அத்தியாயம் 37
அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளட்டும் என்று அவன்தான் அனுப்பி வைத்தான். அப்படிப் பேசித் தெளிவதுதான் சரி என்பதும் தெரிந்துதான் இருந்தது. பிறகும் எதற்கு அவனுக்குள் இத்தனை புழுக்கம்?
சிசிரவுக்கு நினைவு வந்துவிட்டதாம் என்று அறிந்ததிலிருந்து இதை எதிர்பார்த்தான்தான். இதையெல்லாம் தானும் கடந்து வர வேண்டும் என்றும் தெரியும்தான். ஆனாலும் கண்முன்னே காட்சிகள் அரங்கேறுகையில் பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை. அவனும் எத்தனையைத்தான் கடந்து வருவது? பொறுத்துப் போவது?
மாலை ஒரு பிறந்தநாள் விழாவுக்குச் செல்ல வேண்டும். அதற்கு முதலில் செய்வதற்கு நிறைய வேலைகள் கிடந்தன. பார்த்துக்கொண்டிருந்த முக்கியமான கணக்குவழக்கை அப்படியே விட்டுவிட்டுத்தான் ஓடி வந்திருந்தான். அதை முடிக்க வேண்டும். ஆனாலும் எதையும் செய்யும் மனநிலை இல்லாமல், எங்கென்று இல்லாமல் பஜிரோவை விரட்டிக்கொண்டிருந்தான்.
இனியும் எதற்கடா பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறாய்?
அவரவர் அவரவருக்கான பாதையில் பயணிப்பதுதான் இதற்கு முடிவு. பிறகும் ஏன் இதெல்லாம்? உன் முகம் பார்த்து அவள் ஒன்றைக் கேட்டுவிட்டால் தலையை ஆட்டிவிடுவாயா? நீ உறுதியாய் நின்று மறுத்திருந்தால் இது நடந்திராதே! அவனே அவனைத் திட்டிக்கொண்டான்.
காரணமற்ற ஆத்திர மூச்சுகள் அனலாய் வெளியேறின. விழிகளில் கோபம் கொப்பளித்தது. எங்கும் இறக்கிவைக்க முடியாத அந்த அழுத்தம் அவனையே அழுத்துவது போலிருக்க, பல்லைக் கடித்தபடி கிடைக்கிற திருப்பங்களில் எல்லாம் பஜிரோவை வெட்டித் திருப்பினான்.
ஒரு கட்டத்துக்குமேல் அவனால் முடியவே இல்லை. அவர்கள் பேசிக்கொண்டதெல்லாம் போதும் என்று தோன்றிவிட பஜிரோவை வீட்டுக்குத் திருப்பியிருந்தான். ஒருவித சினத்துடன் கடகடவென்று படியேறி வந்து நின்றால், இவன் அவளுக்குப் பொருத்தம் இல்லையாம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறான் அவன். அவள் வேறு அதற்கு விடமாட்டானாம் என்று சொல்கிறாள்.
“உன்ன எதுக்கு விடோணும்?” அவள் முன்னே வந்து நின்று அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் வினவினான். “சொல்லு, இன்னும் உன்ன எதுக்கு விடோணும்? விட்டதெல்லாம் காணாதோ?” என்றதும் அவளுக்கு விழிகள் கலங்கிப் போயின. அவளை அறியாது விளையாட்டாய் வந்த வார்த்தைகள் அவை. அதற்குப்போய்… பரிதவிப்புடன் அவனைப் பார்த்தாள்.
சிசிரவும் இப்படி ஒன்றை எதிர்பார்க்கவில்லை. அவன் கோபத்தை மிக நன்றாக அறிந்திருந்தவன் திகிலுடன் அவனை நோக்கினான்.
இப்போது அனந்தனின் சினம் அவன் புறம் திரும்பிற்று. “என்ன நினைச்சுக்கொண்டு இருக்கிறாய் உன்னைப் பற்றி? நீ பெரிய ஹீரோ எண்டா? அவள் ஆசைப்பட்ட மாதிரி நான் நடக்கேல்ல எண்டுற கோவத்திலதான் அவள் உன்ர பக்கம் திரும்பினவள். இல்லையோ என்னைத் தாண்டி உன்னட்ட வந்தே இருக்க மாட்டாள். அதுக்காகப் பெரிய இவன் மாதிரி கதைப்பியோ?” என்று அவன் சிசிரவை நெருங்க, ஒரு கணம் அதிர்ந்தாலும் வேகமாக அவர்கள் இருவருக்கும் நடுவில் வந்து நின்ற நிரல்யா, “மச்சான் ப்ளீஸ், கோபப்படாதீங்க. அவருக்கு உங்கட கோபம் விளங்காது.” என்றாள் அனந்தனின் கைகள் இரண்டையும் பற்றி, அவனை நிறுத்த முயன்றபடி.
“உனக்கு விளங்குமோ?” என்றான் அடுத்த நொடியே விழிகளில் கூர்மையோடு.
“விளங்குது.” என்றாள் மெல்லிய குரலில். “நானும் அது… பழைய நினைப்பில… விளையாட்டுக்குத்தான் அப்பிடிச் சொன்னனான். வேணுமெண்டு இல்ல.” என்று திக்கித் திணறிச் சொன்னாள்.
அனந்தன் மேலே கோபப்படவில்லை. அசையாது அவளையே பார்த்தான். அவளும் பார்வையை அகற்றிக்கொள்ளவில்லை. அனந்தன் மனத்தின் சீற்றங்களெல்லாம் அடங்கிப் போயிற்று.
“கதைச்சது காணும். அவனை அனுப்பு!” என்றுவிட்டு அறைக்குள் சென்று மறைந்தான்.
இருவருக்கும் பேச்சு நின்று போயிற்று. நிரல்யாவினுள் மெல்லிய சங்கடம். போ என்று எப்படிச் சொல்லுவாள்? நெஞ்சினுள் ஏதோ ஒன்று வந்து அடைத்தது.
சிசிரவுக்கு அந்த இடத்திற்குத் தான் அதிகப்படி எனும் உணர்வை நொடியில் விதைத்திருந்தான் அனந்தன்.
நிதர்சனமும் அதுதானே! இனி அவன் தள்ளித்தான் நிற்க வேண்டும். அதுதான் சரியும் கூட. அவன் வாழ்க்கைக்காகச் சற்று முன் வரையிலும் எவ்வளவு சொன்னாள்? அதைப் போல அவன் விலகிக்கொள்வதுதான் அவர்களின் வாழ்க்கைக்கு அவன் செய்யும் நல்லது. கொஞ்சம் கொஞ்சமாய் அறிவுக்கு எல்லாம் புலப்படுகிறதுதான். இந்த மனதுதான் அழியாமல் சேமித்து வைத்திருந்த அழகிய நினைவுகளுக்கும் நிஜத்துக்குமிடையில் கிடந்து துடிக்கிறது. இவ்வளவு காலமும் அவளை மறந்து அவளை உயிரோடு கொன்றான். இப்போது அவளை மறக்க முடியாமல் கிடந்து அவன் சாகிறான். அவனுக்கு விதிக்கப்பட்டிருப்பது இதுதான் போலும்.
நெஞ்சிலிருந்து ஏதோ ஒன்று வெடித்துக்கொண்டு கிளம்ப வேகமாக அவளுக்கு முதுகு காட்டித் திரும்பிக்கொண்டு தலையைக் கோதிவிட்டான். ‘இங்கிருந்து போய்விடு, இனி அவளைப் பார்க்கவோ, பேசவோ முயலாதே. இனி அவள் உன்னுடையவள் இல்லை. உன் வாழ்க்கை அங்கே இருக்கிறது’ என்று அறிவு அவனுக்கு எடுத்துரைத்தது.
“சிசிர!” அவன் மனத்தின் போராட்டத்துக்குள் இடையிட்டது நிரல்யாவின் குரல்.
ஒரு நெடிய மூச்சை இழுத்துவிட்டான். கைகள் இரண்டாலும் முகத்தை அழுத்தித் துடைத்துவிட்டுத் திரும்பி, “நான் வெளிக்கிடப்போறன் நிரா.” என்றான் உணர்வுகள் எதையும் காட்டாத குரலில்.
நிரல்யாவின் உள்ளமும் துடித்தது. விழிகளில் நீர் சேரப் பார்த்தது. ஆனால், இதுதானே சரி! இதை இப்படித்தானே கடக்க வேண்டும்! அதில் மெதுவாய்த் தலையைச் சரி என்பதுபோல் அசைத்தாள்.
கூடவே, “எதையும் யோசிக்காமப் போயிற்று வாங்க சிசிர. உங்கட வைஃப்போட போய்க் கதைங்க. சமாதானமாகுங்க. அதுவும் இந்த நேரத்தில அவாவைக் கவலைப்பட விடாதீங்க.” என்றாள் கரகரத்த குரலில்.
சரி என்பதுபோல் தலையை அசைத்தான். ஆனாலும் அசையவில்லை. அசைய முடியவில்லை. அத்தனை இலகுவாய் அவனால் அவளைக் கடந்துசெல்ல முடியவில்லை. அவளையே பார்த்து நின்றான்.
நிரல்யாவுக்கும் கையாளவே முடியாத மிகக் கடினமான நிமிடத்துளிகள்தான் அவை. அவர்கள் எப்போதோ பிரிந்துவிட்டார்கள். காலம் அவர்களைப் பிரித்து வைத்துவிட்டது. ஆனாலும் இது அவர்களே உணர்ந்து பிரிவது.
கைச்சாத்திடப்படாத காதல் ஒன்று எப்படிப் பேராதனைப் பல்கலைக்கழக மைதானத்தில் வைத்து இரு உள்ளங்களால் போடப்பட்டதோ, அதைப் போலவே அவர்கள் வீட்டு மொட்டை மாடியில் வைத்துப் பிரிவும் அந்த இரு உள்ளங்களாலும் பகிரப்பட்டது.