வணக்கம் மேம் கதைக்கான அடுத்த எபி
உன்னிடத்தில் மனம் மயங்குதே அத்தியாயம் -17
தாமதம் என்பது நிராகரிப்பு அல்ல.அது நம்மை பக்குவப்படுத்துவதற்காகக் காலம் எடுத்துக் கொள்ளும் அழகான இடைவெளி.
ஆதித்யாவை அங்கே கண்டதும் சாரலின் முகம் மொத்தமாக மாறிப்போனது.
அவனிடம் எதுவும் சொல்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டு செல்ல அவள் நினைக்கும் போது ஆதித்யா “சாரல் சாரல்” என்று அழைத்தான்.
அவனின் அந்த அழைப்பு இரண்டு வருடங்களுக்கு முன்னால் அவன் அழைத்த அதே தொணி.அவளால் அதை உணர முடிந்தது.
கால்கள் வேகமெடுக்க முயன்றாலும் மனமோ இன்னும் கொஞ்ச நேரம் தானே என்று கெஞ்சியது.
ஆனால் அவள் அடுத்து நகர நினைக்கும் போது “சாரல் ப்ளீஸ் கொஞ்ச நேரம் தான்” என்றான்.
அவளோ அவனை திரும்பி பார்க்காமல் “பேச நமக்குள்ளே ஒன்னுமே இல்லாத பொழுது நீ மட்டும் என்ன பேசப் போறே?” என்று கேட்டாள்.
“என்ன நமக்குள்ளே பேச ஒன்னுமில்லையா? இருக்கு நிறையவே இருக்கு சாரல்” என்று அருகில் வந்தான்.
அவளோ தள்ளி நிற்க முயற்சிக்கவும் “தாத்தாக்கு விருப்பம் இல்லை ஒரே காரணத்துக்காக ரெண்டு பேருக்கு நீ தண்டனை கொடுத்துட்டு இருக்கே சாரல்” என்றான்.
அவளோ விடாப்பிடியாக “என்னை சமாதானம் செய்யலாம்னு நினைத்தால் அது நடக்காது” என்றாள்.
ஆதித்யா சிரித்துக் கொண்டே “உன்னை சமாதானம் செய்ய நான் வரலை சாரல்.உன்கிட்டே உண்மையை மறைச்சு வைச்சு இருக்கானே ஒருத்தன் அவன்கிட்ட போய் கேளு” என்றான்.
சாரல் கோபத்தோடு “நீ நினைச்சா திடீர்னு வருவே திடீர்னு காணாமல் போவே.நீ இங்கே வர்ற வரைக்கும் எல்லாமே நல்லா இருந்துச்சு நான் சந்தோஷமா இருந்தேன்,என்னைக்கு உன்னை காப்பாத்தினேனோ அன்னைக்கே எல்லாமே மாறிப் போச்சு.நான் அநாதையாகிட்டேன் எல்லோரும் என்னை விட்டு போய்ட்டாங்க, நீயும் என்னை விட்டு போ போடா” என்று அவன் நெஞ்சிலே இவள் கையை வைத்து அழுத்தி பலம் கொண்ட தள்ளி விட்டு ஹோவென்று கதறி அழுதாள்.
எத்தனை நாட்களாய் எத்தனையோ மாதங்களாக அவனிடம் சொல்ல நினைத்து சண்டை போட வேண்டும் என்று தனிமையில் இருந்து புலம்பிய வார்த்தைகள் இன்று அவனுடன் நேருக்கு நேராக சொன்னதும் நெஞ்சம் விம்மி அடக்கி வைத்த விம்மல்கள் எல்லாம் வெளியே வந்தன.
அந்த கடற்கரை மணலியே முட்டியிட்டு அமர்ந்து முகத்தை மூடி அழுதாள்.மணலில் விளையாடிக் கொண்டிருந்த விதுன் சாரலின் அழுகையைப் பார்த்து ஓடி வந்தான்.
ஆதித்யா அவனைப் பிடித்து வைத்தவன் “சாரல் கொஞ்ச நேரம் அழட்டும்”
“ஏன்?சாரல் பாவம்” என்று சொன்னான்.
“ஆதி சொன்னா கேட்பே தானே”
“ம்ம்ம்…” என்று தலையசைத்தான்.
“சரி நீ போய் விளையாடு சாரலை நான் பார்த்துக்கிறேன்” என்றதும் விதுன் அங்கிருந்து சென்றான்.
சாரல் குனிந்து அழுதுக் கொண்டிருந்தவளின் அருகில் மெதுவாகச் சென்று அவளது தலைக்கு அருகில் அவன் நெருங்கி வரவும் திரும்பவும் அவனது நெஞ்சில் சோர்ந்து போய் அடித்தவள் “ஏன் இங்கே வந்தே? போ போடா” என்று கத்தினாள்.
ஆதி “சாரல் என்னை மன்னிச்சிடு. எல்லாத்துக்கும் காரணமே நான் தான்.அன்றைக்கு மட்டும் எனக்கு நினைவு வராமல் இருந்திருந்தால் உன்னை மறக்காமல் போய் இருந்தால் உன்னோடு நான் இருந்திருப்பேன்.எல்லாமே என் தவறு தான்.உன்கிட்ட என் காதலை சொல்லி இருக்கக் கூடாது.போதும் இத்தனை நாளாக நீ அனுவிச்ச வலி எல்லாம் போதும்” என்று அவளது தலையை மெதுவாக தடவிக் கொடுத்தான்.
அவள் தேடிய ஆறுதல் அவன் தான்.ஆனால் அதை ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு நிலை அவளுள் தேங்கிக் கிடந்தது.இன்னும் அழுதாள்.
அந்நேரம் அங்கே ராகவன் வந்தான்.சாரலும் ஆதியும் ஒன்றாக இருப்பதை பார்த்தவன் கோபத்தோடு “சாரல் சாரல்” என்று சத்தம் போட்டு அழைத்தான்.
அவன் குரல் கேட்டதும் பதறியபடி அவனை விட்டு விலகி நிற்க சாரல் நினைக்கும் போது அவளது கரங்களைப் பிடித்துக் கொண்டு நின்றான் ஆதி.
ராகவன் வந்து ஆதியைப் பார்த்து “என்னடா இது சாரல் சொன்ன உடனே போய்ட்டான்னு நினைச்சேன் அதெப்படி நடக்கும்” என்று சொன்னான்.
சாரலின் கரங்களை ஆதி பிடித்து இருப்பதை கவனித்த ராகவன் “ஹேய் விடுடா அவ கையை விடு” என்றதும் சாரல் அவன் கையை உதறி விட்டு ராகவன் அருகில் வந்து நின்றாள்.
அதைப் பார்த்ததும் ராகவன் முகத்தில் புன்னகை நிரம்பியது.ஆதியை பார்த்து “ஒழுங்கு மரியாதையா இந்த ஊரை விட்டு நீயாக போனால் நல்லது.இல்லைன்னா நானே உன்னை அடிச்சு துரத்துவேன்” என்று மிரட்டினான்.
சாரல் ராகவன் தற்போது பேசும் வார்த்தைகளை கேட்கும் போது அவளால் அதை நம்ப முடியவில்லை.ராகவன் இப்படி எல்லாம் பேசுவான் என்பதே அவளுக்கு இப்பொழுது தானே தெரியும்.
ஆனால் ஆதித்யாவோ அவன் பேசிய எந்தவொரு வார்த்தைக்கும் கோபப்படாமல் “என்னை இந்த ஊரை விட்டு போகச் சொல்ல உனக்கு இல்லை உன் தாத்தாக்கே உரிமை இல்லை.ஆனால் நீ சாரலை ஏமாத்தி வைச்சு இருப்பது அவளுக்கு தெரிய வேண்டாமா?” என்று கேட்டான்.
ஆதி பேசுவதைக் கேட்ட ராகவனின் முகம் மொத்தமாக மாறிப்போனது.அதை வெளிக்காட்டாத மாதிரி “எதாவது மறதில பேசுவியாடா நீ? நான் இதுவரைக்கும் சாரல்கிட்டே எதையும் மறைச்சது இல்லை.அது அவளுக்கே தெரியும் உன்கிட்ட பேச எங்களுக்கு என்ன இருக்கு நீ வா சாரல் நாம போகலாம்” என்று அவன் திரும்பி நடக்கும் போது அங்கே குமார் சித்தப்பு வந்துக் கொண்டு இருந்தார்.
அவரைப் பார்த்ததும் ராகவனின் முகம் மொத்தமாக இறுகிப்போனது.சாரலைப் பார்த்தவர் “சாரலு எம்மா சாரலு நல்லா இருக்கியாம்மா” என்று அவளை பார்த்து கேட்டார்.
தன் மேல் அன்புக் கொண்ட நபரில் அவரும் ஒருவர் அதனால் அவரைக் கண்டதும் சாரல் ஓடிப்போய் சித்தப்பு என்று அவரை அன்பாய் கட்டிக் கொண்டாள்.
“சித்தப்பு நல்லா இருக்கீங்களா?” என்று அவள் மேலும் கீழுமாக பார்த்தாள்.அவருடைய கால் லேசாக சாய்த்தபடி இருந்தது.
கொஞ்சமும் தாமதிக்காமல் சித்தப்பு “வாம்மா உன் வீட்டுக்கு போகலாம்” என்று அழைத்தார்.
சாரலின் பார்வை உடனே ராகவனின் பக்கம் திரும்பியது.அவனோ அவரிடம் “சித்தப்பு சாரல் ரெண்டுவருஷம் கழிச்சு ஊருக்கு வந்து இருக்கால்ல. அதனால கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும் நாளைக்கு பேசலாம்” என்று சொன்னான்.
ஆனால் சித்தப்பு விடாப்பிடியாக “எம்மா சாரலு உன் வீட்டுக்கு வருவதுக்கு எதுக்கு நேரம் பார்த்து வரணும்?நீ அங்கே வந்தாலே எல்லா கவலையும் பறந்து போய்டும் வாம்மா என்று அவளை அழைத்துக் கொண்டுச் சென்றார்.
ராகவன் வேகமாக விதுனை தூக்கிக் கொண்டு அவர் பின்னாலேயே சென்றவன் செல்லம்மாவின் வீட்டு வாசலில் விட்டு “விதுன் அப்பாவும் சாரலும் இப்போ வந்துடுவோம் நீ பாட்டிக் கூட இரு” என்று அனுப்பி வைத்தான்.ஆதியும் சாரல் மற்றும் சித்தப்புவுடன் சென்றான்.
சாரலுக்கு தன் தாத்தாவின் நினைவு இப்போது சித்தப்புவின் செயலில் வந்து போனது.
கதவை திறந்து உள்ளே அழைத்துச் செல்லவும் சாரலுக்கு அழுகையாக வந்தது.அதை அடக்கிக் கொண்டு தன் வீட்டைப் பார்த்தாள் சாரல்.
அவள் வைத்த பொருட்கள் எல்லாம் அப்படியே இருந்தது. வீட்டை மட்டும் அசுத்தம் அடையாமல் அதை பராமரித்து இப்போது பூச்சுவேலை நடந்து இருக்கிறது.
சாரல் அப்படியே நிற்கும் போது சித்தப்பு இருக்கையில் அமர்ந்து “காலம் எல்லாத்தையும் மாத்திடுச்சும்மா” என்று சொன்னார்.அதற்கு சாரல் ஆமாம் என்பது போல் தலையசைத்தாள்.
ஆதியைப் பார்த்து “பப்பு வந்த பிறகு அவன்தான் இந்த வீட்டை ரெடி பண்ண சொன்னான்.பிறகு தான் தயார் செய்தேன்.அதே நேரம் நீயும் வரவும் எனக்கு ரொம்ப சந்தோஷம் சாரல்” என்றார்.
சாரல் புன்னகையை மட்டும் பதிலாகத் தந்தாள்.சித்தப்பு “பப்புக்கு பழைய நினைவெல்லாம் இப்போ வந்திடுச்சாமே.நீ அவன்கிட்டே பேசினியா” என்று கேட்டார்.
சாரல் தலையைக் குனிந்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
ராகவன் “சித்தப்பு பழைய விஷயங்கள் பற்றி பேசி சாரலை இன்னும் நோகடிக்காதீங்க. சாரல் நீ எழுந்து வா வீட்டுக்கு போகலாம்” என்று அவசரப்படுத்தினான்.
சித்தப்பு “பழைய விஷயத்தைப் பற்றி பேசினால் வேதனையாகத் தான் இருக்கும் ராகவன்.ஆனால் இன்னும் சில முடிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கு இல்லையா?” என்று கேட்டார்.
அவர் பேசியதைக் கேட்டதும் ராகவன் கோபமாக “சித்தப்பு இதோட நிறுத்திக்கோ. நானும் ஏதும் சொல்ல வேண்டாமேன்னு பார்த்தால் எதுக்கு தேவையில்லாததையும்
பேசி சாரலை குழப்பம் வர வைக்கிறே?” என்று கேட்டான்.
உடனே ஆதி “அவளை யோசிக்க விடக் கூடாதுன்னு நீ நினைக்கிறியா?” என்று அவன் கேட்டான்.
இதைக் கேட்ட ராகவன் இன்னும் கோபத்தோடு “இதுக்கு எல்லாம் காரணமே நீ தான்.நீ வருவதற்கு முன்னாலே நாங்க நிம்மதியா இருந்தோம்.திரும்ப நீ வரவும் எல்லோர் நிம்மதியும் போச்சு” என்று கத்தினான்.
சாரல் “ராகவன் ப்ளீஸ் இதோட இந்த பிரச்சினைப் பத்தி பேசுறதை நிறுத்துங்க.சித்தப்பு நீங்க என்கிட்ட என்ன சொல்ல வேண்டுமே அதை சொல்லுங்க” என்றாள்.
சித்தப்பு தன் கையில் இருந்த கைப்பேசியைக் கொடுத்து “இதுல இருக்கிற வீடியோவ பாரு.அதுக்கு பிறகு என்னன்னு முடிவு செய்” என்று சொன்னார்.
சித்தப்புக் கொடுத்த கைப்பேசியில் பார்த்தாள்.அதில் கோபாலன் தாத்தா மிகுந்த கவலையோடு அவருடைய முகம் இருந்தது.அதில் சித்தப்புவும் ராகவனும் அமர்ந்து இருந்தார்கள்.
தாத்தா “குமார் நான் சொன்ன விஷயம் என்னாச்சு” என்று கேட்டார்.
சித்தப்பு “நான் முயற்சி செய்து தான் பார்க்கிறேன்.ஆனால் கண்டு பிடிக்க முடியலை” என்று சொன்னார்.
தாத்தா “குமாரு சீக்கிரமா பப்புவை எப்படியாவது கண்டுபிடிச்சு அவனை என் பேத்திக்கு கல்யாணம் செய்து வைச்சிடனும்.கவலையாகவும் எப்பவும் சோர்ந்து போய் இருக்கிற என் சாரல் முகத்தை பார்க்க முடியலை” என்று சொன்னார்.
சித்தப்பு “அப்புறம் எதுக்கு மாப்பிள்ளை பேசி வைச்சு இருக்கே? லூசா நீ?”
தாத்தாவின் முகம் இன்னும் சங்கடத்தில் மாறிப்போனது.அவரோ “என் பேத்தி நல்லா இருக்கனும் தான் பார்த்தேன்.ஆனால் அவனுங்க என் பேத்தியை விட அவ பணத்தை தான் விரும்புறாங்க.நான் செய்த தப்பை நானே சரி செய்யனும் குமார்.எனக்கு முன்னே போல உடம்பும் துணையா இல்லை. அப்படி எனக்கு எதுவும் ஆச்சுனா நீங்க ரெண்டுபேரும் என் சாரலோட வாழ்க்கையை பப்புவோட சேர்ந்துடுங்க அப்புறம் அவ சந்தோஷமா இருப்பாள்” என்று அவர் பேசி முடித்ததோடு அந்த வீடியோ முடிந்து இருந்தது.
இரண்டு வருடம் கழித்து தன் தாத்தாவின் முகத்தைப் பார்த்து அவருடைய குரலைக் கேட்கவும் சாரலுக்கு அழுகையாக வந்தது.
ராகவனைப் பார்த்து சித்தப்பு “இந்த உண்மை உனக்கு தெரிஞ்சு இருந்தும் ஏன் சாரல்கிட்டே சொல்லலை? அதோட அவள் உன்கூட இருக்காங்கிற விஷயத்தை பற்றியும் ஏன் என்கிட்ட மறைச்சே ராகவன்?” என்று கேட்டார்.
அவர் கேட்ட கேள்விகளில் ராகவன் திருதிருவென்று விழித்தான்.சித்தப்பு விடாமல் “சொல்லு ராகவா.ஏன் இப்படி செய்தே? சரி சாரல்கிட்ட தான் உண்மையை சொல்லலை.பப்பு எங்கே இருக்கான்னு தெரிஞ்ச பிறகாவது நீ அவகிட்ட உண்மையை சொல்லி இருக்கனும்.ஏன் இப்படி சாரலை தனிமையில் வேதனைப்படுத்துறே?” என்று கேட்டார்.
ராகவன் சாரலைப் பார்த்து “சாரல் நான் எதுவும் சொல்லலைன்னு நீ நினைக்கிறியா?உன்னை நான் வேதனைப்படுத்துனேன்னு உனக்கு தோன்றுதா?” என்று கேட்டான்.
அழுதுக் கொண்டிருந்த சாரல் எதைப் பற்றியும் யோசிக்கவில்லை.ஒரே ஒரு கேள்வி தான் அவள் மனதில் தோன்றியது.உடனே ராகவனைப் பார்த்து “ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லு.தாத்தா இறந்ததிற்கு நான் தான் காரணம் நினைச்சிட்டு இருந்தேன்னு அது உனக்கு நல்லாவே தெரியும்.இருந்தும் ஏன் என்கிட்ட இந்த உண்மையை மட்டுமாவது சொல்லி இருக்கலாம்ல என்னாலத் தான் இறந்தாங்கன்னு ஒவ்வொரு நிமிசமும் நினைச்சு வருந்திட்டு இருந்தேன்.ஆனால் தாத்தா அவரு உடல்நிலையை பத்தியும் அந்த நேரத்திலே அவரு எனக்காக கவலைப்பட்ட விஷயத்தையும் சொல்லி இருக்கலாம்.ஏன் சொல்லலை ராகவன் சொல்லு” என்று கேட்டாள்.
ராகவனின் முகம் மொத்தமாக மாறிப் போனது.அவனோ கோபத்தோடு “ஆமாம் நான் வேண்டும் என்றே தான் உன்கிட்ட சொல்லாமல் இருந்தேன்.ஏன் தெரியுமா? உண்மையைச் சொன்னால் நீ என்னை விட்டு போய் விடுவியே.திரும்பவும் உன்னை நினைச்சு என்னால தவிக்க முடியாது சாரல்.நீ வேணும் எனக்கு மட்டும் நீ வேண்டும்,வா சாரல் நாம நம்ம வீட்டுக்கு போகலாம்” என்று எதுவும் நடக்காதது போல் பேசினான் ராகவன்.
சாரலும் மற்ற இருவரும் அவன் சொன்ன பதிலைக் கேட்டு அப்படியே அதிர்ச்சியில் நின்றனர்.