உன்னிடத்தில் மனம் மயங்குதே அத்தியாயம் -7
சாரல் வேகமாக செயல்பட ஆரம்பித்தாள்.முதலில் அவன் அணிந்திருந்த சட்டையின் பட்டனை வேகமாக கழற்றியவள் அந்த ஆணின் வயிற்றில் தன் இரு கைகளாலும் மெதுவாக விட்டு விட்டு அதே நேரம் கொஞ்சம் அழுத்தமாக அழுத்தவும் வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் தண்ணீர் வெளியேற ஆரம்பித்தது.
அடுத்து உடல் சூட்டிற்காக கைகளிலும் கால்களிலும் வேகமாக தேய்த்து விட ஆரம்பித்தாள்.இவள் இப்படி செய்துக் கொண்டிருக்கும் போதே அந்த வழியாக இரு மீனவர்கள் வந்தார்கள்.அங்கே இருவர் இருப்பதை கண்டு வேகமாக இவளுக்கு அருகில் வந்தார்கள்.
“சாரல் என்னாச்சும்மா?” என்று பதறியபடி கேட்டார்கள்.சாரல் நடந்ததை சுருக்கமாகச் சொல்ல அவர்களும் அவளுக்கு உதவ முன் வந்தார்கள்.
சாரல் அந்த நபரின் தலையை கொஞ்சம் தூக்கிப் பிடிக்கலாம் என்று பின் தலையில் கைவைக்கவும் அவளுடைய கைகளில் பிசுபிசுப்பாக இருந்தது.என்னவென்று அந்த விளக்கின் வெளிச்சத்தில் பார்க்கவும் ஒரே இரத்தமாக இருந்தது.
அதை பக்கத்தில் உள்ளவர்களும் கண்டனர்.உடனே சாரலிடம் “எம்மா சாரல் இது எதோ சூசைட் கேசு மாதிரி தெரியலை கொலை கேஸீன்னு நினைக்கிறேன்.எதுக்கும்மா நமக்கு வம்பு போலீஸ் நம்மள சந்தேகப்பட்டு கேள்வி கேட்க ஆரம்பிக்கும் ஆளை பார்த்தா வேற நல்ல வசதியான பையனாட்டும் தெரியுறான்” என்று ஒருத்தர் சொல்லவும் தான் அப்பொழுது தான் அவனுடைய முகத்தையே பார்த்தாள் சாரல்.
நல்ல வெளுப்பாக முகம் பளபளப்பாகவும் உடலை நல்ல கட்டுக்கோப்பாக வைத்திருப்பதையும் கண்டாள்.அப்பொழுது அங்கே வந்த குமார் “என்னாச்சு சாரல் இன்னைக்கும் எதாவது தற்கொலையா?” என்று கேட்டார்.
சாரல் பேச வருவதற்குள் அந்த இருவரில் ஒரு மீனவர் “பின் மண்டையில் அடிச்சு கடல்ல வீசி இருக்கிறானுங்க போல ரவுடி சகவாசமோ இல்லை எதுவோ நமக்கு எதுக்கு வம்பு” என்று விலகிக் கொண்டனர்.
சாரல் கொஞ்சமும் தயங்காமல் “சித்தப்பு நீ வந்து தூக்கு போய் ஹாஸ்பிடல் சேர்க்கலாம்.எல்லோருக்கும் தெரிஞ்சவங்களாக இருந்தால் தான் உதவி செய்யணும் எண்ணம் இருந்தால் யாரும் இந்த உலகத்துல வாழ முடியாது” என்று சொல்லி விட்டு அவனை தூக்குவதற்கு உதவியவாறு பின்னாலேயே சென்றாள்.
சித்தப்பாவும் சாரலும் சேர்ந்து அங்கே அருகில் இருந்த ஒரு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கே இருப்பவர்களுக்கு சாரலையும் கோபாலனையும் தெரியும் என்பதால் எந்த கேள்வியும் கேட்காமல் அவனை உள்ளே அனுமதித்து சிகிச்சை அளிக்க ஆரம்பித்தனர்.
அங்கிருந்து நேராக காவல்நிலையத்திற்கு சென்று நடந்ததை எல்லாம் புகாராக எழுதி விட்டு வீடு வந்து சேரும் பொழுது இரவு பன்னிரெண்டு மணிக்கு மேல் ஆகி இருந்தது.
கோபாலன் மீன் பிடிக்க சென்று இருந்ததால் அவர் வீட்டில் இல்லை.வீட்டிற்கு வந்து குளித்து உடையை மாற்றி விட்டு அப்படியே படுத்தவள் உறங்கி போனாள்.
காலை ஐந்து மணிக்கு எழுந்து தேநீரும் இட்லியும் மீன் குழம்பும் வைத்து அடுப்பில் இருந்து இறக்கவும் ஆறு மணியாகிருந்தது.அப்போது தாத்தா வீட்டிற்கு வரவும் சரியாக இருந்தது.
உள்ளே வந்தவர் “என்ன மக்கா ஏன் படகு வரவும் நீ கடலுக்கு வரலை?” என்று கவலையாகக் கேட்டபடி கையில் வைத்திருந்த ஒரு பையை அவளிடம் கொடுத்தார்.அதை வாங்கி ஓரம் ஒரு பாத்திரத்தில் வைத்தாள்.
சாரல் “தாத்தா முதல்ல கை கால் கழுவிட்டு சாப்பிட வா” என்று அழைத்தாள்.அவரும் மறுவார்த்தை பேசாமல் அவள் சொன்னபடியே அமைதியாக
சாப்பிட ஆரம்பித்தார்.
சாரலும் அவருடன் சேர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.
“தாத்தா மீன் எப்படி?” என்று கேட்டாள்.
“ஓரளவு நாம எதிர்பார்த்த அளவுக்கு நல்ல இலாபம் தான்.இந்த தடவை நிறைய கனவாய் தான் கிடைச்சு இருந்தது.நமக்கும் கூட்டுக்கறியா வைச்சிடு” என்றார்.
அவளும் சரியென்று தலையசைத்து விட்டு “தாத்தா நான் ஏன் இன்னைக்கு கடலுக்கு வரலை தெரியுமா?” என்று நடந்த எல்லாவற்றையும் மறைக்காமல் சொன்னாள்.
கோபாலன் பெருமிதமாக “அப்போ இன்னைக்கும் ஒரு உயிரை காப்பாத்தி இருக்கே பெரிய விஷயம் மக்கா பெரிசா படிச்சு காப்பாத்துறதை விடவும் நீ செய்ற விஷயம் ரொம்ப நல்லது” என்றார்.
“அது தாத்தா ரவுடிங்களோட பிரச்சினை வரும்னு அந்த அண்ணன் சொன்னாங்களே!” என்று கவலையாகக் கேட்டாள்.
அதை கேட்டவர் பெரிதாக சிரித்து “தினமும் கடலுக்கு போறோம்ல அங்கே என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியும்? இருந்தாலும் பரவாயில்லை தைரியத்தோட தானே போறோம் திரும்ப வறோம் அதே மாதிரி நாம யாருக்கும் தொந்தரவு கொடுக்கலை அதோட இந்த கடலு எல்லோருக்கும் பொதுவானது இங்கே வர்றதும் போறதும் யாரோ தான் நம்ம கண்ணுல பட்டால் உதவி செய்யுறோம் இல்லைன்னா இல்லை அதனால நடந்ததை எண்ணி பயப்படாமல் தைரியமா இரு கண்ணு தாத்தா உன்கூட இல்லைன்னாலும் நீ வாழ்ந்துக்கனும்ல” என்றார்.
கோபாலன் சொன்ன கடைசி வார்த்தையைக் கேட்டதும் சாரல் “தாத்தா எப்போ பார்த்தாலும் இப்படி பேசாதேன்னு சொன்னால் கேட்க மாட்டியா?” என்று பெரிதாக கோபப்பட்டுக் கொண்டாள்.
அவள் பேசுவதைக் கேட்டு மெலிதாக புன்னகைத்தவர் “அதை விடு மக்கா அந்த ஆளு இப்போ எப்படி இருக்கான்?” என்று கேட்டார்.
“தெரியலை தாத்தா ஹாஸ்பிடல்ல சேர்த்தேன்.அவங்க புகார் அளிச்சிட்டு வாங்கன்னு சொன்னாங்கன்னு போனேன் புகாருக்கான காப்பி சித்தப்பு கொண்டு போனாப்புல அந்த ஆளுக்கு டீர்ட்மெண்ட் நடந்துட்டு இருக்குன்னு சொன்னாங்க அவ்வளவுதான் தெரியும்.அதோட வீட்ல வந்து தூங்கி இப்போத் தான் எழுந்தேன்” என்றாள்.
“சரி சரி விரைவா சாப்பிட்டுட்டு போய் என்னன்னு பாரு அந்த தம்பி கண்ணு முழிச்சிட்டா அவங்க குடும்பத்துக்கு சொல்லிடாம்ல அதான் சொன்னேன்,அதோட கடல்ல இருந்து காப்பாத்தினால் போதாது கடைசி வரைக்கும் துணையா இருக்கனும் அப்போத் தான் செய்யுற பலன் பெரிசா இருக்கும்” என்றார்.
சாரல் பலவிதமான யோசனையோடு “ம்ம்… விரைவா போறேன்” என்று சாப்பிட்டு முடித்து விட்டு பாத்திரங்களை கழுவ போனாள்.அதைப் பார்த்த கோபாலன் “எல்லாத்தையும் அப்படியே போடு நான் சுத்தம் செய்றேன் நீ போய் அந்தத் தம்பியை கவனி” என்று அனுப்பி வைத்தார்.
சாரல் தாத்தா சொன்னது எதுவாக இருந்தாலும் அது சரியாகத் தான் இருக்கும் என்று எந்த யோசனையும் இல்லாமல் அப்படியே செய்து முடிப்பாள்.
அப்படித் தான் இன்றும் தாத்தா சொன்ன காரணத்திற்காக நேராக மருத்துவமனைக்குச் சென்றாள்.அங்கே இவள் போய் நடந்ததை சொல்லி அங்கிருந்த செவிலியரிடம் விசாரித்தாள்.
உடனே அந்த செவிலியரோ “உங்களுக்குத் தான் டாக்டர் வெயிட்டிங்.அவருக்கு டீரிட்மெண்ட் எடுத்ததில் பின் தலையில் நல்ல ஆழமாக அடிபட்டு இருக்கு ஆறு தையல் போட்டு இருக்கு.இதுவரைக்கும் கண்ணே முழிக்கலை.எந்த முன்னேற்றமும் இல்லை மருந்து மட்டும் ஏறிட்டு இருக்கு” என்றார்.
அவன் நிலைமையைக் கேட்டதும் சாரலுக்கு கவலையாக இருந்தது.உடனே மருத்துவரைப் போய் பார்த்தாள்.அவரோ “மேற்கொண்டு தலையில் ஸ்கேன் எடுத்து பார்க்கனும்மா.போலீஸ் வந்து பார்த்தாங்க அவங்க என்னன்னா இது மாதிரி ஆயிரம் கேஸ் இருக்கு அதுல ஒரு கேஸ்.யாராவது அவரை தேடி வந்தால் தான் முடிவெடுக்க முடியும்.அதனால நீங்களே பார்த்துக்கோங்க கண்ணு முழித்தாலோ? இல்லை வேற எதாவது பிரச்சினைனா போன் பண்ணுங்கன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க.என்னால தனிப்பட்ட உதவி செய்ய முடியாது நீங்களும் சேர்ந்து பதில் சொன்னால் இவர் விஷயத்துல அடுத்த டீரீட்மெண்ட் ஆரம்பிக்கலாம்” என்றார்.
சாரல் சிறிதும் தயங்காமல் “சரிங்க டாக்டர் நீங்க அவருக்கான டீரீட்மென்ட் கொடுங்க.நான் என்ன செய்யனுமோ செய்றேன்” என்றாள்.
அவளை பார்த்து புன்னகைத்த மருத்துவர் “எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யக் கூடிய உதவியானது உங்களை நிச்சயமாக நீங்களே எதிர்பாராத ஒரு அழகிய இடத்தில் கொண்டு சேர்க்கும்” என்றார்.
சாரல் அதற்கு புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்தாள்.சாரலிடம் சில தாள்களில் அவளை காப்பாளராக வைத்து கையெழுத்து வாங்கினார்.அவளுக்கு சரியாக ஆங்கிலம் படிக்க வராது.அதனால் அதை ஒரு புகைப்படம் எடுத்து ராகவனுக்கு அனுப்பினாள்.
இதில் எதாவது பிரச்சினை இருக்கிறதா? என்று குறுஞ்செய்தி அனுப்பினாள்.அதை எல்லாம் படித்து பார்த்த ராகவன் சாரலின் எண்ணிற்கு அழைப்பு விடுத்தான்.
“ஹலோ சாரல்”
“ம்ம்… சொல்லு படிச்சிட்டியா? பிரச்சினை ஒன்னுமில்லை தானே?” என்று நேராக விஷயத்திற்கு வந்தாள்.
அதைக் கேட்டவன் “உனக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை? யாராவது எப்படி போனால் உனக்கென்ன?” என்று கேட்டாள்.
அதைக் கேட்டதும் சாரல் கோபத்தோடு “நீயும் ரேவதி மாதிரியே பேசாதே! ராகவன் நான் ஏன் இப்படி இருக்கேன்னு உனக்கு மட்டும் இல்லை எல்லோருக்கும் தெரியும்.இருந்தாலும் எல்லோருமே அதையே திரும்ப திரும்ப கேட்காதீங்க,உன்னால சொல்ல முடியலைன்னா விடு நான் வேற யாரையாவது கேட்டுக்கிறேன்” என்று காட்டமாக பதில் சொன்னாள்.
ராகவன் “சரி கோவிச்சுக்காதே சாரல்.படிச்சிட்டேன் ஒன்னும் பிரச்சினை இல்லை கையெழுத்து போட்டுக் கொடு” என்றான்.
சாரலோ சாதாரணமாக “நான் ஏற்கனவே கையெழுத்து போட்டு கொடுத்துட்டேன்” என்றாள்.
இதைக் கேட்ட ராகவன் சற்றே கோபத்தோடு “அதான் கையெழுத்து போட்டு கொடுத்துட்டேல்ல பின்னே எதுக்கு எனக்கு படிக்க சொல்லி அனுப்பி இருந்தே?”
“ஓ… அதுவா கையெழுத்து போட்ட பின்னே சின்னதாக ஒரு சந்தேகம்.அதான் உனக்கு அனுப்பினேன் நீ தான் பிரச்சினை இல்லைன்னு சொல்லிட்டியே?”
ராகவன் “பிரச்சினை இருந்திருந்தால் என்ன செய்ய முடியும்?” என்று அவள் செய்த முட்டாள் தனத்தை எண்ணிக் கேட்டான்.
அதற்கு சாரல் சிரித்துக் கொண்டே “அது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை.யாராவது கேட்டால் ராகவன் சரின்னு சொன்ன பின்னே தான் கையெழுத்து போட்டேன்.இப்போ அவன் இல்லைன்னு சொல்லிட்டான்,எனக்கு ஒன்னும் தெரியாதுன்னு சொல்வேன்” என்றாள்.
அவள் பேசுவதைக் கேட்ட ராகவன் “ஹேய் லூசு நீ மாட்டிக்கிறதோட இல்லாமல் எங்கேயோ இருக்கிற என்னையும் சேர்த்து பிரச்சினைல இழுத்து விடுவியா? பிரச்சினைக்கு பிறந்தவளே! போனை வை” என்று சாரலை இன்னும் நாலு வார்த்தை அவளை வசைபாடிக் கொண்டே அழைப்பை துண்டித்தான்.
மருத்துவமனைக்கு வந்து ஒரு மணிநேரத்திற்கு மேலாக ஆகிப்போனது.ஆனால் சாரலோ இன்னும் போய் அவள் காப்பாற்றியவனை போய் பார்க்கவில்லை.ஆனால் அதற்கிடையில் அவனை சரியாக்குவதற்கான வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சாரலைக் காண வந்த செவிலியர் அவன் அணிந்திருந்த உடையை கொண்டு வந்து அவளிடம் கொடுத்தவள் “பேஷன்ட் பத்தி எதாவது விவரம் இருக்கும்மான்னு அவர் போட்டிருந்த டிரெஸ்ல தேடினோம். எந்த விவரமும் இல்லை” என்று ஒரு பையை அவளிடம் கொடுத்தாள்.
அதை வாங்கியவள் “ம்ம்… சரி பார்க்கலாம்.அவராக கண்ணு முழிச்சா தெரிஞ்சிடும்” என்று அவன் இருக்கும் வார்டு எண்ணை கேட்டுக் கொண்டே அந்த இடத்தை நோக்கிச் சென்றாள்.
போகும் வழியினில் ‘'இந்த துணியை துவைச்சு வைக்கனும் அப்போத் தான் அவரு போடுறதுக்கு டிரெஸ் இருக்கும்” என்று எண்ணிக் கொண்டே சென்றாள்.
அங்கிருந்த வார்டில் எந்தவொரு நபரும் இல்லாமல் தலையில் கட்டுடன் தனியாக படுத்துக் கிடந்தவனை தூரத்தில் நின்றபடி கண்டவள் வேகமாக நடையை எட்டி வைத்து போய் ஆவலுடன் பார்க்கச் சென்றாள் சாரல்.