• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உன்னிடத்தில் மனம் மயங்குதே - 8

Vishakini

Moderator
Staff member

உன்னிடத்தில் மனம் மயங்குதே அத்தியாயம்-8


செவிலியர் சொன்ன எண்ணில் போய் நின்றவள் அவனை இப்பொழுது தான் நல்ல வெளிச்சமான இடத்தில் வைத்து முகத்தை உற்று நோக்கினாள் சாரல்.



கடற்கரையில் விளக்கு வெளிச்சத்தில் கண்டாலும் அவனை தன்னோடு அழைத்துச் செல்லும் பொழுதெல்லாம் இந்த உயிரை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்ற எண்ணம் தான் அவளுக்கு இருந்ததே தவிர அவன் எப்படி இருக்கிறான்? என்று துளியும் கவனிக்கும் நோக்கம் இல்லை.


இப்பொழுது அவள் இவனுக்காக மெனக்கெடல் வேண்டி இருப்பதால் சாவகாசமாக அவனுக்கு அருகில் உள்ள இருக்கையில் போய் அமர்ந்தாள்.


தலையில் ஒரு பெரிய கட்டு போடப்பட்டு இருந்தது.அடுத்து அளவான முகத்தோடு பளபளப்பான தேகத்தோடு இருந்தான்.உயரம் எப்படியும் ஆறடி இருக்கும் என்று எண்ணிக் கொண்டாள்.ஏனென்றால் அவன் படுக்கையில் கால் வெளியே தொங்கிக் கொண்டிருந்தது.அதனால் தலையணையை வைத்து சரி செய்து இருப்பதை கவனித்தாள்.


விழிகள் திறக்காமல் கிடப்பவனை பார்த்து சாரல் “ஏன்டா தம்பி பார்க்க நல்ல அழகா வடிவாகத் தானே இருக்கே பின்னே ஏன் சூசைட் பண்ண போனே?” என்று அவனிடம் கேட்டாள்.



பிறகு ஏதோ தோன்றியவாறு “ஹ்ஹான் உனக்கு தலையில் அடிப்பட்டு இருக்குல்ல உன்னை யாரும் கொலைச் செய்ய பார்த்தாங்களோ?என்னன்னு கண்விழிச்சு சொல்லேன் தம்பி என்னன்னு யோசிச்சு எனக்கு மண்டை வலிக்குது” என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது செவிலியர் அங்கே வந்தார்.



“என்ன சாரல் அவரு கண் முழிச்சாரா?” என்று கேட்டார்.



“இல்லையே சிஸ்டர். அவர் கண் விழிச்சா எனக்கென்ன இங்கே வேலை? அதான் என்னன்னு சும்மா விசாரிச்சுட்டு இருந்தேன்” என்று சொன்னாள்.



அதைக்கேட்ட செவிலியர் “அவருக்கு நினைவே இல்லையே,பேசி என்னாகப் போகுது” என்று கேட்டார்.



சாரல் “சிஸ்டர் நான் நிறைய படத்துல பார்த்து இருக்கேன்.இந்த மாதிரி நினைவே இல்லாதவங்க கிட்டே பேசினால் நாம பேசுறதை கேட்டு கண் விழிச்சிடுவாங்களாம் அதான் பேசி பார்த்தேன்” என்று சொன்னவளை பார்த்து சிரித்தப்படி அவர் வந்த வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்.


“சாரல் அரைமணி நேரம் கழிச்சு இவரை ஸ்கேன் செய்ய அழைச்சிட்டு போகனும்” என்று சொல்லி விட்டுச் சென்றார்.



அவளால் பத்து நிமிடத்திற்கு மேல் ஒரு இடத்தில் அமைதியாக உட்கார இயலவில்லை.காரணம் எப்போதும் யாருடனாவது வாயடித்துக் கொண்டும் சுற்றித் திரிபவளை இப்படி அமர்ந்து இருக்க முடியாமல் நடக்கத் தொடங்கினாள்.திரும்ப வந்து உட்காரவும் கண்ணை சொக்கி தூக்கம் வரத் தொடங்கியது.



அடுத்து பக்கத்தில் இருந்தவர்களிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தாள். ஒருவரின் கதையை பாதி கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது இவனை அழைத்துக் கொண்டு போக வரவும் சாரலும் பின்னாடியே சென்றாள்.



ஒரு மணிநேரம் கழித்து அவனுக்கான பரிசோதனை முடிந்து வெளியே வந்தான்.நேரம் நண்பகலை தாண்டி விடவும் செவிலியரிடம் சொல்லி விட்டு வீட்டிற்கு வந்தாள் சாரல்.



அங்கே தாத்தா அவளுக்காக கனவாய் மீனை கூட்டு வைத்து சோறையும் பொங்கி வைத்திருந்தார்.வீட்டில் இருந்த சின்ன கட்டிலில் பொத்தென்று விழுந்தவள் “தாத்தா ஏன் என்னை ஹாஸ்பிடல் அனுப்பினே? ஒரே அமைதியா இருக்கு என்னால கொஞ்ச நேரம் இருக்க முடியலை” என்று குறைப்பட்டுக் கொண்டாள்.


தாத்தா சிரித்துக் கொண்டே “ஏன் அந்த பையனோட வீட்ல இருந்து யாரும் வரலையா?” என்று கேட்டார்.


அதற்கு சாரல் நடந்த விஷயங்கள் எல்லாவற்றையும் சொன்னாள்.பொறுமையாகக் கேட்ட தாத்தா “அந்த பையனோட போட்டோ எடுத்து நம்முடைய வாட்ஸ்அப் குரூப்ல போடலாம் யாராவது தெரிஞ்சவங்க இருந்தால் தேடி வருவாங்க” என்றார்.



சாரலுக்கும் இது ஒரு நல்ல யோசனையாகத் தெரிந்தது.அதனால் சரியென்று ஒத்துக் கொண்டாள்.சாரல் தாத்தாவிடம் “அப்போ இனி நான் ஹாஸ்பிடல் போக வேண்டாம்ல” என்று கேட்டாள்.


தாத்தா “யாரும் இல்லைன்னு சொல்லுறே? அந்த பையன் தனியா இருப்பான்ல” என்று கவலையாகச் சொன்னார்.



அதைக் கேட்டு சலிப்பான சாரல் “தாத்தா அவரே இன்னும் கண்டு முழிக்கலை.நீ என்னன்னா தனியா இருப்பார்னு கவலைப்படுறே?”



தாத்தா “கண்ணு முழிக்கலைன்னாலும் மூச்சு விட்டுட்டு தானே இருக்கான்.அப்போ உயிரு இருக்கு தானே அர்த்தம் அதனால இன்னைக்கு சாயங்காலம் ரெண்டுபேரும் பார்த்துட்டு இருந்து வரலாம்” என்றார்.



சாரலும் வேறு வழியில்லாமல் சரியென்று ஒப்புக் கொண்டு தாத்தா சமைத்த உணவை நன்றாக சாப்பிட்டு முடித்து ஒரு சின்ன குட்டித் தூக்கம் போட்டுக் கொண்டிருக்கும் போது “சாரலு ஹேய் சாரலு” என்ற சத்தம் கேட்கவும் அவளுடைய முகத்தினில் பிஞ்சு விரல்களால் யாரோ அடிப்பது போல் உணர்ந்து விழித்தாள்.



அவள் பக்கத்தில் ரேவதி தன் குழந்தையோடு அமர்ந்திருந்தாள்.அவளுடைய மகன் தான் இவளைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தான்.



குழந்தையைக் கண்டதும் அள்ளி எடுத்துக் கொண்டவள் “விதுன் குட்டி என்ன பண்ணுறீங்க?” என்று முத்தம் கொடுத்து கொஞ்ச ஆரம்பித்தாள்.ரேவதியிடம் ஒரு வார்த்தை பேசவில்லை.



ரேவதி சாரலைப் பார்த்து “சாரல் என் மேல கோபமா இருக்கியா? என்னை பார்த்தும் கண்டுக்காம இருக்கே” என்று கேட்டாள்.



சாரல் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.ரேவதி விடாமல் “கடல்ல கிடந்தவனை போய் காப்பாத்தினியா? ராகவன் சொன்னான்” என்றாள்.



சாரல் கோபமாக “இப்போ அதைப் பத்தி விசாரிக்கத் தான் வந்தியோ?”


ரேவதி முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு இல்லை ஆமாம் என்று ஒருவாறு இரண்டிற்கும் இடையில் தலையை ஆட்டிக் கொண்டிருந்தாள்.


சாரல் அவளை கவனிக்காதவாறு விதுனை கொஞ்சிக் கொண்டிருந்தாள்.ரேவதி மெதுவாக சாரலின் தோள் மீது கைவைத்தவள் “நான் அந்த மாதிரி பேசுனதுக்கு என் மேல கோபப்படாதே சாரல்.உன் நல்லதுக்காகத் தான் நான் அப்படி பேசினேன்” என்று திரும்பவும் ஆரம்பித்தாள்.



சாரல் திரும்பி முறைத்தவள் “இதைப் பத்தி பேசுறதாக இருந்தால் என்கிட்டே பேசாதே ரேவதி” என்று முகத்தில் நேராகச் சொன்னாள்.



ஆனால் ரேவதி விடாமல் “நீ என்னை தப்பா நினைச்சாலும் எனக்கு கவலை இல்லை சாரல்.நடந்ததை உன்கிட்ட நான் சொல்றது தானே சரியா இருக்கும்”



சாரல் புரியாமல் “என்ன நடந்துச்சு?” என்று கேட்டாள்.



“அம்மாகிட்டே உனக்கு ஒரு நல்ல வரனை பார்க்க சொன்னேன்” என்றாள்.


சாரல் திரும்பவும் முறைத்து “நான் இப்போ உன்கிட்டே எனக்கு கல்யாணம் செய்து வைன்னு சொன்னேனா?” என்று கோபத்தோடு கேட்டாள்.



ரேவதி பொறுமையாக “நான் பேசுறதுக்கு எல்லாம் மறுத்து பேசாமல் சொல்றதை முழுசா கேளு சாரல்.அம்மாகிட்டே வரன் பார்க்கச் சொன்னேன்.அதுக்கு அம்மா சொல்லிட்டாங்க இந்த ஊர்ல யாரும் சாரலை பொண்ணு பேச மாட்டாங்க,ஏன்னா எப்போ பார்த்தாலும் கடல்ல விழுற பொணத்திலும் அதுல விழுகிறவங்களை காப்பாத்துற வேலையை பார்த்துட்டு இருக்கா,இவளை கல்யாணம் முடிச்சா வீட்டுக்கு மருமகளாகவோ மனைவியாக இல்லாமல் இந்த கடலோரம் இருக்கவே நேரம் சரியா இருக்கும்.வெளியூர்ல பேசலாம்னா நம்மவூர் ஆட்களே இல்லாததையும் இருக்குன்னு சொல்லுவாங்க, இதைப் பத்தி கோபாலன் தாத்தாகிட்டே பேசுன அவரு என் பேத்திக்கு நல்ல வாழ்க்கை இருக்குன்னு நம்பிக்கையா சொல்லுதுன்னு கவலைப்பட்டாங்க சாரல்.



தாத்தாக்கு அப்புறம் உன்னை அன்பா பார்த்துக்க ஒருத்தர் வேணும்ல அதை விட்டுட்டு நீயும் தாத்தாவும் இப்படி அசட்டு தனமா இருக்கிறது எனக்கு சரியா படலை சாரல்.அதனாலத் தான் நான் சொல்றேன் கொஞ்ச நாளுக்கு இதை எல்லாம் பார்க்காமல் உன் வேலையை பாரு நல்ல வரனா அமைஞ்சதும் கல்யாணத்தை முடிக்கலாம்” என்று பெரிதாக பேசி முடித்தாள்.



ரேவதி சொன்னது போல் எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட சாரல் அவளைப் பார்த்து “நீ சொன்னது எல்லாமே உண்மையும் என் நல்லதுக்கு தான்னு புரியுது ரேவதி.ஆனால் நான் எப்படியோ என்னை அப்படியே ஏத்துகிட்டு முழுதாக புரிந்தவனுடன் வாழ்ந்தால் தான் அந்த வாழ்க்கை நிலைக்குமே தவிர நான் இப்போ நடிப்பு நடிச்சிகிட்டு அப்புறமா வேற மாதிரி இருந்தால் அந்த வாழ்க்கை நிலைக்காது.இப்போ எல்லாம் பொருத்தம் பார்த்து முடிக்கிற கல்யாணமே கால் வாசிலேயே காணாமல் போகுது,இதுல நான் யாருன்னு மறைச்சு எதுக்கு எனக்கு அந்த வாழ்க்கை? அதுக்காக நான் இப்படியே இருக்கனும்னாலும் பரவாயில்லை.தாத்தா இல்லைன்னா இந்த கடல் போதும் ஆயுசுக்கும் நேசிச்சு வாழ” என்று ஆழ்ந்த வார்த்தைகளை தன் போக்கிலே சொன்னாள் சாரல்.



அவளின் பதிலைக் கேட்டு ரேவதி அப்படியே அமைதியாகீப் போனாள்.வாய் பேச்சும் கலகலப்புமாக பார்த்த சாரல் இன்றைக்கு ரேவதி வேறொருத்தியாகத் தெரிந்தாள்.



இவர்கள் இருவரும் பேசுவதை வாசலில் நின்று கேட்டுக் கொண்டிருந்த கோபாலன் மெலிதாக சிரித்து “என் பேத்தி எப்பவும் என்னை வருத்தப்பட வைக்க மாட்டாள்' என்று எண்ணிக் கொண்டவர் வெளியில் நின்றபடி “சாரல் நேரமாகுது ஹாஸ்பிடல் போகணும்” என்று சொன்னார்.



உடனே சாரல் விதுனை ரேவதியிடம் கொடுத்தவள் “சரி நான் கிளம்புறேன் ரேவதி நேரமாகுது. நேத்து காப்பாத்துனேன்ல அவரை பார்க்க போறோம்” என்று சொல்லி ரேவதியிடம் பதிலை எதிர்பாக்காமல் “போகும் போது கதவை பூட்டி சாவியை வீட்ல கொடுத்துடு” என்று சென்றாள்.



ரேவதி நடந்து போகும் தாத்தாவையும் சாரலையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.



சாரல் தாத்தாவிடம் “என்ன தாத்தா நாங்க ரெண்டுபேரும் பேசிட்டு இருந்ததை நின்னு யாருக்கும் தெரியாமல் ஒட்டு கேட்டுட்டு இருந்ததே தானே” என்று கேட்டாள்.



உடனே தாத்தா “இல்லை மக்கா நான் எதுவும் கேட்கலை” என்றார்.



சாரல் சிரித்துக் கொண்டு “என்கிட்ட பொய் சொல்லாதே! எனக்குத் தெரியும் நீ அங்கே ஓரமா நிற்கும் போது நிழலும் தெரிஞ்சுச்சு” என்று சொன்னதும் “அப்படியா! மக்கா நீ நான் நின்னதை பார்த்திட்டியா”என்று அசடு வழிய சிரித்துக் கொண்டே வந்தார்.


இருவரும் பேசியபடியே மருத்துவமனைக்கு சென்று இருந்தனர்.தாத்தா அவனைப் பற்றி எல்லாம் விசாரித்தார்.இன்னும் இரண்டு நாட்கள் கழித்து ஸ்கேன் முடிவு வந்துவிடும் என்று சொன்னார்கள்.



கடைசியாக தாத்தாவும் பேத்தியும் அவன் இருக்கும் இடத்திற்கு வந்தார்கள்.அங்கே படுத்து இருந்தவனைப் பார்த்த சாரல் அதிர்ச்சியாகி “யாரு இது?” என்று அவன் இருக்கும் வார்டு எண்ணை சரிபார்த்தாள்.


தாத்தா சாரலிடம் “என்னாச்சும்மா ஏன் பதற்றமாகுறே?” என்று கேட்டார்.


சாரல் “தாத்தா நான் காலைல வந்து பார்க்கும் போது இந்த ஆளுடைய முகம் நல்ல அழகாக இருந்துச்சு இப்போ ஏன் இப்படி வீங்கி இருக்குன்னு தெரியலை நான் போய் சிஸ்டரை பார்த்துட்டு வரேன்” என்று வேகமாகச் சென்றாள்.



கோபாலன் தாத்தாவும் சரியென்று அவனுக்கு அருகில் உட்கார்ந்தவர் மெதுவாக அவனுடைய கரத்தின் மேல் தன் கையை ஆதரவாக வைத்து “தம்பி கவலைப்படாதீங்க சீக்கிரம் எல்லாம் சரியாகிடும்” என்று சொன்னார்.


அடுத்த பத்து நிமிடத்தில் செவிலியரோடு வந்த சாரல் “சிஸ்டர் அவருக்கு என்னாச்சுன்னு பாருங்க காலையில் பார்க்கும் போது நல்ல அழகா இருந்தாப்ல இப்போ பார்த்தா முகத்தை பார்க்க முடியலையே” என்று குறைப்பட்டுக் கொண்டாள்.



அவள் சொன்னதைக் கேட்ட செவிலியரும் அவனுடைய முகத்தை அங்கும் இங்கும் லேசாக திருப்பி பார்த்தவர் “அவருக்கு ஏத்துற மருந்துல இன்பெக்ஷன் ஆகிடுச்சுன்னு நினைக்கிறேன்.நான் டாக்டர்கிட்டே சொல்றேன்” என்று சென்றார்.



சாரல் தாத்தாவிடம் “தாத்தா இந்த ஆளு எழுந்ததும் என்ன ஊருன்னு கேட்கனும் பார்க்க நல்லா இருக்கான்” என்றாள்.



தாத்தா “ம்ம்…. சரி சரி பெயரு என்ன?”


“அட நீங்க வேற தாத்தா இந்த ஆளு கண்ணு முழிக்கலைன்னு தான் எனக்கு தேவையில்லாத அலைச்சல் பேரு என்னன்னு கேட்கிறீங்க?” என்று குறைப்பட்டுக் கொண்டாள்.



தாத்தா அப்போதும் சிரித்துக் கொண்டே “இந்த பையன் முழிக்க வரைக்கும் நாம ஒரு பேரு வைக்கலாம்.ஏன்னா ஆளு ஆளுன்னு சொன்னால் நல்லா இல்லை,அதனால இனி இவன் பேரு பப்பு” என்று சொன்னார்.



உடனே சாரல் கையை தட்டி சிரித்துக் கொண்டு “ம்ம்… சரி தாத்தா இனி இந்த ஆளு பேரு பப்பு ஹாப்பி பேரு வைச்ச டே பப்பு” என்று சொன்னாள்.


யாரென்று தெரியாத ஒருவனுக்கு இங்கே இருவரும் பெயர் வைத்து உறவாக்கிக் கொண்டிருந்தார்கள்.
 
Top Bottom