• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உன்னிடத்தில் மனம் மயங்குதே - 18

Vishakini

Moderator
Staff member

உன்னிடத்தில் மனம் மயங்குதே அத்தியாயம் -18


சாரல் ராகவன் பேசுவதை புரியாமல் அதே நேரம் அதிர்ச்சியோடு “ராகவன் என்ன சொல்றே? ஏன் இப்படி எல்லாம் பேசுறே?” என்று கேட்டாள்.


ராகவனோ அவளது தோள்களை பிடித்து “என்னை வேற என்ன செய்ய சொல்லுறே சாரல்? எனக்கு நீயென்றால் ரொம்ப இஷ்டம் சாரல்.அது இப்போ என்று நினைக்கிறியா? இல்லை சின்ன வயசுல இருந்தே உன்னை ரொம்ப பிடிக்கும். ஐ லவ் யூ சாரல்” என்றான்.


அவன் பேசுவதைக் கேட்ட ஆதிக்கு கோபமாக வந்தது.இருந்தாலும் இந்நேரம் அவன் கோபத்தை காட்டுவதைக் காட்டிலும் பொறுமையாக இதை கையாள வேண்டும்.அதனால் இதற்கான முடிவை சாரலே எடுக்கட்டும் என்று அமைதியாக இருந்தான்.


சித்தப்புவோ ராகவனின் வஞ்சனையான எண்ணத்தை அறிந்து அவருக்கு பயம் தான் வந்தது.தாத்தாவிடம் இதனால் தான் சாரலிடம் இப்போதைக்கு எதுவும் சொல்ல வேண்டாம் என்று தடுத்தானோ ? என்று பழைய நினைவுகள் வந்தது.அடுத்து என்ன நடக்கப் போகிறதோ? என்று ஒருவித பயத்தில் நின்றார்.


சாரலுக்கு ராகவன் பேசியது ஒரு பக்கம் நினைத்து தலையே சுற்றியது.

இன்னொரு முறை யோசிக்கும் போது அருவருப்பாக இருந்தது. “ராகவன் என்ன பேசுறே? அப்போ ரேவதி யாரு? அவள் தானே உனக்கு மனைவி.நான் இதுல எப்படி வந்தேன்?” என்று கேட்டாள்.


ராகவன் “ரேவதியை என்னால அவாய்ட் பண்ண முடியலை.அதனால அவளை கல்யாணம் செய்தேன்.ஆனால் நான் உன்னைத் தான் விரும்பினேன் சாரல்.என் காதல் உண்மை, அதான் திரும்ப நீ என்கிட்ட வந்துட்டே சாரல்.சாரல் சாரல் வா போகலாம்” என்று அவள் மீது பைத்தியமாகப் பேசினான்.


சாரலுக்கு ராகவனின் பேச்சு சரியாகப்படவில்லை. அதை விடவும் தான் ஏமாற்றப்பட்டதை எண்ணி அவளுக்கு அழுகை தான் முதலில் வந்தது.ராகவனின் கையை தட்டி விட்டவள் “ஏன் இப்படி பேசுறே ராகவன்? நீ நான் நினைச்ச ராகவ் இல்லை” என்று அவனிடமிருந்து நகர்ந்து போனாள்.


ராகவன் “சாரல் இதுவரைக்கும் உன்கிட்ட எதாவது தப்பான பார்வையோ இல்லை ஏதும் தவறாக நடந்துக் கொண்டேனா? இல்லையே ஏன்னா நீ எனக்கு முக்கியம் சாரல்.என்னை பிடிக்கலைன்னாலும் பரவாயில்லை வா சாரல் வீட்டுக்கு போகலாம் விதுன் உன்னைத் தேடுவான்” என்று சொன்னான்.


சாரலுக்கு இப்போது தான் ஒரு உண்மை விளங்கியது.வேண்டுமென்றே விதுனை ஒரு காரணமாக்கி அவனுடன் ராகவன் திட்டமிட்டே தன்னை இருக்க வைத்து இருக்கிறான் என்று புரிந்துக் கொண்டவளுக்கு திரும்ப திரும்ப தான் ஏமாற்றப்பட்டதை எண்ணி அவளுக்கு ஆழமாக வலித்தது.


உண்மையாக நினைத்த உறவும் தன்னுடைய சுயநலத்திற்காக ஏமாற்றி நம்மை பயன்படுத்துவதும் துரோகம் தான்.


அன்பே பிராதனம் என்று நினைக்கும் உறவுகள் ஒருநாள் அவர்களுக்குள்ளான எண்ணத்தின் வெளிப்பாடு மோசமாக இருக்கும் போது ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்.


சாரலுக்கு தன்னை நினைத்தே வெறுப்பாகி போனது.ராகவனைப் பார்த்து “போ தள்ளிப் போடா, என்னை தப்பா நடத்தலையா? ஆனால் உன் எண்ணம் சரியில்லையே,அது எப்போ என்னை அடையலாம் தானே யோசிச்சுட்டு இருந்திருக்கும்.உன்னை எப்போதும் என் உடன்பிறக்காத சகோதரனாகத் தானே நினைச்சேன்.போடா ஏன் இப்படி என்னை ஏமாத்துனே?” என்று கத்தினாள்.


ராகவன் அருகில் வரவும் சாரல் “என்கிட்டே வந்தே செத்துடுவேன் என்னை நானே காயப்படுத்திக்குவேன்” என்று அரற்றினாள்.


ஆதித்யா “சாரல் சாரல் என்னாச்சு?” என்று கேட்கவும் “நீயும் வராதே நீயும் ஏமாத்துக்காரன்” என்று வீட்டை விட்டு வேகமாக வெளியே சென்றாள்.


ஆதித்யா அவள் பின்னாலேயே செல்லவும் ராகவன் சாரலை பின் தொடர அவன் முயற்சிக்கவும் சித்தப்பு “ராகவா நில்லு எங்கே போறே?” என்று கத்தினார்.



ராகவன் சித்தப்புவை பார்த்து “சாரல் என்னை விட்டு போக காரணமே நீ தான்.நீ மட்டும் சாரல்கிட்டே இந்த வீடியோவை காட்டாமல் இருந்திருந்தால் அவ என்னோடு எப்பவும் நிரந்தமா இருந்திருப்பா” என்று அவரது கழுத்தை பிடித்து நெறிப்பதற்கு தனது கையை அவரது கழுத்தில் வைத்து அழுத்தினான்.



அந்த நேரம் சரியாக பப்புவும் செல்லம்மாவும் சத்தம் கேட்டு உள்ளே வந்தனர்.அங்கே ராகவன் நிற்கும் நிலைமையைப் பார்த்து “மாப்பிள்ளை என்ன பண்ணுறீங்க?” என்று கேட்ட நேரத்தில் விதுன் “அப்பா ப்பா” என்று பயத்தில் கத்தினான்.


விதுனின் குரல் கேட்கவும் ராகவன் வேகமாக சித்தப்புவின் கழுத்திலிருந்து கையை எடுத்தவன் தன் மகனை திரும்பி பார்த்தான்.


அவனின் பார்வையில் ராகவனைப் பார்த்ததும் அது மிரட்சியில் இருந்தது. ஓடி வந்து மகனை அணைத்துக் கொண்டவன் “ஒன்னுமில்லை விதுன் ஒன்னுமில்லை” என்று அவன் திரும்பத் திரும்ப அந்த வார்த்தையை தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்.


சித்தப்புவின் மூச்சுக் காற்று இப்போது கொஞ்சம் சீரானது.தனது தொண்டையை தடவி விட்டப்படி “ராகவா வாழ்க்கையில் நிதானம் தேவை. இல்லைன்னா எல்லாமே ஒரே நொடியில் சிதறிப் போய்டும்.இனி நீ சாரலைத் தொந்தரவு செய்யாதே! உன் மகன் வாழ்க்கையைப் பாரு, என் அனுபவத்துல சொல்றேன் அவளோட வாழ்க்கையை வாழ விடு அது தான் உனக்கு நல்லது” என்று சொன்னார்.



அவன் எதுவும் பேசவில்லை.ஆனால் மகனை பிடித்தவனின் அணைப்பு இன்னும் கொஞ்சம் அழுத்தமானது.அதே நேரம் விழிகள் இரண்டும் கண்ணீரை நிறைத்துக் கொள்ள தலையை குனிந்துக் கொண்டே எதுவும் சொல்லாமல் அங்கிருந்து வெளியே சென்றான் ராகவன்.


சாரல் எங்கே செல்வது என்று தெரியாமல் கால் போன திசையில் நடக்கத் தொடங்கினாள்.அவளை எந்தவொரு தொந்தரவும் செய்யாமல் ஆதித்யா பின்னாலேயே தொடர்ந்து நடந்தான்.



முதலில் நேராக பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கே காலியாக இருந்த பேருந்தில் ஏறிக் கொண்டாள்.


ஆதித்யாவும் பின்னாலேயே ஏறிக் கொண்டான்.சிறிது நேரத்தில் மக்கள் ஏறிக் கொண்டார்கள்.நடத்துநர் வந்து சாரலிடம் “எங்கே போகனும்?”



“கடைசி ஸ்டாப்ல இறக்கி விடுங்க” என்று தன் சல்வார் பாக்கெட்டில் இருந்த ஐநூறு ரூபாய் எடுத்துக் கொடுத்தாள்.


அதைப் பார்த்ததும் ராகவனின் நினைப்பு வந்து போனது.”எப்போதும் கைல காசு வைச்சுக்கோ அவசரத்துக்கு உதவும்” என்று அவன் சொல்லிக் கொடுத்தது நினைவுக்கு வந்தது.


அவனை நினைத்ததும் விழிகளில் கண்ணீர் தரதரவென்று வெளியேறியது.பின்னால் இருந்து அவளைப் பார்த்துக்கொண்டிருந்த ஆதிக்கும் அவளின் கண்ணீருக்கான காரணம் புரிந்தது.


ஆனால் அவளுக்கான நேரத்தை அவன் கொடுத்தான்.ஜன்னலில் தலை சாய்த்தவள் அப்படியே தூங்கிப் போனாள்.

கடைசி பஸ் நிறுத்தம் வரவும் பேருந்தில் இருந்த பாதி பேர் இறங்கி இருந்தனர்.



எல்லோரும் இறங்கவும் சாரலும் இறங்கினாள்.கையில் வெறும் இருநூற்று அம்பது ரூபாய் தான் இருந்தது.அதை எடுத்துப் பார்த்தவள் தான் இருக்கும் ஊரின் பெயரை பார்த்தாள்.மதுரை என்று இருந்தது.


நேரமோ நடுஇரவாகிப் போனது.எங்கே சென்றாலும் அங்கே தனக்கு எந்த பாதுகாப்பும் இல்லை என்பதை பெண் மனம் உணரத் தொடங்கியது.தொடர்ந்து தனியே நின்றாலும் எதாவது பிரச்சினை வந்தால் என்னச் செய்யவென்று அதுவரை வருத்தத்தின் பிடியில் நின்றவள் இப்போது நிதர்சனத்தின் உண்மையில் இருந்தாள்.



அந்நேரமும் ராகவனின் எண்ணம் தான் வந்து போனது.அன்றைக்கு அவள் அப்படி தனியாக நிற்கும் போது துணையாக நின்றானே! அதைப் பற்றி யோசிக்கும் போது இந்த உதவியும் அவனது சுயநலத்திற்காகத் தான் இருக்குமோ? என்று எண்ணியவளுக்கு கண்ணீர் தான் பதில் வந்தது.


ஏதும் தனக்காக தனியாக செய்துக் கொள்ளாத கையறுநிலை எண்ணி அவள் மீதே அவளுக்கு ஆத்திரமாய் வந்தது.


அப்பொழுது அவளது நிலைமையைப் புரிந்துக் கொண்டு மெதுவாக அவளருகில் வந்தான் ஆதித்யா.


பின்னால் நின்று “சாரல் சாரல்” என்று அழைக்கவும் தன் பெயரை அழைக்கும் சத்தம் கேட்டு திரும்பினாள்.அங்கே அவள் கண்களுக்குத் தெரிந்த ஆதித்யாவைத் தான் கண்டாள்.அவளுக்கான பப்புவை அல்ல.


அவனை கொஞ்சம் அதிர்ச்சியாக பார்த்தவள் “என்னை பாலோ செய்து வந்தீங்களா?”


ஆதித்யா அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக நின்றான்.உடனே “இப்போ நீயும் ராகவனைப் போல எனக்கு உதவி செய்றேன்னு சொல்லப் போறியா?” என்றதும் அவள் உதட்டோரம் விரக்திக்கான புன்னகையை உதிர்த்தபடி கேட்டாள்.


அவனோ “இல்லை அவனைப் போல நான் இல்லைன்னு சொல்லி என்னை நானே கேவலப்படுத்திக்க விரும்பலை.நீ எனக்கு செய்த உதவிக்கு கைம்மாறு செய்யனும்னு நினைக்கிறேன் அவ்வளவுதான்” என்றான்.


சாரல் அவனை புரியாமல் பார்த்தாள்.ஆதி “நான் யார்னு எனக்கே தெரியாமல் இருந்த போதும் எல்லாவற்றையும் இழந்து நின்றேன்.அப்போ நீயும் தாத்தாவும் தான் எனக்கு சாப்பாடு, டிரெஸ் எல்லாமே வாங்கி கொடுத்து என்னை பழைய மாதிரி ஆக்கி வைச்சு இருக்கீங்க.அதற்கான காரணமே நீயும் தாத்தாவும் தான்.இல்லைன்னா எப்பவோ என் உடல் இந்த மண்ணுக்கு சொந்தமாகி இருந்திருக்கும் சாரல்.அன்னைக்கு நீ செய்த உதவியை நான் இப்போ செய்யனும் நினைக்கிறேன்.இதுல எந்தக் காதலோ,கருணையோ இல்லை.நான் வாங்கியதை திரும்ப கொடுக்கனும் நினைக்கிறேன். என் கூட சும்மா வந்து இருன்னு சொல்லலை. உனக்குன்னு ஒரு அடையாளத்தை உருவாக்கி கொள் அதுக்கு என்னை யூஸ் பண்ணிக்கொ.அன்றைக்கு தாத்தா எனக்கு வீடும் மூன்று வேளை சாப்பாடு கொடுத்தாங்க.ஆனால் அதே நேரம் என்கிட்டே வேலையும் வாங்கினாங்க நடந்தது எல்லாம் உனக்கே தெரியும்.இப்போ அதே மாதிரி உனக்கு எதாவது திரும்ப செய்யனும்னு நினைக்கிறேன் அவ்வளவு தான்” என்று பெரிதாக பேசி முடித்தான்.


அவன் சொன்னதை எல்லாம் கேட்டு சிறிதுநேரம் யோசனையில் நின்றாள்.


நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் “அப்படி நாம போறதாக இருந்தால் எங்கே போறோம்?” என்று கேட்டாள்.


அவளின் கேள்வியோ நான் உன்னோடு வருகிறேன் என்பதாக இருந்தது.


ஆதித்யா முகத்தில் எந்தவொரு மகிழ்ச்சியும் வெளியே காட்டிக் கொள்ளாமல் “என்னோட வீடு பெங்களூர்ல இருக்கு.அங்கே தான் நாம போகனும்” என்றான்.


அவன் சொன்னதைக் கேட்ட சாரல் மனதினுள் ‘தற்போது தனக்கான ஒரே வழியும் நம்பிக்கையும் இது தான்.அவள் தனியாக நிற்கும் பொழுதெல்லாம் எதாவது ஒரு வகையில் தாத்தா சேர்த்த புண்ணியம் அவளை காப்பாற்றுகிறது' என்று எண்ணிக் கொண்டவள் “ம்ம்… சரி போகலாம்.ஆனால் ஒரே விஷயம் நினைவில் வைச்சுக்கோ நான் உன்னோடு இருப்பதற்காக வரவில்லை” என்று ஒருமுறை நினைவுப் படுத்திக் கொண்டாள்.


அவன் சரியென்பது போல் தலையசைத்துக் கொண்டான்.மதுரையிலாருந்து பெங்களூருக்கு அதிவிரைவு இரயிலில் இரண்டு பயணச்சீட்டு எடுத்துக் கொண்டான்.


அவளுக்கு ஜன்னலோரமும் ஆதிக்கு அடுத்த இருக்கையிலும் இடம் கிடைக்க இருவரும் அமர்ந்துக் கொண்டனர்.அந்த இடமே சில்லென்று இருந்தது.


அந்த இரயிலில் இருந்த சவுகரியத்தில் அப்படியே தூங்கிப் போனாள்.ஆதியோ அவளையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.


யாரை இத்தனை வருடங்களாக தன் மனதிற்குள் எண்ணி நினைத்துக் கொண்டிருந்தானோ? அவள் இன்றைக்கு தனக்கு அருகில் இருப்பதை அவனால் நம்ப முடியவில்லை.



ஆதித்யா மூன்று நாட்களுக்கு முன் நடந்ததை நினைத்துக் கொண்டான்.விதுன் அவனிடம் “மாமா நாங்க எல்லோரும் ஊருக்கு போறோம்” என்று அவன் சொன்னதால் தான் இவனுக்கு முதலில் ஊருக்கு செல்ல வேண்டும் என்ற யோசனை வந்தது.


அது போலவே ஊருக்குச் சென்று செல்லம்மாவை சந்தித்து அவரிடம் பேசினான்.அவர் நடந்த விஷயங்கள் எல்லாவற்றையும் சொன்னார்.


சித்தப்புவை சந்தித்து பேசும் போது தாத்தா அவரிடம் பேசியதும் அவர் வைத்திருந்த வீடியோவையும் பார்த்தான்.அதில் ராகவன் இருப்பதைக் கண்டவன் சாரல் அவனோடு இருப்பதையும் சொன்னான்.


இத்தனை நாட்களாக சாரல் இருக்கும் விவரங்கள் அவர்களுக்கு தெரியவில்லை.ஏனென்றால் ராகவன் சித்தப்புவிடமும் செல்லம்மாவிடமும் சாரல் பற்றிய விவரங்களைச் சொல்ல வில்லை.அதோடு மகள் இறந்த வேதனையில் இருந்தவருக்கு சாரலை செல்லம்மா கவனிக்கவில்லை.


அதனால் அவளைப் பற்றிய விவரங்கள் ஏதும் தெரியாமல் இருந்தது.ஆதித்யா உண்மையைச் சொல்லவும் சித்தப்பு சாரலிடம் நடந்ததை காட்டி அவளை அவனிடம் சேர்க்க நினைத்த ஏற்பாடுகள் தான் இவை எல்லாம்.


ஆனால் இதில் ராகவனுக்கு இப்படி ஒரு எண்ணம் இருக்கும் என்று சித்தப்புவும் ஆதியும் எதிர்பார்க்கவில்லை.

நடந்ததை அவனும் எண்ணி வருந்தினான்.


நன்றாக தூங்கியவள் திடீரென்று விழித்துப் பார்த்தாள்.இந்நேரம் ஆதித்யா விழிகளை மூடி கைகள் இரண்டையும் மார்பின் குறுக்கே கட்டியபடி தூங்கிக் கொண்டிருந்தான்.


யாரை இத்தனை நாட்களாய் பார்க்க வேண்டும் என்று நினைத்தாளோ? இன்று அவன் அவளருகில் அமர்ந்தும் மனமும் சூழ்நிலையும் அவனை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை.



வாழ்க்கையில் எல்லாவற்றையும் மாற்ற முடியாது. சிலவற்றை ஏற்றுக் கொள்ளத்தான் கற்றுக் கொள்ள வேண்டும்.


இப்போது சாரல் கற்றுக்கொள்ள முடிவெடுத்து இருந்தாள்.
 
Top Bottom