• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உன்னிடத்தில் மனம் மயங்குதே - 6

Vishakini

Moderator
Staff member

உன்னிடத்தில் மனம் மயங்குதே அத்தியாயம் -6



அன்றைக்கு இரவு நேரத்து உணவை கொஞ்சம் முன்னரே முடித்து விட்டு ராகவன் சாரலிடம் “இன்னைக்கு விதுனை உன்னோடு படுக்க வைச்சுக்கோ சின்ன வேலை இருக்கு நான் கொஞ்ச நேரம் வெளியே போய்ட்டு வரேன்” என்று சொல்லி விட்டு அங்கிருந்து வெளியே வந்தவன் கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டுச் சென்றான் ராகவன்.



எப்போதும் தன் இருசக்கர வாகனத்தில் செல்பவன் இன்று மெதுவாக நடந்தபடி சுற்றிலும் பார்வையை செலுத்தியபடி நடந்தான்.


சாரல் சொன்னது போல் எங்கேயாவது பப்பு இருக்கிறானா? என்று நோட்டம் விட்டுச் சென்றவன் அங்கே இருந்த சில உணவகங்களுக்கு சென்றும் பார்த்தவனுக்கு அவள் சொன்னது போல் யாரும் தென்படவில்லை.



திரும்பவும் வீட்டிற்கே திரும்பியவன் மெதுவாக சாரலின் அறையை எட்டிப் பார்த்தான்.இருவரும் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார்கள்.அதை பார்த்ததும் மனதினுள் ராகவன் ‘'அந்த பப்புவை நினைச்சு சாரல் வருத்தப்படலை அதுவரைக்கும் சந்தோஷம் தான்' என்று தன் மகனை தூக்கிக் கொண்டு தன் அறையில் போய் படுத்துக் கொண்டான்.



அவன் அங்கிருந்து செல்வதை உறுதி செய்த சாரல் மெதுவாக விழிகளை திறந்தாள்.அவளுடைய கருவிழிகள் இரண்டிலும் கண்ணீர் நிரப்பிக் கொண்டிருந்தது.இவ்வளவு நேரமாக ராகவனுக்காக இந்த கண்ணீரை மறைத்துக் கொண்டிருந்தாள்.



அவன் சென்றதும் திரும்பவும் காலையில் அவளருகே வந்து “சாரல் சாரல்” என்று அவன் அழைத்ததே இவளுக்கு நினைவில் வந்து போனது.இரண்டு வருடத்திற்கு பிறகு அவள் பெயரை அவன் உச்சரிக்க கேட்டவளின் மனமோ மகிழ்ச்சியை சுமந்தாலும் வாழ்வின் நிதர்சனம் ஒருநொடி அப்படியே அவளை உறைய வைத்தது.



இந்த மனம் என்றும் வேண்டாதவைகளை எண்ணித் தானே துயர் கொள்ளும். அப்படித்தான் வாழ்வின் மட்டற்ற மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டு அதே வேகத்தில் காணாமல் போன தன் வாழ்ந்து முடிந்த சாரலாய் வீசிய மெல்லிய மழையில் வாழ்வில் திரும்பவும் தொலைந்துக் கொள்ள எண்ணினாள் சாரல்.



எப்போதும் கடலலையின் பேரிரைச்சலை இன்னிசையாய் கேட்டுக் கொண்டிருக்கும் கடலோரமாக அமைந்திருக்கும் அழகிய கிராமமான தேங்காய்பட்டினம் கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ளது.



அங்கே சுற்றி எங்கும் நோக்கினும் தென்னமரங்களின் அணிவகுப்பாய் அமைந்திருக்கும்.

கடலோரங்களில் நின்று இருக்கும் படகுகளின் ஏறி குதித்து விளையாடிக் கொண்டிருக்கும் பிள்ளைகளின் சத்தம் ஒருபுறம் எப்போதும் கேட்டுக் கொண்டிருக்கும்.


கோடையோ இல்லை குளிரோ எப்போதும் வீசும் கடல்காற்றில் பிறந்து அதிலே மூச்சாக சுவாசித்து வளர்ந்தவள் சாரல்.சின்னதாய் ஒரு வரவேற்பறை அதை ஓட்டியே அதே அளவில் ஒரு அறை,பக்கத்தில் சமையலறை இவ்வளவு சிறிதான இடத்தில் மகாராணியாக வளர்ந்தாள்.



பெற்றவர்கள் இருவரும் இல்லாததால் கோபாலன் தாத்தாவின் கவனிப்பில் செல்ல பேத்தியாக வளர்ந்தாள்.தாத்தா கடலில் மீன் பிடித்து அதை விற்றும் இரண்டு படகுகளை வாடகை விட்டும் எந்த ஒரு குறைவும் இல்லாமல் நிம்மதியாய் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார்கள்.



தாத்தாவிற்கு மொத்தம் ஆறு பிள்ளைகள்.அவர்களில் கடைசியாக பிறந்தவள் மகள்.மகளுக்கு ஒரே வாரிசாக தான் சாரல்.சாரலை அவளுடைய குடும்பத்தில் உள்ள யாருக்கும் பிடிக்காது.காரணம் தாத்தாவின் பணத்தில் அவள் மட்டும் செல்லமாக வளர்வது பிடிக்கவில்லை.


ஒவ்வொருவராக வேலை,பிள்ளைகளின் படிப்பு என்று வெளியூரில் போய் குடும்பமாய் இருந்துக் கொள்ள ஆரம்பித்தார்கள்.மூன்றாவது மகன் மட்டும் இவரைப் போலவே மீன்பிடி தொழிலும் மனைவியின் வீட்டின் மூலம் வந்த சொத்தில் உள்ள பங்குகளோடு அதே ஊரில் இருந்தார்.கோபாலன் தாத்தா எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.



சாரல் மட்டுமே அவருடைய உலகமாகிப் போனாள்.எங்கே போனாலும் ஒரு கையில் சாரலைப் பிடித்துக் கொண்டிருப்பார்.கடலுக்கு செல்லும் போது மட்டும் தன் பக்கத்தில் வீட்டில் இருக்கும் செல்லம்மாவிடம் தன் பேத்தியை விட்டுச் செல்வார்.



தன் மனைவியின் அக்கா மகள் என்பதால் நம்பிக்கையோடு விட்டுச் செல்வார்.அவருடைய மகள் ரேவதியும் சாரலும் நண்பர்கள்.சாரலை விட ரேவதி இரண்டு வயது பெரியவள்.அதனால் ஒரு தங்கையைப் போல கவனித்துக் கொள்வாள் ரேவதி.


தாத்தாவின் அதிக பாசம் சாரலை பிடிவாதக்காரியாக மாற்றியது.பத்தாம் வகுப்பு வரை பாதி நாட்கள் பள்ளியிலும் மீதி நாட்கள் கடலிலும் படகிலும் நேரத்தை கழித்தாள்.தாத்தாவுடன் இருப்பதிலேயே பொழுது போனது.



சாரல் எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபாடு இல்லாமல் தாத்தாவை நம்பியே வாழத் தொடங்கினாள்.அவளுக்கு தேவையான எல்லாவற்றையும் அவரே சமைத்துக் கொடுப்பார்.இல்லையெனில் கடையில் வாங்கி கொடுத்து விடுவார்.கோபாலன் தாத்தாவிற்கு தேவை எல்லாம் தான் இந்த உலகத்தில் மூச்சு விடும் வரை சாரல் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதே அவருடைய ஒரே குறிக்கோளாக இருந்தது.



அதனால் சாரல் என்னச் சொன்னாலும் அதற்கு சரியென்று தலையசைத்து விடுவார்.சாரலிடம் யாராவது வம்பு இழுத்தால் அங்கே முதலில் சண்டைக்கு நிற்பதே தாத்தா தான்.



அதனால் அந்த சிறிய கிராமத்தையே தாத்தாவும் பேத்தியும் படுத்திக் கொண்டிருந்தார்கள்.எல்லாம் நன்றாக சென்றுக் கொண்டிருந்தது.


சாரலுக்கு இருபது வயது நெருங்கிக் கொண்டிருந்தது.கண்களில் ஒரு குறும்பும் முகத்தில் புன்னகையோடு சிட்டாக சிறகடித்துக் கொண்டிருந்தாள்.அவள் உலகமே தாத்தாவும் இந்த கடலும் என்றாகிப் போனது.



எல்லோரும் கைப்பேசியில் தங்களை தொலைத்துக் கொண்டிருக்க சாரல் இந்த இயற்கையிலும் மனித மனங்களிலும் தன்னை தொலைத்துக் கொண்டிருந்தாள்.



ரேவதி தன் சொந்த தாய்மாமன் மகன் ராகவனை திருமணம் செய்துக் கொண்டாள்.அவனுடைய வீடும் அதே கிராமத்தில் இருந்ததால் ஒன்றாகவே மூவரும் வளர்ந்தனர். பின்னர் அவன் மட்டும் படிக்க சென்னைக்கு சென்று அங்கேயே வேலையையும் தேடிக் கொண்டான்.


ரேவதியை திருமணம் முடித்த பின்னர் தான் வேலை செய்யும் இடத்திற்கு அழைத்துச் சென்று இருந்தான்.

மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஊரில் வந்து தன் அம்மாவுடன் இருப்பாள் ரேவதி.இப்போது அவர்களுக்கு ஒரு மகன் பிறந்து அவனுக்கும் ஒரு வயது ஆகி இருந்தது.




ஊருக்கு ரேவதி வந்த பிறகு இருவரும் ஊரில் நடந்த எல்லா விஷயங்களைப் பற்றி பேசி சிரித்துக் கொண்டிருப்பார்கள்.



ஒருநாள் இரவு நேரம் அப்படித் தான் தோழிகள் தங்களுக்குள் சிரித்து பேசிக் கொண்டிருந்தனர்.சாரல் “ரேவதி வாயேன் கொஞ்ச நேரம் கடலுக்கு கிட்டேப் போய் உட்கார்ந்து பேசலாம்” என்றாள்.



சாரல் சொன்னதைக் கேட்ட ரேவதி “நேரம் ரொம்ப ஆயிடுச்சு.இப்போ நாம அங்கே போக வேண்டாம்.அம்மா பார்த்தால் சத்தம் போடுவாங்க” என்று பயந்தாள்.



சாரல் “ஹேய் உனக்குன்னு குடும்பம் வந்துடுச்சு இன்னும் ஏன் தயக்கம். அம்மாகிட்டே நான் பேசிக்கிறேன்” என்று ரேவதியை தன்னோடு இழுத்துக் கொண்டு சென்றாள்.



முதலில் கடல் மண்ணில் அமர்ந்து பொறுமையாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.அடுத்து சாரல் ரேவதியோடு சின்னதாக பாதங்களை கடல் தண்ணிரில் நனையலாம் என்று தோழிகள் இருவரும் குதித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.



அப்போது சாரல் தண்ணீரில் கையை வைக்கும் போது அவள் விரல்களில் ஏதோ ஒன்று தட்டுப்பட்டது.இவளும் சுதாகரித்து இருக்கும் போது அவளுடைய காலிலும் அதே போல் உணர்ந்தாள்.அந்த இடம் முழுவதும் இருட்டால் நிறைந்து இருந்தது.கையில் வைத்திருந்த சின்ன மின்விளக்கின் ஒளியிலும் சரியாக தெரியவில்லை.



அதே போல் ரேவதி உணரவும் கொஞ்சம் பதற்றத்தோடு “சாரல் வா வீட்டுக்கு போகலாம்” என்று அவளுடைய கையைப் பிடித்து இழுத்தாள்.



உடனே சாரல் “ஏதோ கால்ல பட்ட மாதிரி இருக்கு உனக்கும் தெரிஞ்சுதுல்ல” என்று கேட்டாள்.


ரேவதி “இல்லை ஒன்னும் எனக்கு தெரியலை. பாப்பா தேடி அழ ஆரம்பிச்சுடுவான் வீட்டுக்கு போகனும்” என்று விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு அங்கிருந்து வெளியே வந்தார்கள்.


ஆனால் சாரல் விடாமல் அதைப் பற்றொ கேட்டுக் கொண்டே வந்தாள்.இறுதியில்

ரேவதி அவள் வீட்டிற்கு செல்லும் போது சாரல் “உண்மையை சொல்லு ரேவதி ஏதோ கடல்ல இருந்த மாதிரி தெரிந்தது தானே” என்று கேட்டாள்.



ரேவதி சற்றே கோபத்தோடு “ஆமாம் ஏதோ உடம்பா? இல்லை மீன் என்னன்னு தெரியலை,இப்போ நீ போகாதே சாரல் தாத்தாவும் வீட்ல இல்லை எப்போ பார்த்தாலும் எதாவது வம்பு இழுத்து விடுவதில் தான் இருக்கே ஒழுங்கா வீட்டுக்கு போ” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே செல்லம்மா அழைக்கவும் ரேவதி அங்கிருந்து சென்று இருந்தாள்.


ரேவதி சொன்னதைக் கேட்கவும் சாரலுக்கு மனது ரொம்ப வருத்தமாகிப் போனது.கோபாலன் எப்போதும் பொது அக்கறையாக நடந்துக் கொள்வார்.



யாருக்காவது எதாவது பிரச்சினை என்றால் தன்னால் முடிந்ததை செய்வார்.அவரின் வளர்ப்பினால் சாரலும் அப்படித் தான்.கடலில் குளிக்கும் போது யாராவது மாட்டிக் கொண்டாலோ, கடலோரம் சில நேரங்களில் ஒதுங்கும் மனித உடல்களைக் கண்டால் அங்கிருக்கும் காவல்துறைக்கு செய்தி அனுப்புவது என்று செய்துக் கொண்டிருப்பாள்.



இதனால் பல நேரங்களில் அவளுக்கு தொந்தரவு தான்.இருந்தாலும் அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் செய்வாள்.இன்று ரேவதி அவள் செய்த நல்ல விஷயத்தை வம்பு என்று சொன்னதும் தன்னுடைய நெருங்கிய தோழி தன்னைப் பற்றி முழுதாக புரிந்துக் கொள்ளவில்லையே என்ற வருத்தம் சாரலுக்கும் அதிகமாக இருந்தது.



ரேவதி சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாமல் தன் வீட்டில் இருக்கும் படகில் எடுத்துச் செல்லும் பெரிய விளக்கு ஒன்றை தூக்கிக் கொண்டு வந்தவள் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை அழைத்து “சித்தப்பாவை நான் கடலுக்கிட்டே வரச் சொன்னேன்னு சொல்லு” என்று தன் தாத்தாவிடம் வேலை செய்யும் குமாரை அழைக்கச் சொல்லி ஓட்டமும் நடையுமாக அவர்கள் இருந்த இடத்திற்கு சென்றாள்.



அங்கே அவளுக்கு எதுவும் தெரியவில்லை.இன்னும் கொஞ்சம் அங்கேயும் இங்கேயுமாக வேகமாக நடந்தாள்.அப்போது தென்பட்ட எந்த ஒரு பொருளும் தட்டுப்பட வில்லை.


கடலின் அலைகளுக்கு உள்ளே கொஞ்சம் முன்னேறி செல்லும் போது ஒரு உடல் அலைகளின் இடையில் தத்தளித்துக் கொண்டிருந்தது.திரும்பவும் அந்த உடலை கடல் உள்ளிழுத்துக் கொண்டிருந்தது.



அதைக் கண்டவள் வேகமாக விளக்கை ஓரமாக வைத்து விட்டு அந்த உடம்புக்கு அருகில் விரைவாக நீந்திச் சென்றாள்.அந்த உடம்பின் தலைமுடியை பிடித்து இழுக்கவும் அது ஒரு ஆண் உடல் என்று புரிந்துக் கொண்டாள்.



இரவு நேரம் என்பதால் கடலலையின் வேகம் கொஞ்சம் அதிகமாக இருந்தது.அதன் இழுப்புக்கு எதிராக நீந்தி அந்த மனிதனையும் கொண்டு வந்து கரையில் போட்டாள்.



அவள் அனுப்பிய அந்த சிறுவன் குமாரைத் தேடி அவன் வீட்டிற்கு சென்று இல்லாததால் கடைத் தெருவில் தேடிக் கொண்டிருந்தான்.கையில் கைப்பேசியையும் எடுத்துச் செல்லாததால் அவனை பிடிக்க முடியவில்லை.



தன் மூச்சு வாங்க அந்த உடம்பை பார்த்தவள் முதலில் மூச்சு இருக்கிறதா? என்று விரலைக் கொண்டு போய் மூக்கின் அருகே கொண்டு போகவும் மூச்சு கொஞ்சம் விட்டு விட்டு வந்துக் கொண்டிருந்தது.



அப்பொழுது அந்த நபர் உயிரோடு இருக்கிறான் என்று புரிந்துக் கொண்டவள் வேகமாக அவனுக்கு முதலுதவி செய்ய ஆரம்பித்தாள்.
 
Top Bottom