சதும், இவங்களுக்குள்ள என்ன பிரச்சினைங்கிறதை தாண்டி, பெருசு ரெண்டையும் என்னமாச்சும் சமாளிக்கணுமோன்னு தான் அதிகம் பயந்தேனுங். இப்போ ஒரு டிக்கெட்டு அவுட்... இன்னொரு டிக்கெட் தான் என்ன கதைன்னு தெரியலங். ஓவரா ஆடுமே" என்றான்.

"என்னவா இருந்தாலும் என்ட்ர மவன் விருப்பம் நிறைவேறனும். அதுக்கு அந்த ஆளை பொளக்கவும் நானு தயாருதான்" என்ற காமாட்சி, "இப்படி குளிர்ந்த மொவமா என்ட்ர புள்ளையை நானு பார்த்ததே இல்லை சுகிர்தா" என்று கலங்கிய கண்களை புடைவையை வளைத்து துடைத்துக் கொண்டார்.

"இனிமேலு அவனும் சந்தோஷமா இருப்பானுங்மா" என்றவன், "அவன் கூட்டியாருவான். நாம போவோம்" என இரு பெண்களையும் அழைத்துக்கொண்டு சென்றிருந்தான்.

செந்தாழினி அவனை கட்டிக்கொண்டு அவனது நெஞ்சில் முகம் புதைத்திருக்க, அவனின் கை அவளின் தலையை வருடியபடி இருந்தது.

இருவருக்குமே அக்கணங்கள் மதிப்புமிக்கவை. இருவரும் சேர்ந்திருக்கும் நொடிகள் பொக்கிஷமானவை என பிரிவின் அனுபவத்தால் உணர்ந்துகொண்டிருந்தனர்.

"நானு அன்னையப் பேச்சுக்கு எந்தவொரு விளக்கமும் சொல்லலைங்களே மாமா!"

"கோவங்கிற திரை விலகுனதும் உன்ற மனசு புரியுதுங் அம்மணி. பொறவு விளக்கம் தேவைங்களா?" அவன் கேட்டதில் அப்படியொரு ஆசுவாசம் அவளிடம்.

அவளின் அணைப்பு கூடியது.

"இப்படியே இருக்கோணும் ஆசைதாங் அம்மணி. ஆனா இது ஹாஸ்பிட்டலு..." என்று அவன் சிரியாது சொல்லியதில் அவனிலிருந்து பதறி விலகி சுற்றம் ஆராய்ந்தாள்.

"யாரும் பாக்கல..." என்றவன் குலுங்கி சிரித்திட, "போங்கங் நான் போறேனுங்" என்றவள் எழுந்த வேகத்திற்கு பாதத்தில் காயம் ஊசியாய் துளைத்திட, அவள் மீண்டும் இருக்கையில் சரியும் முன் தனது கைகளில் ஏந்தியிருந்தான்.

"மாமா..." தானாக அவளின் கைகள் அவனது கழுத்தை கோர்த்துப்பிடித்திட, அவன் மார்புரசும் முகம் நோக்கி தாழ்ந்திருந்த அவனது கண்களை விழுங்கியவளாக அழைத்திருந்தாள்.

"நாள்பூரா நீ சொல்ல கேட்டுகிட்டே இருக்கோணும் அம்மணி" என்றவன் மருத்துவமனையில் தங்களை கவனித்துப் பார்க்கும் யாரையும் பொருட்படுத்தாதவனாக வெளியேறியிருந்தான்.

அங்கிருந்து நேராக அவளது வீட்டிற்கு வந்தவன், தானே அவளை வீட்டிற்குள் தூக்கியும் சென்றான்.

தொடர்ச்சி கீழே 👇🏻
 

STN - 03

Member
Staff member
கூடத்தில் நாராயணனும், தேவகியும் மகளை எதிர்ப்பார்த்து உட்கார்ந்திருக்க, நாராயணன் அமர்ந்திருந்த நீண்ட இருக்கையில் அவர் பக்கத்தில் அவளை அமர்த்தியவன், அவருக்கு நேரெதிர் நின்று...

"உமக்கே விஷயம் என்னன்னு தெரிஞ்சிருக்குமுங் மாமா! உம்ம மனசுக்கும் சரின்னுதான் நினைக்கிறேனுங். இருந்தாலும் நான் சொல்றதுதானங், அதுவும் நான் கேட்டு நீங்க சரின்னு சொல்றதுதாங் நல்லாயிருக்கும்" என்றவன், "நான் புதுசா சொல்ல இன்னும்லைங். என்னைய மூணு வருஷமா பக்கட்டிக்கு இருந்து பாக்குறீங்க. ஓரளவுக்கு நானெப்படின்னு தெரியுமில்லங். அந்த நம்பிக்கையில உம்மட பொண்ணை கட்டித்தாங்க. காலத்துக்கும் தாங்கிப்பேன்" என்றான்.

"உன்ற ஐயன் ஒத்துக்கிடுவாரா?" நாராயணன் கேட்டதிலே அவரின் சம்மதத்தை அறிந்தான்.

"அவருக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லைங் மாமா! இதுல அவரு முடிவு சொல்ல ஒண்ணுமில்லங்."

"ஆனா பொண்ணை கட்டிக்கொடுக்கிற ஐயனா, பையனோட ஐயன் சம்மதம் எனக்கு வேணும்" என்ற நாராயணனை அப்படியொரு பார்வையாக முறைத்து வைத்தார் தேவகி.

"ஆஸ்பத்திரியில சின்னகவுண்டர் விஜயகாந்து ரேஞ்சுக்கு டயலாக் பேசிப்போட்டு இக்கட்டிக்கு ஆப்பை நீட்டுறாறு பாரு..." தேவகி முனங்கிட, மூவரும் ஒருசேர அவரைப் பார்த்தனர்.

"கேட்டுப்போச்சுங்களாங்..." நெஞ்சில் கை வைத்தவராக தேவகி அதிர்ந்து கேட்க நாராயணன் தலை ஆமென ஆடியது.

"இன்னும் கொஞ்சம் சத்தத்தை குறைச்சு முனங்கியிருக்கலாங்மா" என்று செந்தாழினி கூறிட, "ஆத்தி நானில்ல" என்று காமாட்சியை தேடி ஓடியிருந்தார் தேவகி.

சடுதியில் இங்கு நடக்கும் விஷயத்தை காமாட்சியிடம் கூறி வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார்.

"ஐயன் உறவை விட அம்மா உறவு ஒசத்திங்ண்ணா... என்ட்ர மவனுக்காக நான் பொண்ணு கேட்கிறேனுங்க. கட்டிக்கொடுங்கங்" என்று வந்ததும் சுற்றி வளைக்காது கேட்டிருந்தார் காமாட்சி.

"உன்ற புருஷன் வீம்புக்குன்னு சடவு கூட்டுவாம்மா" என்ற நாராயணன், அவர்கள் எதிர்ப்பார்க்காததை கூறியிருந்தார்.

"நானே அவன்கிட்ட பேசுறேன்."

"நீங்களாங்?" நால்வரும் ஒரே குரலில் கேட்டிட...

"என் பொண்ணு எனக்கு முக்கியம்... அதுக்காக அவன்கிட்ட இறங்கிப்போறதுல நான் ஒண்ணும் கொறஞ்சிப்புடமாட்டேன்" என்றார்.

இப்போது காமாட்சி, தேவகி இருவருக்கும் பின்னணியில்...

"வானத்தைப்போல மனம் படைச்ச மன்னவனே..." என்ற பாடல் கேட்க, அவரை மெச்சுதலாகப் பார்த்தனர்.

ராஜேந்திரனிடம் கேட்டு, அவர் சம்மதம் சொல்லி தனக்கொரு நல்ல விஷயம் நடக்க வேண்டுமென்பதில் திகழோவியனுக்கு துளியும் விருப்பமில்லை என்றாலும், மற்றவர்களின் வார்த்தைக்கு மதிப்பளித்து, சரியென்று சொல்லாவிட்டாலும் என்னவும் செய்துகொள்ளுங்கள் என்று அமைதியாக இருந்துகொண்டான்.

அடுத்த இரண்டு நாளில் வீட்டிற்கு பின்னிருக்கும் வயலில் ராஜேந்திரன் உரமிட்டுக் கொண்டிருக்க தனது வீட்டிலிருந்து கவனித்தவராக நாராயணன் அவரிடம் சென்றார்.

தன்னைக் கேட்காது, தன்னிடம் வார்த்தைக்கேனும் சொல்லாது அவர்களுக்குள்ளாகவே நடக்கும் பேச்சு வார்த்தைகளையெல்லாம் கண்டுகொண்டுதானிருக்கிறார் ராஜேந்திரன். ஆனால் அவர்களின் ஒதுக்கத்தில் இவரால் சென்று அதிகாரம் செலுத்த முடியவில்லை.

இப்போதும் வீம்பும், வீராப்பும் கொஞ்சமும் குறையவில்லை. அவர் எப்போதும் தனது தவறை உணரப்போவதில்லை. மற்றவர்களின் மன உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கப்போவதுமில்லை. அவரை அப்படியே அனைவரும் பழகிக்கொண்டது தான் இயல்புக்கு ஏற்புடையது.

நாராயணன் வந்து நிற்பதை உணர்ந்தபோதும், தன்னுடைய வேலையில் கண்ணாக இருந்தார் ராஜேந்திரன்.

'அவனா பேசப்போறதில்லை' என பெருமூச்செரிந்த நாராயணன்,

"உன்றகிட்ட பேசணும் ராஜேந்திரா" என்று கணீர் குரலில் கூறியிருந்தார்.

கையிலிருந்த உரத்தை விசிறியவராக, திரும்பிப் பார்த்தவர், மீண்டும் உரத்தை கையில் அள்ளி வீசியவாறே, "என்ன பேசணும்? வழக்கமா சடவுப் பேச்சு பேசி ஓரியாட்டம் கட்டத்தான பார்ப்ப" என்று இரும்பை விழுங்கியவராகப் பேசினார்.

"நடந்துக்கிட்டே பேசினா... என்னன்னு பேச" என்ற நாராயணன், "சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியுதா?" என்றார்.

"ஏன் தெரியாம! எல்லாம் நல்லாவே தெரியுதுங்... நீங்க வந்த சங்கதியை என்னன்னு சொல்லுங்கங்" என்றவராக தலையில் கட்டியிருந்த முண்டாசை அவிழ்த்தபடி வரப்பில் ஏறி நாராயணனுக்கு எதிரே நின்றார் ராஜேந்திரன்.

"அப்போ புதுசா உமக்கு நானொன்னும் சொல்ல வேணாம்" என்றவர், "கதையே முடியப்போவுது... இன்னமும் உனக்கென்னத்துக்கு வெட்டி வீராப்பு. அவங்களை சேர்த்து வைக்கிற விஷயத்துலையாவது மனுஷனா நடந்துக்க. உன்னைய நல்லவனா காட்டிக்க ஒரு வாய்ப்பு... இல்ல நீ முறைச்சிக்கிட்டுதான் நிப்ப அப்படின்னா எனக்கொண்ணுமில்ல. நடக்குறபடி இந்த கல்யாணம் நடக்கும். அப்படி நடந்தாக்கா ஒரு ஐயனா உன்ற மனசு என்ன பாடுபடும் தெரியும். அதுக்காகத்தான் இப்போ உம்ம முன்னாடி நின்னு பேசிட்டு இருக்கேன். இதுக்குமேல உம்மட விருப்பம்" என தான் சொல்ல வேண்டியதை சொல்லியாயிற்று என்று திரும்பி நடந்தார்.

தற்போது, செல்லும் நாராயணனை பார்க்கும் ராஜேந்திரனுக்கு, 'தட் வானத்தைப்போல மொமென்ட்.'

"இவன் அவ்ளோ நல்லவனில்லையே" என்று வாய்விட்டே கூறிக்கொண்ட ராஜேந்திரன், உண்மையிலே மனம் மாறி இறங்கி வந்தாரோ இல்லையோ... விறைத்துக்கொண்டே சம்மதம் வழங்கியவராக முறைப்பாக கல்யாண வேலையில் சுகிர்தனனுக்கு உதவியாக அனைத்தும் செய்தார்.

அவர் எவ்வளவோ நெருங்கி வந்தாலும் திகழோவியனுக்கு அவரை ஏற்றுக்கொள்ள மனம் ஒப்பவில்லை. அதனால் எப்போதும்போல் அவரிடம் விலகியே நின்றுகொண்டான்.

செந்தாழினிக்கு கால் குணமாகும் நாளை கணக்கிட்டு நிச்சயம் வைத்து அதிலிருந்து இரண்டு மாதங்களுக்குப் பின்னர் திருமணமென முடிவு செய்தனர்.

அதற்கு பின்னான ஓர்நாள் மூன்று வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் இருபது ஆண்டுகளுக்கு மேலாக தான் வளர்ந்து வாழ்ந்த வீட்டிற்குச் சென்றான் திகழோவியன்.

அன்றைய கோவிந்தனின் பேச்சுக்கான நோக்கம் அப்போது பிடிபடவில்லையென்றாலும், இத்தனை நாட்களில் ஓரளவுக்கு விளங்கியிருக்க, தனித்திருக்கும் அவரை தன்னுடன் தனது உறவாக இருத்திக் கொண்டான்.

இறுகிய வாழ்வு திகழோவியன் காட்டிய அரவணைப்பால் கோவிந்தனுக்கு சற்றே இலகுவாக மாறியிருந்து.

திருமணத்திற்கான இடைப்பட்ட நாட்கள் திகழோவியன் செந்தாழினிக்கு காதலின் பழைய காலங்களாக அத்தனை இதமாக நகர்ந்தன.

நகர்வு திருமண நாளின் முகூர்த்த நொடியில் வந்து நின்றது.

மணமேடை ஏறுவதற்கு சில நிமிடங்களே இருந்திட, செந்தாழினி பேசுவதாக மணி கொண்டு வந்து அலைபேசியை கொடுத்திட, தித்திக்கும் தேனின் துளியாய் அந்த நொடிகள் கரைந்தன.

"கொஞ்ச நேரத்துல என் பக்கட்டு உரசிக்கிட்டு உட்காரப்போற... அதுக்குள்ள என்ட்ரகிட்ட பேசுனுங்களாங் அம்மணி" என்று திகழோவியன் கேட்க,

"ஆமாங்... ஆனா பேசோணும் இல்லைங்... பார்க்கோணுங்க" என்றாள்.

"அஞ்சு நிமிஷமிரு பார்த்துக்கலாம்."

"அப்போயில்லங்... இப்போ... இப்பைக்கு, இந்த செக்கண்டுங்க" என்றவள், "கட் பண்ணிப்போட்டு வீடியோ கால் பண்ணுங்கங் மாமா" என்றவளாக இணைப்பைத் துண்டித்தாள்.

இதுபோன்ற ஒரு நிகழ்வு காதலிக்கும் காலத்தில் நடந்திருக்க, மிகுந்த எதிர்ப்பார்ப்போடும் ஆர்வத்தோடும் காணொளி அழைப்பு விடுத்திருந்தான்.

அவளை மணப்பெண்ணாக பார்க்கும் ஆவல் விழிகள் முழுக்க விரவியிருக்க, அழைப்பில் தெரிந்த முகம் கண்டதும், நொடியில் கண்களில் தேக்கி நிறுத்திய உணர்வை மாற்ற முடியாது தடுமாறிப் பார்த்தான் தனது அண்ணியை.

"அண்ணி... அதுங்..."

"என்னவாம் என்ட்ர கொழுந்தனாருக்கு மொவம் மருதாணி கணக்கா செவந்து கிடக்குது" எனக் கேட்ட சுவிதா, "என்ன பயந்துட்டிங்களாக்கும்? சும்மா... உன்ற பொண்டாட்டிகிட்ட மூத்தமருமவ கெத்து காட்ட" என்றதோடு, "சீக்கிரம் லவ் பண்ணி முடிங்க. தாலிக்கட்டிப்போட்டீங்கன்னா... நாமா டாடா சொல்லிப்புடலாம். பொறவு தனியா என்ன வேணுமானாலும் பண்ணிக்கோங்க" என்று வாய்ப்பொத்தி சிரித்தவளாக அலைபேசியை செந்தாழினியின் முகம் தெரிய வைத்தவள், அவளின் மடியில் அமர்ந்திருந்த நிதன்யாவை தூக்கிக்கொண்டு நகர்ந்தார்.

"அண்ணியை வச்சுக்கிட்டு ஏண்டி கால் பண்ண... சட்டுன்னு மொவத்தை மாத்த முடியல. எப்படி கிண்டல் பண்ணிப்போட்டுப் போறாங்க" என்றவன், அவளின் அசையாப் பார்வையில் தான் பேச்சினை நிறுத்தி அவளின் முகம் கவனித்தான்.

"இப்படி பார்க்கத்தான் கால் பண்ண சொன்னியா?"

"ஆமாங் மாமா!"

"இதை மேடைக்கு வந்ததுமே பார்த்திருக்கலாமே!"

"அப்போ நான் பார்த்து உம்ம கண்ணு காட்டுற அவஸ்தையை எல்லார் முன்னாடியும் என்னால ரசிக்க முடியாதுங்களே!"

"அதுக்கு?"

"இப்போ ரசிச்சிக்கிறேனுங்க" என்றவள், திகழோவியன் கீழ் உதட்டை கடித்து விடுவித்ததில் மனம் லயித்தவளாக, "அழகா இருக்கீங் மாமா" என்றாள்.

"என்ட்ர பொண்டாட்டி அளவுக்கு இல்லைங் அம்மணி" என்றவன், "மொத்தமா உருக வைக்கிற தாழினி" என்றான்.

அவனது பார்வையும் வார்த்தையும் அவளை நிலம் தாழ வைத்தது.

"லவ் யூ டி..."

"லவ் யூங்க மாமா" என்றவள், "மன்னிச்சிக்கிடுங்கங்" என்றாள்.

அவனின் புருவம் எதற்கெனும் விதமாக உயர்ந்தது.

"உம்மட கூட உட்காரும் முன்ன கேட்கணும் தோணுச்சுங்..." என்றவள், "மணமேடையில் மீட் பண்ணுவோமுங்" என்று வைத்திட்டாள்.

தங்களின் காதலை தரம் தாழ்த்தி பேசியதற்கான மன்னிப்பு இதுவென புரிந்துகொண்டவன், எப்போது நினைவிலிருந்து ஒதுக்கி வைத்த அந்தநாள் பேச்சினை, இப்போதும் முற்றிலும் மனதிலிருந்து நீக்கியிருந்தான்.

"லவ் பண்ணி முடிச்சாச்சாடா! பையன கூப்பிடுங்கோ கூப்பிடுங்கோன்னு ஐயர் கத்திக்கிட்டு கிடக்கார்டா" என்று வந்த மணி, "வா போவோம்" என அழைக்க...

"நானு... நானுங் மணி மாமா..." என்று ஓடிவந்தாள் நிதன்யா. அவளுக்குப் பின்னால் சுகிர்தன்.

"நீங்க என்னதுங் அம்மணி" என்று மணி நிதன்யாவை தூக்கிட, "சித்தப்பாவும் சித்தியை அம்மணின்னுதாங் கூப்பிடுவாங்க" என்று நண்பன் மற்றும் அண்ணன் முன்னிலையில் திகழோவியனை வெட்கப்பட வைத்திருந்தாள் அவனது குட்டி அம்மணி.

"நிது குட்டி..." என்ற திகழோவியன் மணியின் கையிலிருந்து அவளை வாங்கியவளாக கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தான். தானும் பதில் முத்தம் வழங்கியவள்,

"உமக்காக எல்லாரும் வெயிட்டிங் சித்தப்பா" என்றதோடு, "என்னை எறக்குங்" என்றாள்.

திகழோவியன் கீழே விட்டதும்,

"என்ட்ர கை புடிச்சுக்கோங்... உம்ம நானு கூட்டிப்போறேனுங் சித்தப்பா" என்று அவனின் கையை பிடித்து இழுத்தாள்.

அவளின் சிறு அடிக்கு ஏற்றவாறு திகழோவியனும் நகர்ந்தான்.

"ப்பா... வீடியோ எடுங்கங்" என்று தன்னுடைய தந்தைக்கு உத்தரவிட்டவள், "அம்மா இப்படித்தான் சித்தியை கோயிலிலுள்ள கூட்டிட்டுவந்தாங்" என்றாள்.

மேடையின் இந்தப்பக்கம் திகழோவியன், அந்தப்பக்கம் செந்தாழினி. ஒன்றாக இருபுறமும் மேடையேறி மணப்பலகை முன் வந்து தோள்கள் உரச நின்றவர்கள், சபைக்கு பொதுவாக கரம் குவித்து வணங்கி பாத விரல்கள் மோதிட சம்மணமிட்டு அமர்ந்தனர்.

அவனது உறவுகள் யாவரும் பின்னால் நின்றிட, திருமண சடங்குகள் இனிதே துவங்கின.

ஐயரின் மந்திர ஓசை மங்கள இசையோடு கலந்து கோவில் மண்டபம் முழுவதும் பரவியது.

"கெட்டிமேளம்... கெட்டிமேளம்..." என்ற ஐயர், தாலியை திகழோவியனின் கைகளில் கொடுத்திட...

அந்த நொடி வரை அமைதியாக இருந்த திகழோவியனின் இதயம் வேகமாக துடிப்பைக் கூட்டியது. இனிய படபடப்பு.

தாலியை செந்தாழினியை நோக்கிக் கொண்டு சென்றவன்,

தன்னுடைய பாத விரல்கள் தீண்டும் அவளின் பாத விரல்களை கோர்த்து பிடித்திருந்தான்.

"மாமா!" என அவனது தீண்டலில் திடுக்கிடலோடு தன்னை நிமிர்ந்துப் பார்த்தவளின் விழிகளோடு சங்கமித்தவன், தனது கரம் சேர்ந்திருக்கும் தாலியை நெஞ்சில் நிறைந்த காதலோடு அவளின் கழுத்தில் சேர்த்து மூன்று முடிச்சிட்டிருந்தான்.

கெட்டிமேளம் உச்சத்தைத் தொட... அட்சதை மழையாய் தூறியது.

உறவுகளின் வாழ்த்து ஆசீர்வதாமாய் மணமக்களை சேர்ந்தது.

காதலனாக இருந்தவன், கணவனாக!

உள்ளம் பூரிக்க, பக்கவாட்டில் அவனின் முகம் பார்த்தவள், "முத்தம் கொடுக்கனுங் மாமா!" எனக்கூறி அவனை அதிர வைத்திருந்தாள்.

இருவருக்கும் பின்னால் நின்றிருந்த சுகிர்தன், சுவிதா புன்னகைத்தவர்களாக வேறுபக்கம் திரும்பிட, ராஜேந்திரன் தொண்டையை செருமியவராக நகர, நாராயணன் தோளில் துண்டை சரி செய்தவராக விலகிட, கோவிந்தன் நிதன்யாவிடம் பேசுவதைப்போன்று அவள் உயரத்திற்கு குனிந்திட, தாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று புரியாது தேவகியும் காமாட்சியும் திருதிருத்தனர்.

"எப்பா சாமி இனிமேலு உம்ம காதலுக்கு தடையுமில்லை, எண்டுமில்ல... அக்கட்டிக்கு ஓரமா போய் என்னவும் பண்ணிக்கோங்க. குழந்தைப்புள்ள இருக்க இடத்துல என்னமாச்சும் பண்ணி வச்சுப்புடாதீங்கடா" என்று மணி அலறிய அலறலில் கேட்டும் கேட்காததைப்போன்று பாவனை செய்த உறவுகள் யாவும் சத்தமிட்டு சிரித்திருந்தனர்.

அவர்களின் சிரிப்பின் சாயலாய் செந்தாழினி முகம் சிவந்திட, அவள் கொடுக்க வேண்டுமென்றதை திகழோவியன் அவளுக்கு கொடுத்திருந்தான்.

"டேய்..." என்று குடும்பத்தார் அனைவரும் கண்கள் மூடிட, செந்தாழினி அவன் கொடுத்ததை திருப்பிக் கொடுத்திருந்தாள்.

அக்காட்சி அழகியலின் பொக்கிஷமாக புகைப்படக்காரரின் காமிராவில் பதிந்தது.

இனி தீரா ஊற்றாய் இருவரின் நேசமும்...

நெஞ்சில் உயிராய் தாங்கி நின்ற நேசம் நிறைவாய் வாழ்வெனும் பந்தம் சேர்ந்தது.

காதல் நெஞ்சத்தில் உயிராக நிறைந்தனர் திகழோவியன் ❤ செந்தாழினி.


சுபம்.
 
இனிமையாக அழகான காதல் கதை.உணர்வுபூர்வமாக இதமாக இருந்தது. நன்றி.வாழ்த்துகள்.
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom